சுவிட்ஸர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் நவம்பர் 9ஆம் நாள் செவ்வாயன்று ஐக்கிய நாட்டு மனித உரிமைக் குழுவினர் கூடி ஓர் அறிக்கை வெளியிட்டனர். அது, உலகநாடுகள் பேணிவரும் மனித உரிமையின் இலட்சணம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகும் அறிக்கை. அதில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு… என எண்ணிட்டு இருநூற்றி இருபத்தி எட்டுப் பரிந்துரைகள் எழுதப்பட்டுள்ளன. கண்டனங்கள் என்பதைத்தான் “பரிந்துரைகள்” என்று ஐ.நா.ம.உ.கு நளினமாகச் சொல்கிறது. சரி, ‘பரிந்துரைகள்’ எந்த நாட்டிற்கு?

ஆப்கானிஸ்தான்?

சீனா?

வட கொரியா?

ஈரான்….?

ம்ஹும்! உலகின் சட்டாம் பிள்ளைக்கு!

பூதக்கண்ணாடியை கண்ணில் மாட்டிக் கொண்டு, ஏதோ ஓர் அசட்டுத் தைரியத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகளைப் பார்த்த மனித உரிமைக் குழுவினர், “இவ்வளவு கேவலமாக இருக்கிறதே, பரிந்துரையாக ஒன்றிரண்டு செய்தே ஆகவேண்டும்,” என்று எழுத ஆரம்பித்து அது என்னடாவென்றால் 228.

இதைப்போல் குற்றம் சுமத்துவதை அமெரிக்காதான் செய்யும். தனக்குத் தானே மனித உரிமைக்கான உலகச் சட்டம்பிள்ளையாக நிர்ணயித்துக் கொண்டு இதர நாடுகளின் மூக்கின்மேல் விரலை வைத்து அழுத்தி, “இதோ பார், உன் நாட்டில் இப்படி இப்படியெல்லாம் நடக்கிறது. மனிதனின் உரிமைகளையெல்லாம் நீ பறித்தெறிந்து … இன்னின்ன அக்குறும்பு அவன் மேல் நீ நிகழ்த்தி, அவன் லோல் படுகிறான் பார், அநியாயமாகச் சாகிறான் பார்” என்று சொல்லும். மிகக் காட்டமாய்ச் சொல்லும்.

ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழ். ஐக்கிய நாட்டு மனித உரிமைக் குழு, “உன் ஊரில் உன் மண்ணிலேயே நடக்கிறதே, கவனி கொஞ்சம். இந்தா ப்ரிஸ்க்ரிப்ஷன்“ என்று அமெரிக்காவிடமே நீட்டியுள்ளது.

“குவாண்டனமோக் கொட்டடியையும் பரவலாய் உலகம் முழுவதும் அமெரிக்கா நிறுவி வைத்திருக்கும் இரகசியத் தடுப்புக் காவல் நிலையங்களையும் மூடவேண்டும். தடுப்புக் காவலில் உள்ளவர்களையெல்லாம் எவ்வகையான விசாரணையுமின்றி கொடுங்கோலான முறையில் தண்டித்து, கொலைபுரிந்து ஆட்டம் போடுபவர்களைத் தண்டிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் வெனிசூலா நாட்டுப் பிரதிநிதி, ஜெர்மன் முன்டாரைன் ஹெர்னான் (German Mundarain Hernan). முதுகெலும்பைக் கழட்டிக் கீழே வைக்காத நாடுகளில் வெனிசூலா ஒன்று.

இதையெல்லாம் கேட்டு ஒபாமா துடிதுடிக்கப் போகிறாரா என்ன? உலக நலனுக்கும் அமைதிக்கும் ஊண், உறக்கமின்றிப் பாடுபடும் எங்களுக்கு ”எங்களைப் பிடிக்காத விரோத நாடுகளின் அரசியல் கடுப்பு அந்த அறிக்கை” என்கிறது அமெரிக்கா.

எனில் அமெரிக்காவை நேசிக்கும் நேச நாடுகள்?

அமெரிக்காவின் ஜிக்ரி தோஸ்த்துகளான ஃபிரான்ஸ், அயர்லாந்து ஆகியன, “நீங்கள் சமாதான விரும்பிதான். ஆனாலும் உங்கள் செயல்பாடுகளில் பெரிய தவறு உள்ளது. கவுன்டானமோவை மூடிப் பூட்டுப் போட்டுவிட்டு, ஒபாமா தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்,” என்று கூறியுள்ளன. பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் டஜன் கணக்கிலான இதர நாடுகளெல்லாம் “அமெரிக்கா மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என்று சொல்கின்றன.

மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்காவின் மனித நேயக் கொள்கையை, “உச்சபட்ச நயவஞ்சகம்” என்கின்றன. ”மூவாயிரம் கைதிகள் அமெரிக்காவில் மரண தண்டனைக்குக் காத்திருக்கின்றனர். இது எப்படி உலகத்துக்குப் புத்தி சொல்லப் புறப்படுவது? முதலில் அமெரிக்கா தனது முதுகில் நன்றாக சோப்பு போட்டுத் தேய்த்துக் குளிக்கட்டும்,” என்று அவர்கள் பங்கிற்குக் கடுப்புத் தெரிவிக்கின்றனர்.

A.N.S.W.E.R (Act Now to Stop War and End Racism) எனப்படும் கண்டன அமைப்பொன்று அமெரிக்காவில் உள்ளது. அதன் வாஷிங்டன் பிரிவின் இயக்குநர் ப்ரையன் பெக்கர் (Brian Becker). அவர் “பக்“கென்று ஓர் உண்மையைத் தெரிவி்க்கிறார். ”மனித உரிமை மீறலை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கும் அமெரிக்கா, தனக்குப் பிடிக்காத, தன்னுடன் ஒத்துவராத எதிரி நாடுகளின்மீது ‘நீ மனித உரிமையை மீறுகிறாய்’ என்று அரசியல் பந்தாட்டம் நடத்துகிறது. அந்த நாடுகள் மனித உரிமைகளை மீறுவதால் எல்லாம் அமெரிக்காவிற்கு எதிரி நாடுகள் அல்ல. அந்த நாட்டு அரசாங்கத்தை மாற்ற வேண்டும். அதுதான் அமெரிக்காவின் இலட்சியம். அதற்கு இது ஒரு சாக்கு,” என்று சொல்லியிருக்கிறார். “தில்“காரர் போலிருக்கிறது.

அமெரிக்கா தனது எதிரிகளாய்க் கருதும் சிரியா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் தங்களின் குடிமக்களை அடக்கித் துன்புறுத்துகிறார்கள் என்று கண்ணீர் வடிக்கிறது. பிறகு திரும்பி, கண்களைத் துடைத்துக் கொண்டு தனது மக்களைக் காலவரையற்ற தடுப்புக் காவலில் உள்ளே தள்ளுவது, அவர்களிடம் இனவெறியைக் கடைப்பிடிப்பது, வசதி குறைகளுள்ள சிறைச்சாலைகளில் அடைப்பது … என்று அமெரிக்கா நிகழ்த்தும் அழிச்சாட்டியங்கள் பட்டியலிடப்பட, அவற்றிற்கெல்லாம் அமெரிக்கா மறுத்துப் பசப்ப வேண்டிய நிலை இப்பொழுது.

  • சிறைச்சாலைகளில் 23 இலட்சம் கைதிகள்;
  • குழந்தைகளுக்கும் ஆயுள் தண்டனை;
  • தகுந்த ஆவணங்கள் இன்றி வெளிநாடுகளிலிருந்து குடியேறிய நூற்றுக்கணக்கானவர்கள் தங்களது நாடுகளுக்குத் திரும்பிப்போக முடியாமல் சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும்போது இறந்தது…

இவையெல்லாம் அமெரிக்கா பற்றிய இதர புள்ளி விவரங்களில் சில.

இதனுடன் சேர்த்து, “முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அச்சுறுத்தலும் அமெரிக்காவின் மனித உரிமை மீறலுக்கு மற்றொரு அவப்பெயரைச் சேர்த்துள்ளது. FBI எனும் அமெரிக்க உளவு அமைப்பு, குற்றங்களைக் கண்டுபிடித்ததாகக் காரணங்காட்டி, “நாசவேலைகளில் ஈடுபட இருந்தார்கள்” என்று நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளது. அவை அரசாங்காங்கத்தால் இட்டுக்கட்டப்பட்ட, ஏற்பாடு செய்யப்பட்ட கைதுகள். இதர நாடுகள் தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பொறி வைத்துப்பிடிப்போம் எனக் கூறுவதை அமெரிக்கா இப்படி செய்து வருகிறது,” என்றும் பலத்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் அமெரிக்கா என்ன சொல்லப் போகிறது? ஒன்றுமில்லை! அந்த அறிக்கை பேப்பரை வாங்கி, துடைக்க வேண்டியதைத் துடைத்து எறிந்து விடும். அவ்வளவே!

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 16 நவம்பர் 2010 அன்று வெளியான கட்டுரை

Related Articles

Leave a Comment