64. வஸீர் ஷவாரின் நிஜமுகம்
ஹி. 559 / கி.பி. 1164. ஏப்ரல் மாதம். பத்தாயிரம் வீரர்களைக் கொண்ட குதிரைப்படை தயாரானது. அதன் தலைமை அஸாதுத்தீன் ஷிர்குஹ். தம் சகோதரன் மகன் யூஸுஃப் இப்னு அய்யூபை இணைத்துக்கொண்டு, வஸீர் பதவியைப் பறிகொடுத்த எகிப்தின் ஷவாரையும் அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று கிளம்பினார் அவர். டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதி வரை நூருத்தீனின் படைப் பிரிவு ஒன்று அவர்களுக்குத் துணையாக வந்து வழியனுப்பி வைத்தது.
அது நீண்ட நெடிய கடும் பயணம். சற்றொப்ப 900 கி.மீ. தொலைவை, பரங்கியர்கள் மோப்பம் பிடிக்காமல், அவர்கள் கண்ணில் படாமல் கடக்க வேண்டும், அதையும் வெகு விரைவாக நிகழ்த்த வேண்டும் என்ற சவால் நிறைந்த பயணம். வெகு கவனமாக, பரங்கியர்கள் வசமுள்ள கடலோரப் பாதையைத் தவிர்த்துவிட்டு, ஜோர்டன் ஆற்றோரமாக 220 கி.மீ., அங்கிருந்து சாக்கடல் தாண்டி அதன் தெற்கு வரை அடுத்து 250 கி.மீ., அதன் பின் அங்கிருந்து வறண்ட சினாய் தீபகற்பத்தை 250 கி.மீ. தாண்டி, மேற்கொண்டு 110 கி.மீ. கடந்தால் முதல் இலக்கான பில்பைஸ் – என்று பாதை வகுக்கப்பட்டது. இன்றைய ஜோர்டன்-இஸ்ரேல் எல்லையில் அமைந்துள்ள மணற்குன்றுகள், உப்பளம், சரளைக் கற்கள் நிறைந்த சமவெளி, துண்டாகிக் கிடந்த மலைகள் எனப் பாதை யாவும் கடுமை. ஆங்காங்கே இருந்த சோலைகளும் நீரோடைகளும்தாம் குதிரைகளுக்கும் படையினருக்கும் நீராதாரமாக அமைந்தன. சினாய் தீபகற்பத்தைக் கடக்கத் தோல் பைகளில் நீர் நிரப்பப்பட்டது.
குதிரைகள் நாலுகால் பாய்ச்சலில் ஓடத் துவங்கின. நாளொன்றுக்கு சுமார் 100 கி.மீ. தொலைவைக் கடந்தது படை. ஏப்ரல் 15ஆம் நாள் கிளம்பி ஒன்பதே நாட்களில் எகிப்தின் பில்பைஸை அடைந்தது. மேய்ச்சல் நிலங்களற்ற சாக்கடல், சினாய் தீபகற்பப் பாதையில் ஷிர்குஹ் நிகழ்த்திய இந்த சாகசப் பயணம் ஓர் அசாதரண சாதனை என்று வியந்து எழுதி வைத்திருக்கிறார் சமகால வரலாற்று ஆசிரியர் ஜான் மேன். ஷிர்குஹ்வின் விரைவான இந்தப் போர்முறைத் திட்டம் அவரது இராணுவத் திறனுக்குச் சான்று என்கிறார் வரலாற்று ஆசிரியர் தாமஸ் ஆஸ்பிரிட்ஜ்.
வந்த வேகத்தில் எகிப்தின் கிழக்குப் பகுதியான பில்பைஸைக் கைப்பற்றிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து கெய்ரோவைச் சுற்றிச் சூழ்ந்தது ஷிர்குஹ்வின் படை. பில்பைஸிலிருந்து செய்தி வந்த உடனேயே அவர்களை எதிர்க்க, கெய்ரோவிலிருந்த திர்காம் தம் சகோதரர் நாஸிருத்தீன் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். ஆனால் ஷிர்குஹ்வைத் தடுக்க முடியாமல் தோற்று கெய்ரோவுக்குத் திரும்பிவிட்டார் நாஸிருத்தீன். ஷிர்குஹ் கெய்ரோ நகரின் வெளிச் சுவருக்கு வந்துவிட்டார் என்றதும் திர்காம் தம் படையினருடன் வெளியே வந்து முழு வீச்சுடன் மூர்க்கமாக எதிர்த்துப் போரிட்டுப் பார்த்தார். ஆனால் அந்தப் போரில் ஷிர்குஹ்வின் கை எளிதாக ஓங்கியது. திர்காமின் படையினர் அவரை விட்டுவிட்டுப் பின்வாங்கி ஓடினர். திர்காமும் அவருடைய சகோதரர் நாஸிருத்தீனும் துண்டாடப்பட்டனர். வெற்றிகரமாக கெய்ரோவினுள் நுழைந்தார் அஸாதுத்தீன் ஷிர்குஹ். ‘ஆடு போய், மாடு வந்தது’ என்பதைப் போல் வஸீர் மாற்றங்களுக்குப் பழகியிருந்த பொம்மை ஃபாத்திமீ கலீஃபாவான பதின்ம வயது அல்-ஆதித், திர்காம் போய், ஷவார் வந்ததும் அவரை மீண்டும் வஸீராகப் பதவியில் அமர்த்திவிட்டுத் தம் கடமையை முடித்துக்கொண்டார்.
உயிர் தப்பிப் பிழைத்து சிரியாவுக்கு ஓடி, நூருத்தீனிடம் அடைக்கலம் பெற்று, அவருடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, அவரது படை உதவியுடன் பதவியை மீட்டெடுத்த வஸீர் ஷவார் அடுத்து என்ன செய்திருக்க வேண்டும்? எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை. மாறாக நன்றி கொன்றார். அஸாதுத்தீன் ஷிர்குஹ்விடம், ‘நல்லது! நீங்கள் வந்த வேலை முடிந்தது. நீங்களனைவரும் ஊருக்குத் திரும்புங்கள்’ என்று கெய்ரோவின் வாசற்கதவைக் காட்டினார்.
ஆத்திரத்தில் கொதித்துவிட்டார் ஷிர்குஹ். சடுதியில் வெளிப்பட்ட ஷவாரின் நயவஞ்சக நிஜமுகத்தை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
‘போனால் போகிறது. எனக்காக மிகவும் சிரமப்பட்டிருக்கின்றீர்கள். வேண்டுமானால் 30,000 தீனார் தருகிறேன். வழிச் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’ என்று பேரம் பேசினார் வஸீர் ஷவார்.
‘முடியாது’ என்று அப்பட்டமாக மறுத்துவிட்டார் ஷிர்குஹ்.
ஷிர்குஹ்வையும் அவரது பராக்கிரமத்தையும் அறிந்திருந்த ஷவாருக்கு அவரை எதிர்க்கத் தம்மால் ஆகாது என்பது நன்றாகவே தெரியும். எனவே அவரது கரம் உதவி வேண்டி, நேசத்துடன் நீண்ட திசை ஜெருசலம். ராஜா அமால்ரிக்கிடம் சன்மானப் பட்டியலை ஒப்பித்தார் ஷவாரின் தூதுவர்.
அவற்றுள் சில –
ஜெருசலத்திலிருந்து நைலுக்குச் செல்லும் பாதையில் இளைப்பாறும் பகுதிகள் இருபத்தேழு இருந்தன. ஒவ்வொரு பகுதிக்கும் ஓராயிரம் என்ற கணக்கில் இருபத்து ஏழாயிரம் தீனார். போர்க் குதிரைகளுக்கான அனைத்துத் தீவனச் செலவு. படையில் இடம்பெறும் ஹாஸ்பிட்டலர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சன்மானம். கிறிஸ்தவ மத இராணுவப் பிரிவாக, பெரும் சக்தியாக உருவாகி, ஜெருசலம் படையின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள் ஹாஸ்பிட்டலர்கள். அவர்களைக் கவர்ந்து, படையில் இடம்பெற வைக்கும் யுக்தியைப் பிரயோகித்திருந்தார் ஷவார்.
அனைத்தையும் கேட்டு அகமகிழ்ந்த அமால்ரிக் தமது இயல்புக்கு ஏற்பக் குலுங்கிச் சிரித்துவிட்டு, பெரிய அளவில் படையைத் திரட்டினார். அச்சமயம் ஐரோப்பாவிலிருந்து பெரும் எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் கூட்டம் ஒன்று ஜெருசலத்திற்குப் புனிதப் பயணம் வந்திருந்தது. ‘வாருங்கள்! உங்களுக்கு எகிப்தைச் சுற்றிக் காட்டுகிறேன்’ என்பதைப் போல் அவர்களையும் தம் படையில் சேர்த்துக்கொண்டார். கைகளில் சிலுவையும் நாவுகளில் ஜெபமுமாக எகிப்து நோக்கிக் கிளம்பி வந்தது படை. ஷவாரின் ஃபாத்திமீக்கள் படையுடன் இணைந்தது.
எதிர் தரப்பில் நிகழ்ந்தவற்றைக் கவனித்தபடி இருந்த ஷிர்குஹ் தம் படையினருடன் பில்பைஸ் நகருக்கு நகர்ந்து தற்காப்பு ஏற்பாடுகளை மும்முரப்படுத்தியிருந்தார். கூட்டணிப் படை பில்பைஸை முற்றுகையிட்டது. பில்பைஸ் நகருக்கு, சிறு உயரமுள்ள சுவர்தான் அரண். அதற்கு அகழியும் இல்லை. வேறு வலுவான பாதுகாப்பு வசதிகளும் கிடையாது. ஆயினும் அதனுள் இருந்தபடி மூன்று மாத காலம் அந்தக் கூட்டணிப் படையை எதிர்த்து சமாளித்துப் போராடினார் ஷிர்குஹ். இரவும் பகலுமாக சண்டை நிகழ்ந்தது. ஆயினும் ஃபாத்திமீ-பரங்கியர் படையினரால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.
இந்த நிலையில்தான், இங்கு நிகழ்ந்த அனைத்தையும் அறிந்துகொண்ட நூருத்தீன் அங்கு சிரியாவில் தமது யுத்த தந்திரத்தை பிரயோகித்தார்.
1164 ஆம் ஆண்டு ‘அர்தா ஆண்டு (the year of Artah)’ என்று பெயர் பெற்றது; அர்தா, ஹாரிம், பன்யாஸ் நகரங்களைக் கைப்பற்றி நூருத்தீன் பிரம்மாண்டமாக வென்றார் என்று பார்த்தோம் இல்லையா? அங்கு நூருத்தீன் கொட்டிய வெற்றி முரசில் இங்கு அமால்ரிக்கிற்கு நெறிகட்டியது. அதை மோசமாக்க மேலும் ஒரு காரியம் செய்தார் நூருத்தீன்.
போரில் கொல்லப்பட்ட பரங்கியர்களின் தலைகள் சிலவற்றையும் சிலுவை பொறிக்கப்பட்ட அவர்களது பதாகைகளையும் மூட்டை கட்டி, நம்பகமான தம் தூதுவன் ஒருவனிடம் கொடுத்து, பில்பைஸிலிருந்த ஷிர்குஹ்விடம் அனுப்பி வைத்தார்.
‘உடனே பில்பைஸுக்குப் போ. எப்படியேனும் அதனுள் நுழை. இந்த வெற்றி விருதுகளை ஷிர்குஹ்விடம் அளி. இறைவன் நமக்கு வெற்றியை அருளியுள்ளான் என்று தகவல் தெரிவி. அவர் இவற்றை பில்பைஸின் அரணில் கட்டித் தொங்க விடட்டும். ஏக இறை மறுப்பாளர்களான அந்த எதிரிகள் மத்தியில் அக்காட்சி அச்சத்தை ஏற்படுத்திவிடும்’
அது மிகச் சரியாக வேலை செய்தது. வடக்கே சிரியாவில் பரங்கியர்களுக்கு ஏற்பட்ட தோல்வியும் பெருந்தலைகள் கைதான செய்தியும் இங்கு பில்பைஸில் தொங்கிய பரங்கிப் படையினரின் தலைகளும் அமால்ரிக்கையும் அவரது படையையும் பெரிதும் பாதித்தன. உற்சாகம் குன்றி, சோகம் சூழ்ந்து, கவனம் சிதைந்தனர். பில்பைஸின் முற்றுகையை முடித்துக்கொண்டால் போதும் என்ற முடிவுக்கு வந்தார் அமால்ரிக். ஷிர்குஹ்வுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் பேசினார். இறுதியில், எகிப்தை ஷவாரிடம் விட்டுவிட்டு அமால்ரிக்கும் பரங்கியரும் ஜெருசலத்திற்கும் ஷிர்குஹ்வும் அவரது படையினரும் சிரியாவுக்கும் திரும்பிவிட வேண்டும் என்று முடிவானது. வெற்றி-தோல்வியற்ற இந்த உடன்படிக்கையை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
oOo
பில்பைஸிலிருந்து வெளியேறும் நேரம். தம் படை வீரர்களை முதலில் செல்லவிட்டு, அவர்களுக்குப் பின்னே பாதுகாவலாக நின்றிருந்தார் அஸாதுத்தீன் ஷிர்குஹ். ஃபாத்திமீக்களும் பரங்கியர்களும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். பரங்கிப் படைவீரன் ஒருவன் ஷிர்குஹ்வை நெருங்கினான், “அருகே பரங்கியர்கள் நிற்கும் தைரியத்தில் அந்த முஸ்லிம்கள் உமக்குத் துரோகம் இழைத்துவிடக் கூடும் என்ற அச்சம் உமக்கு இல்லையா?”
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவ்விதம் அவர்கள் செய்வார்களாயின் நீ இதற்கு முன் காணாததைக் காண்பாய். நான் பரங்கியர்களுடன் எந்தளவு மூர்க்கமாகச் சண்டையிடுவேன் என்றால், என்னால் எத்தனை பரங்கியர்களைக் கொல்ல முடியுமோ அத்தனை பேரைக் கொன்றுவிட்டே மாய்வேன். அதன் பிறகு மன்னர் நூருத்தீன் வந்து அவர்களது பகுதிகளைக் கைப்பற்றி, எஞ்சியவர்களைக் கொல்வார்.”
ஷிர்குஹ்வின் அந்த பதிலைக் கேட்ட பரங்கியன் தன் முகத்தின் மீது பாவனையால் சிலுவையை வரைந்துகொண்டான். “உம்மைப் பற்றியும் உமது ஆற்றலைப் பற்றியும் விவரிக்கும் எங்கள் பரங்கியர்கள் மிகைப்படுத்துகிறார்களோ என்று அவர்களை நாங்கள் கேள்விக்கு உள்ளாக்குவதுண்டு. ஆனால் அவர்கள் கூறியவை சரியே”. சொல்லிவிட்டு அகன்றான்.
பெரும் பாதிப்பு இன்றி பில்பைஸிலிருந்து திரும்பிவிட்ட போதும் ஷிர்குஹ்வுக்கு மனம் மட்டும் ஆறவே இல்லை.
‘எடுப்பார் கைப்பிள்ளைபோல் ஷவார் என்னைப் பயன்படுத்திக்கொண்டார். எகிப்தை வென்றார். தாம் இழந்த பதவியை மீட்டார். பின்னர் கறிவேப்பிலையைப் போல் என்னைத் தூக்கி எறிந்துவிட்டு, பொது எதிரியான அமால்ரிக்குடன் கூட்டணி சேர்ந்துகொண்டு என்னைத் தீர்த்துக்கட்டப் பார்த்தார். இப்பொழுது எகிப்தின் ஏகபோக அதிபதியாக அமர்ந்துவிட்டார்’ இந்த எண்ணங்கள் ஷிர்குஹ்வைப் பிடுங்கித் தின்றன.
அங்கு வஸீர் ஷவாருக்கும் ஷிர்குஹ்வைப் பற்றிய எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. அவர் தம்முடைய துரோகத்தை மன்னித்து மறந்துவிட்டு, அப்படியே இருந்துவிடப் போவதில்லை என்பதை ஷவார் நன்றாகவே அறிந்திருந்தார். எனவே தமது நிலையை பத்திரப்படுத்தும் காரியங்கள் சிலவற்றைத் திட்டமிட்டார்.
அதேபோல் சிரியாவில் ஷிர்குஹ்வும் சில முன்னேற்பாடுகளில் இறங்கினார்.
ஜெருசலத்தில் அமால்ரிக்கும் அடுத்த நடவடிக்கைகளுக்குத் தயாரானர்.
மூன்று ஆண்டுகள் கழித்து, 1167இல் மீண்டும் நைலுக்கான பந்தயம் தொடங்கியது. அது–
oOo
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 21 June 2023 வெளியானது
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License