இறுதி ஐயூபியின் இறுதிக் காலம்

ஷாம் தேசத்துப் படையெடுப்புக்குப் பின்னே மிஸ்ரிலே ஒரு சிறிது அமைதி நிலவியது. கலீஃபா தலையிட்டமையால் மிஸ்ர் சுல்தானுக்கும் ஷாம் சுல்தானுக்கும்

இடையே சமாதானம் ஏற்பட்டுவிட்டபடியால், மக்கள் சிறிதே திருப்தியுற்றுக் காணப்பட்டனர். எனினும், திமஷ்கின் சர்வாதிகார சுல்தான் அந் நாஸிர் யூசுபுக்கு மட்டும் பெரிய அதிருப்தியும் மிஸ்ரின் இரு சுல்தான்கள்மீது பெருங் குரோதமும் முளைத்துவிட்டன. அதிலும், சுல்தான் முஈஜுத்தீன் ஐபக்கின் மீது அவருக்கு அளவுகடந்த ஆத்திரம் ஜனித்தது. கலீஃபாவின் தலையீடு இல்லாவிட்டால் ஐபக்கை ஊதித் தொலைத்து விடலாமென்று கூட அவர் வெய்துயிர்த்துக் கொண்டிருந்தார். காலம் கொஞ்சம் கடக்கட்டுமென்று காத்துக்கொண்டு பொறுமையுடயிருந்தார் அச் சர்வாதிகாரி.

மிஸ்ரின் தலைநகரிலோ, இரு சுல்தான்களும் சேர்ந்தே அரசு செலுத்திக்கொண்டிருந்தார்கள். சென்ற நான்காண்டுகளாகத் திட்டம் போட்டுக்கொண்டிருந்த ஷஜருத்துர் இப்பொழுது சிறுகச் சிறுகவும், மெல்லமெல்லவும் தந்திட்டங்களை நிறைவேற்றி முடிக்க ஆரம்பித்துவிட்டார். முஈஜுத்தீனின் உடல் பொருள் ஆவியனைத்தையும் வெகு நாஜூக்கான முறையில் தமக்கு அடிமைப்படுத்திக் கொண்டுவிட்ட பிறகு, அவர் அடுத்தபடியாகக் கவனிக்க வேண்டியிருந்த முக்கிய அம்சம், அந்த கலீஃபாவின் நியமனம்பெற்ற ஐயூபிச் சிறுவர் மூஸாவென்னும் மலிக்குல் அஷ்ரபை இருக்கிற இடம் தெரியாமல் ஒழித்துக்கட்ட வேண்டியதாகவே இருந்துவந்தது.

ஒரு நாளிரவில் கன்னியாந்தபுரத்தின் சயன அறையிலே ஷஜருத்துர்ரும் முஈஜுத்தீனும் வீற்றிருந்தனர். அரசாங்க சம்பந்தமான எல்லாச் சிக்கல்களையும் அவர்கள் அவிழ்த்துக்கொண் டிருந்தார்கள். இனி மிஸ்ரின் ஆட்சியை எப்படித் திருத்தி யமைப்ப தென்பதைப்பற்றித் திட்டமிட்டுக்கொண் டிருந்தார்கள்.

“நாதா! இரட்டையராட்சி இன்னமும் நீடிக்கவேண்டுமென்றா தாங்கள் நினைக்கின்றீர்கள்? இதற்கொரு விமோசனமில்லையா?” என்று ஷஜருத்துர் சட்டென வினவினார்.

“ஷஜருத்துர்! அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கின்றாய்? நீதான் அதற்கொரு வழி சொல்ல வேண்டும்? கலீஃபாவினால் நியமிக்கப்பட்டவனாயிற்றே! என்பதற்காகவல்லவோ யோசிக்கிறேன்?” என்று முஈஜுத்தீன் கவலையுடன் கழறலாயினார்.

“செங்கோலைத் தாங்கிப் பிடித்திருக்கிற உங்களுக்கு ஒரு வழி புலப்படவில்லை போலும்! கேவலம், பெண்பிள்ளையாகிய எனக்கென்ன தெரியும்?”

“கேவலமாவது, பெண்பிள்ளையாவது! நீதான் உன்னை அப்படி யழைத்துக் கொள்கிறாய்! உன் கீர்த்தி பிரதாபம் ஷாம்வரையில் சென்று ஜொலிப்பதை நான் என் கண்ணாலேயே கண்டுவந்திருக்கிறேன். ராஜதந்திர நிபுணத்துவத்தில் மிகப்பெரிய மேதாவியாக விளங்கிய அமீர்தாவூதிடம் அவ்வித்தைகளை நீ நன்கு பயின்றிருக்கிறாய். இப்போது நம் முன்னேயுள்ள எல்லாப் பிரச்சனைகளையும் வெகு சுலபமாகத் தீர்ககும் வித்தைகளை நீ யொருத்தியே கற்றிருக்கிறாய. நான் வீண் முகஸ்துதியுடன் உன்னைப் பாராட்டிப் புகழவல்லை. ஆனால், உன்னைத்தவிர எனக்கு யுக்தி போதிக்கக்கூடியவர் வேறெவரும் இல்லையென்பதை நீயே நன்கறிந்திருக்கின்றாய். அந்த ஐயூபிச் சிறுவனை எப்படி ஒழித்துக்கட்டுவது? என்னும் ஒரே கவலைதான் என்நெஞ்சை அழுத்திக்கொண் டிருக்கிறது.ஏன் என்ன செய்யலாமென்பதற்கு நீ ஒரு வழியைச் சொல்ல மாட்டாயா?”

அமீர் தாவூதைப் பற்றித் திடீரென்று ஐபக் சுல்தான் ஞாபகப்படுத்தியதும், ஷஜருத்துர் எங்கோ சிந்தையைச் செலுத்திவிட்டார். அபூபக்ர் ஆதில் பட்டமேறுவதற்கு முந்திய தினத்தன்றும் அவர் வீழ்த்தப்படுவதற்கு முன்தினமும் அக் கிழஅமீரின் இல்லத்தில் நிகழ்ந்த வைபவங்க ளெல்லாம் ஷஜருத்துர்ரின் கண்முன்னே வந்து காட்சியளித்தன ஓர் உயிர்கூடச் சேதப்படாமல் ஒரு சுல்தானை வீழ்த்திவிட முடியுமென்றும், அப்படி முடியாமற் போனால் வேரூன்றிய பருமரத்தைக் கோடாரி கொண்டாவது வெட்டியெறிய வேண்டுமென்றும் பல வருஷங்களுக்கு முன்னே அக்கிழவர் தம்முடைய சகாக்களிடம் கூறிய வார்த்தைகளை ஷஜருத்துர் இப்போது நினைத்துக்கொண்டார். மானிடருள் மகத்துவ மிக்கவராகவும், தந்திரயுக்தியில் தலைசிறந்த நிபுணராகவும் விளங்கிய அப் பெரிய விருத்தாப்பியரை ஷஜருத்துர் தம் மனக்கண் முன்னே நிறுத்திக்கொண்டபடியால், கண்கலக்க முற்றார்.

“ஆம்! அவ் விருதாப்பிய தந்தை! என் வளர்ப்புப் பிதா! என்னை இவ்வளவு தூரத்துக்கு உயர்த்திவிட்ட மஹாத்மா! இறைவனே அவரது ஆவிக்குச் சதா சாந்தியை அளித்தருள்வானாக! அவர் இப்பொழுது உயிரு னிருந்தால், இந்தக் கதியெல்லாம் நேர்ந்திராவே!” என்று பெருமூச்செறிந்தார்.

சிறிது நேரம் மெளனம் நிலவியது. ஷஜருத்துர்ரின் மூளை மிகவேகமாய் வேலை செய்துக்கொண்டிருந்தது. முஈஜுத்தீனோ, தாடியைக் கோதிய வண்ணம் தந்தலையைத் தடவிக்கொண்டு ஷஜரின் முகத்தையே கூர்ந்து நோக்கினார்.

“புர்ஜீகள் இப்போது உங்கள் மீது பேரன்பும் பெரியதோர் அபிமானமும் கொண்டிருக்கிறார்களல்லவா?” என்றார் ஷஜர்.

“அப்படித்தான் நான் நினைக்கிறேன். மேலும், அனுபவமோ சாமார்த்தியமோ இல்லாத சிறுவன் மூஸாவை அவர்கள் வெறுத்துக்கொண்டும் வருகிறார்களென்று கருதுகிறேன்.”

“வெறுந் தோற்றத்தைக் கண்டு ஏமாறலாமா? நீறுபூத்த நெருப்புப்போல எந்த புர்ஜீயாவது நம்மீது பழைய துவேஷத்தை இன்னம் மனத்துள் பாராட்டிக்கொண்டிருந்தாலோ? நாம் வகுக்கிற எந்தத் திட்டமும் நடைபெறாமற் போவதுடன், நமக்கே பேராபத்தாய்ப்போய் முடிந்துவிடுமே!”

“அப்படியென்றால், இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது, செய்யக் கூடாது என்றா நீ அபிப்பிராயப்படுகிறாய்?”

“நான் அப்படியொன்றும் சொல்லவில்லையே! மூஸாவை புர்ஜீகள்வெறுக்கிறார்களென்பதை நாம் திட்டவட்டமாக எப்படிச் சொல்ல முடியும்? என்றுதான் யோசிக்கிறேன். மேலம் கலீஃபாவின் நியமனம் பெற்றவன் அவன் என்பதை புர்ஜீகள் முன்னம் பயன்படுத்திக் கொண்டுதானே கலகம் விளைத்தார்கள? இப்போதும் அம்மாதிரியொரு குழப்பத்தை உண்டுபண்ணி விடுவார்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்.”

“எவருமறியாமல் கபடமாக அவனைக் கொன்று தீர்த்து விட்டால், புர்ஜீகள் என்ன செய்வார்கள்? அல்லது கலீஃபாவேதான் என்ன செய்ய இயலும்?”

“கபடமாகக் கொன்றுத் தீர்ப்பதா? இதுவும் என்ன கண்ணாம்பூச்சி விளையாட்டா? ஒரு சுல்தானை- அதிலும், கலீஃபாவின் அனுமதியின்மீது நாடாளும் சுல்தானைக் கபடமாகக் கொல்வதா? உங்களுக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது?….. உ….ம், கபடமாகக் கொன்றுவிட்டு?”

“வேறு என்ன செய்யலாம்? நீயேதான் ஒரு நல்வழியைச் சொல்லே?” என்று தவியாய்த் தவித்ததார் சுல்தான் ஐபக்.

“உஸ்! சப்தம் போடாதீர்கள். எல்லாம் எனக்குத் தெரியம். நீங்கள் நினைப்பதுபோல, ஒரு நாள் திடீரென்று விழித்தவுடன் மூஸாவை காணமற் போக்கிவிடலாமென்று நீங்கள் கனவுகாண வேண்டாம். அந்தப் பொறுப்பு என்னுடையது. ஆனால்…”

“ஆனால் – என்ன ஷஜர்?”

“ஏன் இவ்வளவு சடிதியில் பொறுமையிழந்து விடுகிறீர்கள்? நாமென்ன, கண்கட்டு வித்தையா செய்கிறோம், மூடியைத் திறந்ததும் மாஞ்செடி முளைப்பதற்கு?…..சரி! நான் சொல்லுகிறபடி கேட்பீர்களல்லவவா?”

“அதிலென்ன ஆர்ப்பளவு சந்தேகம்?”

“தாங்கள் மட்டுமே இந்த மிஸ்ர் ராஜ்யத்தின் ஏகபோக சுல்தானாக விளங்கவேண்டுமென்று தாங்கள் ஆசைப்படுகிறீர்களல்லவா?”

“என்ன கேள்வி இது ஷஜருத்துர்? எந்தப் பண்டத்தையும் தின்னத் தின்னத்தானே ருசி அதிகரிக்கும்? அஃதே போல், இந் நாட்டின் சுல்தானாக நீடிக்க நீடிக்கத்தானே அதன் இன்பம் தெரிகிறது… ஷஜருத்துர்! நீ என் பொறுமையைச் சோதிக்காதே! நான் என்ன செய்யவேண்டுமென்று நீ நினைக்கிறாயென்பதை இக்கணமே கூறிவிடு. நீ காலாலிடுகிற வேலையை நான் என் தலையால் செய்து முடித்துவிடுகிறேன். அல்லது, நான் வேறு என்ன செய்யவேண்டு மென்பதைக் குறிப்பாகவாவது உணர்த்திவிடு!”

அதிகார மோகம், அரசாளும் வெறி யாரை விட்டன காண்!

ஷஜருத்துர் பெருமூச்செறிந்தார். தாமிட்ட பிச்சையாகிய மிஸ்ரின் ஸல்தனத்மீது ஐபக்குக்கு எழுந்திருக்கும் மட்டிலடங்காப் பேராசையை உன்னியுன்னி ஏங்கினார். தயா விஷயமாய் ஒப்படைக்கப்பட்ட ராஜ்யத்துக்கு நிரந்தரமான அதிகாரியாய்ப் போவதில் வரை முறையற்ற பேராசை பிடித்து நிற்கும் ஐபக்கை உற்று நோக்கினார். அதிகார மோகம், அரசாளும் வெறி யாரை விட்டன காண்! அகிலத்தை யெல்லாம் கட்டி யாண்டிடினும், அப்பால் ஆகாயத்திலும் அதலபாதலத்திலும் ஆணைசெலுத்தவே ஆவல்கொள்வர். இது மானிட இயற்கை.

“நாதா! நாஸிர் யூசுப் என்னும் திமிஷ்க் மன்னன் தங்கள்மீதும் இந் நாட்டின்மீதும் எல்லையற்ற வெறுப்புக்கொண்டிருக்கிறா னல்லவா?” என்று நயமாய் வினவினார் ஷஜர்.

“ஆம், ஆம்! நிச்சயமாக அவன் பெரிதும் வெறுப்புக்கொண்டிருக்கிறான். சமயம் வாய்த்தால், என் கழுத்தைக்கூட அறுத்துவிடலாமென்று காத்துக் கிடக்கிறான். அதற்கென்ன, இப்பொழுது?” என்று துடிதுடித்துக் கேட்டார் முஈஜ், நெறுப்பை மிதித்தவர்ப்போலே.

ஷஜருத்துர் இரண்டு நிமிஷங்கள் நிதானமாய் யோசித்தார்.

“அவன் மூஸாவையும் வெறுக்கிறானோ?” என்று மெளனத்தைக் கலைத்துக்கொண்டே ஷஜர் வினவினார்.

“தெரியவில்லை. அவன் சிறுவனாயிருப்பதால், அந்த மூஸாவைப்பற்றி நாஸிர் கொஞ்சமாவது பொருட்படுத்துவானென்று நான் நினைக்கவில்லை.”

“சரி! அதுதான் சரியான வழி. நான் உங்களிடம் ஒரு கடிதமெழுதிக்கொடுக்கிறேன். அதை நீங்கள் பரமரகஸ்யமாக வைத்திருந்து, ஏமாந்த சமயம் பார்த்து அக்கடிதத்தில் மூஸாவின் கையொப்பத்தை வாங்கிவந்து விடுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“ஷஜர்! நீ என்னனென்னவோ புதிர்களையெல்லாம் போடுகிறாயே! எனக்கொன்றுமே புரியமாட்டே னென்கிறதே!”

“தங்களுக்குப் புரியாத வரையில் நல்லதுதான். நீங்கள் பேசாமல் நான் சொல்கிறபடி மட்டும் செய்யுங்கள். இம் மிஸ்ரின் சிம்மாசனத்தின்மீது அமர்ந்திருக்கிற இறுதி ஐயூபியின் முடிவுக் காலத்தை நான் அதிசீக்கிரத்தில் வரவழைத்து விடுகிறேன்! ஆனால், நீங்கள் மட்டும் சர்வஜாக்கிரதையாயிருந்து கொள்ள வேண்டும். என்ன, தெரிகிறதா?”

ஷஜருத்துர்ரின் முகத்தை வெறிக்கப் பார்த்துக்கொண்டே முஈஜுத்தீன் வேகமாகச் சரியென்று தலையசைத்தார். ஷஜருத்துர்ரும் அக்கணமே அவ்விடம்விட்டு அகன்றார். ஓர் அரைமணி நேரம் சென்று, சுருட்டப்பட்ட ஒரு பெரிய கடிதத்துடனே மீண்டும் வந்து முஈஜ் முன்னே நின்றார். சுல்தானுக்கோ, ஒன்றுமே புரியவில்லை. ஷஜருத்துர் என்ன உள்ளர்த்தத்துடன் பேசுகிறாரென்பதைக் கொஞ்சங்கூட அவரால் யூகிக்க முடியவில்லை. அவர் தம் மண்டையை உடைத்துக் கொண்டு மூளையைச் செலுத்தி, உள்ளர்த்தம் கண்டுபிடிக்கத் தவித்துக்கொண் டிருக்கும்போழ்தே, தம்மெதிரில் ஷஜருத்துர் வந்து நின்றதை அண்ணாந்து பார்த்தார்.

“சரி; என் வேலைகளை பூர்த்தியாய் நான் செய்து விட்டேன். இனி நீங்கள் செய்ய வேணடியதுதான் பாக்கியிருக்கிறது. நாளையோ, மறுதினமோ, அல்லது அதற்கடுத்த தினமோ நீங்களும் அந்த மலிக்குல் அஷ்ரப் என்னும் மூஸாவும் அரசாங்க சம்பந்தமான தஸ்தாவீஜ்களில் கையொப்பமிடும்போது, மிகச் சாதுரியமாக இந்தக் கடிதத்தையும் இடையில் சொருகி வைத்து, கபடமான முறையில் அவனுடைய கையொப்பத்தை இதில் பெற்றுவிடவேண்டும். அவன் விழித்துக்கொள்ளாமல் அவசரமாக இதில் தன் ஒப்பத்தைப் போட்டுவிட்டால், இதுவே அவனுடைய சாவோலையாய்ப் போய் முடியும். நீங்கள் இசகு பிசகாக மாட்டிக் கொண்டால், உங்கள் உயிருக்கே ஆபத்து! என்ன சொல்கிறீர்கள்?”

“எங்கே அதைக் காட்டு! படித்துப் பார்ப்போம்!”

“உஸ்! இங்கே ஒத்திகைப் பார்ப்பதற்காக நான் இதை எழுதி வரவில்லை. ஆனால், தவறாமலும் நழுவ விடாமலும் ஐயூபி இளைஞனின் கையொப்பத்தை உங்களால் வெற்றியுடன் பெற்றுவிட முடியுமா? என்பதை மட்டுமே நான் தெரிந்துக் கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?”

“என்னை நிச்சயமாய் நம்பு! நான் அவனை எப்படியாவது ஏமாற்றி இதில் அவனைக் கையொப்பமிடச் செய்துவிடுகிறேன். எங்கே? காட்டு, பார்க்கலாம்!”

“நிச்சயமாக வாங்கி விடுவீர்களல்லவா?”

“நிச்சயமாக வாங்கி விடுவேன். சந்தேகமேன்?”

“சரி! அப்படியானால், இதைப் படித்துப் பாருங்கள்,” என்றுச் சொல்லிக்கொண்டே ஷஜருத்துர் தம் கரத்திடைப் பற்றியிருந்த காகிதத்தை முஈஜிடம் நீட்டினார். அந்த சுல்தானும் வெடுக்கென்று அதைப் பிடுங்கி வேகம் வேகமாய்ப் படித்து முடித்தார். படிக்கும் போதே அவர் கண்கள் விரிந்தன; முகம் பரந்தது; பூரிப்பால் தாடி ரோமம் சிலிர்த்தது. படித்து முடித்ததும் சொல்லொணாப் பெருமகிழ்ச்சியால் அதை உயரத்தில் விட்டெறிந்து கொண்டே ஷஜருத்துர்ரைத் தாவி வீழ்ந்து கெட்டியாய் அணைத்துக்கொண்டு, தேன்குடித்த நரி மாதிரி கூத்தாடினார்.

“என் காதற்கிளியே! உன் கூரிய யோசனையை நான் என்னென்பேன்! தொலைந்தான், அந்த ஐயூபி! – தொலைந்தான் அந்த மூஸா!” என்று முஈஜுத்தீன் ஷஜரைக் கட்டியணைத்துப் பேயாட்டம் ஆடினார்.

ஷஜருத்துர் முஈஜுத்தீனின் பிடியினின்று தம்மை விடுவித்துக்கொண்டு, எட்ட விலகி நின்றார்.

“இதற்குள்ளே ஏன் குதித்துக் கூத்தடிக்கிறீர்கள்? மூஸா இதில் தன் கையெழுத்தைப் போட்ட பிறகல்லவோ நாம் நிஜமாகக் குதிக்க வேண்டும்?” என்று ஷஜருத்துர் கடுகடுப்புடனே கத்தினார்.

“அவன் எப்படிக் கையொப்பமிடாமற் போக முடியும்? எனக்குத் தெரியும், அவனை எப்படிப் போடச் செய்வதென்பது. இப்போது அவன் இதில் கையொப்பமிட்டு விட்டதாகவே தான் அர்த்தம்.”

“அர்த்தமும் வேண்டாம்; மன்னாங்கட்டியும் வேண்டாம். அவன் போட்டு முடிக்கிறவரையில் பொறுமையாயிருப்போமே! ஏன் உங்களுக்கிந்த அவசர புத்தியோ!”

“நீயாவது ஒரு பிரேதத்தை வைத்துக்கொண்டு காத்துக் காத்துக் கிடந்து பொறுமையின் சிகரத்தை எட்டிப் பிடித்திருக்கிறாய். எனக்கு எங்கே அந்த மாதிரியான பொறுமை வரப்போகிறது?”

“ஓஹோ! நீங்களும் ஒரு பிரேதத்தை வைத்துக்கொண்டு ஆழவேண்டு மென்கிறீர்களோ? இஃதென்ன பிரமாதம்? உலகத்தில் பிரேதங்களுக்கா பஞ்சம்? நீங்கள் கட்டளையிட்டால், நாளையே நூற்றுக் கணக்கான பிரேதங்களை இவ் வரண்மனைக்குள் வரவழைத்து விடுகிறீர்கள்!”

“பிரேதங்களா! ஏன்? எதற்காக?”

“தாங்கள் கட்டிக்கொணடு அழுவதற்குத்தான்!”

“நான் ஏன் நூற்றுக்கணக்கான பிணங்களைக் கட்டிக்கொண்டு அழவேண்டும்?”

“தாங்கள் சற்றுமுன் சொன்னீர்களே, ஒரு பிரேதத்தை வைத்துக்கொண்டு நான் அழுதபடியாலேதான் சிறந்த பொறுமைசாலியா யிருக்கிறேனென்று! தாங்கள் ஒரு நூறு பிரேதத்தை வைத்து அழுதாவது அத்தகைய பொறுமைசாலியாகப் போகக்கூடாதா வென்பதற்காகத்தான் சொன்னேன்…. பரிகாசமெல்லாம் இருக்கட்டும்! விஷயத்துக்கு வருவோம்: மலிக்குல் அஷ்ரப் என்னும் தங்களுடைய போட்டி மன்னனிடம் இக்கடிதத்தில் கையொப்பம் வாங்கிவிட முடியுமல்லவா? – முடியாதென்றால், இப்போதே சொல்லி விடுங்கள்!”

“ஷஜருத்துர்! நீ என்னை ஆண் சிங்கமென்று அறியவில்லை போலும்! அமீருல் மூஃமினீனேகூட என்னைக் கண்டால் கொஞ்சம் யோசிக்கிறா ரென்றால், என் சக்தி என்ன, லேசுபட்டதென்றா நீ மதித்துவட்டாய்? இங்கே அந்தப்புரத்தில் மென்மையான உன்னிடம் வன்மையான என் சக்திகளைக் காட்டினால், நீ பயந்துவிடுவாய் என்பதற்காக நான் மிகவும் அடக்கமாயிருக்கிறேன். நீ என்னவோ என்னை ஓடவோட விரட்டுகிறாயே. நான் செய்து காட்டப்போகும் வீரமிக்க தீரபராக்கிரமச் செயல்களைக் கண்டு நீயே மெச்சிப் புகழப் போகிறாய்!”

“அட! ஆண் சிங்கமே! இவ்வளவு வீரம் இருக்கிறதா? என்ன இருந்தாலும் எனக்கு அத்தா பேக்குல் அஃஸகிர்ராக விளங்கிய சிங்கக் குட்டியல்லவா! நான் அதை மறந்து போனேன். போகட்டும். அதிசாமார்த்தியமாக இரண்டொரு தினங்களில் அக் கையொப்பத்தைப் பெற்றுவிடுங்கள்.”

“இரண்டொரு தினங்களென்ன? நாளையே பெற்றுவிடுகிறேன்!”

ஷஜருத்துர் மீண்டும் அந்தக் கடிதத்தை யெடுத்துப் படித்துப் பார்த்தார். திருப்திகரமாகத் தலையை யசைத்துக் கொண்டே, “ஆம்! இது நிச்சயமாக மூஸாவின் சாவோலையேதான். இதில் மட்டும் நாம் வெற்றியுடனே மீண்டுவிடுவோமாயின், நம்முடைய ஸல்தனத்தை நாம் மட்டுமே அடையப் பெறலாம். ஒண்ட வந்தவனை ஒழித்துக் கட்டிவிடலாம்!” என்று முணுமுணுத்துக் கொண்டே தம் பஞ்சணைமீது தாவியேறிப் படுத்துறங்கி விட்டார்.

மறுநாள் பொழுது புலர்ந்து அரசவை கூடியதும், வழக்கம் போலவே சுல்தான்கள் இருவரும் இரு சிம்மாசனங்களின் அமர்ந்து கொண்டார்கள். அன்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருந்தன. சென்ற பல மாதங்களாகவே அவ்விருவரும் திமஷ்கில் பொழுதுபோக்கி விட்டபடியால், இங்கே கையொப்பமிட வேண்டிய தஸ்தாவீஜ்கள் போர்ப்போலக் குவிந்திருந்தன. மலிக்குல் அஷ்ரப் ஐயூபி அவசரம் அவசரமாக எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் எடுத்துக் கையொப்பமிட்டு முடித்தார். ஒவ்வொன்றையும் படித்துப்பார்த்து கையொப்பமிடுவதென்றால், அது நடக்கிற காரியமா? பறக்கிற பரியின் வேகத்தில் அவர் பிடித்திருந்த நாணற் பேனா கிடுகிடுவென்று கையொப்பங்களைக் கிறுக்கித் தள்ளிக்கொண்டே யிருந்தது. எனவே ஷஜருத்துர் சென்ற இரவு தம் கணவர்மூலம் செய்தனுப்பியருந்த பொறிக்குள்ளே ஏமாந்த ஐயூபிச் சிறுவர் தெரியாத்தனமாய் வலியப்புகுந்து மாட்டிக்கொண்டு விட்டார். என்னெனின், அவர் கையொப்ப மிடவேண்டிய பெரிய பெரிய தஸ்தாவீஜ்களின் மத்தியிலே முஈஜுத்தீன் ஐபக் முற்குறிப்பிட்ட பொய்க் கடிதத்தையும் வெகு தந்திரமாகப் புகுத்தி வைத்திருந்தமையாலும் கையெழுத்துப்போடுகிற அவருடனே அடிக்கடி பேச்சுக் கொடுத்துக்கொண் டிருந்தமையாலும் இந்த இளைய சுல்தான் பேனாபோன போக்கில் அக்கடிதத்திலும் தம் கையயாப்பத்தை யிட்டுவிட்டார்.

உலகத்தையே ஜெயத்துவிட்டதாக எண்ணிக்கொண்டு விட்டார் ஷஜருத்துர்ரின் கைப்பொம்மையான முஈஜுத்தீன்

அன்று மாலை அரசவை கலைந்ததும், முஈஜுத்தீன் எவ்வளவு விரைவாகவும் பொறுமை யிழந்தவராகவும் ஷஜருத்துர்ரிடம் ஓடோடிச் சென்று அக்கடிதத்தை நீட்டிவிட்டு நெஞ்சைத் தூக்கி நமிர்ந்து நின்றாரென்று நாம் வருணிக்கத் தேவையில்லை. ஸிக்கந்தர் பாதுஷா இந்தியாவில் பெற்ற இறுதி வெற்றியின்போது நின்றதைப்போல் இவர் தலைநிமிர்ந்து நின்றார்! உலகத்தையே ஜெயத்துவிட்டதாக எண்ணிக்கொண்டு விட்டார் ஷஜருத்துர்ரின் கைப்பொம்மையான முஈஜுத்தீன்.

ஷஜருத்துர் நிதானமாக அக்கடிதத்தைக் கூர்ந்து நோக்கினார். அதிலுள்ள கையொப்பத்தைக் கண்ணுற்றதும் கீழுதட்டால் மேலுதட்டை யழுத்திக்கொண்டு விஷமத்தனமாகக் கண் சிமிட்டினார். “தொலைந்தான்!” என்னும் வார்த்தை மட்டும் அவர் வாயினின்றி பிறந்தது.

“என்ன, நான் சொன்னதைச் சாதித்துவிட்டேனல்லவா? இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று ஆவல் மிகுதியால் கடாவினார் முஈஜுத்தீன்.

“ஏன், இன்று நள்ளிரவில் அவனைத் தூக்கத்தில் கைது செய்து, லூயீ அடைக்கப்பட்டிருந்த சிறையறைக்குள்ளே அடைத்துவைக்க வேண்டியதுதான். பிறகு சாவகாசமாக ஒரு நாளன்று அவனை அவன் முன்னோர்கள் சென்றிருக்கிற அத் திரும்பா உலகத்துக்கு நாம் அனுப்பிவைக்க வேண்டியதுதான்.”

“அப்படியானால் இந்தக் கடிதம்?”

“இது நாம் எடுக்கிற நடவடிக்கைகளுக்குச் சாக்ஷியம் பகர்கிறது. நாளைக்கு அரசவை கூட்டப்பட்டவுடனே மறறொரு சுல்தானைக் காணோமே என்று தேடுகிறவர்களிடம் இக் கடிதத்தைப் படித்துக் காட்டினால், தாமாகவே விஷயத்தைப் புரிந்துக்கொள்கிறார்கள்.”

“என் மனம் வேதனைப் படுகிறதே?….”

“வேதனையாவவது, சுண்டைக்காயாவது! ராஜீய விஷயங்களிலும் காதல் விஷயங்களிலும் செய்யப்படுகிற எல்லாச் செயல்களும் சட்டபூர்வமாய் நியாயமானவையே என்னும் அற்ப விஷயத்தைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் நீங்கள் சுல்தானாக இருக்கிற லக்ஷ­ணத்தைப் பார்த்தால், எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.”

“இல்லை, கண்மணி! நாம் எடுத்த, அல்லது இனி எடுக்கப் போகிற நடவடிக்கைகளைக் குறித்து என்மனம் வேதனைப்படுகிறது என்று நான் சொல்ல வரவில்லை…. ஆனால், நான் திருட்டுத்தனமாய்க் கையொப்பம் பெற்ற இப்பொய்க் கடிதத்தை வைத்துக் கொண்டு கடைசிவரை எப்படிச் சமாளிக்கப் போகிறே னென்றுதான் புலப்படவில்லை…”

ஷஜருத்துர்ருக்குக் கோபாவேசமும் ஆத்திரமும் கனன்றெழுந்தன. கணவரை அக் கோபஞ் சிந்தும் கண்களுடனே ஒரு முறைப்பு முறைத்துப் பார்த்தார். அப்பார்வை முஈஜுத்தீனுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பனிக்கட்டியால் உறையச் செய்வது போன்ற பொல்லாத பயங்கர வுணர்ச்சியை ஊட்டிவிட்டது. ஷஜருத்துர்ரின் கோபத்தைக் காணச்சகிக்காமல் கண்களைக் கீழே கவிழ்த்துக்கொண்டார். ஷஜருத்துர்ரோ, தம் உதடுகளை இறுக மடித்துக்கொண்டு பாம்பு சீறுவதுபோல் நாசித் துவாரங்கள் வழியே மூச்சை ஊதினார்.

“பேஷ்! ஆண் சிங்கமே! நன்றாய்ச் சொன்னீர்கள்! இந்தப் பொய்க் கடிதத்தை வைத்துக் கொண்டு, பாவம், நீங்கள் எப்படிச் சமாளிப்பீர்கள்? சைசை! எனக்கு அவமானமாயிருக்கிறது. உங்களுக்கு தைரியமில்லா விட்டால், இப்போதே சொல்லிவிடுங்கள். நான் வேறுதிட்டம் வகுக்கிறேன். நட்டாற்றில் கைந்நழுவ விட்டாற்போல் பாதியில் வந்து விஷயத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடப் போகிறீர்கள்!”

“இல்லை… நான்….என்னால் சாதிக்க முடியாது என்று கூறவில்லை; ஆனால், பொய் என்றைக்கும் பொய்யாகத்தானே போய் முடியும்? சத்தியந்தானே இறுதியில் வெற்றி பெறும் அதற்காகவே சொல்ல வந்தேன்,…” என்று இழுத்தாற்போலே இயம்பினார் முஈஜ்.

ஷஜருத்துர் இதுகேட்டு, அதிகமும் கோபங்கொண்டு விட்டார். பற்களை நறநறவென்று மென்றுகொண்டே, “எது சத்தியம்? உங்கள் தூங்குமூஞ்சி கலீஃபா மற்றொரு தூங்குமூஞ்சியைத் தேடிப் பார்த்து சுல்தானாக நியமிப்பதா சத்தியம்? அத்தூங்கு மூஞ்சியை உடன் வைத்துக்கொண்டு இறுதிவரை நாமும் தூங்கிக்கொண்டிருப்பதா சத்தியம்? ஆட்சி செலுத்த ஆண்மையில்லாத ஐயூபிச் சிறுவனை நாம் இவ்வரியாசனத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டே யிருப்பதா சத்தியம்? என், உடல், பொருள், ஆவி அனைத்தையும் அடியோடு தியாகம் புரிந்து வெகுமதியாய்ப் பெற்ற இந்த ராஜ்யத்தை என்னிடமிருந்து அநியாயமாய்ப் பிடுங்குவதற்காக அந்தக் கையாலாகாத கலீஃபா செய்த சதித் திட்டமா சத்தியம்? இல்லை. இவ்வளவுக்கும் மேலாக எட்டாவது சிலுவை யுத்தத்தின்போது நான் ஈசலாய்ப் பறந்து, விளக்கில் வீழ்ந்து, என் மேனியையும் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டதற்குக் கைம்மாறாக என்னை முகத்திற் கரிபூசிவிட்ட புர்ஜீகளின் பொய்ம்மையா சத்தியம்? காலஞ் சென்ற கணவரின் உடலைக் கண்ணெதிரில் வைத்துக்கொண்டு கனிந்துருகிக் கதறியழுததற்குக் கூலியாக அந்த முஸ்தஃஸிம் பில்லாஹ் என்னும் லஃனத்துல்லாஹ் அனுப்பிய தாக்கீதா சத்தியம்? – ஏ, சுல்தான்! என் வயிறு எரிகிறது! என் மேனி துடிக்கிறது! அந்த என் ஜென்ம வைரியாகிய கலீஃபாவின்மீது என்னால் பழிவாங்கிக் கொள்ள முடியாமற் போயினும், அந்த கலீஃபா நியமித்தனுப்பிய இளஞ்சிறுவன் மீதாவது என் பழிக்குப் பழியை வாங்கிக்கொள்ளாமற் போயின், நானும் ஷஜருத்துர்ரா!” என்று கர்ஜிக்கத் துவக்கினார். முஈஜுத்தீனின் முகத்தில் ஈயாடவில்லை!

வறண்டுபோன தொண்டையை ஷஜருத்துர் வாயிலூறிய எச்சிலால் சிறிது நனைத்துக்கொண்டார்.

“என் கணவரே! இது சத்தியம்: என்னை வெளியேறச் செய்துவிட்டு என்னுடைய ஆசனத்தில் எவனை என் எதிரிகள் அமர்த்திவிட்டு, அவனை சுல்தானென்று கூறி ஆர்ப்பரித்துச் சுபசோபனம் பாடினார்களோ, அவனை நான் இருக்கிற இடம் தெரியாமல் ஒழித்துவிட்டு, அதே ஸ்தானத்தில் அமர்ந்து சுல்தானா ஷஜருத்துர் என்று அவ்வெதிரிகளின் வாயாலேயே அழைக்கப்படாமற் போயின், நான் என் உடையை எல்லாம் கலைந்து, பரதேசியாக மாறி, கையிலே கப்பரையை ஏந்திக்கொண்டு இம் மிஸ்ர் தேசத்தை விட்டே ஒழிந்துப்போகக் கடவேன்! துருக்கி ரத்தம் ஓடுகிற என் உடலின் ஒவ்வொர் அவயவத்தையும் நானே துண்டு துண்டாக வெட்டியெறிவேன்! நீங்கள் சத்தியமென்று கூறுவது நிஜமான சத்தியமா அல்லது நான் சத்தியமென்று கூறி, இதுவரைத் தீரத்தெளிய ஆராய்ந்து செய்த ராஜதந்திர யுக்திமிக்க மாயத்தந்திர சக்தி நிஜமான சத்தியமா வென்பதை உலகுக்கு நிரூபித்து காட்டிவிடுகிறேன்.

“நீங்கள் சற்று முன்னர்க் கூறினீர்கள், இந்தப் போலிக் கடிதத்தை வைத்துக்கொண்டு நாம் எப்படி வெற்றிபெற முடியுமென்று! நீங்களே சிந்தித்துச் சீர்தூக்கிப் பாருங்கள்; மிஸ்ரைச் சுற்றிலும் ஐரோப்பியநாட்டு அநாகரிகக் காட்டுமிறாண்டிகள் நெருப்பை மூட்டிக்கொண்டு அத் தகனச் செயல்களை ‘சிலுவை யுத்தம்’ என்று நெஞ்சமஞ்சாமல் பிதற்றிக்கொண்டிருந்ததை யெல்லாம் பேடித்தனமாய் மூலையில் குந்திப் பார்த்துக் கொண்டே யிருந்த உங்கள் அமீருல் மூஃமினீன், போலியிலும் போலியான, பொய்யிலும் பொய்யான ஓர் ஐயூபிச் சிறுவனைக் கண்கண்ட சுல்தானாகப் பிரகடனப்படுத்துவதில் எப்படி வெற்றி பெற்றார்? அவர் இந்த ஐயூபியைப் பட்டத்துக்கு உயர்த்துவதற்காகக் கைக்கொண்ட நூற்றுக்கு நூறு போலித்தனமான போக்கிரிச் செயல்களுடனே இந்தப்போலிக் கடிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், இதுவும் ஒரு போலியா? உரிமையற்ற ஒருவனைப் பட்டத்துக்கு உயர்த்துவதற்காகத் தம் தூய பதவியைச் சோரம் விடுக்கும் அந்த கலீஃபாவின் தீய நடக்கையுடனே நான் எடுக்கப் போகும் நியாய பூர்வமான நேரிய நடக்கையை ஒப்பு நோக்கினால், இது அதைவிடப் பெரிய பாபமா? – ஏ, சுல்தான்! உங்களுக்குத் திறமையில்லாவிட்டால், சும்மா குந்திக்கிடங்கள். நாளைத்தினம் நானே சென்று சிம்மாசனத்தில் அமர்ந்து, இந்தப் பொய்யான கடிதத்தை மெய்யான கடிதமாகச் செய்துவிட்டு வந்துவிடுகிறேன்! உயிரிழந்த பிரேதத்தின் உடலைக் கிழித்துப் பக்குவம் பண்ணி, அதை உயிருள்ளதேபோல் நடிக்கச் செய்த எனக்கு இந்த ஜீவனுள்ள காகிதத்தை வைத்துக்கொண்டு ஓருயிரை மாய்ப்பதுதானா முடியாது?…. ஏ, என் வைராக்கிய சித்தமே! நீ தவறி விடாதே! உன் சபதங்களை இனிது நிறைவேற்றி வைத்து, உலகோரைத் திடுக்குறச் செய்வாய்!”

முஈஜுத்தீன் நிஜமாகவே இந்தக் காட்சியில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நிகழுமென்பதைக் கனவுக்கூடக் கண்டதில்லை. ஷஜருத்துர் பேசப்பேச, அவருடைய இரைப்பை ஏறிக்கொண்டே சென்று தொண்டையில் வந்து முட்டிக்கொண்டது போலிருந்தது. எனினும், சமாளித்துக் கொண்டார்.

“பாவம், கலீஃபாவை ஏன் நீ தூற்றுகிறாய்? அவருக்கு யாரோ துர்ப்புத்தி மந்திரியிருந்து போதித்திருக்க வேண்டும். அமீருல் மூஃமினீனைப் பற்றி இப்படி இழிவாக வெல்லாம் பேசலாமா? அவர் தலையிட்டதால் தானே நான் ஷாம் தேச யுத்தத்தில் வெற்றிப்பெற முடிந்தது? உனக்கிருக்கிற கோபத்தில் என்னென்னவோ பேசிவிடுகிறாயே!”என்று சாந்தமான தொனியில் ஷஜருத்துர்ரின் கணவர் மெல்லிய குரலுடன் மிழுற்றினார்.

“தலைவலியைப் போக்கத் திருகுவலியைக் கொணராதீர்கள்! நீங்கள் உங்கள் கலீஃபாவை மெச்சிக்கொள்ளுங்கள். என் வயிற்றெரிச்சலை மேலும் கிளப்பாதீர்கள். கலீஃபாக்கள் என்று தங்களை வெட்கமில்லாமல் அழைத்துக் கொண்டவர்களின் நிஜமான சரித்திரங்களை நீங்கள் நன்றாய்ப் படித்திருந்தால், இப்படிப் பேசத் துணியமாட்டீர்கள். ஜுமுஆத் தொழவைப்பதற்குப் போகக்கூட முடியாத கலீஃபா ஒருவர் தம் வைப்பாட்டி யொருத்தியை வெட்கங் கெட்டுப்போய்ப் பள்ளிவாசலுக்குத் தம்சார்பாக ஆண்வேடம் போட்டு அனுப்பி வைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டதில்லை போலும்!… எனக்கு இபபோது கலீஃபாக்களைப்பற்றிக் கவலையில்லை. என்னை அவமானப்படுத்தி, உதாசினஞ்செய்து, என் நாணமிக்க மடமையைக் காற்றில் பறக்கவிடச் சூது செய்த கலீஃபாவைப் பற்றித்தான் எனக்குக் கவலை. அந்த கலீஃபாவே செய்திருந்தாலும், அல்லது அவர் கேட்பார் பேச்சை கேட்டு நடந்திருந்தாலும், எனக்கு ஒன்றேதான். நான் அவர் நியமித்தனுப்பிய மூஸாவை ஒழித்துத் தீர்த்த பிறகுதான் நல்ல உறக்கம் கொள்ளுவேன்!”

முஈஜுத்தீன் விவேகத்துடன் மெளனம் பூண்டுவிட்டார். தாடி ரோமத்தின் நுனியை நெருடிக்கொண்டிருந்தார். அதற்குள் இராப் போஜனம் வந்துவிட்டது. சீக்கிரமாக அவர் உணவை உட்கொண்டுவிட்டு, கையைக் கழுவித் துடைத்துக் கொணடே எழுந்தமர்ந்தார். அங்கே ஷஜருத்துர் நாணற் பேனாவுடனும் அரசாங்கக் கட்டளை பொறிக்கப்படும் கெட்டியான தஸ்தாவீஜ் காகிதத்துடனும் மைக்கூட்டுடனும் நின்றுகொண்டிருந்ததைக் கண்டார்.

“இவை யெல்லாம் எதற்காக?” என்று முஈஜ் ஆவலுடனே வினவினார்.

“அடுத்த நடவடிக்கைகளைத் தாங்கள் எழுதிக் கையெழுத் திடுவதற்காகத்தான்!” என்று பொய்யான புன்முறுவலுடனே புகன்றார் ஷஜருத்துர்.

முஈஜுத்தீன் ஒருகணம் யோசித்தார். மறு பேச்சின்றிக் காரியத்தைச் செய்து முடிக்காவிட்டால், தாம் பிரேதமாகிப் போய்விடுவா ரென்பதை அவர் உணர்ந்து கொண்டார். அக்கணமே பேனாவை எடுத்து எழுதலாயினார்:-

“மிஸ்ரின் ஸல்தனத்தை எதிரியிடம் காட்டிக் கொடுப்பதற்காகப் பயங்கர சூழ்ச்சி செய்து, மன்னிக்க முடியாத தேசத் துரோகக் குற்றமிழைத்த மூஸா என்னும் மலிக்குல் அஷ்ரபை, இந் நாட்டின் நன்றி விசுவாசமிக்க சுல்தானாகிய நாம் உடனே கைது செய்து காவலில் வைக்கும்படி அவசரமாக உத்தரவு பிறப்பிக்கிறோம். அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் தேசத் துரோகிகளான நயவஞ்சகப் பாதகர்களி னின்றும் காப்பாற்றி யருள்வானாக!”

(ஒப்பம்)
சுல்தான் அல் மலிக்குல் முஈஜுத்தீன் ஐபக்.

இந்த தஸ்தாவீஜ் எழுதி முடிந்ததும், ஷஜருத்துர்ரே அதை வெடுக்கென்று பிடுங்கி ஈரமையைக் கருமணல் தூவி உலர்த்தி, சுல்தானின் கணையாழி முத்திரையை அதில் பொறித்து, குப்பிக் குள்ளிட்டு அடைத்துக் கொண்டே, “தொலைந்தான், என் முதல் எதிரி!” என்று முணுமுணுத்தார்.

இறுதி ஐயூபி சுல்தானின் இறுதிக்காலம் இவ்விதமாக வந்து முடிந்தது.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார் 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment