புவிக்கு ஈர்ப்பு விசை இருப்பதைப்போல் மனதிற்கும் ஈர்ப்பு விசை உண்டு. ஆனால் அது சற்று வித்தியாசமான ஈர்ப்பு விசை ஆகும். நீங்கள் விரும்புவது எதுவோ
அதை நோக்கி உங்களை இழுக்கும்; விரும்பாதது எதுவோ அதை நோக்கியும் இழுக்கும். உங்கள் மனதை எது அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதோ அதுதான் இந்த ஈர்ப்பு விசையின் குறியிலக்கு.
“இந்தத் தவறை மட்டும் நான் மீண்டும் செய்யக் கூடாது… இன்னொரு முறை அவன் முகத்தில் நான் முழிக்க மாட்டேன்… எங்களை மதிக்காத அந்தக் கட்சியுடன் இனி என்ன புடலங்காய்க் கூட்டணி…”
நமக்கெல்லாம் இவை, இன்னபிற ஏதோ ஒரு சந்தர்பத்தில் நன்கு பரிச்சயமான உரையாடல்கள் தாம். ஆனால் சற்றுக் கவனித்துப் பாருங்கள்………. எதெல்லாம் வேண்டாம் என்றார்களோ அதெல்லாம் முறைப்படி நடந்திருக்கும்; தவறு மீண்டும் நிகழ்ந்திருக்கும்; முகத்தில் மீண்டும் முழித்து இளித்தோ முறைத்தோ கடந்திருப்பார்கள்; அந்தக் கட்சியுடன் இந்தக் கட்சி ஒன்றிப்போய் மேடையில் கரங்கள் இணைந்து உயர்ந்திருக்கும். காரணம், அலசல் அதெல்லாம் இங்கு முக்கியமில்லை. மனது – அது எப்படி ஈர்க்கப்படுகிறது?
ஐஸக் நியூட்டன் சொல்ல மறந்த விதி மன ஈர்ப்பு விசைக்கு உண்டு. “எதை மனம் நினைக்கிறதோ, மனதை எது ஆக்கிரமிக்கிறதோ அதை நோக்கி மனம் நம்மை நகர்த்தும்.”
அந்த நகர்வு ஓர் இலக்கினை நோக்கித்தான் இருக்குமே தவிர அந்த இலக்கின் எதிர்த் திசையில் பயணிக்காது. இதென்ன புதுக் குழப்பம்? விஞ்ஞானியைத் துணைக்கு அழைக்கும்போதே நினைத்தேன் என்று ஓட வேண்டாம். மிகவும் எளிதாய் இதைப் புரிந்து கொள்ளலாம்.
“நான் ஒன்று சொல்வேன். அதை நீங்கள் கற்பனை செய்யவே கூடாது. ஒரு பூம்பூம் மாடு. அதன் கழுத்தில் மணி. முதுகில் கலர்கலராய்த் துணி. அந்த மாட்டின் கண்களில் பெரியதொரு கூலிங் க்ளாஸ்,” என்று விவரித்தால் உங்கள் மனதில் ஏற்படும் பிம்பம் என்ன? சாட்சாத் அந்த வர்ணனைக்கு ஏற்ப ஒரு மாடு. ஆரம்பத்திலேயே கற்பனை செய்யக்கூடாது என்று சொன்னது? அதை மனம் புறந்தள்ளிவிடும்.
“இதை மறக்கக்கூடாது,” என்று உங்களுக்குள் சொல்லிய எத்தனை விஷயங்களை இதுவரை மறந்திருக்கிறீர்கள். நேற்றோ, கடந்த வாரமோ, அதற்குமுன் ஏதோ ஒருநாள், “இன்னிக்கு வேலைமுடித்து சீக்கிரம் வீட்டுக்கு வாங்க; மறக்கக் கூடாது,” என்று வீட்டில் சொன்னதற்குச் சிரிக்க சிரிக்கத் தலையாட்டிவிட்டு, அதை மறந்து தொலைத்து வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லை?
மனமானது “மறதி“ எனும் சங்கதியை விட்டுவிலகி “மறதியில்லை” என்ற எதிர்த்திசைக்குச் செல்லாது. ஏனெனில் மனதிற்கு அப்படி ஒன்று இல்லை!
அதற்கு மாற்றாய், “நான் இதை நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்ளப்போகிறேன்,” என்று சொல்லிப் பாருங்கள், நடக்கும். “ஞாபகம் கொள்” என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு மனம் அதை நோக்கி நகரும்.
இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் சில விவரங்களைப் பார்ப்போம்.
மன நகர்வைச் சரியாகப் புரிந்துகொண்டால் நம் மனதிற்கு இடவேண்டிய கட்டளைகளும் சரி, பிறருக்கு இடவேண்டிய கட்டளைகளும் சரி மிக எளிதாகிவிடும்.
சிக்கிக்கொண்ட பட்டத்தை எடுக்க மரத்தில் ஏறியிருக்கும் சிறுவனிடம், “டேய் பார்த்துடா! விழுந்துடப் போறே,” என்று சொன்னால் அவன் தவறிக் கீழே விழ நீங்கள் உபகாரம் செய்தாச்சு.
“இன்று புத்தகத்தை எடுத்துச் செல்ல மறக்கக்கூடாது,” என்று நீங்கள் நினைத்தவுடனேயே, “அப்படியா சேதி,” என்று உங்களது மனம் மறதிக்குப் பாதி தயார்.
மனமானது பிம்பங்களின் அடிப்படையில் இயங்கும் தன்மை கொண்டது. மேலே சொன்ன பூம்பூம் மாடு ஒரு நல்ல உதாரணம். அதனால் “புத்தகத்தை மறக்கக் கூடாது” என்று நினைக்கும்போதே மறதி எனும் மாயபிம்பம் உங்கள் மனதில் உருவாகிவிடுகிறது. மனது அந்த பிம்பத்தை நோக்கி ஈர்க்கப்பட, புத்தகத்தை மறந்து விடுவீர்கள்.
“இன்று புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று சொல்லிப் பாருங்கள். மனம் “ஞாபகம் கொள்“ என்ற பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும். புத்தகத்தை ஞாபகமாய் எடுத்துக் கொள்ளும் சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது.
வீட்டிற்கு விருந்தினர்கள் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளின் வால்தனம் போதாதென்று வந்த குழந்தைகளின் வால்தனமும் சேர்ந்து கொண்டு ஒரே ரகளை. உங்கள் பாட்டனார் வழிச் சொத்தாக ஒரு பழங்கால கடிகாரம் வீட்டின் நடுக் கூடத்தில். மிகுந்த அக்கறையும் கவலையுமாய், “பிள்ளைகளா! பார்த்து விளையாடுங்க, இந்தக் கடிகாரத்தை உடைச்சுடாதீங்க,” என்று சொன்னால் அந்தக் கடிகாரம் பேரீச்சம் பழத்திற்குத் தயாராகிவிடும்..
“சீக்கிரம் கிளம்பு, பஸ்ஸை மிஸ் பண்ணத்தான் போறோம்,” என்று கிளம்பினால் பேருந்தைத் தவறவிட உங்கள் மனது ரெடி.
இதற்கெல்லாம் என்ன செய்வது? என்ன வழி?
நெகட்டிவ்வை பாஸிட்டிவ் ஆக்க வேண்டும். தீர்ந்தது பிரச்சனை!
லூட்டி அடிக்கும் உங்கள் பிள்ளைகளிடம், “கத்தாதே! சப்தம் போடாதே!” என்பதற்குப் பதிலாய், “அமைதியாய் இரு!” என்றுதான் உபதேசம் இருக்க வேண்டும்.
அக்கறைக் குறைவாய் உண்பவரிடம் “சாம்பாரைச் சட்டையில் கொட்டிக்கப் போறே” என்று சொல்லாமல் “சாம்பாரைக் கவனமாய் தட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள்,” என்பதே சரியான ஆலோசனை. இவையெல்லாம் முக்கியமற்றவை போல் தோன்றலாம். ஆனால் இவை நம் வாழ்வில் நிகழ்த்தும் மாற்றம் அபாரமானது.
பல ஆண்டுகளாய்க் கார் ஒன்றை ஓட்டிக் கொண்டிருந்தீர்கள். எங்கும் சென்று இடித்ததில்லை; கீறல் இல்லை. நீங்களும் சமர்த்து; காரும் சமர்த்து. பிறகு அதை விற்றுவிட்டுப் புதிதாய் ஒரு கார் வாங்கி, அதன் புது மெருகின் கவனத்தில் “எங்கேயும் இடித்துவிடக்கூடாது,” என்று நினைத்துக் கொண்டே காரை ஓட்ட ஆரம்பிக்காமல், “நான் இந்தக் காரைப் பத்திரமாக ஓட்டப் போகிறேன்,” என்று சொல்லிக் கொண்டால் போதும்.
பரபரப்பான கிரிக்கெட் மேட்ச். அசால்ட்டாய் 96 ஓட்டம் எடுத்துவிட்டார் தொடக்க ஆட்டக்காரர். அவருடைய செஞ்சுரிக்காக அரங்கத்தில் டென்ஷன். அவருக்கும் டென்ஷன். “இந்தப் பந்தில் நான் கேட்சாகிவிடக் கூடாது,” என்று நினைக்காமல், “வா போடு! ஸிக்ஸர் அடிக்கிறேன் பார்,” என்று நினைத்தால் போதும், நூறு நிச்சயம்.
இதேதான் அனைத்திற்கும்.
“நான் வாழ்க்கையில் நொடித்து விடக்கூடாது… நான் இந்த விஷயத்தைச் சொதப்பி விடக்கூடாது…” என்பதையெல்லாம் உதறி எறிந்துவிட்டு,
“நான் முன்னேறுவேன்… சாதிக்கப் பிறந்தவனப்பா நான்… வெற்றி எனது தோஸ்த்…” என்று மனதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மனம் சரியாய் நகரும்; மகிழும்!
மனம் மகிழ, தொடருவோம்…
இந்நேரம்.காம்-ல் 29 அக்டோபர் 2010 அன்று வெளியான கட்டுரை
<–ம. ம. முகப்பு–>