ஒருநாள் அபூபக்ரு (ரலி) நபி (ஸல்) அவர்களைப் பார்த்து, “நமக்குத் துணையாகவும் பக்கபலமாகவும் இருந்த எல்லா முஸ்லிம் தோழர்களும் இப்போது அபிஸீனியாவிலும் யதுரிபு நகரிலும் (மதீனாவிலும்) குடியேறிவிட்டார்கள். இந்த மக்காவாசிகளோ

என்றைக்கும் உருப்பட்டுக் கடைத்தேறப் போவதில்லை. இனியும் நாம் ஏன் இங்கே இந்த அபாயச் சூழ்நிலையில் தங்கியிருக்க வேண்டும்? வந்தபின் காப்பதைவிட இப்போதே நம்மைக் காத்துக் கொண்டு நாமும் மதீனாவுக்குச் சென்று விடலாமே!” என்று கூறினார்.

“இல்லை, இன்னம் இறைவனின் அனுமதி கிட்டவில்லை. அவன் ஏவினாலொழிய, எந்த ஒன்றையும் நான் செய்வதில்லை யல்லவா?”

“அப்படியானால், நாம் வெறுமனே காத்திருக்கத்தான் வேண்டுமோ?”

“காத்திருப்பதாகப் பொருள் கற்பிக்க வேண்டாம். நாம் பொறுத்திருக்கிறோம். எந்த நேரத்தில் எப்படிக் கட்டளையிடுவது என்பது இறைவனுக்குத் தெரியும். நாம் மானிட இனம். நமக்கு எல்லாமே அவசரம். ஆனால், அல்லாஹ்வின் கணிப்பில் எல்லாம் ஒரு திட்டப்படியே நடக்கும். அவனது திட்டம் என்னவென்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். நம்மெல்லோரையும் பொறுமைசாலிகளாக இருக்குமாறுதானே குர்ஆன் கட்டளையிடுகிறது?”

நபியுடன் சேர்த்து அபூபக்ரும் (ரலி) அலீயும் (ரலி) பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். எனினும், சீக்கிரமே இறைக்கட்டளை பிறக்காதா, மக்காவைத் துறந்து நபி வெளியேறும் கட்டம் நல்லவிதமாக வந்து விடியாதா என்றே உள்ளத்துக்குள் அவர்கள் ஏங்கிக்கிடந்தார்கள். தோழர்கள் மனத்திலுள்ளதைப் புரிந்துகொண்ட நபியவர்களும் இறைவனின் கட்டளை எப்போது பிறக்குமோ என்றே எதிர்பார்த்திருந்தார்கள்.

குறைஷிகளுக்கோ நாளேற ஏற, ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. முன்பு அந்த நபியைக் கொல்ல உமரை அவர்கள் சூடேற்றி அனுப்பிய கதையும் பிறகு அவரே எதிர்கட்சிக்கு மாறிவிட்ட நிகழ்ச்சியும் தினமும் மனத்தை அறுத்து வந்தன. எனவே, தனி நபர் சென்று நபியைக் கொலைபுரிவது என்னும் திட்டம் எப்போதோ கைவிடப்பட்டது. வேறு என்ன செய்வது?

மக்காவில் ஒரு மக்கள்சபை கூடுகின்ற அவைக்களம் இருந்தது. அதற்கு “தாருன்னத்வா” (Dar-un-Nadwa) என்று பெயர். நெருக்கடியான காலங்களில் இச் சபை கூடும். இப்போது மிகப் பெரிய நெருக்கடி வந்துவிடவே, மிகுந்த ஆவேசத்துடன் சபை கூட்டப்பட்டது. சற்றேறக் குறைய எல்லாப் ‘பெருந்தலை’களும் முக்கியஸ்தர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் உடல்வலி மிக்கவர்களும் மற்றும் பலரும் பெருந்திரளாக இந்த அவசரக் கூட்டத்தில் பங்கு பற்றினார்கள். கூட்டத்துக்கு அபூஜஹலே தலைமை வகித்தான்.

அப்போது ஒருவன், “நம்மை ஒழிக்க முற்பட்டிருக்கிற எதிரியின் கைகளில் விலங்கு பூட்டுங்கள்; கால்களைக் கட்டிப்போடுங்கள்; இருட்டறைக்குள் தள்ளிவிடுங்கள், அங்கேயே கிடந்து, பசியால் வாடி, உயிர் போகட்டும்!” என்று கத்தினான்.

தலைவன் அவனை அமைதிப்படுத்தினான். “இருட்டறைக்குள் தள்ளிப் பூட்டினால் வெளியே ஒரு காவலனை நாம் நியமிக்க வேண்டிவரும். அந்தக் காவலன் எந்த நேரத்திலும் நம்முடைய கால்களை வாரிவிடுவான். அல்லது முஹம்மதின் நண்பர் எவரேனும் நள்ளிரவில் வந்து காவலனைக் குத்திக் கொன்றுவிட்டு, கைதியைக் காப்பாற்றி இழுத்துச் சென்றுவிடலாம். எனவே, இந்த யோசனை கவைக்கு உதவாது,” என்று அபூஜஹல் கூறிவிட்டான்.

கூட்டத்தில் சலசலப்புத் தோன்றிற்று. மற்றொரு மூர்க்கன் எழுந்தான்.

“அந்தச் சமூகத் துரோகியை நாடுகடத்திவிடுவோம் , ஒரு படகில் ஏற்றிக் கடல் கடந்து சென்று ஒரு தீவில் இறக்கி விட்டு வந்துவிடலாம்.”

இது கேட்டு அபூஜஹல் வாய்விட்டு சிரித்தான்.

“அபிஸீனியாவில் புகுந்து அடைக்கலம் தேடிக்கொண்ட சிஷ்யர்களே நம்மைப் பித்துக் கொள்ளியாக்கி விட்டார்கள். இப்பொழுது அவர்களுடைய குருநாதரையும் அரேபியாவுக்கு வெளியே கொண்டுபோய் உயிருடன் விட்டால் என்ன ஆவது? வலுவிழந்து கிடக்கும் நம் எதிரியை வெளியுலகுக்கு அனுப்புவதா? அங்குச் சென்று பலம் பெற்றுப் பல மக்களை மயக்கி வசீகரித்துப் பெரும் படையுடன் மக்கா மீதே படையெடுத்து வருவதற்கு ஒரு வாய்ப்பை உண்டு பண்ணிக் கொடுப்பதா? பிறந்த மண் மீதே படையெடுத்த பலர் வரலாற்றில் காட்சியளிக்கிறார்கள். அந்தப் பட்டியலில் முஹம்மதையும் சேர்ப்பதா?”

பகற்பொழுது முழுதும் கூட்டம் நடந்தது. பலபேர் பல யோசனைகளை வழங்கினார்கள். தலைவன் அபூஜஹலோ ஒவ்வொன்றையும் ஒதுக்கித் தள்ளினான். ‘கொள்ளிக் கட்டையால் தலை சொறிந்து கொள்ளக் கூடாது’ என்று சொல்லி யாவரின் வாயையும் அவன் அடக்கிவிட்டான்.

“வேறு என்னதான் செய்வது? என்று ஏக குரலில் யாவரும் ஆர்ப்பரித்தனர்,

“நான் ஒரு நல்ல யோசனை வழங்குகிறேன்: கவனமாகக்கேளுங்கள்; முஹம்மதைக் கொன்று தீர்ப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை. தனிப்பட்ட முறையில் நம்முள் எந்த ஒருவனும் அந்தக் கொலையைப் புரிய முடியாது. ஏனென்றால் கொலைகாரன் எந்த இனத்தைச் சேர்ந்தவனோ அந்த இனத்தினர் மீது முஹம்மதின் கோத்திரத்தார்கள் போர் தொடுத்துவிடுவார்கள். பிறகு 100 ஆண்டுகளானாலும் அந்த யுத்தம் ஓயாது. நம்முடைய சமுதாயம் சீரழிந்துபோகும்; பொருளாதாரம் பாழ்பட்டுவிடும். என்றைக்குமே நம் பிற் சந்ததியார்கள் அமைதியைக் காணமுடியாது. ஆகையால் நான் என்ன நினைக்கிறேனென்றால், நம்முடைய குறைஷிக் குலத்தில் எத்தனை கோத்திரத்தார் இருக்கிறோமோ அத்தனை கோத்திரத்திலிருந்தும் தீரமிக்க வீர புருஷர்களாகிய, எதற்கும் துணிந்த வாலிபர்களை ஒன்று திரட்டுவோம். ஒரு கோத்திரத்திலிருந்து ஓர் அங்கத்தினர் மட்டும் வந்தாலே போதும். அந்த ஒவ்வொரு வீரனின் கரத்திலும் கூரான வாள்களைத் தீட்டிக் கொடுப்போம். அத்தனை பேரும் ஒன்றாய்ச் சேர்ந்து எதிரிமீது பாயவேண்டும்; அகப்பட்ட உறுப்பை நறுக்கி எறியவேண்டும். எல்லாக் கோத்திரமும் சமமாகப் பங்கெடுத்துப் படுகொலை புரிவதால், ஒரு குறிப்பிட்ட நபர்மீதோ அல்லது கோத்திரத்தின்மீதோ அக் குற்றப்பழி சுமத்தப்படாது. மிஞ்சிப் போனால் பனூஹாஷிம்கள் நம் எல்லாரிடமிருந்தும் ‘உதிரக் கிரயம்’ பெற்று கொள்வதோடு எல்லாம் முடியும். அவர்கள் எவ்வளவு தொகை கேட்டாலும் பிரச்சினையில்லை; கொடுத்து விடுவோம்!”

[ஒரு கொலைக்கு ஈடாக, அக் கொலையுண்டவரின் வாரிசு எவ்வளவு நஷ்ட ஈடு கோருகிறாரோ அதைக் கொடுத்துச் சமாதானமாகி விடலாம் என்பது அக்கால மக்களின் நீண்ட கால ஒழுங்கு முறையாகும். அவ்வாறு கொடுத்துத் தீர்க்கப்படும் அபராதத் தொகை ‘உதிரக் கிரயம்’ (தியத் அல்லது தியா) எனப்படும்.]

எல்லாக் குலத்தினரும் ஒன்றாய்ச் சேர்ந்து நபியைத் தீர்த்துக் கட்டிவிடலாம் என்று அபூஜஹல் வழங்கிய இந்த ஆலோசனையை அச் சதிகாரர்கள் யாவரும் மிகவும் குதூகலத்துடன் ஆமோதித்தார்கள். பழம் புராதன மதத்தைக் காப்பாற்றுவதில் இப்படியாக எல்லா வமிசத்தாருக்கும் சம வாய்ப்புக் கிட்டிவிட்டதில் அத்தனை பேருக்குமே ஒரு பெரிய ஆனந்தம்! ஒரே நிமிஷத்தில் ஒவ்வொரு குலம் கோத்திரத்திலிருந்தும் பல தொண்டர்கள் வீராவேசத்துடன் மார்தட்டிக் கொண்டு முன்வந்தார்கள். அவர்களுள் ஒன்பதுபேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இன்று நள்ளிரவில் நபியை அவர்கள் கொலை புரிந்துவிட வேண்டும் என்பது திட்டம்.

ஆனால், இந்தச் சதித்திட்டத்தின் ஒவ்வொரு நுட்பத்தையும் அதே நேரத்தில் இறைவன் நபியவர்களுக்கு அறிவித்துவிட்டான். இன்றிரவு அவர் படுக்கையில் கிடக்கக் கூடாதென்றும், உடனே மக்காவைக் துறந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் வானவர் மூலம் நபியவர்கள் எச்சரிக்கையைப் பெற்று விட்டார்கள். ‘சூழ்ச்சியாளர்கள் சூழ்ச்சி செய்வார்கள்; அதே நேரத்தில் அல்லாஹ்வும் (எதிர்ச்) சூழ்ச்சி செய்வான்; ஆனால் எந்தச் சூழ்ச்சியாளனினும் அல்லாறிவின் எதிர்ச் சூழ்ச்சித் தன்மையே மிகைத்துவிடும்’ என்பது குர்ஆன் கூறும் உண்மை. இதற்கோர் எடுத்துக்காட்டே பின் வரும் நிகழ்ச்சியாகும்:-

அக்கணமே முஹம்மது நபி (ஸல்) அலீ (ரலி) அவர்களைக் கூப்பிட்டார்கள். ‘இறைவன் கட்டளையிட்டுவிட்டான். இன்றிரவு நான் வீட்டைவிட்டு வெளியேறி விடுவேன். நீர் எனது கட்டிலின்மீது படுத்துக் கொள்ளும். பொழுது விடிந்ததும் நீர் எழுந்து ஓர் உதவி செய்யவேண்டும். என்னிடம் அடமானமாகச் சில நண்பர்கள் ஒப்படைத்திருக்கும் அமானத் பொருள்கள் சில உள்ளன. உரியவர்களிடம் அது அதையும் திருப்பிக் கொடுத்து விடுவீராக. இத்தனை காலம் அல் அமீனாக வாழ்ந்த நான் அல் அமீனாகவே இவ்வூரைவிட்டு அகல வேண்டும். நான் போகிற போக்கில் அமானத் பொருள்களையும் சுருட்டிச் சென்று விட்டேன் என்னும் அபகீர்த்திக்கு ஆளாகாமல் எனது நற்பெயரைக் காப்பாற்றிவிட்டு, பிறகு நீர் புறப்பட்டு மதீனாவுக்கு வந்து சேர்வீராக!”

நெஞ்சில் உரமிக்க இந்த அலீயைத் தவிர வேறு எத்தகு நபராக இருந்தாலும் என்ன நினைத்திருப்பார்? “என்ன! உம்மைக் கொல்வதற்குக் கத்தியை ஓங்கிக்கொண்டு ஈசல் போல் எதிரிகள் பாய்ந்து வருவார்கள். அப்போது உம்முடைய ஸ்தானத்தில் நான் படுத்துகிடக்க வேண்டுமோ? நீர் உயிர் தப்புவதற்கு நான் ஆளாக வேண்டுமாக்கும்!” என்று சொல்லி ஓட்டம் பிடித்திருப்பார். ஆனால், அலீ (ரலி) என்ன சொன்னார்?

“ஏ இறைத் தூதரே! தங்கள் சித்தம் எனது பாக்கியம். இறைவனிடுகிற கட்டளைப்படித்தான் தாங்கள் நடந்து கொள்வீர்கள் என்பதை யான் அறிவேன். உங்கள் படுக்கை மீது நான் படுத்துக் கொள்கிறேன். நீங்கள் கவலையின்றிப் பத்திரமாக வெளியேறிச் செல்லுங்கள். என்னையும் இறைவன் காப்பாற்றி விடுவான். தாங்களிட்ட கட்டளைப்படி, உரியவர்களிடம் பொருள்களைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு, பிறகு உங்களுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன். அல்லாஹ்வின் நபி அமானத் பொருள்களை அபகரித்துச் சென்றுவிட்டார் என்னும் அவச்சொல் என்றைக்குமே வராமல் காப்பாற்றித் தருகிறேன்.”

இப்படித்தான் அலீ அறிவித்தார். திரு நபியின் நேத்திரங்களில் ஆனந்தக் கண்ணீர் திரையிட்டது.

Image courtesy: kashifiat.wordpress.com

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment