“யாம் என்ன சொல்லிவந்த போதிலும் சிலர் தங்களுடைய அறியாமையின் காரணத்தாலும், அசிகையின் காரணத்தாலும்
எம்முடைய அக்கீதாவைக் குறித்து இல்லாததையும் பொல்லாததையும் எழுதியும் சொல்லியும் வருகின்றனர். ஆனால், நம்முடைய முஸ்லிம் சகோதரர்களின் நன்மையை முன்னிட்டு யாம் எம்முடைய மதக் கொள்கை இன்னதென்பதை இதன் அடியில் எல்லோருக்கும் மு்னனிலையில் அதிபகிரங்கமாக விரித்தெழுதுகின்றோம்.
நபிகள் நாயகத்தின் காலத்தில் ஓர் அஸ்ஹாபியுடன் சண்டை செய்த ஒரு காபிர், அச்சண்டையில் தோல்வியடைந்தவுடன் தீனுல் இஸ்லாத்தில் தாம் சேர்ந்து கொள்வதாகக் கலிமாச் சொன்னார். அதைக் காதலிக்காமல் அந்த அஸ்ஹாபியானவர் தம்முடைய எதிரியைக் கொன்றுவிட்டார். இதைக் கேடடவுடன் நபி பெருமானார் அவர்கள் மனவருத்தமுற்று. அந்த அஸ்ஹாபியிடம் சமாதானம் கேட்டார்கள். அப்பொழுது அவர், தம்முடைய எதிரியானவன் மரணத்திலிருந்து தப்பும் பொருட்டே அவ்வாறு கபடமாகக் கலிமாச் சொன்னான் என்று கூறினார். அதைக் கேட்டவுடன் ரஸூல் நாயகம் அவர்கள் மிகவும் மனமுடைந்து, “நீர் அவருடைய நெஞ்சைப் பிளந்து பார்த்தீரோ?” என்று கேட்டார்கள்.
இதே போல் யாங்கள் பக்கா சுன்னி முஸ்லிம்கள் என்று பகிரங்கமாகப் பலமுறையும் பறைசாற்றி வரும்போதும் எங்களுடைய மனத்துக்குள் புகுந்து பார்த்தவரே போல் எங்களை மதப் பிரஷ்டர்களாகச் செய்வதிலேயே சிலர் கண்ணுங்கருத்துமா யிருந்து வருகின்றனர். மிர்சா சாகிபை நபியென்று நாம் ஒப்புக்கொள்ளாததால் காதியானிகள் எங்களைக் காபிர் என்று ஒரு பக்கல் குறை கூறுகின்றனர். அவரைக் காபிர் என்று யாம் சொல்லத் துணியாததால் வேறு சிலர் மற்றொரு பக்கல் எங்களை முர்த்தக்கள் என்று சபிக்கின்றனர். லாகூர் பார்ட்டிகளின் கொள்கைகளைப் பரத்துவதற்காக எமது தாருல் இஸ்லாம் கொடிபிடித்ததில்லை யென்பதையும் யாம் ஐயந்திரிபற அறிவித்து விடுகிறோம்.
ஆனால், அவர்களைக் குறித்தெல்லாம் யாமொன்றும் தீர்ப்புச் செய்ய முற்படமாட்டோம். ஏனெனின், எங்களுடைய மார்க்கமானது தீனுல் இஸ்லாமாயிருக்கிறது; இதைப்பற்றி யாரும் எம்மைச் சந்தேகிப்பது முழுத்தவறே யாகும். இப்படி எவரும் எம்மைக் குறித்துச் சந்தேகிப்பதாயின் அதோர் அநீதமுள்ள ஆபாசமொழியாகவும் ஆதாரமற்ற வீணவதந்தியாகவுமே யிருக்கும் என்பதில் சற்றும் சந்தேகம் வேண்டாம்.
சர்வலோகங்களுக்கும ரட்சகனாயிருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவைத் தவிர வேறு தெய்வம் யாதொன்றுமில்லை யென்பதே எங்களுடைய ஈமானுக்கும் இஸ்லாத்துக்கும் மூலக் கொள்கையாயிருக்கிறது. இவ்வுலகிலுள்ள அஹ்லெ சுன்னத் வல்ஜமாஅத்தாரின் கோஷ்டியே எங்கள் கோஷ்டியும்; குர்ஆன்ஷரீபின் உண்மையான மஅனாவைக் கொண்டும் மெய்யான ஹதீது ஷரீபுகளின் சரியான பொருளைக் கொண்டும் ருஜுப்பிக்கப்படிக்கூடிய எல்லாக் கொள்கைகளையும் எவ்வகைத் தடையுமின்றி ஏற்றுக்கொள்கிறோம். சர்வ லோகங்களுக்கும் ஒரு ரஹ்மத்தாக அனுப்பப்பட்டிருக்கும் முகம்மது முஸ்தபா ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கடைசி நபியென்றும், அவர்களுக்குப்பின் இன்றளவும் யாரும் நபியாய் வரவில்லையென்றும், இனியும் ஒருபோதும் வரமாட்டார் என்றும், வரமுடியாது என்றும் மனமார நம்பி வாயார ஒப்புக்கொள்ளுகிறோம்.
இந்த இறுதி நபிக்குப் பின்னால் எவரேனும் நபியாக வந்தேன் என்று கூறுவாராயின் அப்படிப்பட்டவர் பொய்யர் என்றும் புரட்டர் என்றும் காபிர் என்றும் யாங்கள் மெய்யாகவே மெய்யாகவே நம்பியிருக்கிறோம். இவ்வாறு எவரேனும் எவரையேனும் நம் ரஸூலுல்லாவுக்குப் பின் நபியாக வந்தார் என்றும், இனி வருவார் என்றும் கூறுவோர் உண்மையான முஸ்லிம்கள் அல்ல வென்றும் இஸ்லாத்தின் எல்லையை விடடு வெளியில் சென்ற முர்த்தத்கள் என்றும் நம்புகிறோம்.
இன்னும் மலக்குகளுண்டு என்று ஈமான் கொண்டிருக்கிறோம்; கி(த்)தாபுக்ள வந்ததும் உண்மையென்று ஈமான் கொண்டுள்ளோம்; ரஸூல்மார்கள் தோன்றியதும் மெய்யே யென்றும் ஈமான் கொண்டிருக்கிறோம். மரணத்துக்குப்பின் நம்முடைய இகலோக நன்மை தீமையான காரியங்களுக்கெல்லாம் கியாமத்து நாளில் அல்லாஹுத் தஆலாவின் முன்னிலையில் ஆஜராகிச் சமாதானம் சொல்லி அவ்வற்றிற்கேற்ற லாபநஷ்டமான சுகதுக்கங்களை அனுபவிப்பதும் மெய்தான் என்று ஈமான் கொண்டுள்ளோம். எங்களுடைய தொழுகையிலும் கஅபத்துல்லாவையே எங்களுக்குக் கிப்லாவாகக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய தெய்வம் ஒன்றே; எங்களுடைய நபியும் ஒருவரே; எங்களுடைய வேதம் ஒன்றே; எங்களுடைய தீனும் ஒன்றே; எங்களுடைய சகோதரத்துவமும் ஒன்றே.
இவ்வாறெல்லாம் ஒப்புக்கொள்ளும் ஒரு பிறவி காபிரும் தீனுல் இஸ்லாத்தில் சேரும்படியான பாக்கியத்தைப் பெற்றுவிடும் போது, இன்னமும் எங்களை காபிர் என்று தீர்மானிப்பதற்கு எந்த உண்மையான முஸ்லிமுக்கும் அதிகாரம் உண்டோவென்று இவ்வுலகில் இஸ்லாமார்க்க உண்மைகளைச் செவ்வனே கற்றுக்கேட்டுத் தெளிந்து கௌரவமடைந்திருக்கும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதலிய எல்லா மெய்யான மௌலவிகளையும் யாம் பகிரங்கமாகக் கேட்கின்றோம். மேலும் எங்கள் பத்திரிகையிலும் குர்ஆன் ஷரீபாலும் ஹதீது ஷரீபாலும் எண்பிக்க முடியாத யாதொரு விஷயத்தையும் இஸ்லாத்துக்கு முரணாக யாம் போதிக்கவில்லை. பார்க்கக் கண்ணுள்ளோர் பார்த்துக்கொள்ளட்டும். ஈதன்றிச் சில பொறாமைக்காரப் பொய்யர்களின் வீண்பிதற்றலை அறிஞர்களாகிய தாங்கள் செவியில் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.”
– தாருல் இஸ்லாம், 1924 சனவரி இதழ்.
மீண்டும் எமது கொள்கை
“மிர்சா குலாம் அகமதை நபி என்றேனும், புனிதர் என்றேனும், நேர்வழி காட்டுபவர் என்றேனும் கூறும் விசயத்தில் எந்த அகமதியா இயக்கத்துடனும் எமக்குச் சம்பந்தமில்லை. மீண்டும் கூறுகிறோம்: இன்றளவும் யாம் மிர்சா சாகிபை மேற்கூறிய எந்தவிதமாகவும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவே பிரமாணமாக சாட்சியாயிருப்பானாக.”
– தாருல் இஸ்லாம், 1925 ஜூலை இதழ்