சுல்தான் ஸாலிஹ் ஐயூபி பட்டத்துக்கு வந்தபின் ஆறு மாதங்கள் மிக வேகமாய் ஓடிமறைந்தன. எந்தக் காரணங்களுக்காக அவருடைய சகோதரர் அபூபக்ர் உயிரிழக்கவும்

ஸல்தனத்திலிருந்து உருட்டித் தள்ளப்படவும் நேர்ந்தனவோ, அக் காரணங்களுக்குத் தாம் இரையாகக் கூடாதென்று அவர் திடமான மனவுறுதி செய்துகொண்டார். அந்த உள் வைராக்கியம் நாள்தோறும் பெரிதும் வளர்ந்து வந்தது. ஸலாஹுத்தீன் போன்ற சிறந்த ஐயூபி சுல்தான்கள் எப்படியெப்படி அரச பாரத்தை நிர்வகித்து வந்தார்களோ, அப்படியப்படியே தாமும் சிறப்பாக ஆட்சிசெலுத்த வேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டார். தம்முடைய தமையனின் வீழ்ச்சிக்குப் பொதுமக்களின் வரம்பு கடந்த அதிருப்தியேதான் முழுக்காரணமென்பதை நன்குணர்ந்த அவர் எந்த வகைகளில் அவர்களுடைய நன்மதிப்புக்கு ஆளாகலாமென்று இரவு பகலாக ஆராய்ந்துகொண்டு, மூளையைக் குழப்பிக்கொண்டிருந்தார்.

இனி எக்காரணம் பற்றியும் பொதுமக்கள் அரசனுக்கு அஞ்சவே தேவையில்லையென்றும், எவர் வேண்டுமானாலும் எவ்விஷயத்தைப் பற்றியும் தம்மிடமே நேராகக் குறை முறைகளைக் கூறிக்கொள்ளலாமென்றும், இரண்டாவது கலீபாவாய் விளங்கிய ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களது உபதேசத்தைப் பின்பற்றி, பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திவிட்டார். உறங்கும்போதும், உறங்கி விழிக்கும்போதும் அபூபக்ர் ஆதிலின் உருவம் அவர் கண்முன்னே வந்து நின்றது. குடிமக்களின் கோபத்துக்கும் அமீர்களின் அதிருப்திக்கும் ஆளானால், ஒரு பெரிய சுல்தானின் உயிர் எவ்வளவு பரிதாபகரமாகப் பறிக்கப்பட்டு விடுகிறதென்பதை ஸாலிஹ் மன்னர் நினைக்க நினைக்கத் தம்மையறியாமலே உடல் நடுங்கிவிடுவார். அண்ணன் சிந்திய உதிரத்தின்மீதும், உயிரிழந்த உடலின்மீதுமே இந்தத் தம்பி சுல்தானாக நடப்பட்டிருக்கிறார் என்னும் உண்மையை அவர் எங்ஙனம் மறத்தல், அல்லது மறைத்தல் சாலும்?

எனவே, அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளிலெல்லாம் பெருவெற்றியே பெற்றுவந்தார்; குடிகளும் அவரை அளவு மீறி நேசிக்க ஆரம்பித்தார்கள். ஆதிலின், குணத்துக்கு நேர்மாறான முறைகளில் ஸாலிஹ் ஒழுகிவந்தது ஒருபுறமிருக்க, இனி அமீர்களின் தயவில்லாமல் நேரே சுல்தானை அண்மித் தங்கள் குறைகளைச் சமர்ப்பிக்கலாமென்னும் சலிகையைக் கேள்வியுற்றதும் அப்பொதுமக்கள் இன்னம் அதிகமான குதூகலங் கொண்டுவிட்டனர். முன்பெல்லாம் அவர்கள் அமீர்களைத் தனதுபண்ணிக் கொண்டால்மட்டுமே வழக்குகளை அரசரிடம் சேர்ப்பிக்க முடியும். அன்றியும், அவர்கள் ஓயாமல் அந்த அமீர்களைத் திருப்தி செய்துகொண்டே இருந்தால்தான் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையெனில் அரசர் என்ன செய்தாலும் அமீர்கள் முட்டுக்கட்டையாக இருந்துவந்தனர். இனிமேல் அத்தகைய உபத்திரவம் கிடையாதென்பதைத் தெரிந்துகொண்ட குடிகள் இரட்டைக் குதூகலத்தால் துள்ளிக்குதித்தனர்.

சுல்தான் ஸாலிஹ் இந்த மாதிரியான சூழ்நிலைமையை அதிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். என்னெனின், குடிகள் எப்படி அரசனுடன் நேரிடையான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனரோ, அப்படியே அரசனும் அவர்களுடன் நேரிற் பழகப்பழக அமீர்களென்னும் இடைநிலைப் பேர்வழிகளுக்கு நாளடைவில் அவசியமென்பது அறவே இல்லாமற் போய்விட்டது. ஆகையால், அமீர்களுக்குச் சிறிது காலத்துக்குள் செல்வாக்கென்பதே மங்கி மண்ணாய்க்கொண்டு வந்ததுடன், அரசரிடத்திருந்தும் மக்களிடத்திருந்தும் பெற்றுவந்த மரியாதையும் மதிப்பும் சடுதியில் அஸ்தமித்துவிட்டன எனச் சொல்லலாம். இவ் வெதிர்பாராத நடவடிக்கையால் தங்கள் கௌரவம் முற்றும் பாழாய்ப் போய்விட்டதென்பதைக் கண்டு, அந்த அமீர்கள் வயிறெரிய ஆரம்பித்தார்கள். பதவியிருந்தும் அதிகாரமில்லாத அவ்வமீர்களைப் பார்த்தால், பொன்முலாம் பூசப்பட்ட பித்தளைப் பதுமைகளைப்போலே ஆகிவிட்டனர் என்று அனைவரும் அழைக்கும்படியான நிலைமைக்கு இழிந்து விட்டனர். முன்பெல்லாம் மக்கள் அமீர்களைக் கண்டால் நடுநடுங்குவார்கள். ஆனால், இப்போதோ, அவர்கள் இவர்களைச் சிறிதுகூட மதிப்பதில்லை. மக்கள் பெயரைச் சொன்னால், அமீர்கள் கதிகலங்கும் தலைகீழ்நிலைமை வந்து விளைந்துவிட்டது.

ஒருநாள் சுல்தானும், அவருடைய மந்திரி பிரதானிகளும், மற்றுமுள்ள அரசாங்க உயர்தர உத்தியோகஸ்தர்களும் ஒன்றாய்க்கூடி ஆலோசனை நிகழ்த்தினார்கள். அன்றைய கூட்டத்தின் ஒரே நோக்கம், அரசாங்கத்தையும் அதன் சுல்தானையும் எப்படிப் பலப்படுத்துவது என்பதாகவே இருந்து வந்தது. அபூபக்ரின் வீழ்ச்சியை நினைந்து நினைந்து தினமும் மனம் பதறிவந்த ஸாலிஹ் எங்ஙனமாவது தம்மை எத்தகைய அபாயத்துக்கும் மேலான அளவுக்கு உயர்த்திக்கொண்டுவிட வேண்டுமென்று துடியாய்த் துடித்துநின்றார். அன்றைய மந்திராலோசனைக் கூட்டத்தில் முதன்முதலாக எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம், அபூபக்ர் ஆதில் வீழ்த்தப்பட்டதற்கு ஆதிகாரணங்கள் என்னென்னவென்னும் ஆராய்ச்சியேயாகும். ஆதில் இயற்கையாகவே தவற்றொழுக்கங்கள் மிக்கவராக இருந்தாரென்பது உண்மையே என்றாலும், பொதுமக்களனைவரும் ஏககாலத்தில் திரண்டெழுந்து மிகப் பெரிய ராஜப்புரட்சிக் கலகத்தை மூட்டி விடுவதற்கு முழுக்கமுழுக்க ஒத்தாசை புரிந்தவர்கள் அமீர்களே என்றும், அதிலும் சிறப்பாக மற்றெல்லா அமீர்களையும்விட அவர்களுள் மிகவும் பிரதானமானவராகிய கிழட்டு தாவூத் கிளப்பிய குழப்பமே ஆரம்பத்துக்கு அஸ்திவாரமாகப் போய்விட்டதென்றும் அவர்கள் ஆராய்ந்து முடிவுசெய்தார்கள்.

பிரதம மந்திரியாகிய வஜீரெ முஅல்லம் சுல்தான் ஸாலிஹிடம் அடிக்கடி அந்த அமீர்களின் அபாயத்தை விளக்கி வந்திருக்கிறராகையால், நாளேறவேற, அம் மன்னவருக்கு அன்னவர்கள்மாட்டு வெறுப்பு வளர்ந்துகொண்டே வந்து, அன்று முகடுமுட்டிப் போய்விட்டது. இருபுறமும் கூர்மையான வாள் எத்தன்மையானதோ, அத்தன்மையினராகவே காஹிராவின் அமீர்கள் காணப்பட்டு வருவதால், அமீர்களையே அடியோடு முழுக் கூட்டத்தினரையும் ஒரே நொடிப்பொழுதில் தொலைத்துக் கட்டினாலன்றி, ஸல்தனத்தையோ சுல்தானையோ காப்பாற்ற முடியாதென்று ஸாலிஹின் பிரதம சேனாபதி தம் கருத்தை வெளியிட்டார். சுல்தான் இன்னது செய்வதென்று தோன்றாது, கன்னத்தில் கையூன்றிக் கவலையுடன் வீற்றிருந்தார்.

இம் மாதிரியான சந்தர்ப்பத்தை ஆவலுடன் பன்னாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த வஜீரெ முஅல்லம் எழுந்து நின்று, கம்பீரமாகத் தலையையுயர்த்தி வீராவேசத்துடன் அன்று நிகழ்த்திய பிரசங்கம் சரித்திர பிரசித்தி பெற்றுவிட்டது. அவர் பேசிய பேச்சின் சுருக்கம் இதுதான்:-

“யா ஸாஹிபுல் ஜலாலில் மலிக்! நம் ஸல்தனத்திலுள்ள சகல அமீர்களையும் கூண்டோடு அழித்துவிட வேண்டுமென்று தங்கள் சேனாதிபதி கூறிய ஜாடையான பேச்சுக்களை நான் தங்களின் நலத்துக்காகவும், இந் நாட்டின் மேன்மைக்காவும், பொதுமக்களின் நலனுக்காவும் மனமார வரவேற்கிறேன். அமீர்கள்மீது நான் கொண்டுவிட்ட அசுயையாலோ, அல்லது வீண் மனஸ்தாபத்தாலோ இப்போது இப்படிப் பேசுகிறேனென்று தயைகூர்ந்து என்னைத் தவறாய்க் கருதிவிடாதீர்கள். ஐயூபி வம்சத்து மன்னாதி மன்னர்களிடம். என் மூதாதையர் உட்பட யானும் என் சகாக்களும் இந்த ஸல்தனத்துக்கு இதுவரை புரிந்துவந்திருக்கிற தொண்டினையும், இனி இந் நாட்டுக்கு எப்போதுமே நலன்தான் விளைய வேண்டுமென்று அல்லுபகல் அனவரதமும் நாங்கள் அரும்பாடுபட்டு வந்திருக்கும் அத்தனை தியாகங்களையும் தாங்கள் அறிவீர்கள். நான் என் திறந்த மனத்துடன் தங்கள் திருமுன்பினில் கூறும் இவ்வார்த்தைகள் எங்கள் கூயநலத்துக்காகவே அல்ல. தாங்கள் பாரபட்சமற்ற திறந்த உள்ளத்துடனே தங்களுக்கு முன்னர் இந் நாட்டின் செங்கோலைப் பிடித்திருந்த பழைய ஐயூபி சுல்தான்களையும் அவர்கள் காலத்தில் இந்த அதிக்கிரமம் பிடித்த அமீர்கள் இழைத்துவந்த கொடுமை மிக்க எதேச்சாதிகார ஆணவத்தையும் நன்றாய் அலசி ஆராய்ந்து பார்ப்பீர்களானால், இன்று நான் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வாக்கென்பதைத் தாங்களே அறிந்துணர்வீர்கள்.

“முன்பு அந்த சுல்தான்கள் அமீர்களின் உதவியை வைத்துக்கொண்டு இந் நாட்டின் சுபிட்சத்தை வளர்த்துக்கொண்டு விடலாமென்னும் தூய எண்ணம்கொண்டு அன்னவர்களுக்கு அதிகாரமளித்து, அவர்களை உன்னதப் பதவிகளில் உயர்த்தியும் வைத்தார்கள். ஆனால், அந்தப் பொல்லாத போக்கிரி அமீர்கள் தங்கள் அதிகாரத்தைச் சதா சர்வ காலமும் துர்வினியோகப்படுத்தி வந்ததுடன், சிறுகச் சிறுக மன்னர்களின் அதிகாரத்தையும் அபகரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இறுதியாக நிலைமை எப்படிப்போய் முடிந்ததென்றால், அமீர்கள் நீட்டுகிற இடத்தில் சுல்தான்கள் கையொப்பம் இடவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் ஆழ்ந்து சிக்கிக் கொண்டுவிட்டார்கள். ஸல்தனத்துக்குத் தூண்கள் தேவைப்படுகின்றன என்னும் நல்ல நோக்கத்துடன் தங்கள் முன்னோர்கள் அந்த அமீர்களை உற்பத்தி செய்திருக்க, அந்த அமீர்கள் கால அடைவில் இப்படி உயிர்க்கொல்லிகளாகவும் ஸல்தனத்தின் பேரபாயப் புல்லருவிக் கோஷ்டியினர்களாகவும் உருமாறி விடுவார்களென்று எவரே எதிர்பார்த்திருத்தல் முடியும்?

“தங்கள் தந்தையார் ஆட்சி செலுத்திய காலத்தில், தமீதாவின் முற்றுகை ஆரம்பத்திலேயே எதிரிகளை அடித்துத் துரத்த அந்தப் பயங்கொள்ளி அமீர்கள் துணைபுரியாமற் போனதுடன், தமீதா முற்றுமே படுநாசமடைவதற்கும் இக் காஹிரா வெள்ளத்தில் புரள்வதற்கும் ஒத்தாசை செய்தவர்களாகப் போய் முடிந்தார்கள். தங்கள் தமையனார் பட்டத்துக்கு வந்தததுமுதல் இந்த அயோக்ய அமீர்களை வாலாட்டாமல் தடுத்து நிறுத்தி எதேச்சையாக அரசாங்கத்தை நடாத்திவந்தபடியால், அவரைக் கொல்லவும் சதி செய்ததுடன், நாட்டு மக்களையேகூடக் கிளப்பிவிட்டுக் குழப்பம் செய்யத் தூண்டிவிட்டார்கள். இப்போதோ, தாங்கள் அரச பாரம் ஏற்றுக் கொண்டதிலிருந்து அந்த அமீர்களின் கொட்டத்தைத் தலைகிளப்ப வொட்டாமல் தடுத்து வருவதைக் கண்டு அவர்கள் பெரிதும் அதிருப்தியடைந்து, தங்களையே ஒழித்துக்கட்டவும் சூழ்ச்சி செய்து வருகிறார்கள் என்று நான் உளவர்கள் மூலமாகக் கேள்வியுறுகிறேன்.

“நம் மெல்லாரையும் பிடித்த நல்ல காலந்தான் அக் கிழவர் தாவூத் செத்துத் தொலைந்தாரென்று நாங்கள் நினைந்து அகமகிழ்கிறோம். என்னெனின், அவர் பொல்லாத கிழக்கழுகு. பொய்ப் பாசாங்கான வேஷத்தைச் சாதுரியமாகப் போர்த்துக்கொண்டு, ஏதோ இந்த ஸல்தனத்தைத் தான் மட்டுமே தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பதாகப் பாவனைசெய்து, ‘ஐயோ, ஆபத்து வந்துவிட்டதே! நான் ஸல்தனத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறேன்!’ என்று பொய் நடிப்பாகப் பிதற்றித் திரிந்துகொண்டிருந்தார். அவரை முதன்முதலாகப் பார்க்கிறவர்கள் பரம யோக்யனென்றே நம்பினார்கள். ஆனால், இந்த உலகம் உற்பத்தியானது முதல் அத்தகைய கொடிய நயவஞ்சகச் சூதுகுணம் படைத்த எவருமே பிறந்திருக்க முடியாதென்றுதான் நான் நம்புகிறேன். நீங்களே பாருங்கள்! அவர் மட்டும் உண்மையான யோக்யராயிருந்திருப்பின், ஆண்டவன் அவனுக்கு ஒரு புத்திரபாக்கியத்தை மட்டுமாவது கொடுத்துப் பெயர் வழங்கச் செய்திருக்க மாட்டானா? அவர் செத்தபோது அவருக்குப் பக்கத்தில் அவருடைய ஒரே அடிமைப்பெண் மட்டுந்தான் இருந்தாளென்று கேள்விப்பட்டேன். அந்தப் பொல்லாத அமீர், அவர் ஆயுட்காலத்திலெல்லாம் செய்த கபடநாடகப் போக்கிரிச் செயல்களுக்காக இறுதி நிமிடத்தில்கூட ஆறுதல்கூற உறவினர் ஒருவருமின்றிச் சபிக்கப்பட்டுத் தொலைந்தார்.

“அந்த யோக்யர் ஆண்டவனிடம் சேர்ந்த பின்னர்ப் பெறப்போகும் தண்டனையை அவ் வாண்டவனே நிர்ணயிக்கட்டும். ஆனால், அவர் இந்த ஸல்தனத்துக்கு இழைத்திருக்கிற இன்னல் இருக்கிறதே, அதை நினைக்க நினைக்கத்தான் என் நெஞ்சம் குமுறுகிறது. தங்கள் அண்ணன் பட்டத்துக்கு வரும்போதே அவர் எதிர்த்தார்; முடிசூட்டு விழாவுக்குக்கூட அவர் இங்கு வரவில்லை. மற்ற அமீர்கள் எல்லாரையும் விட அவர் மிகவும் தந்திரமுள்ள நரியனாகையால், அவர் தங்கள் அண்ணனின் எதேச்சா பிரியத்தை முற்கூட்டியே உணர்ந்து கொண்டார். மற்ற அமீர்களிடமும் அவர் தன் அதிருப்தியைத் தெரிவித்து. அபூபக்ர் பட்டதுக்கு வராமல் தடுப்பதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டார். ஆனால், அவர்கள் அவர் பேச்சைக் கேட்கவில்லை. எப்படியாவது அபூபக்ரைப் பட்டத்திலேற்றிவிட்டு, எதேச்சாதிகாரத்தைத் தாங்கள் பற்றிக் கொண்டு விடலாமென்று அவ் வமீர்கள் கனவு கண்டார்கள். ஆனால், தங்கள் சகோதரர் அந்த அமீர்கள் எதிர்பார்த்தபடி அவர்களுடைய மாயவலைக்குள் சிக்காததால் தாவூதிடம் தூது சென்று முறையிட்டுக் கொண்டார்கள். பிறகு கேட்பானேன்? அவருக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. சூழ்ச்சி செய்தார்; கலக மூட்டினார்; புரட்சியை உண்டுபண்ணினார்; பொதுமக்களின் திரள்களுக்குத் தலைமை வகித்து வந்து இவ் வரண்மனையைத் தகர்த்தார்; தங்கள் ஆருயிர் அண்ணனின் சிரசைச் சேதித்தார்; தங்களை இவ் வரியாசனத்தின்மீது அமர்த்தினார்.

“பரந்த நோக்கத்தாலோ அல்லது தங்கள்மீது கொண்டுவிட்ட ஆழ்ந்த அன்பினாலோ தங்களை அவர் சுல்தானாக உயர்த்தினாரென்று நினைத்துவிடாதீர்கள். அவருக்கு உண்மையிலேயே தங்கள்மீது பாசமிருந்தால், – அவர் ஏதாவது பிள்ளையைப் பெற்றிருந்தால்தானே ‘பாசம்’ என்பது என்னவென்று தெரியப்போகிறது? – தங்களை அந்தக் கிறிஸ்தவப் பிரதிநிதிக்கு ஈடாக அனுப்பிவைக்கும்படி அன்று சொல்லியிருப்பாரா? பத்து வயதுகூட நிரம்பப்பெறாத தாங்கள் அக்காலத்தில் மிகச்சிறு பாலகனாய் இருக்கையிலே அவர் ஏன் அப்படிக் கபடமாகத் தங்களை ஈடுவைக்கச் சொல்லித் தங்கள் தந்தையாரிடம் உபதேசித்தார், தெரியுமா? தங்கள் தந்தை அவரை முற்றும் தெரிந்துகொள்ளவில்லை. தமீதாவில் முற்றுகையிட்டிருந்த கிறிஸ்தவர்கள் தங்களை எப்படியாவது கொன்று விடுவார்களென்று அவர் எதிர்பார்த்தார். தங்கள் சகோதரரையும் அம்மாதிரி வேறு கபடமார்க்கமாக ஒழித்துவிட்டால், இந் நாட்டையே தனது சொந்த ஆதிக்கத்துக்கு அடிமைப்படுத்தி விடலாமென்று அந்தரங்கத்தில் அவர் கருதியிருந்தார். ஆனால், ஆண்டவன் வேறுவிதமாக நாடியிருந்தான். தாங்கள் உயிருடனே இருக்கிறீர்கள்; அவர்மட்டும் செத்து மடிந்தார். கெடுவானே கேடு நினைப்பான்.

“எனினும் அவர் இனத்தைச் சார்ந்த ஏனை அமீர்கள் இன்னம் உயிருடனேதான் இருக்கிறார்கள். அவர் வைத்துச்சென்ற கொள்ளி கனிந்துகொண்டேயிருக்கிறது. எந்த நேரத்தில் இனியொரு புரட்சி தோன்றுமென்றோ, தங்கள் இன்னுயிர் என்னாகுமென்றோ என்னால் இப்போது கூற இயலவில்லை. வருமுன் காப்பதுதான் மெத்த உத்தமமென்று கற்றோர் கூறுகின்றனர். தங்கள் மூதாதையர் தெரியாத்தனத்தால் அந்தப் பொல்லாத அமீர்களுக்குக் கொடுத்துவிட்ட எல்லையற்ற அதிகாரத்தை வேரோடு கல்லியெறிய வேண்டிய பொறுப்புத் தங்கள்மீதே சார்ந்து நிற்கிறது. யான் இவ்வளவுதான் கூறமுடியும். மிக உயர்ந்த அந்தஸ்தில் அமர்ந்திருக்கிற சுல்தானாகிய தாங்கள் நம்மெல்லாரையும் அத்தகைய கேடு காலத்தினின்று விடுவித்துக் கரையேற்றுவதற்கான உன்னத மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பை இக்கணமே செய்து முடிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதை யான் இனியும் விவரிக்கத் தேவையில்லை.”

அந்த வஜீர் பேசி அமர்ந்ததும், நிசப்தம் நிலவியது. ஸாலிஹ் ஆழ யோசித்துக் கொண்டேயிருந்தார். “அமீர்களை அடியோடு ஒழித்தாலன்றி நமக்கு விமோசனமில்லை என்றா கூறுகிறீர்?” என்று சிறிதுநேரம் சென்று ஒரு கேள்வி விடுத்தார்.

“ஐயப்பட இதில் என்ன இருக்கிறது? கைப்புண்ணைப் பார்க்கக் கண்ணாடியும் வேண்டுமோ? ஸல்தனத்தைத் தாங்கள் திறமையாக நடத்துவதற்குச் சகல சௌகரியமும் பெற்றிருக்கையில், இந்த அமீர்கள் ஏன் நடுவில் முளைகளேபோல் தலை நீட்டிக்கொண்டிருக்கவேண்டும்? அன்றியும், அவர்களுக்கு இன்னம் சுயேச்சை அளிக்க அளிக்க, தாங்கள் உயிருக்கே ஆபத்தைத் தேடிக்கொள்ளுகிறீர்கள் என்பதை யான் கூறக் கவலுறுகிறேன். தங்கக் கத்தியென்று வயிற்றிலே குத்திக்கொள்வதா? அமீர்களின் யோக்யதை என்னவென்பதை நாம் தெரிந்துகொண்ட பின்னருங் கூடவா உறங்கிக்கொண்டிருப்பது? இந்த அமீர்கள் இனியும் நீடித்திருப்பதில் இந்த ஸல்தனத் என்ன லாபத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று தாங்கள் கருதுகிறீர்கள்? நிச்சயமாக நாம் அந்த ‘அமீர்’ என்கிற பெயரே இல்லாது பூண்டோடு ஒழித்துத் தொலைத்தாலன்றி, இந்த ஸல்தனத்தையோ, ஐயூபி வம்சத்தையோ காப்பாற்ற முடியவே முடியாது என்பதை யான் அறுதியிட்டு உறுதியாய்க் கூறுகிறேன். அந்த ஒரே நடவடிக்கையைத் தாங்கள் இக்கணமே எடுப்பதாக முடிவு செய்தாலன்றி, இன்று நாம் இங்குக் கூடியிருக்கிற ஆலோசனைத் திட்டம் உருப்படியாகாதென்பது நிச்சயம்.”

“யா வஜீர்! உமக்கிருக்கிற உண்மையான ரோஷத்தின் உத்வேகத்தால் இன்று இப்படிப் பிரசங்கமாரி பொழிந்தீரென்பதை நான் நன்குணர்ந்து கொண்டேன். ஆனால், நாம் எந்த நடவடிக்கையை எடுப்பதாயிருப்பினும், ஆரஅமர யோசித்தேயன்றோ செய்யவேண்டும்? அமீர்களென்ன கிள்ளு கீரைகளா, நகத்தால் கிள்ளியெறிய? பலநூறு ஆண்டுகளாக இந்த மிஸ்ரில், அதல பாதாளம்வரை வேரூன்றிய மிகப்பெரிய ஆலமரமாகப் படர்ந்துநிற்கும் பொல்லாத சக்திவாய்ந்த அமீர்களை மிகநாஜூக்காக அல்லவோ வீழ்த்தவேண்டும்? ஒரே இரவில் நினைத்த மாத்திரத்தில் செய்துவிடக்கூடிய காரியமா அது? நிதானியுங்கள். நன்கு யோசியுங்கள். எவ்வளவுதான் அமீர்கள் அயோக்யர்களென்றாலும், நீங்களெல்லாரும் நினைப்பதுபோல் முழுக்க முழுக்க அவர்கள் விரோதிகளல்லர். அநேக சமயங்களில் அவர்கள் இந்த ஸல்தனத்தின் கண்ணியத்தைப் பெருந்தியாகங்கள் மூலமாகவெல்லாம் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் என்பதை என் தந்தையே கூறியிருக்கிறார். அன்னமிட்டவரைக் கன்னமிட்ட கதையேபோல், அமீர்கள் எல்லாரையுமே ஈவிரக்கமின்றி நொடிப்பொழுதில் கொன்று குவித்து விடுவதென்பது உலக சரித்திரத்திலேயே இணையில்லாத மாபெருந் துரோகமாகச் சரித்திரத்தில் என்றென்றும் நிலைத்து விடுமென்பதை நினைத்துப் பார்த்தீர்களா?” என்று அரசர் பிரான் மிக நிதானமாகப் பேசிமுடித்து, அன்றைய கூட்டத்தை ஒற்றிவைத்தார்.

<<அத்தியாயம் 17>> <<அத்தியாயம் 19>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment