நம் அனைவருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் அது நிகழ்ந்திருக்கும். மந்தமாகவே சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை; தினமும் ஒரே மாதிரி எழுந்து, பல்
துலக்கி, காப்பி குடித்து, குளித்து, உண்டு, அலுவலகம் சென்று திரும்பி, மீண்டும் வீடு, உணவு, டிவியில் அடாசு ஸீரியல் என்று இப்படி மெத்தனமாய்க் காலம் நகர்ந்து கொண்டிருக்கும்போது திடீரென வாழ்வில் ஒரு திருப்பம் – உங்கள் பாதையை மாற்றியமைக்கும் திருப்பம் – அமைந்திருக்கும்.
எங்காவது கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவர் கூறியிருப்பார், “இனிமேல் என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்திருந்தேன். மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்ல டிக்கெட் வாங்க நினைத்திருந்தேன். அப்பொழுதுதான்…”
திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்களிடமும் இத்தகைய பேட்டிகளைக் காணலாம்.
பெரிசோ சிறிசோ நிகழும். என் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. சற்று யோசித்துப் பார்த்தால் உங்களது வாழ்க்கையிலும் இப்படியொன்று நிகழ்ந்திருக்கலாம். இல்லையென்றால் சற்றுப் பொறுங்கள்; நாளை, நாளை மறுநாள் நிகழ்ந்துவிடும்.
வாழ்க்கையின் இலட்சியத்தை எட்டும் பயணத்தில் ‘திருப்புமுனை’ அறிவது அவசியம். நம் கண்ணுக்குத் தெரியாத விதி அது. அது நிகழும்போது ஒருவரது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. ஆனால் இதில் சூட்சமம் என்னவென்றால் அவர் அத்தகைய தருணம்வரை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு போராடி வந்திருக்க வேண்டும். பாதியிலேயே அவர் கையைத் தூக்கிவிட்டால் அரைக் கிணறுதான்.
இறைவன் நம் கர்மத்திற்கு ஏற்பவே பலன் அளிக்கிறான். மனிதன் தனது குறிக்கோளை அடைய மெனக்கெடும்போது அந்த மெனக்கெடல் நிசந்தானா என்று இறைவனின் சோதனை அமையும். சோதித்து, சோதித்து மனிதனின் ஊக்கமும் விடாமுயற்சியும் தளராது தொடர்ந்து கொண்டிருந்தால் சடாரென அத்திருப்புமுனை அவன் பாதையின் எதிரே வந்துவிடுகிறது.
அதுவரை இருள் படர்ந்து சோகமயமாய்க் காட்சியளித்த உலகம் ஒரு நொடியில் வண்ணமயமாய் மாறிவிடும். “எல்லாமே சங்கடமாகவும் பிரச்சினையாகவும் இருக்கிறது. காரியங்கள் எவையும் கைகூட மறுக்கின்றன. எதைத் தொட்டாலும் துலங்கமாட்டேன் என்கிறது..” என்பதான நிலையில் இருந்தால் அதன் அர்த்தம் “இதோ வரப்போகிறது அது… வெற்றி அந்த முனையில் காத்திருக்கிறது” என்று நம்புங்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதை மனிதன் உணர ஆரம்பித்துவிட்டால் சோகங்கள் இலேசாகிவிடும். மனம் மகிழ்வுடன் முயற்சியைத் தொடரும்; அசராது.
கடினமான பாதையைக் கடந்தால்தான் திருப்புமுனை!
படாதபாடு படுத்தும் இன்னல்களெல்லாம் நம் இலட்சியத்தை அடையத் தேவையான சுமைகள்!
என்று மனம் உணர ஆரம்பித்து விட்டால் நாம் துவண்டு விடாமல் தாக்குப்பிடிக்க அவை உதவும்;
எனவே எவ்வளவுக்கு எவ்வளவு பிரச்சினைகளோ அந்தளவிற்கு நீங்கள் பெருமைப்படலாம், காரியம் கைகூடப் போகிறதென்று.
சரி, திருப்புமுனை வந்தாச்சு! “இனி எல்லாம் வசந்தமே” என்று சுபம் போட்டுவிடலாமா? அது அப்படியன்று.
நாம் மாறினால் மட்டுமே நம் உலகம் மாறும். தானாய் எல்லாம் மாறும் என்று நினைத்து அமர்ந்திருந்தால் அது பொய். பழைய பொய். மாயமாய் வானிலிருந்து ஓர் ஒளி வந்து நம் வாழ்க்கையின் கும்மிருட்டிற்குத் தோரண விளக்கு அமைத்துவிடாது!
“வாழ்க்கையில் நொடித்துப் போயுள்ளேன். நான் மீண்டு எழ வேண்டுமானால் எனக்கு 20 இலட்ச ரூபாய் முதல் இருந்தால்போதும்; தொழில் செய்து முன்னேறி விடுவேன்” என்று ஒருவர் கூறுகிறார். அன்றிரவு அவரில்லத்தில் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஒரு மூட்டை விழுகிறது; திறந்துப் பார்த்தால் 20 இலட்ச ரூபாய் பணம்.
அடுத்து அவர் நிலை மாற வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? அவர் சொன்னதைப் போல் அதைக் கொண்டு தொழில் புரிய வேண்டும். அதை விடுத்து அதிர்ஷ்டம்தான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்டதே, இனி என்ன தொழில் வேண்டிக்கிடக்கு என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் பணத்தை மட்டும் செலவு செய்ய ஆரம்பித்தால்?
மூட்டை மட்டுமே மிஞ்சும். சுருட்டி முகத்தைத் துடைத்துக் கொள்ளலாம்.
நம்மை மாற்றிக் கொள்ள நாம் மனதினுள்ளே உறுதி பூண்டு அதைச் செயலில் காட்டினாலொழிய வாழ்க்கையில் என்ன திருப்புமுனை ஏற்பட்டாலும் அது நம் நிலையை மாற்ற உதவாது.
இதற்குச் சுருக்குவழி, குறுக்குவழி, ‘சைடு’ வழி என்று எதுவும் கிடையாது. நாம் நம்மை மாற்றிக்கொண்டு செயலில் இறங்க வேண்டும்.
உடனே ஒருவர் இப்படிக் கேட்கலாம். “நான் என்னதான் தலைகீழாக நின்றாலும் எனது விதியில் தோல்வி என்று எழுதி வைக்கப்பட்டிருந்தால் அதுதானே வந்துவிடியும். பிறகு நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்; மெனக்கெட வேண்டும்?”
இருக்கலாம். ஆனால் செயல் உங்களது வாழ்க்கையின் கடமை. உங்கள் விதி பணி செய்து கிடப்பதே! அதுதான் மன நிறைவு தரும்; மன மகிழ்வு தரும்.
மனம் மகிழ, தொடருவோம்…
இந்நேரம்.காம்-ல் 04 மார்ச் 2011 அன்று வெளியான கட்டுரை
<–ம.ம. முகப்பு–>