தோழர்கள் – 29 ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா (ரலி)

by நூருத்தீன்
29. ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா (سالم مولى أبي حذيفة)

லீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கத்தியால் குத்தப்பட்டுக் குற்றுயிராய் மரணப்படுக்கையில் கிடந்த நேரம். அடுத்த கலீஃபாவாக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான சூழல். நபியவர்களின் அன்பிற்கு மிகவும் உரியவர்களான, பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஆறுபேரை உமர் தேர்ந்தெடுத்தார். அலீ, உதுமான், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅத் பின் அபீவக்காஸ், ஸுபைர் இப்னுல் அவ்வாம், தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹும்.

அத்தருணத்தில் தம் எண்ணம் ஒன்றைக் கூறினார் உமர். “ஸாலிம் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் அனேகமாய் அவரை நான் தேர்ந்தெடுத்து இருப்பேன்”

ஸாலிம்? உமரின் பெருமதிப்பிற்குரிய அந்த ஸாலிம் யார்?

oOo

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில் ஏகத்துவத்தைச் சொல்ல ஆரம்பித்ததும் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்க ஆரம்பித்த குரைஷிப் பெருந்தலைகளில் ஒருவன் உத்பா இப்னு ரபீஆ. இந்த உத்பாவுக்கு அபூஹுதைஃபா, வலீத் என்ற இரு மகன்களும் ஹிந்த் என்றொரு மகளும் இருந்தனர். இந்த ஹிந்த் பின்த் உத்பா வேறு யாருமல்ல, அபூஸுஃப்யான் இப்னு ஹர்பினுடைய மனைவி. உத்பாவின் மகன் அபூஹுதைஃபாவுக்கு துபைதா பின்த் யஆர் என்றொரு மனைவி இருந்தார். அவருக்கு உமரா, ஸல்மா ஆகிய பெயர்களும் உண்டு. பிரபலமான பெயர் துபைதா. அவர் வசம் அடிமையாக இருந்தவர் ஸாலிம். ஏதோ ஒரு நாளில், நல்லதொரு மனநிலையில் இருக்கும்போது, “நீ நன்றாக உழைத்தாய்; சிறப்பான சேவை புரிந்தாய்; அதன் வெகுமதியாக உனக்கு விடுதலை; பறந்து செல்” என்று ஸாலிமை விடுவித்துவிட்டார் துபைதா.

ஸாலிமுக்குத் தம் பெற்றோர் யார், அவர்களுக்கு என்ன பெயர், தாம் எங்கிருந்து எப்படி மக்கா வந்து சேர்ந்தோம் என்று எந்த விபரமும் தெரியாது. நினைவு தெரிந்த நாளாய் அடிமையாய் வாழ்ந்து கொண்டிருந்தவர். எனவே விடுதலை கிடைத்ததும், “எங்குப் போவது? மக்காவைத் தெரியும்; இந்தக் குரைஷிகளைத் தெரியும். இங்கேயே இருந்து சொச்சக் காலத்தை ஓட்டி விடுவோம்” என்று அவர் அபூஹுதைஃபாவிடமே தங்கிவிட்டார். நல்லதொரு நட்பு மலர ஆரம்பித்தது.

வில்லன் தந்தைக்குத் தவறிப்போய்த் தங்க மகனாய்ப் பிறந்திருந்தவர் அபூஹுதைஃபா. மேட்டுக்குடி மகனான அவருக்கு இயல்பாகவே நற்குணங்கள் அமைந்திருந்தன. அவரின் தந்தை உத்பாவுக்கு, தனக்கு அடுத்து அபூஹுதைஃபாவும் குரைஷித் தலைவர்களில் ஒருவராய் உயரவேண்டும் என்று பேராவல், பெரும் ஆசை. அசந்தர்ப்பமாய் அதையெல்லாம் துடைத்து எறிந்து போட்டது ஓர் ஒற்றைச் செய்தி.

லா இலாஹ இல்லல்லாஹ்!

மக்காவில் முஹம்மது நபியவர்களின் ஏகத்துவப் பிரச்சார செய்தி கிளம்பி, அது காதில் வந்து விழுந்ததும், அந்த ஆரம்பத் தருணங்களிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டனர் மேட்டுக்குடி அபூஹுஃதைபாவும், அவரிடம் முன்னர் அடிமையாக இருந்த ஸாலிமும்; ரலியல்லாஹு அன்ஹுமா. என்ன ஆயிற்று என்றால் அவர்கள் இருவரின் அந்த ஏகோபித்த முடிவு ஒரே நாளில் அவர்கள் மத்தியில் இருந்த அன்பிலும் உறவிலும் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட்டது.

நபியவர்கள் தம்மிடம் அடிமையாய் இருந்த ஸைது இப்னு ஹாரிதாவை விடுவித்து, தம் வளர்ப்பு மகனாய்த் தத்தெடுத்துக் கொண்டு அதை அறிவித்திருந்தார்கள். அதைப்போலவே “ஸாலிம்! இனி நீ என் மகன்” என்று தம் மனைவியிடம் அடிமையாக இருந்தவரை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார் அபூஹுதைஃபா. அதை ஊர் உலகத்திற்கும் அறிமுகம் செய்துவிட்டார். அதன்படி, “ஸாலிம் இப்னு அபூஹுதைஃபா”, “ஸைது இப்னு முஹம்மது” என்று அவர்களுக்குப் பெயரும் மாறிப்போய் இருந்தது. அதெல்லாம் அந்தக்கால அரபுகளிடையே யதார்த்தமான நிகழ்வுகளாக இருந்து வந்தன.

பின்னர் சிலகாலம் கழித்துத் தகுந்த நேரமொன்றில், வளர்ப்புப் பிள்ளைகளுக்குரிய சட்டம் இறைவனிடமிருந்து வந்து சேர்ந்தது. சூரா அல் அஹ்ஸாபின் நான்காம் ஐந்தாம் வசனங்களில் அறிவித்தான் இறைவன். “உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை…. அவர்களை அவர்களின் தந்தைய(யரின் பெய)ருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் உற்றோருமாவர் …”

மகனைப்போலத்தானேயன்றி, மகனல்ல! தீர்ந்தது விஷயம்!

ஸைதின் பெயர் ஸைது இப்னு ஹாரிதா என்று அவரின் தந்தையை அடையாளப்படுத்தும் வகையில் திரும்பியது. ஸாலிமுக்கோ அவர் தந்தையின் பெயரே தெரியாது. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் அடிமை. என்ன செய்வார்? ‘என் மகன் என்று இல்லாவிட்டாலும், அனாதரவாகவும் குலப்பாதுகாப்பு இல்லாமலும் இருக்கும் உனக்கு இனி நான்தான் பாதுகாப்பு’ என்று அறிவித்தார் அபூஹுஃதைபா. எனவே அபூஹுஃதைஃபாவின் பாதுகாவலில் உள்ள ஸாலிம் எனப் பொருள்படும் ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா என்ற பெயர் அவருக்கு நிலைத்துப் போனது.

தவிரவும் முஸ்லிம்களுக்கு இடையே சகோதரத்துவத்தை நிலைநாட்ட ஒருவரையொருவர் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டிருந்தார்கள் நபியவர்கள். அதன்படி மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து வந்து சேர்ந்து நிர்க்கதியாக நின்ற முஹாஜிர்கள் ஒவ்வொருவரையும் மதீனாவின் ஒவ்வொரு அன்ஸாரீயும் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக் கொண்டார். அதைப்போலவே அடிமையாக வாழ்ந்து வளர்ந்த, குரைஷிகள் மத்தியில் எவ்விதச் செல்வாக்கும் இல்லாமல் இருந்த ஸாலிமை முன்னர் மகனாகவும் பின்னர் தம் உடன்பிறவாச் சகோதரனாகவும் வாஞ்சையுடன் தழுவிக் கொண்டார் குரைஷிகளின் மேட்டுக்குடி அபூஹுதைஃபா. ஆனால் இங்கு என்ன வித்தியாசமென்றால் மதீனத்து அன்ஸாரீகளிடமிருந்து சலுகையும் வாழ்வாதாரத்துக்கு உதவியும் பெற்று முஹாஜிர்கள் தங்களது இன்னல்களை இலேசாக்கிக் கொண்டது போலில்லாமல் மக்காவில் இவர்கள் இருவரையும் துன்பம்தான் சமஅளவில் போட்டுச் சாத்தியது.

மக்கத்தவரின் கொடுமைகளெல்லாம் தாங்க முடியாமல்போய் இருமுறை அபிஸீனியாவிற்குப் புலம்பெயர்ந்த முஸ்லிம்களில் அபூஹுதைஃபாவும் ஒருவர். இதில் ஸாலிமுக்கு அவர் என்ன பெரிய உதவி செய்துவிட முடியும்? ஆயினும், மிகுந்து நின்றது பாசம்; ரத்த உறவுகளையெல்லாம் மிகைத்து நின்ற சகோதரப் பாசம்!

ரத்த உறவுகளின் மேன்மையும் நெருக்கமும் அதைப் பேணி ஒழுகுவதற்கான பலாபலனும் இஸ்லாத்தில் பெரும் சிலாக்கியமானவை – அத்தகு உறவினர்களும் ஓரிறையை நம்பிக்கிடக்கும்போது மட்டுமே. ஆனால் ரத்த சம்பந்தமுள்ளவர்கள் ஏகஇறைக் கொள்கைக்கு அந்நியப்பட்டுவிட்டால், அப்பொழுது ஓரிறை நம்பிக்கையில் அமைந்துவிடும் சகோதர உறவு இருக்கிறதே அது இரத்த உறவுகளையும் மிகைத்துவிடுகிறது. இதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள் அவர்கள். நெடுநாள் மழையில் பிசுபிசுத்து ஈரம் குழையக் குழைய கிடக்குமே மண், அதைப்போல் சகோதர வாஞ்சையில் கிடந்தன அவர்களது மனங்கள். சக முஸ்லிம்மேல் ‘பச்சக்’கென்று அப்பிக் கொண்டார்கள். பெயருக்கு மட்டும் ‘சகோதரா’ என்று விளித்துக் கொண்டு நாலணா காசுப்பெறாத விஷயங்களுக்கெல்லாம் முட்டி மோதிக்கொண்டு தலை புடைத்துக் கிடக்கும் நமக்கெல்லாம் ஏகத்துவ சகோதரத்துவத்தின் உள்ளர்த்தம் எள் முனையளவு புரிந்தாலே பெரும் பாக்கியம்.

மிகையில்லை! பின்னர் மதீனாவில் நிகழ்வுற்ற பத்ருப் போரில் கொல்லப்பட்ட முக்கிய பெருந்தலைகளுள் ஒருவன் உத்பா இப்னு ரபீஆ. அப்போரில் இறந்து கிடந்த குரைஷிக் குலத்தலைவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து, “உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்தவற்றை இப்பொழுது கண்டு கொண்டீர்களா? என் இறைவன் எனக்கு வாக்களித்ததை நான் கண்டுகொண்டேன்” என்றார்கள் நபியவர்கள். வியந்துபோனார்கள் தோழர்கள்.

“இறந்து போய்விட்டவர்களிடமா பேசுகிறீர்கள் அல்லாஹ்வின் தூதரே?” எனக் கேட்ட தோழர்களிடம், “நீங்கள் செவியுறுவதைப் போலவே அவர்களும் செவியுறுகின்றனர். ஆனால் அவர்களால் பதிலளிக்க முடியாது” என்று நபியவர்கள் கூறியபோது வெளிறிப்போனது அபூஹுதைஃபாவின் முகம்.

“ஓ அபூஹுதைஃபா! உம் தந்தையின் கொடிய முடிவைக் கண்டு வருந்துகிறீரோ?” விசாரித்தார்கள் நபியவர்கள். வந்தது பிரமாதமான பதில். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் வருந்தவில்லை அல்லாஹ்வின் தூதரே! அவரது முடிவை நினைத்து நான் துயருறவில்லை. என் தந்தை நல்ல புத்திக்கூர்மையுள்ள மனிதர். அவரது அறிவும் மேன்மையும் சத்தியத்தின் பக்கம் அவரை என்றாவது ஒருநாள் இழுத்து வந்துவிடும் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அவருக்கு வந்து வாய்த்ததைக் காணும்போது எனது நம்பிக்கையை அவரது இணைவைப்பு தகர்த்து விட்டதே என்று பரிதாபப்படுகிறேன்”

oOo

‘ஆண்டான் அடிமை; மேலோர் கீழோர்; காலமும் மாறாதோ’ என்று இன்றளவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஆற்றாமைக் கேள்விகளுக்கு ஆயிரத்து நானூற்று சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னரேயே மிக எளிதாய், இயல்பாய், இலகுவாய் வந்து அமைந்தது விடை – ஒற்றை வாக்கியத்தில் – ஒரே இறைவன். அந்த வாக்கியத்தை நாவும் உள்ளமும் ஒருங்கே உச்சரிக்க ஆரம்பித்தார்கள் அந்த மக்கள். பாலையில் சோலை பரவி விரிய ஆரம்பித்தது. புதிதாய் உருவாக ஆரம்பித்த அந்தச் சமுதாயத்தில் ஸாலிமின் பழைய அடையாளமெல்லாம் தொலைந்துபோய் புதுமனிதனாக அவர் பரிணமிக்க ஆரம்பித்தார். அவரை வடிவமைத்து செழுமைப் படுத்த ஆரம்பித்தன இறைவசனங்கள். இறை பக்தி, நேர்மை, தியாகம், என்பதெல்லாம் அவரது உள்ளும் புறமுமாய் ஆகிப்போயின. சக முஸ்லிம்களுக்கெல்லாம் அவரது அடையாளம், ‘சீலர் ஸாலிம்’ (ஸாலிமுன் ஸாலிஹுன்)! நபியவர்களுக்கும் ஸாலிமின்மேல் மிகப்பெரும் மதிப்பு ஏற்பட்டுப் போனது. “உம்மைப் போன்றவரை என் உம்மத்தில் ஒருவராக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று ஒருமுறை புகழ்ந்தார்கள் அவர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

எங்கிருந்து வந்தன அத்தனை மேன்மையும் அங்கீகாரமும்?

குர்ஆன்!

அதில் அவர் மூழ்கி மூழ்கி, தண்ணீரில் ஊறிப்போய் ‘பொதபொதத்து’க் கிடக்குமே காகிதம் அதைப்போல் அவரது உடலும் மனமும் ஆகிவிட, அடிமையாவது, நிறமாவது? மொழியாவது, கோத்திரமாவது? – ஆளே மாறிப் போனார் ஸாலிம் ரலியல்லாஹு அன்ஹு. ஒருநாள் தம் தோழர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது நபியவர்கள் கூறினார்கள், “நீங்கள் குர்ஆனை நான்கு பேரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் – அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், ஸாலிம் மவ்லா அபீஹுதைஃபா, உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல்” வேறென்ன வேண்டும்? ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன சிறந்த அங்கீகாரம் இருக்க முடியும்? இங்கு இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் – குர்ஆன் கற்பது என்பது அழகுற ஓதுவது என்பது மட்டுமல்ல!

அவர்களது தொண்டைக்குழியெல்லாம் தாண்டி உள்ளே இறங்கி ஆன்மாவில் கலந்திருந்தது குர்ஆன்.

குர்ஆனில் சிறந்தோங்கியிருந்த ஸாலிமுக்கு அவர் ‘இமாம்’ ஆகும் தகுதி வந்து சேர்ந்தது. மக்காவிலிருந்து மதீனாவிற்குப் புலம்பெயர்ந்த முஹாஜிரீன்களின் குழுவொன்று குபா நகரை வந்தடைந்தது, அங்கு அவர்களுக்கு இமாமாகத் தலைமைத் தாங்கி தொழவைக்கும் நற்பேறு கிடைத்துப் போனது ஸாலிமுக்கு. இன்று நமக்கெல்லாம் பிலால், ஸாலிம் போன்றோர் நன்கு பக்குவப்பட்ட பின்னர் நபித் தோழர்களாகவே அவர்களுக்குரிய தியாகப் பெருமையுடன் அறிமுகமாகியிருப்பதால் நின்று நிதானித்து முழுவதுமாய் அவர்களது தியாகத்தின் உள்ளே புதைந்து கிடக்கும் தழும்புகளின் பெருமையை நாம் உணர்ந்து கொள்வதில்லை. சமூகத்தின் அடிநிலையில் கிடந்து, அடிமையாய் உழன்று, அடி, உதை, மிதி என்று இன்னல்கள்பட்டு, ஒரு மனிதனாகவே கருதப்படாதவர்கள், எட்டு பத்து ஆண்டுகளில் எங்கோ ஓர் உயரத்திற்குச் சென்று விடுகிறார்கள். பட்டம், பதவி, நாற்காலி, முதல்வர், அமைச்சர் என்று நாம் இன்று பெருமையாகக் கருதும் எந்தவொரு நிலையும் பொருந்தவே முடியாத மிக மிக உயர்ந்த நிலைக்கு அவர்களை சரசரவென உயர்த்தி வைக்கிறான் இறைவன்!

சகோதரத்துவம், ஒற்றுமை என்பதெல்லாம் ஒருபுறமிருக்க இஸ்லாத்தினுள் நுழைந்தபின் குலப்பெருமை, ஆண்டான் அடிமை வித்தியாசம் என்பதெல்லாம் காணாமல்போய் இறைவன், இறைக் கட்டளை, இறைத் தூதர், அவர் திருப்தி என்பதே அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு கயிறாய் அனைவரையும் ஒரே வரிசையில் வைத்துக் கட்டிப்போட்டு விடுகிறது. அத்தகு மனநிலையும் முதிர்ச்சியும் ஏற்பட்டவுடன் அவர்கள் அனைவரும் தங்களது முகம்தாண்டி கருப்பொருளின்மீது கவனமும் அக்கறையும் கொண்டவர்களாய் மாறிப்போனார்கள். அத்தகு பக்குவநிலையை சர்வசாதாரணமாய் எட்டிப்பிடித்து நின்றார்கள் அவர்கள்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவின்மீது படையெடுத்துச்சென்று வெற்றி கொண்டதை சில தோழர்களை வாசிக்கும்போது அகப்பட்ட இடைவெளியில் பார்த்துக் கொண்டே வந்தோம். மக்கா வெற்றிக்குப்பின் பதினைந்து நாட்கள் மக்காவில் தங்கயிருந்தார்கள் நபியவர்கள். அந்த நேரத்தில் சுற்று வட்டாரத்திலிருந்த கோத்திரங்களுக்கெல்லாம் தோழர்களை அனுப்பி ‘அவர்களுக்கு ஏகத்துவச் செய்தியை அறிவியுங்கள்; இஸ்லாத்திற்கு அழைப்புவிடுங்கள்’ என்று பணிக்கப்பட்டது. காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு தலைமையில் 350 குதிரைவீரர்கள் பனூ ஜதீமா கோத்திரத்தின் பதுஉ அரபிகள் வசிக்கும் பகுதிக்குச் சென்றனர். அமைதியான, அன்பான முறையில் செய்திகளை எடுத்துச்சொல்ல வேண்டும் என்பது முஸ்லிம் வீரர்களுக்கு இடப்பட்டிருந்த கட்டளை. அதன்படி அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்பு விடுத்தார் காலித்.

அந்தக் கோத்திரத்து மக்களின் ஒருபகுதியினர் நம்பிக்கைக் கொள்ள மறுத்துவிட்டனர். இவர்கள் நம்மைக் கொன்று விடுவார்கள் என்று தேவையற்ற பயம் ஏற்பட்டுப்போய் அதை மற்றவர்களிடம் கூற ஆரம்பித்துவிட்டனர். தவிர அந்த மக்களிடம் ஒரு பிரச்சினை இருந்தது – அவர்களது பேச்சிலும் உச்சரிப்பிலும் வித்தியாசம். அதனால், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும்கூட ‘அஸ்லம்னா – நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்’ என்று திருத்தமாகச் சொல்லமுடியாமல் தங்களின் வழக்குப்படி ‘ஸபஃனா, ஸபஃனா’ – நாங்கள் மதம் மாறி விட்டோம். மதம் மாறிவிட்டோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனிடையே, நிகழ்வுற்ற பேச்சுவார்த்தை வாதம், விவாதம் என்றாகி அமளியான சந்தர்ப்பத்தில் அந்தக் கோத்திரத்து மக்கள் ஆயுதங்களும் ஏந்திவிட்டனர். ஒரு பகுதியினர் சரணடைய, மற்றவர்கள் முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்டனர். சரணடைந்தவர்களும் மதம் மாறிவிட்டோம் என்று கூறியதைத் தவறாகப் புரிந்துகொண்ட காலித் பின் வலீத், அவர்களில் சிலரைக் கொன்றுவிட்டார். இந்தச் செய்தி மக்காவிலிருந்த நபியவர்களை வந்தடைந்தது. பெரும் அதிர்வையும் சோகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியது அச்செய்தி! நிச்சயமாக அவர்கள் அனுமதிக்காத செயல் அது.

விண்ணை நோக்கிக் கைகளை உயர்த்தியவர்கள், “யா அல்லாஹ்! காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உரத்து இறைஞ்சினார்கள். அதை வலியுறுத்தும் விதமாய் இருமுறை கூறினார்கள்.

பின்னர் கேட்டார்கள் தோழர்களிடம், “உங்களில் யாரும் இதைக் கண்டிக்கவில்லையா?”

“சிலர் தடுத்தார்கள்! ஸாலிம் அவரை எதிர்த்தார்” என்று பதில் வந்தது. அதைக் கேட்டு நபியவர்களின் கோபம் சற்றுக் குறைந்தது.

கைதிகளை கொல்வதற்கு காலித் உத்தரவிட்டதுமே உடனே விரைந்து அவரிடம் சென்று அவரது முகத்துக்கு நேரே, “ஓ காலித்! இது தவறு” என்று அப்பட்டமாய்க் கடுமையாய்க் கோபமாய் எதிர்த்தார் ஸாலிம். இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. காலித், தான் எடுத்த முடிவிலுள்ள நியாயத்தை விவரித்தார். அதிலுள்ள முரண்களையும் தவறுகளையும் எடுத்துவைத்து காலிதைச் சாடினார் ஸாலிம். சூடான பெரியதொரு அப்பிரச்சினையை, கால்நீட்டி அமர்ந்துகொண்டு சூடான பானம் ஏதும் அருந்திக்கொண்டு அவர்கள் இருவரும் அளவளாவிக் கொள்ளவில்லை. பேச்சில் அனல் பறந்தது. ஆத்திரம் தெறித்தது. ஆனால் இதில் அடிநாதமான விஷயம் என்னவெனில் நடந்த செயல்களிலுள்ள முரண்களை இஸ்லாத்தின் பார்வையில்தான் இருவரும் பேசிக் கொண்டார்களே தவிர, ‘நீ யார்? நான் யார்?’, ‘என் அந்தஸ்தென்ன? உன் தகுதி என்ன?’ என்ற எண்ணமோ, தம் கருத்துக்கு இணங்காதவரை கீழாய்ப் பார்க்கும் கேவலமோ இல்லவே இல்லை என்பதுதான்.

‘அத்-தீனு நஸீஹா’ (மார்க்கம் என்பது நலன் நாடுதல்தான்) என்பதைச் சரியாகப் புரிந்து வைத்திருந்தார்கள் அவர்கள். ரலியல்லாஹு அன்ஹும்!

oOo

மீண்டும் யமாமா!

யமாமாவில் பொய்யன் முஸைலமாவுடன் கடுமையான இறுதி கட்டப்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது.தாபித் பின் கைஸ், அன்ஸார்கள் படைப்பிரிவின் தலைவராகவும் ஸாலிம் மௌலா அபீஹுஃதைபா முஹாஜிரீன் படைப் பிரிவின் தலைவராகவும் நின்று கொண்டிருந்தனர். காலித் பின் வலீத் அனைத்துப் படைப்பிரிவுகளின் பொறுப்பை ஏற்றிருந்த தலைமைத் தளபதி. பின்னடைவு ஏற்பட்டிருந்த முஸ்லிம் படைகளைப் பிரமாதமான முறையில் மீண்டும் ஒருங்கிணைத்து போரை வழிநடத்திக் கொண்டிருந்தார் காலித்.

போர் உக்கிரமான நிலையை எட்டியிருந்தது. இன்று அவனை முடிக்காமல் விடுவதில்லை என்ற எண்ணம் முஸ்லிம் படையினர் அனைவர் மத்தியிலும் பரவியிருந்த நேரம். கொந்தளிப்பான உணர்ச்சிகரமான சூழ்நிலை. சகோதரர்கள் அபூஹுதைஃபாவும் ஸாலிமும் ஆரத்தழுவிக் கொண்டார்கள். “இன்று இந்த சத்தியமார்க்கத்திற்காக நாம் உயிர் துறக்கிறோம்; நமக்குக் காத்திருக்கிறது மறுமை. அதுபோதும் நமக்கு. இது சத்தியம்!”

தெளிவான அத்தீர்மானத்துடன் முஸ்லிம்களை நோக்கிப் பெருங்குரலில் கத்தினார் அபூஹுதைஃபா, “யா அஹ்லல் குர்ஆன – குர்ஆனின் மக்களே! குர்ஆனை உங்களது செயல்களால் அலங்கரியுங்கள்”

ஸுப்ஹானல்லாஹ்! என்னெதாரு சுருக்கமான, ஆழமான, அற்புதமான அறைகூவல்? இறைமறையை அழகு நிறத் துணியில் சுற்றி, அலமாரியில் தூக்கி வைத்து அலங்கரித்துப் பார்க்கும் நமக்கு நம் நெற்றிப்பொட்டில் சுத்தியலால் தட்டும் வாசகம் அல்லவா அது! தமது வாள் வெயிலில் பளபளக்க, அதை உயர ஏந்திக்கொண்டு முஸைலமாவின் படையினர் மத்தியில் காற்றைப்போல் கிழித்துக் கொண்டு ஓடினார் அபூஹுதைஃபா.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸாலிம் கத்தினார். “நான் இருக்கும் பகுதியிலிருக்கும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால் குர்ஆனைச் சுமப்பவர்களில் எத்தகைய இழிவானவன் நான்? அதுமட்டும் நடக்கக்கூடாது ஸாலிம். குர்ஆனைச் சுமப்பவர்களில் உன்னதமானவன் நீ என்பதை நிரூபி”

அவ்வளவுதான்! அதன்பிறகு எதிரே தெரிந்த போர்க் களமும் ரண களமும் எதிரிகளும் ஒரு பொருட்டாகவே அவரது கண்களுக்குத் தென்படவில்லை. உயரத்திலிருந்து ஆனந்தமாய் நீரினுள் குதிப்பவனைப்போல் எதிரிகளினுள் பாய்ந்தார் ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா.

உமர் பின் கத்தாபின் சகோதரர் ஸைத் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அப்பொழுது எதிரிகளின் வாளுக்கு இறையாகிப் போனார். அவரிடமிருந்த கொடியைச் சரேலெனக் கைப்பற்றிய ஸாலிம் அதைத் தம் கைகளில் ஏந்திக்கொண்டு போரைத் தொடர்ந்தார். அப்பொழுது எதிரியொருவன் வீசிய வாளுக்கு கொடியை ஏந்தியிருந்த அவரது வலக் கை துண்டானது. இழந்த அங்கத்தை கீழே விட்டுவிட்டு இடக் கையால் கொடியைத் தாவிப்பிடித்து உயரே ஏந்தி வசனம் உரைத்தார் ஸாலிம். வீர வசனமல்ல. சூரா ஆலு இம்ரானின் 146ஆவது இறைவசனம்!

“மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்)பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை – அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்”

தமது அங்கங்களை இழந்து மரணம் அருகில் காத்துக் கொண்டிருக்கும் நொடியில் எத்தகு பொருத்தமான வசனம் அது!

எதிரிகளின் தாக்குதலுக்கு மேலும் இலக்கானார் ஸாலிம். ஒருவழியாக அன்று முஸைலமா கொல்லப்பட்டு, யமாமா போர் ஒரு முடிவிற்கு வந்திருந்தது. களத்தில் வீழ்ந்து கிடக்கும் தம் சகோதரர்களில் உயிருடன் யாரும் இருக்கின்றனரா என முஸ்லிம்கள் தேடிக்கொண்டே செல்ல, மரணத்தின் இறுதித் தருணத்தில் குருதி வழிந்தோடிக் கொண்டு கிடந்தார் ஸாலிம். ஆனால் அவர் வாயிலிருந்து வந்த முதல் கேள்வி, “அபூஹுதைஃபாவுகு என்ன ஆயிற்று?”

“அவர் வீர மரணமடைந்தார்”

“நல்லது. அவருக்கு அருகில் என்னைக் கிடத்துங்கள்”

“இதோ உமக்கு அருகில்தான் அவர் இருக்கிறார் ஸாலிம். இந்த இடத்தில்தான் அவரது உயிரும் பிரிந்திருக்கிறது”

களைப்பான முகத்தில் திருப்தியான புன்முறுவல் படர்ந்தது. அவர் முகத்தில் நிலைத்தது. உயிர் நீத்தார் ஸாலிம் மவ்லா அபீஹுதைஃபா.

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 12 ஏப்ரல் 2011 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment