கிறிஸ்து பிறப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைசிறந்த நாகரிகத்தில் மூழ்கிப்போயிருந்த பண்டை எகிப்து தேச சரித்திரத்தில் பலப்பல
முறை அரசியல் விவகாரங்களில் மிகுந்த சங்கடங்களெல்லாம் விளைந்திருக்கின்றன என்பதைச் சரித்திர மாணவர்கள் மறந்திட முடியாது. மத்தியதரைக் கடலைச் சூழ்ந்துள்ள அத்தனை நாடுகளையும்விட இத்தேசமே தலைதூக்கி நின்றமையால், இத்தேசத்தில் அடிக்கடி ஏதாவது காரணத்தை வைத்துக்கொண்டு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். சமீபத்தில் நடந்த இரண்டாவது உலக மஹா யுத்தத்தில் (அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட வரலாற்று நாவல் இது என்பதை நினைவில்கொள்க) வடஆப்பிரிக்காவும் எகிப்தும் எப்படிப்பட்ட கேந்திர ஸ்தானத்தை வகித்திருந்தன என்பதையும், சமீபகால சுயஸ் கால்வாய்த் தகராறு, எகிப்தின் அரசியல் குழப்பங்கள் முதலியவற்றையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே, அத்தேசத்தில் அடிக்கடி நெருக்கடி ஏற்படுவதும், அந்நெருக்கடி தானே தீருவதும் வழக்கமாகவே இருந்துவந்தன. ஆனாலும், சுல்தான் அல் மலிக்குல் காமில் மரணமடைந்த அந்தக் கி.பி. 1238-ஆம் ஆண்டில் விளைந்த நெருக்கடி மிகவும் பிரதானமானதும், முக்கியத்துவம் வகிக்கக்கூடியதும், பெரும் புரட்சிகளுக்குக் காரணமாய் இருந்ததுமான சம்பவம் என்பதை எவராலும் மறுத்துரைப்பது இயலாது.
அந்த அல் மலிக்குல் காமில் ஐயூபி சுல்தான் ஹிஜ்ரீ 635, ரஜப் மாதம், 21-ஆம் தேதியன்று (8-3-1238) மரணமடைந்தார். அவருக்கு இரு புத்திரர்கள் இருந்தார்கள். மிஸ்ரின் ஸல்தனத்தில் அமீர்கள் எவ்வளவு உயரிய செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள் என்பதை நாம் முன்னமே நன்கறிந்துள்ளோம். ஆளுகிற மன்னன் உயிருடன் இருக்கையில் இந்த அமீர்கள் அடக்கமாயிருந்தாலும், அவன் இறந்துவிட்டால், இவர்களே எதிர்காலத்தைச் சமாளிக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள்; அதாவது, அரசாங்கத்துக்கு அடுத்த மன்னர் எவர் என்று நிர்ணயிக்கும் பொறுப்பு இந்த அமீர்களிடமே இருந்தது.
எனவே, சுல்தான் மலிக்குல் காமில் ஐயூபிக்குப் பிறகு எவரை அடுத்த சுல்தானாக்குவது என்ற பிரச்சினை எழுந்தது; பிரச்சினை ஏன் எழுந்ததென்றால், காலஞ்சென்ற சுல்தானின் மூத்த குமாரர் அபூபக்கர் என்பவர் ராஜ்ய பாரத்தைத் தாங்குவதற்குச் சற்றும் அருகதை வாய்க்கப்பெற்றில்லை என்று அமீர்கள் கருதியதனாலேதான். ஆனால், மூத்தவரை விட்டு, இளையவரை ஆட்சியில் அமர்த்துவது என்பதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர்கள் கலந்தாலோசித்தார்கள்.
இறுதியாக, வருவது வரட்டுமென்று துணிந்து, அந்த மூத்த குமாரராகிய அபூபக்ரையே அரசராக்கினார். என்னெனின், அபூபக்கர் ஆட்சியை நிர்வகிக்க அருகதை இல்லாதவராயிருந்தாலும், தாங்களே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளலாமென்று அவர்கள் தைரியமாயிருந்ததால், அவரையே சுல்தானாக்கி விட்டார்கள். அவர் அரசரானதும் தம் பாட்டனாரின் பட்டமாகிய ஆதில் ஐயூபி என்னும் பெயரையே தமக்கும் சூட்டிக் கொண்டார். எனவே, சரித்திரத்தில் இவரை ‘இரண்டாவது ஆதில் மன்னர்’ என்று அழைக்கின்றனர்.
இந்த ஏற்பாட்டைப் பொதுவாக எல்லா அமீர்களும் அங்கீகரித்தனர் என்றாலும், நம்முடைய கிழ அமீர் தாவூத் மட்டும் அதற்குச் சம்மதிக்கவே இல்லை. ஏனெனில், பலம் பொருந்திய சுல்தானை அரியாசனத்தில் அமர்த்திவைத்து, அவரின் கீழே அமீர்கள் அதிகாரம் செலுத்த வேண்டுமேயொழிய, உதவாக்கரையான பேர்வழியை உச்சியில் அமர்த்திவிட்டு, அவர் பெயரைப் பயன்படுத்தி அமீர்கள் ஆட்சியைச் செலுத்துவதென்பது அறவே தகாத காரியம் என்று அவர் வாதித்தார். அரசன் சிறப்புடனிருப்பதால்தான் அமீர்கள் கௌரவிக்கப்படுகின்றனர் என்றும், கூறுகெட்டவன் தலைக்கு மேலேயிருந்தால், அதனால் அமீர்களின் கண்ணியந்தான் மிகவும் இழிந்துவிடுமென்றும் அவர் விளக்கிக் காண்பித்தார். கிழவர் சொல்லுகிறதை வாலிபர்கள் எங்கே அங்கீகரிக்கப் போகிறார்கள்! தாவூத் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஏனைய எல்லா அமீர்களும் ஒன்றாய்ச் சேர்ந்துகொண்டு, அபூபக்ரை மன்னராக உயர்த்தியே தீர்த்துவிட்டபடியால், இனித் தாம் அரசியல் விவகாரங்களில் தலையிடுவது கூடாதென்று முடிவுகட்டி அரண்மனையை வெறுத்துத் தம் மாளிகைக்குள்ளேயே தங்கிவிட்டார். மற்ற அமீர்களும் கிழவன் வீடடங்கியது நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டார்கள். ஏனென்றால், இனித் தங்களிஷ்டம் போலே அவர்கள் நடக்கலாமல்லவா?
அமீர் தாவூதின் மாளிகையில் அவருக்கு ஒரே ஒரு மனச் சாந்தியை அளிக்கக் கூடியவளாகக் காணப்பட்டவள் ஷஜருத்துர்ரேதான். ஏனெனில், அவர் அன்று அவளுடைய இனிய மொழிகளையும், பேச்சு வன்மையையும், புத்திக் கூர்மையையும் கண்டு மெய்ம்மறந்துபோய்ப் பத்தாயிரம் தங்க தீனார்களை யூசுபுக்கு அள்ளிக்கொடுத்து, அவளை அடிமைப்பெண்ணாக வாங்கிக்கொண்டிருந்தார். அன்று முதலே அந்த அமீருக்கு இருந்த கவலையெல்லாம் காற்றாய்ப் பறந்துவிட்டன. அவர் ஷஜருத்துர்ரை அடிமைப் பெண்ணென்றே பாவிக்காமல், அவளைத் தம்முடைய சொந்த மகள் போலவே மதித்து வந்தார். அவளும் அந்த அமீரிடம் வந்தது முதல் தன் வாழ்க்கையில் புதிய சகாப்தத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவே மகிழ்ச்சியுற்றதுடன் அவருடைய பழக்கவழக்கங்களையும் வெகுசீக்கிரமே உணர்ந்துகொண்டு, அவர் எதைச் செய்ய வேண்டுமென்று நாடுகிறாரோ, அதை முற்கூட்டியே செய்யும் திறனையும் பெற்றுக்கொண்டுவிட்டாள். இதனால் அந்த அமீருக்கும் ஷஜருத்துர்ருக்கும் இடையேயிருந்த அன்பு அளவு கடந்து முற்றிப்போய் விட்டபடியால், அவருக்கு அவளை ஒரு வினாடியும் பிரிந்திருக்க முடியவில்லை.
எனவே, சுல்தான் அல் மலிக்குல் காமில் காலஞ்சென்றபோது, ஷஜர் அமீரின் அடிமைப்பெண்ணாக அமர்ந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இதற்குள்ளே அவள் அந்த அமீரின் வாயிலாக மிஸ்ர் நாட்டு ஆட்சியின் பூர்வசரித்திரம் முழுமையையும் மிக நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள வசதி ஏற்பட்டுவிட்டது. அந்த அமீருக்கும் மனச்சாந்தியளிக்கத் தக்கவர் வேறு யாருமே கிடையாதாகையால், தமதுள்ளக் கிடக்கையை எல்லாம் அந்த வளர்ப்புப் பெண்ணிடமே கொட்டிவந்தார். அவளும் தனது புத்திக் கூர்மையின் ஆற்றலைக் கொண்டு அவருக்கு எப்பொழுதுமே மனநிம்மதியையும் மாபெரும் அமைதியையும் கொடுத்து வந்தாள். இதற்குள்ளே அவள் பருவமடைந்து விட்டமையால், நன்றாய் வளர்ந்து, சகல வனப்பும் ஒருங்கே பொருந்திய எழில் மிக்க நல்ல கட்டழகியாக மின்னிக்கொண்டிருந்தாள்.
சிறிய வயதினளாயிருப்பினும், மிகப் பெரிய அறிவை அவள் பெற்றிருந்ததால், அமீர் தமக்கு ஏற்படும் கஷ்டங்களையெல்லாம் அவளிடம் எடுத்துக் கூறிப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது வழக்கம். அப்படித் தீர்க்கமுடியாத சஞ்சலங்கள் எழுந்தாலும், மனச்சாந்தியைப் பெற்றுக் கொள்வதற்காகவாவது அவளிடம் பிரச்னையைச் சொல்லுவதுண்டு. அவள் இசையிலும் நல்ல திறமை வாய்க்கப் பெற்றிருந்தமையால், சமயாசமயங்களில் மதுரமான கீதங்களைப் பொழிந்தும் அவரது புண்பட்ட மனத்தைத் தேற்றுவது வழக்கம். அவள் குர்ஆன் முழுதையும் மனனம் பண்ணியிருந்த ஓர் உயர்தரக் “காரீ”யாய் இருந்து வந்தமையால், அத் தெய்வத் திருமறையிலிருந்தும் அழகிய கருத்தமைந்துள்ள வசனங்களை இனிமையாய் ஓதி, அவருக்கு ஆறுதலை அளிப்பாள். இவ்வண்ணமாக அவர் பொழுது கழிந்தவண்ணம் இருந்தது.
அமீர் தன்னை விலைகொடுத்து வாங்கிய எஜமானர் என்பதைவிட, அவருடைய வயதுக்கும், குணப் பெருமைக்கும், முதிய தன்மைக்குமே ஷஜர் அதிக மரியாதை காட்டிவந்தாள். தன்னிடம் அவர் அதிக அன்பு பூண்டுவிட்டார் என்பதற்காக அவள் அதைத் தவறாகப் பயன்படுத்தியதில்லை. அவர் மனம் சுடும்படியோ, அல்லது அவர் முகம் சுண்டும்படியோ அவள் ஒரு கடுமொழிகூடக் கூறியதில்லை. இல்லையென்றால், கேவலம், ஓர் அடிமைப் பெண்ணாயிருப்பவள் அமீருக்கு மிக நெருக்கமான நம்பிக்கைக்குரியவளாய் மாறுவது இலேசான காரியமென்றா எண்ணுகிறீர்கள்? அதிலும், மிஸ்ர் தேசத்திலே, ஐயூபிகளின் ஸல்தனத்திலே ஓர் அமீரின் இல்லத்திலே பெண்ணடிமை எவளேனும் ஒருத்தி மிகவும் உயரிய அந்தஸ்தில் வைத்துப் பாராட்டப்பட்டு வந்தாளென்றால், அவள் ஷஜருத்துர் மட்டும்தான் என்பதிலிருந்தே அவளுடைய குண விசேஷப் பெருமைகளை என்னென்று வருணிப்பது?
அபூபக்ர், இரண்டாவது ஆதில் மன்னராக அரியாசனம் ஏற்றப்பட்ட அந்தக் குதூகல தினத்திலே நம்முடைய அமீர் தாவூத் அரச சபைக்குச் செல்லாது தமது மாளிகையின் உள்ளேயே ஒரு மூலையில் குந்திக்கொண்டு, நிதானமாக ஹுக்காவை இழுத்து இழுத்துச் சுவைத்து விட்ட புகையின் அலைச் சுருளையே அதிகம் கவனித்துக்கொண்டிருந்தார். அவருக்கருகிலே ஷஜருத்துர் அமர்ந்துகொண்டு, தன் சாரங்கி வாத்தியத்தின் தந்திகளைச் சுதி கூட்டிக்கொண்டும், தட்டித் தட்டிப் பார்த்துக்கொண்டும், முறுக்காணிகளை இப்படியும் அப்படியும் திருகிக்கொண்டும் இருந்தாள். அன்று பட்டமேற்பு விழாவின் காரணமாகக் காஹிராநகர் முழுதுமே சந்தோஷ ஆரவாரத்தால் அமளிகுமளியில் மூழ்கித் திளைத்திருக்க, இந்த அமீரின் மாளிகை மட்டும் பொலிவிழந்து, சந்தடியடங்கித் தூங்கிக்கொண்டிருந்தது அதிசயமாகவே பலருக்குத் தோன்றிற்று. எனினும், எவருமே அதனைப் பொருட்படுத்தவும் இல்லை; அல்லது, ஒரு குறையாகப் பேசிக் கொள்ளம் இல்லை. அமீர் தாவூத் அரசவை செல்லவில்லை என்பதற்காக அரசரின் முடிசூட்டு விழா ஒத்திப்போடப்படவும் இல்லை.
பொழுது புலர்ந்து பத்து நாழிகை ஆகியிருந்தது. அப்பொழுது திடீரென்று நகாராக்களின் அதிர வைக்கும் கோஷங்களும், முரசுகளின் மும்முர முழக்கங்களும், “கூனல் முதுகு ஒட்டகமேல் கொட்டுகின்ற டமாரம்” குமுறிய இடிகளும் கேட்டன. தந்திகளை மீட்டிக்கொண்டே இருந்த ஷஜரின் மெல்லிய, மருதோன்றிச் சாயமேற்றிய விரல்கள் சட்டெனச் செயலிழந்தன.
“தாதா! இஃதென்ன பேரொலி?” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் நம் ஷஜர்.
“குழந்தாய்! அதுதான் சுல்தானின் ஜெயபேரிகை. அரசர் முடிசூட்டு விழாவின்போதும், யுத்த ஆரம்பத்தின் போதும், வெற்றி கிடைத்த பின்பும் அந்தப் பேரிகை இந்த மாதிரி முழங்குவது வழக்கம். இன்று இளைய சுல்தான் அபூபக்ருக்குப் பட்டம் சூட்டப்படுகிறபடியால், அது முழங்குகிறது.”
“முடிசூட்டு விழாவா! அப்படியானால், தாங்கள் ஏன் போகவில்லை?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் அந்த ஷஜர்.
அமீர் தமது பொக்கை வாயைப் புன்முறுவல்கொண்டு அழகுபடுத்திக் கொண்டார். “எனக்கு அங்கென்ன வேலையிருக்கிறது?” என்று சர்வசாதாரணமாய்ச் சொன்னார்.
“அங்கென்ன வேலையிருக்கிறதா? அமீர்களுக்கெல்லாம் தலையமீராய் விளங்கும் மிகப் பெரிய அமீராகிய தங்களை விட்டுவிட்டா இந்த விழாக் கொண்டாடுகிறார்கள்! எனக்கொன்றும் புரியவில்லையே?”
“ஆம். நான் அமீர்களுக்கெல்லாம் தலையமீராய் விளங்கும் மிகப்பெரிய அமீராய் இலங்குவதால்தான் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை! அவர்களெல்லாம் சேர்ந்து கொண்டு ஒரு வெறும் பொம்மையை அரியாசனத்தின்மீது அமர்த்துவதை நான் ஏன் போய்ப் பார்க்கவேண்டும்?”
அல் மலிக்குல் காமில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த காலத்திலேயே இந்த இளைய சுல்தான் அபூபக்ரைப் பற்றி அவர் இவளிடம் அடிக்கடி கூறியிருப்பதை இவள் நினைவு கூர்ந்தாள்.
“அப்படியானால், அந்த அமீர்களுக்கு நீங்கள் ஏன் அறிவுறுத்தக் கூடாது?”
“என்னால் ஆனதெல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டேன். மிஸ்ரின் ஸல்தனத் இம்மாதிரி குட்டிச்சுவராய்ப் போகவேண்டுமென்று அந்த அல்லாஹுத் தஆலாவே நாடியிருக்கிறான் போலும்! அதனால்தான் என்பேச்சு எவர் செவியுள்ளும் ஏறவில்லை. இன்று மட்டும் நான் என் வாலிப தசையில் இருந்து, இந்த மாதிரியான அக்கிரம அநியாயம் ஸல்தனத்துக்குப் பிறரால் இழைக்கப்படுவதாயிருப்பின், நான் இவ்விதமாக மூலையில் குந்தி ஹுக்காவைப் புகைத்துக் கொண்டு, உன்னிடம் பேசிக் கொண்டிருப்பேனென்றா நினைக்கின்றாய்?… கிடக்கிறது….! கழுதைகள்!” என்று வீரமும், ரோஷமும், ஆத்திரமும் கலந்த தொனியில் அவர் கர்ஜித்தார்.
ஷஜருத்துர் அதற்குமேல் ஒன்றும் பேச்சுக் கொடுக்கவில்லை. கையிலிருந்த சாரங்கிக் கருவியில் தன் பழைய வேலையைத் துவக்கினாள். சிறிது நேரம் சென்றதும், அவளது உள்ளத்துள்ளே ஐயமொன்று எழுந்தது.
“தாதா! அப்படியானால், இந்த மிஸ்ரின் ஸல்தனத் இப்படியே கெட்டழிந்துதான் போகுமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ?”
“குழந்தாய்! நானென்ன அல்லா(ஹ்)வா, அல்லது ரசூலா, இனி நிகழப் போகின்றவற்றை முற்கூட்டியே எடுத்துச் சொல்வதற்கு? ஒன்று, இன்னம் ஓரிரண்டு வருடங்களுக்குள் இந்த சுல்தான் ஒழிய வேண்டும்; அல்லது இந்த ராஜ்யமே தொலைய வேண்டும்! வேறென்ன நடக்கப்போகிறது? ஆனால், ஷஜருத்துர்! இதைமட்டும் நீ ஞாபகத்தில் வைத்துக்கொள். ஒருகால் நான் செத்துப்போய்விட்டால், நீ பிறர்க்குக் கூறலாம்: இந்த ஸல்தனத்தை இனிமேல் வேறு அமீர்கள் பற்றிக்கொண்டாலன்றி, இதற்கு விமோசனம் பிறக்கப்போவதில்லை; இப்போதுள்ள அமீர்கள் இனி அதிக நாட்களுக்கு அதிகாரத்தில் இருக்க மாட்டார்கள்!”
குறுக்கு விசாரணை செய்யவேண்டிய அவசியமேயில்லாத கடியசொற்களையும், மனமுடைந்து தாமே வெளிவந்த மொழிகளையும் அவருடைய இறுதி வாக்கியங்கள் பிரதிபலித்தனவாகையால், ஷஜருத்துர் பேசாதிருந்து விட்டாள்.
இந் நிகழ்ச்சி நடந்த கொஞ்ச நாட்களில் அந்தத் துரதிருஷ்டம் பிடித்த ஹிஜ்ரீ 635-ஆம் ஆண்டு முடிந்து, மறு வருடம் பிறந்துவிட்டது. ஆங்கிலேயர்களின் கிறிஸ்தவக் காலண்டர் 1238-ஆம் ஆண்டின் பிந்திய மாதங்களை மட்டும் இன்னும் முடிக்காமலே மிச்சம் வைத்துக்கொண்டிருந்தது.
(தொடரும்)
மறுபதிப்பு: சமரசம் – 1-15 டிசம்பர் 2011
<<அத்தியாயம் 7>> <<அத்தியாயம் 9>>