“தாருல் இஸ்லாம்” மீட்டும் புது மலர்ச்சியுடன் வெளிவரப்போவதை அதன் ஆசிரியர் அல்ஹாஜ் பா. தாவூத்ஷா சாஹிப் அவர்களின் 6-9-1947-இன் கடித மூலமாக அறிந்து மனம் பூரித்தேன். அதன் ஆசிரியர் தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்குச் செய்த சேவைகளைக் குறித்து நான் அதிகம் கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், அவர் எழுதிய நூல்களே சான்று கூறாநிற்கும். தமிழ்நாட்டு முஸ்லிம்களை மதத் துறையிலும், அரசியல் துறையிலும், கல்வித் துறையிலும் தட்டி எழுப்பினார். இஸ்லாம் ஒரு மறத்தன்மை யுள்ள மதமென்று தமிழ்நாட்டு ஹிந்துக்களி லநேகர் சொல்லியும் எழுதியும் வந்தனர். அப்படியல்ல; இஸ்லாம் ஒரு சாந்திமத மென்று அல்ஹாஜ் பா. தா. அவரது நூல்கள் மூலமாக நிரூபித்தார். தமிழ்நாட்டு ஹிந்துக்களில் அநேகர் அவருடைய நூல்களைப் படித்து இஸ்லாத்தைப்பற்றி ஒருவாறு தெரிந்துகொண்டார்கள். அவருடைய “தாருல் இஸ்லாம்” பத்திரிகையைத் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் மிகவும் ஆர்வத்துடன் படித்தார்கள். அரசியல் காரணமாகவும், மதத்தின் மீதுள்ள துவேஷம் காரணமாகவும், முஸ்லிம்களை முஸ்லிமல்லாதார்கள் தாக்கி எழுதியபோழ்தெல்லாம் உடனுக்குடன் அவைகளுக்குப் பதில் எழுதி அவர்களுடைய கொட்டத்தை யடக்கினார். துரதிருஷ்ட வசமாக இரண்டாவது மஹா யுத்தத்தின் ஆரம்ப காலத்தில் (1942-இல்) அப்பத்திரிகை நின்றுவிட்டது. அவர் சிறிது அதுபோழ்து முயற்சி செய்திருந்தால், அதற்கு நிகரான தமிழ்ப் பத்திரிகை தமிழ் நாட்டிலே இருக்காது. மீண்டும் “தாருல் இஸ்லாம்” வெளிவரவேண்டியது அவசியமாகும்; ஏனெனில், இதற்குப் பிறகு முஸ்லிம்களின் மத அரசியல் நிலைமை மோசமாகலாம். முஸ்லிம்கள் தாங்கள் கோரிய பாக்கிஸ்தானை அடைந்துவிட்டார்கள் என்று பூரிப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஹிந்துஸ்தானத்திலுள்ள முஸ்லிம்கள் தங்களுடைய மத, கலாசார அரசியல் துறைகளில் வெற்றிபெற வேண்டுமானால், அவர்களுக்குள் ஐக்கியம் வேண்டும்; – இவ்வித ஐக்கியத்தை உண்டுபண்ண முஸ்லிம் பத்திரிகைகள் அதிகம் வெளிவரவேண்டும். பஞ்சாபிலும் டில்லியிலும், எவ்விதமான கோரச்சம்பவங்கள் நடைபெற்றனவென்பதை முஸ்லிம்கள் சிந்தனை செய்து பார்க்கவேண்டும். “இந்திய யூனியன் எல்லோருக்கும் சமமான மத, அரசியல், நியாயம் வழங்கும்” என்று எண்ணியிருந்தவர்கள் ஏமாற்றமடைந் திருப்பார்கள். ஆதித்திராவிடர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த தனித் தொகுதி முறைகளை இந்திய அரசியல் நிர்ணய சபை ஒழித்துவிட்டது. கூட்டுத் தொகுதி முறையை இந்திய யூனியனினுள்ள முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கூட்டுத் தொகுதி முறையை முஸ்லிம்கள் ஏற்பதாயின் ஜனாப் கே.டி. அஹ்மது இப்ராஹீம் அவர்களின் திருத்தப்பிரேரணையை அரசியல் நிர்ணய சபை ஒப்புக்கொள்ள வேண்டும். இதைப்பற்றி அகில இந்திய முஸ்லிம் லீக் என்ன முடிவு செய்கிறதென்பதைக் கவனிப்போம். இது சம்பந்தமான விவாதம் நடக்கும்போது திரு. பட்டேல் இந்திய யூனியனிலுள்ள முஸ்லிம்களை ஏளமான தொணியில் பூச்சாண்டி காட்டுகின்றார். இந்திய யூனியன் ஏற்பட்ட 15 தினங்களுக்குள், முஸ்லிம்களுக்குள்ள உத்தியோக சலிகை போயிற்று. தனித் தொகுதிமுறை ஒழிந்தது. குண்டூரிலுள்ள முஸ்லிம் ஆசிரியர்கள் பயிற்சிக்கூடம் ஒழிந்தது. சென்னையிலுள்ள முஸ்லிம் பெண்கள் கல்லூரிக்கு ஆட்டம் ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் பெண்களுக்காக ஒருதனி அரசாங்கக் கல்லூரி வேண்டுமென வற்புறுத்தி, பேகம் சாஹிபா அமீருத்தீன் வெளியிட்ட அறிக்கையைச் சென்னையிலிருந்து வெளியாகும் “தினமணி” கேலி செய்து எழுதியிருப்பதுமன்றி முஸ்லிம் பெண்களுக்காகத் தனிப் பள்ளிக்கூடம் வேண்டுமென்றால், ‘ஸக்காத்’ வாங்கிச் செய்யவேண்டுமென்று அதுயோசனை கூறுகிறது. ஸக்காத் என்றால் தர்மம் என்று பொருளாம்! ஆசிரியர் எந்த அரபிக் கல்லூரியில் படித்தாரோ? தெரியவில்லை. போதாக்குறைக்கு ஹிந்து – முஸ்லிம் சண்டை யில்லாமல் வாழும் சென்னை மாகணத்தில் 10,000 சீக்கியர்களைக் குடியேற்றப் போகின்றார்கள். இவ்விஷயத்தை – முஸ்லிம்கள் மாதிரமல்ல – திராவிடர்களும் எதிர்கின்றார்கள்.
ஹிந்துஸ்தானத்தி லுள்ள, ஹிந்துஸ்தானத்தில் சமஉரிமையுடன் வாழவிரும்புகின்றார்கள். ஆகவே, அவர்களுக்குச் சமஉரிமைகளை அவ்வரசாங்கம் கொடுக்க வேண்டும். இன்றேல் அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியது வரும். இந் நிலைமையில் நமது “தாருல் இஸ்லாத்தை” மறுமலர்ச்சியுடன் படிப்போமாக! தமிழ்நாடு “தாருல் இஸ்லா”மாகட்டும்! மீண்டும் அதன் ஒளிவீசட்டும்!!!
-வ.மி. ஷம்சுத்தீன்
தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947
பக்கம்: 23-24