சாத்தானின் மனைவி

ஷ்-ஷாபி என்பவரிடம் ஒருவர் வந்தார். “இப்லீஸின் மனைவி பெயர் என்ன?” என்றார். அவர் இப்லீஸ் என்று குறிப்பிட்டது அவருக்கு அண்டை வீட்டுக்காரரை அல்ல. ஷைத்தான்

இப்லீஸையேதான். பதிலை இறுதியில் பார்ப்போம்.

உமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக இருந்தபொழுது இஸ்லாமிய ஆட்சி விரிவடைய, அத்துடன் தலையை சாய்த்து ஓய்வெடுக்க வில்லை கலீஃபா. மக்கா, மதீனா, ஸிரியா, பஸ்ரா, கூஃபா நகரெங்கும் கல்விச் சாலைகள் துவங்கப்பட்டு அழுத்தமாய் வளர்ந்தன. ஒவ்வொரு பகுதியின் கல்விக் கூடத்திற்கும் குறிப்பிடத்தக்க முக்கியத் தோழர்கள் பொறுப்பு. கல்விக்கூடம் என்றதும் ஏதோ பாலகர் பள்ளி, சிலேட்டுக் குச்சி, என்றெல்லாம் கற்பிதம் கூடாது. தவ்ஹீதும் குர்ஆனும் நபிமொழியும் என்று ஞானவான்களை உருவாக்கிய கேந்திரங்கள் அவை. ஒவ்வொன்றும் பற்பல மார்க்க அறிஞர்களை உருவாக்கின.

ஈராக்கிலுள்ள கூஃபா நகரில் இருந்த கல்விச் சாலையிலிருந்து பயின்று வெளிவந்தவர்களில் புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் பலர். அவர்களுள் ஒருவர் ஆமிர் பின் ஷார்ஹாபில் அஷ்-ஷாபி (Amir bin Sharhabil ash-Shabi) (ரஹ்). இஸ்லாமிய மார்க்கச் சட்ட இயலில் அவரொரு மேதை என்று வரலாற்றாசிரியர்கள் தயக்கமின்றிக் குறிப்பிடுகிறார்கள். அதற்கு வலுவான காரணம் இருந்தது. அன்னை ஆயிஷா, அப்துல்லாஹ் இப்னு உமர், ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹும்) என்று ஏறத்தாழ ஐந்நூறு நபித் தோழர்களைச் சந்தித்திருக்கிறார். நபிமொழி, பாடம் என்று பயின்றிருக்கிறார் அஷ்-ஷாபி. என்னாகும்? மேதைமை மிகைத்தது.

முஹம்மது பின் ஸிரீன் (ரஹ்) அஷ்-ஷாபியின் ஞானத்தைப் பற்றிக் குறிப்பாய்த் தெரிவிக்கிறார். “கூஃபாவில் பல தோழர்கள் வாழ்ந்துவந்த காலம். அஷ்-ஷாபி அவர்களிடமெல்லாம் சென்று மார்க்கச் சட்டக் கருத்துகளை கேட்டு அறிவார். அப்படியெல்லாம் பயின்று ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த அவரிடம் யாரேனும் வந்து சந்தேகம் கேட்டால், ‘எனக்குத் தெரியாது’ என்பது அவரது பதிலாக இருந்தது. ஏனெனில் தாம் கற்றறிந்த அனைத்தும் பாதியளவே என்பது அவரது எண்ணம்.”

அவர்கள் பயின்ற கல்வி அவர்களுக்கு ஞானம் வளர்த்தது. அதை மிகைத்து இறையச்சத்தையும் பணிவடக்கத்தையும் வளர்த்தது. மிகையில்லை. “நாங்களெல்லாம் மார்க்கச் சட்ட வல்லுநர்கள் இல்லை. நாங்கள் என்ன பெரிதாகச் செய்துவிட்டோம். நாங்கள் அறிந்த ஹதீதை தெரிவிக்கிறோம். அவ்வளவே. மார்க்கச் சட்ட வல்லுநர் அப்படியல்ல. தாம் கற்றறிந்ததை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு எத்தி வைப்பார்” என்று சொல்கிறார் அஷ்-ஷாபி.

‘மார்க்க மேதை’ என்று மற்றொரு மார்க்க மேதையே சான்று கூறுபவர் அன்று இப்படிக் கூறியுள்ளார். நமக்கோ தற்காலத்தில் தகவல்களைப் தேடிப்பெறுவது விரல் நுனிப் பிரயாசை மட்டுமே என்றானதும் வாசிக்கும் தகவல்களை ஞானமென்றும் அறிவென்றும் கருதும் தப்பர்த்தம் இயல்பாகிவிட்டது.

போலவே, ஆர்வமோ, என்னவோ, அறிவை வளர்க்கிறேன் பேர்வழி என்று அர்த்தமற்ற கேள்விகளும் சகஜமாகி விடுகின்றன. அப்படியான உதாரணம்தான் சாத்தான் மனைவியின் பெயர் என்னவென்ற கேள்வி. நிறைமதியாளர் அஷ்-ஷாபி. என்ன செய்தார்? ‘நான் யார் தெரியுமா? நான் எழுதிய எதையாவது படித்துத் தொலைத்திருக்கிறாயா? சாபக்கேடே’ என்றெல்லாம் நொந்து கொள்ளவில்லை. பதில் அளித்தார்.

“அந்தத் திருமணத்திற்கு நான் செல்லவில்லையே!”

-நூருத்தீன்

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

<<சான்றோர் முகப்பு>>  <<அடுத்தது>>

Related Articles

Leave a Comment