42. பூரித் வம்சாவளி
இமாதுத்தீன் ஸெங்கி அலெப்போவினுள் நுழைந்ததும் மேற்கொண்ட முதல் முக்கிய காரியங்களுள் ஒன்று திருமணம். அரசியல், மறுவாழ்வாதாரம் போன்ற பின்னணி கலந்த திருமணம். அலெப்போவின் முன்னாள் ஆட்சியாளர் ரித்வானின் மகளை அவர் மறுமணம் செய்துகொண்டார். அப்பெண்மணி, இல்காஸி அதன்பின் பலக் ஆகியோருக்கு ஒருவருக்குப்பின் ஒருவராக வாழ்க்கைப்பட்டு விதவையானவர். இமாதுத்தீன் அலெப்போவின் மருமகனாகி, நகரின் விவகாரங்களை ஒழுங்குபடுத்திவிட்டு, அடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளைக் கைப்பற்றுவதில் தம் கவனத்தைத் திருப்பினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மளமளவென்று பல வெற்றிகள். ஜஸீரா இப்னுல் உமர், ஹமாஹ், அதையடுத்து ஹிம்ஸ் ஆகியன கைப்பற்றப்பட்டன. ஹிம்ஸின் ஆட்சியாளர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். இவற்றையெல்லாம் கவனித்த அமித், கைஃபா பகுதியின் ஆட்சியாளர்கள் அடுத்த இலக்கு தங்கள் பகுதியோ என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கினார்கள். தங்களுடன் மேலும் சில அமீர்களைக் கூட்டணி சேர்த்துக்கொண்டு இருபதாயிரம் படை வீரர்களுடன் இமாதுத்தீன் ஸெங்கியை எதிர்த்துத் திரண்டு வந்தனர். ஆனால் மூர்க்கமாகச் சுழன்று கொண்டிருந்த ஸெங்கியிடம் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர்களை முறியடித்துச் சுருட்டிவிட்டு, அலெப்போவை அச்சுறுத்திக் கொண்டிருந்த அதாரிப் கோட்டையை நோக்கி நகர்ந்தார் இமாதுத்தீன் ஸெங்கி.
அங்கு ஸெங்கியை எதிர்க்க பரங்கியர்கள் அனைத்து முன்னேற்பாடுகளுடன் பெரும் போருக்கு தயாராக இருந்தனர். இமாதுத்தீன் ஸெங்கி அந்தச் சிலுவைப் படையையும் முறியடித்து, கோட்டையைக் கைப்பற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்திவிட்டு, ஹாரிம் என்ற கோட்டையை நோக்கி நகர்ந்தார். சரசரவென்று முன்னேறிக்கொண்டிருந்த ஸெங்கியிடம், தப்பிப் பிழைத்து அங்கு அடைக்கலமாகி இருந்த பரங்கியர்கள் வேறுவழியின்றி உடன்படிக்கையுடன் கை நீட்டினர். ஹாரிமின் வருவாயில் சரிபாதி பங்கு என்று அது சமாதானம் வேண்டியது. தொடர் போர்களினால் ஸெங்கியின் படையிலும் நிறைய உயிரிழப்புகள். அத்துடன் சேர்ந்து சோர்வும் அவருடைய படையினரை ஆக்கிரமித்திருந்தது. எனவே, இமாதுத்தீன் ஸெங்கி அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டார்.
இவ்விதம் முன்னேறிக் கொண்டிருந்த அவரது கவனம் சிரியாவின் மற்றொரு நகரான டமாஸ்கஸின் மேல் மிக அழுத்தமாகவே பதிந்திருந்தது. அலெப்போவினுள் அவர் நுழைந்த அதே ஆண்டுதான் (ஹி.522 / கி.பி. 1128) டமாஸ்கஸில் துக்தெஜின் மரணமடைந்திருந்தார். அவரை அடுத்து அங்கு நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களும் அரசியலும் வெகு முக்கியம். அதைப் போலவே பரங்கியர் தரப்பு நிகழ்வுகளும் முக்கியமானவை. முதலில் டமாஸ்கஸைப் பார்த்துவிடுவோம்.
oOo
ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட விதான மண்டபம் டமாஸ்கஸின் அரண்மனையில் புகழ்பெற்ற ஒன்று. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சர்கள், அமீர்கள், இராணுவ அதிகாரிகள் டமாஸ்கஸ் அதிபரின் தலைமையில் குழுமுவார்கள்; பல விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும்; செயல் திட்டங்கள் முடிவு செய்யப்படும். துக்தெஜினின் மரணத்திற்குப் பிறகு அவருடைய மகன் தாஜ் அல்-முலுக் பூரி பட்டத்துக்கு வந்திருந்தார். அவரது தலைமையில் அந்த ஆலோசனைக் கூட்டம் தினசரி தொடர்ந்தது.
ஹி. 497 / கி.பி. 1104ஆம் ஆண்டு டமாஸ்கஸின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த துக்தெஜின், வெள்ளி விழாவுக்கு ஓர் ஆண்டுக் குறைவாக, 24 ஆண்டுகள் ஆட்சியாளராக இருந்துவிட்டு மரணமடைந்தார். இருந்த போதிலும் துக்தெஜினும் அவரைத் தொடர்ந்த அவருடைய வாரிசுகளும் டமாஸ்கஸில் நடத்திய ராஜாங்கத்தை, ‘பூரித் வம்சாவளி’ என்று இந்த மகனின் பெயரால்தான் வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். துக்தெஜின் மறைவுக்குப் பிறகு அடுத்த இருபத்து ஆறு ஆண்டுகள் டமாஸ்கஸில் தொடர்ந்த பூரித் வம்சாவளியின் ராஜாங்கம் கி.பி. 1154ஆம் ஆண்டு நூருத்தீன் ஸெங்கி டமாஸ்கஸைக் கைப்பற்றியதும்தான் முடிவுக்கு வந்தது என்பது மட்டும் இங்கு ஓர் உபதகவல்.
ஒருநாள் இந்த விதான மண்டபத்திற்கு எப்பொழுதும் போல் வந்து சேர்ந்தார் அமைச்சர் அல்-மஸ்தஃகானி. வழக்கம்போல் விவாதங்கள் நிகழ்ந்தன; ஆலோசனைகள் பரிமாறப்பட்டன; கூட்டம் முடிவுக்கு வந்தது. அமீர்களும் அதிகாரிகளும் விடைபெற்றனர். அமைச்சர் இறுதியில்தான் செல்ல வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம். அதனால் அமைச்சர் அல்-மஸ்தஃகானி மட்டும் தாமதித்தார். இறுதியில் அவரும் எழுந்து நிற்க, தம் கூட்டாளிக்குச் சாடை காட்டினார் தாஜ் அல்-முலுக் பூரி. நொடி நேரத்தில் அல்-மஸ்தஃகானியின் மீது பாய்ந்தார் அந்த விசுவாசி. தம் வாளால் அமைச்சரின் தலையைக் கண்டபடி தாக்கினார். பிறகு அவரது தலையைத் தனியாகத் துண்டித்து எடுத்தார். முண்டத்திலிருந்து பீய்த்துப் பாய்ந்த குருதி, ரோஜா மண்டபத்தின் தரையில் செந்நிறம் பூசியது.
டமாஸ்கஸ் நகரின் புகழ்பெற்ற இரும்பு வாயிலில் அமைச்சர் அல்-மஸ்தஃகானியின் தலையும் முண்டமும், மக்களின் பார்வைக்குத் தொங்க விடப்பட்டன. வஞ்சகர்களின் முடிவு இதுதான் என்ற மக்களுக்குச் சொல்லாமல் சொல்லப்பட்டது; எச்சரிக்கை விடப்பட்டது.
பட்டத்திற்கு வந்த புதிதில் தாஜ் அல்-முலுக் பூரி, தம் தந்தை நியமித்திருந்த அமைச்சர்களையும் அதிகாரிகளையும் பகைத்துக்கொள்ளவில்லை. மாறாக அவர்களை அங்கீகரித்து, கண்ணியப்படுத்தி நட்புறவையும் தொடர்ந்தார். ஆனால் அஸாஸியர்களுடன் அமைச்சர் அல்-மஸ்தஃகானி கள்ள உறவு கொண்டிருந்ததும் அவர்களுடைய அட்டூழியங்கள் அனைத்திற்கும் துணை நின்றதும் கொலை பாதகங்களுக்கு ஆதரவு அளித்து வந்ததும் அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன. அஸாஸியர்களுக்கும் அல்-மஸ்தஃகானிக்கும் தாம் வெறும் கைப்பாவையாக மாறிப் போவதை, பூரி விரும்பவில்லை.
அது மட்டுமின்றி, ‘டமாஸ்கஸை உங்கள் வசம் ஒப்படைக்கிறேன். பகரமாக எனக்கு நீங்கள் டைர் நகரத்தைத் தந்து விடுங்கள் என்று அல்-மஸ்தஃகானி பரங்கியர்களுக்குச் செய்தி அனுப்பியிருந்தார். பரங்கியர்கள் அதற்கு நாளும் குறித்து விட்டனர்’ என்றும் அன்றைய வரலாற்று ஆசிரியர் இப்னு அதீர் தெரிவிக்கிறார். இவற்றையெல்லாம் அறிந்த தாஜ் அல்-முலுக் பூரி கச்சிதமாகத் திட்டமிட்டு அல்-மஸ்தஃகானியைத் தீர்த்துக்கட்ட, டமாஸ்கஸில் பற்றிகொண்டது கலவரம்; அஸாஸியர்களுக்கு எதிரான கலவரம்.
அஸாஸியர்கள் டமாஸ்கஸ் நகரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்ததை அம்மக்கள் தீவிரமாக வெறுத்து வந்தனர். அவர்களுக்குள் உலை கொதித்துக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், அஸாஸியர்களின் அத்தியந்த பாதுகாவலர் கொல்லப்பட்டார் என்று தெரியவந்தால்? நிமிடங்களில் டமாஸ்கஸின் வீதிகளில் தீயாகப் பரவியது செய்தி. அத்தனை நாளும் அஸாஸியர்களிடம் அச்சத்தால் அடங்கிக் கிடந்த அம்மக்கள், வாள், கத்தி, கபடா என்று கிடைத்த ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு, உயர்த்திச் சுழற்றி வீசியபடி பெருங்கூட்டமாக வீதிகளில் பாய்ந்தனர். அஸாஸியர்கள், அவர்களுடைய உறவினர்கள், அவர்களின் கூட்டாளிகள், அவர்கள் மீது அனுதாபம் கொண்டவர்கள், அனுதாபம் உள்ளவர்களாகச் சந்தேகிக்கப்பட்டவர்கள் ஆகியோரை வீடு வீடாகப் புகுந்து தேடிப் பிடித்து, இரக்கத்திற்கு இடமே இல்லாமல் துண்டாடினார்கள். அஸாஸியர்களின் தலைவர்களாகத் திகழ்ந்தவர்கள் எல்லாம் கோட்டையின் மதில்வாயில்களில் சிலுவையில் அறையப்பட்டனர். அம்மக்களுக்கு அவர்கள்மீது அவ்வளவு வெறி; ஆத்திரம்.
‘மறுநாள் காலையில் பொது இடங்களிலிருந்து பாத்தினீக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருந்தனர். நாய்கள் ஊளையிட்டபடி அவர்களுடைய சடலங்களுக்காகப் போட்டியிட்டன’ என்று விவரித்துள்ளார் டமாஸ்கஸின் வரலாற்று ஆசிரியர் இப்னுல் ஃகலானிஸி.
அதிபர் தாஜ் அல்-முலுக் பூரியை விளையாட்டுப் பிள்ளையாக, எளிதில் அஞ்சி ஒடுங்கக்கூடியவராக, அற்பமானவராக நினைத்திருந்த மக்களுக்கு இது வியப்பான திருப்பமாக அமைந்ததென்றால் அடுத்து அவர் நிகழ்த்திய ஒரு சாதனை மற்றொரு சிறப்பு. டமாஸ்கஸில் அஸாஸியர்கள் ஒழிக்கப்பட்டதும் தப்பிப் பிழைத்தவர்களுள் இஸ்மாயீல் என்பவன் அவர்களுடைய பனியாஸ் என்ற கோட்டையில் தஞ்சமடைந்திருந்தான். தங்களது பாதுகாப்புக் கேள்விக்குறி என்றான பின் சகவாசத்திற்கு அவன் கைநீட்டியது பரங்கியர்களிடம். இந்தாருங்கள் என்று தங்களது பனியாஸ் கோட்டையையும் அவர்களிடம் தந்துவிட்டான் அவன். ஆனால் அவனுக்கு மரணம், வாந்திபேதி நோயின் வடிவில் வந்து அந்த பனியாஸ் கோட்டையிலேயே மரணம் அடைந்தது விதியின் வினோதம்.
இஸ்மாயீலின் ஆதரவுப் பரங்கியர்களை உத்வேகப்படுத்தி, அடுத்தச் சில வாரங்களில் டமாஸ்கஸைக் கைப்பற்றக் கிளம்பி வந்துவிட்டது சிலுவைப்படை. அந்தாக்கியா, எடிஸ்ஸா, திரிப்போலி, ஃபலஸ்தீன் பகுதிகளிலிருந்து சேனாதிபதிகளும் காலாட் படையினரும் டெம்ப்ளர்களுமாக ஏறத்தாழ பத்தாயிரம் எண்ணிக்கையில் வலுவான படை திரண்டு வந்தது. அவர்களை எதிர்கொள்ளப் போதிய துருப்புகள் தம்மிடம் இல்லாததால், துருக்கிய நாடோடி வீரர்கள், அரேபிய கோத்திரத்தினர் ஆகியோரை தாஜ் அல்-முலுக் பூரி ஒன்று திரட்டினார். டமாஸ்கஸ் படையுடன் அவர்கள் இணைந்து, பெரும் திரளாகச் சென்று சிலுவைப் படையின் ஒரு பகுதியினரைச் சூழ்ந்து துவம்சம் செய்தனர். அதைச் சிலுவைப் படை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பூரியின் படை அவர்களை வென்றது. மறுநாள் சிலுவைப் படை பாடி இறங்கியிருக்கும் பகுதிக்குச் சென்று மற்றவர்களையும் தாக்குவது என்று முடிவானது. ஆனால் அதற்குள் சிலுவைப் படை தங்களது கூடாரங்களைக் காலி செய்துவிட்டு, மிச்சம் மீதி இருந்தவற்றையும் தீயிட்டுக் கொளுத்தி விட்டு ஓடிவிட்டது.
பூரியின் இவ்வெற்றியை மகிழ்ந்து கொண்டாடியது டமாஸ்கஸ். ஆனால் தோற்று ஓடிய ஜெருசலம் ராஜா பால்ட்வினோ இந்தப் பின்னடைவுக்குப் பிறகும் சோர்வடையவில்லை. அந்தத் தோல்வி சற்று கவனப் பிசகு. இம்முறை அப்படி ஆகாமல் பார்த்துக்கொள்வோம் என்று புதுத் திட்டம் தீட்டித் துருப்புகளைத் திரட்டினார். தம் முயற்சியில் சற்றும் மனம் தளராதவராய் மீண்டும் கிளம்பி வந்தார். இம்முறை இறைவன் நிர்ணயித்திருந்த விதி அவர்களை வேறு விதமாகத் தாக்கியது. அடாத மழை பொழிந்து, பெருவெள்ளம் தோன்றி, சிலுவைப் படையினரின் கூடாரங்களைச் சேற்று மண் சொதசொதவென்று மூழ்கடித்து விட்டது. படையினரும் குதிரைகளும் அவற்றுள் சிக்கிக்கொள்ள, இம்முறை மனம் உடைந்துபோனார் ராஜா பால்ட்வின். இந்த ஆட்டத்தை இத்துடன் நிறுத்திக்கொள்வோம் என்று தம் படையினரைப் பின்வாங்கச் சொல்லிவிட்டு, தாமும் ஜெருசலம் திரும்பிவிட்டார்.
டமாஸ்கஸை விட்டு ஆபத்து நீங்கிவிட, தாஜ் அல்-முலுக் பூரியை மெதுமெதுவே சூழ்ந்தது வேறு ஆபத்து. தங்களை வேரறுத்த அவரை அஸாஸியர்கள் அப்படியே விட்டுவிடுவார்களா என்ன? அவர்களது வில்லத்தனம் மதிப்பிழந்து விடாதோ? அலாமுத் கோட்டையில் இன்னும் கூர்மையாகத் திட்டம் தீட்டப்பட்டது. அதை நிறைவேற்ற குரஸான் பகுதியைச் சேர்ந்த இரு எளியவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்; மூளைச் சலவை செய்தார்கள்; திட்டத்தைத் தெரிவித்தார்கள். அவ்விருவரும் துருக்கியர்களைப் போல் மாறுவேடமிட்டு, வேலை தேடுபவர்களைப்போல் நாடகமிட்டு, பிடிக்க வேண்டியவர் கால்களைப் பிடித்து, எப்படியோ அரண்மனையில் சேவகர்களாக நுழைந்து விட்டார்கள். தங்களது பணித் திறமையால் அங்குள்ள அதிகாரிகளைக் கவர்ந்து, நம்பிக்கையைப் பெற்று, மெதுமெதுவே முன்னேறி பூரியின் மெய்க்காவலர் அணியிலும் இடம்பிடித்து விட்டார்கள். அந்தளவு முன்னேற எந்தளவு பொறுமையும் நிதானமும் இருந்திருக்க வேண்டும்? அஸாஸியர்களுக்கு அது இருந்தது. தங்களது குறிக்கோளை நிறைவேற்றும் முனைப்பு அவர்களுக்கு எல்லை மிகுந்து இருந்தது.
ஹி. 525 / கி.பி. 1131ஆம் ஆண்டு. ஹம்மாம் எனப்படும் தமது குளியல் அறையில் நீராடிவிட்டு மாளிகைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் பூரி. அவ்விருவரும் அவர் மீது பாய்ந்து அவரது வயிற்றைக் குத்திக் கிழித்தனர். மற்ற காவலர்கள் அவ்விருவரையும் துரிதமாக மடக்கிப் பிடிக்க, தங்களைப் பற்றி ஏதொன்றையும் அவர்கள் மறைக்கவில்லை. “ஆமாம்! இதுதான் எங்கள் திட்டம். பூரியை ஒழித்துக் கட்டத்தான் நாங்கள் வந்தோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
பெரும் பாதிப்பும், காயங்களும் ஏற்பட்ட போதும் பூரி உயிர் பிழைத்துக்கொண்டார். அவரை உடனே தூக்கிச் சென்றார்கள். அறுவை சிகிச்சை வல்லுநர்கள் குழு விரைந்து வந்தது. சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை வல்லுநர்களா என்று தோன்றுகிறதல்லவா? அக்காலக் கட்டத்தில் உலகின் தலைசிறந்த மருத்துவ பராமரிப்பும் சிகிச்சையும் டமாஸ்கஸ் நகரில்தான் இருந்திருக்கிறது. துகக், தம் காலத்திலேயே முரிஸ்தான் என்றொரு மருத்துவமனையை உருவாக்கியிருந்தார். அதற்கடுத்து கி.பி. 1154ஆம் ஆண்டு மற்றொன்று கட்டப்பட்டது. வரலாற்றுப் புகழ்பெற்ற பயணி இப்னு ஜுபைர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மருத்துவமனைகளைப் பார்வையிட்டுள்ளார். அவரது குறிப்புகளில் உள்ள விவரங்கள் வியப்புக்குரியவை.
‘ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆவணங்களைப் பராமரிக்க நிர்வாக அதிகாரி இருந்தார். நோயாளிகளின் பெயர்கள், மருத்துவ சிகிச்சைக்கான செலவு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உணவு, இதர பல தகவல்கள் அந்த ஆவணங்களில் விரிவாகப் பட்டியல் இடப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாள் காலையிலும் மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதித்து, அவரவருக்கு ஏற்ற மருந்து, உணவுகளைப் பரிந்துரைத்தார்கள்’ என்று இப்னு ஜுபைர் எழுதி வைத்திருக்கிறார். இன்றைய மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக அன்றே டமாஸ்கஸ் திகழ்ந்திருக்கிறது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு பூரி தேறினார். உடல்நலமும் முன்னேறியது. இன்னும் சிலகாலம் அவர் மருத்துவ விடுப்பு எடுத்திருக்கலாம். ஆனால் அவர், தாம் முழுவதும் குணமடைந்து விட்டதாக நம்பி, குதிரை ஏற்றம், இயல்பான இதரச் செயல்கள் என்று தினசரி வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப யத்தனிக்க, முற்றும் ஆறாத ரணம் அவரது உடல்நலத்தை மோசமாக்கியது. சில மாதங்களுக்குப் பிறகு தம் மூத்த மகன் அபுல் ஃபத்ஹு இஸ்மாயீலை அரச வாரிசாக அறிவித்துவிட்டு மரணமடைந்தார் தாஜ் அல்-முலுக் பூரி.
பூரியின் மனைவியும் அபுல் ஃபத்ஹு இஸ்மாயீலின் தாயுமான ஸுமர்ருத் விதவையானார். இவர் தம் மகனுக்கும் இமாதுத்தீன் ஸெங்கிக்கும் இடையே ஏற்பட இருந்த உடன்படிக்கைக்காக மகனையே கொன்றதும் பிறகு அதே இமாதுத்தீன் ஸெங்கியைத் திருமணம் செய்துகொண்டதும் வரலாற்றின் மற்றொரு வினோதத் திருப்பம். அதைப் பார்க்கும் முன் ஸெங்கிக்குத் தூது அனுப்பிய இரண்டாம் பால்ட்வினின் மகள் அலிக்ஸின் விவகாரத்தைப் பார்த்து விடுவோம்.
oOo
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 07 October 2021 வெளியானது
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License