ரஜப் மாத 4-ஆவது குத்பா

اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ اَمَّا بَعْدُ اَيُّهَا الْاِخْوَانُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லி கொள்கிறேன்.

இத் தரணியையும் இதில் வதியும் நம் மானிட கோடிகளையும் சிருஷ்டித்து, நமது ஆத்ம பரிசுத்தத்துக்காக ஈமானையும் அனுஷ்டான சீருக்காக இஸ்லாத்தையும் அளித்தருளிய அல்லாஹுத் தஆலாவை அனவரதமும் புகழக் கடவோமாக. மானிட கோடிகளைப் பரிபூரண உச்சத்துக்குக் கொண்டு வருவதற்காக ஆண்டவனிடமிருந்து அரிய தொழுகையைக் கொண்டு வந்து கொடுத்த முஹம்மது முஸ்தபா ரஸூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்ல மவர்களையும் அதிகம் போற்றி ஆசீர்வதிப்போமாக. அதன் பின்பு எனதருமை முஸ்லிம் சகோதரர்கள்! அறிந்து கொள்வீர்களாக:-

அல்லாஹ்வின் ஹிதாயத்தென்னும் பரிபூரண நேர்வழியாகிறது, மறைவான அல்லாஹ்வின்மீதும் அமரர்கள்மீதும் ஐயமற நன்னம்பிக்கை கொண்டும், ஐங்காலத் தொழுகையை முழு மனத்துடனே நியமமாய்த் தொழுது கொண்டும், நாம் அளித்துள்ள ஐசுவரியத்தினின்று தான தர்மச் செலவு செய்துகொண்டுமுள்ள பக்தர்களுக்கே உரியதாகும்,” என்று ஆண்டவன் தன் குர்ஆனில் கூறியுள்ளான்.

இதைக் கொண்டு நமது நியமமான தொழுகையே ஹிதாயத்தின் (நேரிய சன்மார்க்கத்தின்) பாதையைக் காட்டுமென்று நாம் நன்கு தெரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வும் ரஸூலும் நமக்கு ஏற்படுத்தியுள்ள வணக்க வகைகளுள் தொழுகையே மகா மேலானதும் மிகமிக முக்கியமானதுமா யிருக்கிறது. இதன் ஐங்காலங் குறிப்பிட்டுள்ள தொழுகையின் அவசியம் குர்ஆனிலுள்ள பல ஆதாரங்களாலும், ஹதீதிலுள்ள பல மேற்கோள்களாலும் ஊர்ஜிதமாகின்றது. தொழுகையின் பயனாய் உண்டாகும் நன்மைகள் அனந்தமாகும். எனவே, இதனைப் போடுபோக்குத்தனமாய் விட்டு விடுவதால் அநேகந் தீமைகளும் ஆண்டவனது கோபமும் அந்திய காலத் தண்டனையுந்தாம் கிடைக்கும். தொழுகையென்பது மனிதனைப் பலவித துராசாரங்களை விட்டும் தடுத்து வைக்கின்றது.

இஸ்லாத்தின் முதல் ஐந்து கடமைகளாகிய ஈமான் என்னும் நன்னம்பிக்கை, தொழுகை என்னும் தெய்வ வணக்கம், ஜகாத்தென்னும் தானதர்மம், நோன்பென்னும் ஆன்ம பரிசுத்த விரதம், ஹஜ்ஜென்னும் மக்காவை நோக்கிச் செல்லும் ஆத்மார்த்த புண்ணிய யாத்திரை ஆகியவைகளுள் இரண்டாவதாகிய தொழுகையே மகாமகா முக்கியமாய் ஆண்டவனால் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. என்னெனின், ஈமானை ஒருமுறை மனத்துள் கொண்டு விட்டால் அதுவே போதும்; மூலதனமுள்ள ஐசுவரியவான்களுக்கு மட்டுமே ஜகாத் கொடுப்பது கடமையாகும்; நோன்பும் ஆண்டுக்கொருமுறைதான் அனுஷ்டிக்கப்படுகிறது. ஹஜ்ஜும் பெருந் தனிகர்கள் அவர்களுடைய ஆயுளில் ஒரு முறையே நிறைவேற்றி விட்டால், அதுவே போதுமாகும். ஆனால், தொழுகையோ அவ்வாறில்லாமல், ஒவ்வொரு சிறியோர் பெரியோராலும், ஆடவர் பெண்டிராலும், ஏழை பணக்காரன், ஆண்டி அரசன் என்ற எத்தகைய தார தம்மியமுமின்றித் தினமும் தவறாமல் குறிப்பிட்ட ஐந்து நேரங்களிலும் நியமமாய் நிறைவேற்றியே தீரவேண்டிய ஒரு மகா முக்கியக் கடமையாய் அமைந்திருக்கிறது. இத் தொழுகையானது, விட்டுவிட்டு இஷ்டப்படி மனம்போனபடி யெல்லாம் தொழாமல் எப்பொழுதும் தொடர்ந்து ஒவ்வொருவராலும் குறிப்பிட்ட அந்த அந்த வேளைகளில் தொழப்பட வேண்டியது கடமையாகும். “தங்கள் தொழுகைகளை விட்டு மறந்து போயுள்ள (சோம்பேறித்) தொழுகையாளிகளின் கதி ‘வைல்’ என்னும் நரகமேயாகும்,” என்று ஆண்டவன் அச்சமூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளான்.

உண்மையிலே தொழுகையாகிறது, இஸ்லாம் மார்க்கத்தின் ஒரு முக்கிய ஸ்தம்பமே போலிருக்கிறது. எவன் அதை நியமத்துடன் நிலைநிறுத்துகின்றானோ, அவன் சன்மார்க்கத்தையே நிலைநிறுத்தியவனாவான். என்னெனின், இதன் பயனாகவே சகல முஸ்லிம்களிடையேயும் அடிக்கடி சந்திப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே அன்னவர்களிடையில் ஒருவித அன்பும் ஐக்கியமும் ஜனிக்கின்றன ; இன்னம், இதன் பயனாகவே இஸ்லாத்தின் அநேக காரியங்கள் தூய்மையாகின்றன.

எவன் அதனை விட்டுவிடுகிறானோ, அவன் மார்க்கத்தையே நிச்சயமாய் நிலைகுலைத்தவனாவான்,” என்று நபிகள் நாயகமும் (சல்) நவின்றருளியிருக்கிறார்கள். மேலும், எவன் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறானோ, அவன் மாறுசெய்தவனாக (காஃபிராக) ஆய்விடுவான் என்று நம் நபிகள் பெருமான் (சல்) எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆதலின், அல்லாஹ்வைக் கொண்டும் அவனுடைய திருத்தூதரைக் கொண்டும் ஈமான் கொண்டுள்ள நம் முஸ்லிம்களெல்லாரும் ஏனையாவற்றையும்விட முக்கியமாய் இந்த ஐங்காலத் தொழுகையைத் தவறாது தொழுது, தெய்வ சகாயமும் பெறுதல் வேண்டும்.

மேலும், தொழுகையிலே இனியொரு விசேஷமும் உண்டு:- “தொழுகையானது ஈமான் கொண்டவர்களுக்கு மிஃராஜைப் போன்ற தாகும்,” என்று நபிகள் பிரான் (சல்) நவின்றருளியிருக்கின்றார்கள். மிஃராஜென்பது, ஆண்டவனது திருச்சன்னிதானத்தை யடைவதையும் அவனது பரம தரிசனத்தைக் கண்டானந்திப்பதையும் அவ்வாண்டவனைச் சந்தித்து லிக்காவைப் பெறுவதையும் குறிக்கும். இந்த ரஜப் மாதத்திலேதான் நபிகள் பெருமானார் (சல்) சகல வான மண்டலங்களையும் கடந்து ஒரு நொடிப்பொழுதிலே அப் பரலோகத்தை யடைந்து, ஆண்டவனுடனே சல்லாபித்து, அவனது திருவருட் பிரசாதத்தையுமடைந்து, அந்த அல்லாஹுத் தஆலாவினிடத்திலிருந்து தம் உம்மத்துக்கென்று அத்தகைய அருளாளனது தரிசனம் கிடைப்பதற்கு ஏதுவாகிய கண்ணியமிக்க புண்ணியத் தொழுகையின் பெருமையையுங் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

தொழுகையின் உட்பொருளை நாம் உள்ளபடியே நோக்குவோமாயின், இதையும் ஒருவித மிஃராஜென்றே இயம்பவேண்டியதாயிருக்கும். என்னெனின், உள்ளச்சத்தோடும் திரிகரண சுத்தியோடும் பரிபூரண பக்தி விசுவாசத்தோடும் பகவானைத் தியானித்துத் தொழும் பக்திமான்களின் உள்ளம் அந்தப் பரமாத்மாவினிடம் லயித்து ஜோதிமயமாவது வெளிப்படை. இதுமட்டுமா? நாயகம் (சல்) அவர்களுக்கு மிஃராஜின்போது அல்லாஹ்வுடன் நடந்த விஷயங்களிலொன்றான “அத்தஹிய்யாத்” தென்பதும் இதில் அடங்கிக் கிடக்கின்றது. மேலும், மனிதன் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனை எதிரில் காண்பவனே போலத்தான் எண்ணித் தொழுகின்றான். இம்மாதிரியான அம்சங்களைப் பொதிந்து கொண் டிருக்கும் தொழுகையானது உண்மையான மூஃமினானவர்களுக்கு ஏன் மிஃராஜாகாது? “தங்கள் தொழுகைகளில் உள்ளச்ச மனப் பரிசுத்தத்தோடிருக்கும் நன்னம்பிக்கை யுள்ளவர்கள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டார்கள்,” என்று இந்த உலக மிஃராஜின் – (தொழுகையின்) தத்துவத்தை மிக நன்றாய்க் குர்ஆனும் விளக்கியிருக்கின்றது.

ஆதலின், இந்தப் பரிசுத்தமான தொழுகையே நம் மானிட தெய்வ பக்தர்களை ஆண்டவனின் சன்னிதானம்வரை அழைத்துச் சென்று, நமக்கு முக்தியையும் மோக்ஷப் பேரானந்தத்தையும் அளிக்கச் செய்யுமென்பது திண்ணம். இந்தத் தொழுகையால் ஆத்மபரிசுத்தமும் மனப் பரிபக்குவமும் பாரமார்த்திகத் திறனும் உண்டாவதுடன், சரீர சுகமும் ஒருவிதக் கிரியாப் பயனும் அவயப் பரிசுத்தமும் அதிகம் உண்டாகின்றன. தினமும் ஐங்காலமும் தொழுவதற்காக நாம் தண்ணீர் கொண்டு அவயங்களைக் கழுவிச் சுத்தப்படுத்தி வுலூ செய்வதால், அவயவப் பரிசுத்தமும் நமதுடலும் உடையும் அசுத்தப்படாமல் இருக்க வேண்டியிருப்பதால் தேகாரோக்கியமும் உண்டாகின்றன. தொழுகையில் நாம் நின்று குனிந்து எழுந்து சிரம்பணிந்து உட்காந்து பலவிதமாகச் சரீர உருப்புக்களை அசைத்து ஆண்டவனுக்காக வணக்கம் புரிவது தேகக் கூறுபாட்டின்படி ஒரு தக்க தேகப்பயிற்சியாக அமைந்திருப்பதால், இதில் நமது சரீரத்துக்கு ஆத்ம சுகிர்தத்துடன் ஆரோக்கியமும் எத்தனையோ உண்டாகின்றன. இத்தகைய மகா கணனியம் வாய்ந்த தொழுகையால் அகப்பரிசுத்தமும் புறப் பரிசுத்தம், உடற் பரிசுத்தம், இடப் பரிசுத்தம் யாவும் உண்டாவதுடன், அல்லாஹ்வின் திருவருளும் நபிகள் பெருமானின் (சல்) கிருபாகடாக்ஷமும் அதிகம் நமக்கு சித்திக்கும். இதனால் நாம் பரலோக வாழ்வில் சுவர்க்கானந்த வைபவம் நிச்சயம் அனுபவிப்போம். மோக்ஷமும் கிட்டுவது நிச்சயம்.

ஆதலின், எம்மரும் நேயர்காள் !  இம்மட்டுஞ் சிறந்த நன்மைகளைத் தரும் ஐங்காலத் தொழுகையை ஒரு சிறிதும் கைவிடாமல் தினமும் நியமத்துடனே தொழுது விசிராந்தி யடைவீர்களாக. ஆண்டவன் நம்மெல்லோருக்குந் தொழுகையில் நியமமாய் நிலைநிற்கப் பெரும் பாக்கியம் அளித்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

 

اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،

Image courtesy: chicagohilal.org

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment