தோழர்கள் – 47 ஸலமா இப்னுல் அக்வஉ (ரலி)

47. ஸலமா இப்னுல் அக்வஉ (سلمة ابن الأكوع‎)

னீ அஃகீல் குலத்தைச் சேர்ந்த ஒருவனைப் பிடித்துக் கைது செய்து மதீனாவில் கட்டி வைத்திருந்தார்கள் முஸ்லிம்கள். ‘தான் உண்டு, தன் ஒட்டகம் உண்டு’ என்று மதீனாவிற்கு வெளியே எங்கோ பாலையில் பயணம் சென்று கொண்டிருந்த அவனை, ‘நீ பனீ அஃகீல் குலத்தவன் தானே? வா!’ என்று சில தோழர்கள் கைது செய்திருந்தார்கள்.அந்த நேரத்தில் பனீ அஃகீல் குலத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையே போர், சச்சரவு என்று எதுவும் இல்லை. அதனால் ‘ஏதோ ஆள் மாறாட்டம் நிகழ்ந்து விட்டதோ’என்று அவனுக்குக் குழப்பம். அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் அவன் மதீனாவுக்குக் கொண்டுவரப்பட்டான். அவனோடு அவனது ஒட்டகமும்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கழுதையில் அங்கு வந்தார்கள். அவர்களைக் கண்டதும், “ஓ முஹம்மது! என்னையும் பந்தய ஒட்டகமான எனது இந்த அத்பாவையும் ஏன் கைப்பற்றினீர்கள்?” என்று கேட்டான் அவன்.

“உங்களின் கூட்டணியினரான தகீஃப் கோத்திரத்தாரின் செயலுக்காக” என்றார்கள் நபியவர்கள்.

பனீ அஃகீலுக்கு நெருங்கிய கூட்டாளிகளான தகீஃப் கோத்திரத்தினர் தாயிஃப் நகரில் வாழ்ந்து வந்தார்கள். நபியவர்களுக்கு அந்த தாயிஃப் மக்கள் இழைத்த கொடூரம் பிரசித்தம் இல்லையா? அது என்னவோ, அன்றிலிருந்தே அந்த மக்களுக்கு முஸ்லிம்கள் என்றால் இனந்தெரியாக் கசப்பு; வெறுப்பு. அதனாலேயே ‘எதிரிக்கு எதிரி நண்பேன்டா’ என்று மக்கத்துக் குரைஷிகளுடன் தகீஃப்களுக்கு நெருக்கமான அன்பு. முஸ்லிம்களைக் குறிவைத்து அறிவிக்கப்படாத போராகச் சில பல சில்மிஷம். அதன் ஒரு பகுதியாய்ச் சில முஸ்லிம்களைச் சிறைபிடித்து வைத்திருந்தனர்.

அக்காலத்தில் குலத்துடன் குலம் கூட்டணி, நட்பு என்பது, ‘உனக்கு ஒன்று என்றால் அது எனக்கும். நல்லது கெட்டதில் நாமெல்லாம் பங்காளிகள்’என்று அழுத்தந்திருத்தமான கூட்டணி. பட்டம், பதவி என்று ஒப்புக்கு வைத்துக்கொள்ளும் கூட்டணி போலன்றி ஒன்று சேர்ந்து போர் புரிவார்கள், அடிப்பார்கள், அடிவாங்குவார்கள். அதிலெல்லாம் அவர்கள் படு நேர்மை. எனவே, தகீஃப் மக்கள் கைது செய்த முஸ்லிம்களுக்குப் பகரமாய் பனீ அஃகீல்களுள் ஒருவனான ஒட்டக ஓட்டி சிறைபிடிக்கப்பட்டான்.

நபியவர்களின் பதிலைக் கேட்ட உடனே, “நானொரு முஸ்லிம்” என்றான் அந்த மனிதன். பொய் சொன்ன அவனுக்கு மற்றொன்று தெரியாமல் போயிருந்தது – முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதரைப் பெயர் சொல்லி விளிப்பதில்லை என்பது. தவிர, தோழர்கள் அவனைக் கைது செய்வதற்கு முன்னராவது அந்தப் பொய்யை அவன் சொல்லியிருந்திருக்கலாம்; அவனது உள்ளத்தைத் துருவிப்பார்க்காமல் அதை ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். இப்பொழுது காலம் கடந்துபோய், “உன் மீது உனக்கே உரிமை இருந்தபோது, இதை நீ கூறியிருந்தால் உனக்கு அது சாதகமாய் இருந்திருக்கும்”என்றார்கள் நபியவர்கள்.

தனது பொய்யை நபியவர்கள் நம்பவில்லை, வேறு வழியில்லை என்றதும் அவன் ஒரு மெய் சொன்னான். “ஓ முஹம்மது! எனக்குப் பசியாகவும் தாகமாகவும் இருக்கிறது.”

“இவை உன்னுடைய தேவைகள். அவை நிறைவேற்றப்படும்” என்று அவற்றைக் கவனிக்கத் தமது தோழர்களைப் பணித்தார்கள் நபியவர்கள். போர்க் கைதிகளை முஸ்லிம்கள் உபசரிக்கும் சிறப்பைத்தான் நாம் முஸ்அப் (ரலி)யின் வரலாற்றில் விரிவாய்ப் பார்த்தோமே. உணவு உபசாரம் சிறப்பாக நடைபெற்றது.

‘உங்கள் ஆளைச் சிறைபிடித்து வைத்திருக்கிறோம்’ என்ற தகவல் தகீஃபுக்குத் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அடித்துப் பிடித்து ஓடி வந்தார்கள். கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்தது. போர் நடைமுறை வழக்கப்படி கைப்பற்றப்பட்ட ஒட்டகம் அத்பா மட்டும் நபியவர்களுக்கு உரிமையானது. அத்பா மிக வேகமாய் ஓடக்கூடிய ஒட்டகம். பந்தயத்தில் ஓடுவதற்காக அது நன்கு பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. இத்தகைய சமர்த்து அத்பாவை, முஸ்லிம் பெண்மணி ஒருவர், ‘அல்லாஹ்வுக்காக இதை அறுத்துப் பலியிடுவேன்’ என்று நேர்ச்சை செய்துவிட்டார். ஒட்டகமோ நபியவர்களுக்கு உரிமையானது. விசித்திரமான நேர்ச்சை அது! அந்தச் சூழ்நிலையும் விசித்திரமான ஒன்று!

அப்படியென்ன விசித்திரம்? அவர் அவ்விதம் கூறும்போது அத்பா களவாடப்பட்டிருந்தது. அந்த முஸ்லிம் பெண்மணியும் கடத்தப்பட்டிருந்தார்!

விரிவாய்ப் பார்ப்போம். ஆனால், ஒருவரோடு சேர்ந்து நாமும் நிறைய ஓட வேண்டும்!

oOo

அரபியர் ஒட்டகம் வளர்த்தனர், குதிரை வளர்த்தனர் என்று நமக்குத் தெரியும். ஆனால் அவற்றுக்குத் தேவையான தீவனம்? கடையில் சென்று வாங்கிப் போட்டுக் கட்டுப்படியாகுமா? எனவே மேய்வதற்குத் தரிசு நிலங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். கால்நடைகள் மேய்ந்து உண்பதற்கென்றே சில நிலங்களும் வைத்திருந்தார்கள். இப்படிக் கால்நடைகளைப் பரமாரிப்பதே அவர்களுக்குப் பெரியதொரு பணி.

நபியவர்களின் ஒட்டகங்களும் மேய்வதற்கு அழைத்துச் செல்லப்படும். அவர்களின் அடிமை ரபாஹ் இருட்டு விலகாத காலை நேரத்திலேயே அவற்றை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார். மதீனா நகருக்கு வெளியே கபா என்றொரு இடம். அங்கு சென்றடைவார்கள். ஒட்டகங்கள் இஷ்டத்திற்கு உண்டு, களைப்பு நீங்கி மாலை மக்ரிபு நேரத்தில் மதீனா வந்தடையும். ஒட்டகப் பால் அரபுகளின் இரவு ஆகாரத்தின் ஒரு பகுதி.

அது ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு. ஒரு நாள் அதிகாலை எப்பொழுதும்போல் ஒட்டகங்களுடன் கிளம்பினார் ரபாஹ். அந்த மந்தையுடன் தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹுவின் குதிரையும் மேய்ச்சலுக்குச் சென்றது. அதை ஓட்டி வந்தவர் ஸலமா இப்னுல் அக்வஉ. ரலியல்லாஹு அன்ஹு. அந்தக் குதிரையின் மேய்ச்சல் பொறுப்பு அப்பொழுது அவருடையது.

ஸலமா, முஹாஜிர்களுள் மிகவும் இளையவர். மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் “முஹாஜிர்கள்” என்றும் மதீனா நகரைச் சேர்ந்தவர்கள் “அன்ஸார்கள்” என்றும் அறிவோம். அன்ஸார்கள் என்றால் அவர்கள் மதீனாவில் வாழ்ந்து வந்த அவ்ஸ் அல்லது கஸ்ரஜ் என்ற இரு கோத்திரத்தினருள் ஒருவர். அவ்வளவுதான். முஹாஜிர் எனும்போது மட்டும் அது மதீனாவுக்குப் புலம்பெயர்ந்துவந்த யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். முஹாஜிர்களில் முக்கியமானவர்கள் மக்கத்துக் குரைஷிகள். அதைப்போல் இதர பகுதிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களும் முஹாஜிர்களே. உதாரணமாக பனூ ஸுலைம், கஃபார், பதுஉக் கோத்திரம் என்று இன்னபிற. அவர்களில் முக்கியமானவர்களைக் குறிப்பிட வேண்டுமானால், அபூதர் அல் கிஃபாரி, யமனிலிருந்து வந்த அபூ மூஸா அல் அஷ்அரீ என்று பட்டியல் நீளும்.

இவர்களைப்போல் ஸலமா இப்னுல் அக்வஉவும் மக்காவைச் சேராத ஒரு முஹாஜிர் ஆவார். அஸ்லம் குலத்தவர். அவர் இஸ்லாத்தை ஏற்று, நபியவர்களின் தோழராகி, மதீனாவில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஸலமாவிடம் ஒலிம்பிக்ஸ் வீரர்களையே திகைப்படையச் செய்யும் சில திறமைகள் இருந்தன. தங்கக்கோப்பை, வெள்ளிக்கோப்பை போன்ற எதுவும் நோக்கமில்லாமல் உன்னத நோக்கத்துடன் பயின்று வளர்த்து வைத்திருந்த திறமைகள். அவற்றில் அவருக்கு அசகாய சூரத்தனம்.

ஒட்டக மந்தை ஆடி அசைந்து மேய்ச்சல் நிலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அது இருள் விலகாத அதிகாலை நேரம். அப்பொழுது கதஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் இப்னு உயைனா தலைமையில் கும்பலொன்று வந்தது. எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் போலும். எதிர்பாராத தாக்குதல் நிகழ்த்தினார்கள்; ஒட்டகம் மேய்ப்பவர் ஒருவைரைக் கொன்றார்கள்; ஒட்டுமொத்தமாய் ஒட்டகங்களைக் கைப்பற்றினார்கள்; கிளம்பிவிட்டார்கள். அத்தனையும் கடகடவென்று நடந்து முடிந்தன.

திகைத்துப் போனார்கள் ஸலமாவும் ரபாஹ்வும். அது சில நிமிடங்கள்தான். அடுத்து மளமளவென்று காரியத்தில் இறங்கினார் ஸலமா.

“ரபாஹ்! இந்தா குதிரை. விரைந்து மதீனா செல். நபியவர்களிடம் விஷயத்தைச் சொல். குதிரையை தல்ஹாவிடம் ஒப்படைத்துவிடு,”” என்று உடனே அவரைத் தம் குதிரையில் அனுப்பிவைத்தார்.

அருகிலிருந்த குன்று ஒன்றில் கிடுகிடுவென்று ஏறிய ஸலமா பலங்கொண்ட மட்டும் உரக்கக் கத்தினார் – “யா ஸபாஹா, யா ஸபாஹா, யா ஸபாஹா!”

எதிரிகளின் படையெடுப்பு, தலைபோகும் ஆபத்தான தருணங்கள் போன்றவற்றில் மக்களை எச்சரிப்பதற்காக நபியவர்கள் ஏற்பாடு செய்து தந்திருந்த வாசகம் அது. அந்தக் குன்றின் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஸலமாவின் இந்த எச்சரிக்கை முழக்கத்தைக் கேட்டதும் துள்ளி எழுந்தார்கள். அனைவரும் திடுதிடுவென்று மதீனா நோக்கி நபியவர்களிடம் ஓடினார்கள். தொலைத் தொடர்பு வசதிகளின்றிப் படுசாமர்த்தியமாய்ச் செய்தியையும் எச்சரிக்கையையும் சேரவேண்டியவர்களுக்குச் சேர்த்துவிட்ட ஸலமா, காரியத்தில் இறங்கினார்.

அவரிடம் வாள், வில், அம்புகள் என்று ஓரளவிற்கு ஆயுதங்கள் இருந்தன. எதிரிகளைப் பின்தொடர்ந்து ஓட ஆரம்பித்தார். குதிரைகளிலும் ஒட்டகங்களிலும் சென்றுகொண்டிருந்த எதிரிகளை நோக்கி ஓட்டமாய் ஓட ஆரம்பித்தார். திறமை என்று மேலே குறிப்பிட்டோமே – விளையாட்டோ மிகையோ அல்ல. மூக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுமளவிற்கு அசகாய ஓட்டத்திறன் ஸலமாவிடம் அமைந்திருந்தது. பின்தொடர்ந்து வேகமாய் ஓட ஆரம்பித்தவர், மரங்கள் அடர்ந்த பகுதி வந்ததும், மறைந்து நின்றுகொள்வார். எதிரிகளை நோக்கி அவரது அம்புகளின் தாக்குதல் துவங்கும். குறி முக்கியமாய் எதிரிகளின் குதிரைகள். மடிந்து விழும் அவை. கோபமும் ஆத்திரமுமாய் எதிரியின் மற்றொரு ஆள் இவரை நோக்கிக் குதிரையில் வரும்போது மரங்களுக்கு இடையில் மறைந்து கொள்வார். அடுத்த குறி அவன்தான். கொல்லப்படுவான் அவன்.

“இந்தா, வாங்கிக்கொள்
நான்தான் இப்னுல் அக்வஉ
அழிந்தான் கொடியவன் ஒருவன் இன்று”

கவிதை ஒன்றைப் புனைந்துகொண்டு பாடிப்பாடி எதிரிகளைப் பாடுபடுத்தத் துவங்கினார் ஸலமா.

மூச்சிரைக்கவும் நேரமில்லாமல் தொடர ஆரம்பித்தது அவரது ஓட்டம். தேசிய நெடுஞ்சாலையா அது? ஒரே சீராக இருக்க! எல்லாம் கரடுமுரடான நிலம். மலைக் குன்றுகள், அதனிடையே நீளும் குறுகலான தடம். அவையெல்லாம் பொருட்டே இல்லாமல், கால்நடைகளில் வேகவேகமாய்ச் சென்று கொண்டிருக்கும் எதிரிகளை, வெறுங்கால்களால் ஓடி ஓடித் துரத்திக் கொண்டிருந்தார் ஸலமா. மரங்கள் அடர்ந்த பகுதி அவருக்கு ஒருவிதமான சௌகரியம் அளித்ததென்றால் மலைக்குன்றுகள் வேறுவகையில் அவருக்கு உதவின.

மளமளவென்று ஓடி மலையில் ஏறி அங்கிருந்து பாறைக் கற்களை எதிரிகள் மீது குறிபார்த்து எறிய, ‘படீர் படீரென’ உச்சியிலிருந்து உச்சந்தலையில் உருண்டு விழுந்த கற்கள் எதிரிகளுக்குப் பெருஞ்சேதம் விளைவித்தன. கெரில்லா போர்முறை இன்று நாம் குறிப்பிடும் போர்க்கலை இயல்பாகவே அவருக்கு அமைந்து போயிருந்தது. அதுவும் மிகச் சிறப்பாக.

‘யாரோ ஒருவன் துரத்தி வருகிறான். சிறிது தூரம் ஓடிவரட்டும். மூச்சிரைக்க ஆரம்பித்ததும் தானாகவே நின்றுவிடுவான்’ என்றுதான் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்தார்கள் எதிரிகள். ஆனால், வெயிலோ, அனலோ, களைப்போ எதுவுமே பொருட்டில்லாமல் அவர்களைத் துரத்தித் துரத்தி விரட்டி வந்த ஸலமாவின் தொல்லையும் தாக்குதலும் அவர்கள் சற்றும் எதிர்பாராதவை. அவர்களுக்கு அது பெரும் சிக்கலாகிப் போனது. ‘பிடித்து நசுக்கலாம் என்று நினைத்தால் பதுங்கிவிடுகிறார். நகர்ந்து போய்விடலாம் என்றால் விடாது துரத்துகிறார்’ எரிச்சல் கோபமாகி, கோபம் பெரும் கவலையாக மாறிப்போனது.

மிகவும் வேகமாக விரைந்து நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப்போனது எதிரிகளுக்கு. ஆனால், கொள்ளையடித்த கால் நடைகள், அவர்களிடம் ஏற்கனவே இருந்த கால்நடைகள், ஆயுதங்கள், இதர மூட்டை முடிச்சுகள் என்று அதற்கு வழியில்லாமல் அவர்கள் பெரும் இம்சையில் இருந்தார்கள். வேறு வழியில்லை. சுமையைக் குறைக்க வேண்டியதுதான் என்று முடிவானது. தங்களது உடைமைகள் சிலவற்றைப் போகிற போக்கில் உதறித் தள்ளிவிட்டு ஓடினார்கள் அவர்கள். எப்படியான உடைமை? ஒட்டகங்கள், கனத்த ஆயுதங்கள், முப்பது ஈட்டிகள் என்று முக்கியமான பொருட்கள். அவற்றைக் கைப்பற்றித் திருப்தியடைந்து ஸலமா நின்றுவிடுவார் என்றுகூட அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அவரோ அதற்கெல்லாம் மசிபவராய் இல்லை.

அவற்றையெல்லாம் கைப்பற்றி, தகுந்த முறையில் கட்டிவைத்துவிட்டு, பொருட்களின் மேல் அடையாளமாய்க் கற்களையும் நட்டுவைத்துவிட்டு, ‘துரத்து அவர்களை’ என்று அடுத்த மூச்சு ஓட்டம். ஒரு மனிதன் எவ்வளவுதான் ஓடமுடியும்? ஆனால் இவரோ காலையில் துவங்கி அலுப்பில்லாமல் ஓடினார், ஓடினார், ஓடிக்கொண்டே இருந்தார்.

இதற்கிடையே எதிரிகளுக்கு உதவத் துணைப்படை ஒன்று வந்த சேர்ந்தது. அந்தப் படையில் இருந்த உயைனா இப்னு பத்ரு அல் ஃபஸாரீ அலங்கோல நிலையில் இருந்த தம் சகாக்களைப் பார்த்து வியந்து போனான். அவர்களை அவன் சந்தித்த அந்த இடம் குறுகிய மலைப் பாதை. ஓடிப்போய்க் குன்றின் உச்சியின்மேல் ஏறி நின்றிருந்தார் ஸலமா. அவரைப் பார்த்தான். பிறகு இவர்களைப் பார்த்தான். “என்னதான் நடக்கிறது இங்கு?” என்று கேட்டான்.

“அதோ மலையுச்சியில் நிற்கிறான் பார் ஒருவன். காலையிலிருந்து இவனுடைய தொல்லை பெரும் தொல்லையாக இருக்கிறது. அடங்க மாட்டேன் என்கிறான். அதிகாலையிலிருந்து இதோ இந்த நொடிவரை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறான். நம்முடைய உடைமைகளையும் பறித்துவிட்டான்.”

அவர்களைக் கோபமும் இளக்காரமுமாய்ப் பார்த்த உயைனா, “அவனை நீங்கள் துரத்த வேண்டியதுதானே? அப்பொழுது எப்படி அவன் உங்களைத் தொடருவான்! இனி அவன் உங்களைத் துரத்த இடம் கொடுக்காமல் நீங்கள் அவனைத் துரத்துங்கள்” என்று ஆலோசனை வழங்கினான். மிகவும் வாஸ்தவமான யோசனைதான். ஆனால் விஷயம் அவ்வளவு எளிதன்று. ஸலமா இப்னுல் அக்வஉ என்பவர் துரத்தினால் ஓடிவிடும் சாமான்யர் அல்லர் என்பது அப்பொழுது உயைனாவுக்குப் புரியவில்லை.

எதிரிகள் அணியிலிருந்து நால்வர் மலை உச்சிக்கு ஏறினார்கள். உரத்துக் கத்தினால் கேட்கும் தொலைவில் ஸலமாவை நெருங்கினார்கள். அவர்களை நோக்கி ஸலமா கேட்டார்:

“நான் யார் தெரியுமா?”

“தெரியாது.”

“நான்தான் அக்வஉவின் மகன் ஸலமா. நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்ணியப்படுத்திய அந்த ஒரே இறைவனின் மீது ஆணையாகக் கூறுகிறேன்! உங்களில் யாராலும் என்னை நெருங்கவே முடியாது. ஆனால் உங்களில் யாரை நான் நெருங்குகிறேனோ, அவன் என்னிடமிருந்து தப்பிக்கவும் முடியாது. நீங்கள் என்னைத் துரத்திப்பாருங்கள். அது முடியவே முடியாது. நான் உங்களைத் துரத்தினால் வேட்டையாடி உங்கள் கதையை முடித்துவிடுவேன்.”

அந்த நால்வரில் ஒருவன், “மிகச் சரியாகச் சொல்கிறார் இவர்” என்றான். அந்தப் பேச்சில் அவர்களுக்குத் துளிக்கூட அவநம்பிக்கை ஏற்படவில்லை. அந்தளவு அதுவரை ஒற்றை ஆளாகச் சாகசம் புரிந்திருந்தார் ஸலமா. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துவிட்டார்கள்.

இதற்கிடையே குதிரைகளின் குளம்பொலி கேட்டது. நெருங்கி வர ஆரம்பித்தது. தோழர்கள் சிலர் மதீனாவிலிருந்து கிளம்பிப் படுவேகமாய் அங்கு வந்துகொண்டிருந்தனர். முஸ்லிம்களின் படை தயாராகி வந்துகொண்டிருக்க முதலில் இவர்களை அனுப்பியிருந்தார்கள் நபியவர்கள். மரங்களின் இடுக்கிலிருந்து ஸலமா அவர்களைப் பார்த்துவிட்டார். முதல் குதிரையில் அக்ரம் அல் அஸதி, அடுத்து அபூ ஃகதாதா, அவருக்குப் பின்னே மக்தாத் இப்னுல் அஸ்வத் – ரலியல்லாஹு அன்ஹும்.

நபியவர்களின் தோழர்கள் குதிரைகளில் வருவதைக் கண்டதும் எதிரிகள் வேகமாய் ஓட்டமெடுக்க ஆரம்பித்தனர். குன்றிலிருந்து வேகமாய் இறங்கி ஓடிவந்தார் ஸலமா. தனியொரு ஆளாகக் கொள்ளையர்களுக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவர்தாம் என்றாலும் அவர்களின் மூர்க்கத்தனத்தையும் கொடூரத்தையும் நன்றாகவே அறிந்திருந்தார்; அதைப்பற்றிய சரியான அனுமானமும் அவருக்கு இருந்தது. அக்ரம் அல் அஸதியின் குதிரையின் கடிவாள வாரைப் பிடித்து நிறுத்தி ஸலமா அறிவுரை சொன்னார்.

“அக்ரம். நீர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் உம்மைத் தாக்கி வெட்டுவார்கள் என்று அஞ்சுகிறேன்.”

அட்டகாசமான பதில் அளித்தார் அக்ரம். “ஓ ஸலமா! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீர் நம்புகிறீர் என்றால், சொர்க்கம் உண்மை, நரகம் உண்மை என்று நீர் நம்பினால், எனக்கும் என் உயிர்த் தியாகத்திற்கும் இடையில் குறுக்கிடாதீர்.”

இறைவனுக்காக, அவன் தூதருக்காக என்று எந்தக் காரியத்தில் இறங்கினாலும், ‘செய்; அல்லது செத்து மடி’ என்ற தெளிவான சித்தத்துடன்தான் ஒவ்வொரு தோழரும் செயல்பட்டிருக்கின்றனர். உள்ளங்களெல்லாம் உறுதியில் வார்க்கப்பட்டிருந்திருந்தன அவர்களுக்கு.

இப்பொழுது அப்துர் ரஹ்மான் இப்னு உயைனாவை அக்ரம் தமது குதிரையில் துரத்த ஆரம்பித்தார். மறைந்து பதுங்கித் தாக்கும் ஸலமாவைப் போலன்றி நேருக்கு நேராய் ஒருவருடன் மோத முடியும் என்று தெரிந்ததும் சட்டென்று தம் குதிரையை நிறுத்தித் திரும்பினான் அப்துர் ரஹ்மான்.

சண்டையிட்டார்கள் இருவரும். தூசு பறந்தது. ஒருவரையொருவர் வாள்களால் கடுமையாகத் தாக்கினார்கள். அப்துர் ரஹ்மானின் குதிரையை அக்ரம் குத்த, மடிந்தது அது. ஆனால் அப்துர் ரஹ்மானின் வாள் அக்ரமைத் தாக்க, தாம் விரும்பியாவாறே ஷஹீதானார் அக்ரம் அல் அஸதி ரலியல்லாஹு அன்ஹு.

தனது குதிரையை இழந்த அப்துர் ரஹ்மான் இப்னு உயைனா அக்ரமின் குதிரையைக் கைப்பற்றினான். அக்ரமைத் தொடர்ந்து வந்த அபூ ஃகதாதா, அப்துர் ரஹ்மான் மீது பாய்ந்தார். இப்பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை துவங்கியது. ஆக்ரோஷமாய்த் தாக்கிக் கொண்டார்கள். இம்முறை அப்துர் ரஹ்மான் அபூ ஃகதாதாவின் குதிரையைக் கொன்றான். அபூ ஃகதாதா அப்துர் ரஹ்மானை பலமாய்த் தாக்க, மடிந்தான் அவன். அக்ரமிடமிருந்து அவன் கைப்பற்றியிருந்த குதிரை இப்பொழுது அபூ ஃகதாதாவின் வசமானது.

குதிரையில் வந்த நபித்தோழர்கள் இந்தக் களேபரத்தில் மூழ்கிவிட, அவர்களையெல்லாம் விஞ்சி, அந்தக் குதிரைகளின் தூசுப் படலம்கூடத் தென்படாத தொலைவுக்கு மற்ற எதிரிகளைத் துரத்திக்கொண்டு ஓடியிருந்தார் ஸலமா. மாலை நேரமாகி, சூரியனும் அஸ்தமித்து மக்ரிபு நேரமாகி விட்டது. ஆனால் அதிகாலை ஃபஜ்ருத் தொழுகைக்குமுன் ஆரம்பித்த இந்த நிகழ்வோ ஓயாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. எதிரிகள் து-கர்த் எனும் இடத்தை அடைந்திருந்தார்கள். பகல் முழுவதும் வெயிலில் ஓடிய களைப்பில் ஏக தாகம் அனைவருக்கும். தொண்டையும் நாவும் நீருக்கு ஏங்க, அங்கிருந்த கிணற்றில் தண்ணீர் பிடித்து அருந்தலாம் என்று யத்தனித்தால், அவர்களை நோக்கி ஸலமா ஓடிவருவது தெரிந்தது. ‘என்னடா இது? இந்த ஆளுடன் பெருந் தொல்லையாக இருக்கிறதே!’ என்று ஏக எரிச்சலுடன் தண்ணீர்கூட வேண்டாம் என்று ஓட ஆரம்பித்தார்கள் அவர்களும். அருகில் குன்று இருந்தது. அதன்மீது தாவினார்கள். அவர்களில் ஒருவனைத் தொடர்ந்தார் ஸலமா. குறிபார்த்துப் பறந்தது அவரது அம்பு.

“இந்தா, வாங்கிக்கொள்
நான்தான் இப்னுல் அக்வஉ
அழிந்தான் கொடியவன் ஒருவன் இன்று”

அம்பு செருகியது. அவனுக்கு அன்று காலையிலேயே அம்புக் காயம் ஒன்று ஏற்பட்டிருந்தது. அதுவும் ஸலமா எய்த அம்புதான். இப்பொழுது இரண்டாவது. வலியிலும் வேதனையிலும் திட்டினான் அவன். “உன் தாயாருக்குக் கேடு நிகழ!” சொல்லி மாளாத மலைப்புடன் கேட்டான். “இப்னுல் அக்வஉ நீதானா? காலையிலிருந்து எங்களைத் துரத்தித் துரத்தி விரட்டுபவன் நீதானா?”

“ஆமாம்.”

இதற்குள் நன்றாக இருட்டிவிட, மேலும் இரண்டு குதிரைகளை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் எதிரிகள். அதற்குமேல் அந்த இருட்டில் அவர்களைத் தொடர இயலாமல் அந்தக் குதிரைகளைக் கைப்பற்றி, திரும்பினார் ஸலமா. நபியவர்கள் தலைமையில் ஐந்நூறு பேருடன் கிளம்பியிருந்த சிறு படை து-கர்த் அடைந்திருந்தது. இருட்டிவிட்டதால் அங்கேயே கிணற்றுக்கு அருகில் கூடாரம் நிறுவியிருந்தார்கள். ஒட்டகம் ஒன்றை அறுத்து, தீயில் வாட்டி, படையினருக்கு இரவு ஆகாரம் பரிமாறிக் கொண்டிருந்தார் பிலால் ரலியல்லாஹு அன்ஹு.

ஸலமா இப்னுல் அக்வஉ நபியவர்களிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இந்தப் படையிலிருந்து நூறு பேரைமட்டும் நான் தேர்ந்தெடுக்கிறேன். நாங்கள் அவர்களைத் துரத்திச் செல்வோம். ஒருவர் பாக்கியில்லாமல் கொன்றுவிட்டுத் திரும்புவோம். அனுமதி தாருங்கள்.”

“செய்வாயா ஸலமா?” என்று கேட்டார்கள் நபியவர்கள்.

“தங்களை மேன்மைப்படுத்திய அல்லாஹ்வின்மீது ஆணையாக! நிச்சயமாக.”

அதில் எந்தவித சந்தேகமும் நபியவர்களுக்கு இருக்கவில்லை. அவரது வீரமும் உறுதியும் அறிந்து மனம் விட்டு, வாய்விட்டுச் சிரித்தார்கள். நெருப்பின் ஒளியில் அவர்களின் பற்களைக் காணமுடிந்தது. பிறகு சொன்னார்கள். “கதஃபானை அடைந்துவிட்டார்கள் அவர்கள் அனைவரும். அங்கு இப்பொழுது உணவு உண்கிறார்கள்.”

ஆச்சரியமான வகையில் நபியவர்கள் அறிவித்த மெய்ச்செய்தி அது. சற்று நேரம் கழித்து கதஃபானிலிருந்து ஒருவன் அங்கு வந்தான். அவன் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தினான். “நான் அவர்களுக்காக ஒட்டகம் ஒன்றை அறுத்தேன். அதன் தோலை நீக்கிக் கொண்டிருக்கும்போது தொலைவில் ஏதோ தூசுப்படலம் தெரிந்தது. நபியவர்களின் படைவருகிறது என நினைத்து அவர்கள் உணவைக்கூட உண்ணாமல் கிளம்பி ஓடிவிட்டார்கள்.”

அந்தளவு எதிரிகளின் மனத்தில் பயம் புகுந்திருந்தது. அதற்கு முக்கியக் காரணம் ஸலமா இப்னுல் அக்வஉவின் இடைவிடாத தொடர் ஓட்டம். இப்படியாக அன்றைய நாள் முடிந்தது.

மறுநாள் விடிந்தது.

எதிரிகள் விட்டுச் சென்று, கைப்பற்றப்பட்ட பொருள்களிலிருந்து தம் படை வீரர்களுக்குப் பங்கு பிரித்து அளித்தார்கள் நபியவர்கள். குதிரை வீ்ரர்களுக்கு அவர்களுக்குரிய பங்கும் காலாட் படை வீரருக்கு அவருக்கு உரிய பங்கும் அளிக்கப்பட்டன. குதிரைகளை விஞ்சி, அல்லது அவற்றுக்கு இணையாய் ஸலமா இப்னுல் அக்வஉ என்னவொரு ஓட்டம் ஓடினார்! அதனால் அவருக்கு மட்டும் குதிரை வீரர், காலாட்படை வீரர் என்று இரண்டு பங்குகள் கிடைத்தன. அவரது அசாத்தியத் திறனைப் பாராட்டி “நம்முடைய சிறந்த குதிரை வீரர் அபூ ஃகதாதா. சிறந்த காலாட்படை வீரர் ஸலமா“ என்று அறிவித்தார்கள் நபியவர்கள்.

முஸ்லிம்களின் படை மதீனாவுக்குத் திரும்பியது. ‘வா என்னுடன்’ என்று தம் ஒட்டகத்தில் தம்முடன் ஸலமாவை நபியவர்கள் அமர்த்திக்கொண்டார்கள். பாதி தூரம் கடந்திருப்பார்கள். தஹ்வா எனும் இடம் வந்தது. முஸ்லிம்கள் மனத்தில் போர் இறுக்கம் தளர்ந்திருந்த நேரம். அன்ஸாரித் தோழர் ஒருவர் ஆரம்பித்தார்:

“என்னுடன் போட்டியிட்டு மதீனாவரை ஓடி ஜெயிக்க யாராவது உண்டா?”

அவர் ஸலமாவின் திறன் அறிந்திருந்தாரோ இல்லையோ தெரியாது. ஆனால் அவரும் சிறந்த ஓட்ட வீரர். அதற்குமுன் அவருடன் போட்டியிட்டு யாரும் வென்றதில்லை. நபியவர்களின் பின்னே அமர்ந்திருந்த ஸலமாவுக்கு அவர் சொல்வது கேட்டது; ஆனாலும் அமைதியாய் இருந்தார். அந்த அன்ஸாரியை அறிந்தவர்களுக்கு அவரின் திறமை நன்கு தெரியும்; அதனால் அமைதியாய் இருந்தனர்.

படை நகர்ந்து கொண்டிருந்தது. அந்த அன்ஸாரியோ மீண்டும் மீண்டும் தம் சவாலை உரத்துச் சொல்லிக் கொண்டேயிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஸலமா, நகைச்சுவையாய் பதில் கேள்வி கேட்டார்:

“கண்ணியத்திற்குரியவர்களைக் கண்ணியப்படுத்த மாட்டாயா?
உயர்ந்தவர்களைக் கண்டு அச்சமில்லையா?”

‘யப்பா! நாங்களும் இருக்கிறோம். பார்த்து சவால்விடு” என்று நாம் இதை அர்த்தப்படுத்தலாம்.

அந்த அன்ஸாரியும் சளைத்தவராய்த் தெரியவில்லை. “நபியவர்களைத் தவிர வேறு யாருக்கும் என் அறைகூவல் விலக்கில்லை,” என்றார்.

இதற்குமேல் அந்த அறைகூவலை ஸலமாவால் நிராகரிக்க முடியவில்லை. “நபியவர்களே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நான் இவருடன் போட்டியிட அனுமதி அளியுங்கள்.”

‘இறக்கிவிடுங்கள் ஓடுகிறேன்’ என்று சொல்லக்கூடிய சாதாரணமான பேச்சாக இருந்தாலும், அல்லாஹ்வின் தூதரிடம் பேசும்போது அழகிய பண்பும் மரியாதையும் பொங்கி வழிந்தது தோழர்களுக்கு. பெரும்பாலான உரையாடல்களில் நெடுகவே நாம் இதைக் கவனிக்க முடியும். அப்படி அவர்கள் உரைத்த சொற்களில் கலப்படமோ மிகையோ இருந்ததில்லை. அர்ப்பணம் என்ற வார்த்தை அர்த்தமுடன் உயிர் வாழ்ந்திருந்தது அவர்களது உயிர்த் தியாகங்களில்.

“நீர் விரும்பினால் அப்படியே ஆகட்டும்” என்று அனுமதியளித்தார்கள் நபியவர்கள்.

‘இந்தா வாரேன்’ என்று ஓட்டகத்திலிருந்து குதித்தார் ஸலமா. ‘சபாஷ்! சரியான போட்டி!’ என்று வியப்பும் மகிழ்வுமாய்ப் பார்த்தது முஸ்லிம்களின் படை. துவங்கியது போட்டி. மதீனாவை நோக்கி இருவரும் ஓட ஆரம்பித்தார்கள்.

முதலில் அன்ஸாரித் தோழரை முந்தவிட்டார் ஸலமா. முந்தைய நாள் ஓடிக்களைத்த அலுப்பெல்லாம் அதற்குக் காரணமில்லை. அவர் முதலில் களைப்படையட்டும் என்ற எளிய யுக்தி. மதீனாவை நெருங்கினார்கள் இருவரும். அந்த நேரத்தில் வேகமெடுத்தார் ஸலமா. வெகு சீரான மின்னல் வேகம். அன்ஸாரித் தோழரைத் தாண்டியவர் செல்லமாய் அவரது தோளில் ஒரு தட்டு தட்டி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உங்களை விஞ்சிவிட்டேன்,” என்று சொல்லிவிட்டு ஓடியே போனார்.

அதற்குமேல் அந்த அன்ஸாரித் தோழரால் முடியவில்லை. “ஆம் ஸலமா! வென்றுவிட்டீர் நீர்” என்று நின்று சிரித்தார்.

நாளெல்லாம் ஓட வேண்டும் என்றாலும் ஓடுகிறார். அடுத்த நாளும் ஓட வேண்டும் என்றால் தயார் என்று குதிக்கிறார். அதுவும் நூறு அடி, இருநூறு அடி ஓட்டமா என்ன! மைல் கணக்கான ஓட்டம்! விளையாட்டுப் பந்தய தளங்கள் போலன்றிச் சீரற்ற பாதை, கொதிக்கும் வெயில், பாலை, மலை, குன்று என்று எல்லாமே கடினம். ஆனால் அவையெல்லாம் தாண்டி ஓட்டமான ஓட்டம்.

ஸலமாவும் சரி, இதர தோழர்களும் சரி, உடற் பயிற்சி, ஆயுதப் பயிற்சி என்று மனமும் உடலும் படு திடம். சோம்பல் முறித்து எழுந்து நின்று நமது உடல் வலிமையையும் ஆரோக்கியத்தையும் திறனையும் நிறையப் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது நமக்கு.

நபியவர்களின் ஒட்டகங்களைக் கொள்ளையடித்துச் சென்ற எதிரிகள் போகிற போக்கில், பனூ கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணியையும் கடத்திச் சென்றுவிட்டனர். பெண்ணாக இருந்தாலும் படு உள உரம் இருந்தது அவருக்கு. எப்படியும் தப்பித்துவிட வேண்டும் என்று எண்ணம் அவருக்கு. சமயம் பார்த்திருந்தார். இரவு நேரங்களில் ஒட்டகங்களை அதற்கான இடத்தில் அடைத்துவிட்டு ஓய்வெடுப்பார்கள் அந்தக் கயவர்கள். ஒருநாள் இரவு அப்படி அவர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கியதும் அந்தப் பெண் ஒட்டகங்களிடம் வந்தார். ஏதாவது ஒரு ஒட்டகத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஏறித் தப்பிக்கலாம் என்ற நோக்கத்தில் நெருங்கினால், ‘இரவு நேரம்! என்னால் முடியாது வேறு ஆளைப்பார்’ என்பதைப்போல் ஒவ்வொன்றும் கனைக்கும். காட்டிக்கொடுத்து விடுமோ என்று விலகி வந்துவிடுவார். இப்படியாகக் கடைசியில் அவர் வந்து அடைந்தது அத்பாவிடம். கனைப்பு, இருமல், செறுமல் என்று எந்த சப்தமும் எழுப்பாமல் ஒட்டகம் அத்பா சமர்த்தாய் அவரை அமர்த்திக் கொண்டது. “போவோம் மதீனா” என்று பயணத்தைத் துவக்கியது. தம் முயற்சியில் பலமுறையும் ஏமாற்றமடைந்த அந்தப் பெண்மணிக்கு அத்பாவின் இந்த இணக்கம் பெரும் உற்சாகமும் மகிழ்வும் ஏற்படுத்திவிட்டன. அந்த குஷியில் நேர்ச்சை ஒன்று நேர்ந்துவிட்டார்.

‘நீ மட்டும் என்னைப் பத்திரமாய் மதீனா கொண்டு சேர்த்துவிடு. அல்லாஹ்வுக்காக உன்னை அறுத்துப் பலியிட்டு விடுகிறேன்!’ விசித்திரமாயில்லை! அதெல்லாம் அத்பாவுக்குப் புரியவில்லை. பந்தய ஒட்டகமான அது தன் பணியைச் செவ்வனே முடித்தது. பத்திரமாய் மதீனாவை அடைந்ததும் நபியவர்களிடம் தம் நேர்ச்சையைத் தெரிவித்தார் அந்தப் பெண்மணி.

“உனக்கு உதவிய ஒட்டகத்திற்கு என்னவொரு மோசமான வெகுமதி” என்று கூறிய நபியவர்கள், “முறையற்ற இந்த நேர்ச்சையை நீ செலுத்தத் தேவையில்லை” என்று அறிவித்து விட்டார்கள்.

oOo

வீர தீரராக, உலகில் அச்சம் என்பதை அறியாத ஸலமாவுக்கும் ஒருமுறை அச்சம் ஏற்பட்டது. அவருக்கு ஆமிர் இப்னுல் அக்வஉ என்றொரு சகோதரர் இருந்தார். ஃகைபர் யுத்தத்தின்போது அவரும் கலந்துகொண்டார். நல்ல கவித்திறன் அவருக்கு. அதனால் போர்க்களத்தில் கவிதை ஒன்றைப் புனைந்து, வீரர்களுக்கு அதைச் சொல்லி, அவர்களுக்கு உத்வேகம் ஏற்படுத்தியவர்.

اللهم ‏ لولا أنت ‏ ما اهتدينا
ولا ‏ تصدقنا ولا صلينا
فاغفر فداء لك ‏ ما اقتفينا
وثبت الأقدام إن لاقينا
وألقين سكينة علينا
إنا إذا صيح بنا أتينا
وبالصياح ‏ ‏عوِّلوا ‏ ‏علينا

இறைவா! நீயே இலையென்றால்
இருக்க மாட்டோம் நேர்வழியில்
சிறப்பாய்த் தான தருமங்கள்
செய்தே இருக்க மாட்டோம்யாம்
மறையோன் உன்னைத் தொழுதேநல்
மாண்புற் றுயர்வைப் பெறமாட்டோம்
சிறியோர் எம்மை உன்னுடைய
திருமுன் அர்ப்பணம் செய்கின்றோம்!

நல்லற மெதுவும் எம்வாழ்வில்
நழுவிற் றென்றால் எம்மைநீ
இல்லை அருளென் றொதுக்காமல்
இறங்கிப் பொறுப்பாய் நாயகனே!
எல்லை மீறும் போக்குடைய
எதிரிப் படையைச் சந்தித்தால்
நில்லா எங்கள் கால்களையே
நிலைக்கச் செய்தே அருள்புரிவாய்!

எங்கள் மீதே அமைதியினை
இறங்கச் செய்வாய் வல்லவனே!
பொங்கும் ஆர்வப் பெருக்காலே
போவோம் நாங்கள் போர்முனைக்கே
அங்கும் எம்மவர் ஆர்த்தெழுப்பும்
அபயக் குரலைக் கேட்டவுடன்
மங்கா அன்புத் தோழர்க்கு
மாண்போ டுதவி செய்திடுவோம்!
(நன்றி : adirainirubar.blogspot.in/2012/03/9.html)

இப்படியெல்லாம் பாடிவிட்டு ஓரமாய் அமர்ந்து விசிறி எடுத்து வீசி ஆசுவாசம் அடையாமல், தாமும் வாளெடுத்துப் போரில் சுழன்றார் ஆமிர் இப்னுல் அக்வஉ. ஆனால் இறைவனின் நாட்டம் – எதிரி ஒருவனை வெட்டும்போது, அசந்தர்ப்பமாகிப்போய் அவரது வாள் அவரது காலையே பதம் பார்த்துவிட்டது. அதில் படுகாயம் ஏற்பட்டுப்போய், இறந்துவிட்டார் அமிர். “ஆமிருக்குக் கைச்சேதம்! உயிர்த் தியாகி ஆகும் பெருமை வாய்க்காமல் போனதே அவருக்கு” என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள் சில முஸ்லிம் வீரர்கள்.

‘இது தற்கொலையாகக் கருதப்படுமோ, தம் சகோதரருக்கு ஜிஹாதுக்கான நற்கூலி கிடைக்காதோ?’ என்ற அச்சம்தான் ஸலமாவுக்கு ஏற்பட்டது. இறைவழியில் சொந்தங்களை இழக்கும்போது அந்தத் துக்கமெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருந்திருக்கவில்லை. மாறாய் விசனமெல்லாம் மறுமை ஈடேற்றம் மட்டுமே. ஸலமா அல்லாஹ்வின் தூதரிடம் ஓடினார்; கவலையைத் தெரிவித்தார்.

“அல்லாஹ்வின் பாதையில் போர் வீரராக மரணமடைந்தார் உம் சகோதரர். அவருக்கு இரு வெகுமதிகள் உண்டு. சொர்க்கத்தில் ஓடும் ஆறுகளில் நீந்திக் கொண்டிருக்கிறார் அவர்” என்று நற்செய்தி சொன்னார்கள் நபியவர்கள். அதைக் கேட்டதும்தான் சகோதரனின் மரணம் அவருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

ஸலமாவின் மற்றொரு நற்குணம், விசாலமான தர்ம சிந்தனை. அவரிடம் யாரேனும் சென்று, ‘அல்லாஹ்வின் பொருட்டு எனக்கு ஏதேனும் தாருங்கள்’ என்று கேட்டுவிட்டால் போதும், தம்மிடமுள்ள எதுவொன்றையும் கேட்டவருக்கு ஈவதில் தயக்கம் என்று எதுவுமே அவருக்கு இருந்ததில்லை. தம்முடைய அந்த இயல்புக்கு அழகான விளக்கமும் ஒருமுறை சொல்லியிருக்கிறார். “அல்லாஹ்வின் பொருட்டுக் கேட்டும் ஒருவன் தானமளிக்கவில்லை என்றால் அவன் வேறு எதன் பொருட்டுதான் அளிப்பான்?”

அதானே!

oOo

உதுமான் ரலியல்லாஹு அன்ஹு கொலை செய்யப்பட்டதும், மதீனாவில் ஃபித்னா எனும் குழப்பத்தின் வாயில்கள் அகலத் திறக்கப்பட்டன. ஸலமாவால் அதைச் சரியானபடி உணர முடிந்தது. அதன் பின்விளைவுகளை யூகித்தால் அவை அவருக்குப் பெரும் கவலையைத்தான் அளித்தன. இவையெல்லாம் அவருக்குச் சரியாய்த் தோன்றவில்லை. தம் பெட்டி, படுக்கை, மூட்டை, முடிச்சுகளைக் கட்டினார். மதீனாவிலிருந்து கிழக்கே இருநூறு கி.மீ. தொலைவில் அர்-ரப்தா என்றொரு கிராமம். அங்குச் சென்று அமர்ந்துவிட்டார். மற்றொரு முக்கியமான தோழர் அபூதர் அல்-கிஃபாரியும் அதோ நோக்கத்துடன் அங்குக் குடிபெயர்ந்து தங்கியிருந்தார். முஸ்லிம்களுக்கு இடையே தோன்றிவிட்ட அரசியல் குழப்பங்களிலிருந்து முற்றிலுமாய் ஒதுங்கி விட்டவர்கள் இவர்கள்.

ஸலமா எண்பது வயதைத் தாண்டியிருந்தார். அவரை முதுமை வாட்டியது. அது ஹிஜ்ரீ 74ஆம் ஆண்டு. இனந்தெரியா உணர்வு ஏற்பட்டது அவருக்கு. நபியவர்களுடன் வாழ்ந்து களித்த மதீனா நகரை எண்ணி மனம் ஏங்கியது. ‘ஓர் எட்டு சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோமே’ என்று தோன்றியது. கிளம்பினார். மதீனா வந்து சேர்ந்து இரண்டு நாள்தான் ஆகியிருக்கும். மூன்றாம் நாள். நபியவர்கள் வாழ்ந்த பட்டணத்தில் அவரது உயிர் பிரிந்தது.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.

சத்தியமார்க்கம்.காம்-ல் 23 மே 2012 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment