34 – பாடங்களாகும் தவறுகள்!

by நூருத்தீன்

இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். பரிசோதனைச் சாலையில் மும்முரமாய் சோதனையில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியை

அவருடைய ஜெர்மானிய ராணுவ அதிகாரிகள் ஒருநாள் கூப்பிட்டு அனுப்பினார்கள். அப்பொழுது அவர் ராக்கெட் தயாரிக்கும் முயற்சியில் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட அவகாசம் கொடுத்திருந்தும் ராக்கெட் எதையும் அவர் கண்ணில் காட்டுவதாய் இல்லை. சட்புட்டென்று ஏதாவது கண்டுபிடித்துக் கொடுத்தால் லண்டன் நகரில் போட்டுத் தீபாவளி கொண்டாடலாம் என்று துடித்துக் கொண்டிருந்தார்கள் ஜெர்மானிய ராணுவத்தினர்.
“என்னய்யா ஆச்சு?” விசாரித்தார்கள்.

“இதுவரை 65,121 தவறுகள் செய்திருக்கிறேன்; கண்டுபிடித்துவிடுவேன்” என்றார்.

அந்தப் பதில் அவர்களுக்குச் சகிக்கவில்லை.

“நீ கண்டுபிடித்து முடிக்க இன்னும் எத்தனைத் தவறுகள் செய்ய வேண்டியிருக்கும்?”

“ம்ம்ம்… எப்படியும் மேற்கொண்டு ஓர் ஐயாயிரம் தவறுகள் நிகழலாம்.”

அவர் ராக்கெட் விஞ்ஞானி வெர்னர் வான் ப்ரௌன் (Wernher von Braun). ஜெர்மனியைச் சேர்ந்தவர். பிறகு கூறினார், “65,000 தவறுகள் செய்தால்தான் ஒரு ராக்கெட் கண்டுபிடிக்கும் தகுதியே உருவாகிறது. இப்பொழுதுதான் அந்தத் தகுதி எனக்குக் கிடைத்துள்ளது. ரஷ்யா இதுவரை 30,000 தவறுகள் மட்டுமே செய்துள்ளது. அமெரிக்கா ஒரு தவறும செய்யவில்லை. தெரிந்து கொள்ளுங்கள்.”

அன்றுவரை ராக்கெட் தொழில்நுட்பத்தில் ரஷ்யா பாதியளவு மட்டுமே முன்னேறியிருந்தது; அமெரிக்கா அத்துறையில் அப்பொழுது ஒன்றுமேயில்லை.

அவர் பேச்சு பொய்யாகவில்லை. இறுதியில் வெற்றிகரமாய் அவர் ஏவுகணையைக் கண்டுபிடித்துக் கொடுக்க அதை வைத்துக்கொண்டு ஜெர்மனி கெட்ட ஆட்டம் போட்டது. எதிரி நாடுகளைக் கதிகலங்க அடித்தனர்; ஒருவழியாய் உலகப் போர் முடிவுக்கு வர, பார்த்தார் வெர்னர்; ரஷ்யர்களிடம் மாட்டிக் கொண்டு வதைபடுவதைவிட அமெரிக்கா பரவாயில்லை என்று அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். அவரைப் பத்திரமாகப் பொத்தித் தன் ஊருக்கு அழைத்து வந்த அமெரிக்கா அவரது அறிவுக்கு வேண்டிய தீனியைப் போடவே முதன்முதலில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வைக்க நாஸா உருவாக்கிய ராக்கெட்டிற்கு இவரது அறிவும் உழைப்பும் அடிப்படையாயின. பணம் தவிர ஏகப்பட்ட விருதெல்லாம் சம்பாதித்துக் கொண்டு 1977-ல் தமது 65ஆவது வயதில் இறந்து போனார் விஞ்ஞானி வெர்னர்.

எதற்கு இந்தக் கதை? அதில் அடிநாதமாய் நமக்குத் தகவல் பொதிந்துள்ளது.

“நாம் இழைக்கும் தவறுகள் நமக்கு ஆசான்.”

நமது ஒவ்வொரு தவறும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தராமல் விடுவதில்லை. “தோல்வி வெற்றியின் முதல் படி” என்பது அதனால்தான்.

தாமஸ் ஆல்வா எடிசன் கதையும் நமக்கெல்லாம் தெரியும். ஏகப்பட்ட முறை அவரது முயற்சி தோல்வி அடைந்து ஒருவழியாய் அவர் பல்ப் கண்டுபிடித்து முடித்ததும் “லைட் எரியும் பல்பை எப்படித் தயாரிக்கக்கூடாது என்பதை நான் ஆயிரக்கணக்கான வழிகளில் கற்றுக் கொண்டேன்” என அவர் கூறியது மிகப் பிரபலமானது.

வெற்றியாளர்கள் தவறிழைத்தால் கற்கிறார்கள். அடுத்தமுறை தவறு நிகழ்ந்தால் அடுத்த முறையும் கற்கிறார்கள். அதற்கு அடுத்த முறை தவறினால்? அப்பொழுதும் விடுவதில்லை, கற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு தவறிலும் விடாமல் கற்றுக் கொண்டே இருக்கிறார்களா, அதனால் வெற்றியடைகிறார்கள்.

தோல்வியாளர்கள் ஒவ்வொரு தவறையும் பெரிதாக எடுத்து அலட்டிக் கொண்டு மாய்ந்து போகிறார்கள். அத்தோல்வி அந்நிகழ்வில் உணர்த்தும் மறுபக்கத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். தவறுகளைக் குற்றமாய்க் கருதிக் கூனிக் குறுகிப் போகிறார்கள்.

பார்க்கப்போனால் வெற்றியைவிடத் தோல்விகளே நாம் அதிகம் கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்வி ஏற்பட்டால் மட்டுமே ஒரு கண்ணுக்கு அழுதுவிட்டு, மூக்கைச் சிந்தித் துடைத்துவிட்டு, யோசிக்கிறோம்; சுய ஆராய்ச்சி செய்து கொள்கிறோம்; புதிய திட்டமொன்றைத் தீட்டி எடுத்துக்கொண்டு அடுத்த முயற்சிக்குப் புத்துணர்வுடன் எழுந்து நிற்கிறோம். வெற்றி என்றால், மகிழ்ச்சியில் கத்திவிட்டு, கொண்டாடிவிட்டு மறந்து விடுகிறோம்.

அதற்காக இந்தத் தர்க்கத்தைப் பள்ளி, கல்லூரிப் படிப்பில் உபயோகிக்காதீர்கள். ஆண்டுதோறும் தேறாமல் தவறிப்போய் ஒரே வகுப்பில ‘டேரா’ போட்டால் அது வேறு பிரச்சினை; வீட்டில் கிடைப்பது வேறு பட்டம்.

மனிதர்களாகிய நாம் தவறிழைக்கக் கூடியவர்களே என்பதை முதலில் உணர்ந்து கொள்வது நல்லது. நமது காரியம் தவறிப்போகும் போது தட்டி விட்டுக் கொண்டு எழுந்து தவறைத் தாண்டிச் சற்று எட்டிப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகளெல்லாம் உண்மையில் தவறுகளல்ல; பாடம் என்பது புரியும். அது என்ன கற்றுத் தருகிறது என்பதைப் புரிந்து கொண்டால் அடுத்த முறை அந்தத் தவறு நிகழாது. இறுதியில் காரியம் கைகூடும்.

தவறே செய்யாமல் வாழ வேண்டும் என்றால் முடியுமா? எக்காரியமும் செய்யாமல் நல்லதொரு திண்ணையாகப் பார்த்துத் ‘தேமே’ என்று உட்கார்ந்திருந்தால் மட்டுமே சாத்தியம்.

தோல்வியும் தவறுகளும் அவமானமல்ல! எதையும் முயன்று பார்க்காமல் அமைதியாக இருப்பதுதான் அவமானம்.

தவறுகளை அவமானம் எனக் கருதும்போது மனம் உடைந்து போகிறது. அப்படியல்லாமல் பாடம் கற்க முயன்றால்?

ஏற்படுவது சுறுசுறுப்பும் மகிழ்வும்.

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 04 பிப்ரவரி 2011 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம.ம. முகப்பு–>

 

 

Related Articles

Leave a Comment