61. அபூஸலமா (أبو سلمة)
ஒட்டகம் ஒன்று பயணத்திற்குத் தயாரானது. மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல வேண்டிய நெடுந்தொலைவுப் பயணம். கணவன், மனைவி, அவர்களுடைய ஆண் குழந்தை, பயணிக்க ஒட்டகம் என்று சிறிய பயணக் குழு.
‘போதும் இந்த ஊரும் மக்களும் அவர்களது கொடுமையும். புலம் பெயர்வோம். விரைந்து சென்று மதீனாவில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அடைவோம்’ என்பது பயணியர் நோக்கம். பயணம் துவங்கியது.
மக்காவிலிருந்து சற்று தூரம்தான் சென்றிருப்பார்கள். விஷயம் தெரிந்து ஓடிவந்தார்கள் இரு தரப்பு மக்கள். மனைவி பனூ முகீரா கோத்திரத்தைச் சேர்ந்தவர். வந்த வேகத்தில் அந்தக் கணவரை அதட்டி, திட்டி, அவர்மேல் பாய்ந்து, தாக்குதல் நடந்தினர். வலுக்கட்டாயமாய் அவரது கையிலிருந்து ஒட்டகையின் கடிவாள வாரைப் பிடுங்கி, அவரின் மனைவியை ‘இறங்கு’ என்று ஓர் அதட்டல். அழுது, மறுத்தவரைப் பொருட்படுத்தவில்லை. ‘சோகத்தை வீட்டில் வந்து அழுது தீர்த்துக்கொள்’ என்று இழுத்துச் செல்ல ஆரம்பித்தார்கள்.
கணவரின் கோத்திரம் பனூ அப்துல் அஸத். மறு தரப்பு அவர்கள் சும்மா இருப்பார்களா? கோபமும் சீற்றமுமாக இரைச்சலிட்டு அவர்களும் எகிறினார்கள். ஆனால் அவர்களது ஆதரவு தங்களது குலத்தைச் சேர்ந்த அந்தக் கணவருக்காக இல்லை; ‘நீ எக்கேடோ கெட்டுப் போ’ என்று அவரை விட்டுவிட்டு, அவருடைய ஆண் குழந்தையைப் பறிக்க ஓடியது அந்தக் கூட்டம்.
“உங்கள் உரிமையென்று நீங்கள் உங்கள் குலத்துப் பெண்ணை அழைத்துச் செல்கிறீர்கள். ஆனால் குழந்தை? அவன் எங்கள் குலத்தவன். அவன்மீது எங்களுக்கே அதிக உரிமை. அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறோம். அவனை நீங்கள் எடுத்துச் செல்ல விடமாட்டோம்.”
தாயிடமிருந்து மகனைப் பிடித்து இழுத்தது கூட்டம். ஒருபுறம் இவர்கள் இழுக்க, மறுபுறம் அவர்கள் தாயுடன் சேர்த்து இழுக்க, குழந்தையின் கை எலும்பே முறிந்துவிட்டது.
இறுதியில், அழுது கதறும் மனைவியை அவரது கோத்திரம் இழுத்துச் செல்ல, வீறிட்டு அலறும் குழந்தையை பனூ அஸத் தூக்கிச் செல்ல, தனித்து நின்றிருந்தார் பயணி. அழுகையும் கூச்சலும் இரைச்சலும் தேய்ந்து மறைந்தன.
கண்ணில் இருந்த நீரையும் உடம்பில் இருந்த மண்ணையும் தட்டிவிட்டுத் தனியாளாய் மதீனாவை நோக்கிக் கிளம்பினார் அப்பயணி – அபூஸலமா ரலியல்லாஹு அன்ஹு.
oOo
நபியவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபின் மனைவியருள் ஒருவர் ஃபாத்திமா பின்த் அம்ரு. இத்தம்பதியருக்குப் பிறந்தவர்தாம் நபியவர்களின் தகப்பனார் அப்துல்லாஹ். அதே தாய்க்குப் பிறந்த மற்றவர்கள் அபீதாலிப், ஸுபைர், ஆத்திக்கா, அர்வா, உமையா, உம்மு ஹக்கீம், பர்ராஹ். இவர்களுள் பர்ராஹ் அவர்களின் குடும்ப விபரத்தை மட்டும் இங்கு பார்த்துவிடுவோம்.
பர்ராஹ்வுக்கு அப்துல் அஸத் பின் ஹிலால் என்பவருடன் திருமணம் நிகழ்வுற்றது. இவர்களுக்குப் பிறந்தவரே அபூஸலமா. ஸலமாவின் தகப்பனார் எனப்படும் அபூஸலமா என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட பெயர்தானே தவிர இயற்பெயர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸத். இவ்விதம் நபியவர்களின் அத்தை மகனாக அமையப்பெற்ற அபூஸலமாவுக்கு நபியவர்களின் சகோதரராக அமையும் பெருமையையும் வழங்கினான் இறைவன்.
அதெப்படி?
நபியவர்களின் பெரியப்பன் அபூலஹபிடம் துயைபா என்றொரு அபிஸீனிய அடிமைப் பெண் இருந்தார். அவர் நபியவர்களுக்கும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹுவுக்கும் பாலூட்டியவருள் ஒருவர் என்று ஹம்ஸா (ரலி) வரலாற்றில் படித்தோமில்லையா? அதே துயைபா அபூஸலமாவுக்கும் பாலூட்டிய தாயாக அமைந்துபோய், நபியவர்களுக்கும் அபூஸலமாவுக்கும் பால்குடி சகோதர உறவுமுறை ஏற்பட்டுப் போனது. இப்படி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வெகு நெருக்கமான உறவினராக ஆகிவிட்ட அபூஸலமா, ஆரம்பத் தருணங்களிலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டார். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் இஸ்லாத்தினுள் நுழைந்த முதல் பத்து ஆண்களுள் அவரும் ஒருவர்.
அவர் மட்டும் இணையவில்லை. தம் மனைவியுடன் சேர்ந்தே நுழைந்தார். அவருடைய மனைவியின் இயற்பெயர், ஹிந்த் பின்த் அபீஉமைய்யா. கணவருக்கு ஏற்ற மனமொப்பிய நல்ல மனைவி. இனிமையாய் துவங்கிய அவர்களது வாழ்வு, இஸ்லாத்தை ஏற்றது முதல் மாறிப்போனது. மக்கத்துக் குரைஷிகள் அதுநாள் வரை போற்றி மதித்துவந்த முஹம்மது அவர்களையே எதிர்ப்பதற்குக் களமிறங்கிய பிறகு யாரை விட்டு வைப்பார்கள். அடிமையாக இருந்தால் என்ன; மேட்டுக்குடியாக இருந்தால்தான் என்ன? ‘நீ முஸ்லிமா? எங்களுக்கு எதிரி’ என்று தெளிவாக வரையறுத்துக் கொண்டு அராஜகம் புரிய ஆரம்பித்து விட்டார்கள்.
நிலைமை கடுமையாகி, ஒரு கட்டத்தில் முஸ்லிம்களின் குழுவொன்று அபிஸீனியாவிற்குப் புலம்பெயர்ந்தது என்று நெடுகப் படித்து வந்தோமில்லையா? அவர்களுள் அபூஸலமாவும் அவர் மனைவியும் அடக்கம். சிறிது காலம் அங்கிருந்தார்கள். அங்குதான் அவர்களுக்கு ஸலமா என்ற மகன் பிறந்தார். தாயும் தந்தையம் அபூஸலமா, உம்மு ஸலமா என்று ஆகிப்போனார்கள். ரலியல்லாஹு அன்ஹுமா.
‘ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் முஸ்லிமாகிவிட்டாராம்; உமர் பின் கத்தாப் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாராம்; முஸ்லிம்கள் வலுவடைகின்றனராம்’ என்றெல்லாம் மக்காவிலிருந்து அபிஸீனியாவிற்குச் செய்தி வந்து, நிலைமை சீரடைந்திருக்கும் என்று சில முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பியபோது இவர்களும் படகேறி வந்துவிட்டனர். வந்து சேர்ந்தால், விட்ட இடத்திலிருந்து துவங்கியது குரைஷிகளின் கொடூரம். இப்பொழுது முன்பை விட மூர்க்கமாய்.
ஒரு நிலையில் நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து சென்றபின், தாமும் தம் குடும்பத்துடன் புலம்பெயர முடிவெடுத்தார் அபூஸலமா. ஒட்டகம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் தம் மனைவியை ஏற்றி அமர வைத்தார். அவரது மடியில் பாலகர் ஸலமா. ஒட்டகத்தின் கடிவாள வாரைப் பிடித்து இழுத்துக்கொண்டு, மக்காவிலிருந்து பயணம் துவங்கியது. எப்படியோ விஷயத்தை அறிந்து ஓடிவந்து குறுக்கிட்டார்கள் அபூஸலமாவின் பனூ அப்துல் அஸதும் உம்மு ஸலமாவின் பனூ முகீராவும்.
“நீ எங்களை விட்டுச் சென்றுவிடலாம் என்று நினைத்தால் போய்த் தொலை. ஆனால் உன் மனைவியையும் உடன் அழைத்துச் செல்ல முடியாது. அவள் எங்கள் குலத்தின் மகள். நீ எங்களிடமிருந்து அவளை அழைத்துச்சென்று உன் விருப்பப்படி அவளை அலைக்கழிக்க விட்டு விடுவோமா?” என்று கூறிப் பாய்ந்து தாக்கத் தொடங்கினார்கள் பனூ முகீரா குலத்தினர்.
தம் குலத்து ஆளைத் தாக்குகிறார்கள் என்று ஓடிவந்த பனூ அப்துல் அஸத், அபூஸலமாவை விட்டுவிட்டார்கள். “உங்கள் உரிமையென்று நீங்கள் உங்கள் குலத்துப் பெண்ணை அழைத்துச் செல்கிறீர்கள். ஆனால் குழந்தை? அவன் எங்கள் குலத்தவன். அவன்மீது எங்களுக்கே அதிக உரிமை. அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறோம். அவனை நீங்கள் எடுத்துச் செல்ல விடமாட்டோம்.”
இரண்டு குழந்தைகள் பொம்மையைப் பிடித்து இழுப்பதுபோல் இங்கு இரண்டு குலத்தவர் குழந்தையை ஆளுக்கொரு பக்கம் இழுக்க, பாலகர் ஸலமாவின் கை எலும்பு முறிந்து போனது. குழந்தை அலற, அலற ‘நாங்கள் கட்டுப்போட்டுப் பார்த்துக்கொள்வோம்’ என்று பனூ அப்துல் அஸத் அவரைத் தூக்கிச் சென்று விட்டார்கள்.
சிறு கலகம் ஒன்று நடைபெற்று ஓய்ந்து, இறுதியில் பனூ முகீராவின் பாதுகாவலில் சென்றடைந்தார் உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா. பாலகர் ஸலமாவைத் தாயிடமிருந்து பிரித்துப் பிடுங்கிச் சென்றது பனூ அப்துல் அஸத். மனைவியையும் மகனையும் பிரிந்து மதீனா சென்று சேர்ந்தார் அபூஸலமா.
இந்நிகழ்வின் அடிநாதத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கணவரையும் மனைவியையும் குழந்தையையும் பிரிக்குமளவிற்கு பனூ முகீராவுக்கும் பனூ அப்துல் அஸதிற்கும் இடையே குலப்பகையோ, பரம்பரை விரோதமோ அப்பொழுது இருக்கவில்லை. ஒரு கோத்திரத்தின் போக்கிற்கு எதிராய் மற்றொரு கோத்திரம் தம் பங்கிற்கு ஒரு வினை செய்தார்கள். அது மட்டும்தான் எதிர்வினையே தவிர, அவர்களின் அடிப்படையெல்லாம் இஸ்லாமிய விரோதம் மட்டுமே.
ஆயிரத்து நானூற்றுச் சொச்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றும் சரி, இன்றும் சரி; என்றுமே இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் தங்களுக்குள் என்னதான் அபிப்ராய பேதம் கொண்டிருந்தாலும் இஸ்லாமிய எதிர்ப்பிலும் முஸ்லிம்களுக்கு இழைக்க வேண்டிய அக்கிரமத்திலும் தெளிவாகவே இருக்கின்றார்கள்; இருப்பார்கள். கொடுமை அதுவென்றால், முஸ்லிம்கள் எதிரிகளை அடையாளம் கண்டோ, காணாமலோ தங்களுக்குள் ஒருவரையொருவர் விரோதியாகவோ, எதிரியாகவோ நினைத்து ஆற்றிக்கொள்ளும் வினை இருக்கிறதே, அதுதான் பெரும் கொடுமை. நமது பார்வையில் தெளிவும் முன்னுரிமைகளில் மாற்றமும் நிகழ வேண்டும்.
உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹாவை நாம் தொடர்வோம். சொல்லி ஆறும் துக்கமா, அழுது தீர்க்கும் சோகமா மனம் ஓரிரு நாளில் சகஜ நிலைக்குத் திரும்பிவிடும் என்பதற்கு? ஒவ்வொரு நாளும் விடிந்ததும் தம் வீட்டிலிருந்து அப்தா எனும் இடத்திற்குச் செல்வார் அவர். அதுதான் அந்த சோகம் நிகழ்ந்த இடம். அமர்ந்து அழுவார். அழுது கொண்டே இருப்பார். இரவு நெருங்கும் நேரத்தில் வீடு திரும்பி, உறங்கி, இளைப்பாறிவிட்டு, மீண்டும் அடுத்தநாள் அப்தா, அழுகை, சோகம் என்று தொடரும். இப்படியாக ஒருநாளில்லை, இரண்டு நாளில்லை, ஓராண்டு நடந்திருக்கிறது. அதைத் தடுக்காமல் அத்தனை நாளும் அவரது கோத்திரத்தினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கின்றனர்.
பாலை வெயிலிலும் ஒருநாள் உறவினர் ஒருவருக்கு ஈரம் கசிந்திருக்கிறது. தம் பனூ முகீரா மக்களிடம், “அபலைப் பெண். அவரைக் கணவரிடமிருந்தும் குழந்தையிடமிருந்தும் பிரித்துவிட்டீர்கள். போனால் போகிறது. விட்டுவிடுங்கள். அவர் கணவரிடம் போய்ச்சேரட்டும்” என்று பரிந்து பேசியிருக்கிறார். முரண்டு பிடித்தார்கள் அவர்கள். விடவில்லை. பேசிப்பேசி ஒருவழியாக அந்த உறவினர் அவர்களைச் சம்மதிக்க வைத்துவிட்டார்.
”போ” என்று அனுமதியளித்தனர்.
‘எனக்கு அனுமதி சரி. என் குழந்தையை இங்கு விட்டுவிட்டு நான் மட்டும் எப்படிச் செல்வது? மனம் எப்படி ஆறுதலடையும்? கண்களின் நீர் எப்படி வற்றும்?’ என்று தவித்தார் உம்மு ஸலமா.
பனூ அப்துல் அஸத் மக்களிடம் சிலர் சென்று பேசினர். “கணவனிடம் போகிறாயா? இந்தா உன் மகன்” என்று ஸலமாவைத் திருப்பித் தந்தார்கள் அவர்கள்.
அதற்குமேல் சற்றும் தாமதிக்கவில்லை; பயணத்திற்கு ஒட்டகம் ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு, தம் மகனை மடியில் அமர்த்திக்கொண்டு மதீனாவிற்குக் கிளம்பிவிட்டார் உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா. “ரொம்ப தூரமாச்சே; பலநாள் பயணமாச்சே. நான் வழித் துணைக்கு வருகிறேனே” என்று இரு தரப்பு கோத்திரத்திலிருந்தும் யாரும் முன்வரவில்லை. “எப்படியோ போய்ச் சேரட்டும்” என்று நினைத்து விட்டுவிட்டார்கள்.
மக்காவின் புறநகரான தன்ஈம் பகுதியை ஒட்டகம் அடைந்தபோது எதிர்ப்பட்டார் உதுமான் பின் அபீதல்ஹா. அவர் அப்பொழுது இஸ்லாத்தை ஏற்காதவர். முஸ்லிமாக இல்லாவிட்டாலும் இதர குரைஷியர் போலன்றி நல்ல உள்ளமும் அந்த உள்ளம் நிறைய பெருந்தன்மையும் வைத்திருந்தவர். மற்றொன்றும் வைத்திருந்தார். கஅபாவின் சாவி. தொன்றுதொட்டு அவரது பரம்பரையினரே கஅபாவின் நிர்வாகிகள். பின்னர் நபியவர்கள் மக்காவை வெற்றிகொண்ட போதுதான் இஸ்லாத்தை ஏற்றார் உதுமான் பின் அபீதல்ஹா. அதன் பின்னரும் அவரிடமே கஅபாவின் சாவி அளிக்கப்பட்டு இன்றளவும் அவரது வழித்தோன்றல்களிடமே அது உள்ளது என்பது இங்கு நமக்கு உபரித் தகவல்.
“அபூ உமைய்யாவின் புதல்வியே. எங்கே செல்கிறீர்?” என்று விசாரித்தார்.
“மதீனாவில் இருக்கும் என் கணவரிடம்.”
“உம்முடன் யாரும் துணைக்கு வரவில்லையே!” என்று ஆச்சரியத்துடன் விசாரித்தார்.
“ஆம். அல்லாஹ்வையும் என் சிறு மைந்தனையும் தவிர யாரும் இல்லை” என்று பதிலளித்தார் உம்மு ஸலமா.
ஒரு பெண், குழந்தையுடன் தனியாக நெடும் பயணம் செல்வதா? வழி தெரியுமா? இதென்ன கொடுமை?
“அல்லாஹ்வின்மீது ஆணையாக. நீர் தனியாகச் செல்லுமளவிற்கு கைவிடப்பட மாட்டீர்” என்று தாமே முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்டார் உத்மான் பின் அபீதல்ஹா.
ஒட்டகத்தின் கடிவாள வாரைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடக்க, பயணம் துவங்கியது. இளைப்பாற, உறங்க என்று தகுந்த இடம் வந்ததும் ஒட்டகத்தை அமர்த்தி அவர் பிடித்துக்கொள்ள உம்மு ஸலமாவும் தம் குழந்தையுடன் இறங்கிக் கொள்வார். அவர்களை இளைப்பாற விட்டுவிட்டு, ஒட்டகத்தை இட்டுச் சென்று ஒரு மரத்தில் கட்டிவிட்டுத் தாம் தூரமாக வேறொரு மரநிழலில் சென்று இளைப்பாறிக் கொள்வார்.
பயணம் தொடரலாம் என்றானதும் ஒட்டகத்திற்கு சேணத்தைப் பூட்டிக் கொண்டுவந்து, உம்முஸலமாவின் அருகே நிறுத்தி விட்டுத் தாம் தூரச் சென்றுவிடுவார் உதுமான். தாயும் மகனும் அமர்ந்ததும் வந்து ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு, அவர்களது பயணம் தொடரும். இப்படியே ஒவ்வொரு நாளும் நிகழ்ந்தது.
“உதுமான் பின் அபீதல்ஹாவைப் போன்ற இன்னோர் உதவியாளரை நான் கண்டதில்லை” என்று பிற்காலத்தில் உம்மு ஸலமா குறிப்பிட்டுள்ளார்.
இப்படியாக மதீனாவை நெருங்கினார்கள் அவர்கள். பனூ அம்ரு பின் அவ்ஃப் குலத்தார் வசிக்கும் மதீனாவின் புறநகர் குபாவை அடைந்ததும், “உங்கள் கணவர் இந்த ஊரில்தான் இருக்கிறார். போய்ச் சேர்ந்துகொள்ளுங்கள்” என்று வழிகாட்டிவிட்டு அப்படியே மக்காவிற்குத் திரும்பினார் உதுமான். குபா வந்து அபூஸலமாவுடன் இணைந்தார் உம்மு ஸலமா. நீண்ட பிரிவுக்குப்பின் ஒன்றிணைந்தது அபூஸலமாவின் குடும்பம்.
இனிய குடும்ப வாழ்க்கையின் அடையாளமாக அடுத்து அவர்களுக்கு ஸைனப், துர்ராஹ் என்று இரண்டு மகள்களும் உமர் என்று மற்றொரு மைந்தரும் பிறந்தார்கள்.
oOo
நபியவர்களின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் உரிய முக்கிய தோழராகத் திகழ்ந்தார் அபூஸலமா. பத்ருப் போருக்கு முன்பாகவே அபூஸுஃப்யானின் வணிகக் குழுவை வழிமறிக்கும் முயற்சி நடந்து வந்தது. ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டின் ஜமாதுல் அவ்வல் மாதம். யான்பு மாவட்டத்தில் உள்ள உஷைரா என்ற இடத்திற்கு சிறு படை ஒன்றைத் திரட்டிச் சென்றார்கள் நபியவர்கள். அந்த முழு மாதமும் அதற்கடுத்த ஜமாதுல் ஆகிர் மாதத்தின் சில நாள்களும் அங்குத் தங்கியிருந்தார்கள். ஆனால் அபூஸுஃப்யானின் வணிகக்குழு அவ்வழியே வரவில்லை. நபியவர்கள் படையெடுத்துச் சென்ற இந்த நிகழ்வின்போது மதீனாவின் பொறுப்பை அபூஸலமாவிடம்தாம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள்.
பின்னர் பத்ருப் போர் நிகழ்ந்தபோது அதில் கலந்துகொள்ளும் பேறு கிடைத்தது அபூஸலமாவிற்கு. இரண்டு முறை ஹிஜ்ரத், பத்ருப் போராளி என்று பெரும் நற்பேறுகள். அதற்கடுத்து நிகழ்ந்த உஹதுப் போரிலும் அபூஸலமா படைவீரர். அந்தப் போரைப் பற்றி நிறையப் படித்துவிட்டோம் இல்லையா? அதில் அபூஸலமாவுக்கும் குறிப்பிடத்தக்க காயம் ஒன்று ஏற்பட்டது. அபூஉஸாமா அல் ஜுஷ்அமி என்பவன் எய்த அம்பு அவரது கை புஜத்தில் பாய்ந்து பெரும் ஆழமான காயம். போர் முடிவுற்று ஒரு மாதகாலம் வரை அவர் அந்தக் காயத்திற்குச் சிகிச்சை பெற்று, காயமும் குணமாக ஆரம்பித்தது.
உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு, அவர்களது வளர்ச்சியைக் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்த பல அரபுக் கோத்திரங்களுக்குப் பெரும் உற்சாகம் அளித்தது. ‘பலவீனமடைந்து விட்டார்கள்; இனிமேல் அவ்வளவுதான் அவர்கள்’ என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் அடுத்து சில நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று மட்டும் இங்கு.
அது ஹிஜ்ரீ நான்காம் ஆண்டு. முஹர்ரம் மாதம். ஒற்றர்கள் மூலமாக மதீனாவிற்குச் செய்தி ஒன்று வந்தது. செய்தி என்று சொல்வதைவிட அவசர எச்சரிக்கை அது. ‘பனூ அஸத் இப்னு குஸைமா கோத்திரத்தினர் துலைஹா அல்-அஸதீ என்பவனது தலைமையில் படையைத் தயார் செய்கின்றனர். மதீனாவின்மீது பாய்ந்து தாக்கி, நபியவர்களைக் கொல்வது அவர்களது திட்டம்’ என்ற ஊர்ஜிதமான எச்சரிக்கை.
நபியவர்கள் சற்றும் தாமதிக்கவில்லை. மளமளவென்று காரியத்தில் இறங்கினார்கள். எதிரிகளை வரவிட்டு எதிர்க்கும் தற்காப்புப் போருக்குப் பதிலாக, முந்திக்கொண்டு படையைத் திரட்டி அனுப்பி பனூ அஸதை அவர்களது எல்லைக்குள்ளேயே தாக்கி நசுக்குவது என்பது திட்டம். முஹாஜிரீன்கள், அன்ஸார்கள் உள்ளடங்கிய நூற்றைம்பது வீரர்கள் கொண்ட படை தயாரானது. அபூஸலமா படைக்குத் தலைமையாக நியமனம் பெற்றார்.
நபியவர்கள் கொடியை அபூஸலமாவின் கையில் அளித்து, “கிளம்புங்கள். பனூ அஸத் மக்களின் ஊரை அடைந்ததும் அங்கு முகாமிடுங்கள். அவர்கள் கூடி, படை திரட்டுவதற்குள் தாக்குதலைத் தொடங்குங்கள்” என்று கட்டளையிட்டார்கள்.
படையெடுப்பு ரகசியம் காக்கப்பட்டது. எதிரிக்கு விஷயம் தெரிந்து எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் இறங்கவிடாமல், முஸ்லிம் படை படுசாதுர்யமாய் பனூ அஸத் கோத்திரத்தினரின் ஃகதன் என்ற ஊரை அடைந்தது. திடீரென்று ஒருநாள் முஸ்லிம் படையினர் தங்கள் ஊர் வாசலில் வந்து நிற்பதைக் கண்ட அம்மக்களுக்குப் பெரும் ஆச்சரியம். அதைவிடப் பெரிதாக அதிர்ச்சி. அவர்கள் சற்றும் எதிர்பாராதது அது. அவர்களைச் சுதாரிக்க விடவில்லை; ஆயுதம் தரிக்க விடவில்லை. முஸ்லிம்களின் தாக்குதல் துவங்கியது.
‘உஹதுப் போரில் முஸ்லிம்களுக்குக் கடுமையான பின்னடைவு என்றார்கள். சுணங்கி விட்டனர்; பலவீனமடைந்து விட்டனர் என்றார்கள். அவர்களது ஆதிக்கம் முடிவுற்றது என்றார்கள். இதென்ன சிறயதொரு படை இப்படிப் போட்டுத் தாக்குகிறார்களே’ என்று அவர்களுக்குப் பேரதிர்ச்சி!. தப்பித்து ஓடுவதைத் தவிர அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமற் போனதால் ஓடினார்கள். முஸ்லிம்களும் ஓடினார்கள் – எதிரிகளைத் துரத்திக்கொண்டு.
பனூ அஸதை அச்சுறுத்திச் சிதறச் செய்யும் திட்டம் வெகு சிறப்பாக வேலை செய்தது. எதிரிகளின் திட்டம் முற்றிலுமாய் நசுக்கப்பட்டது. போரில் நிறையக் கால்நடைகள் கைப்பற்றப்பட்டன. ஸஃபர் மாதம் முஸ்லிம் படை பெரும் வெற்றியுடன் மதீனா திரும்பியது. ஆனால் –
அபூஸலமாவின் புஜத்தில் இருந்த பழைய காயம்தான் புரையோடி அவரது நிலைமையை மோசமாக்கியது.
ஒருநாள் அபூஸலமா தம் மனைவியிடம், “நபியவர்கள் அறிவித்திருக்கிறார்கள்” என்று ஹதீத் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். “ஒருவர் பேரிடரைச் சந்திக்க நேர்ந்தால், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் – நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே நாம் மீள்வோம் – என்று சொல்லிவிட்டு, பிறகு, யா அல்லாஹ், உன்னிடமே நான் வெகுமதியும் இந்த இழப்பிற்கு ஈடும் தேடுகிறேன். நான் இழந்ததைவிடச் சிறப்பானதைத் தா என்று வேண்டினால், அல்லாஹ் தன்னுடைய சக்தியைக் கொண்டு அதை நிறைவேற்றுவான்.”
அபூஸலமாவிற்குச் சிகிச்சை நடைபெற்றது. ஆனால் அது பலனளிக்கவில்லை. அடுத்த நான்கு மாதங்களில் ஜமாதுல் ஆஃகிர் எட்டாம் நாள் உயிர்த் தியாகியானார் அபூஸலமா ரலியல்லாஹு அன்ஹு. விழித்திருந்த அவரது கண் இமைகளைத் தமது கரங்களால் மூடவைத்து, இறைஞ்சினார்கள் நபியவர்கள்.
“யா அல்லாஹ்! அபூஸலமாவைப் பொருந்திக் கொள்வாயாக! உனக்கு நெருக்கமானவர்களுடன் அவருக்கும் சொர்க்கத்தின் உயர் பதவியை அருள்வாயாக! அவர் விட்டுச் சென்றவர்களுக்கு உதவி நல்குவாயாக! எங்களையும் அவரையும் மன்னிப்பாயாக! அகிலங்களின் அதிபதியே, அவரது அடக்கத்தலத்தை விரிவாக்கி, அதில் ஒளி பரவச் செய்வாயாக!”
இம்முறை கணவரை நிரந்தரமாக இழந்த பெரும் சோகம் உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹாவைத் தாக்கியது. “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே நாம் மீள்வோம்” என்ற பிரகடனத்தை உச்சரித்த அவருக்கு, நபியவர்கள் அறிவித்ததாக அபூஸலமா தெரிவித்திருந்தது நினைவிற்கு வந்தது. “எனக்கு அபூஸலமாவை விடச் சிறந்தவர் யார்?” என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும் நபியவர்களின் அறிவிப்பு அது என்பதை உணர்ந்து, “யா அல்லாஹ்! உன்னிடமே நான் வெகுமதியும் இந்த இழப்பிற்கு ஈடும் தேடுகிறேன். நான் இழந்தைவிடச் சிறப்பானதைத் தா” என்று அந்தப் பிரார்த்தனையையும் சேர்த்து உரைத்தார். வீணாகவில்லை. ஓர் உன்னத நிலைக்கு அவரை இட்டுச் சென்றது அந்தப் பிரார்த்தனை.
நிராதரவாகிப்போன உம்மு ஸலமாவை மணந்துகொள்ள முதலில் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு விருப்பம் தெரிவித்தார். மறுத்துவிட்டார் உம்மு ஸலமா. அடுத்து உமர் ரலியல்லாஹு அன்ஹு கேட்டபோதும் மறுத்தார். இறுதியில் நபியவர்கள் விருப்பம் தெரிவித்தபோதும் தமக்கு நபியவர்களின் இதர மனைவியருடன் ஏற்படக்கூடிய பொறாமை, தமது வயது, பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆகியவற்றைக் காரணம்காட்டி மறுக்கப்பார்த்தார்.
‘அந்தப் பொறாமைக் குணத்தை அவர் வெல்ல நான் இறைஞ்சுவேன்; அவருக்கு முதிர்ந்த வயது என்றால் நான் ஒன்றும் இளைஞனல்லன்; அவருடைய பிள்ளைகள் என் பிள்ளைகள்’ என்று நபியவர்கள் ஆதரவும் கரிசனமும் தெரிவித்ததும் உம்மு ஸலமா இணங்கி, நபியவர்களுக்கும் அவருக்கும் திருமணம் நிகழ்வுற்றது. உன்னத நிலை என்றோமே – அன்றிலிருந்து மூஃமின்களுக்குத் தாயாக ஆகிப்போனர் அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா.
மதீனா வந்த நாளாய் நபியவர்களின் இஸ்லாமியப் பணிக்குத் துணையாகவும் போர்களில் படை வீரராகவும் திகழ்ந்திருக்கிறார் அபூஸலமா. புலம்பெயரும்போது கடுமையான சூழல் ஏற்பட்டபோது அந்தப் பிரிவையும் மனவலியையும் அல்லாஹ்வுக்காகவும் அவன் தூதருக்காகவும் என்று ஏற்றுக்கொள்ளக் கடுமையான மனோதிடம், வலுவான ஈமான் அமைந்திருக்க வேண்டும். அமைந்திருந்தன அபூஸலமாவுக்கு. என்பதெல்லாம் இருக்க,
அடுத்து ஒரு போர். இஸ்லாமிய விரோதிகளைக் களத்தில் சந்திக்க வேண்டும் என்றதும் ‘எனக்கு ஏற்கெனவே எவ்வளவு பெரிய காயம்’ என்று இயல்பு விடுப்பு, மருத்துவ விடுப்பு என்றெல்லாம் காரணம் தேடாமல் வாளும் கொடியும் ஏந்தி உடனே புறப்பட்டுச் சென்றவர் அந்தப் போரிலும் வெற்றி; இறுதியில் மறுமைக்கும் பெருவெற்றி என்று உயிர் தியாகி ஆகிப்போனர் அபூஸலமா.
ரலியல்லாஹு அன்ஹு!
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.
சத்தியமார்க்கம்.காம்-ல் 18 பிப்ரவரி 2015 அன்று வெளியான கட்டுரை