மிஸ்ரிலிருந்து வாழ்த்து

by admin

சென்னை ஜமாலியா மத்ராஸாவிலும் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மத்ரஸாவிலும் அரபிக் கல்வி கற்றுத் தேர்ந்து பாண்டித்தியம் பெற்று, இலங்கையில் அரபி ஆசிரியர் உத்தியோகம் பார்த்து, பின்னர் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி சபையாரால் காஹிராவிலுள்ள அஸ்ஹர் சர்வகலாசாலைக்கு மேற்படிப்புக்காக அனுப்பப் பட்டிருக்கும் ஆலீ ஜனாப் உ. ஆ. உபைதுஸ் ஸத்தார் என்னும் அறிஞர் 19-10-47 அன்று காஹிராவிலிருந்து எமக்கெழுதிய விமானத்தபாலின் சுருக்கம் வருமாறு:

அறிஞீர், பெரியீர் பா. தாவூத்ஷா அவர்களுக்கு மௌலவீ உ. ஆ. உபைதுஸ் ஸத்தார் எழுதுவது….என்னுடன் 4 மௌலவீமார்கள் இங்குள்ள அஸ்ஹர் சர்வகலாசாலைக்கு வந்து சுமார் ஒரு வருடமாகிறது. எமது படிப்பு ரொம்பவும் கடினமும் ஒழுங்குமுள்ள தென்பது தங்களுக்குச் சொல்லாமலே விளங்கும். வருடாவருடம் கடின சோதனையுமுண்டு………

தங்களைப்பற்றி இவ்விடம் வந்த தென்னிந்திய வியாபாரி ஒருவரிடம் விசாரித்தேன். தாங்கள் திரும்பவும் பத்திரிகை வெளியிடவும், பிரசுரலாயத்தைத் தொடர்ந்து நடத்த நூற்கள் பலவும் வெளியிடப்போவதாகவும் அறிந்து ரொம்பவும் சந்தோஷம். இறைவன் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தோருக்கும் நோயற்ற வாழ்வையும் நீடிய ஆயுளையும் சௌபாக்கிய சம்பத்தையும் அருள அனவரதமும் இறைஞ்சுகின்றேன். எம்மிடையே அறிஞர் பலர் இருக்கின்றனர். இவர்கள் வியாபாரிகளாகவும் மற்றும் பல தொழில்களிலுமே (ஈடுபடுகின்றனர்). அவர்கள் அறிவு அவர்களுடனேயே மறைந்து விடுகின்றன. தங்கள்போன்ற ஒரு சிலராகிலும் தங்கள் சேவையை உரிய காலத்தில் செய்தால் நம் மக்கள் பெரிதும் பயனடைவார்கள். நபியகள் நாயகமான்மியம் போன்ற கிரந்தங்களின் பூராபாகங்களையும் வெளியிட முயற்சிப்பதுடன், மற்றும் முஸ்லிம்களுக் கவசியமான நூற்களை வெளியிடவும் போதிய சிரத்தை எடுத்துக் கொள்வீர்களென எண்ணுகிறேன்………

திரும்பவும் தா. இ. வெளிவருங் காலத்தில் எனக்கும் ஒரு பிரதி அனுப்பி வைக்கவும். நான் ஆரம்பத்திலிருந்தே ஒரு அபிமானியாக இருந்து வந்தே னென்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

இங்ஙனம்:
(ஒப்பம்) உ. ஆ. உபைதுஸ் ஸத்தார்.


தாருல் இஸ்லாம், நவம்பர் 1947
பக்கம்: 37

Related Articles

Leave a Comment