அது ஓர் அழகிய பொற்காலம் – 3

by நூருத்தீன்

தேர்தலில் போட்டியிட விரும்புபவர் தம் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்பது இப்பொழுதுதான் நம் நாட்டில் தேர்தல் ஆணையத்தின் விதி.

ஆனால் வெற்றிபெற்று பதவியில் அமர்பவர்கள், அறிவித்த சொத்துக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் எந்தளவு செல்வந்தர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதை எவ்விதக் கற்பனைக் கலப்பும் இல்லாமலேயே நம்மால் எளிதாக அனுமானிக்க முடியும். அவையெல்லாம் சுழியங்கள் (பூஜ்யங்கள்) போட்டு மாளாத கோடிகள். ஆயினும் அவர்கள்தாம் ஊழலற்ற நேர்மையான ஆட்சியைத் தருவார்கள் என்று ‘பச்சைப்புள்ளையாய்’ நம்பிக்கொண்டிருக்கிறோம். வாய் ஆயிரம் பேசினாலும் நம் பொதுமக்களின் மனது வெள்ளந்தி.

இஸ்லாமிய ஆட்சி விரிவடைந்து, பலதரப்பிலும் செல்வம் செழிக்கத் தொடங்கியதும், ஆட்சியாளர்களைப் பற்றிய உமரின் (ரலி) கவலை அதிகரித்தது. செல்வத்திற்கும் சொகுசிற்கும் மனம் மயங்கிவிட்டால் அநீதியின் கதவுகள் திறந்துவிடுமே என்ற கவலை. எனவே அதற்கும் ஒரு வழி கண்டார்.

பதவியில் அமர்த்தப்படும்முன் ஆளுநர்களின் சொத்து மதிப்பு கவனமாய்க் குறித்து வைக்கப்பட்டது. பதவியில் அமர்ந்தபின் அவரது சொத்து மதிப்பில் ஏற்றம் இருந்து அது இயல்பான ஏற்றமாக இல்லையெனில், ஆளுநர் அதற்கு விளக்கம் சொல்லியாக வேண்டும். ‘வர்த்தகம் புரிந்தேன், ஓடியாடி வியாபாரம் செய்தேன்’ என்றெல்லாம் காரணங்கள் அளித்தால், அவை உண்மையானதாக இருந்தாலும், நிராகரிக்கப்படும்!

ஏன்? பார்ப்போம்.

அல்-ஹாரித் இப்னு கஅப் இப்னு வஹ்பு என்பவரை ஒரு பணியில் அமர்த்தியிருந்தார் உமர். நாளாவட்டத்தில் அவரிடம் செல்வம் அதிகரிப்பது தெரியவந்தது. உடனே அவரை அழைத்து விசாரித்தார்.

“என்னிடம் சிறிது பணம் இருந்தது. அதை வியாபாரத்தில் முதலீடு செய்தேன். லாபம் வந்தது” என்று பதில் அளித்தார் ஹாரித்.

“மக்களுக்குப் சேவையாற்றவே உமக்குப் பதவி அளித்திருக்கிறோம். நீங்கள் அங்கு சென்று வணிகம் புரிவதற்கன்று” என்று அவரிடமிருந்து அந்த லாபத்தைப் பிடுங்கிவிட்டார் உமர் (ரலி),

வர்த்தகத்தில் முதலீடு செய்வது என்ன தப்பு? வட்டியைத் தடை செய்துள்ள இஸ்லாம் முறையான வர்த்தகம் புரியத்தானே ஊக்குவிக்கிறது? ஆனால் கலீஃபா உமர் (ரலி) நிர்ணயித்த விதி அறிவார்ந்த விதி. இராணுவச் சேவை புரிபவர்களுக்கு பிரத்தியேகமாய் விதிகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கெனக் கடுமையான ஒழுங்கு பேணப்படும் இல்லையா? அதைப்போல் தம் ஆளுநர்களின் ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் உமர் (ரலி) ஏற்படுத்தியிருந்த விதிகள் மிகக் கடுமையானவை. மக்களை ஆள்பவர்கள் வணிகத்தில் மூழ்கிவிட்டால் முன்னுரிமைகள் இடம் மாறிவிடும்! பிறகு மக்களின் நலன் என்னாவது? மக்களின் குறைகளை யார் களைவது?

சரி, வணிகம் புரியக்கூடாது, மக்களுக்கான சேவைதான் முழுநேரப் பணி; எனில் ஆளுநரது தேவைகளுக்கான வருமானம்? அவரவருக்கும் குடும்பம் உண்டு; அனைவருக்கும் வயிறுண்டு; அவர்கள் வீட்டிலும் அடுப்புண்டு. ஆளுக்கொரு பூனையைத் தந்து ‘அடுப்பில் படுத்துக்கொள்ளச் சொல்லுங்கள்’ என்றா விடமுடியும்?

ஆளுநர்கள் தங்களின் தேவைகளுக்கு பிறரை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுப்போனால், அது கையூட்டிற்கு அடித்தளம் அமைத்துவிடும் என்பதை உமர் நன்கு புரிந்திருந்தார். அதனால் அவரவர் தகுதி, பணிகளுக்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டது. மிகவும் சிறப்பான ஊதியம். ஆனால் ஒன்று. இன்று அளிக்கப்படும் மாத சம்பளம் போலல்லாமல் அது பலவகை. சிலருக்கு தினசரி ஓர் ஆடு. சிலருக்கு நாள் ஊதியம். அல்லது மாத, ஆண்டு ஊதியமாகத் தீனார்கள்.

இவ்விதமாக மேன்மையில் கலீஃபா உமர் எட்டடி பாய்ந்தால், ஆளுநர்களின் மேன்மையும் அதற்கு இணையாய்ப் போட்டியிட்டது.

ஒருவர் “எனக்கு ஊதியமெல்லாம் வேண்டாம்” என்று மறுத்தார்.

“ஏன்?” என்று விசாரித்தார் உமர்.

“அமீருல் மூஃமினீன் அவர்களே, என்னிடம் குதிரைகள் உள்ளன. அடிமைகள் உள்ளனர். போதிய வசதி படைத்தவன் நான். என்னுடைய பணியை முஸ்லிம்களுக்குத் தானமாய் அளிக்க விரும்புகிறேன்” என்றார் அவர்.

அதற்கு உமர், “அப்படிச் செய்யாதே. முன்னர் ஒருமுறை நானும் அப்படித்தான் செய்ய விழைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் ஏதேனும் பணம் அளித்தால், ‘என்னைவிட அதிகம் தேவை உள்ளவருக்கு அதை அளித்துவிடுங்கள்’ என்பேன். அதற்கு நபியவர்கள், ‘எடுத்துக்கொள்; வைத்துக்கொள். சிலவற்றைத் தானமளி. நீ எதிர்பார்க்காமல், கேட்காமல், தானாய் உன்னை அடையும் செல்வத்தை ஏற்றுக்கொள். அதை நீ எதிர்பார்க்காமல் இருப்பது உனக்குப் போதுமானது’ என்று கூறினார்கள்.”

மற்றொரு தோழர் இருந்தார், ஸல்மான் அல் ஃபாரிஸீ (ரலி). பாரசீகத்தின் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்து, தம் இள வயதில் அனைத்து சொகுசும் அனுபவித்து வாழ்ந்து, பிறகு அறிவுத் தேடல் என்று நாடு நாடாகச் சுற்றி அனைத்தையும் இழந்து, அடிமையாய்க் கிடந்து, இஸ்லாத்திற்குமுன் இன்னலே வாழ்க்கையாய் வாழ்ந்தவர் அவர். அவருக்கு மதாயின் நகர ஆளுநர் பதவியை அளித்தே தீருவது என்று அவர் பின்னால் நிற்க ஆரம்பித்தார் உமர். ‘மாட்டவே மாட்டேன்’ என்று அடம்பிடித்தார் ஸல்மான்.

“இருவருக்குத் தலைவனாக இருப்பதா, மண்ணைத் தின்று வாழ்வதா என்று என்னிடம் கேட்டால் மண்ணைத் தின்று வாழ்வதே மேல் என்று சொல்வேன்” என்று பதவியை வெறுத்து மறுத்து ஓடினார் அவர். ஆனால் ‘உன்னைப் போன்றவர்களே மக்களை ஆள்வதற்கு எல்லாத் தகுதிகளும் உள்ளவர்கள்’ என்று உமர் ஒரு கட்டத்தில் அவரை மடக்கிவிட்டார். கடமையைச் செய்ய வேண்டும் எனும் ஒரே காரணத்துக்காக, உலக இச்சை, பதவி ஆசை என்பதெல்லாம் எதுவுமே இன்றி பதவியை ஏற்றார் ஸல்மான் அல் ஃபாரிஸீ.

முப்பதாயிரம் குடிமக்களுக்கு ஆளுநர் என்ற பதவி அவரை அடைந்தது. ஆண்டுக்கு ஐயாயிரம் திர்ஹம் ஊதியம்; தவிர, முதல் இரு கலீஃபாக்களின் ஆட்சியின்போது இஸ்லாமிய ஆட்சி விரிவடைந்து, செல்வம் பெருக ஆரம்பித்தபோது, அவற்றையெல்லாம் மக்களுக்குப் பங்கிட்டு அளித்தவகையில் அவரது பங்காகக் கிடைத்த தொகை ஆண்டுக்கு நாலாயிரத்திலிருந்து ஆறாயிரம் திர்ஹம். இவ்வாறு கைநிறைய செல்வம் ஸல்மான் அல் ஃபாரிஸீயை அடைந்தது.

இன்னலே வாழ்க்கை என வாழ்ந்தவருக்கு இறுதியில் செல்வம் அவரது வாசலில் வந்து கொட்ட, அவர் செய்த முதல் காரியம் பெரும் விந்தை. தமக்கென கிடைத்த ஆயிரக்கணக்கான திர்ஹங்களை அப்படியே முழுக்க முழுக்க அள்ளி ஏழைகளுக்குத் தந்துவிட்டார். தனக்கென அவர் வைத்துக்கொண்டது ஓர் ஆடை; பயணம் செய்ய ஒரு கழுதை. ஆச்சா! உணவு என உண்டது பார்லி ரொட்டி. அவ்வளவுதான். அவ்வளவேதான்.

அப்படியானால் குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்தார் என்று கேள்வி எழுமல்லவா. அது மேலும் விந்தை! கூடை பின்னி விற்று அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தியிருக்கிறார் ஆளுநர் ஸல்மான். ஈச்ச ஓலைகளை ஒரு திர்ஹத்திற்கு வாங்கி அதைப் பின்னி மூன்று திர்ஹத்திற்கு விற்பனை. அதில் ஒரு திர்ஹம் மீண்டும் ஓலை வாங்க முதலீடு. ஒரு திர்ஹம் குடும்பத்தைப் பராமரிக்க. மீதம் ஒரு திர்ஹம்? அதுவும் தானம்!

“நான் இப்படி வாழ்வதை உமர் கத்தாப் தடுத்தாலும் கேட்க மாட்டேன்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு வாழ்ந்திருக்கிறார் ஸல்மான் அல் ஃபாரிஸீ (ரலி).

அது ஓர் அழகிய பொற்காலம்!

(ஒளிரும்)

-நூருத்தீன்

வெளியீடு: சமரசம் 16-31, டிசம்பர் 2012

<<பகுதி 2>>  <<பகுதி 4>>

<<முகப்பு>>

Related Articles

Leave a Comment