14 – காத்திருக்காமல் வாழலாம்

by நூருத்தீன்

பழைய கவலைகளும் எதிர்காலம் பற்றிய பயமும் சேர்ந்து எப்படி நம்முடைய நிகழ்காலத்தைத் தொலைக்க வைக்கின்றன, அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு எப்படி

நிகழ்காலத் தருணத்தில் வாழ்வது, அங்ஙனம் வாழ்வது மனதிற்கு அளிக்கும் ஆரோக்கியம் என்ன ஆகியனவற்றைச் சென்ற வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாய், மற்றொன்றை இங்கே பார்ப்போம்.

காத்திருத்தல்!

காத்திருத்தல் தெரியுமோ? பஸ், ரயில், விமானம், காதலன், காதலி, குழாயில் தண்ணீர், மின்சாரம் என்று – விரும்புகிறோமோ இல்லையோ – நாம் வாழ்க்கையில் எதற்காவது காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படிக் காத்திருக்கும் போது, என்னவோ காலங்காலமாய்க் காத்திருப்பது போன்று ஓர் உணர்வும் ஆயாசமும் எரிச்சலும் ஏற்படுவதை உணர்ந்திருக்கிறீர்களா?
பஸ்ஸிற்காகக் காத்திருந்தால் அந்த பஸ் வரவே வராது போலிருக்கும். மருத்துவர் அறையில் காத்திருந்தால் நம்மைத் தவிர நமக்குப் பிறகு வந்தவர்களையெல்லாம் அந்த நர்ஸ் முதலில் அழைப்பது போலிருக்கும்.

சரி பஸ்தான் லேட்டாகிறதே; அந்த எதிர்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் என்று சென்றிருப்பீர்கள்; சரியாக அப்பொழுதுதான் பஸ் வந்து சேரும். குடித்தும் குடிக்காமலும் அரக்கப் பரக்க ஓடிவர வேண்டியதுதான். அடக்கி வைத்த உச்சாவைக் கொட்டிவிடலாம் என்று பாத்ரூம் சென்றிருக்கும்போது அந்த நர்ஸ் உங்கள் பெயரை அழைத்திருப்பார்.

தவிர,

ஒரு குறிப்பிட்ட கடிதம் (இப்பொழு எல்லாமே மின்னஞ்சலோ), ஒரு மனிதர், பொருத்தமான உத்தியோகம், அனைத்தும் பொருந்திப்போகும் வாழ்க்கைத் துணை, திரையில் காணும் அயல்நாட்டு நகரங்களைப் போன்ற அழகிய இந்திய நகரங்கள் என்று காத்திருப்புப் பட்டியல் நீளம். இவையெல்லாம் வந்தடைய நீண்ட காலமாகலாம், அல்லது சில வராமலேயே போகலாம்.

ஆனால் இவற்றிற்காக அல்லது இவற்றில் ஏதோ ஒன்றிற்காக நாம் காத்திருக்கும்போது. அந்தத் தாமதத்தினால் மனம் பாதிப்படைகிறது. அதன் எதிர்வினை, எரிச்சல், கோபம் என்று வெளிப்பட்டு மேலும் இழுத்துப் போட்டுக் கொள்ளும் அவஸ்தை. எனவே, காத்திருப்பு தவிர்க்க இயலாதது எனும்போது ஏன் மனதை வருத்திக் கொள்ள வேண்டும்? ”உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா” என்று இருக்கும் மகிழ்ச்சியையும் ஏன் தொலைக்க வேண்டும்?

சரி – அதற்கு என்ன செய்வது?

காத்திருக்கும நேரத்தில் வாழுங்கள்.

அப்படியென்றால்?

காத்திருக்கும்போது ஸ்தம்பித்து நின்றுவிடாமல் மற்ற உபயோகமான வேலைகளைச் செய்ய வேண்டுமாம். நிகழ்காலத் தருணத்தைத் தொலைக்காமல் ஆக்கபூர்வ வேலையொன்றில் ஈடுபடும்போது மனதை அது அவஸ்தையிலிருந்து திசை திருப்ப உதவிடும் என்கிறார்கள்.

மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு ஒரு விஷயத்திற்குக் காத்திருக்காமல் நடைபெறவேண்டிய அடுத்த வேலைகளை இயல்பாய்த் தொடருவது உத்தமம். வாசிக்க வாய்ப்பில்லாமல் இருக்கும் சுவாரஸ்யப் புத்தகத்தைக் கையுடன் எடுத்துச் சென்றிருந்தால் மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் படிக்க ஆரம்பியுங்கள் போதும். நேரம் சுருங்கிப்போய் நீங்கள் உடனே உள்ளே அழைக்கப்பட்டிருப்பீர்கள். (இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா பொது இடங்களிலும் டிவி பெட்டியை கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள். அதை கவனமாய்த் தவிர்ப்பது நல்லது. பாதி மன மகிழ்வு தானாய் வந்தடையும்.)

பொருத்தமான வேலை கதவைத் தட்டி வந்தால்தான் ஆச்சு என்று அடம்பிடித்துக் கொண்டு வீட்டில் சோபாவில் குந்திக் கொண்டிருக்காமல், அத்தகைய வேலைக்கு முயன்று கொண்டே வேறு உத்தியோகம் பார்க்கலாம். இல்லை அப்பா சம்பாதித்து வைத்தது ஏகத்துக்கும் இருக்கிறது, உட்கார்ந்து சாப்பிட்டால் கரையாது என்ற பொருளாதாரத் தன்னிறைவு இருந்தால், ஏதாவது பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியை அழைத்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை கண்டுபிடிக்கச சொல்லி அதை மெருகூட்டி வெளிப்படுத்துங்கள். நல்லதொரு சிற்பி, தொழிலதிபர், என்று யாராவது வெளிப்படுவர்.

காத்திருக்கும் ஒரு செயலிலிருந்து உங்களது அடிமைத்தளையை நீக்கிக் கொண்டு வேறு அலுவலில் ஈடுபட்டால் நிகழ்காலத் தருணம் எளிதாகி மனம் சாந்தியடையும். பஸ் தானாய் வந்து சேரும்.

அப்படியெனில் மனைவியை அழைத்துச் செல்ல ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்கக் கூடாது. எஸ்எம்எஸ்-ஸில் உங்கள் மனைவியிடம் கேளுங்கள்.
மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 17 செப்டம்பர் 2010 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம. ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment