அபிஸீனிய அரசர் அளித்த அபயம் – 2

நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம் பிரதிநிதிகளைப் பார்த்து, “உங்கள் கட்சி என்ன? இவர் கூறும் குற்றச்சாட்டுகள் மெய்தானா?” என்று கேட்டார். அப்பொழுது அபூத்தாலிபின் மற்றொரு மைந்தராகிய, அலீயின் (ரலி) சகோதரரான ஜஅஃபர் (ரலி) என்னும் முஸ்லிம்களின் தலைவர் இவ்வாறு உரை நிகழ்த்தினார்:

“மன்னர் பெருமானே! நாங்கள் இத்தனை காலமாக அறியாமையில் ஊறிக்கிடந்தோம்; நட்டு வைத்த கற்களையெல்லாம் கடவுளென்று கும்பிட்டு வந்தோம்; செத்துப் போன மிருகங்களின் அழுகிய இறைச்சியையும் நாங்கள் புசித்து வந்தோம்; நினைக்கவே கூசுகின்ற அப்படிப்பட்ட அனேக இழி செயல்களில் மூழ்கிக் கிடந்தோம்; எங்கள் உறவின் முறையாளர்களுக்கு நாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளைத் திமிருடன் ஒதுக்கி வந்தோம்; எங்கள் அண்டை அயலார்களைச் சுரண்டிப் பிழைப்பு நடத்தி வந்தோம். எங்களுள் வல்லமை மிக்கவன் ஏமாளியான எளியோர்களை நசுக்கிச் சாறு பிழிந்து வந்தான். இந்த நிலைமை இனியும் நீடிக்கா வண்ணம், எங்களை நல்வழிப் படுத்திச் சீர்திருத்துவதற்கென்று எங்களிடையே இறைவன் ஒரு நபியைத் தோற்றுவித்தான். அவருடைய குலப் பெருமை, கண்ணியத் தன்மை, வாக்குச் சுத்தம், கருணையுள்ளம் முதலிய எல்லா நலன்களையும் நாங்கள் நன்குணர்ந்திருக்கிறோம்.

“எங்கும் நிறைந்துள்ள, முழு வல்லமை பொருந்திய ஏக இறைவனை வணங்க வேண்டுமென்று அவர் எங்களுக்குக் கற்பித்தார். சிலை வணக்கம் கூடாது, கண்ட கண்ட பொருளையும் கடவுளென்று கூறி அதற்குச் சிரம் தாழ்த்தக்கூடாது என்று எங்களுக்கு உற்சாக மூட்டினார். எப்போதுமே மெய்பேச வேண்டும் என்றார்; சொன்ன சொல்லைக் காப்பாற்றியே தீரவேண்டும் என்றார்; உறவின் முறையாளரை உதறித் தள்ளக்கூடாது என்றார்; அண்டை அயலாருக்கும் சகாயம் நல்கவேண்டும் என்றார். நேர்மையற்ற செயல்களை நெஞ்சாலும் நினைக்கத் தகாது, சகோதரனின் உதிரத்தை உறிஞ்சக்கூடாது, போர் வெறியில் ஈடுபடக்கூடாது என்று தடை விதித்தார். மானக்கேடான எந்தச் செயலையும் விட்டு விடவேண்டும்; பொய் புகல்வதைக் கைவிட வேண்டும்; அனாதைகளின் அபலைகளின் சொத்துக்களைக் காப்பாற்றி அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்; பெண்ணினத்தாரின் கற்புக்குப் பாதுகாவல் நல்கவேண்டும்; பொய்க் குற்றச்சாட்டை, வீண்பழியை அவர்களின் கற்பின் மீது சுமத்துவதை விட்டொழிக்க வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு அவர் போதனை வழங்கினார். எனவே, நாங்கள் அவர்மீது நம்பிக்கை வைத்தோம்; அவரைப் பின்பற்றினோம்; அவர் சொன்ன உபதேசப்படி ஒழுகிக்கொண்டோம்.

“ஏனோ எங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று எங்கள் இன மக்களே எங்களை வெறுத்து, இல்லாத கொடுமைகளையும் எங்கள்மீது அவிழ்த்து விட்டார்கள்; வருணிக்க முடியாத சித்திரவதைகளுக்கு எங்களை இரையாக்கினார்கள். ஒரு வேளை, இப்படியெல்லாம் செய்தால் நாங்கள் எங்கள் நேரிய கோட்பாட்டைக் கைவிட்டு மீண்டும் பழையபடியே பல தெய்வ வழிபாட்டுக்கும் சிலை வணக்கத்துக்கும் கொடி பிடிக்க முற்படுவோம் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். இப்படியே அவர்களிழைத்த குரூரமிக்க கொடுமை வரம்பு மீறித் தறிகெட்டுவிட்டது. இனியும் சகிக்கவோ பொறுக்கவோ முடியாத ஒரு கட்டம் வந்தது. எனவே, கதியற்றவர்க்குப் புகலிடம் நல்கும் தங்கள் தண்ணளிமிக்க தயவை நாடி இங்கு ஓடிவந்தோம். உங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்து அடைக்கலப் பொருள் ஆகிவிட்டோம். நாங்கள் புரட்டா்களா, அல்லது புரட்சிக்காரர்களா, அல்லது விஷமிகளா என்பதை உங்கள் ஒற்றர்கள் நன்கறிவார்கள். உங்கள் சட்டத்துக்கும் இறைவனது சட்டத்துக்கும் முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு ஒழுகும் எங்களைத் தாங்கள் இந்தக் கொடுங்கோலர்களின் படுபாதகத்துக்குப் பலியாக்கிவிட மாட்டீர்கள் என்று நம்பிக்கை வைக்கிறோம்.”

“அது சரி; நீங்களும் உங்கள் மதக் கோட்பாடும் எங்கள் மதத்தையும் எங்கள் ஏசுநாதரையும் அவமதிப்பதாக ஒரு குற்றச்சாட்டுக் கூறப்படுகிறதே, அதற்கென்ன சொல்கிறீர்?” என்று அரசர் கேட்டார்.

உடனே ஜஅஃபர் திருக் குர்ஆனின் 19ஆவது அத்தியாயமாகிய மர்யம் (மேரி அன்னை) என்னும் அழகிய அதிகாரத்தின் முதலிரு பகுதிகளை அரசவையில் ஒப்பித்துக் காண்பித்தார். ஈஸா உட்பட, ஜகரிய்யா, எஹ்யா (John) முதலிய புண்ணியவான்களின் பெருமைகளை மகிமைப்படுத்தும் அத் திருவாக்கியங்களின் இன்சுவை கேட்டு நஜ்ஜாஷி வியப்புற்று மெய்பதறி, விட்டார். குறைஷித் தூதுகோஷ்டியினரை அவர் முறைத்துப் பார்த்தார். ராஜகோபம் பொங்கிற்று.

“ஏ பொய்யர்களே! இந்த உத்தம பக்தசிகாமணிகள் மீது நீங்கள் வீண் பழியைச் சுமத்தி நம்மை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். நாம் இவர்கள்மீது எந்தத் தவற்றையும் காணவில்லை; அல்லது இவர்கள் ஏதும் குற்றமிழைத்திருப்பதாகவும் கருதமாட்டோம். இவர்களை – இந்த நிரபராதிகளை உங்களிடம் நாம் ஒப்படைக்க மாட்டோம். நீங்கள் வந்த வழியே திரும்பலாம். இனி ஒரு நிமிடமும் நீங்கள் இங்கே தங்கக்கூடாது; மீறித் தங்கினால் நம் காவலர்கள் உங்களைப் பலவந்தமாக வெளியேற்றி விடுவார்கள்.”

குறைஷித் தூதர்களின் தலை சுழன்றது. வந்த அலைச்சல், செய்த செலவு, நம்பி வந்த முடிவில் ஏமாற்றம், போதாததற்கு மன்னர் விடுத்த எச்சரிக்கை எல்லாம் சேர்ந்து அன்றிரவே அவர்களை அங்கிருந்து மிரண்டோடச் செய்துவிட்டன.

ஏமாற்றத்துடன் மக்காவுக்குத் திரும்பிய அக்கோஷ்டியிடம் அபூஜஹல், “என்ன நடந்தது? எங்கே அத் துரோகிகள்?” என்று கேட்டான்.

“அவர்கள் இப்பொழுது நாற்படைகள் வைத்து நாடாளும் மன்னாதி மன்னராம் நஜ்ஜாஷீயின் கௌரவப் பிரஜைகளாகி விட்டார்கள். அவர்களை அவர் காப்பாற்றுவதாக உறுதி எடுத்துக்கொண்டு விட்டார். இனி நாம் அபிஸீனியாமீது படையெடுத்து வென்றாலொழிய, ஒரே ஒரு புது மதப் பித்தனைக்கூட அங்கிருந்து பறித்துவிட முடியாது!” என்ற பதில் கிடைத்தது.

நஜ்ஜாஷி மன்னரின் ஆதரவு முஸ்லிம்களுக்கு உறுதியாகி விட்டதென்பதைக் கேட்ட எல்லாக் குறைஷித் தலைவர்களும் பேயறைந்த மாதிரி ஆகிவிட்டார்கள். அந்த அரசரின் வல்லமை எப்படிப்பட்டது என்பதை அவர்கள் யாவரும் நன்கறிவர். அவர் மீது படையெடுத்துச் செல்வது என்பது நெருப்பில் விழும் விட்டிற் பூச்சிக்கு நிகராகிவிடும் என்பதைச் சொல்லவா வேண்டும்?

ஏமாற்றமடைந்த, சுய கௌரவமிழந்த அந்த மூர்க்கர்கள் இப்போது தங்கள் ஆத்திரத்தையும் வெறுப்பையும் இங்குள்ள முஸ்லிம்கள் மீது திருப்பலானார்கள். முஸ்லிம்களோ, தங்களுக்கு ஆதரவளிக்க அண்டையிலிருந்த பேரரசு தயாராக இருக்கிறது என்னும் துணிச்சலுடன் எல்லா எதிர்ப்பையும் துச்சமாக மதித்தார்கள். உபத்திரவம் பொறுக்க முடியாமற்போன சமயத்தில் ஆண்களும் பெண்களும் அடங்கிய மற்றும் 101 முஸ்லிம்கள் குறைஷிகளுக்குத் தெரியாமல் தந்திரமாக அபிஸீனியாவுக்கு வெளியேறி ஓடிவிட்டார்கள். இது ‘இரண்டாம் வெளியேற்றம்’ என்று அழைக்கப்படும். உதுமானும் (ரலி) அவர் மனைவி ருகையாவும் (ரலி) மட்டுமே அந்நாட்டிலிருந்து மக்காவுக்குத் திரும்பினார்கள். மற்ற யாவரும் ஏழாண்டு காலம் அங்கேயே தங்கியிருந்து, முஹம்மது நபி (ஸல்) மதீனாவுக்குச் சென்ற பின்னரே அங்குச் சென்று அவருடன் சேர்ந்து கொண்டனர்.

நஜ்ஜாஷி மன்னரின் பாதுகாவலிலிருந்த முஸ்லிம்கள் அம் மன்னருக்கும் நாட்டு மக்களுக்கும் காண்பித்த விசுவாசமும் நன்றிக் கடனும் இங்குக் குறிப்பிடத்தக்கன. “நலனுக் கீடாக மற்றொரு நலன் விளைந்தாக வேண்டும்” என்று திருக் குர்ஆன் (55:60) போதிப்பதைச் செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பொன்று அவர்களுக்குக் கிட்டிற்று. அபிஸீனியா மீது அண்டை நாட்டரசன் ஒருவன் படையெழுந்து வந்தான். உடனே முஸ்லிம்கள் மன்னரின் படையில் சேர்ந்து நியாய பூர்வமான பங்கெடுத்துக் கொண்டதுடன், நஜ்ஜாஷி மன்னரே வெற்றி பெறுவாராக என்று ஐங்காலமும் மனமுருகி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறிற்று. எனவே, அரசரும் அவர் பிரஜைகளும் முஸ்லிம்கள் மீது இன்னம் அதிகமான பிரியங்கொண்டு விட்டார்கள்.

மக்காவிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் அந்த அன்னிய நாட்டில் பத்திரமாக வாழ்ந்து வந்த நேரத்தில், நபியவர்கள் இங்கே சில தோழர்களுடனிருந்து எதிர்ப்பைச் சமாளித்து வந்தார்கள். குறைஷிகள் அவருக்குப் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசையெல்லாம் மூட்டி விட்டார்கள். நபியவர்களோ கொஞ்சமும் மசியவில்லை. சில மூர்க்கர்களோ, “நீர் எல்லாம் வல்ல சர்வ ரட்சகனின் தூதர் என்கிறீர். இது மெய்யென்றால், வரண்டு கிடக்கும் இந்தப் பாலை நிலத்தில் ஜீவ நதிகள் கரைபுரண்டோடுமாறு செய்யுமே பார்ப்போம்!” என்றார்கள். வேறு சிலர், “நாங்கள் புரிவது அக்கிரமம் என்றால், விண்ணிடிந்து எங்கள் தலைமீது வீழ்ந்து நசுக்கட்டுமே, பார்ப்போம்!” என்றார்கள். மற்றும் சிலர், “எங்கே, இந்த மலையைப் புரட்டிக் காட்டுமே! பத்தரை மாற்றுப் பசுந்தங்கத்தால் ஒரு மாளிகையை நிர்மாணித்து எங்களுக்கு உமது தெய்விகத்தை நிரூபித்து விடுமே! வானலோகத்துக்குப் படிக்கட்டு எழுப்பி அதன் உச்சிமீது ஏறி நின்று காட்சியளியுமே!” என்று அறை கூவினர்.

நான் தேவனல்லன்; உங்களைப் போன்ற ஒரு மனிதனே நான். நீங்கள் என்ன உண்கிறீர்களோ அதையே நானும் உண்கிறேன். நீங்கள் என்ன கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கிறீர்களோ அவற்றையே நானும் அனுபவிக்கிறேன்.

“நான் தேவனல்லன்; உங்களைப் போன்ற ஒரு மனிதனே நான். நீங்கள் என்ன உண்கிறீர்களோ அதையே நானும் உண்கிறேன். நீங்கள் என்ன கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கிறீர்களோ அவற்றையே நானும் அனுபவிக்கிறேன். நான் செப்பிடு வித்தைகள் கற்றில்லை, உங்களுக்கு மாயாஜாலங்களைச் செய்து காண்பிக்க. நான் அற்புதங்களைச் செய்து காண்பித்தால் மட்டுமே என்னை நம்புவேன் என்கிறீர்கள். கற்றறியாத எனக்கு இறைவன் ஞானத்தைப் புகட்டி, நீங்கள் கண் திறக்கவேண்டுமென்று என் மூலமாக உங்களுடன் வார்த்தையாடுகிறானே இதனினும் மேலான வேறொரு புதிய அற்புதமும் வேண்டுமோ? இந்தக் குர்ஆனைவிடக் கண்கண்ட அற்புதம் வேறொன்றும் உண்டோ? வெறும் செப்பிடு வித்தையும் அற்புத ஜாலமும் மட்டும் எவனையும் உத்தமனாக்கிவிடா.

“மேலும், இறைவனின் சட்டம் தனது நியதிப்படி செயலாற்றி வருகிறது. இதில் குறுக்கிட்டு, அந்தச் சட்டத்தை மாற்றி இரவைப் பகலாக்கித் தருமாறு அவனிடம் குதர்க்கம் பேச நான் யார்? அல்லது பகலை இரவாக்கித் தருமாறு அவனிடம் கோரிக்கை விடுத்து, அவனுடைய சட்டத்தை அவனே மாற்ற வேண்டுமென்று சண்டித்தனம் செய்ய நான் சாத்தானா, என்ன? அவன் எனக்கு என்ன அறிவிக்கிறானோ அதையே நான் செய்கிறேன். நான் அவனது அடிமை. எனக்கு ஏவலிடத்தான் அந்த எஜமானுக்கு உரிமை இருக்கிறதன்றி, நான் ஒன்றும் அவனிடம் கோணற் கட்சி பேச முடியாது. அதே மாதிரி, நீங்கள் யாவருமே அவனுடைய அடிமைகளே. அவனுக்குத்தான் நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமன்றி, நீங்கள் எஜமானாக உங்களை நினைத்துக் கொண்டு அவனிடம் வாதாடக் கூடாது. அற்புதங்களைச் செய்து காட்டும் கண்கட்டு வித்தை காண்பிக்கிற மந்திரவாதியாக அவன் என்னை அனுப்பி வைக்கவில்லை. வானவர்கள் வீதியில் நடமாடும் பிறவிகளல்லர். அதனால்தான் அவன் ஒரு வானவரை உங்களுக்கு நபியாக அனுப்பி வைக்கவில்லை. இறைவனின் ஆஸ்தியெல்லாம் எனது கையில் அடங்கிக் கிடப்பதாக நான் என்றைக்கும் சொன்னதில்லை; அல்லது மறைவானவற்றையெல்லாம் நான் அறிவேன் என்றும் வீம்பு பேசியதில்லை.

“நான் ஒரு மனிதன்; ஆனால், இறைவன் என்னை அவனுடைய நபியாக அனுப்பியிருக்கிறான். எனது கடமை உங்களை எச்சரிப்பது மட்டுமே. ஏற்று நடந்து உத்தமர்களாக உயர்வதும், ஏற்காமலே மறுத்து அவனுடைய கோபத்துக்கும் சாபத்துக்கும் இரையாகி நீசர்களாகிப் போவதும் உங்களிஷ்டம். நீங்கள் உன்னதமானவர்களாக உயர்ந்தால், துறக்கமென்னும் தெவிட்டாத பேரின்பம் கிடைக்கும். மட்டரகமான அநியாயக்காரர்களாக இழிந்தால் நரக வேதனைக்கு இரையாவீர்கள். நீங்கள் என்னை நபியென்று ஏற்றுக் கொண்டால் மட்டும் உங்களுக்கு சுவர்க்கம் சித்திக்காது. ஆனால், அப்படி ஏற்றதற்கு அறிகுறியாக அன்றாடச் செயலில், ஒவ்வொரு அசைவில் நீங்கள் இறைக் கட்டளைக்கு முரணின்றி நடக்க வேண்டும். மெய்ந் நம்பிக்கையும் நற்செய்கையும் இணைந்தால்தான் உங்களுக்கு விமோசனம். இரண்டில் ஒன்று மட்டும் உங்களை உய்விக்காது.”

இப்படியெல்லாம் முஹம்மது நபி (ஸல்) தன்னறிவிப்புக் கூறிக் கொண்டார்கள். அபூஜஹல், அபூலஹப் போன்ற கடின உள்ளம் பெற்ற கயவர்களோ, “பைத்தியம் முற்றிவிட்டது. உளறல் அதிகமாகிவிட்டது. எல்லாப் பிதற்றல்களையும் அல்லாஹ்வின் தலையில் போட்டுவிட்டு, உலகை ஏமாற்றும் மோசடிக்காரராக அப்துல்லாஹ்வின் மகன் ஆகிவருகிறார். சீக்கிரமே ஒரு நல்ல முடிவை நாம் எடுக்காவிட்டால், இந்த ஒரு பைத்தியம் நாட்டில் வாழும் அத்தனை பேரையுமே பைத்தியமாக்கி விட்டு விடும். எனவே, தக்க நடவடிக்கை எடுப்போம்; அதுவும் சிக்கிரமே எடுப்போம்; உடனடியாக எடுப்போம்!” என்று மீசைகளை முறுக்கினார்கள்; தாடி ரோமத்தைப் பிய்த்துக் கொண்டார்கள்.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>

Related Articles

Leave a Comment