சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 49

by நூருத்தீன்
49. இமாதுத்தீன் ஸெங்கியின் மறைவு

முதலாம் சிலுவை யுத்தத்திற்குப் பிறகு அரை நூற்றாண்டுக் காலம் கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக முஸ்லிம்களின் ஒருங்கிணைந்த, ஒற்றுமையான எதிர்ப்பு என்பதே இல்லாமல் இருந்தது. மக்கா, மதீனாவுக்கு அடுத்த புனிதத் தலமான ஜெருசலம் இலத்தீன் கிறிஸ்தவர்களிடம் சிக்கிக் கிடக்க, ஸன்னிகளின் அப்பாஸிய கிலாஃபா, ஷிஆக்களின் ஃபாத்திமீ கிலாஃபா என்ற அடிவேர் பிரிவு ஒருபுறம். ஸன்னி முஸ்லிம்களுக்குள் வாரிசுப் போர், துருக்கிய ஸெல்ஜுக் சுல்தான்களின் அதிகாரப் போர் மற்றொரு புறம். இவற்றுக்கு இடையேதான் குருதிக் களப் (Battle of Sarmada) போரைப் போல் சில குறிப்பிடத்தக்க வெற்றிகள் சாதிக்கப்பட்டிருந்தன.

முஸ்லிம் ஆட்சியாளர்களுள் கிலிஜ் அர்ஸலான், மவ்தூத் பின் அத்-தூந்தகீன், பலக் இப்னு பஹ்ராம் போன்றோர் தங்களது தனித் திறமையால் பரங்கியர்களைச் சில போர்களில் வெல்ல முடிந்தது அல்லவா? சில பகுதிகளை மீட்க முடிந்தது அல்லவா? எனில், ஒருங்கிணைந்த முஸ்லிம் படைகள் பரங்கியர்களை எத்தகு வீரத்துடன் விரட்டியடிக்க முடியும், கடும் பாதிப்பை ஏற்படுத்த முடியும், ஜெருசலம் உட்பட, பறிபோன பகுதிகள் அனைத்தையும் மீட்க முடியும் என்பதைப் பிரிந்து கிடந்த அமீர்களும் ஆட்சியாளர்களும் தளபதிகளும் உணரவில்லை; உணர்ந்தாலும் தத்தமது அரசியல் ஆதாயத்தை, அதிகாரத்தை ஒதுக்கிவிட்டு ஒன்றிணைய விரும்பவில்லை. அவ்வப்போது சில தலைமையின் கீழ் ஏற்பட்ட கூட்டணிகளும் குறை ஆயுளுடன் முடிவுற்றுவிட்டன. வரலாறு இத்தகு பாடங்களால் நிரம்பி வழிகின்றது.

முஸ்லிம் சமூகம் கசப்புற்று, மனச்சோர்வுற்று, விரக்தியுற்ற வாழ்க்கைக்குப் பழக்கமாகிவிட்ட அந்நேரத்தில்தான், இமாதுத்தீன் ஸெங்கியின் கை, ஜிஹாது என்ற அறைகூவலுடன் வாளாயுதத்தை உயர்த்தியது. மக்கள் மனத்தில் நீறு பூத்திருந்த நெருப்பு ஜுவாலையானது. ஜிஹாதின் முக்கியத்துவம் படையினரிடம் அலையாகப் பரவியது. எடிஸ்ஸா வெற்றி ஏதோ ஒரு முயற்சியில் தற்செயலாகக் கிடைத்த பரிசு; அதை ஜிஹாதாக உருமாற்றித் தமது ஆட்சி விரிவாக்கத்திற்கான துணைக் கொள்கையாக ஆக்கிக்கொண்டார் ஸெங்கி என்று நினைத்துவிட முடியாது என்பதை, The Crusades எனும் நூலில் தெளிவாகவே குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர் தாமஸ் ஆஸ்பிரிட்ஜ். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கி.பி. 1138ஆம் ஆண்டிலேயே டமாஸ்கஸில் இருந்த மதரஸா அவருக்கு ‘ஜிஹாதுப் போராளி, எல்லையின் பாதுகாவலர், இணை வைப்பளர்களை அடக்குபவர், இஸ்லாத்தின் எதிரிகளை அழிப்பவர்’ முதலான பட்டங்களை அளித்திருந்தது. அவை போன்றவை பிறகு அலெப்போவின் ஆவணங்களிலும் பொறிக்கப்பட்டன.

இஸ்லாமிய நாடுகள் ஸெங்கியின் இந்த பிரம்மாண்ட வெற்றியைப் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகக் கருதின. லெவண்ட் பகுதியிலிருந்து பரங்கியர்கள் ஒட்டுமொத்தமாக விரட்டி அடிக்கப்படுவது இனி சாத்தியமே என்று நம்பினர். இமாதுத்தீன் ஸெங்கியை ஜிஹாதி வீரராக, ஜிஹாதுப் படையின் தலைவராக ஏற்றனர். அப்பாஸிய கலீஃபா அவருக்குச் சூட்டி மகிழ்ந்த பற்பல பட்டங்கள் அதற்கான அங்கீகாரமாகவும் ஆயின.

oOo

எடிஸ்ஸாவைக் கைப்பற்றியதும் நிகழ்ந்த கொலை, கொள்ளை களேபரங்களை அடக்கி அமர்த்தியதும் அந்நகரை ஒழுங்குபடுத்தி, சிதிலமடைந்துவிட்ட அந்நகரின் அரண் சுவர்களைப் பழுது பார்த்து, வலுப்படுத்தி, சீரமைப்பதில் இமாதுத்தீன் ஸெங்கியின் கவனம் குவிந்தது. பிரசித்தி பெற்ற நகரம், முக்கியத்துவம் வாய்ந்த எடிஸ்ஸா, அதை எப்படி அப்படியே அலங்கோலமாக விட முடியும்? ‘குடிமக்களே! உங்களது பாதுகாப்பு எமது பொறுப்பு. நீதி பரிபாலனம் எமது வாக்குறுதி’ என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது.

இனி அடுத்து? தாம் ஜிஹாதை முழு வீச்சில் முன்னெடுக்க வேண்டுமாயின், இஸ்லாமிய ஆட்சிப் பகுதிகள் இணைந்த ஒன்றியம் ஒன்றின் தலைவராகத் தம்மை முன்னிறுத்துவது ஸெங்கிக்கு முக்கியமாக இருந்தது. மெஸபடோமியா, சிரியா, தியார்பக்ரு என்று அரபியர்களும் பாரசீகர்களும் துருக்கியர்களும் பிரிந்து நின்று ஆட்சி செலுத்தும் அச்சூழலில் அந்த அங்கீகாரம் அவருக்குக் கட்டாயம் தேவைப்பட்டது. அலெப்போவிலிருந்து மோஸூல் வரை விரிந்துள்ள நிலப்பரப்பு முழுவதையும் ஒன்றிணைக்கும் பணி முக்கியத்துவம் பெற்றது. அடுத்த ஆண்டு, பரங்கியர்கள் பறித்து வைத்திருந்த சரூஜ் அவரால் மீட்கப்பட்டது. அங்கிருந்த பரங்கியர்கள் தப்பிப் பிழைத்து ஓடினார்கள். அதன்பின் அவர் அணிவகுத்த பகுதிகள் பலவும் பெரும் எதிர்ப்பு இன்றி அவர் வசமாயின.

oOo

எடிஸ்ஸாவின் வெற்றிக்கு ஓராண்டு முன் அங்கு ஜெருசலத்தில் அதன் ராஜா ஃபுல்க் மரணமடைந்தார். வேட்டையில் ஈடுபட்டிருந்த போது அவரது குதிரை தடுமாறி விழ, சேர்ந்து அவரும் விழ, அவரது மண்டையைச் சேணம் நசுக்கி விட்டது. கூழாகிவிட்ட மூளை காதுகளிலிருந்தும் நாசியிலிருந்தும் கசிந்து வழிந்தது என்று தம் வாய் குமட்டாமல் எழுதி வைத்திருக்கிறார் அன்றைய வரலாற்று ஆசிரியர் வில்லியம் டைர்.

என்னதான் தம் கணவனிடம் அபிப்பிராய பேதத்துடன் இணக்கமின்றி இருந்தாலும் ராஜா ஃபுல்க்கின் மறைவிற்கு சம்பிரதாயப்படி சுய துக்கம், அரசு முறை துக்கம் அனைத்தையும் அனுஷ்டித்தார் விதவை மெலிஸாண்ட். அத்தம்பதியரின் மூத்த மகன் மூன்றாம் பால்ட்வினுக்கு (Baldwin III) அச்சமயம் வயது பதின்மூன்று. அவனை ஜெருசல ராஜாவாக ஆக்கிவிட்டு, ‘அரியணையில் அமர்ந்து நீ வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும்’ என்று துணைக்கு வைத்துக்கொண்டு விதவைத் தாய் மெலிஸாண்ட் ஆட்சி செலுத்த ஆரம்பித்தார். அம்மகன் வாலிபனாகி, ஆட்சி அரசியல் புரிய ஆரம்பித்தவுடன் தன் தாயுடன் மோதிச் சண்டையிட்டது, அடித்துக்கொண்டது பிற்கால அரசியல் திருப்பங்கள். அவையெல்லாம் பிறகு.

எடிஸ்ஸாவுக்கு ஆபத்து என்ற செய்தி வந்து சேர்ந்ததும் ராணி மெலிஸாண்ட் இரண்டாம் ஜோஸ்லினுக்கு உதவிப் படை ஒன்றை அனுப்பினார். பரங்கியர்களின் மற்ற பகுதிகளிலிருந்தும் படையினர் வந்து இணைந்தனர். அந்தாக்கியாவின் அருகே திரண்டனர். ஆனால் ஏனோ அந்தாக்கியாவின் அதிபர் ரேமாண்ட் மட்டும் அதில் பங்கெடுக்கவில்லை. சரியான காரணமும் தெரியவில்லை என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். உதவிப் படை குழுமும் தகவல் தெரிந்ததும் ஸெங்கியின் கட்டளையின் பேரில் முஸ்லிம் துருப்புகள் புழுதி பறக்க விரைந்தன. அதன் மீது திடீர்த் தாக்குதல் தொடுத்தன. பரங்கியர்களின் உதவிப் படை வலிமையுடன் எதிர்த்துப் போராடியதாகத் தெரியவில்லை. எடிஸ்ஸா வெற்றி முஸ்லிம் படையினருக்கு அளித்திருந்த உத்வேகமும் பரங்கியர்கள் மனத்தில் தோற்றுவித்திருந்த அச்சமும் சேர்ந்து, ஸெங்கியின் படையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொன்று குவிக்க, பிழைத்தவர்கள் தெறித்துச் சிதறிக் கலைந்து ஓடினார்கள். எஞ்சியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அத்துடன் எடிஸ்ஸாவில் முடிவுக்கு வந்தது பரங்கியர்களின் எதிர்ப்பு முயற்சி.

இமாதுத்தீன் ஸெங்கி என்ற பெயர் சற்றும் சந்தேகம் இல்லாமல் பரங்கியர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. ராஜா ஃபுல்க் மறைந்தபின் மெலிஸாண்ட்தான் இனி ராஜா-ராணி என்றானதும் இயல்பற்ற அந்த அரசியல் சூழலால் மேலதிகம் குழப்பமும் பலவீனமும் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டன. அதை இன்னம் அதிகப்படுத்துவதுபோல், இமாதுத்தீன் ஸெங்கி சிரியாவை நோக்கித் திரும்பினார். சிரியாவில் பரங்கியர்கள் வசமுள்ள பகுதிகள் அவரது அடுத்த இலக்கு, அவற்றைத் தாக்க ஆயத்தமாகிறார் என்று பரவியது செய்தி. சிரியாவின் பால்பெக்கிற்குத் திரும்பி வந்த ஸெங்கியின் தலைமையில் பெரும் திட்டத்துடன் விரிவான போர் ஏற்பாடுகள் நடைபெற்றன. கவண் பொறிகளும் ஆயுதங்களும் போர் உபகரணங்களும் தயாராயின.

சிரியாவிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஆரம்பத்தில் இவற்றைக் கண்டு மகிழ்ந்தாலும் டமாஸ்கஸ் மக்களுக்கு மட்டும் நாளடைவில் ஸெங்கியின் நோக்கத்தின் மீது சந்தேகம் உருவானது. அவரது இலக்கு பரங்கியர்களா, அல்லது ஐந்து ஆண்டுகளுக்குமுன் அவருக்கு வசப்படாமல் போன தாங்களா? ஒருவேளை இத்தனை முஸ்தீபும் டமாஸ்கஸைக் கைப்பற்றவா? சந்தேகம் வதந்தியானது; பரவியது. டமாஸ்கஸுக்குக் கவலை உருவானது. மற்றவர்களுக்கும் கேள்வி பிறந்தது. ஆனால் அதற்கான பதில்தான் யாருக்கும் தெரியாத ரகசியமாகவே ஆகிவிட்டது. காரணம் அசந்தர்ப்பமாகக் காத்திருந்த முற்றுப்புள்ளி.

கி.பி. 1146 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம். எடிஸ்ஸாவிலிருந்து அவசரச் செய்தி வந்தது. அங்கு அர்மீனிய கிறிஸ்தவர்களுக்கு ஸெங்கி பாதுகாப்பு வழங்கி, அமைதியாக வாழ அனுமதித்திருந்தார் அல்லவா? அவர்களுள் சிலருக்கு இரண்டாம் ஜோஸ்லினிடம் விசுவாசம் மறையவில்லை. இரகசிய நட்பும் தொடர்ந்தது. அவர்களின் உதவியுடன் ஜோஸ்லின் சதித் திட்டம் தீட்டினார். ஸெங்கியின் துருப்புகளைத் தாக்கி ஒழிக்க அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்று ஸெங்கியின் உளவுத் துறை தகவல் அளித்ததும் பால்பெக்கில் நடைபெற்ற ஆயத்தங்களை அப்படியே நிறுத்திவிட்டு எடிஸ்ஸாவுக்குப் பறந்தார் ஸெங்கி. அடுத்து கருணைக்கு இடமே இல்லாமல் சதிகாரர்கள் மீது அரச தண்டனை இறங்கியது. ஜோஸ்லினின் அத்தனை ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர்.

அதை அடக்கிவிட்டு ஓய்ந்தால், மற்றொரு பிரச்சினை. ஃகலத் ஜாபர் (Qal’at Ja’bar) கோட்டையின் அதிபதியான அரபு அமீர், ஸெங்கியின் அதிகாரத்திற்குத் தாம் கட்டுப்பட முடியாது என்று குரல் எழுப்பினார். அலெப்போவுக்கும் மோஸூலுக்கும் இடையேயான பிரதான பாதையில் யூப்ரட்டீஸ் அருகே அமைந்திருந்தது ஃகலத் ஜாபர். இரு தலைநகரங்களுக்கும் இடையேயான தொடர்பிற்கு அந்த ஒத்துழையாமை பங்கம் ஏற்படுத்தும்; தவிர ஆபத்தும்கூட என்பதால் அதைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது ஸெங்கிக்கு அடுத்த முன்னுரிமை ஆனது. ஃகலத் ஜாபர் முற்றுகை இடப்பட்டது. சில நாள்களில் அது வீழ்ந்துவிடும் என்றுதான் ஸெங்கி எதிர்பார்த்தார். அதற்கு மாறாக, அது மூன்று மாத காலம் நீடித்தது. கூடவே ஒரு பேரிடியும் இறங்கியது.

ஹி. 541 / கி.பி. 1146ஆம் ஆண்டு. செப்டம்பர் மாத இரவு. உறங்கிக்கொண்டிருந்தார் இமாதுத்தீன் ஸெங்கி. அவரது படுக்கையை நெருங்கினான் பரங்கியர் வம்சாவளியைச் சேர்ந்த அவருடைய பணியாள் யரன்காஷ். கத்தியால் அவரது மேனியெங்கும் குத்தினான். நழுவி ஓடி ஜாபர் கோட்டைக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தான்.

அக்கொடூரத் தாக்குதலுக்கான மெய்க்காரணம் வாக்குமூலமாகப் பதிவாகாததால், ஸெங்கியின் மீது வன்மம் கொண்டிருந்த Orientalist எனப்படும் கீழ்த்திசை நாடுகளின் மேற்கத்திய எழுத்தாளர்கள் ஸெங்கியைக் குடிகாரராகச் சித்திரித்து, சில காரணங்களை எழுதி வைத்துள்ளனர். சமகால வரலாற்று ஆசிரியர் தாமஸ் அஸ்பிரிட்ஜ் (Thomas Asbridge) அக்கொடூரத் தாக்குதலின் விவரங்கள் தெளிவின்றி உள்ளன; அவன் அவரது நம்பிக்கைக்குரிய அலி, அடிமை, படைவீரன் என்று பலவித யூகங்கள் நிலவுகின்றன; டமாஸ்கஸின் தூண்டுதலால் நிகழ்ந்த சதி என்றும் வதந்தி உண்டு என்று மட்டும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அடுத்து நிகழ்ந்ததற்கு மட்டும் நேரடி சாட்சியம் பதிவாகியுள்ளது. காவலுக்கு இருந்த மற்றொரு பணியாளன், குற்றுயிரும் குலையுயிருமாக, இரத்தம் வழிந்து கிடந்த ஸெங்கியைப் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டான். அவனும் தம்மைத் தீர்த்துக்கட்டத்தான் வந்திருக்கிறான் என்று நினைத்து, தமது சுட்டுவிரலால் சமிக்ஞை செய்தார் ஸெங்கி. செயலற்றுப் போய் நின்றிருந்த அவன் பதற்றத்துடன், ‘யார் இத்தீங்கைத் தங்களுக்கு இழைத்தது?’ என்று கேட்ட கேள்விக்கு ஸெங்கியால் பதில் கூற இயலவில்லை. அவரது உயிர் பிரிந்தது. அறுபத்திரண்டு வயதை அடைந்து, முரட்டுத்தனமான தேகத்துடன், திடமான ஆரோக்கியத்துடன் நலமாக இருந்த அத்தாபெக் இமாதுத்தீன் ஸெங்கியின் வாழ்க்கைக்கு ஓர் அடிமையின் குறுவாள் முற்றுப்புள்ளி இட்டது. திரை விழுந்தது.

அவரது மரணத்தை அடுத்து, கட்டுக்கோப்பாய் இருந்த அவரது படை சிதறியது. அவருக்குக் கட்டுப்பட்டிருந்த அமீர்கள், தத்தம் கோட்டைகளைக் கைப்பற்ற ஓடினர். அவரது ஆட்சியில் இருந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தாண்டவமாடினர் வழிபறிக் கொள்ளையர்கள். எங்கெங்கும் குழப்பம். துக்கம், நிலையற்றத் தன்மை.

டமாஸ்கஸிலிருந்த முயினுத்தீன் உனூர், தாம் ஸெங்கியிடம் இழந்திருந்த பால்பெக்கைத் தாக்கிக் கைப்பற்றினார். ஹும்ஸும் இதர சில பகுதிகளும் உனூருடன் நட்பு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டன. இமாதுத்தீன் ஸெங்கி பால்பெக்கின் ஆட்சிப் பொறுப்பை நஜ்முத்தீன் அய்யூப் வசம் அளித்திருந்தார் அல்லவா? அவருக்கு டமாஸ்கஸில் மாளிகையைப் பகரமாக அளித்தார் உனூர். நஜ்முத்தீன் அய்யூப் தம் குடும்பத்தினருடன் டமாஸ்கஸுக்குக் குடிபெயர்ந்தார். அச்சமயம் அவருடைய மகன் ஸலாஹுத்தீன் அய்யூபியின் வயது எட்டு.

முடிந்தது இமாதுத்தீன் ஸெங்கி என்ற வீரர் உருவாக்கிய சக்தி வாய்ந்த அரசின் சகாப்தம்; ஓய்ந்தது ஜிஹாது முழக்கம் என்று அந்நேரத்தில் பரங்கியர்களும் நினைத்திருக்கலாம், முஸ்லிம்களும் கவலைப்பட்டிருக்கலாம். ஆனால், வாஸ்தவத்தில் அத்திருப்புமுனை நிகழ்வில்தான் புதியதொரு சகாப்தம் தொடங்கியது. காட்சிப் பரப்புக்குள் நுழைந்தார் ஒருவர் – இமாதுத்தீன் ஸெங்கியின் புதல்வர் நூருத்தீன் ஸெங்கி.

oOo

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 23 ஜனவரி 2022 வெளியானது


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment