மடல்களுக்கு என்னுரை

by நூருத்தீன்

ஸ்லாமிய வரலாற்றில் மடல்கள் ஆற்றிய சேவை முக்கியமானது. ஓலையில் தகவல்களை எழுதி, தூதுவனை அழைத்து, அவன் கையில் அதைக் கொடுத்தால் கழுதை, குதிரை, ஒட்டகம் என்று ஏதோ ஒன்றின்மீது அவன் ஏறி, பாலை, மலை, சோலை தாண்டி பெறுநருக்குச் சென்று சேர்ப்பித்த காலமது.

மைக்ரோ நொடியில் தகவல்கள் பரிமாறப்படும் இன்றைய நுட்பத்திற்குப் பழகியவர்களுக்கு அந்தப் பழங்கால அமைப்பு மாளாத நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால், அந்த ஓலைகளும் முறையும்தாம் அரதப்பழசே தவிர, அந்த மடல்கள் சுமந்த தகவல்களும் கருத்துகளும் அற்புதம். பல நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் நமக்கு இன்றும் தெவிட்டாத அறவுரைகள் அவை.

முதல் நான்கு கலீஃபாக்களின் வரலாற்றை வாசிக்கும்போது அவர்கள் தத்தம் படை தளபதிகளுக்கும் ஆளுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீதிபதிகளுக்கும் அனுப்பி வைத்த மடல்களைப் பார்த்தபோது பெரும் பிரமிப்பு ஏற்பட்டது. அஞ்சி நடுங்கும் இறையச்சம், தெளிவான சிந்தனை, அதை விவரிக்கும் பாங்கு, பிரதானமாய்க் கருதப்பட்ட குடிமக்களின் நலன், சமரசமற்ற நீதி, பொங்கி வழிந்த வீரம் என்று சமகாலத்தில் நாம் முற்றிலும் மறந்துவிட்ட அடிப்படைகள் அம் மடல்களை அலங்கரித்திருந்தன. ஒவ்வொரு மடலும் மலைப்பு, வியப்பு. அவர்களது நோக்கமும் இலக்கும் சமகால நம் நிலையுடன் ஒப்பிடும்போது வெட்கத்தை ஏற்படுத்தி, பெருமூச்சுதான் மிஞ்சியது.

அறத்திற்குரிய அத்தனை அம்சங்களும் புதைபொருளாகிவிட்ட இக் காலத்தில் அந்த மடல்களின் அறவுரை நமக்கு ஆக முக்கியம். அந்த மடல்களின் பின்னணியில் அமைந்துள்ள சூழலும் வரலாறும் கூடுதல் சுவை. ஆகவே தேர்ந்தெடுத்த சில மடல்களைக் கட்டுரையாகத் தொகுத்து எழுதி முடித்தேன், அவை சமரசம் இதழில் தொடராக வெளிவந்தன.

அதை நூலாக வெளியிட வேண்டுமென்று தூண்டில் பதிப்பகம் ராபியா குமாரன் தம் ஆவலைத் தெரிவித்து, இதோ இந் நூல். அவருக்கும் அன்பு கூர்ந்து மதிப்புரை அளித்துள்ள அண்ணன் ஏம்பல் தஜம்முல் முகம்மதுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இம் மடல்களின் அறவுரைகள் எனக்கும் நமக்கும் சிறந்ததொரு படிப்பினையாகவும் ஈருலகத்திற்கும் நன்மை பயக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும் என்பது என் அவா.

குறைகளை மன்னித்து, நிறை என்று ஏதும் இருப்பின் அதை ஏற்று அதன் பலனை இம்மையிலும் மறுமையிலும் அளித்தருள எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

அவனுக்கே அனைத்துப் புகழும் பெருமையும் உரித்தாவன.

-நூருத்தீன்


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment