பதினைந்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். விடுமுறையில் சென்னைக்குச் சென்றிருந்தபோது, என் மச்சான், ஃபோனில் தம் மகனிடம், பல விஷயங்களுடன் “How to Win Friends and Influence People படிச்சிருக்கியா, Dale Carnegie எழுதியது”
என்று ஒரு நூலைப்பற்றி சிலாகித்தார். அருகில் அமர்ந்திருந்தவன், அங்கு நாற்காலியில் இருந்த அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிட்டேன்.
அந்தப் பயணத்திலிருந்து திரும்பும் வழியில் London Gatwickஇல் சில மணி நேரங்கள் transit. புத்தகக் கடைக்குள் நுழைந்தால் தற்செயலாகக் கண்ணில்பட்டது அந்த நூல். அதுவும் மற்றொன்றும் வாங்கிக்கொண்டு, ஏகப்பட்ட பவுண்டுக்கு இரண்டு டோஸ்ட்டும் அரை வேக்காட்டு முட்டையையும் சாப்பிட்டுவிட்டு, வானூர்தி ஏறி வந்துவிட்டேன்.
புகுந்த ஊர் திரும்பியதும் ஆசுவாசமாக வாசிக்க ஆரம்பித்து விறுவிறுவென்று சில நாள்களில் முடித்துவிட முடிந்தது. பிறகு அந்த நூலின் பின்புலம் ஆராய்ந்தால், 1936இல் வெளியாகி கோடிக் கணக்கான பிரதிகள் விற்றிருக்கிறது, மெகா ஹிட் என்று தெரிந்தது. இன்றைய தேதிக்கு 30 மில்லியன் (மூன்று கோடி) பிரதிகள் விற்றிருக்கிறதாம்.
வாசித்து முடித்ததும் அன்று அச்சமயத்தில் என் மனத்தில் ஒரு விசனம். வரலாற்று நாயகர்கள், ஆன்மீகத் தலைவர்கள் என்று பலரது வாழ்க்கையிலிருந்தும் உதாரணங்கள், துணுக்குகள், சுவைபட விளக்கங்கள் விரவியிருந்த அந்நூலில் இஸ்லாத்திலிருந்தோ, நபியவர்களின் வரலாற்றிலிருந்தோ எவ்வித உதாரணமும் இல்லை. இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகமே Dale Carnegie-க்கு வாய்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஏனெனில், அந் நூலில் குறிப்பிட்டிருந்த பல விஷயங்களுக்கு, நபியவர்களின் வாழ்க்கையிலிருந்து பல உதாரணங்களை என் சிற்றறிவேகூட யூகிக்க முடிந்திருந்தது.
ஒன்றரை தசாப்தம் உருண்டோடிய நிகழ்காலத்தில், ஓரிரு ஆண்டுகளுக்குமுன் வாங்கியிருந்த நூல்களுள் ஒன்றை தூசு தட்டி அசுவாரஸ்யமாக வாசிக்க எடுத்தேன். அரபு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அது. முன்னுரையை வாசிக்கும்போது என் பிடரியில் ஒரு தட்டு தட்டி எழுப்பினார் அதன் ஆசிரியர்.
மேற்சொன்ன Dale Carnegie-யின் புத்தகத்தை தம் பதினாறாவது வயதில் வாசித்திருக்கிறார் அவர். வெகுவாகக் கவரப்பட்டவர் பல முறை வாசித்திருக்கிறார். சற்றொப்ப எனக்கு எழுந்த அதே விசனம் அவருக்கும் எழுந்திருக்கிறது. ‘இந்தளவு மதியூகியான Dale Carnegie இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் அறியாமல் போய்விட்டாரே! இவ்வுலக மேன்மைக்கானதாக மட்டுமே அவரது நூல் சுருங்கிவிட்டதே! தமது திறமையை இறைவனை நெருங்குவதற்கான ஒன்றாக அவர் மாற்றியிருக்கலாமே’ என்றெல்லாம் அவரது சிந்தனை சுழன்றிருக்கிறது. விளைவு?
தாம் ஈட்டியிருந்த ஆழ் ஞானத்துடன், தாமே ஒரு நூலை எழுதிவிட்டார் டாக்டர் முஹம்மது அப்துர் ரஹ்மான் அல்-ஆரிஃபி. ஆங்கில மொழிபெயர்ப்பில் Enjoy Your Life என்று வெளிவந்திருக்கிறது. மதப் பிரச்சாரமெல்லாம் இல்லை. நபியவர்களின் வாழ்க்கையிலிருந்து அத்தியாத்திற்கு அத்தியாயம் மேற்கோள்கள், ஆன்றோர், சான்றோர், தம் வாழ்க்கை ஆகியனவற்றிலிருந்து சுவையான நிகழ்வுகள் என்று படு இயல்பான எழுத்துடன் அமைந்திருக்கிறது இந் நூல். மொழிபெயர்ப்பு வாசனை அறவே இல்லாத அருமையான, எளிதான ஆங்கிலம். சாதி, மத பேதமின்றி அனைவரும் வாசிக்கலாம்!
சென்னை ஆயிரம்விளக்கு மருத்துவமனை இட்லியிலிருந்து புது டெல்லி மோசடி ஆட்சி பிரச்சினைவரை திக்குமுக்காடிப்போய் கிடக்கும் நம்முள் யாருக்குத்தான் “Enjoy Your Life” என்று வாழ்வில் ஏகாந்தம் அனுபவிக்கவும் சக மனிதர்களுடன் உறவை மேம்படுத்திக்கொள்ளவும் ஆசையில்லை? அதுவும் இறைவரையறைக்குட்பட்டு!
Enjoy Your Life
Dr. Muhammad Abdur-Rahman al-Areefy
Published by International Islamic Publishing House
ISBN 978-603-501-158-7
-நூருத்தீன்