ர் ஊர். அங்கு ஓரிறைவன் மீது நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் சிலர். அவர்கள், கொடுமைக்கார அரசனிடம், “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்திலும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; அப்படிச் செய்தால் அது இணைவைப்பில் எங்களைக் கொண்டு சேர்க்கும்; நாங்கள் வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆகிவிடுவோம்” என்று தெரிவித்துவிட்டார்கள்.

பிறகு அந்த இளைஞர்கள், “நம் சமூகத்தினர் அல்லாஹ்வை அன்றி பிறரையும்/பிறவற்றையும் நாயனாக்கி விட்டார்கள். அந்த இணை வைப்பிற்குத் தெளிவான அத்தாட்சியையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டும் இவர்களைவிட அநியாயக்காரர்கள் யாரேனும் இருக்க முடியுமா?” என்று பேசிக்கொண்டார்கள்.

அந்த இளைஞர்களுள் ஒருவர் கூறினார்,

“அந்த மக்களையும் அவர்கள் இணை வைப்பவற்றையும் விட்டு விலகி விடுவோம். குகையில் ஒதுங்கிக் கொள்வோம். இறைவன் நம் பிரச்சினையை இலேசாக்குவான். தன்னுடைய அருட்கொடையிலிருந்து விசாலமாக அளித்து அருள்வான்”

அவ்வூரில் ஒரு குகை இருந்தது. அதனுள் அவர்கள் புகுந்துகொண்டார்கள். சிறு குகைதான் அது. ஆனால் இறைவன் அதை அவர்களுக்கு விசாலமாக்கி வைத்தான். அவர்களின் நாய் தன் இரு முன்னங்கால்களையும் விரித்து வாசற்படியில் படுத்துக்கொண்டது. அனைவரும் உறங்கி விட்டார்கள். உறக்கமென்றால் உறக்கம், நீண்ட உறக்கம். சூரியன் உதயமானது; அஸ்தமித்தது. நாள்கள் கழிந்தன. மாதங்கள் நகர்ந்தன. ஆனால் அவர்களது உறக்கம் கலைந்தபாடில்லை. ஆண்டுக் கணக்கில் நீடித்தது அவர்களின் உறக்கம். உறங்கும் அவர்களைப் பார்த்தால் விழித்திருப்பதைப் போலவே இருந்தது. பார்க்கவே அச்சமூட்டுவதாகவும் இருந்தது.

பல்லாண்டுக் காலம் கழித்து விழித்தெழுந்த பின், “எவ்வளவு நேரம் உறங்கினோம்?” என்று அவர்களுள் ஒருவர் கேட்டார்.

“ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பாகம்” என்றனர் சிலர். அவர்களுக்கு அப்படித்தான் இருந்திருக்கிறது.

மற்றவர்கள், “உறக்கத்தில் இருந்த காலத்தை இறைவன்தான் நன்கு அறிவான். ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புவோம்; அவர் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து கொண்டு வரட்டும்; ஆனால் எச்சரிக்கை, எவருக்கும் நம்மைப் பற்றி அறிவித்து விட வேண்டாம். ஏனென்றால், தெரிந்தால் அவர்கள் கல்லால் அடித்தே கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய இணைவைப்பில் இழுத்து விடுவார்கள். அப்படி ஆகிவிட்டால் ஒருபோதும் வெற்றி இல்லை” என்றனர்.

ஊருக்குள் சென்றால், அவ்வூர்வாசிகளுக்கு இளைஞர்கள் யார் என்றே தெரியவில்லை. இளைஞர்கள் குகைக்குள் புகுவதற்கு முன் வாழ்ந்தவர்கள் அங்கு யாரும் இல்லை. நகர மக்களுக்குப் பெரும் வியப்பு. விஷயம் தெரிய வந்ததும் பற்பல தர்க்கம் உருவானது.

இணை வைப்பாளர்களை விட்டுத் தப்பித்து, குகைக்குள் சென்று உறங்கிய “அவர்கள் மூன்று பேர்தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய்” என்றனர் சிலர்.

“அவர்கள் ஐந்து பேர்; ஆறாவது அவர்களுடைய நாய்” என்று யூகம் பேசினர் சிலர்.

வேறு சிலரோ, “ஏழுபேர்! எட்டாவது அவர்களுடைய நாய்” என்றனர்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்நிகழ்வை வஹீயறிவித்த இறைவன், “அவர்களுடைய எண்ணிக்கையை நான்தான் நன்கு அறிவேன். அவர்கள் குகையில் முன்னூற்றி ஒன்பது வருடங்கள் இருந்தார்கள். தர்க்கம் வேண்டாம்” என்று கூறும்படி அறிவித்துவிட்டான்.

குர்ஆனின் பதினெட்டாம் அத்தியாயம் சூரா அல்-கஹ்ஃப். அதில் 9லிருந்து 26 வரையிலான வசனங்களில் அல்லாஹ் அந்த வரலார்றை அறிவித்துள்ளான். அவ்வசனங்கள் அருளப்பட்டதற்கான காரணமும் அவற்றின் ஆழமான கருத்துகளும் விரிவுரைகளும் வியாக்கியானங்களும் பற்பல பக்கங்களுக்கானவை. என்னால் இயன்ற வரை அவற்றைப் பிழையின்றி மிக மிகச் சுருக்கமாக மேலே எழுதியுள்ளேன்.

ஜோர்டானின் அம்மான் நகரின் குன்று ஒன்றின் மேல் சிறு குகை உள்ளது. ‘குர்ஆனில் உள்ள விவரத்திற்கு ஏற்ப வெகு சரியாக இந்தக் குகை அமைந்துள்ளது; இளைஞர்கள் சென்று தங்கி உறங்கிய அந்தக் குகை இதுதான்’ என்று நம்பப்படுகிறது. உள்ளே கல்லறைகள் உள்ளன. அவை அந்த இளைஞர்களின் கல்லறை என்றும் குறிப்பிடப்படுகிறது. அல்லாஹ்வே அறிந்தவன்.

அந்தக் குகைக்குப் பக்கத்தில் உள்ள பகுதியில் ஓர் அழகிய மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது.

ஜோர்டான் பயணத்தின் போது அவ்விடங்களுக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார்கள்.

அவை நிற்க–

இதுவன்றி வேறு சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளையும் உள்ளடக்கியது சூரா அல்-கஹ்ஃப். வெள்ளிக்கிழமையன்று அந்த சூராவை ஓதுவதற்குரிய நன்மைகளை விவரிக்கும் ஆதராப்பூர்வமான ஹதீஸ்கள் உண்டு. இன்று வெள்ளிக்கிழமை. உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டல்.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment