தயானந்தரின் சொல்லும் செய்கையும் – 1

“அல்லாஹ் பொய்யானவர்களை நேசிக்கிறானில்லை.” நன்பர்காள்! கவனிப்பீர்களாக. சுவாமி தயானந்தர் தமது வேதத்தைத் தவிர்த்து வேறெந்தக் கிரந்தத்தையும் உண்மையன்றென்றும், ஒப்புக்கொள்ளத் தகுதியற்றது என்றும் கூறிவிட்டு, அவரே “எனது கொள்கை 2-இல்” சொல்லுகிறார்:-

“நான்கு வேதங்களும் பாபத்தை விட்டுப் பரிசுத்தமாக்கப்பட்ட தேவவாக்கு என்று ஒப்புக்கொள்ளுகிறேன். அவைகள் பிழையின்றி உண்மையானவைகள், உறுதியானவைகள் என்பதற்கு வேறெந்தக் கிரந்தத்தின் சாக்ஷியத்தையும் வேண்டாது தமக்குத் தாமே பிரமாணமாய் விளங்குகின்றன. எனவே, அவைகளைக் காக்க வேறொரு நூலின் தேவையில்லை. சூரியன் அல்லது தீபம் தன் சுய ஒளியினால் தன்னுடைய குணங்களையும், பிரபஞ்சத்திலுள்ள சகல பொருள்களின் குணங்களையும் காட்டுவது போலவே வேதங்களும் இருக்கின்றன. நான்கு வேதங்களின் உரைகளாவன: ஐதிரேயம், சதபதம், சாமம், கோபதம் எனப் பிரமாணங்கள் நான்கு; சிக்ஷை, வியாகரணம், சந்தசம், நிருக்தம், சோதிடம், கற்பம் என வேதாங்கங்கள் ஆறு; ஆயுர்வேதம், அர்த்தவேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம் என உபவேதங்கள் நான்கு; சாகைகள் ஆயிரத்து நூற்றிருபத்தேழு இவைகளை எல்லாம் நான் துணைப் பிரமாணங்களாகக் கருதுகிறேன்; அஃதாவது, இவை வேதங்களுக்கு ஒத்திருக்கும் வரையில் உண்மையானவைகளே; வேதங்களுக்கு மாற்றமாயிருக்கும் வார்த்தைகள் உண்மையானவைகள் என யான் ஒப்புக்கொள்ளல் முடியாது.”

இதற்கு உதவியாய் “சத்தியார்த்த பிரகாசம்” 3-ஆம் அத்தியாயத்தில், “எந்த எந்த விஷயங்கள் வேதத்தில் செய்யும்படியாயும், எவை எவை விலக்கி விடும்படியாயும் கட்டளை பிறந்திருக்கின்றனவோ, அவைகள்தாம் உண்மையானவைகள். ஏனெனின், வேதங்களே ஒப்புக்கொள்ளக் கூடியனவாய் இருக்கின்றன,” என்று தயானந்தர் எழுதியிருக்கிறார். ஆதலின், அவரது நிர்ணயம் வேதமாகவே இருக்கிறது. எனவே, சுவாமி தயானந்த் மஹாராஜ் மேற்கூறப்பட்ட நிர்ணயத்தின் பிரகாரம், எந்த எந்த வார்த்தைகளைத் தமது நூலில் வரைந்திருக்கிறாரோ, அவையனைத்தும் மெய்யாகவே வேதத்தின் பிரகாரமே இருக்குமென்று தீர்மானிக்க வேண்டுமல்லாது, வேறு விதமாய்ச் சந்தேகிக்க ஏதுவில்லை. அவர் ஏதேனும் வேத மேற்கோள் காட்டினும் காட்டாமற் போயினும், அவர் எழுதுவதெல்லாம் வேதத்தில் உள்ளவைகளே என்பதில் ஐயுறவேண்டிய அவசியமே இல்லை. எனவே, இவ்வார்த்தை வேத்த்தில் இல்லை என்றும், அல்லது இன்ன தவறுதலான வேதத்திலிருந்து எழுதப்பட்டதென்றும், அல்லது சுவாமிஜீயால் யாதொரு வேதமும் மேற்கோள் காட்டப்படாமல் எழுதப்பட்டதென்றும் கூறும் வார்த்தைகள் ஒப்புக்கொள்ளப்பட மாட்டா.

சுவாமி தயானந்தர் கூறுகிறார்:-

(1) சொல்:- “சத்தியார்த்த பிரகாசம்” 5-ஆவது அத்தியாயத்தில் “சத்யம் (என்னும் உண்மை) எப்படி ஆத்மாவில் இருக்கிறதோ அப்படியே உள்ளத்தில் இருக்கவேண்டும்; உள்ளத்தில் உள்ளபடியே நாவில் இருக்கவேண்டும்; நாவில் உள்ளபடியே செய்கையில் செய்துகாட்டல் வேண்டும். ஆனால், அதற்கு மாற்றமாய் நடப்பது அவித்தை என்னும் மடத்தனமாய் இருக்கிறது,” என்று கூறுகிறார்.

(1) செயல்: – லாலா லஜபதிராய் எழுதிய சுவாமி தயானந்தரின் ஜீவிய சரித்திரத்தில் எழுதியிருப்பது: (பக்கம் 146, வரி 11) அவர் தம்முடைய எண்ணங்களைத் தந் தாயினிடம் மறைத்தார். (பக்கம் 155, வரி 6) சுவாமிஜீ பகிரங்கத்தில் தம்முடைய தந்தையாருடன் வீட்டுக்கு வருவதாய் வாக்களித்துக் கொண்டிருந்தார்; ஆனால், மனத்திலோ, தம்முடைய தந்தை எப்படி இவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவதில் பிடிவாதமாய் இருந்தாரோ, அப்படியே இவரும் தமது நாட்டத்தின்மீது உறுதியாயிருந்தார். (என்னே! சுவாமிஜீயின் மனத்திலுண்டானதை அவர் நாவினால் வெளியிடவில்லையே! எனவே, வேதத்துக்கு மாற்றஞ் செய்தார். இப்படிச் செய்பவர் தமது வேதத்துக்கு முரண்பட்டவரா? அல்லரா? இவர் எந்த உயர் வகுப்பிலுள்ளவர்? கபீர்.)

(2) சொல்:- “பொய் சொல்வதற்கு நிந்தை என்றும், உண்மை உரைப்பதற்கு ஸ்துதி என்றும் பெயர் கூறுவர்.” (ச. பி. அத். 4).

(2) செயல்:- (மேற்கூறப்பட்ட ஜீவிய சரித்திரம் பக்கம் 154, வரி 16) “இவ்விடமிருந்து நான் வீட்டை நோக்கியே போக நாடியிருந்தேன்.” (18-ஆவது வரி) “தங்களுடனே வருவதற்கு நான் சம்மதித்திருக்கிறேன்.” (பக்கம் 154, வரி 15) “மனிதர்கள் துரத்தியதால் யான் இங்கு வந்துவிட்டேன்.” (என்னே! சுவாமிஜீ சொன்ன இவ்வார்த்தை மெய்யா? அல்லது பொய்யா? பொய் சொல்லுகிறவன் எந்த உயர்குலத்தில் உள்ளவன்? கபீர்.)

(3) சொல்:- (ச. பி. அத். 4) “பிறரைத் திருப்தி செய்யவாவது பொய் பேசாதே.”

(3) செயல்:- (மேற்கூறிய ஜீவிய சரித்திரம் பக்கம் 154, வரி 15) “மனிதர்கள் துரத்தியதால் யான் இவ்விடம் வந்துவிட்டேன்.” (வரி 16) “என் எண்ணம் இவ்விடத்தை விட்டு வீட்டை நோக்கியே போகத் தூண்டிற்று.” (10-ஆவது வரி) “யான் தங்களுடனே வீட்டுக்கு வரச் சித்தமாயிருக்கிறேன்.” (அப்ஸோஸ்! சுவாமிஜீ தம்முடைய தந்தையாரைச் சந்தோஷப்படுத்துவதற்காக மாத்திரமே தமது வார்த்தையை வேதத்துக்கு முற்றிலும் மாற்றமாய்ப் பொய்ம் மொழியாகப் புகன்று நின்றார். இதனால் அவர் தந் தந்தையை ஏமாற்றத்துக் குள்ளாக்கினார். கபீர்.)

(4) சொல்:- (ச. பி. அத். 2) “பிள்ளைகள் எக்காலமும் உண்மையே பேசவேண்டும். கபடர்களையும் துராசாரமுள்ளவர்களையும் நம்பக்கூடாது. நன்மையான சகல விஷயங்களிலும் அவர்கள் பெற்றோர்களையும், ஆசாரியர்களையும் கீழ்ப்படிதல் வேண்டும்.”

(4) செயல்:- (“தயான்ந்த சரித்திர தர்ப்பணம்” என்னும் நூலில் பக்கம் 8, வரி 22 பார்க்க) சுவாமிஜீயின் ஊருக்குச் சற்றுத் தூரத்தில் உள்ள பால்கானீர் (பிக்கானீர்) ஜமீன்தாருடைய மகன் சுவாமிஜீயின் ஆடல் பாடலின்மீது மிக்க ஆவலுள்ளவனாக இருந்துவந்தான்; பின்பு சுவாமிஜீ அவனுடைய கபடத்துக்குள்ளாய், அவனுடனேயே வீட்டைவிட்டு வெளியில் ஓடிவிட்டார். இரண்டாவதாக, அதே வருஷத்தில் சுவாமிஜீயின் தந்தையார் சிவராத்திரியில் வணக்கம் புரியுமாறு ஏவினார்; ஆனால், சுவாமிஜீ அதைச் செய்தனரில்லை – (பக்கம் 139, வரி 3). மேற்கூறிய ஜீவிய சரித்திரம் பக்கம் 147 – இருபதாவது வயதில் விவாகம் பண்ண நாடினார்; ஆனால், சுவாமிஜீ அதை மறுத்துவிட்டார். (பக்கம் 147, வரி 19) “விவாகம் பண்ணுவதை மறுத்துவிட்டார்.” (பக்கம் 149, வரி 15) அவருடைய தந்தையார் ஜமீன்தாருடைய வேலையில் அமர்த்திவைக்க வேண்டுமென்னும் நாட்டத்தை வெளியிடலாயினார்; ஆனால் சுவாமிஜீ அதை ஏற்றுக்கொள்ளப் பிரியப்பட்டாரில்லை. (பக்கம் 128, வரி 5) அவருடைய மாதாவும் மற்றுமுள்ள குடும்பத்தினர்களும் அவருக்கு எதிராய் நின்று, “உம்மால் கூடுமானவரை வீட்டிலிருந்தே கல்வி கற்றுக்கொள்வீராக,” என்று ஏகோபித்துக் கூறினார்கள். (ஆகவே, சுவாமிஜீ தம்முடைய ஆசாரியரான தந்தையாரின் வார்த்தைப்படி நடவாமல் தமது வார்த்தை, வேதம் இரண்டிற்கும் முரணாய் நடத்தையில் காட்டி இழிவாக்கிய இவ்விஷயம் பாபமானதா? அல்லவா? கபீர்.)

(5) சொல்:- எந்த எந்தச் செய்கையினால் நம்முடைய பெற்றோர்களைச் சந்தோஷப்படுத்த முடியுமோ, அவற்றிற்குத்தாம் தர்ப்பணம் என்று பெயர். ஆனால், அவை பிழைத்திருக்கிறவர்களுக்கே செய்வதல்லாது மரித்தோர்களுக்கல்ல. (ஆலிஜனாப்! நல்லது! தாங்கள் சொல்வதேபோல் பிழைத்திருப்பவர்களுக்கே தர்ப்பணம் செய்யவேண்டும்; மரித்தோர்களுக்கில்லை, என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்ளுகிறோம்.)

(5) செயல்:- மேற்கூறிய 4-ஆம் நம்பர் செய்கையில் தாங்கள் ஜீவித்திருந்த தாய் தந்தையர்களான பெரியோர்களை எவ்வளவு தூரம் எவ்வாறு திருப்திசெய்து வைத்தீர்கள்? (ஜீவிய சரித்திரம் பக்கம் 150, 151) ஜீட் (ஜீட் என்பது வட இந்தியாவில் ஹிந்துக்களின் இரண்டாவது மாதமாம்.) மாதக் கடைசியில் சாயங்கால நேரத்தில் தமது வீட்டைவிட்டு வெளியில் ஓடி, முதல்தின இரவில் தம்மூருக்கு எட்டாவது மைலில் தங்கினார்…… (பக்கம் 154) சீதாபூரில் சுவாமிஜீயை அவரது தகப்பனார் பிடித்து, வேறு சில மனிதர்களின் காவலில் அவரை வைத்தார். (ஆனால், பாருங்கள், பக்கம் 155, வரி 9) இரவு 3 மனி சுமாருக்கு எல்லாக் காவலாளிகளும் தூங்கிவிட்டனர்; சுவாமிஜீக்கு இப்படிப் பட்ட நிலைமையில் தூக்கம் எங்கிருக்கப் போகிறது? ஆதலின், சமயம் கிடைத்த அப்பொழுதே புறப்பட்டு ஓடிச் சுமார் ஒன்றரை மைலுக்கப்பாலுள்ள ஒரு தோட்டத்தில் ஒளிந்துகொண்டார். (வரி 2) சுவாமிஜீயின் தந்தையாரோ, “நீ உன் மாதாவின் இரத்தத்தை உன் கழுத்தில் வாங்கப் பார்க்கிறாய்” (அஃதாவது, அவளுடைய உயிரை வாங்கப் பார்க்கிறாய்) என்று தெளிவாக ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருந்தார். (ஆனால், சுவாமிஜீ ஜீவித்திருந்த தம்முடைய தாய் தந்தையர்களின் பேச்சை ஒரு சிறிதும் கேளாமலும், அவர்கள் பிழைத்திருக்கும்வரை பிரிவாற்றாமையென்னும் நெருப்பில் எரிய வைத்துந்தாம் தர்ப்பணம் செய்தார். ஆகவே, ஆரிய சகோதரர்கள் அனைவரும் அவரது ஜீவியத்தின் விசேஷங்களைத் தமக்குரிய முன்மாதிரியாய்க் கொள்ளக்கடவர்! கபீர்.)

-பா. தாவூத்ஷா

படம்: அபூநூரா

தட்டச்சு: யூனுஸ் அஹ்மது 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

Related Articles

Leave a Comment