தோழர்கள் – 57 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) – பகுதி 1

57. உபாதா பின் அஸ்ஸாமித் (عبادة بن الصامت‎) – 1

கிப்தில் நைல் நதியருகே உம்மு தனீன் என்றொரு நகரம். அல்-முகஸ்ஸஸ் என்றும் அதற்கு இன்னொரு பெயருண்டு. அந்நகரைச் சுற்றி அம்ரு பின் அல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் கடுமையான போர் நிகழ்ந்து வந்தது. ஏறத்தாழ நாலாயிரம் முஸ்லிம் வீரர்கள் அடங்கியிருந்த அந்தப் படை, பெரிய அளவிலான எதிரிகளுடன் மாறி மாறி மோதி, குறிப்பிடத்தக்க வெற்றி மட்டும் கிட்டவில்லை. ஒரு கட்டத்தில் கூடுதல் படைவீரர்கள் தேவை என்று முடிவெடுத்தார் அம்ரு. மதீனாவிலுள்ள கலீஃபா உமருக்குத் தகவல் சென்றது.

நாலாயிரம் போர் வீரர்களை அனுப்பி வைத்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. ஒவ்வொர் ஆயிரம் வீரருக்கு ஒரு முக்கியமான தோழர் தலைமை. மொத்தம் நாலாயிரத்து நான்கா? ஆனால், எண்ணிக்கை தப்பாய் அம்ருவுக்கு பதில் கடிதம் எழுதினார்.

‘நாலாயிரம் வீரர்கள் அனுப்பியுள்ளேன். ஒவ்வோர் ஆயிரம் வீரர்களுக்கும் ஒருவர் தலைமை என நான்கு பேரையும் அனுப்பியுள்ளேன். அந்த நால்வருள் ஒவ்வொருவரும் ஓராயிரம் வீரருக்குச் சமம்! எனவே இப்பொழுது உம் வசம் பன்னிரண்டாயிரம் வீரர்கள் உள்ளனர். பன்னிரண்டாயிரம் வீரர்கள் எண்ணிக்கை பற்றாக்குறையினால் தோற்கப் போவதில்லை.’

அம்ரு பின் அல்ஆஸிடம் உள்ள நாலாயிரம் வீரர்கள் போக தாம் அனுப்பிவைத்த நாலாயிரத்து நால்வரை எட்டாயிரமாக உமர் கணக்கிட்டார் எனில், அந்த நான்கு தோழர்களின் பராக்கிரமம் எத்தகையதாய் இருந்திருக்கும்?

அந்த நால்வர் ஸுபைர் இப்னுல் அவ்வாம், மிக்தாத் இப்னுல் அஸ்வத், மஸ்லமா இப்னு முக்கல்லத் (மற்றொரு குறிப்பில் காரிஜா இப்னு ஹுதாஃபா என்று உள்ளது) ஆகிய மூவரோடு உபாதா இப்னு அஸ்ஸாமித். ரலியல்லாஹு அன்ஹும்.

oOo

தோழர் ஹபீப் பின் ஸைத் வரலாற்றின்போது முதல் அகபா உடன்படிக்கை பற்றிப் பார்த்ததை சுருக்கமாக நினைவுபடுத்திக் கொள்வோம். ஒரு புனித யாத்திரை மாதத்தில் யத்ரிபிலிருந்து வந்திருந்த பன்னிரெண்டு ஆண்கள் கொண்ட குழுவினர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகபா பள்ளத்தாக்கில் சந்தித்து இஸ்லாத்தை ஏற்று, உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அது, முதல் அகபா உடன்படிக்கை. மிகச் சொற்ப அளவிலான அந்த முதல் குழுவில் முக்கியமான ஒருவர் உபாதா பின் அஸ்ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு.

அதற்கு அடுத்த ஆண்டு. இம்முறை 73 ஆண்கள், 2 பெண்கள் கொண்ட சற்று பெரிய குழு யத்ரிபிலிருந்து மக்கா சென்று நபியவர்களைச் சந்தித்து உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது. அது இரண்டாம் அகபா உடன்படிக்கை. இந்தக் குழுவிலும் உபாதா பின் அஸ்ஸாமித் ஆஜர்.

இந்த இரண்டாம் உடன்படிக்கையைத் தொடர்ந்து அவர்களுக்கு பன்னிருவரைத் தலைவராக நியமித்தார்கள் நபியவர்கள். முக்கியமான அந்தத் தலைவர்களுள் உபாதாவும் அடக்கம்.

நபியவர்கள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார் என்றால் அது எப்பேற்பட்ட சிறப்பு? அத்தகு அங்கீகாரத்துடன் பிற்காலத்தில் தகுதியில் உயர்ந்த தோழராக உபாதா உருவாகப்போவதற்கான முன்னுரை அகபாவிலேயே பதிவாகிவிட்டது.

அகபா உடன்படிக்கை என்றதும் ஏதோ ஒரு குழு சுற்றுலா சென்றது; ஊர் பெரியவர், தலைவர், பிரபலானவர் ஒருவரைச் சந்தித்தது; கை குலுக்கி குசலம் விசாரித்துக் கொண்டது போலன்றி இஸ்லாமிய வரலாற்றில் அது முக்கியமான மைல் கல். அந்நிகழ்வில் பங்கு பெற்றது பத்ரு போரைவிட தமக்கு எந்தளவு பெருமை என்று கஅப் பின் மாலிக் பேருவகை அடைந்தது அவரது வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் உதாரணம். தவிர,

அந்த உடன்படிக்கையில் ஒளிவு மறைவின்றித் தெளிவாக இருந்த விஷயம், பின்னர் நிகழப்போகும் எந்த தியாகத்திற்கும் தாம் தயார் என்ற உறுதிமொழி. அத்தகு உறுதிமொழியுடன் அங்கிருந்தே ஆரம்பித்துவிட்டது உபாதா பின் அஸ்ஸாமித்தின் அழுத்தமான வரலாறு.

அஸ்ஸாமித் பின் ஃகைஸ், குர்ரத்துல் அய்ன் பின்த் உபாதா எனும் தம்பதியரின் மகன் உபாதா பின் அஸ்ஸாமித். இவர்கள் மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். உபாதாவின் மனைவி, தோழியர் வரலாற்றில் நமக்கு நன்கு பரிச்சயமான உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா. குபாவில் ஈச்ச மரத் தோப்புகளுக்கு இடையே வீடு, அருகிலேயே நீருற்று, மாசுறாத காற்று என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள் உபாதாவும் உம்மு ஹராமும்.

உபாதா பின் அஸ்ஸாமித் இயற்கையிலேயே மிகச் சிறந்த போர் வீரர். ஈமானும் இஸ்லாமும் அதிகப்படியான துணிச்சலை அதற்குத் துணை சேர்த்தன. அது களம் கண்டது. அகபா உடன்படிக்கைளுக்குப்பின் நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்ததும் நிகழ்வுற்ற பத்ருப் போரில் கலந்துகொண்டு ‘பத்ருப் போராளி’ என்ற சிறப்புத் தகுதி அவருக்கு உருவானது. அதன் பிறகு நிகழ்வுற்ற ஏனைய போர்களிலும் நபியவர்களுடன் தவறாது களம் புகுந்தார் உபாதா.

நபியவர்களுக்கு உபாதாவின் குடும்பத்தினர்மீது தனிப்பாசம். அதற்குக் காரணமும் இருந்தது. உபாதாவின் மனைவி உம்மு ஹராமுக்கு ஹராம் இப்னு மில்ஹான் எனும் சகோதரரும் உம்மு ஸுலைம் எனும் சகோதரியும் இருந்தனர். ஹராம் இப்னு மில்ஹான் ஆமிர் இப்னு துஃபைல் எனும் அயோக்கியன் ஒருவனால் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டு இஸ்லாத்திற்காக உயிர் துறந்தவர். அதனால் நபியவர்களுக்கு அந்தக் குடும்பத்தினரிடம் சிறப்பான கரிசனம். ‘நம்பிக்கைக்குரிய சகோதரிகள்’ என்றுதான் உம்மு ஹராம், உம்மு ஸுலைம் சகோதரிகளைக் குறிப்பிடுவார்கள் நபியவர்கள்.

நபியவர்கள் மதீனா வந்தடைந்ததும் அங்கிருந்த மூன்று யூத கோத்திரங்களும் தாங்கள் யாருக்காகக் காத்திருந்தார்களோ அந்த நபி வந்து சேர்ந்துவிட்டாரே என்று மகிழ்ந்து முண்டியடித்து இஸ்லாத்தை ஏற்றிருக்க வேண்டுமில்லையா? ஆனால் பாழாய்ப்போன அவர்களது இன உணர்வு, அரபு குலத்தில் தோன்றிய நபியை ஏற்றுக் கொள்ளவிடாமல் தடுத்தது. சரி போகட்டும் என்று இணக்கமான வாழ்க்கைக்கு அந்த யூதர்களிடம் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இரு தரப்பிற்கும் மிகவும் இணக்கமான உடன்படிக்கை. மிக்க நன்று என்று அத்துடன் அந்த யூதர்கள் ஒழுங்கு மரியாதையாக அதையாவது பின்பற்றி வாழ்ந்திருக்கலாம். என்ன செய்வது? கூடவே பிறந்த குணம்! நிமிர்த்த முடியாத வால். அந்த உடன்படிக்கைக்கு குழிபறிக்கும் துஷ்டத்தனத்தில் மூழ்கினார்கள் அவர்கள். ஒருவர், இருவர் என்றல்ல. மூன்று யூத கோத்திரங்களும். ஒன்றன்பின் ஒன்றாய்.

விளைவு? தன்வினை தன்னைச் சுட்டது! அந்த மூன்று யூத குலங்களும் மதீனாவிலிருந்து துடைத்து எறியப்பட்டன.

இங்கு உபாதாவின் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்வு, யூதர்களின் முதல் அயோக்கியத்தனம். துஷ்டதனத்தின் முதல் நடவடிக்கையில் இறங்கியவர்கள் பனூ கைனுக்கா யூதர்கள். அந்த யூதர்களில் ஒருவன், ஒரே ஒருவன் செய்த ஒற்றைக் காரியம் அவர்களின் அழிவில் சென்று முடிந்தது.

மதீனாவில் பனூ கைனுக்கா யூதர்களுக்கான அங்காடித் தெரு ஒன்று இருந்தது. அங்குத் தமது பொருள்கள் சிலவற்றை விற்பதற்காக முஸ்லிம் பெண்மணி ஒருவர் சென்றார். யூத பொற்கொல்லன் ஒருவனின் கடை. அதன் அருகே குந்தி அமர்ந்து தம் சோலியைப் பார்க்க ஆரம்பித்தார். அப்பொழுது அந்த யூதன் கெட்ட சில்மிஷம் செய்தான். அந்த முஸ்லிம் பெண்மணியின் ஆடை விளிம்பை அவரது பின்புறம் முடிச்சிட்டுவிட்டான். அதை அறியாமல் அந்தப் பெண்மணி எழுந்து நிற்கும்போது, அவரது ஆடை உயர்ந்து அப்பெண்மனி ஒருகணம் அரை நிர்வாணமானார். ஓர் ஆணாக இருந்தாலே இது எத்தகைய அவமானம்? எனும்போது அந்தப் பெண்மணிக்கு எப்படி இருந்திருக்கும்? வீறிட்டு அலறினார் அவர். கைகொட்டிச் சிரித்தார்கள் அயோக்கிய யூதர்கள்.

அப்பொழுது அவ்வழியே வந்து கொண்டிருந்தார் ஒரு முஸ்லிம். அலறலும் சிரிப்பும் கேலியும் கேட்டு விரைந்து வந்தவர், இஸ்லாமிய சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டதும் கோபம் சிவ்வென்று அவரைத் தாக்கியது. அங்கேயே, அப்போதே, அந்த யூதப் பொற்கொல்லனைத் தாக்கி, கொன்றார். அதைப்பார்த்து ஓடிவந்தார்கள் யூதர்கள். அந்த முஸ்லிமைத் தாக்கக் கொன்றார்கள். அதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட முஸ்லிமின் உறவினர்கள் ஓடிவந்து, அங்காடியில் பெரும் சண்டை.

நபியவர்களுக்குத் தகவல் வந்து சேர்ந்தது. அவர்கள் உடனே படை திரட்டிக் கிளம்பிவர, தங்களது கோட்டைகளுக்குள் ஓடிப் புகுந்து, கதவுகளை அடைத்துக் கொண்டனர் பனூ கைனுக்கா யூதர்கள். கோட்டை சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டது. பதினைந்து நாள் நீடித்தது முற்றுகை. பிறகு? வேறுவழியின்றி அடிபணிந்தார்கள் அயோக்கியர்கள்.

எத்தகு நெருக்கமான இஸ்லாமிய உறவை, நட்பை, பாசத்தை அந்த மதீனத்து முஸ்லிம்களிடையே நபியவர்கள் உருவாக்கியிருந்தால், தம் வழியே சென்ற அந்த முஸ்லிம், தம் இஸ்லாமிய சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பொறுக்க இயலாமல் உடனே அந்த யூதனைக் கொன்றிருப்பார்? தம் உயிரை இழந்திருப்பார்? இன்று முஸ்லிம் சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடூரமும் பறிக்கப்படும் கற்பும் கிழிக்கப்படும் கர்ப்பிணிகளின் வயிறும் என்ன சலனத்தை, சஞ்சலத்தை முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தி விடுகிறது?

தங்களின் அப்பட்டமான தோல்வியும் நபியவர்களிடம் அடையப்போகும் தண்டனையும் அவர்களுக்குத் தெளிவாய்த் தெரிந்தவுடன் அவர்களது கண்களுக்கு தென்பட்டதெல்லாம் இரண்டு விடிவெள்ளிகள். அவர்கள் இஸ்லாத்திற்கு முன்பு பனூ கைனுக்காவிடம் நேச அணியினராய் இருந்தவர்களின் இரு தலைவர்கள். அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல், உபாதா பின் அஸ்ஸாமித்.

யத்ரிபின் அரசனாகக் கூடிய நிலையில் இருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை. கிரீடம் அவனது கைக்கு எட்டிய நேரத்தில் அது தலைக்கு எட்டாமல் போகச் செய்தது மக்காவிலிருந்து வந்து சேர்ந்த இஸ்லாமிய மீளெழுச்சி. அதை ஏற்று ஊரே மாறி, பெயரும் மதீனா என மாறி, அஞ்ஞானக் கலாச்சாரங்கள் வீழ்ச்சியுற்றுப் பெரும் மாற்றங்களைக் கண்டவுடன் தன் ஏமாற்றத்தை அடக்கிக்கொண்டு, வேறு வழியின்றி ‘நானும் முஸ்லிம்’ என்று போர்வையைப் போர்த்திக் கொண்டான் அவன். திரையை விலக்கி, அவனுடைய நயவஞ்சக முகத்தை, வேடத்தை நபியவர்களும் மற்றவர்களும் அறிந்துகொள்ள உதவிய முக்கிய நிகழ்வாய் இது அமைந்து போனது.

‘ஏற்கெனவே கிரீடம் போச்சு. இப்பொழுது தனது ஆதரவுக் கோத்திரமும் தொலைந்து போய்விட்டால் தன் கதி நிர்கதியாகிவிடுமே?’ என்ற பெரும் கவலை அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஏற்பட்டுப் போனது. நபியவர்களிடம் சென்றவன் அவர்களது போர்க் கவசத்தைப் பிடித்து உலுக்கி, “எனது நட்புக் கோத்திரத்துடன் நல்லவிதமாய் நடந்து கொள்ளுங்கள்” என்றான்.

கடும் சினம் கொண்ட நபியவர்கள், “என்னை விடு” என்றார்கள்.

“தாங்கள் அவர்களிடம் நல்லவிதமாய் நடந்து கொள்வேன் என்று சொல்லாதவரை விட மாட்டேன். ஒருகாலத்தில் அவர்களின் 700 வீரர்கள் என்னுடைய எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றியிருக்க, அவர்களை ஒரேநாளில் அழித்துவிட நீர் வந்தீரோ? மாறி மாறித் தோன்றும் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கைக் கொண்டவன் நான்”

“அவர்கள் இன்றைய தினம் உன்னுடையவர்கள்” என்று அனுமதியளித்தார்கள் நபியவர்கள்.

உபாதா பின் அஸ்ஸாமித் கஸ்ரஜ் கோத்திரத்தின் பனூ அவ்ஃப் குலத்தைச் சேர்ந்தவர். பனூ அவ்ஃப் குலமும் அப்துல்லாஹ் இப்னு உபையைப்போல் பனூ கைனுக்காவின் நேச அணியாக இருந்தவர்கள்தாம். இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் கட்டிப்பிடித்து, கைகோர்த்து எதரிகளுடன் போரிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பழைய நேசமெல்லாம் இஸ்லாம் என்ற மார்க்கத்தில் புகுந்தபின் இரண்டாம் பட்சம், முதல் முழு அடிபணிதல் அல்லாஹ்வுக்கும் அவனுடைய நபிக்கும் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தவர் உபாதா. எனவே நபியவர்களிடம் நேரடியாகத் தனது நிலையைத் தெரிவித்துவிட்டார். “அல்லாஹ்வின் தூதரே! எனது முழுமையான விசுவாசமும் அடிபணிதலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதுருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் மட்டுமே. இந்த நிராகரிப்பாளர்களிடம் எனது நேச உறவை முறித்துக்கொள்கிறேன்.”

‘உயிர் சுமந்து கொள்ளுங்கள். பெண்டுகளையும் பிள்ளைகளையும் மட்டும் அழைத்துக் கொள்ளுங்கள். மதீனாவை விட்டுக் காலிசெய்து ஓடிப்போய்விடுங்கள்’ என்று பனூ கைனுக்காவுக்கு நபியவர்கள் அவகாசம் அளித்தார்கள். அவர்களை வெளியேற்றவும் அந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டு செய்துமுடிக்கவும் உபாதாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. எல்லாம் போச்சு என்றானதும் தலையைில் கையை வைத்துக் கொண்டு, இறுதி நேரத் தள்ளுபடி சலுகை ஏதாவது கிடைக்குமா என்று முயன்றார்கள் பனூ கைனுக்காவினர்.

“அபூல் வலீத்!” என்று உபாதாவை அழைத்தார்கள். பழைய நட்பின் அடிப்படையில் உபாதாவின் உணர்ச்சியைத் தூண்டும் தந்திரத்துடன், “நாங்கள் உங்களுடைய நேச அணியினர் அல்லவா?”

“ஆம். அதற்கென்ன? அது அப்பொழுது. எப்பொழுது நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக உடன்படிக்கையை முறித்து சண்டையைத் துவக்கிவிட்டீர்களோ, அக்கணமே நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றேன். ‘அல்லாஹ்வின் தூதரே! இக்கணமே நான் பனூ கைனுக்காவுடனான எனது ஒட்டு, உறவு அத்தனையையும் ஒட்டுமொத்தமாகக் குடிமுழுகிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டேன்.”

அதைக் கேட்டு இடைமறித்தான் அப்துல்லாஹ் இப்னு உபை. “உமது நேச அணியினருடன் உறவை முறித்துக் கொள்வதா? அது உமது கையில் இல்லை” என்றவன், முந்தைய காலத்தில் பனூ கைக்கா தமக்கும் உபாதாவின் குலத்தினருக்கும் எவ்வகையிலெல்லாம் உதவியிருக்கிறார்கள் என்பதை நினைவூட்டித் தொடர்ந்து நைச்சியம் பேசிகொண்டிருந்தான்.

‘நிறுத்து, நிறுத்து’ என்று முத்தாய்ப்பாக பதில் அளித்தார் உபாதா. “அபூல் ஹுபாப். நீ சொல்வதெல்லாம் சரிதான். இஸ்லாமிய மார்க்கம் அத்தகைய பழைய ஒப்பந்தங்களை முறித்துவிட்டது. அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். நீ பிடித்துத் தொங்கும் பழைய உடன்படிக்கையின் முடிவு இருக்கிறதே, அதன் முடிவு நாளை தெளிவாகும்.”

அந்தப் பருப்பும் வேகவில்லை என்பதை உணர்ந்ததும் கால அவகாசத்தையாவது நீட்டிக்க அந்த யூதர்கள் முயன்றனர். ‘இதோ பார், இந்த மூட்டையின் முடிச்சு சரியாக விழ மறுக்கிறது. அதோ பார் அவனுக்கு ரெண்டு நாளாய் தும்மல் நிற்கவில்லை’ என்பதுபோல் அபத்தம் பேசி “சிறிது அதிகமான அவகாசம் வழங்கு. பயண ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கெல்லாம் உபாதா மசியவில்லை. “உங்களுக்கு மூன்று நாள் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான் அவகாசம். அதுதான் அல்லாஹ்வின் தூதரின் கட்டளை. அதற்குமேல் ஒரு மணி, சில நொடி, என்றெல்லாம் எதுவும் கிடையாது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

அத்துடன், மதீனாவில் பனூ கைனுக்கா கோத்திரம் ஒழிந்தது.

oOo

உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி புரிந்தபோது, யஸீத் என்பவர் சிரியாவில் கவர்னராயிருந்தார். இவர் முஆவியாவின் மகனான யஸீத் அல்லர்; அபூஸுஃப்யானின் மகனும் முஆவியாவின் சகோதரருமான யஸீத். அவருக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது. யமன் மக்கள் நபியவர்களுக்குக் கோரிக்கை அனுப்பியதைப்போன்ற நெருக்கடி. கலீஃபா உமருக்கு ஒரு கடிதம் எழுதினார் அவர். “அமீருல் மூஃமினீன்! மக்கள் சிரியாவின் நகரங்களில் வந்து குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். நகரங்கள் பெருகி விரிவடைந்து வருகின்றன. இந்த மக்களுக்கெல்லாம் குர்ஆன் போதிக்கவும், மார்க்க சட்ட திட்டங்கள் போதிக்கவும் ஆசான்கள் தேவைப்படுகிறார்கள். தயவுசெய்து அதற்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி உதவுங்கள்”

ஐந்து தோழர்களை அழைத்தார் உமர். முஆத் பின் ஜபல், உபாதா இப்னு அஸ்ஸாமித், அபூஅய்யூப் அல்அன்ஸாரி, உபை இப்னு கஅப், அபூதர்தா – ரலியல்லாஹு அன்ஹும். “அல்லாஹ்வின் கருணை உங்கள்மேல் பொழிவதாக! சிரியாவிலுள்ள உங்களின் சகோதரர்கள் என்னுடைய உதவியைக் கேட்டிருக்கிறார்கள். அங்குள்ள மக்களுக்குக் குர்ஆனும் நம் மார்க்கமும் போதிக்க ஆட்கள் தேவைப்படுகிறார்கள். உங்களிலிருந்து மூன்று பேரை நீங்களே தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள். அல்லது சீட்டில் பெயர் எழுதிக் குலுக்கித் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இல்லையா, உங்களில் மூவரை நான் தேர்ந்தெடுப்பேன்”

“இதில் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுக்க என்ன இருக்கிறது? அபூஅய்யூப் மிகவும் வயது முதிர்ந்தவர். உபை இப்னு கஅப், இயலாத நிலையில் உள்ளார். ஆகவே நாங்கள் மூவரும் செல்வதற்குத் தயார்,” என்று ஏகமனதாகத் தெரிவித்துவிட்டார்கள் மற்ற மூவரும்.

மகிழ்வடைந்த உமர் அவர்களுக்குக் கட்டளைகள் வழங்கினார். “பணியை ஹிம்ஸில் துவங்குங்கள். அங்குப் பணி திருப்திகரமாய் முடிந்ததும், உங்களில் ஒருவர் அங்குத் தங்கிக் கொண்டு, ஒருவர் டமாஸ்கஸ் நகருக்கும் மற்றொருவர் ஃபலஸ்தீனுக்கும் செல்லவும்”

“உத்தரவு கலீஃபா!” என்று அந்த மூவர் அணி கிளம்பி ஹிம்ஸ் சென்றடைந்தது. பணி துவங்கியது. சிலகாலம் கழித்து உபாதா இப்னு அஸ்ஸாமித் அங்குத் தங்கிக்கொள்ள, அபூதர்தாவும் முஆதும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

ஹிம்ஸ் மக்களுக்கு உபாதா முக்கியமான அறிவுரை வழங்கினார். “நிகழ்காலம், இவ்வுலகம் என்பதெல்லாம் நிலையற்றவை. மறுமையோ சத்தியமான ஒன்று. இவ்வுலகிற்கு அதற்குரிய மக்கள் உண்டு. போலவே மறுவுலகிற்கு அதற்குரிய மக்கள் உண்டு. நீங்கள் இவ்வுலகத்திற்கான மக்களாக இல்லாமல் மறுவுலகத்திற்கான மக்களாக ஆகிவிடுங்கள். ”

அவை காலம், எல்லை தாண்டிய வாசகங்கள். மட்டுமின்றி இக்காலத்தில் நமக்கு மிக அதிகம் தேவைப்படும் அறிவுரை.

பின்னர் ஃபலஸ்தீனுக்கு இடம்பெயர்ந்தார் உபாதா. அங்கு அவரை ‘காழீ’ எனப்படும் இஸ்லாமிய நீதிபதியாகப் பணியாற்றும்படி பணித்தார் உமர். ஃபலஸ்தீனில் முதன்முதலாக நீதிபதி நியமிக்கப்பட்டது அப்பொழுதுதான். பட்டம், பதவி, செல்வாக்கு என்ற அடிப்படையில் அக்காலத்தில் நீதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அப்பட்டமான மார்க்க அறிவும் அம்மனிதரின் இறை பக்தியும் உமரின் அளவுகோல். அத்தகு சிறப்புத் தகுதி உபாதா பின் அஸ்ஸாமித்திடம் அமைந்திருந்தது. இவ்வுலகின் மீது பற்றோ, பாசமோ அற்ற ஆழ்ந்த ஆன்மீக வாழ்க்கையைத் தமதாக்கிக் கொண்டிருந்தார் அவர். அவற்றையெல்லாம் நன்கு அறிந்திருந்தார் உமர். நியமித்துவிட்டார்.

ஃபலஸ்தீனில் நீதிபதி, அங்குள்ள மக்களுக்குக் குர்ஆன் கற்பித்தல் என்று உபாதாவின் பணி துவங்கியது. நன்மையதை ஏவ வேண்டும்; தீமையதைத் தடுக்க வேண்டும் என்பதில் உபாதா படு முனைப்பு. ‘அவர்கள் அது சொல்வார்களே, இவர்கள் இது சொல்வார்களே’ என்ற கவலையெல்லாம் அவருக்கு அந்நியம். அதனால் பின்னாளில் ஸிரியாவின் ஆளுநராக இருந்த முஆவியாவுடன் கடும் அபிப்ராயபேதம் ஏற்பட்டுவிட்டது. “நீங்கள் இருக்கும் நாட்டில் நான் தங்கியிருக்க முடியாது” என்று உபாதா மதீனா திரும்பிவிட்டார்.

“என்ன காரணத்தினால் மதீனா திரும்பி விட்டீர் உபாதா?” என விசாரித்தார் உமர்.

உபாதாவின் பதிலைக் கேட்டுவிட்டு, “அவருக்கு உம்மீது அதிகாரம் கிடையாது. திரும்பிச் சென்று உங்களது பணியைத் தொடருங்கள். உம்மைப் போன்றவர்கள் இல்லாத ஊர் என்ன ஊர்?” என்று சொல்லி அவரைத் திருப்பி அனுப்பி வைத்தார் உமர். உபாதாவைப் போன்ற தோழர்கள் மக்களின் நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் ஈடேற்றத்திற்கும் வெகு முக்கியம் என்பதில் உமர் தீவிரமாயிருந்தார்.

கல்வி ஆசான், இஸ்லாமிய நீதிபதி, ஆன்மீகத்தில் திளைத்த வாழ்க்கை என்றெல்லாம் ஒருவரைப் பற்றி படித்ததும் நமக்கு ஒரு தோற்றம் ஏற்படுமில்லையா? அத்துடன் சேர்த்து வாள், அம்பு, ஈட்டி சகிதமான ஒரு போர் வீரரை கற்பனை செய்வது நமக்கு பெரும் சிரமம். ஆனால், தோழர்கள் வாழ்க்கை ஓர் இலக்கணம். அன்பும் அறனும் உள்ளடங்கிய வாழ்க்கையில் வீரமும் வாளும் ஒவ்வாமை என்று அவர்கள் விலகி விடவில்லை. அறப்போர் அவர்கள் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த அம்சம்.

ஹிஜ்ரீ 15ஆம் ஆண்டு. கைஸரிய்யாவைக் (Caesarea) கைப்பற்ற முஆவியா பின் அபீஸுஃப்யானிடம் பொறுப்பை ஒப்படைத்தார் உமர். கடிதமொன்று எழுதினார். “உம்மை கைஸரியாவுக்குப் பொறுப்பாக்கியுள்ளேன். அங்குச் செல்லவும். அவர்களுக்கு எதிராய் அல்லாஹ்வின் உதவியை நாடவும். அதிகமதிகம், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்’ (ஆற்றலும் வலிமையும் உயர்ந்தோனும் மகத்துவமுடையவனுமான அல்லாஹ்விடமிருந்தே) என்று சொல்லுங்கள்”

முஆவியா அந்நகரை முற்றுகையிட்டார்.

பத்திரமாக உள்ளே பதுங்கிக் கொண்டார்கள் அம்மக்கள். ஆனால் அவ்வப்போது சிறு குழுவாய் வெளியில் வருவார்கள். சண்டை நடக்கும். திரும்பி உள்ளே ஓடிவிடுவார்கள். இப்படியாக பலமுறை நடந்தது. முற்றுகை நீடித்துக் கொண்டிருந்தது.

முஸ்லிம் படைகளின் வலப் பிரிவுக்கு உபாதா இப்னு அஸ்ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு தலைமை. தள்ளிப்போய்க் கொண்டிருந்த வெற்றியும் நீடித்து வந்த முற்றுகையும் அவருக்கு சகிக்க இயலாமல் போனது. ஒரு கட்டத்தில் தம் படைப் பிரிவினரிடம் கடிந்து பேசினார் உபாதா. “உங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். பாவங்களுக்கு அஞ்சுங்கள். தவிர்த்துக் கொள்ளுங்கள்.”

இன்று இஸ்லாமிய சமூகத்தின் தோல்விக்கும் அவல நிலைக்கும் காரணமாக என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறோமே, நம் முதுகை நாம் இன்னும் பார்த்துக்கொள்ளவே இல்லை.

அதற்கு அடுத்து பைஸாந்தியர்கள்மீது ஒரு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில் எதிரிகள் பலர் கொல்லப்பட்டாலும் வெற்றி எட்டாக் கனியாகவே இருந்தது. தம்முடைய தாக்குதலில் தாம் நினைத்த இலக்கை எட்ட முடியாதது உபாதாவுக்கு பெரும் திகைப்பு. தம்மிடத்திற்கு மீண்டும் திரும்பிய உபாதா, தம் தோழர்களை ஊக்குவித்து உரையாற்றினார்.

“ஓ முஸ்லிம்களே! நபியவர்களிடம் பிரமாணம் அளித்த இளவயதினருள் நான் ஒருவன். நீண்ட காலம் வாழ்பவர்களுள்ளும் நான் ஒருவன். உங்களுடன் இணைந்து நான் இந்த எதிரியிடம் போரிடும்வரை உயிர் வாழ வேண்டும் என்று அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். எவன் வசம் என் ஆன்மா உள்ளதோ, அவன்மீது ஆணையாகக் கூறுகிறேன். முன்பெல்லாம் இறை நம்பிக்கையாளர்கள் நாம் இணைந்து, நிராகரிப்பாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தால், அவர்கள் நம்மை விட்டுத் தப்பி ஓடாமல் இருந்ததே இல்லை. நாம் வெற்றியடையாமல் இருந்ததில்லை.

“இன்று என்ன ஆயிற்று உங்களுக்கு? நீங்களும் அவர்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களால் அவர்களை வெருண்டோடச் செய்ய முடியவில்லை. அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் உங்களைக் குறித்து இரு விஷயங்களில் அச்சமுறுகிறேன். ஒன்று, நீங்கள் போர் வெகுமானத்திலிருந்து களவாடியிருக்க வேண்டும்; அல்லது அல்லாஹ்வுக்கான போர் இது என்று கருதாமல் உங்களது நோக்கத்தில் நேர்மையின்றி உங்களது தாக்குதல் அமைந்திருக்க வேண்டும்.

“அல்லாஹ்வுக்காக உயிர்த் தியாகம் புரிய வேண்டும் என்று மனதார விரும்புங்கள். நான் முன்னணியில் நிற்பேன். அல்லாஹ் எனக்கு வெற்றி அளித்தால் இவ்விடத்திற்குத் திரும்புவேன். நான் திரும்பாவிட்டால் அவன் என்னை உயிர்த் தியாகி ஆக்கியிருக்கவேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள்.”

அவ்வளவுதான். வீரத்தைத் தட்டி எழுப்பும் ஆழமான, சுருக்கமான உரை.

பின்னர் முஸ்லிம்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே களத்தில் ஆக்ரோஷ மோதல் துவங்கிவிட, அவர்களை நோக்கி விரைந்தார் உபாதா. முஸ்லிம்களின் படையில் இடம்பெற்றிருந்த உமைர் இப்னு ஸஅத், உபாதா விரைவதைக் கண்டதும், “இதோ பாருங்கள் நம் படைத் தலைவரின் துணிவை. அவரைப் பின்பற்றுங்கள்” என்று தம் பங்கிற்கு ஊக்குவித்து தாமும் பாய, படையணியில் புத்துணர்வு தோன்றிப் பரவியது. அது களத்தில் தீப்பற்றியது.

பொங்கியெழுந்த வீரம் களத்தை அதகளப்படுத்தியது. இம்முறை சரமாரியாகத் தாக்கி முன்னேறிச் சென்று கொண்டே இருந்தார்கள் முஸ்லிம்கள். அந்தத் தாக்குதல் எதிரிகளை நிலைகுலைய வைத்து, இறுதியில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி முஸ்லிம்கள் வசமானது. எதிரிப் படையினர் எண்பதாயிரம் கொல்லப்பட்டிருந்தனர்; இருபதாயிரம் படை வீரர்கள் தப்பி ஓடியிருந்தனர். கலீஃபா உமருக்கு வெற்றிச் செய்தி சொல்லி அனுப்பப்பட்டது.

இவ்விதம் பைஸாந்தியர்களின் பகுதி ஒவ்வொன்றாக முஸ்லிம்கள் வசமாக, ஹிம்ஸ் பகுதியில் இராணுவப் பிரிவை பலப்படுத்தினார் உமர். ஸிரியா நாட்டில் 36 ஆயிரம் குதிரை வீரர்கள் ஒரே நேரத்தில் கிளம்பிச் செல்லும் அளவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் அமைந்தன. படை அரண்கள் ஒவ்வொன்றிலும் இக்குதிரைகள் மேய்வதற்கென்றே பெரும் நிலப்பகுதி ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு குதிரையின் தொடையிலும் “ஜெய்ஷ் ஃபீ ஸபீலில்லாஹ் – இறைப்பாதையில் அறப்போராளிப் படை” என்று அடையாளம்.

இந்தப் படை அரண்களை நிர்வகிக்க பொருத்தமான தலைமை வேண்டுமில்லையா? ஹிம்ஸ் பகுதியில் இவ்விதம் அமைக்கப்பட்டிருந்த படை அரணை நிர்வகிக்க முக்கியமான தோழர்களை அடுத்தடுத்த நிலையில் நியமித்திருந்தார் உமர். அபூஉபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ். அவருக்கு அடுத்து உபாதா இப்னு அஸ்ஸாமித், அய்யாத் இப்னு ஃகனம், ஸஅத் இப்னு ஆமிர் இப்னு ஹுதைம், உமைர் இப்னு ஸஅத், அப்துல்லாஹ் இப்னு கரத்.

இவ்விதம் ஸிரியாவில் சீர்திருத்தம், அதற்கு அப்பால் போர் என்று தம் பணிகளில் உபாதா முனைப்பாய் இருந்து வந்த போதுதான் எகிப்திலிருந்து கலீஃபாவுக்குக் கடிதம் வந்தது.

அடுத்து எகிப்திற்கு நகரும் காட்சிகளை நாமும் பின் தொடர்வோம்.

oOo

தொடரும், இன்ஷா அல்லாஹ்!

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 22 மார்ச் 2014 அன்று வெளியானது

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment