பிறந்து வளர்ந்த நாற்பதாண்டுகளில் நபி பெருமானாருக்கு அப்படியொன்றும் வறிய வாழ்க்கை அமைந்துவிடவில்லை. அவர் பிறந்து வளர்ந்த குரைஷி குலம் மக்காவில் செல்வாக்குள்ள பிரிவு. அது பொருளாதார ரீதியாகவும் வலிமையுடன் திகழ்ந்த வம்சம். மக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையேயான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் அவ்வம்சம் திளைத்து வந்தது. பிறக்கும் முன் தந்தையையும் ஆறே வயதில் தாயையும் இழந்து பாட்டனாரின் பாதுகாப்பிலும் பின்னர் பெரிய தந்தை அபூதாலிபின் அரவணைப்பிலும் வாழ நேர்ந்ததே தவிர, தேவைகள் இருந்தனவே தவிர முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடும் வறுமை அச்சமயம் பிரச்சினையாக இருக்கவில்லை.

மக்காவில் வர்த்தகம் செய்து வந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களும் செல்வம் நிரம்பிய மாது. நபி பெருமானார் தமது நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்த போது அவரது நேர்மையையும் நல்லொழுக்கத்தையும் கண்டு, அவற்றால் கவரப்பட்டு, விதவை கதீஜா பிராட்டியார் அவரை மறுமணம் செய்துகொண்டவர். இத்திருமண வாழ்விலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடும் வறுமையில் உழலவில்லை. சீரும் சிறப்புமாகவே அவ்வாழ்க்கை அமைந்திருந்தது. யதார்த்த வாழ்விற்குத் தேவையான நியாயமான சுகபோகங்களுடன்தாம் நபியவர்களின் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. அவருடைய மனத்துள் சூழ்ந்திருந்த கவலைகள் மட்டுமே வேறு. அவை அம்மக்கள் மூழ்கியிருந்த அனாச்சாரம் குறித்த விசனம்; அவர்களது ஈடேற்றம் பற்றிய ஆதங்கம்; மெய் எது என்ற தேடல்.

இவ்விதம் நகர்ந்த நபி பெருமானாருடைய வாழ்க்கையின் நாற்பதாம் ஆண்டில்தான் மக்காவின் குகையில் அருளப்பட்ட நபித்துவம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவர்களுடைய வாழ்க்கையின் பற்பல சோதனைகளுள் ஒன்றான வறுமைக்கும் அது வித்திட்டது. அது உண்மையிலேயே வறிய வாழ்க்கைதானா? அல்லது நபி (ஸல்) அவர்களின் ஒப்புவமை அற்ற வாழ்க்கையின் பக்க விளைவா?

ஆன்மீகமோ, மாந்திரீகமோ – காசின்றி அசையாது அதன் தலைமை என்பது உலக நியதி. பண்டைய காலங்களை விட்டுவிடுவோம். மனித குலம் நாகரிகத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கருதப்படும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் அதுதானே விதி. வாழ்வாதாரத்திற்கு என்று ஆரம்பித்து, பணம், பெண், செல்வாக்கு என்று உலகில் கிடைக்கும் அத்தனை சுகபோகத்திற்கும் ஆன்மீகம் சிறப்பானதொரு வர்த்தக தந்திரமாக அல்லவா பயன்படுகிறது. அதில் வயிறு வளர்ப்போர் தத்தம் தனித் தீவில் வசிக்கிறார்கள். இரக்கமே இன்றி காலம் அவர்களது போலி முகத் திரையைக் கிழித்துப் போட்டாலும் அடுத்த சந்ததி அத்தகு புதிய போலிகளின் புதிய தந்திரத்திற்குத் தலையாட்டும் செம்மறியாடுகளாகப் பின் தொடரத்தான் செய்கிறது.

இந்த வினோதத்தின் பின்னேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வறுமை வாழ்க்கை அற்புதமான ஓர் எடுத்துக்காட்டை, உண்மையை அடிக்கோடு இட்டு நமக்குச் சொல்கிறது. அவர்களது நபித்துவம் ஐயத்திற்கு இடமற்ற சத்தியம் என்பதை அடித்துச் சொல்கிறது. எங்கோ ஒரு பாலைவனத்தில் வாழ்ந்து மறைந்த அந்த உத்தமர் விடுத்து சென்ற செய்தி உலக மாந்தர் அனைவருக்கும் இறுதி நாள் வரைக்குமான கையேடு என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.

மதீனாவிற்குப் புலம் பெயர்ந்தபின் நபியவர்கள் தம் வாழ்வில் சுவைத்த சிறந்த ஆகாரம் வறுமை. பலருக்கும் பரிச்சயமான ஹதீஸ் ஒன்று உண்டு. அஸ்மா (ரலி) அவர்களின் மகனான உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். “என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது’ என்று கூறினார்கள்.

நான், ‘என் சிறிய அன்னையே! நீங்கள் எதைக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தினீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர். தவிர, அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்’ என்று கூறினார்கள்” (நூல்: புகாரி 2567)

‘நபியவர்களின் குடும்பத்தாரிடம் மாவு சலிக்கும் சல்லடைக் கூட இருந்ததில்லை. அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவை, தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை மிருதுவான ரொட்டியைப் பார்த்ததில்லை. வெந்நீரால் வக்கி, முடி களையப்பட்டு, தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டை அவர்கள் தமது கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லை’ என்று அவர்களது வறுமையைப் பறைசாற்றும் பற்பல நபிமொழிகளும் உண்டு.

ஏன் இப்படி?

இறை பக்தியையும் ஆன்மீகத்தையும் முன்மொழிபவர், ‘வா உன் ஈடேற்றத்திற்கு வழி காண்பிக்கின்றேன்’ என்று பரப்புரை செய்பவர், எவர் அகோரப் பசியின் உக்கிரத்தைத் தாங்க தம் அடிவயிற்றில் கல்லைக் கட்டிக்கொள்கிறார்? மாறாக, தானமாகவும் தட்சணையாகவும் அன்பளிப்பாகவும் பரிசாகவும் கிடைக்கும் – எளிதில் கோடிகளை எட்டும் – செல்வத்தை அல்லவா ருசிக்கத் துடிக்கிறார்.

செல்வத்தை அளிக்க இயலாதவர்களாக, அத்தகு பக்தி விசுவாம் அற்றவர்களாகவா நபி பெருமானார் காலத்து மக்கள் இருந்தனர்? இல்லை! மாறாக, ‘பெண் வேண்டுமா? இந்தா! பொருள் வேண்டுமா? எவ்வளவு தரட்டும்? இல்லை ஆட்சி அதிகாரம்தான் வேண்டுமா? எடுத்துக்கொள் உனக்கு இல்லாததா’ என்றுதான் பேரம் பேசினார்கள். கெஞ்சினார்கள். எதற்கு?

‘ஏகன் ஒருவன்; அவன் இணை துணையற்றவன்; நான் அவனுடைய இறுதி நபி’ என்ற தூதுச் செய்தியை வாயடைப்பதற்கு. நபி பெருமானாரை நைச்சியப்படுத்துவதற்கு. அதற்கு இசைந்திருந்தால், சிறு தலையாட்டலில் அவர்களுடைய தலைமாட்டில் செல்வம் குவிந்திருக்கும். தூதுச் செய்தியை சிறு திருத்தத்திற்கு உட்படுத்தியிருந்தால் போதும் நபி பெருமானாரையே அக்கூட்டம் தெய்வமாக்கியிருக்கும். ஆனால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆட்பட்ட பெருமானார் சமரசமற்ற தூதுச் செய்திக்கு வறுமையைத்தான் தம் ஊதியமாக ஏற்றுக்கொண்டார்கள். எளிமையைத்தான் தம்முடைய அங்கியாகப் போர்த்திக்கொண்டார்கள்.

மதீனாவிற்குப் புலம் பெயர்ந்தபின் படை திரண்டுவந்த குரைஷிகளுடன், கோக்குமாக்குப் புரிந்த யூதர்களுடன் எல்லாம் போர்கள் நிகழ்ந்தன. வெற்றி கைகூடியது. அவற்றில் கைப்பற்றப்படும் ஃகனிமத் எனப்படும் போர்ப் பரிசுகள் குவிந்ததும் ஏராளம். தம் பங்காகக் கிடைத்த அவற்றையெல்லாமாவது பெருமானார் தமக்கென, தம் சந்ததிகளுக்கென சொத்தாகவோ முதலீடாகவோ ஆக்கிக்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை. சல்லிக் காசு பாக்கியில்லாமல் மக்களிடமேதாம் அவற்றை எல்லாம் திருப்பி அளித்தார் என்பதுதான் வியப்பு.

யதார்த்த வாழ்க்கையில், அதன் ஆசா பாசங்களுடன், மக்களுள் ஒருவராக வாழ்ந்தார்கள். ஏகன் தமக்கிட்டப் பணிக்காக, அதை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பிக்கும் ஒற்றை நோக்கத்திற்காக, தாமே கிடைக்கும் வசதியையும் கூட உதறிவிட்டு எளிமையில் நிலைத்திருந்தார்கள். எக்காலத்திலும் எச்சந்தர்ப்பத்திலும் தம்மை ஒரு மகானாகவோ, தெய்வ அவதாரமாகவோ அவர்கள் அறிவித்துக்கொண்டது இல்லை. துறவு வாழ்க்கை தமது வழிமுறையன்று எனத் தெரிவிக்கத் தவறியதும் இல்லை.

மாறாக, அறிவித்ததெல்லாம் “இறைவன் முன் நிறுத்தப்படும் போது வெற்றி பெறுவேனா என்பது எனக்குத் தெரியாது. என்னிடம் இறைவனின் பொக்கிஷங்கள் இல்லை: எனக்கு மறைவானது தெரியாது. தப்புச் செய்தால் நானும் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது. நானும் உங்களைப் போன்ற மனிதனே”

ஏகனின் மெய் தூதரன்றி யாருக்கு இவையெல்லாம் சாத்தியம்? சிந்தித்து உணர கடலளவு ஞானம் உள்பொதிந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு.

-நூருத்தீன்

சமரசம் 16-31 அக்டோபர் 2021, வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்

Related Articles

Leave a Comment