எல்லாம் இறைவன் நாடியபடியேதான் நடக்குமென்னும் சிந்தாந்தத்துக்கேற்ப, ஷஜருத்துர்-முஈஜுத்தீன் வாழ்க்கையில் எதிர்பாராத பெருநிகழ்ச்சியொன்று வந்துற வேண்டுமென்று அவ் இறைவன் எண்ணியிருந்தான் போலும்!


முஈஜுத்தீனிடமிருந்து அதிகாரத்தைப் பற்றிக்கொண்ட ஷஜருத்துர் மிகவும் உன்னதமாகவே எல்லாக் காரியங்களையும் கண்காணித்து வந்தாரென்றாலும் ஐபக்கின் முதல் மனைவி மைமூனாவின்மீது கொண்டிருந்த துவேஷமும் அசுயையும் உள்ளத்துள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருந்தன. ஷஜருத்துர் முஈஜை மணந்துகொண்ட நாட்களாக மைமூனாவை அந்த சுல்தான் அடியோடே மறந்துபோய், ஷஜருத்துர் மட்டுமே பூலோக சுவர்க்கமென்று முற்றமுற்ற மூழ்கிப்போயிருந்தும்கூட, அந்த அம்மையாரைத் திருப்தியுறச் செய்ய முடியவில்லை. எனவே, இரவும் பகலும் எந்நேரமும் மைமூனாவைப் பற்றிய சிந்தனையே ஷஜரின் கவனத்துக்கு வந்துகொண்டிருந்தது.

காதற் பொறாமையால் மட்டுமே மைமூனாவை ஷஜருத்துர் வெறுக்கவில்லை. ஆனால், அவ்வாறு வெறுத்ததற்கு அரசியல் காரணமும் இருந்து வருகிறது. ஏனென்றால், நாள் செல்லச்செல்ல ஷஜருத்துர்ருக்கும் குழந்தையொன்றும் பிறக்கவில்லை. மைமூனாவுக்கோ, ஏற்கனவே ஒரு புத்திரன் பிறந்திருந்து, தினமும் வளர்ந்துகொண்டே வந்தான். எனவே, மைமூனா முஈஜுத்தீனின் மனைவியாக இருக்கவிருக்க, அந்த நூருத்தீன் அலீக்கு அரசாங்கத்தின்மீது உரிமை இருந்தே வரும். ஆதலால், மைமூனாவை எப்படியாவது திரஸ்கரித்து ஒதுக்கித் தள்ளவேண்டுமென்பதில் ஷஜருத்துர்ரின் கவனம் சென்று கொண்டேயிருந்தது.


நாம் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்ட அந்தப்புரச் சயனவறைச் சம்பவம் நிகழ்ந்து பலநாள் சென்ற பின்னர் ஒரு நாளிரவில் ஷஜருத்துர்ரும் முஈஜுத்தீனும் தங்கள் அந்தரங்க சய்யாகிருகத்தில் சந்தோஷமாகச் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். முஈஜுத்தீன் தம்முடைய முதல் மனைவியை மறந்து பல நாட்களாகிவிட்டபடியால், மைமூனா உயிருடன் இருப்பதாகக்கூட எண்ணவில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலேதான் அடியிற்காணும் சம்பவங்கள் நிழலாயின:—“நாதா! தாங்கள் ஏன் இன்று சற்று முகவாட்டத்துடனே காணப்படுகின்றீகள்? தங்களுக்கென்ன குறைவு ஏற்பட்டு விட்டது?” என்று ஷஜருத்துர் மிகச் சாதுரியமாக சுல்தான் முஈஜைச் சோதிக்க ஆரம்பித்தார்.“காதலி! வேறொன்றுமில்லை. நான் உன்னை மணந்து ஆறு ஆண்டுகட்கு மேலாகியும் நமக்கு ஆண்டவன் ஒரு புத்திர பாக்கியத்தைக்கூடக் கொடுத்தருளவில்லையே என்பதற்குகாகத்தான் கலக்கமுறுகிறேன். என் ஆசை மைந்தன் நூருத்தீன் இப்போது எப்படிப்பட்ட கட்டழகுமிக்க பாலியனாகத் திகழ்ந்துகொண்டிருப்பான் என்பதை எண்ணி மிகவும் குழப்பமடைகிறேன்.”


“என்ன! தாங்கள் பட்டமேற்ற சில நாட்களில் ஷாமுக்குப் படையயடுத்துச் சென்றுவிட்டீர்களென்பதையும் திரும்பி வந்த பிறகு சமீபகாலம் வரையில் தாங்கள் என்னை மனப்பூர்வமாய் நேசிக்கவில்லையென்பதையும் மறந்தா போனீர்கள்?… நான் என்ன மலட்டுப் பெண் பிள்ளையா? எனக்கும் ஆண்டவன் முன்னம் புத்திர பாக்கியத்தைத் தந்தருளவில்லையா? எனவே, தவறு எங்கே இருக்கிறதென்று தெரிந்துகொள்ளாமல்…” என்று பேசிக்கொண்டே நாணத்தால் நின்றுவிட்டதைப்போல் சரியாக நடித்துக் காண்பித்தார்.

“என் கண்மனி! தவறு உன்மீதிருக்கிறதென்றோ அல்லது உன்னை ஒரு மலடியென்றோ நான் சொல்லவரவில்லை. ஆனால், நான் பெற்ற என் பிரியமுள்ள மைந்தனையும் அம்மைந்தனைப் பெற்ற தாயையும் அறவே மறந்துவிட்டுச் சும்மா இருப்பதென்றால், அஃதெங்ஙனம் சாலும்? நீயாவது எனக்கு ஒரு குழந்தையைப் பெற்றிருப்பாயாகில், என்மனம் இப்படியெல்லாம் சஞ்சலப்படாது!… என்ன செய்யலாம்? எல்லாம் என் தலைவிதி!”


“எதைத் தலைவிதி என்கின்றீர்கள், நாதா? தற்காலிகமாகச் சில நாட்களுக்கு எனக்குக் கருக்கூடவில்லையென்றால், அஃதென்ன பெரிய தலைவிதியா! அப்படி நான் பிள்ளை பெறாமல் போவதற்கு யார் காரணம் தெரியுமா?…. ஹூம்! அதை நான் சொல்லிப் பிரயோஜனம்?”


“என்ன! நீ பிள்ளை பெறாதபடி உன்னை எந்தப் பாவி தடை செய்கிறான்? உடனே பதில் சொல்!

“சொல்லிப் பிரயோஜனம் என்ன விளையப்போகிறது? எனக்குத் தெரியும், யார் 
வைக்கிற சூனியத்தால் என் கருச் சிதைந்துவிடுகிறதென்று. எனக்குத் தெரியும் அந்தச் சூனியக்காரர்களை எப்படித் தொலைப்பதென்று. எனினும், இன்னம் சில காலத்துக்கு இப்படியே பிள்ளை பெறாமல் காலத்தைக் கடத்தினால்தானென்ன? என்று கருதியே நானும் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பேசாமல் காலங்கழித்து வருகிறேன்… சரி, அது கிடக்கட்டும். இந்த வருஷம் வரவுசெலவுத் திட்டத்தில் இலக்ஷம் தீனார் மீதிப்படுமென்று நம் நிதிமந்திரி இன்று கூறினாரே,அந்தத் தொகையை நாம் மத்ரஸாக்கள் கட்டுவதற்கும் வைத்தியசாலைகள் நிருபிப்பதற்கும் ஏன் செலவிடக் கூடாது!”


“ஷஜருத்துர்! நீ எத்துணைச் சாமார்த்தியமாகப் பேச்சை மாற்றிவிடுகிறாய்! அரசாட்சி முழுவதையும் நிர்வகிக்கிற நீ அந்த இலக்ஷம் தீனாரை எப்படிச் செலவிட்டால் என்ன? பேச வேண்டிய முக்கிய விஷயத்தை விட்டுவிட்டு ஏதேதோ பேசுகிறாயே! உனக்கு விரோதமாக எவரே சூனியம் வைக்கிறார்களென்றாய்; அந்தச் சூனியக்காரர்கள் யாரென்பது தெரியுமென்றாய். எல்லாம் தெரிந்த நீ இப்படியெல்லாம் பேசாமலிருப்பது நல்லதா? கருவைச் சிதைப்பது எவ்வளவு பெரிய பாபம்! அதிலும், அரசியின் கருவைக் கலைப்பது எவ்வளவு பெரிய துரோகம்! சூனியக்காரர்கள் மீது நீ நடவடிக்கை எடுக்கப் பயந்தால், அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டுவிடு. யார் அந்த துரோகிகள் என்பதை மட்டும் என்னிடம் சொல்லிவிடு; உடனே கண்டதுண்டமாய் வெட்டியெறிந்துவிட்டு மறு வேலை பார்க்கிறேன்!” என்று மீசையை முறுக்கினார் முஈஜுத்தீன்.


“அப்படியானால் எனக்குச் சிசு பிறக்கவில்லையென்பதற்காகவா இவ்வளவு ஆத்திரம் அடைகிறீர்கள்? நீங்கள் ஆத்திரப்பட்டு என்ன பயன்? எல்லாம் அவனுடைய சித்தமல்லவா? இந்த நாட்டுக்குத் துரோகம் நினைக்கிறவர்களை மட்டுமே நான் பழிவாங்க முன் நிற்பேனன்றி, என் சொந்த நலத்துக்கோ, என் பிள்ளைப் பேற்றுக்கோ ஊறு விளைவிக்கிறவர்களை நானோ அல்லது தாங்களோ, ஏன் தண்டிக்க வேண்டும்? ‘சுல்தானா ஷஜருத்துர் தன் சுயநலத்துக்காகப் பழி வாங்கிக்கொண்டாள்’ என்னும் பழிச் சொல்லுக்கும் அபக்கியாதிக்குமா நான் ஆளாக வேண்டுமென்று தாங்கள் திட்டமிடுகின்றீர்கள்! முடியாது, முடியாது; முக்காலும் முடியாது! இந்த ஷஜருத்துர் பொது நலனை பாதிக்கிற துரோகச் செயல் இழைக்கிறவர்கள்மீது மட்டுமே செம்மையாகப் பழிதீர்த்துக் கொள்வாளன்றி, தாங்கள் கருதுவதுபோல் இப்படிப்பட்ட அற்பக் காரணங்களான சுயநலத்துக்காக எப்படிப்பட்டவரையும் பழிவாங்கத் துணியமாட்டாள். ஆமாம்! எனக்கு இறுதிவரை புத்திரப்பாக்கியம் இல்லாமற் போகும்படி எந்தக் கொடிய சூனியக்காரர் என்ன செய்தாலும், சரியே! எனக்காக நான் பழிவாங்கவே மாட்டேன்!”


“என்ன! சுல்தானாவாகிய உனக்கு சந்ததியில்லாமற் போகும்படி எதிரிகள் செய்கிற சூழ்ச்சி தேசத்துரோகக் குற்றமல்லவா? அப்படிப்பட்ட கொடிய துரோகிகள்மீது நீ பழிவாங்கிக் கொள்வது எப்படிச் சுயநலமாகக் கருதப்படும்? எல்லாம் தெரிந்த நீயா இந்தப் பொல்லாத துரோகிகளான சூனியக்காரர்களைச் சும்மா விட்டுவைப்பது? பேஷ்! நன்றாயிருக்கிறது உன் யோசனை!”


“நாதா ஏன் வீணே கோபிக்கிறீர்கள்? எல்லாவற்றையும் நன்றாய்ச் சீர்தூக்கி பார்க்காமலா நான் பேசுகிறேன்? ஆண்டவனே அந்தக் கொடியவர்களைத் தண்டிக்கட்டும் என்றுதான் நான் சும்மா இருக்கிறேன். என்னெனின், ஒரு பிண்டத்தை உற்பத்தி செய்பவன் ஆண்டவன். அப்படி உற்பத்தி செய்கிற அத்தேவ நியதிக்குப் புறம்பாக எந்த ஆணோ எந்தப் பெண்ணோ எந்த வகையால் தடைமுறையைப் பிரயோகித்துக் கருக்கூடாமற் செய்துவிட்டபோதிலும்,அன்னவர் இயற்கையாகவே இறைவனின் சாபத்துக்குத்தான் இலக்காகித் தீர வேண்டும். இது தெய்வ நியதி. நாமொன்றும் செய்வதற்கில்லை. அந்தப் பாழாய்ப்போன கொடிய சூனியக்காரர்களை இறைவனே இரட்சிப்பானாக!”


“ஷஜருத்துர்! உன் வேதாந்தங்களும் தத்துவ போதனைகளும் இம்மட்டோடு நிற்கட்டும். என் தாடி பற்றியெறியும்போது நீ சுருட்டுக்கு நெருப்புக் கேட்கிறாய்! நன்றாயிருக்கிறது லட்சணம்! யாரோ சூனிய வித்தைக் கற்றவர்கள் உன் கருவைக் கூடவொட்டாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்களாம்! அவர்களை ஆண்டவனே காப்பாற்ற வேண்டுமாம்! வெகு நன்றாயிருக்கிறது! மூஸா நபியின் காலத்துக்கு முன்பிருந்து இன்று வரை இந்த மிஸ்ர் அந்த நாசமாய்ப்போன கொடிய சூனிய வித்தையால்தானே குட்டிச் சுவராகிப் போகிறது? ஃபிர்அவ்ன் தொலைந்தானென்றாலும் அவன் விட்டுச்சென்ற சூனியக்காரனும் சூனியக்காரியும் இன்னம் சூனியங்கள் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள்! ஐயூபிகள் ஆண்ட வரையில் அவர்கள்கூட அக்கயவர்களை நசித்தொழிக்கவில்லை என்றாலம், நாமாவது ஏன் அப் புனித கைங்கரியத்தைச் செய்யக்கூடாது? ஷஜருத்துர்! வீணான பழிக்கு நாம் ஆளாக வேண்டாம். இப்போதே அந்தத் துரோகிகள் யாரென்பதைக் கூறிவிடு. ஒரே நொடியில் நான் தொலைத்துவிடுகிறேன். நீ சொல்லாவிட்டாலும், நான் சல்லடை போட்டுச் சலித்தாவது அந்த நயவஞ்சகர்களைக் கண்டுபிடித்துக் கண்டதுண்டமாக்கிக் கோட்டைக் கதவுகளில் தொங்கவிட்டு விடுகிறேன்.”


ஷஜருத்துர் விஷமச் சிரிப்பு சிரித்தார். “நாதா! சூனியக்காரர்கள் முன்னால் செங்கோலின் சக்தி எதிர்த்து நிற்க முடியாதென்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்களா? அந்தப் பொல்லாத தந்திர மந்திரம் கற்றவர்கள் ஜின்களாலும் ஷைத்தான்களாலும் செய்யமுடியாத பயங்கரச் செயல்களையெல்லாம் செய்யத் துணிந்து விடுவார்களே! இப்பொழுது தாங்களும் நானும் பேசிக்கொண்டிருக்கிற இந்தப் பேச்சையெல்லாங்கூட அவர்கள் எப்படியோ தெரிந்துகொண்டு விடுவார்களே! பிறகு வேறு விபரீதம் தேவையில்லை. இவ்வுலகிலுள்ள சகல வல்லரசுகளும் ஒன்று சேர்ந்து ஏககாலத்தில் மிஸ்ர்மீது படையெடுத்து வந்துவிட்டாலும் நான் கலங்கமாட்டேன். — ஏன்! லூயீ அப்படித்தானே இங்கே பாய்ந்துவந்தான்! — ஆனால், ஒரே ஒரு சூனியக்காரனையோ அல்லது சூனியக்காரியையோ நான் கண்டுவிட்டால், காததூரம் ஓடி ஒளிந்துவிடுவேன். வேண்டாம்! தாங்கள் தெரியாத்தனமாய் அல்லது விளையாட்டுத்தனமாய்க் காரியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! வேறவிஷயம் ஏதுமிருப்பின், பேசுங்கள்! எனக்கு அந்தப் பொல்லாதவர்களை நினைக்கவே பயமாயிருக்கிறது!” என்று நிஜமான பாவனையோடு பொய்யாக நடித்துப் பசப்பினார்.


முஈஜுத்தீனுக்கு ஆத்திரம் அதிகரித்தது. தாடி ரோமங்கள் சிலிர்த்துவிட்டன. “என்ன! உயிரிழந்த பிரேதத்தைக் கூடத் தைரியமாக உடன் வைத்துக் கொண்டிருந்த நீயா இந் நிழலைக்கண்டு பயப்படுகிறாய்? உனக்குத்தான் தைரியமில்லையென்றால், என்னிடம் நீ சொல்லிவிட வேண்டியதுதானே? வருவது வரட்டுமென்று நான் நடவடிக்கை எடுத்துக்கொள்கிறேன். என்ன தைரியசாலியான மலிக்காவாயிருந்தாலும், நீ பெண்ணல்லவா? பெண்கள் பிசாசுக்கும் பில்லி சூனியத்துக்கும் பயப்படுவது சகஜமாயிருக்கிறது. ஆதலினால்தான், நீ இப்படி பயப்படுகிறாய்! அதுவும் அனாவசியமாய்ப் பயப்படுகிறாய்!” என்று மெய்பதற மொழிந்து நின்றார்.


“என்னருங் காதலரே! இப்போது என்ன நிகழ்ந்துவிட்டது? தாங்களேன் இப்படிப் பிரமாதமாய்க் கோபிக்கவேண்டும்? இயற்கை மரணமென்பது வந்து, அந்தச் சூனியக்காரர்கள் இவ்வுலகத்தைவிட்டே தொலைந்துபோனால் நல்லதாய் முடிகிறது. ஊர்க் குருவியைக் கொல்வதற்கு இவ்வளவு பெரிய அஸ்திரத்தைத் தொடுப்பானேன்? எனக்கொன்றும் புரியவில்லையே! நாதா! போதும் விட்டுவிடுங்கள், அவ் வெண்ணத்தை. வீணாகத் தாங்கள் அச் சூனியக்காரர்களின் மாயத்திலே சிக்கிவிடப் போகிறீர்கள்! இன்னம் எத்தனை நாட்களுக்குத்தாம் அவர்கள் வித்தை பலிக்கப்போகிறது? பொறுமையாயிருப்போம். இறைவன் ஒருபோதும் சூனியக்காரர்களை நேசிப்பதில்லை!”


இம் மொழிகள் முஈஜுத்தீனின் கோபத்தைத் தனிப்பதை விட அதிகமாக மூட்டிவிட்டன. “உன் தத்துவார்த்தங்களை நான் செவியேற்கப் போவதில்லை! உனக்கும் எனக்கும் சேர்த்துக் கேடுசூழ்கிற அக் கயவர்கள் யார் என்பதை நான் இப்போதே தெரிந்துகொண்டுதான் ஆக வேண்டும். என் உயிரே போவதாயினும் சரிதான். நான் அந்த சூனியக்காரர்களை—ஆணேயாயினும் பெண்ணேயாயனும்—இன்று பொழுது புலருமுன்னே தொலைத்துத்தான் தீரவேண்டும்! இந்த விஷயத்தில் நீ எனக்கொன்றும் விபரீதபுத்தி போதிக்கத் தேவையில்லை. நான் இப்போதே அந்தப் பகைவர்கள் யாரென்பதைத் தெரிந்துகொண்டே ஆக வேண்டும்!” என்று துடியாய்த் துடித்தார் சுல்தான்.

“இந்தத் தர்மசங்கடத்துக்கு யான் என்ன செய்வேன்? நாதா! தயவுசெய்து என்பொருட்டாகவாவது இந்த எண்ணத்தை மறந்து விடுங்கள். அந்தச் சூனியக்காரர்கள் யாரென்பதை நான் சொல்லியொன்றும் பயன் விளையப்போவதில்லையே! தங்களால் செய்யமுடியாத ஒன்றுக்காக ஏன் தவியாய்த் தவிக்கிறீர்கள்? நான் இந்தப் பரமசங்கடத்துக்கு என்ன செய்வது!”


“என்ன சொன்னாய்? ஒரு பயனும் விளையாதா! நீ என்னைக் கையாலாகாத கம்மனாட்டியென்று கருதிக்கொண்டிருக்கிறாய் போலும்! நீ மட்டும் அந்தத் துரோகி யாரென்பதைச் சொல்லிவிடு. இயற்கை மரணம் வருமுன்னே அப் பாதகனை நான் இவ்வுலகைவிட்டே அனுப்பிவிடுகிறேன். சொல், சீக்கிரம் சொல்!” என்று மீசையைக் கோபமாய் முறுக்கி விட்டார் முஈஜ்.

“சூனியக்காரனைவிடச் சூனியக்காரியே மிகமிகப் பொல்லாதவள் என்பதைத் தாங்கள் அறிந்திருந்தால்….”


“என்ன! சூனியக்காரியா! எவளாயிருந்தால்தான் எனக்கென்ன? நீ யூதர்களின் தவ்ராத் வேதத்தைப் படித்துவிட்டு, அவர்கள் கட்டிவிட்டிருக்கும் பொய்க் கதைகளைப் படித்துவிட்டு, சூனியக்காரிகளுக்கு இப்படியெல்லாம் பயப்படுகிறாய் போலும்! எனக்கொன்றும் பயமில்லை. எவளாயிருப்பினும் சரியே! பாபிலோனியாவிலுள்ள — அங்குள்ள கிணற்றுள்ளே தலைகீழாய்த் தொங்கும் ஹாரூத் மாரூத் தென்னப்படும் வானவர்களின் வித்தை கற்றுள்ள பில்லி சூனியக்காரியாயினும் சரிதான்! நமக்குக் குழந்தை பிறக்காமல் தடைபோட்டுக் கொண்டிருக்கும் அவளை ஒரே வீச்சில் இரு துண்டாக நான் கிழித்து வீழ்த்தவேண்டும்!”


ஷஜருத்துர் பதில் பேசாமலிருந்தார். அவர் எந்த எல்லை வரை முஈஜுத்தீனைக் கொண்டுபோய் நிறுத்தவேண்டுமென்று திட்டம் வகுத்து, வஞ்சகமான பசப்பு வார்த்தைகளால் தந்திரமாக நடித்துப் பேசி வெற்றிபெறப் பெரிதும் விழைந்து நின்றாரோ, அத்துணைப் பெரிய வெற்றியையும் மிக எளிதிலே பெற்றுவிட்டார். எனவே, இன்னம் எப்படி நடந்துகொண்டால் அவ் வெற்றி முழுதையும் செயலாற்று முறையிலே கொண்டுவந்து சேர்க்க இயலுமோ, அப்படிப்பட்ட துறையைத் துருவிக் கண்டுபிடிப்பதிலே மிக விரைவாக அவரது மூளை வேலை செய்து கொண்டிருந்தது.


“ஷஜருத்துர்! இன்னம் என்ன நீ யோசிக்கிறாய்? ஆண்டவன்மீது ஆணையாக நான் சொல்கிறேன்: நம் வாழ்வுக்குக் கேடு சூழும் அந்தச் சூனியக்காரியை நான் மன்னிக்கப்போவதில்லை; ஒருகாலுமில்லை. நீ யோசிக்காதே! இப்போதே சொல்லிவிடு! உன்னை நான் காப்பாற்றுகிறேன். அவளை நான் கண்ட…”


“வேண்டாம், நாதா! வேண்டாம்! பெண்பாவம் பொல்லாதது. அவளைத் தாங்கள் வெட்டியெறிவதால் பயனில்லை. ஆனால், அவள் இனியும் தன்னுடைய விஷமத்தனத்தைப் பிரயோகிக்க முடியாதபடி செய்துவிட்டாலே போதும்.”


“ஷஜருத்துர்! விளையாடாதே! அப் பொல்லாத பழிகாரியின்மீது நான் என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்பதை நீ இப்போது ஒன்றும் கூறத் தேவையில்லை. எனக்கு எல்லாம் தெரியும். பாவிகளைத் தண்டித்தால் பாவமொன்றும் வந்துவிடாது. சூனியக்காரிகளைச் சுட்டெரிக்க வேண்டும்.”


“நாதா! நான் அக் காதகி யாரென்பதைத் தெரிவிக்கு முன்னே அவள் சம்பந்தமாக எனக்கொரு வாக்குக் கொடுப்பீர்களா? பிரமாதமொன்றுமில்லை! விஷயம் இதுதான்: அவளுக்கு வழங்கவேண்டிய நீதியை நானேதான் வழங்கவேண்டும், என்ன சொல்கிறீர்கள்?”


முஈஜுத்தீனுக்கிருந்த ஆத்திரமும் பொறுமையின்மையும் எல்லை மீறிவிட்டன. “உன்னைக்கட்டிக் கொண்டு ஸாலிஹ் எப்படித்தான் மாரடித்தாரோ, தெரியவில்லையே! ஏ, ஷஜருத்துர்! உன்னிடம் சிக்கிக் கொள்கிறவர்களை நீ ஏன் இப்படியெல்லாம் வாட்டி வதைக்கிறாய்? – சரி. உன்னிஷ்டம் போலே நடக்கட்டும்! யார் அந்தத் துரோகி? சொல் பார்ப்போம்!”


“என்னருங் காதலரே! நீங்கள் என்னைக் கட்டிக்கொண்டு மாரடிப்பதாக மறைமுகமாகக் கூறியது என் நெஞ்சைச் சுடுகிறது; பரவாயில்லை! தங்களுக்கேன் நான் வீண் வருத்தத்தை உண்டுபண்ண வேண்டும்? தாங்கள் என்னை விடாமல் வற்புறுத்திய காரணத்தால் மட்டுமே வேறு வழியின்றிக் கூறுகிறேன்: தங்களுக்கும் எனக்கும் புத்திரபாக்கியம் அறவே தோன்றக் கூடாதென்று அல்லுபகல் அறுபது நாழிகையும் சூனியத்துக்குமேல் சூனியத்தை ஓயாமல் செய்துவருபவள் என் மீது அநியாயமாய் அசுயை கொண்டுவிட்ட தங்கள் முதல் மனைவி மைமூனாவாகவே விளங்குகிறாள். அவளுக்குத் தங்கள் மாமனார் அபுல்ஹஸன் கால்கொடுத்துத் தாங்கிக்கொண்டிருக்கிறார்!” என்று பெரிய பாறாங்கல்லைத் தூக்கி முஈஜுத்தீன் ஐபக்கின் தலைமீது போட்டார் ஷஜருத்துர் என்னும் ‘பழையனூர் நீலி’!”


துள்ளிக்கொண்டும் துடித்துக்கொண்டும் பதறிக்கொண்டும் பல்லைக் கடித்துக்கொண்டும் எண்ணெயில்விட்ட பண்ணிகாரம் மாதிரி விம்மிக்கொண்டுமிருந்த ஐபக், ஷஜருத்துர்ரின் இவ் இடியேற்றைக் கேட்டு, செத்த பிரேதம்போலே வெளுத்து விறைத்துப் போயினார். வதனம் வெளுத்துச் சுருங்கிவிட்டது; மேனியெல்லாம் குலுக்கிக் குறுகிவிட்டது; பிளந்தவாய் மூடிவிட்டது. ஷஜருத்துர் கபடத்தனமாய்த் தயாரித்த பொறிக்குள்ளே வலியச்சென்று சிக்கிக்கொண்ட அவர் ‘கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனைப் பிடுங்கிவிட்ட குரங்கதனைப்போலே’ அகப்பட்டு உழலலாயினார். அவர் கண்ணெதிரில் பூலோகம் முழுதுமே இருண்டுவிட்டது. செய்வதின்னதென்று ஒன்றும் புலனாகவில்லை. மூமிய்யா போலே மெளனமாய் விறைத்துப் போயினார்.


“நாதா! என்ன யோசிக்கிறீர்கள்? அந்தச் சூனியக்காரியின் பெயரை நான் உச்சரித்தவுடனே, தங்களுக்கிருந்த கோபத்தில் காற்றாய்ப் பறந்துப்போய், அவளைக் கணப்பொழுதில் கைதுசெய்து இங்குக் கொணர்ந்து நிறுத்துவீர்கள் என்றல்லவோ எதிர்பார்த்தேன்? இவ்வளவு சடுதியில் எப்படித் தங்களின் கொதிப்பேறிய உதிரம் பனிக்கட்டிபோல் கெட்டியாய் உறைந்துவிட்டது? தங்கள் மனைவியாயிற்றே  என்பதற்காகவா யோசிக்கிறீர்கள்? நானும் அதை உத்தேசித்தேதான் இத்தனை நாட்களாகப் பேசாமலிருந்தேன். நீங்களே என் உயிரை வாங்கினீர்கள். இப்போது வேறு மார்க்கமின்றி உண்மையை உரைத்துவிட்டேன். ‘கையாலாகாத கம்மனாட்டி என்று என்னை நீ கருதிக்கொண்டிருக்கிறாய் போலும்!’ என்று சற்றுமுன் சபதம் கூறிய தங்கள் இப்பொழுது எங்கேயோ புகுந்து மறைந்துகொண்டதே! நல்ல சுல்தான், நல்ல மலிக்!”


முஈஜுத்தீன் இன்னதுதான் பேசுவதென ஒன்றும் புலனாகாமல் பித்துப்பிடித்த பைத்தியக்காரனினும் பரிதாபகரமாய்ப் பல்லிளித்தார். மறந்திருந்த மைமூனாவென்னும் அந்த அபலையான தர்மபத்தினியின் திருவுருவம் அவர் கண்முன்னே வந்து நின்றது. இறுதிமுறையாக வீட்டைவிட்டு வெளிக்கிளம்பும் போது அவள் வழியனுப்பி வைத்த அவலக்காட்சி அவருடைய ஞாபகத்துக்கு வந்தது. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையேபோல், அரசியை நம்பி மனைவியைக் கைகழுவிய கதையாய்ப் போய் முடிந்ததே என்று கையைப் பிசைந்தார். ஒரு பாபமுமறியாத அபலை மைமூனாவை இந்தப் பிசாசு போன்ற ஷஜருத்துர் வீணே பழிதூற்றுவதுடன், அவரே அக்கிரமமாகச் ‘சூனியக்காரி’என்றுகூட அழைக்கிறதே என்று மனம் பதறினார். சூழ்ச்சிக்காரியாகிய இந்த ஷஜருத்துர்ரின் கைகளிலே சிக்கிக்கொண்டு தாம் பரிதபிக்கிற கேவலமான நிலையையுன்னிக் கைசேதப்பட்டார். தெரியாத்தனமாக இம் மாயக்காரியின் சாஹஸங்களுக்கெல்லாம் அடிமையாகி மானத்தையிழந்து, சுயமரியாதையை விற்று, சுயேச்சையைப் பறிகொடுத்து, மனிதர்களுள்ளெல்லாம் மிகக் கீழானவனாகத் தாம் இழியவேண்டி வந்ததே என்று மனம் புழுங்கினார். இவள் தந்திரமாய் விரித்து வைத்த விசிறி வலைக்குள்ளே தாமே தம் அவசரபுத்தியால் ஆத்திரப்பட்டு வலியச்சென்று வீழ்ந்து மாட்டிக் கொண்டதை யுன்னியுன்னி மனம் நைந்தார்; புத்தி தடுமாறினார். இனி என்ன செய்வதென்று ஒன்றுந் தோன்றாது திகைத்தார்.


“இனிச் சிந்திப்பதில் பயனில்லை, நாதா! உங்களுடைய ஆருயிர் மனைவியாகிய, இம்மிஸ்ரின் வன்மைமிக்க சுல்தானாவாகிய நான் எனக்கென்று ஏவிவிடப்பட்டிருக்கும் இச் சூனிய மந்திரத்திலிருந்து விடுதலை பெற்றாலன்றி, தங்களுக்கும் எனக்கும் புத்திரப்பேறு என்னும் பாக்கியம் கிட்டபோவதில்லை. அப்படிப்பட்ட பூரண விடுதலை எனக்கும் தங்களுக்கும் கிடைக்கவேண்டுமென்றால், இக்கணமே அச் சூனியப் பைசாசமாகிய மைமூனாவைத் தாங்கள் என் முன்னே கொணர்ந்து நிறுத்தியாக வேண்டும். தாங்கள் என்னை மனப்பூர்வமாக காதலிப்பது வாஸ்தவமென்றால், தங்கள் மூலமாக நான் குழவிகளை பெறவேண்டுமென்று தாங்கள் கவலைப்படுவது மெய்யென்றால், இப்படித் தாங்கள் மெளனவிரதம் மேற்கொள்வதற்குக் கொஞ்சமும் அர்த்தமேயில்லை. அன்றியும், வீண் காலதாமதம் செய்வதனால் அவள் இன்று இங்கு நம்மிடையே நடந்த எல்லாவற்றையும் எப்படியாவது தெரிந்துகொண்டு விடுவாள். மேலும், இன்னம் கொடூரமாகவெல்லாம் தன் சூனிய வித்தையைப் பிரயோகிக்கத் தொடங்குவாள். சூனியம் பொல்லாதது; மிகமிகப் பொல்லாதது.”


“ஏ, ஷஜருத்துர்! என் மைமூனா நிச்சயமாக அப்படிப்பட்ட பொல்லாத சூனியக்காரியாகவே விளங்குறாள் என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ளா முன்னம்…..,” என்று முஈஜுத்தீன் மெல்ல வாய் திறந்தார். ஆனால், திறந்த வேகத்தைவிட அதிகமான வேகத்திலே வாய்மூட நேர்ந்தது.


“அவள் சூனியக்காரியா என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளவேண்டும்! இன்னம் என்ன சாட்சியங்கள் வேண்டியிருக்கினறன? முன்னம் மன்ஸூர் கலீலைப் பெற்ற என் வயிற்றிலே வேறொரு கரு எப்படித் தரிக்காமலிருக்க முடியும்? எல்லாம் அந்தக் காதகியின் வித்தையல்லாமல் வேறென்ன? எனக்குக் குழந்தை பிறக்காமற் போனால் தானே இந்த ஸல்தனத்துக்கு சுல்தானாவாக உயர்ந்துவிடலாமென்னும் பேராசையொன்றே அவளை இப்படியெல்லாம் செய்யத் தூண்டுகிறது. சும்மாவா பெரிய மனிதர்கள் சொல்லுகிறார்கள்: சூக்ஷு­மக்காரியை அண்டினாலும் சூனியக்காரியை அண்டக்கூடாதென்று? அவள் எனக்கு இன்னம் என்னென்ன தீமைகளைச் செய்யவேண்டுமென்று சதிபுரிகிறாளோ! தாங்களோ, ஒருவிதமான கவலையும் கொள்ளாமல் இந்த ராஜபோக வாழ்க்கை மட்டும் போதுமென்று இறுமாந்து விடுகிறீர்கள்! யாரைச் சொல்லி என்ன பயன்? இப்படியெல்லாம் பொல்லாத விதியை நான் அனுபவித்துத் தீரவேண்டுமென்று இறைவன் என் தலையில் எழுதிவிட்டிருக்கிறான்!” என்று நீலி ஷஜருத்துர் பேசும் பொழுதே, இரண்டொரு சொட்டு முதலைக் கண்ணீர் தானே வடிந்தது.


“ஷஜர்! சாட்சியமில்லாமலும் நிரூபணமில்லாமலும் நாம் மலிக்குல் அஷ்ரபை ஒழித்துத் தீர்த்த கதையாகவல்லவோ இதுவும் காணப்படுகிறது! மைமூனா உனக்கு விரோதமாக எப்படிப்பட்ட சூழ்ச்சி செய்தாள் என்பதை நன்கு தெரிந்து கொள்ளாமல் நான் எப்படி நடவடிக்கை எடுப்பது? என் ஸ்தானத்திலே உன்னை வைத்துப் பார்!”


“ஓஹோ! நான் மலிக்குல் அஷ்ரபுக்காகப் போட்ட பொய்த் திட்டத்துக்கு ஒப்பவே இந்தத் தவறான கூற்றையும் உரைக்கிறேனென்று தாங்கள் சூசகமாகக் கூறுகின்றீர்கள் போலும்! நானென்ன மோசக்காரியா, அல்லது பொய்ந் நடிப்புக்காரியா? அரச தந்திர யுக்திக்காக நான் ஏதாவது அஷ்ரபுக்கு விரோதமாகச் செய்திருந்தால், அதை அப்படியே எடுத்து இதற்கும் பொருத்துவதோ? பேஷ்! நன்றாயிருக்கிறது! – நிச்சயமாக நான் சொல்லுகிறேன்: நாளைக் காலைக்குள் அவள் இங்குக் கொணரப்படுவாள். மிஸரின் ஸ்ல்தனத்துக்கும் மக்களின் நன்மைக்கும் பதவிப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கும் நீங்கள், அந்த மைமூனாவென்னும் எம்முடைய துரோகியை அக்கணமே தலாக்கு சொல்லிவிடாவிட்டால் – அவளை விவாக விமோசனமளித்து அவளிடமிருந்து நம்மெல்லாரையும் காப்பாற்றி விடாவிட்டால், சுல்தானா ஷஜருத்துர்ரின் நடவடிக்கைகள் என்ன விபரீதமாய்ப் போய்முடியுமென்பதை நான் இப்போது கூறமுடியாது!… என்ன, யோசிக்கிறீர்கள்? என்னரும் பிராணநாதா!”


“ஏ, ஷஜருத்துர்! வேண்டாம், வேண்டாம், வேண்டாம்! என்னை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். ஒரு பாவமுமறியாத உத்தம பத்தினியாகிய ஓர் அபலையின் வாழ்க்கையை இன்னம் பாழ்படுத்த விரும்பாதே! அஃது அல்லாஹ்வுக்கே அடுக்காது.”


“அப்படியானால், நான் மட்டும் அத்தகைய உத்தமப் பத்தினியல்ல போலும்! முடியாது, முடியாது! நீங்கள் எனக்குச் சற்றுமுன் ஆண்டவன்மீது ஆணையிட்டுச் சொன்ன சத்திய வாக்கை எப்படியும் நிறைவேற்றித்தான் தீர வேண்டும்; அவளுக்குத் தலாக் கொடுத்துதான் ஆகவேண்டும்! அவளாலேயே என் உடல் உருகுகிறது; உள்ளம் குழைகிறது; என் வயிறு எரிகிறது! அவள் பெற்று வைத்துக்கொண்டிருக்கிற பாலகனை நாளைக்கு இந்நாட்டின் சுல்தான் என்று பிரகடனப்படுத்துவதற்காகவே அவள் சதி செய்கிறாள். அச் சதியின் காரணமாகவே என்னை மலடியாக்கிக்கொண்டிருக்கிறாள். என் கர்ப்பாசயத்தில் ரணமுண்டாய் விட்டது. நீங்கள் அவளைத் தலாக்குச் சொல்லித்தான் தீர வேண்டும். அவளே தன்னுடைய அழிவுக் காலத்தைச் சம்பாதித்துக் கொண்டாள். நாதா! என்ன சொல்கிறீர்கள்?”


முஈஜுத்தீனின் கண்கள் கறகறவென்று சுழன்றன; கைகள் விலவிலத்தன; மூளை கிறுகிறுத்தது; அப்படியே செயலிழந்து தொப்பென்று சாய்ந்து, பேச்சு மூச்சின்றிப் பொத்தென்று பெருமயக்கத்துள் வீழ்ந்துவிட்டார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment