அபுல் ஹஸனின் ஆத்திரம்

தந்தையின் இல்லத்தை நோக்கிச் சென்று அவரது மடிமீது மைமூனா முகத்தைப் புதைத்துக் கோவென்று அலறியதும், முதலில் அக் கிழவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ மாபெரிய பேராபத்துத்தான்

வந்திருக்க வேண்டும்; அதனாலேயே அவள் அப்படிக் கதறுகிறாள் என்பதை அபுல் ஹஸன் அரைநொடியில் அறிந்துகொண்டு விட்டார். அக் கணமே அவர் சட்டென்று மைமூனாவின் சிரத்தைப் பற்றித் தூக்கி நிறுத்தி, “இப்பொழுது என்ன பேராபத்து விளைந்துவிட்டது?”என்று பதஷ்டத்துடன் துடித்துக் கேட்டார்.

அவர் இந்த வினாவை விடுத்ததும், மைமூனாவின் சோகமும் உரோஷமும் முன்னினும் பன்மடங்காய்ப் பெருகிவிட்டமையால், பெருஞ் சத்தமிட்டு, விக்கிவிக்கித் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். கிழவரின் சுருக்கம் விழந்த நெற்றியிலே அச்சமும் ஆத்திரமும் பொருந்திய கவலை ரேகைகள் அனந்தம் படர ஆரம்பித்தன.

“என தாருயிர் மகளே! இப்பொழுது என்ன நேர்ந்துவிட்டது? ஏன் இப்படி நீ அழுது சலிக்கிறாய்? சொல்லிவிட்டு அழக்கூடாதா? நீ அழுவதைப் பார்த்தால், எனக்கும் அழுகையாய் வருகிறதே!”என்று அழுகிற குரலில் சலித்துக் கொண்டார் அபுல் ஹஸன்.

“அபூ….! என்னைத் திரஸ்கரித்து விட்டார்….!” என்று தேம்பித்தேம்பி அரற்றினாள் மைமூனா.

“என்ன, திரஸஙகரித்து விட்டானா? எனக்கொன்றும் புலப்படவில்லையே?” என்று வியப்புடன் வினவினார் அவ் வயோதிகர்.

“ஆம்! திரஸ்கரித்து விட்டார். எனக்கு மூன்று தலாக்கையும் கொடுத்தே விட்டார்!” என்று பேசும்பொழுதே, மைமூனாவுக்கு மீண்டும் துக்கம் அடைத்துக்கொண்டு வந்து, நெஞ்சை அமுக்கிப் பிடித்துக் கண்ணீரைப் பொழியச் செய்துவிட்டது.

அபுல் ஹஸன் அக்கணமே கடுஞ்சினம் கொண்டுவிட்டார்; கண்களிரண்டும் கொவ்வைக் கனியேபோல் சிவந்துவிட்டன.

“என்ன, தலாக்குச் சொல்லிவிட்டானா? அவன் எப்பொழுது உன் வீட்டுக்கு வந்தான்?”என்று சினங்கக்கக் கடாவினார்.

“அவர் வரவில்லை. என்னை அரண்மனைக்குக் கூப்பிட்டழைத்து விவாக விமோசனம் அளித்துவிட்டார்.”

“என்ன? உன்னை அரண்மனைக்குக் கூப்பிட்டனுப்பியே தலாக்குச் சொன்னானா?”

“அபூ! எல்லாம் என் பொல்லாத தலைவிதி! அந்தத் திருட்டுச் சாஹசக்கள்ளியின் மாயாஜாலம்! அவரை அவள் அப்படியே மாந்திரீக சக்தியால் மயக்கி வைத்திருக்கிறாள்”என்று பல்லைக் கடித்துக்கொண்டே பதறினாள் மைமூனா.

“மைமூனா! எனக்கொன்றும் விளங்கவில்லையே! நீ ஒன்றையும் விவரமாகச் சொல்லாமல் எல்லாவற்றையும் கழப்பக் குழப்புகிறாயே! இதோ, சரியாய் அமர்ந்துகொண்டு, என்ன நடந்ததென்பதை எனக்கு விவரமாய்ச் சொல், என் மகளே!” என்று இதமாய்ப் பேசினார் அபுல் ஹஸன்.

ஆதியோடந்தமாக நிகழ்ந்த சம்பவங்களனத்தையும் கோ(ர்)வையாகத் தொகுத்துச் சொன்னாள் மைமூனா. அவளை முஈஜுத்தீன் தலாக்குச் சொன்ன விவரத்தை விளக்கும் பொழுது அவளுக்கே பெரிய ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. பிறகு அவள் ஷஜருத்துர்ரைச் சபித்த விவரத்தைச் சொல்லும்பொழுது அவளது ரோமக்கால்கள் சிலிர்த்துவிட்டன. கதை முழுதையும் பொறுமையாய்க் கேட்ட, பெண்ணைப் பெற்ற தந்தைக்கு உதிரமெல்லாம் சுண்டிவிட்டது. மைமூனா பேசி முடித்ததும், அபுல் ஹஸன் நீண்ட நெடிய பெருமூச்சொன்றை இழுத்து விட்டார்.

“மைமூனா! நான் இவற்றையெல்லாம் முற்றிலும் எதிர்பார்த்தேதான் இருந்தேன். ஆனால், நீ மட்டுமே என் பேச்சைக் கேட்க மாட்டேனென்று முதலைப் பிடியாய் முரட்டுத்தனமாக உன் மனப்போக்கின்படியே நடந்துகொண்டு வந்தாய். குலூபுத்ராவின் (கிளியோபாட்ரா) சரித்திரத்தையும் ரோமாபுரி மன்னர்கள் பண்டைக்காலத்தில் அவளுடைய வலையிலே எப்படி விழுந்து சிக்கித் தவித்தார்களென்பதையும் நீ அறியமாட்டாய். இன்றைக்குச் சரியாக 1300 ஆண்டுகளுக்கு முன்னே அந்த மாயாஜால குலூபுத்ரா வீற்றிருந்த அதே இடத்திலேதான் இன்று இந்த ஷஜருத்துர் என்னும் இக்கால குலூபுத்ரா
அமர்ந்துகொண்டு கட்டழகர்களை மயக்கிவருகிறாள் என்பதை நான் எத்தனையோ முறை உன்னிடம் சொன்னேன். நீ நம்பவே இல்லை. இன்று நீயே அந்தச் சாஹஸக் கள்ளியை நேரில் சந்தித்துவிட்டு, அவள் எவ்வெப்படி எல்லாம் உலகை ஏமாற்றித் திரிகிறாள் என்பதைக் கண்டுகொண்டு வந்துவிட்டாய்.

“மகளே! எதுவுமே உன் தலைவிதியன்று. ஆனால், அந்த முஈஜுத்தீன் என்பவன் பார்வைக்கு மிகவும் லக்ஷணமானவனாகவும் அரண்மனையில் பெரிய உத்தியோகம் பார்க்கிறவனாகவும் விளங்கி வந்தானே என்னும் காரணத்துக்காக அவன் தலையிலே உன்னைப் போட்டுடைத்த என் தலைவிதிதான் மிகவும் பொல்லாத விதியாய்த் தெரிகிறது. எண்ணெயைத்தான் தேய்த்தேன்; எழுத்தையுமா பார்த்தேன்? அற்பனுக்குப் பவிசு கிடைத்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்னும் முதுமொழிப்படி, சும்மா கிடந்த அவனை அந்த ஷஜருத்துர் சுல்தானாகச் செய்துவிட்டாள், அவன் உனக்குத் தலாக்கு மட்டுமா கொடுப்பான்? மகளே, நீ அழாதே! ஆண்டவன் உனக்கு ஒரு குறையும் உண்டுபண்ண மாட்டான். நீ ஷஜருத்துர்ருக்குக் கொடுத்து வந்த சாபத்தை அவனே நிறைவேற்றி வைக்கப் போதுமானவன். நீ ஒன்றுக்கும் கண்கலங்காதே! ஆண்டவன் உனக்குப் போதிய ஆயுளைத் தந்தருளிச் செய்து, உன் மூலமாகவே அச் சாஹஸக்காரியை நிர்மூலமாக்கி வைப்பான்! அவன்மீது நீ முழு நம்பிக்கையும் ஆதரவம் வைப்பாயாக!”

பின்பு அவர் தம் மகளைப் பலவகையாலும் தேற்றி, ஆறுதல் மொழி கூறி, உச்சிமோந்து, உள்ளங் குளர்ந்து, நல்ல உணவாகக் கொடுத்து ஆதரவு நல்கினார். மைமூனாவுக்கோ, வேறு வழியில்லை. தன் வயது முதிர்ந்த தந்தையோடு அங்கேயே தங்கித் தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழித்துவிடுவதென்று முடிவு செய்துகொண்டு விட்டாள். ‘தலாக்கு வாங்கிய இளம் பெண்மணி’ வேறு என்ன செய்ய இயலும்?

மைமூனா நல்ல கட்டழகிதான். பூர்விகமாகவே சொத்து சுதந்திரம் உள்ளவள்தான். ஒரே குழந்தையைப் பெற்றவள்தான். எனினும், எவரே அவளைத் துணிச்சலாக மறுமண முடிக்க முன்வருவார்? மலிக்கா ஷஜருத்துர்ரின் வெறுப்புக்கு முற்றமுற்ற ஆளான ஒரு மைமூனாவென்னும் சாதாரண மனுஷியை மணந்துகொள்பவன் அந்த சுல்தானாவின் கொடுங்கோபத்துக்கு ஆளாகாமல் தப்பமுடியுமா என்னும் அச்சம் வேறு ஒவ்வொரு வாலிபனின் உள்ளத்துள்ளும் அலைமோதியது. ஆகவே, கிழவர் அபுல் ஹஸன் எவ்வளவோ முயன்றுங்கூடத் தம் மகளுக்கு இனியொரு கணவனைச் சம்பாதிக்கச் சிறிதும் இயலாது போய்விட்டது, விபரீத காலத்தின் வின்னியாசப் போக்கால்.

அரண்மனையிலே அச் சமயத்திலெல்லாம் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. மலிக்கா ஷஜருத்துர் தம் காலில் மாட்டுகிற தேய்ந்த பழைய செருப்பை விட்டெறிந்துவிட்டு, வேறு புதிய நல்ல செருப்பை மாட்டிக்கொண்டால் எப்படி எவருமே சற்றும் வியப்போ, ஆச்சரியமோ கொண்டுவிட மாட்டாரோ, அப்படியேதான் அம் மலிக்கா மைமூனாவுக்குத் தலாக்கு வாங்கிக் கொடுத்ததும் சர்வசாதாரணமாய்க் காணப்பட்டது. ஷஜருத்துர்ரின் மனோதிடமும் முரட்டு வைராக்கியமும் எத்தன்மையன வென்பதை அரண்மனையலிருந்தோர் அத்தனை பேரும் நீண்ட காலமாகவே நன்றாய் உணர்ந்திருந்த காரணத்தால், அன்று நடந்த மைமூனாவின் தலாக்கு வைபவத்தைக் கண்டு வியக்கவுமில்லை; வெளியில் சொல்லிக்கொள்ளவுமில்லை. ஆனால், நாம் முன்னம் குறிப்பிட்டதேபோல், முஈஜுத்தீனுக்கு மட்டும் கொஞ்சம் சுறுக்கென்று நெஞ்சு சுட்டுக்கொண்டிருந்தது. ஆனால், ஷஜருத்துர்ரிடம் அவர் அதைப்பற்றிக் குறிப்பிடச் சந்தர்ப்பம் வாய்க்கவுமில்லை; அல்லது துணிச்சல் பிறக்கவுமில்லை. ஷஜருத்துர்ரும் ஒன்றுமே நடவாததேபோல் மடைத்தலையில் தவங்கிடக்கிற கொக்குப்போலே மெளனமாக இருந்துவிட்டார்.

ஆனால் ஏகபோக ஆட்சி நடாத்திய சுல்தானா ஒரே ஒரு முன்னேற்பாடான தற்காப்பையும் சித்தப்படுத்திக் கொண்டார். ஒருநாள் அவர் அரசவையைக் கலைத்துவிட்டுத் தன்னந்தனியே அமர்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்தபொழுது, ஒரு யோசனை திடீரென்று உதயமாயிற்று. மைமூனாவுக்கு முஈஜுத்தீன் தலாக்குச் சொல்லி அன்றுடன் பத்து நாள் கழிந்திருந்தன. இனியுங் காலந் தாழ்த்தினால் என்ன புரட்சிகள் நிகழ்ந்து விடக் கூடுமோவென்று அந்த சுல்தானா சிறிதி திகில்கொண்டு விட்ட காரணத்தாலும் தற்காப்பினிமித்தமாகவும் ஓர் இரகசியச் சட்டத்தை அவசரமாக எழுதிக் கையொப்பமிட்டார். அரண்மனையிலுள்ள வேவுகாரர்கள் மூலமாக இப்பொழுது மைமூனா தன் தந்தையின் வீட்டிலே அவருடன் வசிக்கிறாள் என்பதைக் கேள்விப் பட்டிருந்தார் சுல்தானா. எனவே, தாமியற்றிய அவசரச் சட்டத்துக்கு ஒரு நகலெழுதி, அதை நன்றாய் சுருட்டி, ஸல்தனத்தின் கட்டளைகள் அடைக்கப்படும் வெள்ளிக் குழாய்க்குள்ளே போட்டு, தம்முடைய முத்திரையையும் அதன்மீது பொறித்தார். உடனே காவலாளி ஒருவனைக் கூப்பிட்டார்.

“ஏ, காவாலா! உனக்கு நம்முடைய சுல்தானின் மாமனார் அபுல் ஹஸனின் வீடு தெரியுமல்லவா?” என்று அதட்டிக் கேட்டார் ஷஜர்.

“யா ஸாஹிபத்துல் ஜலாலத்தில் மலிக்கா! மிக நன்றாய்த் தெரியும். அடியேன் அங்குச் சென்று என்ன செய்ய வேண்டுமென்று தாங்கள் விழைகின்றீர்கள்? தாங்கள் கட்டளையிடுங்கள்; இக் கணமே செய்து முடிக்கிறேன்!” என்று வெகு தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டான் அக் காவலாளி.

“இந்தக் குழாயை நீ எடுதத்துச் சென்று, அந்த அபுல் ஹஸன் என்னும் கிழவரிடம் சேர்ப்பித்துவிட்டு வரவேண்டும். உள்ளே அடங்கியிருக்கிற கடிதத்தை அவர் படித்துப் பார்த்துவிட்டு, ஏதாவது பதில் சொன்னால், கவனமாய்க் கேட்டு வரவேண்டும்!” என்று கம்பீரமாகக் கட்டளையிட்டுவிட்டு அவ் வெள்ளிக் குழாயை வெகு லாவகமாக நீட்டிப் பிடித்தார் ஷஜருத்துர்.

அக் காவலனும் தன்னிருகையேந்தி மரியாதையுடன் அதை வாங்கிக் கொண்டு, பின்னோக்கி வழிநடந்து வெளியேறிச் சென்றுவிட்டான்.

அரைமணி நேரத்தில் அக் காவலன் அபுல் ஹஸனின் இல்லத்தைச் சென்றடைந்தான்.

கையிலே அரசாங்க முத்திரையிடப்பட்டிருந்த வெள்ளிக் குழாயுடனே அரண்மனைச் சேவகனொருவன் வந்து நிமிர்ந்து நின்றதைக் கண்ட அபுல் ஹஸனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன தலைபோகிற பேராபத்து அவ் வெள்ளிக் குழாய்க்குள்ளே அடைக்கப்பட்டிருக்கிறதோ என்னும் பெரும் பயம் அபுல் ஹஸனின் குடலைக் கலக்கிவிட்டது. தலாக்கு வாங்கிய ‘துரோகிப் பெண்’ணைத் தாம் புகலிடம் கொடுத்து காப்பாற்றுவதே ராஜத்துரோகம் என்று கற்பணை செய்து சட்டமியற்றப்பட்டு விட்டதோ என்ற நடுக்கம் அக் கிழவரை அதிகமாகக் குலுங்கச் செய்துவிட்டது. “சரி நம்முடைய சீட்டு இன்றோடு கிழிந்துவிட்டது; மலக்குல் மவுத் வந்து உயிரைக் கொண்டுபோக வேண்டியது மட்டுமே பாக்கியாய் இருக்கிறது!” என்று எண்ணிக்கொண்டுவிட்டார் அபுல் ஹஸன்.

நடுங்குகிற தலையுடனும் விலவிலக்கிற கைகளுடனும் உதறுகிற கால்களுடனும் தம் மரண வொப்பந்தத்தில் வலியக் கையொப்பமிடும் கைதி போலே குற்றுயிருங் குறையுயிருமாக அக் குழாயை மரியாதையாய் அபுல் ஹஸன் வாங்கினார். கை உதறிய உதறலால் அக் குழாயைத் திறக்கவே இரண்டு மூன்று நமிஷம் ஆகிவிட்டன. மாலை வெயில் மறைந்துவிட்ட படியால், அக் குழாய்க்குள்ளிருந்து வெளியே நீட்டியிழுத்த கடிதத்தைப் பிரிந்துப் படிப்பதற்குப் போதிய வெளிச்சமில்லை. எனினும், விளக்கேற்றிக் கொணர்வதற்கு நேரம் செல்லுமே என்னும் கவலையாலும் அச் சாவோலையில் எழுதப்பட்டிருக்கக் கூடிய இழவுச் செய்தியை உடனேயே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமே என்னும் அவா மிகுதியாலும் வெள்ளெழுத்துப் பார்வையுள்ள தம் கண்களைச் சிம்புளித்துக் கொண்டு, அந்த ராஜ கட்டளையை விரைவாகப் படிக்க ஆரம்பித்தார்.

சுல்தானாவின் அரசாங்க முத்திரை பொறிக்கப்பட்டிருந்த அந்த பர்மானில் எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்:-

“சமீபகாலம் வரையில் சுல்தான் முஈஜுத்தீன் ஐபக்குக்கு மனைவியாய் இருந்து வந்தவளும் சென்ற பத்து தினங்களுக்கு முன்னே மிகப் பெரிய மன்னிக்க முடியாத பெருந்துரோகக் குற்றமிழைத்த காரணத்துக்காக அந்த சுல்தானால் தலாக்குச் சொல்லி விவாகவிலக்கு அளிக்கப்பட்டவளும், இப்போதுங்கூட இந் நாட்டின் சுல்தானாவாகிய எம்மீது அனாவசியமாகச் சொந்த ஹோதாவில் வேற்றுமை பாராட்டி வருகிறவளுமாகிய மைமூனாவை இப்பொழுது போற்றிப் பாதுகாத்து ரட்சித்துப் போஷித்து வருகிற அபுல் ஹஸன் என்னும் வயது முதிர்ந்த விருதாப்பியராகிய, மேற்படி மைமூனாவின் தந்தையாய் விளங்குகிறருக்கு விடுக்கும் கட்டளை என்னவென்றால்:-

அகிலம் புகழும் இம் மிஸ்ர் தேசத்தின் ஏகாதிபத்திய சுல்தானாவாக விளங்கித் திகழும், முஸ்தஃஸிமிய்யா, அஸ் ஸாலிஹிய்யா, உம்மு கலீல், இஸ்மத்துத் துய்யா வத் தீன், மலிக்காத்துல் முஸ்லிமீன் ஷஜருத்துர்ராகிய நாம் ஆட்சி செலுத்துகிற இந் நாட்டிலே அக்கிரமக்காரர்களையும் துரோகச் செயல் புரிவோரையும் அரைக்கணமும் வளர விடோம் என்றாலும், அதிலும் அந்த மைமூனா எமக்குப் பல சந்தர்ப்பங்களிலும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் இரகசியமாகவும் பகிங்கரமாகவும் அநேகங் கெடுதிகளைச் செய்திருக்கிறாள் என்பதை நாம் மிக நன்றாய் அறிந்திருந்தும், எம் ஆருயிர்க் கணவரின் அந்தரங்கப் பிரியத்துக்கு அவள் சில காலம் பாத்திரமாயிருந்தாளென்னும் ஒரே காரணத்துக்காக அவளை நாடு கடத்தாமலும் மரண தண்டனைக்கு உட்படுத்தாமலும் காப்பாற்றி விட்டுவிடுகிறோம்.

எனினும், இம் மாபெருங் குற்றமெல்லாம் இழைத்த பெரிய குற்றவாளியைச் சும்மா விட்டுவைப்பது நாட்டின் நலத்துக்கும் நமது க்ஷேமத்துக்கும் எந்நேரத்திலும் ஆபத்தை விளைவித்துவிடக் கூடுமென்று நாம் நம்புவதற்குப் போதிய சான்றுகள் இருக்கின்றமையால், அந்த மைமூனாவும் அவளுடைய மைந்தன் நூருத்தீன் அலீயும் இந்தக் காஹிரா நகரின் எந்தப் பகுதிக்கும் தம்மிஷ்டப்படி சுயேச்சையாய் நடமாடக் கூடாதென்றும் எம்முடைய அனுமதியில்லாமல் காஹிராவை விட்டு வெளியேறக் கூடாதென்றும் எக்காரணம் பற்றியும் இந்த அரண்மனைப் பக்கமே வந்துவிடக் கூடாதென்றும் இப்பிரகடப் பத்திரத்தின்மூலம் பகிங்கரமாகக் கட்டளைப் பிறப்பிக்கின்றோம்.

எம்முடைய இந்தக் கட்டளைக்கு மாற்றமாக அந்த மைமூனாவோ, அல்லது அவள் மைந்தன் நூருத்தீன் அலீயோ, நடந்து கொண்டாலும் அல்லது அவ்விருவரையுமோ ஒருவரையோ அப்படி மாற்றமாக நடக்கும்படி எவராவது எவ்விதமாகவேனும் தூண்டிவிட்டாலும் அக் குற்றம் மன்னிக்க முடியாத ராஜ துரோகக் குற்றமாகப் பாவிக்கப்பட்டு, விசாரணையின்றிக் கொடிய தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்.”

இப் பிரகடனத்தின் இறுதியில் சுல்தானா ஷஜருத்துர்ரின் கையொப்பமும் பட்டங்களும் முத்திரையும் பொறிக்கப்பட்டிருந்தன.

முழு வாசகத்தையும் முற்றும் படித்து முடித்ததும், அபுல் ஹஸன் தந்தலையை நிமிர்த்தினார். அரசாங்கத்து உத்தரவு, அதிலும் சாக்ஷாத் சுல்தானாவின் கட்டளை, படாடோப பயங்கரங்கள் சகலவற்றையும் சுமந்து கொண்டு தெளிவான அக்ஷரங்களால் பொறிக்கப்பட்டிருக்கும்பொழுது, பாவம், கிழவர் என்ன செய்வார்?

“மலிக்காத்துல் முஸ்லிமீன் உம்மிடம் பதில் வாங்கிவரச் சொல்லி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள். ஏ, அபுல் ஹஸன்! என்ன சொல்கிறீர்?” என்று அத் திருமுகத்தைச் சுமந்துவந்த காவலன் மிக மிடுக்காகக் கடாவினான்.

“பதிலா! யான் என்ன பதில் சொல்லப் போகிறேன்? மலிக்காவின் கட்டளையை அடியேன் அப்படியே ஏற்று நடக்கச் சித்தமாயிருப்பதாக நீ போய் அவரிடம் தெரிவித்துவிடு. என்னுடைய மகளுக்கும் இக் கட்டளையை இக் கணமே அறிவித்து விட்டதாகப் போய்க் கூறிவிடு!” என்று அபுல் ஹஸன் தாழ்ந்த தொனியல் மரியாதையுடன பதிலளித்தார். செங்கோலுக்கு மிஞ்சியா சங்கீதம்?

எவ்வளவு விறைப்போடு அக் காவலன் இங்கு வந்தானோ, அவ்வளவு மிடுக்கோடே அவன் திரும்பிவிட்டான். அவன் கண்காணாத தூரம் போன பின்னர்க் கிழவர் தெருக் கதவை அழுத்திச் சார்த்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, அந்த ராஜகட்டளையைக் கசக்கிப் பிய்த்துச் சுருட்டிக்கொண்டே சொல்லொணா ஆத்திரத்துடன் உட்புறம் சென்றுசேர்ந்தார்.

அங்கே அவர் கண்ட காட்சி அவருடைய சோகத்தை அதிகரிக்கச் செய்துவிட்டது. என்னெனின், நூருத்தீன் அலீயிடம் அச் சிறுவனின் தாயார் பழைய காலத்து ஐயூபி சுல்தான்களின் கதையை நல்ல வருணனைகளுடனே வக்கனையாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். சிறுவனோ துடுக்காக நடு நடுவே வெடுக்கு வெடுக்கென்று குறுக்குக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தான். தாய்க்கும் மகனுக்குமிடையே நடந்துகொண்டிருந்த சுவாரஸ்யமான சம்பாஷணையைக் கெடுக்க மனமில்லாமல், கிழவர் இருளிலே ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றுகொண்டு வேடிக்கை பார்த்தார். என்னெனின், சோகமே நிரம்பிய ஓரில்லத்தில் சிறிதாவது ஜீவனளிக்கிற சக்தியைச் சிறு குழந்தைகளிடந்தானே ஆண்டவன் அமைத்துக் கொடுத்திருக்கிறான்? அவர் வந்பொழுது நடந்த வேடிக்கையான சம்பாஷணையைப் பாருங்கள்:-

“ஏன் அம்மா! ஐயூபி சுல்தான்களுக்கெல்லாம் தாடி இருக்காதோ?” என்று நூருத்தீன் ஆவலாக மைமூனாவைக் கேட்டான்.

“என் கண்ணே! யார் சொன்னது? எல்லா ஐயூபி சல்தான்களுக்குமே தாடி இருக்கும்.”

“அப்படியானால், அன்றைக்கு நாம் அரண்மனையில் பார்த்த ஐயூபி சுல்தான் ஷஜருத்துர்ருக்குத் தாடியும் இல்லை; மீசையும் இல்லையே!”

“அந்த ஷஜருத்துர் சுல்தான் அல்லவே! சுல்தானா அல்லவா?”

“சுல்தானா என்றால்?”

“சுல்தானா என்பது பெண்பிள்ளை. சுல்தானைக் கலியாணம் செய்து கொண்டவள் என்று அர்த்தம். ஷஜருத்துர் ஸாலிஹ் என்னும் ஐயூபி சுல்தானைக் கலியாணம் செய்து கொண்ட பெண்பிள்ளை!”

“அந்த ஸாலிஹ் என்னும் ஐயூபி சுல்தான் இப்பொழுது எங்கே?”

“அவர் மரணமடைந்து போய் விட்டார்.”

“அப்படியானால், அந்த ஷஜருத்துர் கம்னாட்டியா அம்மா?”

“உஸ்! சுல்தானாவை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது!”

“நீங்கள் மட்டும் அந்த சுல்தானாவைக் கண்டபடி திட்டுகிறீர்களே! தாத்தாக் கூடத்தான் திட்டுகிறார்!”

“நீ சிறுபிள்ளை. உனக்கு அதெல்லாம் தெரியாது. நம்மை இப்பொழுது ஆளுகிற சுல்தானா ஷஜருத்துர். சுல்தானாவை யாரும் திட்டக் கூடாது.”

“அன்றைக்கு ஒருநாள் என்னுடைய அபூதான் ஆளுகிற சுல்தான் என்று சொன்னீர்களே!”

“ஆமாம். உன்னுடைய அபூதான் நம்மை ஆளுகிறார். ஆனால் ஷஜருத்துர் அவரை ஆளுகிறாள்.”

“ஒரு பெண்பிள்ளை எப்படியம்மா ஆண்பிள்ளையை ஆள முடியும்? ஆண்பிள்ளைதான் ஆளப் பிறந்தவன் என்று அன்றைக்கு ஒருநாள் நீங்கள்தானே எனக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்தீர்கள்?”

குழந்தைகள் கேட்கிற ஒருசில கேள்விகளுக்கு மட்டுமே பெரியவர்கள் பதில் சொல்ல முடியும். ஆனால், குழந்தைகளின் பலப்பல நியாயமான கேள்விகளுக்கு எவராலுமே பதில் சொல்ல இயலாதென்பது அனுபவங்கண்ட உண்மை. என்னெனின், வயதாக வயதாக, எதார்த்தமான உள்ளம் படைத்த இயற்கை மனிதன் ஒவ்வொருவனும் செயற்கை நயவஞ்சகம் மிகுந்தவனாகி விடுகிறான். எனவே, கள்ளமான உள்ளத்துடன் கபடமாகப் பேசுகிறான். சிறு குழந்தைகளின் கள்ளமில்லா உள்ளத்தின்முன் அக் கபடியின் வித்தைகள் பலிப்பதில்லை. சுல்தானாவைப்பற்றி மரியாதையாய்ப் பேசவேண்டுமே என்கிற பயம் செயற்கையின்பாற் பட்டதுதான். தெளிவான உள்ளம் படைத்த சிறுவனுக்கு அம்மாதிரியான செயற்கையான ஆசார வழக்கங்கள் இன்னதென்றே தெரியமாட்டா. சுல்தானாவாய் இருந்தால்தான் என்ன? இன்னம் அதைவிட உயர்ந்த பதவியிலிருப்பவளாய் இருந்தால்தான் என்ன? கள்ளமற்ற உள்ளம் படைத்த சிறுவனுக்கு எல்லாம் ஒன்றேதான்.

“என்னருமை மகனே! நீ பெரியவனாய் வளர்ந்த பிறகு எல்லாம் தெரிந்துக்கொளவாய்… நீ கூடப் பெரியவனாய் வளர்ந்த பிறகு ஸலாஹுத்தீன் ஐயூபியைப்போல் பெரிய சுல்தானாக உயர்ந்துவிடுவாய்!” என்று மைமூனா தேற்றினாள்.

“நான் சுல்தானாகிவிட்டால், எனக்கும் ஒரு சுல்தானா வருவாளோ, அம்மா?”

“நிச்சயமாக வருவாள்!”

“அப்பொழுது அந்த சுல்தானா என்னை ஆளுவாளோ?”

மைமூனா சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறீர்கள்? – என் அபூ எப்பொழுது இங்கே வருவார்?”

நூருத்தீன் விடுத்த இவ் இறுதிக்கேள்வி மைமூனாவின் உள்ளத்துள்ளே ஈட்டியைச் சொருகியது போலிருந்தது. கண்களில் கண்ணீர் மல்கிவிட்டது. மறைவில் நின்றிருந்த அபுல் ஹஸன் மெல்ல முன்னேறி நடந்து மைமூனாவின் கண்ணெதிரில் நின்றார். தந்தையைக் கண;டதும் அவள் தன் கண்ணை முன்றானையால் மூடித் துடைத்துக்கொண்டாள். இச் சந்தர்ப்பத்திலே ஷஜருத்துர்ரின் ராஜகட்டளையை எப்படி மைமூனாவிடம் தெரிவிப்பது என்று ஒன்றும் தோன்றாமல் அவ் விருத்தாப்பியர் திகைத்து நின்றார்.

மைமூனா தலைநிமிர்த்தித் தன் தந்தையின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள். அவ் வதனம் சோம்பியிருப்பதையும் அவர் கையில் கடுதாசியொன்று கசங்கிச் சருண்டுகிடப்பதையும் கவனித்தாள்.

“அபூ! தங்கள் முகம் ஏன் சுண்டிக் கிடக்கிறது? அது என்ன கடுதாசி?” என்று ஆவலுடனே வினவினாள்.

அபுல் ஹஸன் அக் கசங்கிய காகிதத்தைத் தம்முடைய மகளிடம் மெளனமாக நீட்டினார். அவள் அதை வாங்கிப் பிரித்து, சுருக்கத்தையெல்லாம் நன்றாய்த் தடவிவிட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் படித்துப் பார்த்தாள்.

“அபூ! என்னைப் பிடித்த பொல்லாத தீங்கு இன்னும் என்னை விடவில்லையே! தலாக்கு வாங்கிய பிறகுமா எனக்குத் தடையுத்தரவு? சுயேச்சை என்பது எனக்கு மறுக்கப்பட வேண்டுமா? இந்தப் பரந்த காஹிரா நகரிலே நான் எதேச்சையாய் நடமாடுவதற்குக் கூடவா எனக்கு உரிமை கிடையாது? நான் அந்தப் படுநீலி இருக்கிற புலிபோனாகிய அரண்மனைக்குச் செத்தாலும் செல்லமாட்டேன். ஆனால், வேறிடங்களில் என்னிஷ்டத்துக்குச் சென்று வரவுங் கூடவா தகாது?”

“மகளே! ஆண்டவன் சோதிக்கிறான். நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே! அந்தச் சூனியக்காரி என் உயிருக்கு இறுதி விளைக்காமல் இவ்வளவோடாவது விட்டாளே, அதைப் பார்த்து மகிழ்ச்சியடைவாய்! என் செய்வது? பொறுத்துக்கொள்வோம். பொறுத்தார் பூமியாள்வார்! பொறுமையாளருடனே நிச்சயமாக அல்லாஹ் (துணையாக) இருக்கிறான்.”

அதனை அடுத்துப் பயங்கர மௌனமொன்று நிவலியது. நூருத்தீனோ, ‘பேந்த பேந்த’ விழித்துக்கொண்டிருந்தான். சற்று நேரம் சென்றதும், அச் சிறுவனுக்கு உண்டியளித்து விட்டு, தந்தையும் மகளும் பட்டினியாகவே போய்ப் படுத்துக் கொணடார்கள். உணவு எப்படிச் செல்லும் உரிமையிழந்த பின்னர்?

படுக்கையில் படுத்ததும், கிழவருக்கு உள்ளமெல்லாம் கொதித்துக் குமுறுவிட்டது. பழைய சம்பவங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அவர் மனக்கண்ம முன்னே சலனப்படம் போல் ஓடிக்கொண்டிருந்தன. தம்முடைய மருமகன் ஐபக்கைக் கிழவர் மனங் கொண்டமட்டும் சபித்துக் குவித்துக் கொண்டிருந்தார். மனைவியையும் தலாக்குச் சொல்லிவிட்டு, தான் பெற்ற குழந்தையையும் கைவிட்டுவிட்டு, இம்மாதிரியாக ஷஜருத்துர்ரின் கையிலே சூத்திரப் பாவையையேபோல் பம்பரமாய் ஆடிக்கொண்டிருந்த பொம்மை ராஜாவை மனம்போன படியெல்லாம் திட்டிக்குவித்தார். இப்பொழுது அவருக்கு ஷஜருத்துர் மீது ஆத்திரம் தோன்றவில்லை. ஆனால், அந்த ஷஜருத்துர் இப்படியெல்லாம் இழிவதற்கு உறுதுணையாய் நிற்கிற தம் மாஜீ மருமகனை மனக்கசப்பால் வைதுகொண்டே கிடந்தார்.

இந்த மாதிரியும் ஓர் ஆண்பிள்ளையை ஆண்டவன் படைப்பானா? என்று ஏங்கினார். இப்படியெல்லாம் பேடியாய்ப்போய் நிற்கிற முஈஜுத்தீனுக்கு ஆண்டவன் எப்படிப்பட்ட பரிதாப முடிவைச் சித்தஞ்செய்து வைத்திருக்கிறானோ என்று கலங்கினார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த உருப்படாத பொம்மைப் புல்லுருவி ஷஜருத்துர்ரென்னும் மாயாஜால மந்திரக்காரியின் கைப்பாவையாக இருந்து காலந்தள்ளப் போகிறாரோ என்று வெய்துயிர்த்தார். “அளையுறை பாம்பும், அரசும், நெருப்பும்… இளைய எளிய பயின்றனவென் றெண்ணி இகழின் இழுக்கந் தரும்!* என்ற முதுமொழிப்படி ஐபக் நெருப்புடனே விளையாடுவதைப் போல் அரசி ஷஜருத்துர்ரை அண்மிவிட்டாரே, என்ன கதி நேருமோ என்று சிந்தை குலைந்தார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்


*
அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனவென் றெண்ணி
இகழின் இழுக்கந் தரும். (ஆசாரக் கோவை, 84)

புற்றில் வாழும் பாம்பு, அரசர், நெருப்பு, குகையில் தங்குகின்ற சிங்கம் ஆகிய இவை நான்கையும் இளையன என்றும் எளியன என்றும், பழகின என்றும் நினைத்து இகழ்ந்தால் துன்பத்தைத் தரும்.


<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment