முடிந்தும் முடியாத கதை

ஜுலை 12, 2016

“துரோகி! அதைக் குடுடா” என்று கெஞ்சினான் ஆதி.

“இந்த நாளுக்குத்தான் காத்திருந்தேன். நீ

சாதிச்சிடுவேன்னு தெரியும். ஆனால் இது எனக்கு மட்டும்தான் சொந்தம்.” ஆதியின் கையில் இருந்த காலக் கடிகாரத்தைப் பிடுங்கி அவனைச் சுட துப்பாக்கியை நீட்டினான் அவனுடைய நண்பன் முனோ.

“வேணாம். வருத்தப்படுவே. மீண்டும் வருவே,” என்று ஆதி பேசி முடிக்குமுன் சுட்டது துப்பாக்கி. ஆதி சுருண்டு விழுந்து, இறந்தான்.

“ஹஹ்! கதை முற்றும்” என்று சிரித்தான் முனோ.

ஜுலை 13, 2016

“கடவு எண்ணை உள்ளிடு” என்றது காலக் கடிகாரம்.

“செத்தும் கெடுத்தான் ஆதி. 24 மணி நேரத்தைத் தாண்டிச் செல்ல பாஸ்கோடு செட் செய்திருக்கிறான் கிராதகன்.” கத்தினான் முனோ.

“எதுக்கு டென்ஷன். அதான் பின்னாடி போக முடியுதே. நேற்றைக்குப் போய் வாங்கிட்டு அப்புறம் சுட்டுடுங்க” என்றாள் முனோவின் மனைவி.

“ப்ரில்லியண்ட். இதோ வந்துடுறேன்.”

ஜுலை 12, 2016
 
“துரோகி! அவளை விட்டுடா” என்று கெஞ்சினான் ஆதி.

ஆதியின் மனைவியின் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தி, “பாஸ்கோடைச் சொல். இல்லை என்றால் இவள் காலி” என்று மிரட்டினான் முனோ.

முனோவின் கவனம் ஆதியின்மேல் இருக்க, இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து முனோவைச் சுட்டாள் ஆதியின் மனைவி.

“நான்தான் அப்பவே சொன்னேனே! நீ மீண்டும் வருவேன்னு. இதைக் கண்டுபிடிச்ச நான் கொஞ்சம் முன் நோக்கி நகர்த்தி டெஸ்ட் செய்து பார்த்திருப்பேன்னு தெரியாதா முட்டாளே! காத்திருந்தேன்.”

முனோ சுருண்டு விழுந்து, இறந்தான்.

“ஹஹ்! கதை முற்றும்” என்று சிரித்தான் ஆதி.

ஜுலை 13, 2016

“ப்ரில்லியண்ட். இதோ வந்துடுறேன்” என்று கிளம்பியவனிடம், “உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்” என்று கவலையுடன் கேட்டாள் முனோவின் மனைவி.

“இந்தக் கடிகாரத்தைப் பார்த்து நான் மற்றொன்று தயார் செய்துவிட்டேன். இப்போதைக்கு என் மாடலும் கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்லும். நான் திரும்ப தாமதமானால் வந்து பார்.”

தான் தயாரித்திருந்த கடிகாரத்தை தன் மனைவியிடம் தந்துவிட்டு நேற்றைக்குச் சென்றான் முனோ.

கதை முற்றும்

 

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment