சென்ற அத்தியாயத்தில் மனதிற்கும் நோய்க்கும் உள்ள அன்னியோன்யத்தைப் பார்த்தோம். இங்கு,நோய்க்குச் சம்பந்தமுள்ள நோவைப்
பற்றிக் கொஞ்சம் நோகாமல் பார்த்துவிடுவோம்.
நோவு எனும் வலி இருக்கிறதே……. அது பிறர் சுமக்க இயலாதது. நோயுற்றிருக்கும் ஒருவருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் ஆறுதல் கூறலாம்; பணிவிடை செய்யலாம். ஆனால், வலி? அதை அவரவர் தான் சுமக்க வேண்டும். ஒருவரின் நோவை மற்றவரால் முழுதுமாய் உணரக்கூட முடியாது; இதில் சுமப்பது எப்படி? அதனால் தான், “தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும்,” என்பார்கள். “அது என்ன திருகுவலி?” என்று கேள்வி கேட்டால், அது வணங்காமுடிக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கு நமக்கு அது முக்கியமில்லை. முக்கியமானது நோவு.
நம் அவைருக்கும் வலி நல்லது! நோவின் வேதனை அவசியமானது!
“என்ன ஸார், நக்கலா?” என்று கேட்பது புரிகிறது.
“காலையில் தான் பல்லைப் பிடுங்கிக் கொண்டு வந்தேன். நேற்றிரவு வலியில் நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும்,” என்று கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து கோபால் பல்லைக் கடித்துக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம்.
“இன்னைக்கு என்று பார்த்து என் கணவருக்கு உடல் சுகமில்லை. போனால் போகிறது; ஒத்தாசையாக இருக்குமே என்று நான் சமைக்கப் போக, ஸ்டவ்வில் சுட்டுக்கொண்டு எரிச்சலும் வலியுமாக உயிர் போகிறது. நோவு அவசியமா? என்ன பேச்சு பேசுகிறீர்கள்?” என்று அயனாவரத்திலிருந்து வாசுகி திட்டிக் கடிதம் எழுதலாம்.
கேள்வியும் அதிலுள்ள கோபமும் நியாயம் தான். ஆனாலும் நோவு நல்லது!
ஏன்?
நோவு ஒரு communication device. தகவல் தொடர்பு சாதனம்.
எப்படி? பார்ப்போம்.
ஸ்டவ் நெருப்பில் விரல் பட்டு, அந்த வலியை உணர்ந்ததால் தானே உடனே நெருப்பிலிருந்து விலகினீர்கள்?
இல்லாவிட்டால் என்னாகும்?
டிவியில் பாட்டைப் பார்த்துக் கொண்டே அடுப்பில் வேலை செய்ய, விரல் அடுப்பு நெருப்பில் வறுபட்டுக் கருகி, பிறகு திரும்பிப் பார்த்து, “அடக் கண்றாவியே!” என்று அந்த விரலைத் திருகி எறிந்துவிட வேண்டியதுதான்.
நீங்கள் மோட்டார் பைக் ஓட்டிச் செல்லும்போது சைடில் வந்து ஆட்டோக்காரர் இடித்த வேகத்தில் உங்களது காலில் ஒரு பகுதியை அந்த ஆட்டோ பிடுங்கி எடுத்துக் கொண்டு சென்றுவிட, வீட்டிற்கு வந்து இறங்கும் போதுதான் நீங்கள் உணர்வீர்கள், “அதான் பைக் சிக்னலில் நிற்கும்போது சரியாகக் காலை ஊன்ற முடியவில்லையா?”
ஆகவே உடல் நோவு நமக்கு முக்கியம். நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக் கூடாது என்பதை அது நமக்கு அறிவுறுத்துகிறது.
பின்னே?
மனைவியை அன்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அவர் கேட்ட கஸாட்டா ஐஸும் ஆர்டர் செய்து வந்துவிட்ட பின், “மன்னிக்கவும் டார்லிங். என்னால் ஐஸ் சாப்பிட முடியாது. பீட்ஸா கடிக்கும் போது தவறுதலாய் நாக்கையும் கொஞ்சமாய் கடித்து முழுங்கி விட்டேன்,” என்று சைகையில் சொல்ல நேரிடலாம்.
பசி அதிகமாகும் போது வயிறு வலித்து உணர்த்துகிறது. உணவு ருசியாக இருக்கிறது என்பதற்காக ஒரு வெட்டு வெட்டும்போது வயிறு அதற்கும் வலித்து எச்சரிக்கிறது. போதிய தூக்கம் இல்லாவிட்டால், ஏதேனும் உடலுக்கு நிகழ்ந்தால் உடல் உபயோகிக்கும் அவசர உதவி எண் தான் வலி.
நோவு இன்பமானதில்லை; ஆனால் அவசியமானது. மனம் மகிழ்வதற்கும் இந்த நோவுக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கிறது.
நமது மன மகிழ்விற்கு மன நோவும் முக்கியமானது.
எப்படி?
Pain எனும் ஆங்கில வார்த்தையைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது உடல் நோவு, மன வேதனை என்று தான் மொழிபெயர்க்கிறார்கள். உடலின் நன்மைக்காக உடல் நோவு எப்படிச் செயல்படுகிறதோ, உதவுகிறதோ அவ்விதமாகவே மனதிற்கும் மன நோவு பயன்படுகிறது. உடலில் வலி ஏற்பட்டவுடன் தேவைப்படுவதை செய்தோ, தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்தோ உடல் நலன் பாதுகாக்கப்படுகிறது. அதைப் போல்,
நமக்கு ஏதோ ஒரு மன வேதனை நிகழ்கிறது என்றால், என்னவோ எங்கோ சரியில்லை என்று அர்த்தம். யாராவது நம்மைப் புண்படுத்தியிருக்கலாம். எதிர்பார்த்த ஒன்று நிகழாமல் போயிருக்கலாம். அல்லது எதிர்பாராத ஒன்று நிகழ்ந்திருக்கலாம். “ரொம்பப் பிடிச்சிருக்கும்மா. எனக்காகப் பெண் கேளேன்” என்று அம்மாவைச் சம்மதிக்க வைத்து அழைத்துச் சென்றால், அந்தப் பெண்ணின் கணவர் வந்து கதவைத் திறந்திருக்கலாம். மனம் அடிபடுவதற்கும், வலிப்பதற்கும் காரணத்திற்கா பஞ்சம்? மனதிற்கு ஏதாவது அடி, சிராய்ப்பு ஏற்பட்டு உடனே உள்ளே எங்கோ வலிக்கும். அதைத் தொடர்ந்து எழும் இனந்தெரியா நோவில் ஊண், உறக்கம் எல்லாம் தட்டுக்கெட்டுப் போய் – மகா அவஸ்தை அது!
என்ன மருந்து?
கீழேயுள்ள ப்ரிஸ்கிரிப்ஷனை உணவுக்கு முன்னும் பின்னும், உறங்குவதற்கு முன்னும் பின்னும், சதாசர்வ நேரமும் பிரயோகியுங்கள் என்கிறார்கள்.
- மற்றவர்களுடைய செயல்பாடுகள் உங்களுடைய சுயமரியாதையை அழிக்க அனுமதிக்காதீர்கள்.
- நமது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்களை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- அவர்கள் எப்படிப்பட்டவர்களோ அப்படியே அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் நமக்கு என்ன அளிக்கிறார்களோ அதை எவ்வித நியாயமும் களங்கமும் கற்பிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.
முடிகிற காரியமா இது என்று கேட்கலாம்? மருந்து எந்த காலத்தில் இனித்திருக்கிறது? ஊன்றிக் கவனித்தால் இதில் மிகப் பெரிய உண்மையும் நன்மையும் அடங்கியிருக்கிறது.
“உலக அழகி மனைவியாக வாய்க்க வேண்டும்; வாய்க்கு ருசியாய்ச் சமைத்துப் போட வேண்டும்; அதி புத்திசாலியாய் இருக்க வேண்டும்; புடவை, நகை ஆசையற்றவளாய் இருக்க வேண்டும்….” என்று கணவனும் “போட்டதைத் தின்று விட்டு லொட்டு, லொசுக்கு சொல்லாத கணவனாய் இருக்க வேண்டும், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஓரக் கண்ணால் கூடப் பார்க்காத யோக்கியவானாய் இருக்க வேண்டும் எள் என்றால் புதுப் புடவையுடன் நிற்க வேண்டும், …” என்றெல்லாம் மனைவியும் மனதை வருத்திக் கொண்டே இருக்காமல், நமக்கென அமைந்ததை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அப்படியே நேசிக்கக் கற்றுக்கொண்டால்? பிரமாதமோ, சுமாரோ சமைத்துப் போட்டதை அன்புடன் உண்டு பழகினால்? பல கோர்ட்டுகளுக்கு வேலையிருக்காது.
அது இருக்கட்டும்! மற்றவர்களுடைய செயல்பாடுகள் பாதிக்கக் கூடாது என்கிறார்களே, யாரேனும் விடும் பட்டாசு நம் வீட்டுக் கூரையில் விழுந்து வீடு பற்றிக் கொண்டாலோ, ஆசையாய் வாங்கித் தேய்த்துத் தேய்த்துப் பளபளவென்று பராமரித்து வந்த மோட்டார் சைக்கிளை யாராவது திருடிக் கொண்டு சென்று விட்டாலோ… இப்படி மற்றவருடைய செயல்பாடுகள் மனதிற்கு வலிக்காமல் என்ன செய்யும்? சுயமரியாதையை வைத்துக் கொண்டு அழாமல் எப்படிச் சமாளிப்பது?
இதெல்லாம் யதார்த்தம் தான். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமான கசப்பான அனுபவம் நிகழலாம். ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் இழக்கும் பல விஷயங்கள் வாழ்க்கையில் நமக்கு முக்கியமே இல்லை. ஆனால் “அதுதான் வாழ்க்கையின் அத்தியாவசியம்“ என்பது போல் காலப் போக்கில் வந்து ஒட்டிக் கொண்டிருக்கும். அதை ஏதோ ஒரு காரணத்தால் இழக்க நேரிடும்போது மனது வலித்துத் துடிக்கிறது.
செல்போன் இல்லாமல் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூட, மக்கள் கூட்டம் பூவுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தது. மகிழ்ச்சிகரமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அது இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துவிடுமோ என்பது போல் தான் பலரது நிலை மாறியுள்ளது. இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படிப் பல.
அதனால் தான் உடலுக்கு வலி எப்படி உதவுகிறதோ, அதைப் போல் நமது மனதைப் பாதித்து வலிக்கும் விஷயங்கள் நமது வாழ்க்கையின் முன்னுரிமைகளை மறுபரிசீலனைச் செய்ய உதவும் என்று குறிப்பிடுகிறார்கள்.
அதற்காகக் கார், செல்போன், சொந்த வீடு, வாழ்க்கைத் துணை இல்லாமல் வாழ வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொள்ளக் கூடாது. அர்த்தம் அது இல்லை.
விஷயம் யாதெனில், வெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் அடிபட்டு, மனம் வலிக்கும்போது அதை உணர்ந்து தங்களது வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியானபடி மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்; முன்னுரிமைகளை சரிசெய்து கொள்கிறார்கள்; எதிர்பார்ப்புகளைச் சீரமைத்துக் கொள்கிறார்கள்; குற்றம் குறை காணும் மனோ நிலையைச் செப்பனிட்டுக் கொள்கிறார்கள்.
உடலுக்கு நோவு உண்டாக்கும் விஷயத்தை எப்படித் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க மாட்டோமோ, தவிர்த்துக் கொள்வோமோ அதைப் போல் மனதிற்கு நோவு உண்டாக்கும் விஷயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடாது. “நான் அப்படித் தான் இருப்பேன், என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன், அது ஏன் வலிக்கிறது? வலிக்கக் கூடாது,” என்று குதர்க்கம் பேசினால், ஸ்டவ் நெருப்பிலிருந்து உடனே விரலை நீக்கிக் கொள்ளாமல், விரலிடமும் ஸ்டவ்விடமும் சண்டையிட வேண்டியது தான்!
மனம் மகிழ, தொடருவோம்…
இந்நேரம்.காம்-ல் 14 ஆகஸ்டு 2010 அன்று வெளியான கட்டுரை
<–ம. ம. முகப்பு–>