சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 22

by
22. மண்ணாசையில் விழுந்த மண்

ந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில் இல்லை. இனி நாம்தான் அந்தாக்கியாவை நிர்வகிக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று அடுத்த நிலைக்கு நகர்ந்தது சிலுவைப் படை.

ரேமாண்டைத் தவிர மற்றவர்கள், குறிப்பாக பொஹிமாண்ட், அலெக்ஸியஸிடம் இந்நகரை ஒப்படைக்க விரும்பாதிருந்ததால் இப்பொழுது அவர் தமது முழுக் கட்டுப்பாட்டில் அந்தாக்கியாவைக் கொண்டுவருவதற்குக் காரியத்தில் இறங்கினார். போப் அர்பன் II-வின் உரையால் உந்தப்பட்டு, புனித நகரான ஜெருஸலத்தை மீட்டெடுக்க வேண்டும்; புனிதப் போர் புரிய வேண்டும் என்று மேற்குலக லத்தீன் கோமான்களும் சீமான்களும் படையெடுத்து வந்திருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரின் மனத்துக்குள்ளும் வளம் நிறைந்த கிழக்கத்தியப் பகுதிகளில் தங்களுக்கென மாநிலமோ, மாகாணமோ அமைத்துக்கொண்டு, மன்னர்களாய் ராஜாங்கம் அமைக்க வேண்டும் என்ற ஆசை வியாபித்திருந்தது என்று முன்னரே பார்த்தோமில்லையா? இப்பொழுது முஸ்லிம்களின் ஆட்சியின் கீழிருந்த நைக்கியா, அந்தாக்கியா என ஒவ்வொன்றாகக் கைப்பற்ற ஆரம்பித்தவுடன் ஒளிவு மறைவின்றி ‘சொந்த ராஜாங்க ஆசை’ அவர்களிடம் வெளிப்பட்டது.

தமது வீரர்களும் தமது தலைமையும் அந்தாக்கியாவின் வெற்றிக்குப் பெரும் பங்கு வகித்திருக்க, ஆரம்பத்திலிருந்தே தமது இரண்டு கண்களும் பதிந்திருந்த அந்நகரை, புனித அந்தஸ்துடைய அந்தாக்கியாவை பொஹிமாண்ட் எப்படி விட்டுத்தருவார்? தமது அதிகாரத்தில் அந்நகரைக் கொண்டு வராதவரை அடுத்து இம்மியும் அவர் நகர்வதாக இல்லை. அவர்கள் மத்தியில் ஏறக்குறைய ஒரு வில்லனைப் போன்ற ஒரு தோற்றம் அவருக்கு அமைந்தது. ரேமாண்டோ தமக்குள் இருந்த அதிகார ஆசையை மறைத்துக்கொண்டு சிலுவைப் போரின் தன்னலமற்ற வீரராகவும் புனித இலட்சியம் மிக்கவராகவும் தம்மை வெளிக்காட்டிக் கொண்டார். ஆனால், புனித ஈட்டி நிகழ்வில் பீட்டருக்குப் பரிபூரண ஆதரவைத் தெரிவித்ததற்கும் அதில் முழு நம்பிக்கையுடன் திகழ்ந்ததற்கும் ரேமாண்டின் சுயநலமும் காரணம் என்கிறார்கள் கிறித்தவ வரலாற்று ஆசிரியர்கள்.

புனித ஈட்டியின் அற்புதத்தைக் கண்டு பீட்டரைப் பின்பற்றியவர்களும் அவருடைய ஆதரவாளர்களும் தனியொரு சமய மரபுக்குழுவாகவே ஆகிவிட்டனர். ரேமாண்டும் அந்த ஈட்டியின்மீது பக்தியுடன் பீட்டரின் தலையாய ஆதரவாளராய் ஆகிவிட்டார். இருவரின் புகழுக்கும் முக்கியத்துவத்துக்கும் அவர்களின் பரஸ்பர பிரச்சாரச் செயல்பாடுகள் பெரும் உதவி புரிந்தன. ‘அப்பட்டமான தோல்வியைப் பெருவெற்றியாக மாற்றியதே அந்த ஈட்டிதான்’ என்ற ரேமாண்டின் பிரச்சாரத்திற்குப் பெரும் ஆதரவு பெருகியது. அதே நேரத்தில் பீட்டரோ, தமக்கு மென்மேலும் அசரீரி வருவதாகக் கூறி, தம்மை தேவனின் பிரதிநிதியாகவே பாவித்துச் செயல்படத் தொடங்கினார். “சிலுவைப் படையின் தனிப்பெரும் தலைவராக ரேமாண்டைத் தேர்ந்தெடுப்பதற்காகவே அவருக்குப் புனித ஈட்டி வழங்கப்பட்டது. செயிண்ட் ஆண்ட்ரூ இதை எனக்குத் தெரிவித்தார்” என்று புது அறிவிப்பெல்லாம் வெளியிட்டார் பீட்டர்.

தாம் உயிருடன் இருக்கும்போதே பாதிரியார் அதிமார் அந்த ஈட்டியின் நம்பகத்தன்மையில் சந்தேகம் கொண்டிருந்தார் என்று பார்த்தோமில்லையா? அவர் இறந்ததும் புனித ஈட்டி கண்டெடுக்கப்பட்ட அதே குழியில் அவர் புதைக்கப்பட்டார். அடுத்த இரண்டாம் நாள் தம்மிடம் அதிமாரின் ஆவி பேசுவதாகத் தெரிவித்தார் பீட்டர். வெகு புத்திசாலித்தனமான திட்டம் அது. தம்மீதும் ஈட்டியின் மீதும் சந்தேகம் எழுப்பியவரை ஈட்டியைத் தோண்டிய குழியிலேயே புதைத்து, சமாதி கட்டி அவரே தம்மிடம் பேசுவதாகக் கூறிய பீட்டரின் சாமர்த்தியத்தை எப்படி வியக்காமல் இருப்பது?

‘அந்த ஈட்டி மெய்யானதுதான் என்று தாம் இப்பொழுது மரணத்திற்குப்பின் அறிந்துகொண்டதாகவும் அதைச் சந்தேகப்பட்ட பாவத்திற்காகத் தமது ஆவி கடுமையாகச் சாட்டையால் அடிக்கப்பட்டும் தீயினால் சுடப்பட்டும் தண்டிக்கப்படுவதாக’ பாதிரியார் அதிமார் தெரிவித்ததாக, பீட்டர் அறிவித்தார். மக்கள் கூட்டம் அச்சத்துடன் அதை நம்பி நடுங்கியது. பீட்டர் அத்தோடு நிற்கவில்லை. ‘எல்லோரும் ரேமாண்டிற்குக் கட்டுப்பட்டு விசுவாசப் பிரமாணம் அளிக்க வேண்டும்; அவரே புதிய ஆன்மீகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்’ என்றும் அதிமாரின் ஆவி தெரிவித்தது என்று அடுத்து அறிவித்தார். பீட்டரின் அற்புத வாக்குகள் ஈட்டித் தந்த ஆதரவு ஒருபுறமிருக்க வேறு சில காரியங்களில் இறங்கினார் ரேமாண்ட்.

பொஹிமாண்டைத்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை; வேறு சில சில்லறைச் சாதனைகள் செய்வோம் என்று திட்டமிட்டு, தென் கிழக்கின் வளமான சம்மாக் பீடபூமியின் மீது படையெடுப்புகள் நிகழ்த்தி நிலப்பகுதிகளைக் கைப்பற்றினார். அந்தாக்கியாவின் வெற்றியை அடுத்து ஃபலஸ்தீன், புனித பூமி ஜெருஸலம் என்று அத்திசை நோக்கிப் பார்வையைக் குவித்திருந்த சிலுவைப் படையினர், ‘இதற்கென்ன இப்பொழுது அவசியம்? கால தாமதமாகிறதே’ என்று எழுப்பிய முணுமுணுப்பை அவர் பொருட்படுத்தவில்லை. காரணம், எப்படியேனும் தமக்கென ஒரு ராஜாங்கத்தை உருவாக்கிவிட வேண்டும், பொஹிமாண்டிற்கு சவால் விட வேண்டும் என்ற பேராவல்.

விளைவாக, அந்தப் பிராந்தியத்தின் முக்கிய நகரமான ‘மர்ரத்’ முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. வென்ற வேகத்தில், அங்குக் கிறித்தவ மதமாற்றமும் பள்ளிவாசல்களைப் படைக் கொட்டடிகளாக மாற்றுவதும் நடைபெற்றன. ஆனால், விரைவில் இலத்தீன் படையினருக்குத் தீவிர உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. பசியின் கோரப்பிடிக்கு ஆளானது சிலுவைப் படை. அது, அந்த இக்கட்டு, அந்தக் கிறித்தவர்களின் கோர முகத்தை வெளிப்படுத்தியது. எந்தளவு அவர்கள் அநாகரிகமானவர்கள், காட்டுமிராண்டிகள் என்ற உண்மை வரலாற்றில் பதிவானது. சிலுவைப் படையைச் சேர்ந்த ஒருவன் அளித்துள்ள வாக்குமூலம் அந்த அசிங்கத்தை உணரப் போதுமானது.

“நாங்கள் கடுமையான பசியினால் துன்பப்பட்டோம். பட்டினியால் மதியிழந்த பலர், சாராசனியரின் பிணங்களின் பிட்டத்தை அறுத்து, அந்தச் சதையைத் துண்டுகளாக்கிச் சமைத்து உண்டோம்.”

முஸ்லிம்களை, ‘சாராசனியர் (Saracens)’ என்ற அவமரியாதைச் சொல்லால்தான் குறிப்பிட்டனர். அரபியோ, துருக்கியரோ, எவரோ, அவர் முஸ்லிமா? எனில், அவர் சாராசனி.

உணவுப் பஞ்சத்தில் மனிதன் கண்டதையும் தின்று உயிர் பிழைக்க நினைக்கலாம். ஆனால் இறந்த மனிதனின் சதையைக் கண்டதுண்டமாக்கி, அதுவும் பிட்டத்துச் சதையைத் துண்டுகளாக்கி, சமைத்து உண்ணும் அளவிற்குத் துணிந்திருந்தால் எந்த அளவிற்கு அவர்களது மனத்தில் முஸ்லிம்களின்மீது வன்மமும் வெறுப்பும் குடிகொண்டிருந்திருக்க வேண்டும்? வாசிப்பதற்கே வயிற்றைக் குமட்டும் இந்தச் செயல் முஸ்லிம்கள் மத்தியில் இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தின்மீது பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துவிட்டது. மானம் பங்கமாகிவிடும் என்று அஞ்சிய உள்ளூர் அமீர்கள் தாமாகவே உடன்படிக்கைக்கு முன்வந்து விட்டனர்.

oOo

மாதங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. பரங்கியர் படைத் தலைமை மத்தியில் அந்தாக்கியாவின் உரிமை யாருக்கு என்பதில் உடன்பாடு ஏற்படாமல் காலம் கழிந்து கொண்டிருந்தது. சிலுவைப் படையினர் பொறுமை இழந்தனர். ‘தலைவர்களே! உங்களது பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்து நாம் ஜெருஸலம் நோக்கி முன்னேற வேண்டியதைப் பாருங்கள்’ என்று சலசலத்தனர். தலைவர்கள் மத்தியில் நிலவிய ஆட்சி அதிகார ஆசை அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. அந்தாக்கியாவின் கட்டுப்பாட்டிற்குத்தான் புனித ஈட்டியின் நாயகன் ரேமாண்டும் போட்டியிடுகிறார் என்று புரிய வந்ததும் படையில் இருந்த ஏழை எளிய மக்கள் கலகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

கி.பி. 1099ஆம் ஆண்டு ஜனவரி மாதம். மர்ரத் நகரின் தற்காப்புச் சுவரின் கற்களை அவர்கள் தங்களின் வெறுங் கையாலேயே பிடுங்கி எறிய ஆரம்பித்தனர். நிலைமை மோசமடைந்தது. அந்தக் கட்டத்தில்தான், ‘சிலுவைப் படையின் ஏகோபித்த தலைமையும் வேண்டும்; அந்தாக்கியாவும் வேண்டும் என்பது இனி சரிப்படாது’ என்பதை உணர்ந்தார் ரேமாண்ட். தமது கனவுகளையும் ஏமாற்றத்தையும் பின்னால் தூக்கி எறிந்துவிட்டு, புனிதப் போராளியாக புதிய உருவெடுத்து, எளிய ஆடை அணிந்துகொண்டு, வெறுங்காலுடன், ‘இதோ, இனி புனிதப் போர்தான் எனது முன்னுரிமை’ என்பதைப்போல் மர்ரத் நகரைவிட்டு நடையைக் கட்டினார்.

சிலுவைப் படைத் தலைவர்களுக்குள் புதைந்திருந்த பேராசைகள் எதுவாக இருந்த போதிலும் கிரேக்கப் படைகள் வந்து சேராத அச்சூழ்நிலையில், தாங்கள் அடுத்துத் தங்களது அடிப்படை இலக்கான ஜெருஸலம் நோக்கி முன்னேறுவதாக இருந்தால், கைப்பற்றிய அந்தாக்கியாவைத் தங்களின் முக்கியமான தலைவர் ஒருவரிடம்தான் ஒப்படைத்துவிட்டு நகர வேண்டும் என்ற கட்டத்தை அவர்கள் எட்டினர். ஒருவழியாக பொஹிமாண்ட் அந்தாக்கியாவின் ஆட்சிக்கான அதிபரானார்.

முன்னர், எடிஸ்ஸாவும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் பால்ட்வினின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தன; கிழக்கு தேசத்தில் சிலுவைப் படையின் முதல் ராஜாங்கம் எனப்படும் எடிஸ்ஸா மாகாணம் உருவானது என்று பதினேழாம் அத்தியாயத்தில் பார்த்தோமில்லையா? இப்பொழுது அவர்களின் இரண்டாவது அரசு அந்தாக்கியாவில் அமைந்தது! ஆனால் இவை யாவும் பைஸாந்தியர்கள்-பரங்கியர்கள் இடையிலான உறவில் நீடித்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

போராளி வேடம் பூண்டு ரேமாண்ட் எளிமையைத் தேர்ந்து கொண்டதில் படையினரிடம் அவருக்குப் பெருமளவு ஆதரவு பெருகியது. இருப்பினும் சக தலைவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு மிகுந்த கவனமுடன் அவர் திட்டம் தீட்டினார். நார்மண்டியின் ராபர்ட், டான்க்ரெட் ஆகியோருக்கு முறையே 10,000; 5,000 பொற்காசுகள் அளித்ததும் அவர்கள் தங்களது ஆதரவுக் கரத்தை முழுமையாக ரேமாண்டுக்கு நீட்டிவிட்டார்கள். காட்ஃப்ரே மட்டும் அதற்கெல்லாம் இணங்காமல் தனித்தே நின்றார். ஆயினும் அனைவரும் அணி வகுத்தனர். தெற்கே லெபனான் நோக்கி நகர்ந்தது சிலுவைப் படை

‘புனிதப் போரும் ஜெருஸலமும் தாம் என் இலட்சியம்’ என்று ரேமாண்ட் நிரூபிக்க விரும்பினாலும் அவரது உள்மனத்தில் தகித்த ராஜாங்க ஆசை அடங்கவில்லை. எனக்கொரு மாகாணம் வேண்டும், அதில் நான் அரசனாக ஆட்சி செலுத்த வேண்டும் என்று அவரது மனம் சப்புக் கொட்டியபடியே இருந்தது. எனவே போகிற போக்கில், லெபனானி்ல் உள்ள அர்க்காவை முற்றுகையிட்டார். அதைப் பிடித்துவிட்டால், அடுத்துள்ள திரிப்போலி நகரை மிரட்டி மண்டியிட வைக்கலாம் என்பது அவரது திட்டம். முற்றுகையில் இரண்டு மாதம் கழிந்தது. படை ரேமாண்டிடம் பொறுமையிழந்தது.

ரேமாண்டின் செல்வாக்கு வளர்வதற்குச் சாதகமாக இருந்த பீட்டரின் நிலையும் பெரும் சோதனைக்கு உள்ளானது. நாள் செல்லச் செல்ல, பீட்டரின் அறிவிப்புகள் அனைத்தும் கிறுக்குத்தனமான உளறல்கள் என்பதை அனைவரும் உணர ஆரம்பித்தனர். அந்த அவநம்பிக்கை பெரும் பிரச்சினையாக உருவெடுப்பதற்கு, பீட்டரின் மற்றுமோர் உளறல் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. ‘படையினர் பாவங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இத்தனை ஆயிரம் பேரைக் கொல்லும்படி இயேசு எனக்கு அறிவித்தார்’ என்று அவர் தெரிவித்ததுதான் தாமதம் மடை உடைந்தது. பீட்டரும் புனித ஈட்டியும் படையினர் மத்தியில் புனிதத்தை இழந்தனர். நார்மன் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் அர்னல்ஃப் என்பவருக்குத் தமது ஃபிரஞ்ச் பகுதியினரின் ஆதிக்கத்தைப் படையில் ஓங்கச் செய்ய வேண்டும் என்ற சுயநலம் இருந்தது. அவர் இந்த வாய்ப்பைக் கச்சிதமாகப் பிடித்துக்கொண்டு பீட்டருக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

பிரச்சினை முற்றுவதையும் உச்சத்தை எட்டுவதையும் உணர்ந்தார் பீட்டர். சாமர்த்தியம் என்று நினைத்துக்கொண்டு அடுத்து ஒரு காரியம் புரிந்தார். “எனது நேர்மையையும் நாணயத்தையும் நிரூபிப்பேன். தீ புகுவேன். வெளிவருவேன். தீ என்னைத் தீண்டாது. உடம்பில் புண் என்று எதுவும் ஏற்படாது. அது உங்களுக்கு அறிவிக்கும் என் வாக்குச் சுத்தத்தை. அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்” என்று அறிவித்துவிட்டு நான்கு நாள் விரதம் இருந்தார்.

அன்று புனித வெள்ளிக்கிழமை. ஒலிவ மரக் கிளைகள் நான்கு அடி உயரத்தில் இரண்டு அடுக்காகவும் ஓர் அடி இடைவெளியுடனும் பதின்மூன்று அடி நீளத்துடனும் அடுக்கப்பட்டு, தீ மூட்டப்பட்டது. அது கொழுந்துவிட்டு எரிந்தது. எளிய மேலாடை ஒன்றை அணிந்துகொண்டு, புனித ஈட்டியின் மாதிரி ஒன்றை ஏந்திக்கொண்டார் பீட்டர். சிலுவைப் படையினர் கூட்டமாக வேடிக்கைப் பார்க்க, அந்தத் தீயினுள் புகுந்தார்.

என்னாகும்? நெருப்புச் சுட்டது. தீ தன் பணியைச் செவ்வனே செய்தது! தோல் கருகி, வெளிவந்தார் பீட்டர். ‘தீ உன்னைத் தீண்டாது என்றாய். இப்படிக் கருகிப் போய் வெளி வந்திருக்கிறாய். எனில் நீ மகா பொய்யன், பாவி’ என்று சொல்லிவிட்டது சிலுவைப் படை. தீயினால் சுட்ட சதை உள்ளும் ஆறாமல் புறத்திலும் ஆறாமல் அடுத்த பன்னிரண்டாம் நாள் மரணமடைந்தார் பீட்டர்.

தீர்க்கதரிசனம் என்று அத்தனை நாளும் அவர் சொல்லிவந்த விஷயங்களின் மீதும் புனித ஈட்டியின் மீதும் சிலுவைப் படை கொண்டிருந்த நம்பிக்கை அத்துடன் விழுந்து நொறுங்கியது. கூடவே கோமான் ரேமாண்டின் மதிப்பும் கீர்த்தியும் அதள பாதாளத்தில் வீழ்ந்தன. ‘இங்கு எதற்கு வீண் முற்றுகை?’ என்று படையில் கூச்சலும் எதிர்ப்பும் கிளம்பின. அத்துடன் அவர் அர்க்காவின் முற்றுகையைக் கைவிட,

கி.பி. 1099 ஆம் ஆண்டு மே மாதம். திரிபோலியில் இருந்து புனித நகர் ஜெருஸலம் நோக்கி நகர்ந்தது முதலாம் சிலுவைப் படை.

(தொடரும்)

-நூருத்தீன்

Image extract from: Gustave dore crusades barthelemi undergoing the ordeal of fire.jpg (Public Domain)

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் வெளியானது


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment