சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 50

50. யார் இந்த நூருத்தீன் மஹ்மூது ஸெங்கி?

க்ரிபு தொழுகையை முடித்துவிட்டு, தொழுகை விரிப்பில் அமர்ந்திருந்தார் மன்னர். முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் நிழல். தரையை இலக்கில்லாமல் துழாவியபடி இருந்தது கை விரல். மெளனம் சூழ்ந்திருந்தது. பணியாட்கள் இருவர் மன்னரைக் கவனித்தபடி பின்புறம் நின்றிருந்தனர். அவர்களுக்குப் பெரும் வியப்பு! மன்னருக்கு அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனை? எதைப் பற்றிக் கவலை? குடும்பமா? கடனா? அவர்களது உள்ளத்தில் ஏகப்பட்ட கேள்விகள்.

பணியாட்களின் திகைப்பை மன்னரின் பின் கழுத்து உணர்த்தியது. தம் தலையை நிமர்த்தி, அவர்களிடம் கேட்டார்.

“என்ன திகைப்பு?”

“மன்னருக்கு அப்படி என்ன கவலையோ?”

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நியமித்த ஆளுநர்களைக் குறித்த சிந்தனை. அவர்களுள் யாரேனும் மக்களிடம் நீதி தவறி, அவர்களை ஒடுக்கி நசுக்கினால், அது குறித்து நாளை அல்லாஹ் என்னிடம் கேள்வி கேட்பானே என்ற அச்சத்தில் மூழ்கியிருக்கின்றேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் ஏதேனும் அநீதியைக் காண நேர்ந்தால், தாமதிக்காமல் உடனே எனக்குத் தெரிவிக்க வேண்டும். அதுவே நான் அத்தீங்கைத் தடுத்து, நீதியை நிலைநாட்ட உதவும். அவ்விதம் நீங்கள் தெரிவிக்கத் தவறினால் நீங்கள் பெறும் ஊதியம் வீண்”

மன்னர் நூருத்தீன் ஸெங்கி நிறுவிய ஆட்சியின் ஒரு பருக்கைப் பதம் இது.

‘முந்தைய கால அரசர்களின் வரலாற்றை எல்லாம் நான் வாசித்திருக்கிறேன். முதல் நான்கு கலீஃபாக்களான குலஃபாஉர் ராஷிதீன், பின்னர் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ஆகியோருக்குப் பிறகு நல்லொழுக்கமும் நீதியும் நிறைந்திருந்த நூருத்தீனைப் போல் வேறெவரையும் நான் வரலாற்றில் கண்டதில்லை’ என்று எழுதி வைத்திருக்கிறார் அக்காலத்து வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர். மிகை போல் தோன்றுகிறதல்லவா? ஆனால், நூருத்தீனின் வரலாறு இப்னுல் அதீரின் கூற்றுக்குச் சான்றாகப் பதியப்பட்டுள்ளது.

oOo

ஹி. 511ஆம் ஆண்டு (கி.பி. 1117) இமாதுத்தீன் ஸெங்கியின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் நூருத்தீன் மஹ்மூத். நெடிய உயரம், கருத்த நிறம், அகன்ற நெற்றி, மழிக்கப்பட்ட மீசை, குறுந்தாடி, மென்மையும் அமைதியும் கலந்த தன்மை. ஸெங்கி மரணமடைந்ததும் மூத்த மகன் ஸைஃபுத்தீன் காஸி மோஸூலுக்கும், இளையவர் நூருத்தீன் அலெப்போவுக்கும் அதிபர்கள் ஆயினர். அச்சமயம் நூருத்தீனின் வயது 29. அவரை அலெப்போவின் அதிபராக்கத் துணை நின்றவர்கள் இருவர். ஒருவர் இமாதுத்தீன் ஸெங்கியின் தளபதியாக இருந்த சவார், அதிமுக்கியமான மற்றொருவர் அஸதுத்தீன் ஷிர்குஹ். நஜ்முத்தீன் அய்யூபியின் தம்பியும் ஸலாஹுத்தீன் அய்யூபியின் சிற்றப்பாவும் நூருத்தீனின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கப்போகிறவருமான ஷிர்குஹ்.

மோஸூல் அண்ணன் வசம் சென்றுவிட்டதால் நூருத்தீனுக்கு இராக் அரசியலுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் போனது. அது ஒருவிதத்தில் அவருக்கு இயற்கையாய் அமைந்த அனுகூலம். முன்னர் இமாதுத்தீன் ஸெங்கி இராக் அரசியல் களேபரங்களில் ஈடுபட்டு, அதில் கவனம் திரும்பி, சிரியாவில் முழு முனைப்புடன் செயல்பட முடியாமல் இருந்ததைப் போலன்றி அலெப்போ மட்டுமே அரசியல் களம் என்றானதும் நூருத்தீனின் கவனம் லெவண்த் பகுதியில் ஒருமுகப்பட்டது.

இமாதுத்தீன் ஸெங்கியின் எளிமை, துணிச்சல், ஆட்சித் திறமை போன்றவற்றில் சிறிதும் குறையின்றி நூருத்தீனிடமும் இருந்தன. மேலதிகச் சிறப்பாகத் தந்தையிடம் இருந்த கரடுமுரடான கடுமையும் மைந்தரிடம் இல்லாமல் போனது. பகைவர்களுக்குத் தம்மிடம் உருவான அச்சத்தைத் தந்தை தம் மூலதனமாக்கியிருந்தார். மகனோ தமது அறிவுக் கூர்மையையும் இறை அச்சத்தையும் உயர்ந்த பண்புகளையும் பொறுமையையும் அடிப்படையாக ஆக்கிக்கொண்டார். வெளிச்சத்திற்கு வந்த முதல் காட்சியிலிருந்தே, இறை பக்தி, தன்னிறைவு, நீதி வழுவாமை, வாக்கு மீறாமை, இஸ்லாமிய விரோதிகளுக்கு எதிரான ஜிஹாதிற்குத் தம்மை அர்ப்பணித்தமை ஆகியன அவரது பிம்பமாக ஆனது. தம்முடைய இந்த அனைத்து நற்பண்புகளையும் வலிமையான அரசியல் ஆயுதமாக அவர் பிரயோகித்ததில் வெளிப்பட்டன அவரது மதி நுட்பமும் மேதைமையும் என்று மூக்கில் விரல் வைக்காத குறையாகப் புகழ்ந்து எழுதியுள்ளார்கள் வரலாற்று ஆசிரியர்கள். இஸ்லாத்திற்கு எதிரான வரலாற்று ஆசிரியர்களாலும் இதில் முரண்பட முடியவில்லை. பரங்கியர்களின் அக்காலத்திய வரலாற்று ஆசிரியர் டைரின் வில்லியம்கூட, ‘நூருத்தீன் மதியூகி. விவேகமானவர். அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்’ என்று புகழ்ந்து எழுதி வைத்திருக்கிறார்.

நூருத்தீன் தம் ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளாக அமைத்துக் கொண்டவை மூன்று. அவை சரியான முன்னுரிமையுடன் வரிசைப்படுத்தப்பட்டன. முதலாவது ஸன்னி இஸ்லாம் என்ற ஒரே மார்க்கம். இரண்டாவது பரங்கியர்களை அனைத்துத் திசையிலிருந்தும் சுற்றி வளைத்துத் தாக்க ஏதுவான ஒற்றைத் தலைமை. மூன்றாவது முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பிலுள்ள ஜெருசலத்தையும் இதர முஸ்லிம் பகுதிகளையும் மீட்டெடுக்க ஜிஹாத்.

நபியவர்களின் வழிமுறையுடன் முரண்பட்டு, ஃபாத்திமீ கிலாஃபத்தை உருவாக்கி, கெய்ரோவில் அமர்ந்தபடி அப்பாஸிய கிலாஃபத்திற்கும் ஸன்னி முஸ்லிம்களுக்கு சவாலாகவும் பரங்கியர்களுக்குத் தோதாகவும் அரசியல் நிகழ்த்துபவர்களை எதிர்த்துப் போராடி, அடக்கி ஒடுக்குவது நூருத்தீனுக்கு முக்கியமானதாக இருந்தது. அதை அடுத்து, பிரிந்து பிளவுபட்டுக் கிடக்கும் அமீர்களையும் ஆட்சியாளர்களையும் ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும். அதுவும் பரங்கியர்களுக்கு எதிரான போரும் வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என்றால் படைகளை அணிதிரட்டும் முன் மக்களை உளவியல் ரீதியாக ஒன்றுதிரட்ட வேண்டும் என்பது அவருக்குப் புரிந்தது. எனவே இவற்றுக்கான செயல் திட்டமாக அவர் துவங்கிய முதல் பணி ஜிஹாது பரப்புரை. புத்துணர்ச்சி ஊட்டி மக்கள் மனத்தில் ஜிஹாது வேட்கையை மீட்டெடுப்பது என்பது வெறுமே வாய்ச் சொல் பிரசங்கத்தால் மட்டும் நிகழ்ந்து விடாது. அது மக்கள் எழுச்சியாக மாற வேண்டுமெனில் தனித் துறையாக, இயக்கமாக அப்பணி நடைபெற வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்ந்தார் நூருத்தீன். செவ்வனே உருவானது திட்டம்.

முதலாம் சிலுவைப் போர் துவங்கிய காலத்தில் சுல்தான்களும் ஆட்சியாளர்களும் ஒற்றுமையின்றிச் சிதறிக்கிடந்தாலும் அவர்களுக்கும் மக்களுக்கும் ஜிஹாதை நினைவுறுத்திப் பரப்புரை நிகழ்த்த மார்க்க வல்லுநர்கள் ஆரம்பித்திருந்தார்கள். கி.பி. 1105ஆம் ஆண்டு, அலீ இப்னு தாஹிர் அஸ்-ஸுலைமி அறப் போரின் முக்கியத்துவத்தை விளக்கி ‘அல்-ஜிஹாது’ என்றொரு நூலை எழுதி வெளியிட்டார் என்பதை 28ஆம் அத்தியாயத்தில் வாசித்திருக்கின்றோம். பின்னர் சில தளபதிகளும் அமீர்களும் அதை முன்னெடுத்துச் சாதித்த வெற்றிகள் சில. இவற்றையும் முந்தைய அத்தியாயங்களில் வாசித்தோம். இதன் தொடர்ச்சியாக ஜிஹாதை அரசியல் வரைபடத்தில் அழுத்தந்திருத்தமாகப் பதித்த நிகழ்வுதான் இமாதுத்தீன் ஸெங்கியின் எடிஸ்ஸா வெற்றி.

‘நூருத்தீன் ஜிஹாதையே பிரச்சாரத்தின் மையமாக ஆக்கினார். சிரியா, இராக், எகிப்து – இம்மூன்று இஸ்லாமிய பகுதிகளும் ஒன்றிணைய வேண்டும். பெரும் ஆற்றல் வாய்ந்த அதன் வளங்கள் ஒன்றாகிவிட்டால் ஐரோப்பிய சிலுவைப் படையை நசுக்கி முறியடிக்க முடியும் என்பது அவரது நோக்கம்’ என்று பிரெஞ்சு அறிஞர் எம்மானுவேல் சிவான் (Emanuel Sivan) குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முன் ஜிஹாது பரப்புரையை மார்க்க அறிஞர்கள் சிலரும் இறை பக்தர்களும் தனித்தனியாகச் செய்து வந்தனர். மார்க்க அறிஞர்கள் பெரும்பாலானோரின் கவனம் முழுவதும் ஷிஆக்களை, ஃபாத்திமீக்களை எதிர்ப்பதில் மட்டுமே குவிந்திருந்தது. நூருத்தீன் தொடங்கிய அதிகாரபூர்வமான ஜிஹாது பரப்புரை, சிறு குழுவாகச் செயல்பட்டு வந்தவர்களை உற்சாகமுறச் செய்தது. பிரபலமான மக்கள் இயக்கத்தின் அங்கமாக அவர்களைத் தம்முள் இணைத்தது.

நேர்மையான பரபரப்புரை அமைப்பாக அது உருவானது. பல நூறு பேர் திரட்டப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலானோர் உலமாக்கள், மார்க்க வல்லுனர்கள். அவர்களிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. நலிவுற்று, விரக்தியுற்றுக் கிடக்கும் முஸ்லிம்களிடம் ஜிஹாது வேட்கையைத் தீவிரப்படுத்தும் பணி.

தம் பரப்புரைக் குழுவினரைத் தாமே தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார் நூருத்தீன். புனித நகரமான அல்-குத்ஸின் அருமை பெருமைகளைச் சிறப்பான முறையில் விவரிக்கும் ஆக்கங்கள் எழுதப்பட்டன. கவிதைகளும் கடிதங்களும் வரையப்பட்டன. நூல்கள் உருவாயின. தகுந்த நேரத்தில் தேவைக்கேற்ப, தக்க விளைவை ஏற்படுத்தும் விதமாக அவை முஸ்லிம்களிடம் சேர்க்கப்பட்டன. பள்ளிவாசல்களிலும் கல்விக்கூடங்களிலும் முஸ்லிம்களுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டன; வினியோகிக்கப்பட்டன. ஜெருசலத்தை மீட்கும் முஜாஹித் போராளியாக நூருத்தீன் ஸெங்கியின் தலைமை மக்களுக்கு அறிமுகமானது; மக்கள் மனத்தில் பதிந்தது; தகுந்த ஆதரவை ஈட்டியது.

குறுநில மன்னர்களாக வீற்றிருந்த அமீர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மட்டும் இந்த மாற்றம் வயிற்றைக் கலக்கியது. தங்களது தனி அதிகாரம் பறிபோய், தாங்களும் நூருத்தீனுக்குக் கட்டுப்பட்டவர்களாக அமைய நேரிடுமே என்று அஞ்சினர். ஆனால், நூருத்தீன் குடிமக்களை அசைத்த அசைப்பில் அவர்களின் தலைமை தாமே தலை அசைத்தது.

அமீர் ஒருவருக்குப் பரங்கியர்களுக்கு எதிரான படையெடுப்பில் பங்குபெற அழைப்பு விடுத்துத் தகவல் அனுப்பினார் நூருத்தீன். ‘நான் நூருத்தீனிடம் விரைந்து செல்ல வேண்டும். இல்லை என்றால், நூருத்தீன் எனது அதிகாரத்தையும் ஆட்சியையும் எளிதில் பிடுங்கி விடுவார். மக்களுக்கும் இமாம்களுக்கும் அவரது கடிதங்கள் ஏற்கெனவே வந்துவிட்டன. அவர்களை இறைவனிடம் இறைஞ்சும்படியும் முஸ்லிம்களை ஜிஹாதிற்கு ஊக்குவிக்கும்படியும் எழுதியிருக்கிறார். இந்த நொடி அவர்கள் தங்கள் சீடர்களுடனும் நண்பர்களுடனும் நூருத்தீனின் கடிதங்களைப் படித்துவிட்டு, விம்மி அழுது என்னைச் சபித்தபடி உள்ளனர். அச்சாபங்களிலிருந்து என்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டுமெனில் நான் அவரது அழைப்புக்குச் செவிசாய்த்தே ஆக வேண்டும்’ வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர் குறித்து வைத்துள்ள நிகழ்வுகளுள் ஒன்று இது.

நாளாவட்டத்தில் இலத்தீன் கிறிஸ்தவர்கள் அச்சத்துடன் மதிக்கும் முஸ்லிம் அதிபராக உருவாகி உயர்ந்து நின்றார் நூருத்தீன் மஹ்மூது இப்னு ஸெங்கி.

oOo

நூருத்தீனின் புகழ் மக்களிடம் வெகு இயல்பாகவும் வேகமாகவும் பரவ அவரது குணாதிசயங்களே போதுமான காரணங்களாக அமைந்துவிட்டிருந்தன. பாசாங்கு அற்ற மெய்யான பணிவு, தமது தேவைகளுக்குக்கூடப் பணியாட்களை எதிர்பார்க்காத அடக்கம். ஆடம்பர ஆடைகளைத் தவிர்த்துவிட்டு, எளிய துணிகளே உடை. குடும்ப வாழ்க்கை வெகு எளிமை, உலக ஆசாபாசமெல்லாம் வெகு தூரம் என்று வாழ்ந்த அவரை மக்களுக்கு நபித்தோழர்களுடன் ஒப்பிடத் தோன்றிற்று. குடும்பச் செலவினங்களுக்குப் போதிய அளவு பணம் இல்லை என்று நூருத்தீனிடம் குறைபட்டிருக்கிறார் அவருடைய மனைவி. ஹும்ஸில் தமக்கு உரிய மூன்று கடைகளை அம்மனைவிக்கு ஒதுக்கியிருந்தார் நூருத்தீன். அவை ஆண்டொன்றிற்கு இருபது தீனார் ஈட்டித் தந்தன. அந்த வருமானம் தினசரித் தேவைகளைத் தீர்க்கப் போதுமானதாக இல்லை என்பது மனைவியின் புகார்.

“என்னிடம் செல்வம் வேறொன்றும் இல்லை. புழங்கும் பணம் யாவும் முஸ்லிம்களுடையவை. அவை எனது கட்டுப்பாட்டில் உள்ளன. நான் அவற்றின் பொருளாளன் மட்டுமே. முஸ்லிம்களை வஞ்சிக்கும் எண்ணமும் எனக்கில்லை; உன் பொருட்டுக் கையாடல் செய்து நரக நெருப்பில் விழுவதற்கும் நான் தயாராக இல்லை” என்று பதிலளித்தார் கணவர்.

மார்க்கக் கட்டளைகளைச் செயல்படுத்துவதில் தீவிரமானார் நூருத்தீன். படையினர் எவரிடமும் குடிப் பழக்கம் அறவே இருக்கக் கூடாது. இசை வாத்தியங்களுக்குத் தடை. அல்லாஹ்வை அதிருப்திக்கு உள்ளாக்கும் எதுவும் கூடாது. துருக்கிய முஸ்லிம் படையினருக்கு இச்சட்டதிட்டங்கள் கடினமானவையாக இருந்தன. ஆனால் என்ன செய்ய? பழகினார்கள்; பின்பற்றினார்கள்.

நிறுவப்பட்ட ஏராளமான கல்விக்கூடங்களும் கட்டப்பட்ட எண்ணற்ற பள்ளிவாசல்களும் சீரமைக்கப்பட்ட சாலைகளும் விரிவாக்கப்பட்ட அங்காடிகளும் அவரது நிர்வாகச் சிறப்பின் சான்றுகளாகப் பதிவாகின. மதீனா நகரைச் சுற்றிச் சுவர் எழுப்பப்பட்டது, உஹதில் கிணறு தோண்டப்பட்டது. ஜிஸ்யா, நிலவரி தவிர, மக்கள் மீதான வரிச்சுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டது, இதர பகுதிகளிலிருந்த ஆட்சியாளர்கள் ஹஜ் பயணிகளின்மீது அதிகப்படியான வரி விதித்து அவர்களைச் சிரமத்திற்கு ஆளாக்கக்கூடாது என்று திட்டமிட்டார் நூருத்தீன். அதற்காக அந்த அமீர்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அந்நிலத்திலிருந்து வருமானம் ஈட்டிக்கொள்ளலாம்; ஆனால் ஹஜ் பயணிகள் மீது வரிகள் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இத்தகைய ஒருவர் தங்களுக்கு அதிபராக அமைந்தால் மக்கள் அவரை மெச்சாமல் என்ன செய்வார்கள்? புகழாமல் எப்படி மௌனம் காப்பார்கள்? ஆனால் அது சுற்றுப்புற பகுதிகளின் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்குத்தாம் தலைவலியை ஏற்படுத்தியது. தாங்கள் ஆடம்பரத்திலும் பகட்டிலும் திளைப்பதற்காக மக்களை வரியால் உறிஞ்சிக்கொண்டிருக்க, இந்த நூருத்தீன் துறவி போல் வாழ்ந்து, இப்படி வரிகளை ஒழித்துக் கட்டினால் எப்படி? அவர்களைச் சங்கடம் பிடுங்கித் தின்றது.

மத வேறுபாடின்றி, குடிமக்கள் யாவரும் அவரது பார்வையில் சமம். ஒடுக்கப்பட்டவர் யாராயினும் அவரது குறைகளையும் புகார்களையும் தாமே நேரடியாகக் கேட்டு விசாரிப்பார் நூருத்தீன். உரிய நீதி, பிறழாமல் வழங்கப்பட்டது. குற்றவாளிகளுக்கான தண்டனை வெறுமே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அளிக்கப்படாது. சாட்சிகள் வேண்டும். அவை தீர விசாரிக்கப்படும். நிரூபணம் ஆனதும் இஸ்லாமியச் சட்டப்படி அக்குற்றத்திற்குரிய தண்டனை தீர்ப்பாகும். அதிகாரிகள் தம்மிஷ்டத்திற்கு அதிகப்படியான தண்டனை வழங்குவதும், சுய விருப்பு-வெறுப்புக்கு ஏற்பச் சித்திரவதை செய்வதும் தடுத்து நிறுத்தப்பட்டது.

அனாவசியச் சிரிப்பு நூருத்தீனுக்கு அந்நியமானது. தேவைக்கு ஏற்ப மட்டும் புன்னகை வெளிப்படும். அவர் தமக்கு நெருக்கமாக அமர்த்தி வைத்திருந்தவர்கள் உலமாக்கள். இரவில் நீண்ட நேரம் தொழுகை, குர்ஆன் ஓதுதல், பின்னிரவுத் தொழுகை அவரது வழக்கமாயின. ‘மார்க்கத்தின் சுடரொளி’ எனப் பொருள்படும் தமது பெயரான நூருத்தீன் என்பதைக்கூட அவர் தவிர்க்க ஆரம்பித்தார். ‘அப்படி நான் என்ன இந்த மார்க்கத்தின் சுடரொளி? மஹ்மூது போதும்’

போர்களின் போது அது துவங்கும் முன் அவரது இறைஞ்சல், ‘யா அல்லாஹ்! இஸ்லாத்திற்கு வெற்றியை அருள்வாயாக! இந்த மஹ்மூதுக்கு அல்ல. எதிரிகளை வெற்றி கொள்ள இந்த அற்பன் மஹ்மூது யார்?’

அத்தகு உச்சபட்ச அடக்கமெல்லாம், அக்காலக் கட்டத்தில் முஸ்லிம் மன்னர்களிடம், அமீர்களிடம் வழக்கொழிந்து போயிருந்தது. பலருக்கு அது அறிமுகமில்லாத ஒன்று. அதனால் அவர்கள், பசப்புகிறார் நூருத்தீன், மிகை நடிப்பு இது என்றுதான் கருதினர். ஆனால் நூருத்தீன் வாழ்ந்து மறைந்த வாழ்க்கை அது கலப்படமற்ற மெய் என்று சாட்சி அளித்துவிட்டது.

படை அணிக்குத் தலைமை வகித்துச் செல்லும்போது அவர்தாம் முன்னணி வீரர். உயிர் தியாகி ஆகும் பேரவா அவருள் பொதிந்திருந்தது. ‘பல போர்களில் கலந்துகொண்டேன். உயிர் தியாகி ஆக விரும்பினேன். ஆனால் என் விருப்பம் நிறைவேறவில்லையே’ என்ற அவரது கவலை இமாம் குத்புத்தீன் என்பவரின் காதில் விழுந்தது.

“அல்லாஹ்வின் பொருட்டு, விரும்பி வேண்டுகிறேன், தங்களுடைய உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். தற்சமயம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தாங்கள் முதுகெலும்பாகத் திகழ்கின்றீர்கள். போரில் தாங்கள் கொல்லப்பட்டால், முஸ்லிம்களின் கதி? எதிரிகள் அவர்களது உடைமைகளைச் சூறையாடுவார்கள், கொல்வார்கள்”

அதிருப்தியுடன் பதில் அளித்தார் நூருத்தீன். ‘என்ன பேச்சு இது? முக்கியமானவனாகக் கருதப்பட நான் யார்? எனக்கும் முன்னால் ஒருவன் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காக்கவில்லையா? அவனே எல்லாம் வல்லவன். அவனன்றி வேறு இறைவன் இல்லை’

மெதுமெதுவே மாபெரும் ஆளுமையாக உருவாகி, பரங்கியர்களை நசுக்கும் சக்தியாக அரபு உலகத்தை மாற்றி அமைத்தார் நூருத்தீன் ஸெங்கி. மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் உட்பட கருத்து வேறுபாடின்றி அதை ஆமோதிக்கின்றார்கள், குறிப்பிட்டு எழுதுகின்றார்கள். நூருத்தீன் விதைத்த அந்த விதை, அவருடைய தளபதி ஸலாஹுத்தீன் அய்யூபி ஜெருசலத்தை மீட்டெடுக்க வலிமையான அடித்தளத்தை உருவாக்கத் தொடங்கியது.

oOo

நூருத்தீன் அலெப்போவின் அமீராகப் பதவி ஏற்று, ஸெங்கியின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருந்த களேபரங்களை ஒழுங்கிபடுத்திக் கொண்டிருந்த நேரத்தில் அழைத்தது எடிஸ்ஸா. அவசர உதவி அழைப்பு. புதிய தலைமைக்குச் சவால் விடும் அழைப்பு.

தாமதமே இன்றிப் பெரும் படையுடன், தமது முதல் சாதனையைப் படைக்கப் புயல் வேகத்தில் கிளம்பினார் நூருத்தீன் மஹ்மூது இப்னு ஸெங்கி.

oOo

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 07 மார்ச் 2022 வெளியானது


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment