சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 3

by நூருத்தீன்
3. ஸெல்ஜுக் காதை

ஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன் இணைத்துக்கொண்டு, “கிளம்புங்கள். செல்வோம் களத்திற்கு”

என்று இமாதுத்தீன் ஸெங்கி டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரைக் கைப்பற்றப் படையெடுத்தார்.

இராக்கிலுள்ள மோஸூல் பகுதிகளை ஆளும் இவருக்கு சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மீது ஏன் மோகம்? காரணம் எகிப்து! எகிப்தா? மிஸ்ரு எனும் அந்த நாடு இன்னும் தொலைவே தெற்கில் அல்லவா இருக்கிறது! அதற்கும் டமாஸ்கஸுக்கும் என்ன தொடர்பு என்று தோன்றுகிறதல்லவா? நேரடித் தொடர்பும் இல்லை; ஆட்சித் தொடர்பும் இல்லை. ஆனால் எகிப்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், அதை நோக்கி நகர வேண்டுமென்றால் டமாஸ்கஸ் அவர் வசமாவது அவசியமானதாக இருந்தது. புரியவில்லை அல்லவா? அந்த நுண்ணரசியல் மிக விரிவாய்ப் பின்னர் வரும். முடிச்சுகள் தாமே அவிழும். இப்போதைக்கு நமக்குத் தேவையான தகவல் இந்த டமாஸ்கஸ் படையெடுப்பும் அதன் வினைப்பயனும்.

இமாதுத்தீன் ஸெங்கி டமாஸ்கஸை முற்றுகையிட்டார். அயர்ந்துவிடாமல் ஸெங்கியின் முற்றுகையை டமாஸ்கஸ் எதிர்கொண்டது. பல வகையில் போராடியும் இமாதுத்தீனின் முயற்சி வெற்றியடையவில்லை. ஆனால், தம் முயற்சியில் மனந்தளரா ஸெங்கி, டமாஸ்கஸ் நகரை விட்டுவிட்டு அதன் வடக்கே 75 கி.மீ. தொலைவிலுள்ள பஅல்பெக் நகரை முற்றுகையிட்டு, கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். பதினான்கு பூதாகரமான கவண்பொறிகளிலிருந்து பாறைமாரி பொழிய, கிடுகிடுத்த பஅல்பெக் அவர் வசமானது. வெற்றிபெற்ற கையுடன் ஒரு காரியம் செய்தார் ஸெங்கி. போர், சண்டை, களேபரம் என்று களம் புகுந்துவிட்டால் எதிரிகளைக் கொல்வதில் இயல்பாக இருந்த அவர், செய்நன்றி கொல்வதற்கு இடமளிக்கவில்லை. நஜ்முத்தீன் ஐயூபியை அழைத்து, “இனி இந்நகருக்கு நீங்கள்தாம் ஆளுநர். ஆளுங்கள்!” என்று தம் உயிர்காத்தவருக்கு நன்றிக்கடனை நிறைவேற்றினார் இமாதுத்தீன்.

ஷிர்குவையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. அவருக்கு அலப்பொ (ஹலப்) நகரின் படை அதிகாரி பதவி அளிக்கப்பட்டது. வந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ஷிர்குவோ தம் திறமையால் கிடுகிடுவென்று உயர்ந்து, வெகுவிரைவில் ஸெங்கியின் தலையாய படைத் தலைவராகிவிட்டார்.

நஜ்முத்தீன் ஐயூபி இப்பொழுது தம் குடும்பத்துடன் மோஸூலிலிருந்து பஅல்பெக் நகருக்குக் குடிபெயரும்படி ஆனது. அங்குதான் அடுத்த ஒன்பது ஆண்டுகளும் யூஸுஃப் ஸலாஹுத்தீனின் இளம் பருவமும் கழிந்திருக்கிறது. அதன் பிறகு நிகழ்ந்த அரசியல் மாற்றத்தில் டமாஸ்கஸ் ஆட்சியாளர்களால் பஅல்பெக் கைப்பற்றப்பட்டது. நஜ்முத்தீன் ஐயூபி பஅல்பெக்கிலிருந்து டமாஸ்கஸுக்குக் குடிபெயர்ந்தார்.

சிறுவர் யூஸுஃபின் இளம் பருவம் பஅல்பெக், டமாஸ்கஸ் நகரங்களில் கழிந்தது. பதின்மப் பருவம் கடந்து அவர் முதன்முறையாகக் களத்தில் பங்கேற்கும் வரை அவரைப் பற்றிய மேலதிக வரலாற்றுக் குறிப்புகள் இல்லை

போகட்டும். யூஸுஃப் நிதானமாக ஓதி, ஓடி, விளையாடி ஸலாஹுத்தீனாக உருவாகட்டும். அதற்குள் நாம் காண வேண்டிய வரலாற்றுப் பின்னணிக் காட்சிகள் நிரம்ப உள்ளன. முதலாம் சிலுவை யுத்தம்தான் அதன் மையம் என்றாலும் அதைச் சுற்றியும் அதற்கு முன்னும் பின்னும் பின்னிப் பினைந்துள்ள நிகழ்வுகள் பஞ்சமற்ற பிரமிப்பு! அதிர்ச்சிகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் அவற்றில் குறைவே இல்லை. அவையெல்லாம் சுல்தான் ஸலாஹுத்தீனின் வரலாற்றை நாம் புரிந்துகொள்வதற்கான முன்னுரைப் பகுதி என்பதால் நிதானமாக, ஒவ்வொன்றாக, விரிவாகப் பார்ப்போம். கண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு நாடு, எட்டுத் திக்கும் அலைச்சல் என்று மாபெரும் பயணம் காத்திருப்பதால், மூச்சை ஆழ உள்ளிழுத்து, முதலில் ரஷ்யா!

oOo

சோவியத் யூனியன் சிதறுவதற்குமுன் அதில் அங்கம் வகித்த நாடுகள் கஸக்ஸ்தான், உஸ்பெக்கிஸ்தான். இவ்விரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ளது ஏரால் கடல். பெயர்தான் கடலே தவிர, அக்காலத்தில் அது உலகின் நான்கு பெரிய ஏரிகளுள் ஒன்று. 68,000 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி. அந்த ஏரால் கடலைச் சுற்றியுள்ள நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் ஸெல்ஜுக் துருக்கியர்கள். இவர்கள் ஓகுஸ் எனும் பழந் துருக்கிக் கோத்திரத்தின் கினிக் எனும் கிளைக் குலத்திலிருந்து உருவானவர்கள். இந்தக் குலத்தைச் சேர்ந்த ‘ஸெல்ஜுக்’ என்பவர் ஓகுஸ் அரசாங்கத்தில் உயர் பதவி ஒன்றை வகித்து வந்தார்; படையிலும் பணியாற்றினார். புகழ்பெற்ற அவரது பெயரே ஸெல்ஜுக் குலத்திற்கும் இடப்பட்டுப் பிற்காலத்தில் அவர்கள் உருவாக்கிய பேரரசிற்கும் அவர்களது அரசகுலத்திற்கும் பெயராகி நிலைத்துவிட்டது.

கி.பி. பத்தாம் நூற்றாண்டு. தோராயமாக 950 ஆம் ஆண்டு. ஸெல்ஜுக் துருக்கியர்கள் தங்களது பூர்வீக நிலப்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து, குவாரிஸம் எனும் பகுதியை வந்தடைந்தார்கள். அங்கு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். போர்க் குணங்களுக்கும் வில்வித்தைக்கும் சுறுசுறுப்புக்கும் திறமைக்கும் பெயர் பெற்ற இந்த நாடோடிப் பழங்குடியினர் அங்கிருந்து அப்படியே மத்திய கிழக்குப் பகுதிகளுக்குள் நுழைந்ததால் அங்கும் பரவ ஆரம்பித்தது ஸெல்ஜுக் குலம்.

அப்பாஸியர்கள், அரபு வம்சத்தினர் ஆகியோரின் வீரியம் குறைய ஆரம்பித்திருந்த காலம் அது. புலம்பெயர்ந்து வந்திருந்த வலிமையான இந்தத் துருக்கியர்களை அவர்கள் கூலிப்படைகளாகவோ, சந்தையில் அடிமைகளாகவோ வாங்கித் தங்களது அரண்மனைப் பாதுகாவலர்களாக அமர்த்த ஆரம்பித்தனர். காலப் போக்கில் துருக்கியரின் வலிமை மத்தியக் கிழக்குப் பகுதியில் கூடலாயிற்று.

பாரசீகக் குலப் பிரிவுகளான சமானித்கள், காராகானித்கள், கஸ்னவீக்கள் ஆகியோருக்கு இடையே ஆட்சி அதிகார மோதல், போர்கள் நடைபெற்று வந்தன. அவற்றில் ஸெல்ஜுக்குகள் சமானித்களுடன் இணைந்து, அந்த அரசியலில் கலந்து, ஒரு கட்டத்தில் கஸ்னவீக்களை முற்றிலுமாய்த் தோற்கடித்து, ஆட்சி அமைக்கும் அளவிற்கு உயர்ந்தது அவர்களது வலிமை.

கி.பி. 1037ஆம் ஆண்டு ஸெல்ஜுக் துருக்கியர்களின் அரசு உருவானது. அதன் முதல் சுல்தானாக துக்ரில்பேக் பதவியேற்றார். ஸெல்ஜுக் என்று மேலே பார்த்தோமே, அவருடைய பேரன்தான் துக்ரில்பேக். ஸெல்ஜுக்கின் மகன் மீக்காயில், தம் புதல்வர்கள் சக்ரிபேக், துக்ரில்பேக் இருவரையும் அனாதரவாக விட்டு இறந்துவிட, பேரர்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கினார் பாட்டன் ஸெல்ஜுக்.

நாடு நாடாக நாமும் சுற்ற வேண்டியிருக்கிறது சரி, ஆனால் இப்படி மூச்சு முட்டும் அளவிற்கு ஊர்களின் பெயர், குலங்களின் பெயர், மன்னர்களின் பெயர், என்று படித்துக்கொண்டே வந்தால் நம் தலையும் சேர்ந்து சுற்றுவதுபோல் தோன்றுகிறதல்லவா? நிகழ்வுகளை அறிவதற்குப் பெயர்களும் தேவையாக இருப்பதால் அவற்றுடன் சேர்த்தே நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது. வரலாற்று ஆசிரியர்களும் மாணவர்களும் வேண்டுமானால் பெயர்களை மனனம் செய்யட்டும். நமக்கு முக்கியம், நிகழ்வுகள் என்பதால் அவற்றில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் போதும். ஆனால், வரலாற்றின் போக்கில் முக்கிய கதாபாத்திரங்களும் ஊர்களும் பெயர்களும் தாமாகவே நம் நினைவில் ஒட்டிக்கொள்ளும்.

இவ்விதம் ஸெல்ஜுக்குகள் சுல்தான்களாக உருவானபோதும் அவர்கள் அப்பாஸிய கலீஃபாவுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே விளங்கினர். சொல்லப்போனால் ஸெல்ஜுக் துருக்கியர்களின் வருகை அப்பாஸிய கிலாஃபத்தின் மீட்சிக்கும் ஒற்றுமையைத் தோற்றுவிப்பதற்கும் முக்கியமானதாக அமைந்து போனது. அப்பாஸிய கிலாஃபாவுக்குப் பேராதரவாகத்தான் ஸெல்ஜுக் துருக்கியர்களின் அரசியல் செயல்பாடுகளெல்லாம் அமைய ஆரம்பித்தன. ஷீஆக்களின் புவைஹித் வம்சம் கைப்பற்றி வைத்திருந்த பாக்தாத் நகரை, கி.பி. 1055 ஆம் ஆண்டு கலீஃபாவுக்கு மீட்டுத் தந்தார் சுல்தான் துக்ரில்பேக்.

துக்ரில்பேக் இறந்ததும் அவருடைய சகோதரர் சக்ரியின் மகனான அல்ப் அர்ஸலான் சுல்தானாகப் பதவியேற்றார். அவருடைய ஆட்சியில் ஸெல்ஜுக் நிலப்பரப்பு வெகுவாக விரிவடைய ஆரம்பித்தது. பல பகுதிகளைக் கைப்பற்ற ஆரம்பித்தார். எப்படியான பகுதிகள்? கிறிஸ்தவ பைஸாந்தியப் பகுதிகள்!

ரஷ்யாவில் பிறந்து, மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு நகர்ந்து, குடியேறி வாழ ஆரம்பித்து, ஆட்சி அமைக்கும் அளவிற்கு உயர்ந்த ஸெல்ஜுக்கியர்கள், அதற்கடுத்திருந்த பைஸாந்தியர்களுடன் மோத ஆரம்பித்தனர். இதை மத ரீதியிலான போர் என்பதைவிட எல்லை விரிவாக்கம், நிலங்களைக் கைப்பற்றித் தத்தம் ராஜ்ஜியங்களில் இணைப்பதற்கு இரு தரப்பு அரசர்களுக்கும் இருந்த வேட்கை, புவியியல் காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில்தான் வரலாற்று ஆசிரியர்கள் அரச மோதல்களைப் பார்க்கிறார்கள்; குறிப்பிடுகிறார்கள். அல்ப் அர்ஸலானின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போதும் அதை்தான் நாம் உணர முடியும்.

கி.பி. 1067இல் அர்மீனியாவும் ஜார்ஜியாவும் அல்ப் அர்ஸலானின் வசமாயின. அடுத்த ஆண்டு (1068) பைஸாந்தியப் பேரரசின்மீது படையெடுத்து, ஏறத்தாழ அனடோலியாவின் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார் அர்ஸலான். அத்தகைய வெற்றிகளுக்குப் பிறகு மேற்கொண்டு முன்னேறி, கிறிஸ்தவர்களின் பைஸாந்தியப் பேரரசைத்தானே அவர் கைப்பற்றியிருக்க வேண்டும்? ஆனால் அவர்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்டது அமைதி ஒப்பந்தம்! ஏன்? எகிப்து! பிற்காலத்தில் இமாதுத்தீன் ஸெங்கியின் பார்வை பதிந்திருந்த எகிப்து.

வரலாறு நெடுக அனைத்து சுல்தான்களுக்கும் எகிப்து ஒரு முக்கியக் குறிக்கோளாகவே இருந்து வந்தது. சுல்தான் ஸலாஹுத்தீனின் காலம்வரை அது தொடர்ந்துகொண்டே இருந்தது. அதை நாம் விரிவாகப் பின்னர் பார்க்க வேண்டியிருப்பதால் இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது, அல்ப் அர்ஸலானின் முன்னுரிமை இலக்கு என்பது, எகிப்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதே. இக்கால கட்டத்தில் கிறிஸ்தவர்களுடன் மேற்கொண்டு மோதி அவர்களுடன் பகைமையை அதிகப்படுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லை. ஆனால் பைஸாந்தியப் பேரரசரின் எண்ணம் வேறாக இருந்தது. வரலாற்றின் போக்கு மாறிப் போனது.

oOo

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – 09 ஏப்ரல் 2018 வெளியானது


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment