தோழர்கள் – 26 அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ (ரலி)

26. அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ (النعمان بن مقرن المزني)

தாயின் நகரம். பாரசீகத்தின் பேரரசன் யஸ்தஜிர்து கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அவனது பேரவைக்கு ஒரு பிரதிநிதிக்குழு வந்திருந்தது. அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு என்னென்னவோ பேச, சக்கரவர்த்திக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.

“பிரதிநிதிகளைக் கொல்லக் கூடாது என்ற நடைமுறை மட்டும் இல்லாதிருப்பின் உங்களையெல்லாம் நான் கொன்றிருப்பேன். உங்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. திரும்பிச் செல்லுங்கள்”

ம்ஹூம், போதாது; வெறுமனே இவர்களை அதட்டி அனுப்பினால் போதாது. அவமானப்படுத்த வேண்டும்! அவர்களது முகத்தில் மண் பூச வேண்டும் என்று கதறியது அவன் மனம்.

“மூட்டை நிறைய மண் எடுத்து வாருங்கள்”

உடனே எடுத்து வந்தார்கள் சேவகர்கள். “இவர்களது குழுவில் உயர்குடி வகுப்பினன் எவனோ அவனது முதுகில் மணல் மூட்டையை ஏற்றி வைத்து, மக்களெல்லாம் காணும் வகையில் இவர்களை மதாயின் நகரை விட்டே துரத்துங்கள்”

விரைந்து எழுந்தார் ஆஸிம் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு. “இந்தக் குழுவில் உயர்குடியைச் சேர்ந்தவன் நானே” என்று பரிசு வாங்கச் செல்பவர்போல் அந்த மணல் மூட்டையைப் பெருமிதமாய் ஏற்றுக் கொள்ள, மக்களெல்லாம் பரிகாசமும் நையாண்டியுமாய்ப் பார்க்க அந்தத் தூதுக்குழு தங்களது படை முகாமிற்குத் திரும்பியது. படைத் தலைவர் ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆவலுடன் கேட்டார், “சென்ற காரியம் என்ன ஆயிற்று?”

“மனம் மகிழுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ், அவர்களது அரசாங்கத்தின் சாவியை நம்மிடம் ஒப்படைத்துவிட்டான்” என்று மணல் மூட்டையை இறக்கி வைத்தார் ஆஸிம்.

யஸ்தஜிர்த் மண் மூட்டையை ஏற்றி வைத்ததோ அவமானப்படுத்த. அதைச் சுமந்து வந்ததில் எவ்வளவு அவமானம் ஆத்திரம் ஏற்பட்டிருக்க வேண்டும்?. ஆனால், அவன் தனது நிலத்து மண்ணை அள்ளித் தானாகத் தந்து, தங்களது வெற்றிக்கு வித்திட்டுவிட்டான் என்று பெருமிதமடைந்தார்கள் தோழர்கள்! அல்லாஹ்வின் பாதையில் களமிறங்கியதும் என்ன பிரச்சினையானாலும் சரி, சிக்கலானாலும் சரி அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை! அனைத்தையும் ஆக்கபூர்வமாகவே பார்க்கும் பரந்த நோக்கு இருந்திருக்கிறது அவர்களுக்கு. ரலியல்லாஹு அன்ஹும்.

oOo

மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் ஓர் ஊர் இருந்தது. அங்கு முஸைனா எனும் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்தபின் மக்காவிலிருந்து மற்ற முஸ்லிம்களும் மெதுமெதுவே மதீனா வந்தடைய ஆரம்பித்தனர். அவர்களெல்லாம் முஸைனாவைக் கடந்துதான் செல்ல வேண்டும். வழக்கத்திற்கு மாறான, அதிகமான போக்குவரத்து; மதீனாவில் நிகழ்ந்துவரும் மாற்றம்; இவையெல்லாம் முஸைனா குலத்து மக்கள் மத்தியல் செய்தியாக ஆரம்பித்தன. “என்னதான் நடக்கிறது அங்கே?” என்று ஆவலும் ஆர்வமுமாய் விசாரிக்க, பதிலாய்க் கிடைத்த தகவல்களெல்லாம் அவர்களுக்கு ஆச்சரியமளித்தன!

“அப்படியா? உண்மையாகவா? இப்படியெல்லாம்கூட வாழலாமா? சிறப்பாக இருக்கே!”

கோத்திரங்களுக்கெல்லாம் சில தலைவர்கள், பெருந்தலைவர் என்று உண்டு. முஸைனா கோத்திரத்திற்கும் ஒருவர் இருந்தார்; அந்நுஃமான் இப்னுல்-முகர்ரின். அவருக்கு ஒன்பது சகோதரர்கள். சனான், ஸுவைத், அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், அகீல், மஅகல், நயீம், மார்தி, தர்ரார்.

ஒருநாள் மாலை சகோதரர்கள், நண்பர்கள், பெரியவர்கள் என்று கூட்டமாய் அமர்ந்து பேசி்க்கொண்டிருந்தார்கள். நுஃமான் மனதில் சிலநாளாய் ஓர் எண்ணம் ஓடிக்கொண்டிருந்ததது. அன்று வாய்ப்பு அமைந்துவிட, பேசினார்:

“என் மக்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். முஹம்மது என்றொருவர் இங்கு யத்ரிபிற்கு வந்திருக்கிறாரே, அவர் மக்களுக்குக் கருணை கற்றுத் தருகிறாராம்; நீதியும் நேர்மையும் போதிக்கிறாராம். இன்னும் அவரைப் பற்றிக் கேள்விப்படுவதெல்லாம் நல்லவையாகவே இருக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து மக்களெல்லாம் முந்திக்கொண்டு அவரிடம் செல்கிறார்கள். நல்லவற்றை ஏற்றுக்கொள்வதை நாம் ஏன் தாமதப்படுத்த வேண்டும்? என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் நான் முடிவு செய்துவிட்டேன். நாளைக் காலை முதல் வேலையாக நான் யத்ரிப் சென்று அவரைச் சந்திக்கப் போகிறேன். என்னுடன் வர விருப்பமுள்ளவர்களெல்லாம் பயணத்திற்குத் தயார் செய்து கொள்ளுங்கள்”

அச்சொற்கள் விழுந்த செவிகள் அறிவுக் கூர்மையுள்ள செவிகள். மறுநாள் பொழுதுவிடிந்தது. நுஃமான் வெளியே வந்து பார்த்தால் அவரின் அனைத்து சகோதரர்களும் நானூறு போர்வீரர்களும் என்று ஒரு படையே பயணத்திற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது.

புருவம் உயர்த்தி யோசித்தார் நுஃமான். ‘இத்தனைபேர் செல்கிறோம்; இறைத்தூதர் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறோம்; வெறுங்கையுடன் எப்படிச் செல்வது? ஏதாவது அன்பளிப்பு அளிக்க வேண்டுமே..’ சோதனையாய் அந்த ஆண்டில் மழையின்றி, விளைச்சல் இன்றி, வறுமையில் இருந்தார்கள் அவர்கள். கால்நடைகளும் ஏதும் அதிகமில்லை. பஞ்சத்திலிருந்து காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் சில அவரது வீட்டிலும் அவரின் சகோதரர்கள் வீட்டிலும் இருந்தன. அவற்றையெல்லாம் தேற்றி ஓட்டிக்கொண்டு, கிளம்பியது அந்தப் படை – மதீனாவை நோக்கி.

“வருகிறது ஒருபடை, தங்களை ஆரத் தழுவிக்கொள்ள” என்ற நற்செய்தி நபியவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பெருமகிழ்வுடன் அவர்களை வரவேற்க நபியவர்கள் தயாரானார்கள்.

நானூற்று சொச்சம் பேரும் வாகனப் பிராணிகளும் ஆடுகளும் என்று பாலை வெயிலில் நடந்து வந்தால் எப்படி இருக்கும்? காற்றில் மணல் புழுதி பறக்க, நிலம் திடும் திடுமென அதிர மதீனாவில் நுழைந்தார்கள் நுஃமானும் சகோதரர்களும் முஸைனி குலத்துப் போர் வீரர்களும். மதீனாவே மகிழ்ச்சியில் அதிர்ந்தது! எத்தனையோ கோத்திரத்திலிருந்து வருகிறார்கள்; தனித்தனியாக வருகிறார்கள், சிறு குழுவாய் வருகிறார்கள்; இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்க, தம் சகோதரர்கள் அனைவரும் தம் குலத்தின் நானூறு போர் வீரர்களும் திருமண நிகழ்ச்சிபோல் ஒரு கோத்திரமே வந்து இணைவதைக் காண்பது மதீனாவிலிருந்த முஸ்லிம்களுக்குப் புதுசு. வரலாற்றில் தனித்தன்மையை பெற்றுவிட்ட ஒரு பெருநிகழ்வு அது.

அவர்கள் அளித்த பரிசை நபியவர்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். குர்ஆனிலுள்ள சூரா தவ்பாவின் 99ஆவது வசனம் இந்நிகழ்வை இப்படிக் குறிக்கிறது –

“கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறைத் தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் பேரருளில் புகுத்துவான் – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்”

நுஃமான் ஒரு கோத்திரத்தின் தலைவர். மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்து கொண்டிருந்தவர். ஆள் பலம், படை பலம் உள்ளவர். வீர தீர சகோதரர்களே பத்துப் பேர். இவர்கள் அனைவரும் மெனக்கெட்டு ஊரிலிருந்து பயணம் கிளம்பிச் செல்கிறார்கள். பணம் கொடு, பதவி கொடு, மந்திரி சபையில் இடம் கொடு, இட ஒதுக்கீடு கொடு என்றெல்லாம் பேசவில்லை! உலக ஆதாயங்களைப் பற்றி மூச்சே இல்லை.

‘ஒரே இறைவன் என்கிறீர்கள். நன்றாக அறிவுக்குப் புரிகிறது. நல்லறம் போதிக்கிறீர்கள்; தீய செயல்களைச் செய்யக் கூடாதெனச் சொல்கிறீர்கள். மனதில் ஆனந்தம் பொங்குகிறது. நாங்கள் பத்துப் பேர் மட்டுமே சகோதரர்கள் இல்லை; இஸ்லாத்தினுள் காலடி எடுத்துவைத்த எல்லோருமே சகோதரர்கள் என்கிறீர்கள். அதன் உன்னதம் சிலிர்க்கிறது. இங்கு வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தென்படுகிறது. நிரந்தரம் என்பது மறுமைக்குள் ஒளிந்திருப்பதை உணர முடிகிறது. போதும்! இது போதும் எங்களுக்கு!’ என்று தலைமைப் பகட்டு, இறுமாப்பு அனைத்தையும் கழட்டி வைத்துவிட்டு அடக்கமாய் இஸ்லாத்திற்குள் நுழைந்தார் அந் நுஃமான் இப்னு அல்-முகர்ரின், ரலியல்லாஹு அன்ஹு.

அதன்பிறகு –

அகழி யுத்தம், இதர யுத்தங்கள் என்று இஸ்லாத்திற்காக நடைபெற்ற போர்களிலெல்லாம் நபியவர்களுடன் இணைந்து களத்தில் ஒரே வீரவிளையாட்டுதான். போரில் நபியவர்களின் கொடியை ஏந்திச் செல்லும் பொறுப்பும் பெருமையும் அவருக்குக் கிடைத்தது. மக்கா படையெடுப்பின்போது பெரும் படை சென்றது; அதில் பத்தாயிரம் வீரர்கள்வரை இருந்தனர் என்று முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோமல்லவா? அதில் நுஃமானின் முஸனி கோத்திரத்தின் வீரர்கள் மட்டுமே ஆயிரத்து முந்நூறு பேர்.

oOo

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் மூன்று முக்கியப் பிரச்சினைகள் அவரை நெருக்கின. முதலாவதாக உஸாமா பின் ஸைதையும் அவர் தலைமையில் படையையும் ரோமர்களை நோக்கி அனுப்பி வைப்பது. இரண்டாவது, “நானும் நபி, நானும் இறைத் தூதுவன்” என்று கிளம்பினார்களே கிறுக்கர்கள், அவர்களிடம் போர் தொடுப்பது. மூன்றாவது இஸ்லாத்திலிருந்து தடம் புரண்டு போனதுமில்லாமல் தூற்றத் தொடங்கியவர்களை நேர்படுத்துவது.

ஒரு பாராவில் எழுதிவி்ட்டாலும் இவை மூன்றுமே நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாத பெரும் சோதனைகள். அவை அனைத்தையுமே தமது இரண்டரை ஆண்டுகால ஆட்சியிலேயே அபூபக்ரு எதிர்கொண்டு சாதித்துக் காட்டியது இன்ஷா அல்லாஹ் நாம் படித்தறிய வேண்டிய தனி வரலாறு.

முன்னர் நாம் பார்த்த சில தோழர்களின் வரலாற்றில் பொய்யன் முஸைலமா பிரதானமாய் தென்பட்டிருப்பான். இங்கு நேர்வழியிலிருந்து பிறழ்ந்துபோன கூட்டங்களுடன் நடைபெற்ற ரித்தா போர்க் காட்சிகள் சிலவற்றைப் பார்த்துவிடுவோம்.

நபியவர்கள் மரணிக்குமுன் புதிதாய் இஸ்லாத்தில் நுழைந்த கோத்திரத்தினர் சிலர் இருந்தனர். அவர்கள் மத்தியில் ஓரிறைக் கொள்கை முற்றிலும் வேரூன்றாமல் இருந்தது. பண்டைய பழக்க வழக்கங்களில் ஊறித் திளைத்திருந்த அவர்கள் மனதிலிருந்து அப்பழக்கம் முழுவதுமாய் விடுபடவில்லை. நபியவர்களின் மரணச் செய்தி கிடைத்ததும், ‘சரி தான்! புதிதாய் முஹம்மத் தோற்றுவித்த கலாச்சாரம் அது. ஆட்டம் முடிந்தது’ என்று அவர்களது மனதில் குலப் பெருமை, அதிகார வேட்கை, பண ஆசை ஆகியனவெல்லாம் திரும்பவும் குடியேற ஆரம்பித்தன.

“ஸகாத்தா? என் பணம்; என் காசு; என் சொத்து. அதெல்லாம் தரமாட்டேன். போனால் போகிறது, தொழுது கொள்கிறேன்; நோன்பு நோற்கிறேன்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

‘மதீனாவிலிருந்து முஸ்லிம் வீரர்களின் பெரும் படை உஸாமாவின் தலைமையில் ரோமர்களை நோக்கிச் சென்றுவிட்டது; கலீஃபாவும் முஸ்லிம்களும் முஹம்மதை இழந்த சோகத்தில் மனமும் உடலும் நொடித்துப் போய் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் வலுவிழந்து விட்டனர். அவர்களால் நம்மை எதுவும் செய்துவிட முடியாது’ என்ற இறுமாப்பும், இஸ்லாத்திலிருந்து விலகிப்போன முர்த்தத்களிடம் குடிகொள்ளலாயிற்று.

இஸ்லாமிய வரலாற்றில் கடுங்கொந்தளிப்பான காலகட்டம் அது.

முஸ்லிம்களுக்கு எதிராக பனூ கதஃபான், பனூ அஸத், பனூ தாய் ஆகியோர் போர்களத்திற்கு வந்துவிட்டார்கள். பனூ தால்பா பின் ஸஅத், பனூ மர்ரா, பனூ அபாஸ் எனும் கோத்திரத்தினர் தங்களது படையுடன் மதீனா நகருக்கு அருகே அமைந்துள்ள அப்ராக் எனும் திறந்தவெளிக்கு வந்துவிட்டனர். பெருங் கூட்டமாய்க் கூடி நெருக்குதல் அளித்தால் கலீஃபா அபூபக்ரு இணங்கிவிடுவார் என்ற திட்டம் இருந்தது அவர்களுக்கு. அப்படி இல்லையா மதீனாவைத் தாக்கிக் கைப்பற்றுவோம்! கிள்ளுக்கீரை என்று நினைத்துவிட்டனர் ஸித்தீக்குல் அக்பரை.

அந்தக் கோத்திரங்களின் குழுவொன்று அபூபக்ருவைச் சந்தித்து, “ஸகாத்தெல்லாம் முஹம்மது நபி இருக்கும்போது கேட்டார்கள்; தந்தோம். அவர் சென்றுவிட்டார். அதனால் அதை நாங்கள் உங்களுக்குத் தரத் தேவையில்லை. எங்களை ஸகாத் கடமையிலிருந்து விடுவித்துவிடுங்கள். இல்லையா எங்களுக்கு இஸ்லாமெல்லாம் தேவையில்லை. நாங்கள் வெளியேறுகிறோம்”

உமர் (ரலி) உட்பட மூத்தத் தோழர்கள் மத்தியில் இந்த முர்தத்களை எதிர்த்துப் போர்தொடுப்பதில் தயக்கம் இருந்தது. பயமல்ல; அரசியல் தயக்கம்.

“ஸகாத் மட்டும்தானே தரமாட்டேன் என்கிறார்கள். ஆனால் தொழுது கொள்கிறேன், இதர கடமைகள் செய்கிறேன் என்கிறார்கள்; எனில் அவர்களும் முஸ்லிம்களாகத்தானே கருதப்பட வேண்டும். கலிமாச் சொல்லியிருக்கும் இவர்களிடம் எப்படிப் போரிடுவது?”

அதற்கு அபூபக்ரு (ரலி) உரைத்த பதில் சுருக்கமானது. வலிமை வாய்ந்தது. “அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையில் வேறுபாடு காண்பவன் யாராக இருந்தாலும் நிச்சயம் அவனை எதிர்த்து நான் போரிடுவேன. ஸகாத் அவர்களது சொத்தின் மீதான உரிமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களிடம் சிறியதொரு பெண் ஆட்டை ஸகாத்தாக கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது எனக்குத் தரமறுத்தால் போர்தான். அவ்வளவு ஏன், மூக்கணாங்கயிறு ஒன்றை ஸகாத் கடமையாய் அவர்கள் நபியவர்களிடம் அளித்திருந்து அதை இப்பொழுது தர மறுத்தாலும் சரியே”

நமக்கு இதில் பாடம் இருக்கிறது. ‘எவ்வளவு நேரம்தான் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருப்பது, கொஞ்சம் தொழுதுவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நேற்றுதான் இரண்டு ஏழைக்கு மீந்துபோன சோற்றைப் போட்டேன்; இன்று ஸகாத்தும் கொடுக்கணுமா?’ என்று சொல்வதற்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் என்ன பொழுது போக்கா? அவை மார்க்கத்தின் அடித்தளமல்லவா!

அபூபக்ருவின் அந்த பதில், வந்த குழுவினரைப் பேச்சடைத்துப் போகச் செய்தது. அதேநேரத்தில் அபூபக்ருவின் திட்டவட்டமான இந்த பதில் உமர், இதரத் தோழர்களின் உள்ளங்களைத் திறக்க, பளீரென உண்மை அவர்களுக்குப் புரிந்தது.

தம் பதிலால் வந்தவர்கள முகத்தில் தெரிந்த மாறுதலைத் தெளிவாகப் படித்துவிட்டார் அபூபக்ரு. அவர்கள் போருக்குத் தயாராகி மதீனாவைத் தாக்கத் திட்டமிடுகிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்தது.

திரும்பிய குழு, தங்கள் தலைவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தது. அந்த அனைத்துக் கோத்திரத்தின் தலைவர்களும் பரபரவென்று ஆலோசனை செய்தார்கள். ‘முஸ்லிம்களின் பெரும் படையொன்று மதீனாவை விட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டதால் போதிய படை பலம் இன்றி முஸ்லிம்கள் பலகீனமான நிலையில் இருக்கிறார்கள். நம் தாக்குதலை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் அவர்களிடம் இப்போது வலுவில்லை. இதுதான் சரியான தருணம். மதீனா நம் கையில் வந்துவிட்டால் அதன் நிர்வாகம் நமதே’ அந்த ஒவ்வொரு கோத்திரமும் வெற்றியில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தைக் கனவு கண்டு, வாயைத் துடைத்துக்கொண்டு, “நாங்கள் தயார்” என்று ஏகமனதாய் அறிவித்துவிட்டன.

இங்கு மதீனாவில் தற்காப்பு ஏற்பாடுகள், போர் ஏற்பாடுகள் என உடனே மளமளவென்று காரியத்தில் இறங்கினார் கலீஃபா அபூபக்ரு. முதற்காரியமாகப் பெண்களையும் குழந்தைகளையும் கோட்டைகளுக்குள்ளும் மலைகளுக்கும் அனுப்பி வைத்தார். மதீனா நகருக்கு வெளியே காவல்படை அமைக்கப்பட்டது. பிறகு, இஸ்லாத்தில் திடமாய் நிலைத்திருந்த இதர கோத்திரத்தினருக்கு உடனே தகவல் அனுப்பப்பட்டது. வழி தவறிப்போனவை சிலகோத்திரங்கள்தாமே. இஸ்லாம் ஆழ வேரூன்றிக் கிடந்த அஸ்லம், கிஃபார், அஷ்ஜா, ஜுஹைனா, கஅப் மற்றும நுஃமானின் முஸைனா கோத்திரங்களுக்குத் தகவல் வந்து சேர்ந்ததுமே, குதிரைகள், ஒட்டகங்கள், போர்த் தளவாடங்கள் என்று மதீனாவின் வீதிகள் அக்கோத்திரங்களின் முஸ்லிம் வீரர்களால் நிறைந்தன.

அபூபக்ருவின் யூகம் தவறாகவில்லை. எதிரிகள் வந்து பேசிச் சென்று மூன்று நாட்கள்கூட ஆகியிருக்கவில்லை. அஸத், கத்ஃபான், அப்ஸ், திப்யான், பக்ரு கோத்திரங்கள் படை திரண்டனர். தீஹுஸ்ஸா என்ற பகுதியில் முகாம் அமைத்துக் கொண்டு குறிப்பி்ட்ட அளவிலான படை வீரர்கள் முதலில் மதீனாவை நோக்கிக் கிளம்பினர்.

நகருக்கு வெளியே இருந்த காவல் படைவீரர்கள் கிளம்பி வரும் ஆபத்தை உடனே கலீஃபாவுக்குத் தெரிவிக்க, “அங்கேயே இருங்கள். இதோ வந்துவிட்டேன்” என்று கலீஃபா அபூபக்ரும் இன்னும் சில போர் வீரர்களும் உடனே அங்கு விரைந்தனர்.

போன வேகத்தில் அப்படியே முஸ்லிம்களைத் துவட்டி துவம்சம் செய்துவிட்டு மதிய உணவை மதீனாவில் சாப்பிடலாம் என்று படு அலட்சியத்துடன் வந்த எதிரிகள் மதீனா நகருக்கு வெளியே அத்தகைய பாதுகாப்பையும் முஸ்லிம் போர்வீரர்களையும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மதீனா நோக்கிச் செல்லும் சாலையெங்கும் திறமையான முஸ்லிம் போர்வீரர்கள் காவல் நிற்க, துவங்கியது சண்டை! நிறைய நேரம் எடுக்கவில்லை. சற்று நேரத்திலேயே எதிரிகளை விரட்ட ஆரம்பித்துவிட்டனர் முஸ்லிம்கள். மிரண்டு திரும்பி ஓடஆரம்பித்தனர் எதிரிகள். விடாமல் அவர்களை விரட்டிக் கொண்டு சென்றது முஸ்லிம் படை. வெற்றிச் செய்தியை எதிர்நோக்கி முகாமிட்டுக் காத்திருந்த எதிரிப் படையின் இதர போர்வீரர்கள், மூச்சிரைக்க தங்களது படை ஓடிவருவதையும் அவர்களை முஸ்லிம் படையினர் ஆவேசமாய்த் துரத்திக் கொண்டு வருவதையும் பார்த்துத் திடுக்கி்ட்டு எழுந்தனர். தங்களுக்கு பலத்த உயிர்ச்சேதம் ஏற்படப் போகிறது என்று தெளிவாகத் தெரிந்தது.

உடனே ஒரு காரியம் செய்தார்கள். தங்களிடமிருந்த முரசுகளையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு ஆவேசமாய்க் கொட்ட ஆரம்பித்தார்கள். பயங்கரமான முரசு ஒலிகள். அத்திட்டம் சரியாக வேலை செய்தது. முஸ்லிம்களின் ஒட்டகங்கள் அவ்வொலியில் மிரண்டு திக்குத் தெரியாமல் ஓடத் துவங்கின. அவற்றையெல்லாம் சமாளித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குள் முஸ்லி்ம் படைகளுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. ஒருவழியாய் உயிரிழப்பு எதுவும் இல்லாமல் மதீனா திரும்பியது முஸ்லிம்களின் படை.

இதனிடையே முஸ்லிம்களை எப்படியும் வென்றுவிடுவோம் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த எதிரிகள் முன்னமேயே தில்-கிஸ்ஸா பகுதியிலிருக்கும் தங்கள் நண்பர்களுக்குத் தகவல் அனுப்பியிருந்தனர். “முஸ்லிம்கள் நோஞ்சான் நிலையில் இருக்கிறார்கள். வேறொரு வழிபிடித்துக் கிளம்பி வாருங்கள். பிய்த்து எறிந்துவிடலாம்” அந்த தில்-கிஸ்ஸா மக்களும் ஒரு படை திரட்டிக் கொண்டு மதீனா நோக்கி வர ஆரம்பித்தனர். இந்தப் படை அணியும் மதீனாவை எளிதாய்க் கைப்பற்றி விடலாம், பெரிதாய் எதிர்ப்பெல்லாம் இருக்காது என்று ஏகப்பட்ட நம்பிக்கையுடனும் அலட்சியத்துடனும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு விதி வேறுவிதமாய் மதீனாவில் காத்திருந்தது.

‘தம்பி உடையான படைக்கு அஞ்சான்’ என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு தம்பிக்குப் பதிலாய் அண்ணன் தம்பிகள் பத்துப்பேர் கிடைத்தால்? அபூபக்ரு ரலி படை திரட்டினார். வலப்பக்க அணிக்குத் தலைமை நுஃமான் இப்னு முகர்ரின். இடப் பக்க அணிக்கு அவர் சகோதரர் அப்துல்லா இப்னு முகர்ரின். காலாட் படைக்குத் தலைமை மற்றொரு சகோதரர் ஸுவைத் இப்னு முகர்ரின். மதீனாவிலிருந்து கிளம்பியது இந்தப் படை. எதிரிகளை அவர்கள் சற்றும் எதிர்பாராமல் தாக்கும் திட்டம் தீட்டப்பட்டது. எனவே முஸ்லிம் படையினர் படு கவனமாய் எச்சரிக்கையுடன் சப்தமே எழுப்பாமல் மிக மிக அமைதியாய் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர்.

இருள் முற்றிலும் விலகாத விடியற்காலை நேரம்.

தங்களது அருகில் நெருங்கிவிட்ட முஸ்லிம் படைகளின் குசுகுசுப்பான சப்தம்கூட கேட்காத நிலையில் இருந்த எதிரிகளை பாய்ந்து தாக்கியது முஸ்லிம் படை. “என்ன, ஏது” என்று உணர்வதற்குள் வாள்கள் சுழன்றன; ஈட்டிகள் பாய்ந்தன; அம்புகள் பறந்தன. எதிரிகளின் உடல்களை சரமாரியாகத் துளைக்க ஆரம்பித்தன.

பொழுது விடிந்து சூரியன் எழுவதற்குள் எதிரிகள் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் களத்தை வி்ட்டு ஓட, மீதமிருந்தவர்களை முஸ்லிம் படையினர் துரத்த, தில்-கிஸ்ஸாவரை எதிரிகளை ஓடஓட விரட்டினர் முஸ்லிம்கள். இறுதியில் எதிரிகளின் கால்நடைகள் முஸ்லிம்கள் வசமாயின.

பின்னர், அந் நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் ஒரு படைப்பிரிவை அப்பகுதியில் காவலுக்கு நிறுத்திவிட்டு கலீஃபா அபூபக்ரு மற்ற வீரர்களுடன் மதீனா திரும்பினார். இந்நிலையில் அலீ (ரலி) முக்கியமான ஆலோசனையொன்றை அறிவித்தார். கலீஃபா இத்தகைய அபாய நடவடிக்கைகளில் தாமே நேரடியாக ஈடுபடாமல் மற்ற தோழர்களைத் தளபதியாக அனுப்ப வேண்டும் என்ற அவரது ஆலோசனையை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு அதை அபூபக்ருவிடம் எடுத்துச் சொல்லித் தடுத்தனர்.

அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட அபூபக்ரு, காலீத் பின் வலீத், இக்ரிமா பின் அபூஜஹ்ல் போன்ற திறமையான பதினொரு தளபதிகள் தலைமையில் பல பகுதிகளுக்கும் படையனுப்பினார். அவர்களில் ஒருவர் நுஃமானின் சகோதரர் ஸுவைத் இப்னு முகர்ரின். அவரது தலைமையில் ஒரு படைப்பிரிவு திஹாமா பகுதிக்குச் சென்று போரிட்டது. பின்னர் முர்தத்கள் அனைவரின் மீதும் ஏககாலத்தில் முழுவீச்சில் போர் தொடுக்கப்பட்டு அவர்களது பிரச்சினை ஒருவழியாய் முடித்து வைக்கப்பட்டது.

oOo

கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்களுடன் காதிஸிய்யாவில் நிகழ்வுற்ற யுத்தம் சில பல அத்தியாயங்களுக்கு நீளும் தனி வரலாறு. சுவையான வீர வரலாறு.

பாரசீகம் நோக்கிச் சென்ற முஸ்லிம் படைகளும் போர்களும் பற்றி முன்னர் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம். பாரசீகத்தினுள் முஸ்லிம் படைகள் நுழைய ஆரம்பித்த நாளாய் பற்பல போர்கள். அவற்றுள் மிக முக்கியமான ஒன்றுதான் இந்த காதிஸிய்யா. பாரசீகர்களின் முதுகெலும்பை ஒடித்த யுத்தம் அது.

அப்போரில் முஸ்லிம் படைகளுக்குத் தலைவராக ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹுவை நியமித்தார் உமர். பிரம்மாண்டமான பாரசீகப் பேரரசின் வலிமையான படைகளை எதிர்கொள்ள முஸ்லிம் படைகள் தயாராகிக் கொண்டிருந்தன. அப்பொழுது ஸஅதுக்கு உமரிடமிருந்து கடிதமொன்று வந்தது.

“அவர்களுடைய வலிமையைப் பற்றிக் கேள்விபட்டு, அவர்களிடமுள்ள போர்த் தளவாடங்களின் பிரம்மாண்ட எண்ணிக்கையைக் கண்டு தயங்கவோ அஞ்சவோ வேண்டாம். அல்லாஹ்வின் உதவியை நாடுங்கள்; அவனிடமே நம்பிக்கைக் கொள்ளுங்கள். அறிவிலும் துணிவிலும் சிறந்த நம் தோழர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அந்த அரசனிடம் அனுப்பிவைத்து அவனை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலில் அழைப்பு விடுங்கள்”

கலீஃபா உமரின் ஆலோசனைப்படி ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் முதல் ஆள் நுஃமான் இப்னு முக்கர்ரின். மற்றவர்கள் பி்ஸ்ரிப்னு அபீரஹ்ம் அல் ஜுஹானி, ஹம்லா இப்னு ஜுவை அல்-கினானி, ஹன்ளலா இப்னு அர்-ரபீஉத்-தமீமி, ஃபுராத் இப்னு ஹிப்பான் அல்-அஜாலி, அதிய் இப்னு ஸுஹைல், அல்-முகீரா இப்னு ஸராரா.

மேற்கொண்டு ஏழுபேரை உமர் தேர்ந்தெடுத்து ஸஅதுக்குத் தகவல் அனுப்பினார். அவர்கள் அதாரிதிப்னு ஹாஜிப் அத்-தமீமி, அல்-அஷ்அத் பின் ஃகைஸ் அல்-கின்தி, அல்-ஹாரித் இப்னு ஹஸன் அத்-துஹாலி, ஆஸிம் இப்னு அம்ருத்-தமீமி, அம்ரிப்னு மஅதிகரிப் அஸ்-ஸுபைதி, அல்-முகீரா இப்னு ஷுஅபா அத்-தகஃபி, அல்-முஸன்னா இப்னு ஹாரிதா அஷ்-ஷைபானி.

முஸ்லிம்கள் சென்று சந்தித்துப் பேசவிருப்பது அக்கால வல்லரசு ஒன்றின் பேரரசனிடம். எனவே படுகவனமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அது. அறிவிலும் துணிவிலும் மதி நுட்பத்திலும் மிகச் சிறந்தவர்கள் அவர்கள். இந்தப் பதினாலுபேர் அடங்கிய முஸ்லிம்களின் பிரதிநிதிக் குழுவிற்கு அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாரசீகத் தலைநகர் மதாயின் வந்தடைந்தார்கள் அவர்கள். யஸ்தஜிர்தின் பேரவையில் சந்திப்பு நிகழ்ந்தது.

முன்னர் போர்களில் ஏற்பட்டிருந்த தோல்விகளால் ஏற்கெனவே உஷ்ணத்தில் இருந்தான் அவன். மொழிபெயர்ப்பாளரை அருகில் வைத்துக் கொண்டு அவர்களுடன் உரையாடினான். “உங்களை இங்கு வரவழைத்தது எது? எங்களது நிலத்திற்குள் இந்தளவு படையெடுத்து ஊடுருவ உங்களை ஊக்குவித்தது எது? நாங்கள் வேறு பல வேலைகளில் மும்முரமாய் இருப்பதால் எங்களைத் தாக்கலாம் என்று உங்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிட்டதோ?”

நுஃமான் தன்னுடன் வந்திருந்த தோழர்களை நோக்கி, “நீங்கள் விரும்பினால் நான் இவனிடம் பேசுகிறேன். அல்லது நீங்கள் யாராவது அவனிடம் பேச விரும்பினால் முன் செல்லவும்”

“நீங்கள் பேசுங்கள் நுஃமான்” என்றவர்கள் யஸ்தஜிர்திடம் இவர் பதிலுரைப்பார் என்று நுஃமானைக் காட்டினர்.

அல்லாஹ்விற்கு நன்றியும் புகழும் உரைத்துவிட்டு, அவன் தூதர் மீது ஸலாவத் சொல்லிவிட்டுப் பேச ஆரம்பித்தார் நுஃமான்.

“அல்லாஹ் எங்கள் மீது இரக்கம் கொண்டான்; தூதர் ஒருவரை அனுப்பினான். அவர் எங்களுக்கு நேர்மையைக் கற்றுத் தந்தார்; அதை ஒழுகும்படி கட்டளையிட்டார். தீமைகளைப் பற்றி எச்சரித்தார்; அதையெல்லாம் நாங்கள் கைவிட எங்களுக்குக் கட்டளையிட்டார். மிக சொற்ப காலத்தில், அல்லாஹ் எங்களது ஏழ்மையை நீக்கி வளம் அளித்தான்; கீழ்நிலையிலிருந்த எங்களுக்கு கீர்த்தி அளித்து உயர்த்தி வைத்தான்; எங்கள் மத்தியில் நிலவிய விரோதத்தையும் போரையும் சகோதரத்துவமாகவும் கருணையாகவும் மாற்றிவிட்டான்.

“அவர் அழைப்பிற்கு இணங்கி நாங்கள் அடிபணிந்து நடந்தால் அல்லாஹ் எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு அளிப்பான் என்று சத்தியவாக்கு அளித்துள்ளார். சில கோத்திரங்கள் ஏற்றுக் கொண்டனர்; வேறு சிலர் மறுத்துவிட்டனர். அவரை எதிர்த்த அரபு மக்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்க எங்களுக்கு உத்தரவிட்டார். முதலில் அந்த அரபு மக்களிடமிருந்து எங்கள் பணியைத் துவக்கினோம். தொடக்கத்தில் சிலர் விருப்பமின்றி இம்மார்க்கத்தில் இணைந்து அதன்பிறகு இதிலுள்ள உன்னதத்தை உணர்ந்து தங்களது முடிவு தவறில்லை என்று பெருமகிழ்வடைந்தார்கள். வேறுசிலர் துவக்கத்திலேயே விருப்பத்துடன் இணைந்து அனைத்து நன்மைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

“பின்னர் அண்டை தேசத்து மக்களை அழைக்க அவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். நீங்கள் எங்களது அண்டை நாட்டுக்காரர்கள். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறோம். நல்லொழுக்கத்தைப் பண்பாய் போற்றும் மார்க்கம் இது. அதை நோக்கியே மக்களை ஊக்குவிக்கிறது. கீழ்மை, அற்பத்தன்மையை எல்லாம் இம்மார்க்கம் நிந்திக்கிறது. அவற்றிலிருந்து விலகிவிடும்படி இது நம்மை எச்சரிக்கிறது. இதை ஏற்றுக் கொள்பவர்கள் அநீதியிலிருந்தும் ஏகஇறை நம்பிக்கையற்ற இருட்டிலிருந்தும் விலகி, நீதியும் ஒளிவாய்ந்த இறைநம்பிக்கையும் உள்ள இடத்தை வந்தடைவார்கள்.

“நீங்கள் எங்களது இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொண்டால், அல்லாஹ்வின் வேதத்தை தங்களிடம் விட்டுச் செல்வோம். நீங்கள் அதற்குப் பாதுகாப்பாளன் ஆவீர்கள். அதன் சட்டதிட்டப்படி நடப்பது உங்களது கடமையாகிறது. உங்களது காரியங்களை நீங்களே நிர்வகித்துக் கொள்ளலாம். எங்களது தலையீடு இருக்காது.

“நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நிர்ணயிக்கப்படும் ஜிஸ்யா வரியை நீங்கள் எங்களுக்குச் செலுத்த வேண்டும். நாங்கள் உங்களுக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளிப்போம்.

“அதையும் மறுத்தால், போர் ஒன்றே தீர்வு”

இவை அத்தனையையும் கேட்ட யஸ்தஜிர்து கோபத்தில் துடித்தான். ‘யார் இவர்கள்? எங்கிருந்து கிளம்பி வந்தார்கள்? நாம் யார்? நம் அந்தஸ்து என்ன? பெருமை என்ன? கீர்த்தி என்ன? யாரைப் பார்த்து என்ன பேச்சு இது?’

யஸ்தஜிர்து பேசினான்:

“உலகத்திலேயே உங்களைப் போன்ற கீழ்த்தரமான மக்கள் இருந்ததில்லை. குறைந்த எண்ணிக்கையில் இருந்தீர்கள். துண்டு துண்டாய்ப் பிரிந்து போய்க் கிடந்தீர்கள். ஏழ்மையில் உழன்றுக் கொண்டிருந்தீர்கள். எங்களது மாநில ஆளுநர்களுக்குக் கீழ்படிந்து கிடந்தீர்கள். அவர்களும் உங்களை இலகுவாய் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் பாரசீகத்தை எதிர்த்து நிற்பதையெல்லாம் கனவிலும் நீங்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது நீங்கள் எங்களை வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால் அது உங்களுடைய மிகப் பெரிய முட்டாள்தனமாகும்”

சற்று நிதானப்பட்டவன், பரிதாபப்பட்டவனாக, “வறுமையினால் துன்பப்படுகிறீர்கள் என்றால் சொல்லுங்கள். உங்களது நிலைமை சீரடையும்வரை நாங்கள் உண்ண உணவளிப்போம். உடுத்த உடை அளிப்போம். உங்களின் தலைவர்களைக் கௌரவிப்போம்; உங்களை கனிவுடன் நடத்தி நிர்வாகம் செய்ய ஓர் அரசனையும் நியமிப்போம்”

முகீரா இப்னு ஸராரா எழுந்து நின்றார். “நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். சொல்லப்போனால் அதைவிட மோசமான நிலையிலிருந்தோம். அதெல்லாம் கடந்த காலம்” என்று சொல்லிவிட்டு பின்னர் அல்லாஹ் தன் கருணையினால் எப்படித் தங்களை உயர்த்தினான் என்பதையெல்லாம் விவரித்து, இறுதியில் நுஃமான் சொன்னதையே மீண்டும் கூறினார்.

அதற்குமேல் அவனால் பொறுக்க முடியவில்லை.

“பிரதிநிதிக் குழு கொல்லப்படக் கூடாது என்ற நடைமுறை மட்டும் இல்லாதிருப்பின் உங்களையெல்லாம் நான் கொன்றிருப்பேன். உங்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. திரும்பிச் செல்லுங்கள்” ம்ஹூம், போதாது; வெறுமனே இவர்களை அதட்டி அனுப்பினால் போதாது. அவமானப்படுத்த வேண்டும்! அவர்களது முகத்தில் மண் பூச வேண்டும் என்று கதறியது அவன் மனம்.

“மூட்டை நிறைய மண் எடுத்து வாருங்கள்”

உடனே எடுத்து வந்தார்கள் சேவகர்கள். “இவர்களது குழுவில் உயர்குடி வகுப்பினன் எவனோ அவனது முதுகில் மணல் மூட்டையை ஏற்றி வைத்து, மக்களெல்லாம் காணும் வகையில் இவர்களை மதாயின் நகரை விட்டே துரத்துங்கள்”

விரைந்து எழுந்தார் ஆஸிம் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு. “இந்தக் குழுவில் உயர்குடியைச் சேர்ந்தவன் நானே” என்று பரிசு வாங்கச் செல்பவர்போல் அந்த மணல் மூட்டையைப் பெருமிதமாய் ஏற்றுக் கொள்ள, மக்களெல்லாம் பரிகாசமும் நையாண்டியுமாய்ப் பார்க்க அந்தத் தூதுக்குழு தங்களது படை முகாமிற்குத் திரும்பியது. படைத் தலைவர் ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆவலுடன் கேட்டார், “சென்ற காரியம் என்ன ஆயிற்று?”

“மனம் மகிழுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ், அவர்களது அரசாங்கத்தின் சாவியை நம்மிடம் ஒப்படைத்துவிட்டான்” என்று மணல் மூட்டையை இறக்கி வைத்தார் ஆஸிம்.

அதன் பிறகு ருஸ்தம் தலைமையில் மிகப் பெரும்படை கிளம்பி வந்ததும், மகா உக்கிரமான போர் காதிஸிய்யாவில் நிகழ்வுற்றதும் அதில் முஸ்லிம்கள் அசகாய வெற்றி பெற்றதும் இறுதியில் ருஸ்தம் கொல்லப்பட்டதும் அவையெல்லாம் அத்தியாயம் அத்தியாயமாய் விரியும் தனி வரலாறு.

oOo

தொடர்ந்து பாரசீகத்தின் உள்ளே சிறிது சிறிதாக முன்னேறிச் சென்று கொண்டேயிருந்தன முஸ்லிம் படைகள். எப்படியாவது ஒருகட்டத்தில் முஸ்லிம் படைகளைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும், அவர்களை வென்று பாரசீகத்திலிருந்து விரட்டிவிட வேண்டும், என்ன செய்யலாம்? என்று கவலையுடன் யோசித்துக் கொண்டேயிருந்தான் யஸ்தஜிர்த்.

“அடுத்தக்கட்டப் போருக்குத் தயாராகுங்கள்!” என்று அறிவித்து விட்டான். ரம்ஹொர்முஸ் என்ற நகரில் ஹுர்முஸான் தலைமையில் பாரசீகப் படைகள் தயாராயின. இச்செய்தியை ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு, கலீஃபா உமருக்குத் தகவல் தெரிவிக்க, மதீனாவிலிருந்து போர்க் கட்டளைகள் விரைந்து வந்தன.

பஸ்ரா நகரிலிருந்து ஸஹ்லிப்னு அதிய்யி தலைமையில் ஒரு படையை அனுப்பி வைக்கும்படி அபூமூஸா அல்அஷ்அரீக்குக் கட்டளையிடப்பட்டது. அதே நேரத்தில் கூஃபா நகரிலிருந்து அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் ஒரு படை புறப்பட வேண்டும். இந்த இருபடைகளும் ரம்ஹொர்முஸ் நோக்கி முன்னேற வேண்டும். இருபடைகளும் ஓர் இடத்தில் இணைந்து, அந்த ஒருங்கிணைந்த படைக்கு, நபியவர்களோடு பலபோர்களில் கலந்துகொண்ட அபூஸப்ரா இப்னு அபீருஹ்ம் அல்ஆமிரீ தலைமை ஏற்க வேண்டும்.

அதன்படி கூஃபா நகரிலிருந்து அந்நுஃமான் தமது படையுடன் ரம்ஹொர்முஸ் நோக்கிப் புறப்பட்டார்.

இந்தச் செய்திகளையெல்லாம் அறிந்த ஹுர்முஸான் திட்டம் தீட்டினான். பஸ்ரா நகரிலிருந்து வரும் படை நுஃமானின் படையுடன் ஒன்றிணைந்துவிட்டால் முஸ்லிம்களது பலம் அதிகமாகிவிடுமே என்று அவனுக்குக் கவலை. நுஃமானின் படையை வழியிலேயே சந்தித்து முறியடித்துவிட்டால்? காரியம் எளிதாகிவிடும்! எனவே அவன் தனது படைகளுடன் நுஃமானின் படையை எதிர்கொள்ளக் கிளம்பிச் சென்றான். அர்பக் எனும் பகுதியில் இரு படைகளும் மூர்க்கமாய் முட்டிக்கொண்டன. கடுமையான யுத்தம் மூண்டது. அந்தப் போரில் நுஃமான் ஹுர்முஸானை வென்றார். போர் தோல்வியில் முடிந்ததும் அங்கிருந்து தப்பித்த ஹுர்முஸான் ரம்ஹொர்முஸுக்குத் திரும்பாமல் தஸ்தர் எனும் நகருக்கு ஓடினான். பின்தொடர்ந்தது நுஃமானின் படை.

பின்னர் தஸ்தர் வெற்றி கொள்ளப்பட்டதும் அப்போரில் மற்றொரு தோழரின் வீரசாகசமும் முன்னர் படித்தது நினைவிருக்கிறதா? அவர் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ.

oOo

காதிஸிய்யாப் போருக்குப்பின் நான்கு ஆண்டுகள் கழித்து மற்றொரு பெரும் போர் நிகழ்ந்தது. அது நஹாவந்த் போர். அந்த நான்கு ஆண்டுகளும் பாரசீகப் படைகளைத் துரத்தித் துரத்தி, மூச்சுவிடக்கூட அவர்களுக்கு அவகாசம் அளிக்காமல் போருக்குமேல் போர் புரிந்து நகருக்கு மேல் நகரங்களைக் கைப்பற்றி, பாரசீகத்தின் வெகுஉள்ளே ஊடுருவி விட்டிருந்தனர் முஸ்லிம்கள். அந்தத் தோல்விகளும் அவமானமும் பாரசீகர்களை அளவிலாத கோபத்திலும் விரக்தியிலும் ஆழ்த்தியிருந்தன.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத யஸ்தஜிர்தோ மீண்டும் பெரும் படையொன்றைத் திரட்டினான். இலட்சத்து ஐம்பதினாயிரம் வீரர்கள் அடங்கிய பெரும்படை. அவர்களுக்கு ஃபைரஸான் என்பவனைத் தளபதியாக நியமித்தான். போர்க் களமாக நஹாவந்த் குறிக்கப்பட்டது.

இதனிடையே கஸ்கர் எனும் நகருக்கு அந்நுஃமானை ஆளுநராக நியமித்திருந்தார் கலீஃபா. உமர், தம் ஆளுநர்களைத் தேர்ந்தெடுக்கும் லாவகமே தனிக் கட்டுரை சமாச்சாரம். அதில் முக்கியமான ஒரு விஷயம் – உமர் ஒருவரை ஆளுநராய் நியமிக்கிறார் என்றால் அது அவரது தரத்திற்கான மாபெரும் சான்று.

ஒருகாலத்தில் ஒரு கோத்திரத்திற்கே தலைவராக இருந்தவர் நுஃமான். மக்களை ஆண்டவர்; தலைமைக்குரிய பெருமிதங்களை அனுபவித்தவர். பின்னர் இஸ்லாத்தில் நுழைந்தபின் ஓய்வு ஒழிச்சலற்ற ஓட்டம், இடைவிடாத போர் என்றாகிப்போனது வாழ்க்கை. அவையெல்லாம் எத்தகைய களைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்? இந்நிலையில் அதிகாரமும் பதவியும் கிடைத்தால் அதைப் பெற்றுக்கொண்டு, இறுமாப்பெல்லாம் இல்லாது போகட்டும், ‘உஸ்… அப்பாடா..’ என்று சாய்ந்து அமர்ந்து கொண்டு சேவகர்களை ஏவல் புரிந்து நிர்வாகம் பார்த்துவிட்டு, சொகுசை அனுபவித்திருக்க வேண்டுமல்லவா? இதென்ன பதவி, அந்தஸ்து, சொகுசு என்று அதெல்லாம் நுஃமானுக்குக் கொஞ்சம்கூட சரிப்பட்டு வரவில்லை. தம் மன உளைச்சலை உமருக்குக் கடிதம் எழுதினார்:

‘எனக்கும் கஸ்கருக்குமான உவமை என்ன தெரியுமா? இளைஞன் ஒருவன் அலங்காரமும் நறுமணமும் பூசிக் கொண்டு மினுமினுக்கும் ஓர் அழகிய பரத்தையின் பக்கத்தில் இருப்பதைப் போன்றுள்ளது என் நிலை. உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அல்லாஹ்விற்காக என்னை எனது இந்தப் பதவியிலிருந்து விடுவித்து முஸ்லிம் படைகளிடம் அனுப்பிவையுங்கள்”

அவரின் இறையச்சத்தை, அவரின் இந்த மனோபாவத்தை இதைவிடச் சிறப்பாய் வேறெந்த வரிகள் விவரித்துவிட முடியும்? நாமெல்லாம் வாழ்க்கையில் எதை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? அவர், ரலியல்லாஹு அன்ஹு!

நஹாவந்த் போர் ஆயத்தச் செய்தி மதீனா வந்தடைந்த நேரத்தில்தான் நுஃமானிடமிருந்தும் கடிதம் வந்து சேர்ந்தது. உமர் தம் ஷூரா குழுவினருடன் ஆலோசித்தார். அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் முஸ்லிம் படைகள் பாரசீகர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவானது.

பதிலெழுதினார் உமர். “நஹாவந்த் செல்லுங்கள். அங்குள்ள நம் படைக்குத் தலைமையேற்றுக் கொள்ளுங்கள்”

அப்படையின் குழுத் தலைவர்களாய் ஹுதைஃபா இப்னுல்-யமான், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹும் நியமிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் படையில் முப்பதாயிரம் வீரர்கள் இருந்தனர். இலட்சத்து ஐம்பதினாயிரம் வீரர்களை எதிர்த்து முப்பதாயிரம் வீரர்கள்! நுஃமான் தலைமையில் அந்தப் படை நஹாவந்த் வந்தடைந்தது.

நஹாவந்த் பலமான அரண் கொண்ட நகர். உயர்ந்த நெடிய சுவர். ஆழமான அகழி. தவிர குதிரைகள் முன்னேற முடியாத வகையில் கூர்மையான இரும்பு முள்கள் நிலங்களில் பரப்பி மறைத்து வைக்கப்பட்டன. சுவர்களின் மேலே திறமையாய் அம்பெய்யும் பாரசீக வீரர்கள் தகுந்த இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

விரைந்த முன்னேறிவந்த முஸ்லிம்களின் குதிரைப்படை இரும்பு முள் குத்தி, நிலைகுத்தி நின்றுவிட்டது. திறமையான தற்காப்பு நடவடிக்கை அது. நகரின் அரண் சுவரை நெருங்கவிடாமல் தடுக்கும் இரும்பு முள்கள், அதைத் தாண்டி அகழி என்று இவற்றையெல்லாம் சமாளித்து சில முஸ்லிம் வீரர்கள் சுவரருகே நெருங்கினால் மேலிருந்து அம்புகள் மழையாய்ப் பொழி்ந்து தாக்கின.

பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாமல் இப்படியே இரண்டு நாள் கழிந்தது. படைத் தலைவர்களையெல்லாம் அழைத்து ஆலோசனை நிகழ்த்தினார் நுஃமான். அப்பொழுது துலைஹா இப்னு குவைலித் அல்-அஸதி ஒரு யோசனையை முன்வைத்தார்.

“முஸ்லிம்களின் குதிரைப்படை பாரசீகர்களுடன் சண்டையைத் துவங்க வேண்டும். அவர்கள் தூண்டப்பட்டு நகரின் சுவருக்குப் பின்னாலிருந்து வெளிவருவார்கள். அவர்களைக் கண்டதும் பயந்து பின்வாங்குவதுபோல் குதிரைப்படை பின்வாங்க வேண்டும். அதைக் கண்டால் பாரசீகர்கள் என்ன செய்வார்கள்? ‘விடாதே! துரத்து!’ என்று பின் தொடர்ந்து துரத்த ஆரம்பிப்பார்கள். அது அவர்களை அவர்களது அரணை வி்ட்டு, தொலைவிற்கு இட்டு வந்துவிடும். முஸ்லிம்களின் படையொன்று அங்கு மறைந்திருக்க வேண்டும். அப்பொழுது பாரசீகர்களை மறைந்துள்ள முஸ்லிம்களின் படை திடீரென்று வந்து தாக்கத் துவங்கினால் மீண்டும் தங்களது அரணுக்குள் ஓடிவிட முடியாத நிலை பாரசீகர்களுக்கு ஏற்படும். முடித்துவிடலாம்”

மற்றொரு குறிப்பில், “இரவு கவிழ்ந்ததும் தீப்பந்தம் ஏற்றுங்கள். எதிரியின் கவனத்தைக் கவரும்படி நிறைய தீப்பந்தங்கள் எழட்டும். அதை ஏந்திக்கொண்டு வேகமாய்ப் பின்வாங்குங்கள். பயந்து பின்வாங்கும் முஸ்லிம்களைப் பிடித்து விடவேண்டும் என்று ஆசையில் அவர்கள் வெளியே ஓடிவருவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் அடிநாதம், எதிரிப்படைகளை அவர்களது அரணுக்கு வெளியே தந்திரமாக வரவழைப்பது.

அந்த யோசனை நுஃமானுக்குப் பிடித்திருந்தது. உடனே காரியங்கள் நடைபெறத் துவங்கின. தனது படையை மூன்று குழுவாகப் பிரித்தார் நுஃமான்.

முதல் பிரிவுக்குத் தலைவராக காஃகா இப்னு அம்ரு. இப்பிரிவு குதிரைப்படை. இவர்களது பணி எதிரிகளின் அரண் சுவரைத தாக்கி போரைத் துவங்க வேண்டும்.

இரண்டாவது பிரிவுக்கு நுஃமான் தலைவர். இந்தப் படையினர் தகுந்த இடங்களில் பதுங்கி மறைந்திருக்க வேண்டும். எதிரிகள் நெருங்கியதும் களத்தில் குதித்து அவர்களுடன் நேருக்கு நேரான போர் தொடுப்பது என்று முடிவானது.

மூன்றாவது பிரிவு மற்றொரு குதிரைப் படை. இவர்கள் முஸ்லிம் படைகளிலேயே வலிமையான வீரர்கள். இவர்களும் தூரத்தில் மறைந்திருக்க வேண்டும். எதிரிகள் நெருங்கியதும் அவர்களின் இருபுறமிருந்தும் தாக்குதல் தொடுக்க வேண்டும்.

“எல்லோரும் அவரவர் இடங்களில் பதுங்கிக் கொள்ளவும். நான் உத்தரவு அளிக்கும்வரை சண்டையைத் துவங்கக் கூடாது” என்று கட்டளையிட்டார் நுஃமான். நபியவர்களிடம் பயின்ற தோழர் அவர்.

“நான் மூன்று முறை தக்பீர் உரைப்பேன். முதல் தக்பீரில் தயாராகி விடுங்கள். இரண்டாவது தக்பீருக்கு உங்கள் ஆயுதங்களை உருவிக் கொள்ளுங்கள். மூன்றாவது தக்பீரில் நாம் அனைவரும் ஒரே நேரத்தில் எதிரிகளின் மீது பாய்வோம்”

காஃகா (ரலி) தம் வேலையைச் சிறப்பாக ஆரம்பித்தார். மிகுந்த சாதுரியத்துடன் காரியமாற்றினார். தமது குதிரைப் படையுடன் அவர் பின்வாங்குவதைக் கண்ட பாரசீகர்கள் உற்சாகமடைந்தார்கள். “பிடியுங்கள் அவர்களை” என்று தாங்கள் நிலத்தில் பரப்பி வைத்திருந்த இரும்பு முள்களை தாங்களே அகற்ற ஆரம்பித்தனர். குதிரைகளில் ஏறி முஸ்லிம்களைத் துரத்த வேண்டுமல்லவா? முஸ்லிம் வீரர்களுக்குத் தங்களது குதிரைப் படையைச் செயலிழக்க வைத்த இரும்பு முள் பிரச்சினை அகன்றது.

‘ஹோ’வென்று கடலலைபோல் பாரசீகப் படைகள் பாய்ந்து வெளியே ஓடிவந்து முஸ்லிம்களைத் துரத்த ஆரம்பித்தன. நன்றாக அவர்களை முன்னேறி வரவி்ட்டுக் காத்திருந்தது மறைந்திருந்த முஸ்லிம்களின் படை. அவர்கள் எளிதில் பின்வாங்கி அரணுக்குள் நுழைந்து கொள்ள முடியாத தூரத்தில் வந்ததுதான் தாமதம், உரத்து எழுந்தன மூன்று தக்பீர்கள். களத்தில தொம் தொம்மென்று வந்து குதித்தனர் நுஃமான் தலைமையிலான முஸ்லிம் படையினர். அதேநேரம் எதிரிகளின் இருபுறமிருந்தும் மறைந்திருந்த குதிரைப் படையினர் பாய்ந்தோடி வந்தனர். பின்வாங்குவதைப்போல் ஓடிக்கொண்டிருந்ததே காஃகா தலைமயிலான படை, அது சரேலெனத் திரும்பி நின்று எதிரிகளை நேருக்குநேர் நிமிர்ந்து பார்த்தது.

துவங்கியது மகா யுத்தம். எங்கிருந்து வந்தார்கள், எப்படி வந்தார்கள் என்று தெரியாமல் நாலாபுறமும் வசமே சூழப்பட்டனர் பாரசீகர்கள். என்ன ஏது என்று அடுத்து யோசிப்பதற்குள் வாள்கள் சுழல ஆரம்பித்தன. வீறுகொண்ட வேங்கையைப்போல் களத்தில் சுழன்று கொண்டிருந்தார் நுஃமான். வரலாறு பத்திரமாய்ப் பதிவு செய்து வைத்துள்ள மிக உக்கிரமான போர் அது. சரசரவென எதிரிகளை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தது முஸ்லிம்களின் படை. ஆட்டுக்கல்லில் அகப்பட்ட தானியத்தின் நிலைதான் அன்று பாரசீகர்களின் நிலை. உயிரற்ற உடல்கள் சரமாரியாக நிலத்தில் வீழ்ந்து கொண்டிருந்தன. குருதி பெருக்கெடுத்து ஓடியது. நிலமெங்கும் சடலங்கள். தப்பித்து ஓடியவர்களும் தாங்கள் வெட்டி வைத்திருந்த அகழியிலேயே வீழ்ந்து மடிந்தனர். துணியைக் கிழித்தெறிவதுபோல் அந்தப் போரில் பாரசீகப் படை கிழித்தெறியப்பட்டது. பாரசீகப் படைத் தலைவன் ஃபைரஸானை காஃகா பின்தொடர்ந்து சென்று பிடிக்க, அவன் கதை முடிந்தது.

குதிரையின்மேல் அமர்ந்து நுஃமான் போரிட்டுக் கொண்டிருக்க ஓர் அசந்தர்ப்ப தருணத்தில் அவரது குதிரை தடுமாறி விழுந்துவிட்டது. கீழே விழுந்த அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு அங்கேயே அப்பொழுதே வீரமரணம் அடைந்தார். அதைக் கண்டுவிட்ட நுஃமானின் சகோதரர் உடனே ஒரு காரியம் செய்தார். நுஃமானின் கையிலிருந்த கொடியை தாம் ஏந்திக் கொண்டு, நுஃமானின் சடலத்தை ஒரு துணி கொண்டு மறைத்து அதை முஸ்லிம்கள் காணாமல் மறைத்து விட்டார்.

போரெல்லாம் முடிந்து வெற்றியடைந்தவுடன்தான் முஸ்லிம்கள் தங்களின் படைத் தலைவரைத் தேட ஆரம்பித்தனர். நுஃமானின் சகோதரர் துணியை விலக்கி, “இதோ உங்கள் படைத்தலைவன். வெற்றியைத் தரிசிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய அல்லாஹ் வீரமரணத்தையும் அவருக்குப் பரிசளித்துள்ளான்” என்று சத்தியம் சொன்னார்.

கலீஃபா உமருக்கு செய்திகள் அறிவிக்கப்பட்டன. நுஃமானின் மறைவைக் கேட்டு “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என்றவர் கண்ணீர்விட்டு அழுதார். வேறு யாரெல்லாம் வீரமரணம் அடைந்தார்கள் என்று விசாரிக்க, பட்டியல் தெரிவிக்கப்பட்டது.

“முஸ்லிம்கள் மத்தியில் அவர்கள் பரிச்சயமில்லாதவர்களாக இருக்கலாம். அதனாலென்ன? அவர்களுக்கு வீரமரணத்தைப் பரிசாய் அளித்த அந்த ஒருவனுக்கு அவர்களின் முகமும் மரபும் வமிசமும் நன்றாகவே தெரியும். உமர் அறிந்தால் என்ன, அறியாவிட்டால் என்ன?” என்றார் உமர்.

சொகுசெல்லாம் புறந்தள்ளி, வாழ்வெல்லாம் போராக, ஒவ்வொரு கணமும் இறைப்பணியாக வாழ்ந்து வீரமரணம் எய்தி, இவ்வுலகிலிருந்து மறைந்தார் அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின்.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 02 மார்ச் 2011 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment