30 – பாதையெல்லாம் பாடம்

by நூருத்தீன்

குறிக்கோள் நம்மை நகர்த்துகிறது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். எனவே வாழ்க்கையில் நல்லதொரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்வது, மனதிற்கும்

உடம்பிற்கும் நல்லது என்றும் அறிந்தோம். அப்படியொரு குறிக்கோளை அமைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் நாம் இயங்கும்போது நாம் எட்டுவது இலக்கை மட்டுமில்லை; இன்னபிறவற்றையும்தாம்!

அவை என்ன?

ஒரு குறிக்கோளுக்கான பாதையில் நாம் பயணிக்கும்போது வழிநெடுக நாம் என்னென்ன கற்றுக் கொண்டோம், எந்தளவு நம் மனது அதனூடே வளர்ந்தது, பக்குவப்பட்டது என்பது குறிக்கோளின் இலக்கைவிட முக்கியமான விஷயம் ஆகும்..

எப்படியென்று பார்ப்போம்.

ஒருவர் கல்லூரியில் சேர்ந்து மாங்கு மாங்கென்று படித்து உழைத்துப் பட்டம் வாங்கியதன் பின்னர் ‘நான் பாடுபட்டதெல்லாம் இந்த ஒரு காகிதத்திற்காகவா’ என்று டிகிரி சர்டிபிகேட்டைக் காட்டி அலுத்துக் கொண்டால் எங்கோ தப்பு. அல்லது ஏட்டில் படித்ததெல்லாம் அவருக்கு வெறும் சுரைக்காயாக ஆகிவிட்டிருந்தால், “அவர் படித்தார்; பயிலவில்லை”! பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்ளப்போகும் எழுத்துகளுக்காகவா டிகிரி என்ற குறிக்கோள்? இல்லையே!

பாடம் ஒருபுறமிருக்க அந்தக் கல்விப் பயணத்தில் என்னென்ன கற்றார், யாரையெல்லாம் சந்தித்தார், எவரையெல்லாம் நண்பராக்கிக் கொண்டார் எதிரியாக்கிக் கொண்டார், என்னென்ன இன்ப துன்பங்களை அனுபவித்தார், தம்மைத் தாமே என்ன அறிந்து கொண்டார் என்பனவெல்லாம் பாடத்தைவிட முக்கியமான அனுபவங்களல்லவா? அவைதானே வாழ்க்கைப் பக்குவத்திற்கு வித்திடுகின்றன? இவற்றையெல்லாம் பேராசிரியர்கள் போர்டில் எழுதிக் காண்பிப்பதில்லை; அவையெல்லாம் அனைவருக்கும் ஒன்றுபோல்அமைவதும் இல்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறிக்கோள் இருக்கும் –

நான் சுயமாய்த் தொழில் தொடங்க வேண்டும்;

கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொள்ள வேண்டும்;

மிகப் பெரிய பங்களா கட்ட வேண்டும்;

இன்றைய ஸீரியலை கண்ணீர் சிந்தாமல் பார்த்துவிட வேண்டும்…

இப்படியாக ஏதோ ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு அதை நீங்கள் சாதித்தும் முடித்துவிட்டீர்கள். இங்கு வெற்றி என்பது நீங்கள் துவங்கிய தொழிலோ, சென்றடைந்த கஷ்மீரோ, கட்டி முடித்த பங்களாவோ அல்ல. அந்த இலக்கை அடைய நீங்கள் சந்தித்த மனிதர்களும் அனுபவமும் நன்மையும் தீங்குகளும்தான் நீங்கள் அடைந்த வெற்றியில் முக்கியமானவை. அவைதாம் உங்கள் மனதின் உள்ளே இருக்கும் கண்களுக்கு ஒளி.

ஒருவர் ஒரு குறிக்கோளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது துணிவைக் கற்றுக் கொண்டிருக்கலாம்; மன உறுதியைப் பெற்றிருக்கலாம்; மக்களிடம் இணக்கமாகவோ தூண்டியோ காரியமாற்றிக் கொள்ளும் திறனைப் புரிந்து அறிந்து கொண்டிருக்கலாம்; சுய ஒழுக்கம் மேம்பட்டிருக்கலாம்; விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கலாம்; அவரது தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கலாம்; அல்லது இல்லாளின் அதட்டல்களிலிருந்து தப்பிக்கும் உபாயம் புலப்பட்டிருக்கலாம்.

இப்படி ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ ‘லாம்’ உங்களை வந்தடைந்திருக்கும். சுருக்கமாய்ச் சொன்னால் நீங்கள் அடைந்தது என்ன என்பதைவிட உங்கள் மனதை அடைந்தது என்ன என்பதே முக்கியம்!

இவை இவ்வாறிருக்க,

குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளும்போது ஒன்றை முக்கியமாய்க் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது இப்புவியின் விதி!

இங்கு விதியென்பது fate அல்ல rule!

“என்னது நீ அணு விஞ்ஞானி ஆகப் போகிறாயா? என்னவொரு குறிக்கோள், இலட்சியம்” என்று உங்கள் உற்றார், உறவினர், பால்காரர், உஙகளின் சிகை அலங்கார நிபுணர் என்று அனைவரும் உங்களுக்குச் சிகப்புக் கம்பளம் விரித்து இரு புறமும் வெள்ளையுடை மங்கையரை நிறுத்தி வைத்துப் பூத்தூவி வாழ்த்தப் போவதில்லை.

வாழ்க்கைப் பாதை கடினமானது. மேடு, பள்ளம் நிறைந்தது. இதை முதலில் உணர வேண்டும். அழுத்தந்திருத்தமாய் உணர வேண்டும்.

மரக் கன்று நட்டு அது மெதுமெதுவே வளர்ந்து மரமாவதைப் பார்த்திருக்கிறீர்களா? இன்றைய ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உலகில் யாருக்கு அதற்கு அவகாசம் இருக்கிறது? அல்லது மரம் வளர்க்கும் அளவிற்கு இடமொன்று இருந்தால் கூட, அதைப் ப்ரமோட்டார்கள் பிடுங்கி ஃப்ளாட் கட்டி விற்றுவிடுகிறார்கள். போகட்டும். செடியொன்று வளரும்போது சில இலைகள் பழுத்து உதிரும்; ஆனால் அதைவிடச் சிறிது அதிகமாய் இலைகள் துளிர்க்கும். இப்படிச் சில இலைகளை இழந்து, இழந்து, அதனிலும் அதிகமாய் இலைகளை ஈன்று, ஈன்று தான் செடியொன்று நெடிய மரமாகிறது.

சில, பல முறைகள் கீழே விழுந்து எழுந்தால்தானே சைக்கிள்ஓட்ட பேலன்ஸ் கிடைக்கிறது!

சில சுதந்தரங்களை இழந்தால்தானே நல்லறமாக இல்லறம் அமைகிறது!

இதை நாம் நன்றாக உணரவேண்டும். அதைவிட்டுவிட்டு, என் இலட்சியமும் குறிக்கோளும் உலக உன்னதம்; அதனால் எனக்கு அனைத்து விஷயங்களும் தங்குதடையின்றி நடைபெறவேண்டும்; அதற்கு இணக்காமாய் இல்லையெனில் புவியின் விதியை மாற்றுங்கள்; Break the Rules என்று யாரேனும் நினைத்தால்… ஸாரி! நாளைக் காலை உங்கள் ஊரிலும் சூரியன் கிழக்கேதான் உதிக்கும்!

மிகப்பெரிய தொந்திக்குச் சொந்தக்காரர் ஒருவர். ஒரு நாள் தம் செருப்பைத் தேடக் குனிய முடியாமல்போய், அதைப் பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரர் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததால் முடிவே செய்துவிட்டார்… உடற் பயிற்சி!

அதை ஆரம்பித்து, சிறிது சிறிதாய்ப் பயிற்சி செய்து, ஆனால் கரைத்த கொழுப்பைவிட அதிகமாய் உண்டு, ஒரு மாதத்தில் பெரிய பலன் ஏதும் இல்லையென்றதும் அத்தீர்மானத்தைத் தூக்கிப் போட்டுவிட்டார். என்னாவது? மிச்ச வாழ்நாளும் அவர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.

மற்றொருவருக்கு வேறு கவலை. பணம் என்று எதுவும் சேமிக்க முடியாமல் எப்பவும் செலவாகிக் கொண்டே இருக்கிறதே; இம்மாதத்திலிருந்து சிறிது சிறிதாய்ப் பணம் சேமித்து ஆண்டு இறுதியில் அதைக் கொண்டு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஏதாவது செலவு வந்து கொண்டேயிருக்க ‘நமக்கு இது சரிப்படாது’ என்று விட்டுவிட்டார்.

குறிக்கோளுக்கான தீர்மானமொன்றை ஏற்படுத்திக் கொண்டால் இடையில் ஏற்படும் தடங்கலைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள்; தீர்மானத்தைக் கைவிடாதீர்கள்.

சிலர் சாமான்யமாய் எதையும் விட்டுவிடுவதில்லை. குறிக்கோளை நோக்கி நகர்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் என்ன பிரச்சனை, எங்கே பிரச்சனை எனப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் அவர்கள். அடியெடுத்து வைக்கும்போது அங்கு சறுக்கினால் ‘இது தப்பு அல்லது என்னிடம் தப்பு’ என்று அடுத்து அடியெடுத்து வைக்கும்போது திருத்திக் கொள்கிறார்கள். தங்களைத் திருத்தி, தங்களது செயல்பாடுகளைத் திருத்தி, இப்படித் திருத்தி திருத்திக் குறிக்கோளின் இலக்கை வெற்றிகரமாய் எட்டிவிடுகிறார்கள்.

யார் அவர்கள்?

வெற்றியாளர்கள்!

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 07 ஜனவரி 2011 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம. ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment