அறுபட்ட கழுத்திலிருந்து இரத்தம் வெளியேறி, ஆயுளின் இறுதித் தருணத்தில் இருந்தான் அவன். சுற்றியிருந்தவர்களிடம், “இந்த இரயிலில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள். நான் அவர்கள் அனைவரையும் விரும்புகிறேன் என்று”. அதுதான் அவன் பேசிய கடைசி வாக்கியம்.
இரயில் நிலையத்தில் போலீஸ் வாகனங்களும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் சைரன்கள் அலற, அதன் தலையில் விளக்குகள் ஒளிர, படையாய் வந்து குவிந்தன. இரயில் பெட்டிக்குள் இரத்தம் இறைத்துக் கிடந்தவர்களை அள்ளிப்போட்டுக் கொண்டு வண்டிகள் மருத்துவமனைக்கு விரைந்தன. நடந்து முடிந்த அசம்பாவிதத்தின் அதிர்ச்சி விலகாமல் இரயில் பயணிகளும் நிலையத்திலிருந்த மற்றவர்களும் அதிர்ச்சியில் அதிர்ந்து போயிருந்தனர்.
மே 26, 2017 வெள்ளிக்கிழமை மதிய நேரம் அது. முஸ்லிம்களின் ரமளான் மாதம் தொடங்குவதற்கு முந்தைய நாள். அமெரிக்காவின் வட மேற்கில் உள்ள ஆரகன் (Oregon) மாநிலத்தின் போர்ட்லேண்ட் (Portland) நகரில் மெட்ரோ ரயில்கள் பரபரப்பாக விரைந்து கொண்டிருந்தன. அவர்களுக்கு அது MAX (Metropolitan Area Express) Light Rail.
அந்த MAX இரயில் நிரம்பி வழியும் கூட்டத்துடன் நகருக்குள் வளைந்து நெளிந்து விரைந்து கொண்டிருந்தது. அதில் தாலிய்ஸின் அமர்ந்திருந்தான். அவனது முழு பெயர் Taliesin Myrddin Namkai-Meche. அப்படி நீட்டி முழக்கி வாசிப்பது சிரமம் என்பதால் தாலிய்ஸின் போதும். அவரவரும் ஃபோனில், புத்தகத்தில், கணினியில் என்று பிஸியாக இருக்க, தன் உறவினர் தெரஸாவுடன் ஃபோனில் அரட்டையடித்துக் கொண்டிருந்தான் அவன்.
தாலிய்ஸினுக்கு 23 வயதுதான் நிரம்பியிருந்தது. 2016ஆம் ஆண்டு பொறுப்பாய் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்தவனுக்கு தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைத்து, வாழ்க்கையின் அடுத்த கட்டம் துவங்கியிருந்தது. உலகின் பல்வேறு மதங்களைப் பற்றிய ஆர்வம் அவனுக்கு அதிகம். அதனால் கல்லூரியில் பயிலும்போது, இஸ்லாத்தைப் பற்றிய அறிமுக கோர்ஸ் ஒன்றைத் தேர்வு செய்து வெகு ஆர்வமாகப் படித்தவனுக்கு ஒன்று புரிந்தது. உலகம் அச்சுறுத்தும் பூச்சாண்டிக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்ற உண்மை தெளிவாய்ப் புரிந்தது.
ஆனால் இப்பொழுது அவன் தன் அத்தையிடம் அளவளாவிக் கொண்டிருந்ததெல்லாம் தன் வேலை, தன் பெண் நண்பி, புதிதாய் இதழ் விரித்திருக்கும் வாழ்க்கை… என்று இயல்பாக, மகிழ்வாகச் சென்று கொண்டிருந்தது உரையாடல். அந்த இனிய தருணத்தைக் கெடுக்கும் வகையில் யாரோ ஒருவனின் பெரும் கூச்சல் குறுக்கிட்டது. உதாசீனப்படுத்திவிட்டுப் பேச்சைத் தொடரத்தான் பார்த்தான் தாலிய்ஸின். ஆனால் முடியவில்லை. மறுமுனையில் இருந்த தெரஸாவுக்கே கேட்கும்படி அப்படியொரு ஆபாசக் கூச்சல்.
“பொறுங்கள். இங்கு என்னவோ பிரச்சினை. என்னவென்று பார்க்கிறேன். பிறகு உங்களை அழைக்கிறேன்” என்றவனிடம் சட்டென்று உஷாராகித் தடுத்தார் தெரஸா. “பிரச்சினை எதிலும் தலைகொடுக்காதே தாலிய்ஸின்” என்றவரின் வார்த்தைகளை அவன் கேட்கவில்லை. அவன் சுபாவம் அப்படி. ஓடிப்போய் உதவ வேண்டும், தப்பைத் தட்டிக் கேட்க வேண்டும் என்று இள வயதிலிருந்தே அவனுள் ஊறிவிட்ட சுபாவம்.
அதே இரயிலில் ரிக் பெஸ்ட் (Ricky John Best) தம் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். 53 வயதான அவருக்கு போர்ட்லேண்ட் நகர அரசு அலுவலகம் ஒன்றில் டெக்னீஷியனாகப் பணி. அது கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான். அதற்குமுன் அமெரிக்க இராணுவத்திற்காக 23 ஆண்டுகாலம் உழைத்தவர் அவர். ஈராக், ஆப்கானிஸ்தான் என்று இராணுவத்தில் தம் ஆயுளில் பாதியைக் கழித்துவிட்டு, இப்பொழுது நகரில் சிவிலியனாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். நகரிலிருந்து சுமார் 13 மைல் தொலைவிலிருந்த ஹேப்பி வேலி (Happy Valley) என்ற பகுதியில் அவரது வீடு. மனைவி, மூன்று மகன்கள், மகள் என்று ஹேப்பி குடும்பமாக அவரது நாள் நகர்ந்து வந்தது. இவருக்கும் ஒரு சுபாவம் இருந்தது. இன்னலில் உள்ளவர்களுக்கு உதவுவது.
அவரது வழக்கமான இரயில் பயணத்தின் இனிமையைக் கெடுக்கும் வகையில் யாரோ ஒருவனின் பெரும் கூச்சல் குறுக்கிட்டது. உதாசீனப்படுத்திவிட்டுத் தொடர முடியாதபடி அப்படியொரு ஆபாசக் கூச்சல். அவனை நோக்கி விரைந்தார் ரிக் பெஸ்ட்.
மிகாஹ் ஃப்ளெட்சருக்கு (Micah David-Cole Fletcher) 21 வயது. போர்ட்லேண்ட் பல்கலைக்கழக மாணவனான அவனுக்கு, கவிதைகளில் பெரும் ஆர்வம். 2013 ஆம் ஆண்டு உயர்பள்ளியில் மாணவனாக இருக்கும்போதே கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறான். வெற்றி பெற்ற அக் கவிதையின் கரு ஒரு விசேஷம். முஸ்லிம்கள் மீதான தப்பெண்ணத்தைச் சாடியிருந்தது அக் கவிதை. இரயில் பயணத்தின்போது சக பயணிகளிடம் சமூக நீதி பற்றிய கவிதைகளை வாசிப்பது அவனுக்கு பொழுதுபோக்கு. இப்படியான கவி மனமும் சமூக அக்கறையும் அமைந்திருந்த உள்ளத்தில் ஒரு சுபாவம் இருந்தது – தப்பைத் தட்டிக் கேட்பது, இன்னலில் உள்ளவர்க்கு உதவுவது.
பகுதி நேர ஊழியனாக பிட்ஸா கடையில் பணிபுரிந்து வந்தான் மிகாஹ். அன்றைய நாள் கல்லூரி வகுப்பிலிருந்து தான் வேலை பார்க்கும் பீட்ஸா கடைக்கு அந்த இரயிலில் சென்று கொண்டிருந்தான் டேவிட். அப்பொழுது ஒருவனின் பெரும் கூச்சல் அவனது கவனத்தைக் கலைத்தது. உதாசீனப்படுத்திவிட்டுப் பயணத்தைத் தொடர முடியாதபடி அப்படியொரு ஆபாசக் கூச்சல். அவனை நோக்கி விரைந்தான் மிகாஹ் டேவிட் ஃப்ளெட்சர்.
ஜெரிமி ஜோஸஃப் கிரிஸ்டியனுக்கு 35 வயது. வெகு தீவிரமான வெள்ளை இனவாதி. வலதுசாரி ஆதரவாளன். ஹிட்லரின் அபிமானி. 2002 ஆம் ஆண்டிலேயே ஆள்கடத்தல், கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு ஏழரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த கெட்டவன். வெளியில் வந்தபின்பும் சில பல குற்றங்கள் என்று வாழ்ந்து வந்தவனுக்கு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின், வாய் கட்டவிழ்த்துக் கொண்டது.
அன்றைய நாள் அந்த இரயிலில் அவனும் ஏறினான். இரயில் ஓட ஆரம்பித்ததும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சகட்டு மேனிக்கு இன வெறித் திட்டு, மதத் துவேஷக் கத்தல், ஆபாச வசைமொழி என்று உரத்தக் குரலில் அவனது கூச்சல் கச்சேரி ஆரம்பமானது. ஏதோ புத்தி பேதலித்தவனின் பைத்தியக்காரப் பேச்சைப் போலன்றி அவனது ஏச்சும் பேச்சும் மிகத் தீவிரமாக இருந்தன. பயணிகள் பலருக்கும் முகச் சுளிப்பையும் அருவருப்பையும் தொந்தரவையும் ஏற்படுத்தி அது கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ரயில் ஓட்டுநர் ஒலிபெருக்கியில், “பயணிகளுக்குத் தொந்தரவு அளிப்பவர் ரயிலை விட்டு உடனே இறங்க வேண்டும்” என்று கடும் எச்சரிக்கை விடும் அளவிற்கு அது சென்றது. ஆனால் அவன் தன் பயணத்தையும் செயலையும் தொடர்ந்துகொண்டிருந்தான்.
இரயிலில் நிறைந்திருந்த பயணிகள் கூட்டத்தில் தலைக்கு முக்காடு இட்டிருந்த 17 வயது முஸ்லிம் பெண் ஒருவரும் அவருடைய தோழி 16 வயது கறுப்பினப் பெண்ணும் அமர்ந்திருந்தனர். அவர்கள்மீது பதிந்தது துஷ்டன் ஜெரிமியின் பார்வை. வெறும் வாயை மென்று கொண்டிருப்பவனுக்கு அவல் கிடைத்தால்? இப்பொழுது அவனது ஆத்திர ஆபாச வசை மொழிகள் அனைத்தும் அந்த இரு இளைஞிகளின்மீது சரமாரியாகப் பொழிய ஆரம்பித்தன.
“சஊதி அரேபியாவுக்கு திரும்பி ஓடுங்கள்”, “என் நாட்டைவிட்டு ஓடுங்கள்”, “இன்னும் ஏன் உயிருடன் இருக்கிறீர்கள்? செத்துத் தொலையுங்கள்”, “முஸ்லிம்கள் சாக வேண்டும்” என்று வாக்கியத்திற்கு வாக்கியம் அரைப்புள்ளி, காற்புள்ளியாக ஆபாச வார்த்தைகளையும் சம விகிதத்தில் கலந்து கூச்சலிட ஆரம்பித்துவிட்டான் ஜெரிமி கிரிஸ்டியன்.
அவ்விரு இளம் பெண்களுக்கும் அச்சம் அதிகரித்துவிட்டது. பொதுவிடத்தில் அவர்கள் எதிர்பாராத அவமானம், அது ஏற்படுத்திய கூச்சம் என்று இருவரும் நடுங்கிப்போனார்கள். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவோம் என்று முடிவெடுத்து இரயிலின் பின் பெட்டிக்கு அவர்கள் நகர ஆரம்பித்தனர். ஆனாலும் ஜெரிமியின் வசவு அடங்காமல், அவனும் அவர்களை நோக்கி நகர, அவனுக்கும் அப் பெண்களுக்கும் இடையே தடுப்பாக வந்து இடைமறித்தனர் மூவர் – ரிக்கி ஜான் பெஸ்ட், தாலிய்ஸின், மிகாஹ் டேவிட்-கோல் ஃப்ளெட்சர்.
தாலிய்ஸின் ஜெரிமியிடம், “நீ இந்த இரயிலை விட்டு வெளியேற வேண்டும். தயவுசெய்து முதலில் இறங்கு” என்று கத்தினான். மிகாஹ் டேவிட், ஜெரிமியை அங்கிருந்து நகர்த்தும் விதத்தில் தள்ளினான். “நீ என்னை இன்னொருமுறை தொட்டுப் பார், கொன்றுவிடுவேன்” என்று மிரட்டினான் ஜெரிமி. சொன்னதுடன் நின்றுவிடாமல் மடியில் வைத்திருந்த கத்தியை எடுத்து மூவரின் கழுத்தையும் சீவினான் ஜெரிமி. இரயில் பெட்டியில் ரத்தம் தெறித்தது. பயணிகள் கூட்டம் அலறியது.
இதற்கிடையே அடுத்த நிலையத்தை இரயில் வந்தடைய, பயணிகள் களேபரத்துடன் ஓடி வெளியே இறங்கினர். சிலர், அம்மூவருக்கும் முதலுதவி புரிய ஆரம்பித்தனர். ஜெரிமி கிரிஸ்டியன் தெருவில் இறங்கி ஓட, ஒரு கூட்டம் அவனைத் துரத்திக்கொண்டே ஓடியது. காவலர்களின் அவசர எண்ணுக்கு செய்தி பறக்க, சடுதியில் போலீஸ் வாகனங்களும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் படையாய் வந்து குறுக்கும் நெடுக்கும் குவிந்தன.
அதற்குள் ரிக்கி ஜான் பெஸ்ட் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.
“இந்த இரயிலில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள். நான் அவர்கள் அனைவரையும் விரும்புகிறேன் என்று” கடைசி வாக்கியத்தை உதிர்த்துவிட்டு தாலிய்ஸின் மருத்துவமனையில் மரணமடைந்தான்.
மிகாஹ் டேவிட்-கோல் ஃப்ளெட்சர் மட்டுமே கழுத்தில் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்தான்.
ஓடி ஒளிந்த ஜெரிமி கிரிஸ்டியனை அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தது. கொஞ்சமாவது வருத்தம் இருக்க வேண்டுமே! ம்ஹும்! “ஆமாம்! அவர்கள் கழுத்தில் குத்தினேன். நான் சிறையில் மகிழ்ச்சியாக சாவேன். தாராளாவாதம் (Liberalism) இதைத்தான் உங்களுக்குத் தரும்” என்றான்.
மரணமடைந்த நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்த மே 27 ஆம் நாள் மாலை குறிப்பிட்ட இரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பிவிட்டது. இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு உதவும் வகையில் நிதி உருவாக்கி அதில் மில்லியன் டாலர் நன்கொடை சேர்ந்தது.
ஆரகன் மாநில கவர்னர் கேட் ப்ரவுன் (Kate Brown) உரையாற்றினார். “வெறுப்பும் அச்சமும் நம்மைப் பிளவுபடுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. மாறாக, பிறரைப் பாதுகாக்க தம் உயிர்களைத் தியாகம் புரிந்த இந்த நல்லுள்ளம் கொண்டவர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு அன்பான, கருணையான ஆரகனுக்காக நாம் ஒன்றுபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இரயில்களும் ஜெரிமி போன்ற கிருமிகளும் அதிகரித்துள்ள இன்றைய இந்தியாவுக்கும் பாந்தமாய்ப் பொருந்தும் உரை அது.
-நூருத்தீன்
சமரசம் 1-15 ஆகஸ்ட் 2017 இதழில் வெளியான கட்டுரை
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License