இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா – 5

by admin

5. காதியானி

அன்று இஸ்லாமிய சமுதாயத்தில் மண்டிக் கிடந்த மூடப் பழக்க வழக்கங்களை நீக்கி,

சமுதாயத்தை சீர்திருத்துவதே தாவூத்ஷாவின் முதல் நோக்கமாகவும் ஒரே நோக்கமாகவும் இருந்தது. அவரது பேச்சும் மூச்சும் சமுதாயச் சீர்திர்த்தமே.

அவர் செய்ய விரும்பிய சீர்திருத்தங்கள் :

பள்ளிவாசல்களில் “குத்பா” சொற்பொழிவு தமிழில் நடக்க வேண்டும். “அநேகருக்கு அருத்தம் விளங்காத அரபு மொழியில் ‘குத்பா’ ஓதும்போது, அந்தோ, தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அஞ்ஞானத்தில் உறங்கி விழாமல் வேறு என்ன செய்வார்கள்?” என்று கேட்டார்.

தர்காகளில் வணக்கம் கூடாது.

தர்காகளில் நேர்ந்து கொள்ளக் கூடாது.

முஸ்லிம்கள் மந்திரித்துக் கொள்ளக் கூடாது; வேப்பிலை அடிக்கக் கூடாது; கறுப்புக் கயிறு கட்டக் கூடாது; நாள், நட்சத்திரம் பார்க்கக் கூடாது.

முஸ்லிம் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும்.

அரபுக் கல்லூரிகள் யாசகர்களை உருவாக்கும் பயிற்சி சாலைகளாக இருக்கக் கூடாது. வாழ்க்கைக் கல்வி கற்றுத் தர வேண்டும்.

உலமாக்கள்

இஸ்லாத்தில் சொல்லப்படாத இந்தப் பழக்க வழக்கங்களுக்கு எல்லாம் உலமாக்களே காரணம் என்று தாவூத்ஷா நினைத்தார். எனவே, ஆணிவேரை வெட்டி எறிய முனைந்தார். உலமாக்களை எதிர்த்துக் கடுமையாக எழுதினார்; பேசினார்; “பிறரிடம் கையேந்தும் பிச்சைக்காரர்கள்” என்று ஏசினார்.

உலமாக்கள் விடுவார்களா? சிலிர்த்து எழுந்தார்கள்! ஒன்று திரண்டார்கள்! ‘விட்டேனா, பார்’ என்று தாவூத்ஷாவுடன் மோதினார்கள்.

வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. தனது கருத்துகளுக்கு திருக்குர்ஆனையே ஆதாரமாகக் காட்டினார், தாவூத்ஷா.

“ஒவ்வொரு தூதரும் தம் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு அவர்களின் மக்களின் மொழியைக் கொண்டே நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்” என்ற திருக்குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டினார்.

அல்லாஹ் ஒருவனே வணக்கத்துக்கு உரியவன் என்று இஸ்லாம் வற்புறுத்துவதையும், அல்லாஹவைத் தவிர வேறு யாரிடமும் இணை வைக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுவதையும் படித்துக் காட்டினார்.

சகுனம் பார்ப்பது, குறி பார்ப்பது, ஆருடம் பார்ப்பது எல்லாம் இஸ்லாத்தில் விலக்கப்பட்டவை, “சோதிடனிடம் செல்லுபவன் குர்ஆனை விட்டு நிச்சயமாக விலகிச் சென்றவன் ஆவான்” என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதை எடுத்து நீட்டினார்.

இஸ்லாம் பெண்களுக்கு சமத்துவம் அளித்திருக்கிறது. அதிலிருந்து கல்வி விலக்கப்படவில்லை. “சீனாவுக்குப் போயாவது கல்வி கற்றுக் கொள்ளுங்கள்” என்று, நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது பெண்களையும் சேர்த்துத்தான் என்று தாவூத்ஷா விளக்கம் சொன்னார்.

“சீனாவுக்குப் போயாவது கல்வி கற்றுக் கொள்” என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது சமயக் கல்வியை அல்ல; வாழ்க்கைக் கல்வியை. எனவே, அரபுக் கல்லூரிகளில் வாழ்க்கைக் கல்வியும் கற்பிக்க வேண்டும் என்று தாவூத்ஷா கூறினார்.

இஸ்லாத்தில் புரோகிதர்களுக்கு இடமே இல்லை என்று தாவூத்ஷா ஆணித்தரமாக அடித்துச் சொன்னார். இதற்கும் குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டினார்.

காதியானி

தாவூத்ஷா திருக்குர்ஆனில் இருந்தே பதில்களைக் கூறியதால், உலமாக்களால் அதை மறுக்க இயலவில்லை. அதேநேரம் அவர்களால் சும்மா இருக்கவும் முடியவில்லை. தாவூத்ஷாவை அடிக்க வேறு ஒரு ஆயுதத்தை கையில் எடுத்தார்கள். அதுதான் “காதியானி”!

“தாவூத்ஷா ஒரு காதியானி” என்று உரக்கக் கூவினார்கள்! ஒன்று கூடி முழங்கினார்கள்! ‘ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால், உண்மை போல ஆகிவிடும்’ என்பது போல, “தாவூத்ஷா ஒரு காதியானி…காதியானி…” என்று கேட்போர் காது கிழியும் அளவுக்கு, கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொன்னார்கள்!

தாவூத்ஷாவை லண்டனுக்கு அழைத்துப் போன காஜா கமாலுதீன் ஒரு காதியானி!

லாகூரைச் சேர்ந்த மெளலவி முகம்மது அலி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்த திருக்குர்ஆனை தாவூத்ஷா தமிழில் மொழி பெயர்ப்பதாக இருந்தது. இந்த முகம்மது அலி ஒரு காதியானி!

இந்த இரண்டையும் துருப்புச் சீட்டு போல, உலமாக்கள் கெட்டியாகக் கையில் பிடித்துக் கொண்டார்கள்!

யார் “காதியானி”?

“காதியானி” என்பவர் யார்?

பஞ்சாப்பில் காதியான் என்ற ஊரில் மிர்சா குலாம் அகமது என்பவர் 1835 இல் பிறந்தார். இவர் நீதிமன்ற எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டே, சமயப் பிரசாரமும் செய்தார். தன்னை ஒரு சீர்திருத்தவாதி என்று கூறினார். 1891 இல் “நானும் ஒரு நபி” என்றும், “எனக்கும் இறைவனிடமிருந்து ‘வஹீ’ (செய்தி) வருகிறது” என்றும் அறிவித்தார்.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே இறுதி நபி என்று கூறியிருக்கிறார்களே?” என்று கேட்டார்கள். “அவருக்கு முன்பு இலட்சத்து 24 ஆயிரம் நபிகள் (இறைத்தூதர்கள்) தோன்றியிருக்கிறார்கள். காலத்துக்குக் காலம், இனத்துக்கு இனம் நபிகள் தோன்றினார்கள். ‘நானே இறுதித் தூதர்’ என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது, தமது அரபி இனத்துக்கு மட்டுமே.மற்ற இனங்களில் நபிகள் தோன்ற மாட்டார்கள் என்று அதற்குப் பொருளல்ல” என்று மிர்சா குலாம் அகமது விளக்கம் சொன்னார்.

தன் மகன் இபுராகிம் காலமானபோது “அவர் இருந்திருந்தால் நபி ஆகி இருப்பார்” என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் எடுத்துக் காட்டினார்.

இவரைப் பின்பற்றியவர்கள், இவர் பிறந்த ஊரின் பெயரால், “காதியானிகள்” என்று சொல்லப்பட்டார்கள். இவரது பெயரால் “அகமதியர்” என்றும் அழைக்கப்பட்டார்கள்.

1908 இல் அவர் லாகூரில் காலமானார். அதற்கு முன் 4 “கலிபா”க்களை (சமயத் தலைவர்கள்) அவர் நியமித்தார். 3 வது கலிபா, மெளலவி முகம்மது அலி; 4வது கலிபா, காஜா கமாலுதீன்!

லண்டனில் ஓக்கிங் என்ற இடத்தில் பள்ளிவாசல் ஒன்று இருக்கிறது. அங்கு இருந்து ஐரோப்பாவில் பிரசாரம் செய்ய காஜா கமாலுதீன் 1913 இல் லண்டனுக்குப் போனார். அங்கு “இஸ்லாமிக் ரெவியூ” என்ற ஆங்கில இதழையும் 1916 இல் தொடங்கி, தானே ஆசிரியராக இருந்து நடத்தினார். அவர் தமிழ்நாட்டுக்கு வந்த போதுதான் தாவூத்ஷாவை லண்டனுக்கு அழைத்துப் போனது.

காதியானிகள் ‘நாங்களும் முஸ்லிம்கள் தான்’ என்று கூறிக் கொண்டாலும், முஸ்லிம்கள் இதை ஏற்கவில்லை. 1965 இல் இரு காதியானிகள் ஹஜ் செய்யச் சென்றபோது மக்காவில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். (முஸ்லிம்கள் மட்டுமே மக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.)

காதியானி நகரம் இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது. இதனால் பாகிஸ்தானில் காதியானிகள் நல்ல செல்வாக்குடன் இருந்தார்கள். அமைச்சர்களாக, இராணுவத் தளபதிகளாகக் கூட விளங்கினர். 1974 இல் பிரதமர் பூட்டோ “காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர். சிறுபான்மையினர்” என்று சட்டம் கொண்டு வந்தார். அதனால் காதியானிகள் செல்வாக்கும் அதிகாரமும் இழந்தார்கள்.

படை திரண்டது!

தாவூத்ஷாவை எதிர்ப்பதற்கு என்றே சைபுல் இஸ்லாம், அல் கலாம், தாஜுல் இஸ்லாம், முசல்மான் போன்ற இதழ்கள் தோன்றின.

“சென்னையில் வெளிவரும் ‘சைபுல் இஸ்லாம்’, ‘அல்கலாம்’, தென்காசியில் வெளிவரும் ‘முசல்மான்’, ஈரோட்டில் வெளிவரும் ‘தாஜுல் இஸ்லாம்’ ஆகிய நான்கு இதழ்களை ‘இஸ்லாமிய சமய சீர்திருத்த இதழ்கள்’ என்றும், செகண்ட் லைன் பீச்சிலிருந்து வெளிவரும் பத்திரிகையோ, (தாருல் இஸ்லாம்) தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், காதியானி சமயப் பிரசாரத்துக்காகவுமே ஏற்பட்டது” என்றும் “தாஜுல் இஸ்லாம்” (1925 ஆகஸ்டு இதழில்) எழுதியது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துத் தாவூத்ஷாவே தனது இதழில் பலமுறை எழுதியிருக்கிறார். “நான் காதியானி அல்ல அல்ல” என்று கரடியாக கத்தினார். ஆனால். அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆயிற்று. ‘ அவர் காதியானிதான்’ என்று உலமாக்கள் தொடர்ந்து உரக்கக் கூவினார்கள்.

ஆனால், “இதுதான் சத்தியமாகும். யான் எப்பொழுதும் எந்த விதமாகவும் மிர்சா சாகிப்பை ஒப்புக் கொண்டதே இல்லை” என்று “தாருல் இஸ்லாம்” பத்தாம் ஆண்டு நிறைவு மலரில் தாவூத்ஷா எழுதியிருக்கிறார். அவரது திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை வெளியிட காதியானி இயக்கம் பண உதவி செய்ய முன் வந்தபோது பெற்று கொள்ள மறுத்து விட்டதையும் அதே மலரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாவூத்ஷாவை எதிர்க்க “இஸ்லாத்தின் பாதுகாப்புச் சங்கம்” என்று ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டது. அந்த சங்கத்தார் “ஹிபாஜத்துல் இஸ்லாம்” என்ற மாத இதழை வெளியிட்டார்கள். “சத்திய பிரசாரம்” என்ற நூலையும் வெளியிட்டார்கள்.

அங்கும் தொடர்ந்தார்கள்!

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட நிதி திரட்ட தாவூத்ஷா மலேசியாவுக்குப் போனார். இந்த உலமாக்கள் அங்கும் சென்றார்கள். அங்குள்ள முஸ்லிம் செல்வந்தர்களைச் சந்தித்து, “தாவூத்ஷா ஒரு காதியானி! காபீர்! (இறைவனையும், இறைத்தூதரையும் மறுப்பவர்.) அவருக்கு எந்த உதவியும் செய்யதீர்கள்!” என்று தடுத்தார்கள்.

அவர் சிங்கப்பூருக்கு சென்ற போதும் இதே கதைதான். அங்கு முகம்மது இஸ்மாயில் மரைக்காயர் என்பவர் ‘தாவூத்ஷா ஒரு காதியானி! காபீர்! அவருக்கு எந்த முஸ்லிமும் வரவேற்புக் கொடுக்கக் கூடாது! அவரது கூட்டங்களுக்குப் போகக் கூடாது! அவருக்கு நிதி உதவி செய்யக் கூடாது!’ என்று நோட்டீஸ் அடித்து, ஊரெங்கும் வழங்கினார். அது கையும் களவுமாகப் பிடிபட்டது போல ஆயிற்று. அவர் மீது தாவூத்ஷா வழக்குத் தொடர்ந்தார். “தாவூத்ஷா காதியானியும் அல்ல, காபீரும் அல்ல!” என்று நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்டது. முகம்மது இஸ்மாயில் மரைக்காயருக்கு 5,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது!

தாவூத்ஷா இலங்கைக்குப் போனார். அங்கும் உலமாக்கள் போனார்கள்! அங்கும் இதே வேலை!

இதனால் தாவூத்ஷா நொந்த மனத்துடன் வெறுங்கையோடு சென்னைக்குத் திரும்பினார்.

ஒரு பக்கம் உலமாக்களின் தாக்குதல்! இன்னொரு புறம் இதழ்களின் தாக்குதல்! மறுபுறம் வறுமையின் தாக்குதல்! இப்படி மும்முனைத் தாக்குதல் நடந்தும், தாவூத்ஷா நிலை குலைந்து விடவில்லை! தளர்ந்து விடவில்லை!! நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து நின்றார். திருக்குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

(தொடரும்)

நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா

ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்

Related Articles

Leave a Comment