முதல் (தர) அநீதி

by admin

ந்திய முஸ்லிம்களுக்கு இது காறும் சட்டசபைகளில் இருந்துவந்த தனித்தொகுதித் தேர்தல் முறையை ஒழித்து விடுவதென்று, இந்திய யூனியன் அரசியல் நிர்ணய சபையில் முஸ்லிம்களின் கருத்துக்கு விரோதமாக முடிவு செய்யப்பெற் றிருக்கிறது. நாடு பிரிக்கப்பட்ட பின்னர், ஹிந்துஸ்தான் சர்க்கார், இங்குள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்குச் செய்துள்ள முதலாவது மகத்தான அநீதி இதுதான். ‘முதல்தர அநீதி’ என்றால், முற்றிலும் பொருந்தும்.

இஃது இந்திய முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவுக்கு முரணானது. அவர்களின் ஜனநாயக உணர்ச்சியை அரசியல் நிர்ணய சபை மதிக்கவில்லை. முஸ்லிம் மைனாரிட்டிகளின் முதுகின்மேல் குத்துவதுபோன்ற இச்செயல் எதிர்கால உறவுமுறையை நிச்சயமாகப் பாதிக்கும்.

முஸ்லிம்களுக்காகச் சில ஸ்தாபனங்களை ஒதுக்கி வைப்பதால் முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாத்து விட்டதாகாது. முஸ்லிம்களின் பிரதிநிதிகளை முஸ்லிம்களே தேர்ந்தெடுப்ப தென்பதுதான் தனித் தொகுதியின் கருத்து. முஸ்லிம் பிரதிநிதிகளை மற்றவர்களும் தேர்ந்தெடுப்பதென்று ஏற்பட்டால் முஸ்லிம்களின் உண்மையான பிரதிநிதிகள் அங்கே வரமுடியாது. முஸ்லிம் நலன்களைப் புறக்கணிக்கத் தையாராயிருக்கும் முஸ்லிம் வேஷதாரிகளே அங்கே வரமுடியும். இவர்கள் அங்கே வருவதற்காகவே ஸ்தானங்களை ஒதுக்குவதை விட ஒதுக்காமலிருப்பதே நலம்.

இதுவரை இருந்துவந்த தனித்தொகுதித் தேர்தல் முறையை ஹிந்துஸ்தான் அரசியலார் ஒழிக்கத்துணிந்தது ஏன்? அவர்கள் விரும்பாத “பாக்கிஸ்தான்” இந்த நாட்டில் இடம்பெறக் காரணமாயிருந்தது, அத் தனித் தொகுதித்தேர்தல் முறைதான் என்று ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் கிளிப்பிள்ளை மாதிரி பேசுகிறார். ஒவ்வொரு காங்கிரஸ் பத்திரிகையும் அதனையே திருப்பித் திருப்பி எழுதிகின்றது. எனவே தனித் தொகுதித் தேர்தல் முறையை ஒழித்து விட்டால் வேற்றுமை யுணர்ச்சியும் பிரிவினைக் கிளர்ச்சியும் தோன்றா வென்று கூறுகின்றார்.

தனித் தொகுதியை ஒழிப்பதற்குப் பல வேறு காரணங்கள் உண்டு. எனினும், அவர்கள் கூறும் வெளிப்படையான காரணம், பாக்கிஸ்தான் பிறந்தது தனித் தொகுதியால் தான் என்பது, பாக்கிஸ்தான் பிரச்னையில் பொதிந்து கிடக்கும் உண்மையை உணராமையினாலேயே இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சி இங்கே இருக்கின்றவரையில் தான் இந்தியா ஒரே தேசமாயிருக்க முடியும். ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொது எஜமானர்களாகிய பிரிட்டிஷார் இங்கே இருந்தவரையில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சமப் பங்காளிகள் போலவே சமாதானமாய் வாழ்ந்துவருவது சாத்தியமா யிருந்தது. பிரிட்டிஷார் இங்கிருந்து வெளியேறுவதென்று ஏற்பட்டவுடன் அதிகாரம் யார் கைக்கு மாறுவது என்ற பிரச்னை இயல்பாகவே எழுவதாயிற்று. அப்பொழுது இந்துக்களும் முஸ்லிம்களும் இந்த மிகப் பெரிய தேசத்தைச் சொந்தம் பாராட்டித் தங்களுக்குரிய பங்கைப் பெறுவதில் முன்னணியில் நின்றனர். முஸ்லிம்கள் அவ்விதம் பெற்றது தான் பாக்கிஸ்தான். அஃது அவர்களின் பிறப்புரிமை. இன்று விலகிய பிரிட்டிஷ் ஆட்சி, சென்ற நூற்றாண்டில் விலகுவதாயிருந்தாலும் இந்தப் ‘பாக்கிஸ்தான்’ அவர்களுக்குக் கிடைத்திருக்கு மென்பதில் ஐயமில்லை. இன்று பாக்கிஸ்தான் என்று வழங்குவது சென்ற நூற்றாண்டில் வேறு பெயரால் வழங்கியிருக்கும். இதுதான் உண்மை. பாக்கிஸ்தான் பிரச்னை இன்றுநேற்றுக் கிளம்பியதல்ல. மிகப்பழமையானது. பன்னூறு வருஷங்களுக்கு முந்தியது. 800 வருஷகாலம் எவ்வளவோ மேன்மையாக இந்த நாட்டின் பல பாகங்களை ஆண்ட முஸ்லிம்கள் தங்களுக்குச் சொந்தமான கலாசாரங்களையும் கல்வி நாகரிகத்தையும் இந்நாட்டினில் நிலை பெறச் செய்தனர். மிகவும் ஆழமாக வேரூன்றிய அவர்களின் நாகரிகம், நாளடைவில் ஹிந்துக்களின் நாகரிகத்துடன் ஐக்கியமாகி, அது முஸ்லிம்களுடையதுதானா வென்று கூட அடையாளம் தெரியாமல் உருமாறிப் போனதில் ஆச்சரியமில்லை! பன்னூறு வருஷங்களுக்கு முந்தியதும் மிகப் பழமையானதுமான முஸ்லிம்களின் பண்பும் நாகரிகமும் நாளடைவில் இந்துக்களின் நாகரிகத்துடன் ஐக்கிய மாகிவிடவே, அதன் விளைவாக முஸ்லிம்களும் ஹிந்துக்களும் ஒரே இனம் தான் என்னும் விசித்திர வாதமும் தலைதூக்கத் தொடங்கிவிட்டதில் வியப்பில்லை யல்லவா?

மிகவும் தெளிவானதும் உண்மையானதுமான இந்த விஷமத்தை ஊர்ஜிதம் செய்வது போலவே இன்றும் நாளையும் முஸ்லிம்களை நோக்கி அடிக்கடி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது:

“இந்தத்தேசம் உங்களுக்கும் எங்களுக்கும் சொந்தமானதாயிருக்கும் பொழுது ஏன் பிரிவினை கோருகிறீர்கள்?” என்பதே முஸ்லிம்களை நோக்கிக் கேட்கப்படும் கேள்வி. இக்கேள்வியின் கருத்து வேறு. ஆனால், அதில் பொதிந்து கிடக்கும் உண்மை என்ன? இந்த உபகண்டம் முஸ்லிம்களுக்கும் உரியது என்பதுதான். இந்த உண்மையை மனத்தில் வைத்துக் கொண்டு பார்த்தால், முஸ்லிம்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை யாவரும் புரிந்து கொள்ளமுடியும். பிரிட்டிஷ் ஆட்சியில் சுமார் 150 வருடகாலம் இந்தியாவானது ஏகதேசமாக இருந்து விட்டதால், அஃது எப்பொழுதும் அப்படியேதான் இருக்கவேண்டுமென்று கூறினால், சரித்திரம் அறிந்த மாணாக்கர் யாரும் அதனை ஒப்புக் கொள்ள மாட்டார்.

தேசிய விவகாரங்களில் எதையும் சரித்திரக் கண் கொண்டே பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் உண்மை விளங்கும். வழி துலங்கும். பிரச்னையும் தீரும்.

பள்ளிக்கூடத்தில் இருந்தவரையில் சரித்திரப் பாடத்தில் நிறைய மார்க்கு வாங்கிவிட்டு, தேச அரசியலில் தலைவர்களாக வந்தவுடன் முற்கால சரித்திரத்தையம் அதன் படிப்பினைகளையும் அறவே மறந்து விடுவதால். என்ன பயன்? முற்கால சரித்திர வரலாற்றை அறவே மறந்து, பாரத மாதாவை வெட்டுவதா வென்று விளையாட்டாய்க் கேட்ட கேள்வியின் விளைவை, இன்று நாம் கண்முன்னே காண்கின்றோம். பாரதமாதா உண்மையிலேயே வெட்டப் பட்டதாக நினைத்துப் பாமரர்கள் ஒருவருக் கொருவர் (ஹிந்துக்களும் முஸ்லிம்களும்) வெட்டிக்கொண்டு சாவதை நினைக்க நினைக்க நெஞ்சம் பதைக்கிறது.

பாரதமாதாவை வெட்டுவதா வென்று கேட்ட கேள்வி மிகவும் முட்டாள்தனமானது. பாமரர்களின் வெறிச் செயலைத் தூண்டுவதான மேற்படி கேள்வி, நாட்டிலே விளைவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அறிவுப் பஞ்சம் நிறைந்த இந்த நாட்டிலே அதன் தலைவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் பேசியிருக்கவேண்டும்; எழுதியிருக்க வேண்டும்; சரித்திரக் கண்கொண்டு எதையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டும். அங்ஙனம் செய்திருந்தால், மக்களெல்லாம் மாக்களாய் மாறி வெறிச் செயலில் இறங்கித் தங்களைத் தாங்களே வெட்டி வீழ்த்திக் கொள்ளுமளவிற்கு அறியாமையின் சிகரத்தை எட்டிப் பிடித்திருக்க மாட்டார்கள்.

தனித் தொகுதி முறையால்தான் பாக்கிஸ்தான் பிரச்னையும் தோன்றிற் றென்று நினைப்பது அறியாமை. அன்னியர் இங்கே அடியெடுத்து வைப்பதற்கு முந்தியே இந் நாடு சுதந்திரம் பெறுவதாயிருந்தாலும் இரண்டாகத்தான் பிரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. உண்மை இவ்வாறிருக்க, சமீபகாலத்தில் தோன்றிய தனித் தொகுதி முறையால்தான் பிரிவினைப் பிரச்னையும் பாக்கிஸ்தான் கிளர்ச்சியும் எழுந்தனவென்று கூறுவதில் அர்த்தமில்லை.

சொல்லப்போனால், தனித் தொகுதி என்பது மைனாரிட்டிகளின் பாதுகாப்புமல்ல. வேற்றுமை யுணர்ச்சிக்கு வித்துமல்ல. மைனாரிட்டிகளின் மனப்பான்மையை, கருத்தை, விருப்பத்தை, ஜனநாயகமுறையில் நேர்மையாகத் தெரிந்துகொள்ளும் கருவிதான் தனித்தொகுதி என்பது. ஒரு நல்ல சர்க்காரானது மக்களின் தேவை என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து கொண்டால்தான் அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும். முஸ்லிம்களின் தேவைகள் என்னவென்று தெரிந்து கொள்ளத் தனித் தொகுதிதான் சரியான சாதனம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள யாரும் முஸ்லிம்களுக்குத் தனித் தொகுதித் தேர்தல் முறையை மறுக்கமுடியாது. பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் ஜன நாயக ரீதியில் நடக்கும் சர்க்காருக்கு அழகு. முஸ்லிம் பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு இசைய இந்திய யூனியன் நடப்பதாயின், அது தனித்தொகுதித் தேர்தல் முறையை முஸ்லிம்களுக்கு அளிக்கதான் வேண்டும்.

இந்திய டொமினியன் அரசியல் நிர்ணய சமைபயில் உள்ள முஸ்லிம் அங்கத்தினர்களின் பெரும்பான்மை விருப்பத்திற்கு விரோதமாகத் தனித்தொகுதியை இந்திய டொமினியன் சர்க்கார் ஒழித்துவிட முன் வந்திருப்பது முஸ்லிம்களின் ஜனநாயக உணர்ச்சியை மதிப்பதாகாது. முஸ்லிம் மைனாரிட்டிகளின் முதுகின்மேல் குத்துவது போன்ற மேற்படிமுடிவு, ஹிந்துஸ்தான் சர்க்கார் முஸ்லிம்களுக்குச் செய்த முதல்தரமான அநீதி என்பதில் ஐயமில்லை. இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவது இங்குள்ள முஸ்லிம்களின் முதற்கடமையாகும்.

போராடுவதென்றால் எப்படி? கத்தியும் ஈட்டியும் கிர்ப்பானும் கையில் தாங்கியா? இல்லை. பேனா இருந்தால் போதும். அதுவே மகத்தான சக்தி வாய்ந்தது. பாக்கிஸ்தான் பிரச்னையில் பெரிய பீரங்கிக் குண்டுகளுக்கெல்லாம் பதில் சொன்னது ஜின்னாஹ்வின் பேனா முனைதான்! எனவே, சக்தி வாய்ந்த பேனாவும் பேச்சு வன்மையும் படைத்த ஒரே ஒரு தலைவர் வேண்டும். ஆனால், அவர் ஜின்னாஹ்வைப்போன்ற அஞ்சா நெஞ்சமும் தன்னல மறுத்த தியாகபுத்தியும் படைத்தவராயிருத்தல் வேண்டும்.

இச்சமயத்தில் இந்திய முஸ்லிம்களிடையே ஒற்றுமையும் கட்டுப்பாடும் ஓங்குமாயின், தக்க தலைவர் தானே தோன்றுவார்.

தென்னிந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்களின் கடமை தெளிவு. உடனே நாடெங்கும் ஜில்லாமாகாண மகாநாடுகள் கூட்டப் பெறுதல் வேண்டும், தனித்தொகுதியைப் பற்றி அரசியல் நிர்ணய சபை செய்துள்ள முடிவைப் பொது மக்களிடம் விளக்கிக்கூறி, தனித் தொகுதியே வேண்டுமென்று தீர்மானம் செய்து, அத்தீர்மானங்களை அரசியல் நிர்ணய சபைக் காரியதரிசிக்கும் ஹிந்துஸ்தான் சர்க்காருக்கும் தந்தி மூலம் தெரிவிக்க வேண்டும். தனித்தொகுதியை ஆதரித்து நாடெங்கும் கிளர்ச்சி செய்யத் தொடங்கினால் ஜனநாயகத்தில் பற்றுள்ளவர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்திய டொமினியன் சர்க்கார் என்ன செய்யப் போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்!

முதல் (தர) அநீதி

– எஸ். ஏ. கமால்


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947
பக்கம்: 9-11

Related Articles

Leave a Comment