51. நூருத்தீனின் எடிஸ்ஸா மீட்பு
நூருத்தீன் அலெப்போவின் அதிபராகப் பொறுப்பு ஏற்ற போது, இமாதுத்தீன் ஸெங்கியின் மரணத்தை அடுத்துச் சிதைந்து போயிருந்த கட்டுக்கோப்பு ஒரு பிரச்சினை ஆக இருந்தது. அச்சூழலைப் பயன்படுத்தி அலெப்போவின் மீது பாயத் தயாராக இருந்த அந்தாக்கியாவின் முனைப்பு வேறோர் ஆபத்தாக உருமாறக் காத்திருந்தது. தமது அதிகாரத்தை நிலைநாட்டி, பாதுகாப்பை பலப்படுத்தி, நிலைமையைச் சீர் செய்யும் பணியில் நூருத்தீன் மூழ்கியிருந்தபோதுதான் எடிஸ்ஸாவிலிருந்து அந்த அவசரச் செய்தி வந்தது. இரண்டாம் ஜோஸ்லினிடம் எடிஸ்ஸா வீழப் போகிறது என்றது அதன் தலைப்பு.
இமாதுத்தீன் ஸெங்கியோ போய்ச் சேர்ந்து விட்டார்; சிதறிக் கிடக்கிறது அவர் ஏற்படுத்தியிருந்த ஆட்சி. தத்தம் ஆட்சிப் பரப்பின் விவகாரங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள் அவருடைய புதல்வர்கள். தொலைவிலுள்ள எடிஸ்ஸாவைக் கவனிக்க அவர்களுக்கு ஏது நேரம்? இதுதான் தருணம். விட்டால் மீண்டும் கிட்டுமா இந்த வாய்ப்பு? அந்த எண்ணங்கள் அளித்த உற்சாகத்தில், துரித வேகத்தில் படை திரட்டினார் இரண்டாம் ஜோஸ்லின். எடிஸ்ஸாவில் குடியிருந்த அர்மீனிய கிறிஸ்தவர்களுக்குத் தூது அனுப்பி, நைச்சியமாகப் பேசியதில் அவர்கள் அப்படியே ஜோஸ்லின் பக்கம் சாய்ந்தனர்.
முதல் கட்டமாக வெளியிலிருந்து ஜோஸ்லின் தாக்க, உள்ளே இருந்த அர்மீனியர்கள் உள்குத்து குத்தி உதவ, எடிஸ்ஸாவின் முதல் பகுதித் தற்காப்பு அரண்கள் முறிந்தன. முஸ்லிம் காவற்படையினர் பலமான பாதுகாப்புடன் அமைந்திருந்த கோட்டையினுள் புகுந்து பூட்டிக்கொண்டனர். அதை முற்றுகை இட்டார் இரண்டாம் ஜோஸ்லின். அக்கோட்டை வீழ்ந்தால் தீர்ந்தது எடிஸ்ஸா.
எடிஸ்ஸாவுக்கான முக்கியத்துவங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அது இமாதுத்தீன் ஸெங்கி தம்முடைய ஆட்சிக்குச் சூட்டிய மணிமகுடமல்லவா?அந்த வெற்றி அவருடைய புகழை உரத்து முழங்கும் எக்காளம் ஆயிற்றே. அந்நகர் மீண்டும் பரங்கியர் வசமாவது வெறுமே அதன் வீழ்ச்சி மட்டுமா? முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் வீரியத்தை, மனோ தைரியத்தைத் துடைத்து எறிந்து விடுமே அவ்வீழ்ச்சி. ஸெங்கி அடித்தளம் இட்ட வம்சாவளிக்கு ஏற்பட்டுள்ள பெரும் சோதனையல்லவா?
செய்தி வந்து சேர்ந்த கணத்தில் பிரச்சினையின் பேராபத்தை நூருத்தீன் உடனே கிரகித்தார், அலெப்போ படையினருக்குக் கட்டளை இடப்பட்டது. நொடி தாமதமின்றி தயாரானது படை. போர் ஆயத்தங்கள் புயல் வேகத்தில் முடிவுற்றன. செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பித்தவரின் மூச்சு ஆசுவாசம் அடையும் அளவிற்காவது தாமதித்தாரா என்று தெரியவில்லை, மின்னல் வேகத்தில் எடிஸ்ஸாவை நோக்கித் தம் படையினருடன் பறந்தார் நூருத்தீன்.
வேகம்! சுணக்கத்திற்கும் இளைப்பாறுதலுக்கும் இடம் தராத வேகம்! ஜோஸ்லினின் தற்காப்புக்கு அவகாசம் அளிக்க மறுக்கும் வேகம். சிந்தை முழுவதும் வேகம். அதை மட்டும் நிரப்பி, சீறிப் பாய்ந்தது நூருத்தீனின் தலைமையிலான படை. இரவோ, பகலோ இலக்கை எட்டும் வரை ஓயவில்லை, வியர்வையை உதறவும் அவகாசம் எடுக்கவில்லை. அவர்கள் விரைந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சில குதிரைகள் களைப்புற்று, சோர்வுற்றுச் சரிந்து சாய்ந்தன. அவற்றை அப்படி அப்படியே பாதையில் விட்டுவிட்டு, தொடர்ந்து விரைந்தது படை.
எடிஸ்ஸாவின் உதவிக்கு அலெப்போவிலிருந்து படை திரண்டு வருகிறது என்ற செய்தி ஜோஸ்லினுக்கு வந்து சேர்வதற்குள் அவர் எதிரே மூச்சிரைத்தபடி வந்து நின்றது நூருத்தீனின் படை. தற்காப்புக்கு என்ன ஏற்பாடு செய்ய, தாக்குவதற்கு ஆயுதங்களை எப்படி விரைந்து எடுக்க? திகைத்து, அதிர்ந்து, அஞ்சி நின்றார் இரண்டாம் ஜோஸ்லின். எதிர்த்துப் போரிடும் அளவிற்கு எல்லாம் அவரிடம் துணிச்சல் இல்லை. ஒரே முடிவு. இரவோடு இரவாக அவர் தப்பித்து ஓடினார். அவருடன் தப்பிக்க முனைந்த அவருடைய ஆதரவாளர்கள் மட்டும் வசமாகச் சிக்கினர். கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர்.
அர்மீனிய கிறிஸ்தவர்களை – இவர்கள் சிலுவைப் படையின் கிறிஸ்தவர்கள் போன்ற தீயவர்கள் அல்லர், நகரின் பூர்வ குடிகள், என்ற அடிப்படையில்தாமே இரண்டு ஆண்டுகளுக்கு முன் இமாதுத்தீன் ஸெங்கி மண்ணின் மைந்தர்களான அவர்களை – விட்டு வைத்தார்? அதை மறந்து அவர்கள் துரோகிகளாக மாறலாமோ? பரங்கியர்களுடன் இணைந்து, இரண்டகம் செய்ய இறங்கியபின் அவர்களை என்ன செய்வது? முஸ்லிம்களின் முதுகில் குத்தி அழிக்கத் துணை போகும் அளவிற்கு ஆனபின் அவர்களிடம் என்ன இரக்கம்? கருணை, மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமின்றி ஆண்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். பெண்களும் பிள்ளைகளும் அடிமைப்படுத்தப்பட்டனர். எடிஸ்ஸா காப்பாற்றப்பட்டது.
துரோகிகளிடமும் போரிடும் எதிரிகளிடமும் மன்னராக நூருத்தீன் நடவடிக்கை எடுத்ததற்கும் மக்களின் அரசனாக அவர் அதன்பின் நிர்வாகம் நடத்தியதற்கும் வேறுபாடு இருந்தது. பொதுவாக, தவறிழைப்பவர்களை மன்னிப்பதில் அவருக்குத் தயக்கமே இருந்ததில்லை என்றுதான் அக்காலத்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். சதா மக்கள் நலன் குறித்த அக்கறையுடனும் கவலையுடனும் ஆட்சி நடத்தியிருக்கிறார். அவர்களது வாழ்வாதாரங்களைக் கவனித்து, கனிவுடன் நடந்துகொண்டது அவரது நிர்வாகம்.
‘இஸ்லாமிய அரசுக்குத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை ஏற்படுத்துவதிலும் இஸ்லாத்தின் சிறப்பை வெளிப்படுத்துவதிலும் அவரது கவனம் குவிந்திருந்தது. பள்ளிக்கூடங்களும் பள்ளிவாசல்களும் ஏராளம் கட்டப்பட்டன. லெவண்த் பகுதியில் மார்க்க அறிஞர்களுக்கும் மார்க்கக் கல்விக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு நிலைமை இருந்தது. நூருத்தீனின் காலத்தில் அது அறிஞர்கள், காழீகளின் இல்லமாக உருமாறியது’ என்கின்றார் அக்காலத்திய வரலாற்று ஆசிரியர் இமாம் அபூஷமாஹ். நூருத்தீனுக்கு ஸூஃபிகளிடமும் இணக்கம் நிறைந்திருந்தது. அவர்களுக்கும் சலுகைகளும் மரியாதையும் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும் அக்குறிப்புகளில் காண முடிகிறது.
எடிஸ்ஸாவைக் காப்பாற்ற நூருத்தீன் எடுத்த துரித வேகப் போர் நடவடிக்கையும் அதன் வெற்றியும் எதிரிகளிடம் அச்சூழ்நிலைக்கு ஏற்ப அவர் காட்டிய கடுமையும் சிரியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எடிஸ்ஸா கட்டுக்குள் வந்தது மட்டுமின்றி, அலெப்போவிலும் சிரியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அவரது திறமை வியந்து பேசப்பட்டது. தந்தையை விஞ்சுவார் தனையன் என்று உருவானது எதிர்பார்ப்பு. மகிழத் தொடங்கியது முஸ்லிம் சமூகம். மரியாதையும் புகழும் மளமளவென்று அவரை அடைந்தன. அவரது தலைமையும் அதிகாரமும் உறுதி செய்யப்பட்டன.
இவற்றை எல்லாம் பார்த்து அந்தாக்கியாவின் ரேமாண்ட் கிலியுற்றார். இப்போதைக்குப் பம்மிப் பதுங்குவதே நல்லது என்று ஒதுங்கினார் அவர். அனைத்தையும் கவனமாகப் பார்த்தது டமாஸ்கஸ். அலெப்போவிடம் கீரி-பாம்பு உறவு பூண்டிருந்த டமாஸ்கஸ். என்ன செய்வார் அதன் அதிபர் முயினுத்தீன் உனூர் என்று கவனித்தனர் மக்கள். திருப்புமுனை நிகழ்ந்தது.
தம் தந்தையைப் போல், நூருத்தீனுக்கும் அலெப்போவையும் டமாஸ்கஸையும் ஒன்றிணைக்கும் திட்டம் இருந்தது. ஆனால் அவரைப் போலன்றி, நூருத்தீன் டமாஸ்கஸுடன் இணக்கமான சூழலைத்தாம் உருவாக்க முனைந்தார். அது பயன் தந்தது. ஸெங்கிக்கு முள்ளாக வீற்றிருந்த டமாஸ்கஸ் அதிபர் முயினுத்தீன் உனூர் நூருத்தீனுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தார். தம் மகள் இஸ்மத் என்பவரை நூருத்தீனுக்கு மணமுடித்துத் தந்து, தம் மருமகனாக்கி விட்டார். அலெப்போவுக்கும் டமாஸ்கஸுக்கும் இடையே பூத்தது புதிய உறவு.
இனி அலெப்போவினால் தமக்கு ஆபத்து இல்லை என்றானதும் பரங்கியர்களுடன் தமக்கிருந்த கூட்டணியை முறித்தார் முயினுத்தீன் உனூர். மட்டுமின்றி அவர்களுக்கு எதிராகவும் இராணுவ நடவடிக்கையில் இறங்கும் துணிவும் அவருக்கு உண்டானது.
oOo
சிரியாவின் தெற்கே புஸ்ரா, ஸல்ஃகத் பகுதிகளின் அமீராக இருந்தவர் அல்துன்தஷ். டமாஸ்கஸுக்குக் கட்டுப்பட்டிருந்தது அந்த அரசாங்கம். முயினுத்தீன் பரங்கியர்களிடம் கூட்டணியை முறித்ததும், நீங்கள் வேண்டுமானால் அவர்களிடமிருந்து விலகுங்கள்; எனக்குப் பரங்கியர்கள்தாம் வேண்டும்; ஜெருசலத்துடன்தான் நட்பு என்று சொல்லிவிட்டார் அல்துன்தஷ். பரங்கியர்கள் தம்மை எத்தகு இக்கட்டிலும் இருந்து காப்பாற்றிவிடுவார்கள் என்று அவருக்குத் தீராத நம்பிக்கை.
வேடிக்கையா பார்ப்பார் உனூர்? தம் படையினருடன் புறப்பட்டு ஸல்ஃகத் நகரை அடைந்தார். முற்றுகை இட்டார். மருமகன் நூருத்தீனும் தம் படைகளுடன் அலெப்போவிலிருந்து வந்து சேர்ந்தார். பிடி இறுகியது. அவகாசம் கேட்டார் அல்துன்தஷ். அதற்குள் பரங்கியர் உதவி வந்துவிடும் என்பது அவர் திட்டம். அவரை ஏமாற்றாமல் பரங்கியர்களின் படையும் ஜெருசலத்திலிருந்து கிளம்பி வந்தது. அது புஸ்ராவை அடைவதற்குள், விருட்டென்று ஸல்ஃகத்திலிருந்து கிளம்பிச் சென்று புஸ்ராவை அடைந்தது உனூர்-நூருத்தீன் படை.
பரங்கியர் படை முன்னேற முடியாமல் பாதைகள் அடைக்கப்பட்டன. நீர் ஆதாரங்கள் தடுக்கப்பட்டன. முஸ்லிம் படையும் பரங்கியர் படையும் நேருக்கு நேர் நின்றன. தொடங்கியது போர். முதல் வாள் வீச்சிலிருந்தே முஸ்லிம் படையினரின் கை ஓங்க ஆரம்பித்துவிட்டது. தாக்குதலும் மிகக் கடுமை. பரங்கியர் படையில் எண்ணற்ற உயிர்கள் பலியாகின. பலருக்குப் படுகாயம். தாங்கள் தோல்வி அடைவது உறுதி என்று தெரிந்ததும் எஞ்சியவர்கள் பின்வாங்கி, சிதறி ஓடினார்கள். தோல்வி முகத்துடன், ஏகப்பட்ட இழப்புடன் ஜெருசலம் திரும்பினார்கள். புஸ்ராவும் ஸல்ஃகத்தும் முயினுத்தீன் உனூரிடம் சரணடைந்தன. அந்த வெற்றிச் செய்தியைக் கேட்டு பக்தாதும் கெய்ரோவும் குதூகலமடைந்து விட்டன. அப்பாஸிய கலீஃபாவும் ஃபாத்திமீ கலீஃபாவும் தத்தம் சார்பாக உனூருக்குப் பாராட்டுப் பத்திரமும் கெளரவ அங்கியும் அனுப்பி வைத்தனர். கோலாகலமடைந்தது டமாஸ்கஸ்.
சரணடைந்த அல்துன்தஷ் டமாஸ்கஸ் வந்தார். தமக்கு மன்னிப்பு வழங்கப்படும், ஏதேனும் பதவியும் அளிக்கப்படும் என்று அவருக்குள் எதிர்பார்ப்பு. காத்திருந்த விதி அவருக்கு வேறு தீர்ப்பை எழுதியது. முதலில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார் உனூர். சிறைவாசத்துடன் அந்தத் தண்டனையும் முடிந்திருக்கக்கூடும். ஆனால், அல்துன்தஷின் சகோதரர் குத்லுக் ஒரு பிராதுடன் வந்தார். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே முன்னர் நடைபெற்ற தகராறில் குத்லுக்கின் கண்களைப் பிடுங்கிவிட்டார் அல்துன்தஷ். அந்தப் புகாரை விசாரித்த டமாஸ்கஸ் நீதிபதிகள் குழு, கண்ணுக்குக் கண் என்று தீர்ப்பளித்துவிட்டது. பிறகென்ன? அல்துன்தஷ்ஷின் கண்களும் பிடுங்கப்பட்டன.
இங்கு இவ்விதம் இருக்க ஐரோப்பாவில் இருந்து திரண்டு வந்தது புதிய ஆபத்து. கான்ஸ்டண்டினோபிளில் இருந்து வந்து சேர்ந்தது செய்தி. சிரியாவில் உள்ள முஸ்லிம்களை உலுக்கியது தகவல்.
வந்தது இரண்டாம் சிலுவைப் போர்.
oOo
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 05 ஏப்ரல 2022 வெளியானது
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License