09 – ரசாயன மாற்றம்

by நூருத்தீன்

சென்ற அத்தியாயத்தில் பாராட்ட வேண்டியதன் அவசியம் பற்றியும் அதை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் பார்த்தோம். சிலர் பாராட்டை

எதிர்மறையாய்ப் பிறரிடமிருந்து இழுத்துப் பெறுவார்கள். உளவியல் மொழியில் reverse psychology.

“எனக்கு இந்த கிரிக்கெட் அவ்வளவு சரியாக விளையாட வரலை.”

“ஏன்? நீ நல்லாதானே ஆடறே?”

“அப்படியெல்லாம் இல்லை. பௌலிங் ஓக்கே. பேட்டிங்தான் சொதப்புது.”

“அன்னிக்குக் கூட நீ 45 நாட் அவுட். அதுலே 1 சிக்ஸர், மூன்று பவுண்டரி. பேட்டிங்தான் கலக்குறியே.”

“உனக்கு பெரிய மனசு. பாராட்டி ஊக்கப்படுத்தப் பார்க்குறே.”

“இல்லே இல்லே. உண்மையிலேயே நீ நல்லா தான் ஆடுறே.”

“எனக்கு அப்படித் தோணலே.”

எரிச்சலூட்டும் இத்தகைய உரையாடலை எங்காவது நீங்கள் கேட்டிருக்கலாம், அல்லது அப்படியொருவரை சந்தித்திருக்கலாம். இது போலித் தன்னடக்கப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. நம்மிடம் இந்தக் குறை இருந்தால் என்ன செய்வதாம்? இத்தகைய போலித் தன்னடக்கத்தைத் தவிர்த்துவிட்டு நம்மைப் பற்றிய உண்மையான மதிப்பை உணர்ந்து அதற்கேற்ப உரையாடிப் பழக வேண்டும்.

சிறப்பான சுயபிம்பம் உள்ள மக்கள் போலித் தன்னடக்கம் கொள்ளமாட்டார்கள்; பாராட்டிற்காக அலைய மாட்டார்கள். நேர்மையாய்த் தம்மை வந்தடையும் பாராட்டை உவப்புடன் ஏற்றுக் கொள்ளவார்கள் – மெய்யான தன்னடக்கத்துடன்!

முந்தைய அத்தியாயங்களில் உடல் நலம் பற்றிப் பார்த்தோம். மன நலனுக்கும் உடல் நலனுக்கும் எக்கச்சக்க நட்பு உள்ளதாம்; அவை இணைபிரியாத் தோழிகளாம்.

ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு “அப்செட்“ ஆகும்போது அவருள் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து அவரது உடலினுள் ஒருவகையான ரசாயனம் உருவாகிறது. எந்த விஞ்ஞானி வீட்டில் அப்செட் ஆனரோ தெரியாது – மெனக்கெட்டு வந்து அதை ஆராய்ச்சி செய்திருக்கிறார் பாருங்களேன். கடுமையான பயத்திலோ, அல்லது கோபத்திலோ உள்ள ஒருவரிடமிருந்து இரத்தத்தைப் பரிசோதனைக்காக உறிஞ்சி, சோதனைக் கூடத்திலுள்ள பன்றிகளுக்குச் செலுத்திப்பார்த்தபோது அவை இரண்டு நிமிடங்களில் இறந்துபோனதை அராய்ச்சியாளர்கள் கண்டனர்.

“அட! கொலை செய்ய இது நல்ல உபாயமாக இருக்கே!” என்று ஊசியுடன் கிளம்பிவிட வேண்டாம். ஆராய்ச்சியின் உள்ளார்ந்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை, அது இங்கு முக்கியமும் இல்லை. உடலின் உள்ளே நிகழும் ரசாயன மாற்றம் சிலாக்கியமானதல்ல. அதுதான் முக்கியம்.

ஓர் உயிரைக் கொல்லும் பலம் வாய்ந்த ரசாயனம் நமக்குள் எத்தகைய உபாதைகளையெல்லாம் தோற்றுவிக்கும்? “அளவிற்கதிகமான பயம், கோபம், எரிச்சல், ஏமாற்றம், மன உளைச்சல் ஆகியன தோற்றுவிக்கும் ரசாயனம் மனிதனின் உயிரையும் பதம்பார்க்க வல்லது!” என ஆராச்சியாளர்கள் கவலையோடு தெரித்துள்ளனர்.

யாருக்கு இதெல்லாம் இல்லை? “செத்தேன் நான்,” என்று உடனே கவலையும் பயமும் வேண்டாம். இங்கு நமது நோக்கம் உண்மையை உணர்ந்து அறிந்து கொண்டு மனம் மகிழ்வது.

பயம் ஏற்படின் அது பந்தாய் வயிற்றில் உருள்வதும் கோபம் எல்லை மீறினால் அது தலைக்கேறி வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிப்பதும் – உள்ளும் புறமுமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித மாற்றங்கள் நிகழ்கின்றன. சிலருக்குத் தன் காதல் துணையைக் கண்டதும் வயிற்றில் ஏதோ உணர்ச்சி. “பட்டாம்பூச்சி பறக்குதுபா!”

பயம், கோபம், காதல் என்றில்லை, மனதினுள் ஏற்படும் எந்தவொரு எண்ணமும் ஒவ்வொரு நொடியும் உடலில் வேதியியல் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றது. நீங்கள் காரோட்டிக் கொண்டே செல்லும்போது உங்களுக்காகவே காத்திருந்தது போல் திடீரென்று ஒரு ஆட்டோக்காரன் உங்கள் எதிரே புகுந்து சட்டென்று ப்ரேக்கும் போட்டால் உங்களுக்குள் என்னென்ன நிகழ்கின்றன? உடல் முழுதும் ஒரு மின்சார அதிர்வு ஏற்பட்டு, உடனடியாக மூளை மெஸேஜைக் காலுக்கு அனுப்பிப் ப்ரேக்கை அழுத்தி, அல்லது கைகள் கார் ஸ்டீரிங்கை படுவேகமாய்த் திருப்பி…

என்ன உல்லாச மூடில் அதுவரை இருந்திருந்தாலும் சரி, சட்டென அனைத்தும் தொலைந்து, கெட்டக் கோபத்தில் சன்னலுக்கு வெளியே தலையை நீட்டி, உங்களது கண்ணியத்திற்கேற்ப வாயிலிருந்து வாழ்த்துரை வெளிப்படும். அந்த திடீர்க் கணத்தில் வயிற்றில் ஓர் உணர்ச்சி எழுந்ததே என்ன அது? அதைத் தோற்றுவித்தது எது? அது ஒரு ரசாயனம்.

ஆக, மனதிற்கும் உடலுக்கும் வயர்லெஸ் கனெக்ஷன் உண்டு. இயற்கை WiFi. எனவே மனதில் நிகழும் மாற்றம், உடலில் வெளிப்படுகிறது.

மனஉளைச்சல், சினம், அச்சம் இவற்றையெல்லாம் கிலோ கணக்கில் மனதிற்குள் வைத்துக் கொண்டு, உடல் ஆரோக்கியத்தையும் கூடவே குடித்தனம் வைத்துக்கொள்ள முடியாது; முடியவே முடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் உடல் ஆரோக்கியம் என்பது மன ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு. தீர்க்கப்படாத பிரச்சனைகள் ஏதும் மனதிற்குள் உழன்றால் அதை உடல் ஆரோக்கியம் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

இதெல்லாம் இப்பொழுது படித்தாலும், நாமறியாமல் நமது பள்ளிப்பருவத்திலேயே நமக்கு இது நிகழ ஆரம்பித்துவிடுகிறது. எனது நாலாவது வகுப்பில் ஒருமுறை நான் தேர்வுக்குப் படிக்காதபோது, எனக்குக் காய்ச்சல் வருவதைப் போலாகி, நான் அழுவதைப் பார்த்த என் தந்தை டீச்சரிடம் ஸ்பெஷல் பர்மிஷன் பெற்று, என்னை வகுப்பில் அமர்த்திவிட்டு வந்தார்கள். சிலருக்கு வீட்டுப் பாடம் முடிக்கவில்லை, கணக்கு மண்டையில் ஏறவில்லை என்று ஏதாவது ஒரு காரணம் அமையும்போது, மனது நினைக்கிறது, “சே! உடம்புக்கு முடியாமல் போனால் லீவ் எடுத்து விடலாம்.”

மாயம் நிகழ ஆரம்பிக்கும் உடனே உள்ளுணர்வு உடலுக்குக் கட்டளையிட, தலைவலிப்பது போலிருக்கும்; காய்ச்சல் அடிப்பது போலிருக்கும். பெற்றோர் நெற்றியைத் தொட்டுப் பார்த்து ஓக்கே சொல்லிவிட்டால் போதும், “ஹையா! இன்னிக்கு ஸ்கூலுக்கு மட்டம்.”

என்ன? இதெல்லாம் உங்கள் சிறுவயதில் நடக்கவில்லையா? ஒன்று நீங்கள் பொய் சொல்ல வேண்டும். அல்லது, “அநியாயத்திற்கு நீங்கள் நல்லவர்.”

அடுத்தது –

நமது நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகள் உள்ளனவே..? அவையும் கூட நம்மை நோயில் ஆழ்த்திவிடும்.

உலகெங்கும் உலா வந்த பன்றிக் காய்ச்சல் – அது – தானாய்ப் பரவியது பாதி; பயத்தில் பரவியது மீதி. அதைப்போல் நம் பெற்றோருக்கு நீரிழிவு, இதய நோய், போன்ற குறிப்பிட்ட சில நோய்கள் இருந்திருந்தால், அவை பரம்பரையாய்த் தொடரும் சாத்தியக் கூறுகள் உள்ளன என்ற காரணத்தினாலேயே நமது மனது உடலுக்குக் கட்டளையிட்டு விடுகிறது. நமக்குக் குறிப்பிட்ட வயதில் அந்த நோய்கள் வந்துவிடும் என்று மனதும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராய் இருக்க, உள்ளுணர்வு அதற்கேற்ப உடலைத் தயார் செய்துவிடுகிறது.

எதிர்மாறாய் உடல நலனுக்கும் அப்படியே. சிலர் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா, “எனக்கு ஜலதோஷமே ஏற்பட்டதில்லை. விக்ஸ் வாசனையே எனக்குத் தெரியாது.” அந்த மன வலிமையே அவர்களது உடலுக்குப் போதிய எதிர்ப்புச் சக்தியைத் தோற்றுவித்து, ஜலதோஷத்தை அவர்களிடம் நெருங்க விட்டிருக்காது.

மனதால் உடல்நலம் கெடுவது ஒருபுறமிருக்க, உடல்நலம் கெடுவதில் மனதிற்கு ஒரு சௌகரியமுமிருக்கிறது. இதையும் நமது பால்ய பருவத்திலயே நாம் அனுபவார்த்தமாய்ப் படித்துத் தேர்ந்துவிடுகிறோம்.

குழந்தைகளுக்கு உடல்நலமின்றிப் போகும்போது என்னாகிறது? அது பிறருடைய கவனத்தையும் அக்கறையையும் அவர்கள்பால் முழுதுமாய் ஈர்க்கிறது. ஜுரம், தலைவலி, இருமல் என்று படுத்துவிட்டால், அப்பா, அம்மா காட்டும் பாசம், தாத்தா, பாட்டி காட்டும் அக்கறை, கோபத்தையும் சண்டையையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பணிவிடை புரியும் அண்ணன், அக்கா என்று அடுத்த சிலநாட்களுக்கு அந்தக் குழந்தைதான் வீட்டில் விஐபி.

இது நம் அனைவருக்கும் நமது இளம் பிராயத்தில் ஏதோ ஒருவகையில் நிகழ்ந்திருக்கும். அது நமது மனதிற்கு இதத்தையும் ஆறுதலையும் அளிக்க, நாம் வளர்ந்த பிறகும் அதுவே தொடர்கிறது. மனதிற்கு அன்பும் ஆதரவும் தேவைப்படும்போது அதைப் பிறரிடமிருந்து ஈர்ப்பதற்காய், உடல்நலம் தானாய்க் கெட்டுப்போகிறது. சிலர் செயற்கையாய் அதை முயலலாம். இவையாவும் நாம் உணர்ந்து சுதாரிப்புடன் நடப்பதைவிட நாம் அறியாமலேயே நமக்குள் நிகழ்கின்றன.

“அன்பும் பாசமும் சரியாய்ப் பகிர்ந்துகொள்ளப்படும் மனிதர்களிடையே இத்தகைய உள்ளுணர்வால் உருவாகும் நோய்கள் ஏற்படுவதில்லை. அவர்கள் எப்பொழுதுமே தங்களைப் பாதுகாப்பாகவே உணர்ந்து கொள்வதால் அவர்களது மனதும் மகிழ்கிறது, உடலும் நலமாய் இருக்கிறது,” என்கிறார்கள் மருத்துவர்கள்.

அடக்கிவைக்கப்பட்ட மனக்கிளர்ச்சியும் உணர்ச்சிகளும் உடல்நலனை நிச்சயம் பாதிக்கின்றன.

“என்னைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?”, “நான் யாருக்கும் முக்கியமற்ற ஒரு ஜட வஸ்து”, “மற்றவர்கள் என்னை உதாசீனப்படுத்துவதும் புறக்கணிப்பதும் – அதெல்லாம் எனக்குப் பழக்கப்பட்டு விட்டது”, ”நான் வெளியே சிரிப்பது தான் உங்களுக்குத் தெரிகிறது; உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறேன்”…

இத்தகைய எண்ணங்கள் உங்களது மனதில் தோன்ற ஆரம்பித்தால்….. அது உடல்நலப் பேரழிவின் ஆரம்பம்!

அதற்காக?

இதென்ன சுற்றுப்புறச் சூழல் மாசால் உலகம் நாசமாவதைப் போல் சாதாரண விஷயமா? ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கூட்டம் போட்டுப் பேசிக் கலைவதற்கு? நமது மனம்! நமது உடல்! எனவே, நாம் தீர்வை அறிந்து செயல்படுத்தியே தீரவேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கும் ஊக்கத்திற்கும் அடிப்படை ஆக்கபூர்வ எண்ணங்கள் ஆகும் – positive thoughts. அதுதான் பூஸ்ட். ‘Secret of our energy.’

அடுத்தது மிக முக்கியம். “நான் ஆரோக்கியமாய்த் திகழத் தகுதியானவன்” என்பதை நம்ப வேண்டும். மேம்போக்காக அல்ல, அழுத்தந்திருத்தமாய் நம்ப வேண்டும்.

அதற்கு மாறாய் நம்முடைய உள்மனதில், “நான் நல்லவனல்ல”, “நான் ஏகப்பட்ட கெட்டக் காரியங்கள் செய்துள்ளேன்”, “நான் தண்டிக்கப்பட வேண்டியவன்”, போன்ற பின்னடைவான எண்ணங்கள் – negative thoughts – இருந்தால், அதற்கான உன்னத எதிர்வினை தான் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவது. ஒன்று தற்காலிகமாக: அல்லது ஆயுள் முழுதும்.

இதைச் சிறிது தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இஷ்டத்திற்குக் கெட்ட காரியம் செய்துவிட்டு, அதை செல்போனில் படமும் எடுத்து, ப்ளூ ட்டூத்தில் இலவசமாய் ஊரெங்கும் வினியோகித்துவிட்டு, கோர்ட்டில் ஜட்ஜிடம் பாஸிட்டிவ்வாகப் பேசக்கூடாது. சட்டம் கண்ணைக் குத்தும்!

வேலையோ, தொழிலோ, அலுவலோ, ஹாபியோ நமக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். நியாயமான மகிழ்வை வாழ்க்கையில் அமைத்துக் கொள்ளவேண்டும். இவை இரண்டும் இல்லையெனில், மனம் மாமியார் ஆகிவிடும். மருமகளை நச்சரிப்பதுபோல் தொடர்ந்து விடாமல் குறைபட ஆரம்பித்துவிடும்.

உடலோ மனதின் அடிமை. எனவே ஒவ்வாத சூழலில் இருந்து துன்பப்படும் மனதைக் காப்பாற்ற அது எப்படியாவது பாடுபடும். அதற்கு அது தேர்ந்தெடுக்கும் முதல் உபாயம் தனது ஆரோக்கியத்தை இழந்து மனதைக் காப்பதே!

நெடுக உடல்நலம் கெடுதலையும் மனதையும் சம்பந்தப்படுத்திப் பார்த்துக் கொண்டே வந்தோம். நன்றாக ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இதன் அர்த்தம் உலகில் உள்ள அனைத்து வியாதிகளும் மனதால்தான் ஏற்படுகிறது என்பதில்லை. எனவே பைபாஸ் சர்ஜரி தேவைபடும் நோயாளியைப் பார்த்து, “மனைவி ஆட்டுக்கால் சூப் வைத்து உங்களுக்குக் காதலோடு ஊட்ட வேண்டும்,” என்று டாக்டர் சீட்டெழுதித் தரமுடியாது.

விஷயம் என்ன? உடல் ஆரோக்கியமாய்த் திகழ மனதின் பங்கு மிகமிக இன்றியமையாதது. அவ்வளவுதான். அதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும் தான் நமது உடல்நலச் சூழ்நிலையை வடிவமைக்கின்றன. எனவே அதை எத்தகைய உகந்த சூழ்நிலையாய் வடிவமைப்பதென்பது நமது எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் அடங்கியுள்ளது.

தவிர இந்த உடல் ஆரோக்கியம் என்பது இலவச இணைப்பில்லை. அது உங்களது பிறப்புரிமை. ஆரோக்கியம் என்பது என்ன? அது நோயற்ற உடல்நலம் என்பது மட்டுமின்றி, அதையும் தாண்டிப் புனிதமானது. ஊக்கம், உடல் வலிமை, உள்ளுரம், உடலுரம் என்பனவெல்லாம் ஆரோக்கியம் சார்ந்தவை தான். வாழ்க்கை என்பதே போராட்டம் தான். ஆனால், ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது, வாழ்க்கைக்கான போராட்டம் என்பதையும் தாண்டி உங்களால் ஆக்கபூர்வமாகச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, ஊக்கம் உங்களுக்குள் இருக்க வேண்டும்.

மேலே இதுவரை படித்ததை அடிப்படையாகக் கொண்டு நமது மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நாம் உற்று நோக்கினால் நமது உடல் எந்தளவு மனநிலையால் பாதிப்படைகிறது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நமது உள்ளுணர்வானது நமது உடலின் நிலையை ஒவ்வொரு நொடியும் கண்காணித்து வருகிறது. நமது உடலோ மனதின் அடிப்படையிலேயே தொடர்ந்து மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

சுருக்கமாய், நமது மனது தான் நமது உடலின் சிற்பி. நமது உடல் தான் நமது எண்ணங்களின் பிரதிபலிப்பு!

பயம், கோபம், வெறுப்பு, சோகம், அயர்ச்சி, கிலேசம் மற்ற இனந்தெரியா உணர்ச்சி இதில் எந்தவொன்றால் மனம் பீடிக்கப்பட்டாலும் அதை உடல் வெளிக்காட்டிவிடும். ஆக மனதின் நோய் உடலின் நோயாக மாறிவிடும்.

எனவே,

  • ஆரோக்கியமானவற்றைச் சிந்தியுங்கள்.
  • உங்களது சிந்தனையில் எப்பொழுதும் உங்களை ஆரோக்கியமானவராகவே கருதுங்கள்.
  • இன்பமான எண்ணங்களை மட்டுமே மனதில் நிறுவுங்கள்.
  • ஆரோக்கிய உடல்நலம் உங்களது பிறப்புரிமை என்பதை உணருங்கள்.
  • நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கு அனைத்துத் தகுதியும் உள்ளது. அறியுங்கள்.
  • அனைத்திற்கும் மேலாக உங்களை நீங்களே நேசியுங்கள்; அன்பாக நடத்திக் கொள்ளுங்கள்.

உங்களது தற்போதைய நிலை எதுவானாலும் அதை உளப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு சிறப்பான முறையில் மனதை வடிவமைத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதியாக, மிக உறுதியாக நினையுங்கள்.

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 07 ஆகஸ்டு 2010 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம. ம. முகப்பு–>

 

Related Articles

Leave a Comment