அமைதிப் படை (மேட் இன் யு. என்.)

போஸ்னியாவில் விஸில் ஊதினார் கேத்ரின் போல்கோவாக் (Kathryn Bolkovac). ஐ.நா.வின் சர்வதேச போலீஸ் படை கண்காணிப்பாளராக அங்கு அவருக்கு வேலை.

அவர்கள் போலீஸ்காரம்மா. விஸில் ஊதினார்கள்; அதற்கென்ன? போஸ்னியாவில் விஸில் ஊதுவது குற்றமா?

அது தெரியாது. ஆனால் கேத்ரின் அதற்காக பணியிலிருந்து விலக்கப்பட்டார். சரியாகச் சொல்வதென்றால் தூக்கப்பட்டார்.

நெப்ராஸ்கா (Nebraska) அமெரிக்காவின் மத்தியில் உள்ள ஒரு மாநிலம். அங்கு புலனாய்வுப் போலீஸ் அதிகாரியாக வேலைபார்த்து வந்தவர் கேத்ரின். அவரது சிறப்புப் பிரிவு – பாலியல் குற்றங்கள். கடமையே கண்ணாக வேலை, அரசாங்கத்தின் மாத ஊதியம் என்று வாழ்ந்துவந்த அவருக்கு ஒருநாள் பெரும் வாய்ப்பு ஒன்று வந்து கைகுலுக்கியது.

அது 1999-ஆம் ஆண்டு. ‘போஸ்னியாவில் ஐ. நா. வின் போலீஸ் அதிகாரியாக உத்தியோகம். கைநிறைய சம்பளம். என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டது வாய்ப்பு.

“போஸ்னியாவா? வெளிநாடா?” என்று அவர் யோசிக்க, “சொல்ல மறந்துவிட்டேனே. உனது வருமானத்திற்கு வரி விலக்கு.”

அமெரிக்காவில் சம்பாதிக்கும் பணத்திற்கு, கட்டி அழவேண்டிய வரி கணிசம். ‘தோலுரித்த வாழைப்பழம்’ போல் வருமான வரியற்ற ஊதியம் என்பது பெரும் கவர்ச்சி. அது தவிர வேறு காரணங்களும் இருந்திருக்கலாம். விஸிலடித்தார் கேத்ரின். பணியை ஏற்றுக்கொண்டார்.

போஸ்னியாவில் ஐ. நா. வுக்கு என்ன சோலி? கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யுகோஸ்லோவியா குடியரசில் (Socialist Federal Republic of Yugoslavia) கம்யூனிசம் குலைந்தது. அதைத் தொடர்ந்து அந்தக் குடியரசில் ஒன்றிணைந்திருந்த போஸ்னியா நாட்டில் இனவாதப் போர் உருவாகி ஸெர்பியர்களும் (Serbs) க்ரோஷியர்களும் (Croats) போஸ்னியாவின் முஸ்லிம்களை அக்கிரமமான முறையில் கொத்துக் கொத்தாய்க் கொன்று குவிக்க ஆரம்பித்தனர். பெண்கள், சிறுமிகள் என்று வகைதொகையின்றி 50,000 கற்பழிப்புகள். போஸ்னியாவில் முஸ்லிம் இனத்தையே ஒழித்துவிடும் நோக்கில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க, பேரளவிலான அரக்கத்தனங்கள் நிகழ்ந்தேறின.

பின்னர் நேட்டோ (NATO) நாடுகளின் ராணுவத் தலையீட்டிற்குப் பிறகு பல ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் எழுதப்பட்டு அக்கிரமம் முடிவுக்கு வந்தது என்பதெல்லாம் கொடிய வரலாற்றின் சிறிய கதைச் சுருக்கம்.

இப்படி அவலமாகிக் கிடந்த போஸ்னியா நாட்டிற்குள் ஐ. நா. வின் அமைதிப் படை சென்று தங்கி, மீட்புப் பணி, போலீஸ் பணியில் ஈடுபட்டது. அவற்றில் பணியாற்றத்தான் பல நாட்டிலிருந்தும் பலதரப்பட்ட அதிகாரிகள், காவலர்கள் என்று ஆளெடுக்கப்பட்டு, பணியாற்ற போஸ்னியா வந்து சேர்ந்தார்கள் அவர்கள்.

கதையைத் தொடருமுன் அமெரிக்காவில் ஓர் அறிமுகம் பாக்கியிருக்கிறது; செய்துகொள்வோம். DynCorp ஓர் அமெரிக்கா நிறுவனம். இந்நிறுவனத்திற்கு ஆகாய ஊர்தி, ராணுவத்திற்கு உதவி, என்று பலவகையில் அடித்து நிமிர்த்தும் தொழில்கள். அவற்றுள் குறிப்பாய் அமெரிக்க இராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை. அமெரிக்கா போர் நிகழ்த்தும் நாடுகளிலெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் பல வகையான காரியங்கள் நிகழ்த்துகிறது இந்நிறுவனம். தாதாவுக்கு அடியாள்போல என்பது கொச்சையான உதாரணமாகத் தோன்றினாலும் உண்மை அதற்கு நெருக்கம். நமக்குப் பக்கத்து நாட்டுக்கும் பக்கத்து நாடான ஆப்கனில் அதிபர் ஹமீத் கர்சாய் இருக்கிறாரே அவருக்குப் பாதுகாவலர் படை (Bodyguard) பொறுப்பு இந்த DynCorpதான்.

இந்த DynCorp-ன் பிரிட்டிஷ் பிரிவு போஸ்னியாவிலுள்ள ஐ. நா. வின் அமைதிப்படைக்கு ஆளெடுத்து அனுப்பிவந்தது. பதினைந்து மில்லியன் டாலர் ஒப்பந்தம். அந்த வாய்ப்புதான் கேத்ரின் போல்வாக் வீட்டு காலிங்பெல்லை அழுத்தி ‘டிங்..டாங்’. பொறுப்பான பதவி, அர்த்தமுள்ள வேலை, பை நிறைய பணம் என்ற மகிழ்ச்சியில் உண்மையிலேயே அன்று அவர் உதடு குவித்து விஸில் அடித்திருக்கலாம். ஆனால் போஸ்னியாவில் பணிக்குச் சென்ற இடத்தில் அவர் அடித்த விஸில்தான் பெரும் விவகாரம்.

Whistleblower என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அர்த்தம் யாதெனில், ஒரு நிறுவனம், இயக்கம், அமைப்பு போன்றவற்றில் கள்ளத்தனமாய் நிகழும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளைக் கண்டுபிடித்து வெளியிடுபவர். இப்பொழுது ஊடகங்களில் பரபரவென்று பேசப்படுகிறதே Edward Snowden-னின் செய்திகள் – அவர் ஒரு whistleblower. கேத்ரின் அன்றைய whistleblower.

அவர் போஸ்னியா வந்து சேர்ந்து சில மாதங்கள் ஆகியிருக்கும். ஒருநாள் போஸ்னா ஆற்றில், ஒரு சிறுமியின் சடலம் மிதந்து வந்தது. சிறிதளவு துணி, ஆடை என்ற பெயரில் அவள்மேல். அவள் யுக்ரைன் (Ukraine) நாட்டுப் பெண். அடுத்த சில நாள்களில் மால்டோவா (Moldova) நாட்டுச் சிறுமி ஆற்றங்கரையோரம் திரிந்து கொண்டிருந்தவள் பிடிபட்டாள். ‘என்ன? ஏது?’ என்று கேத்ரீன் விசாரிக்க ஆரம்பிக்க, அவருக்குக் கிடைத்த ஒற்றை வார்த்தை ‘ஃப்ளோரிடா’.

‘ஆத்தா ஆடு வளர்த்தா. கோழி வளர்த்தா. ஆனா நாயை மட்டும் வளர்க்கலை’ என்பதுபோல், ‘ஐ. நா. பணம் கொடுத்தான், சோறு கொடுத்தான், புட்டி கொடுத்தான் ஆனா ‘குட்டி’ மட்டும் கொடுக்கலியே’ என்று திமிர் பிடித்து உடல் பசியில் புழுங்கிப்போய்க் கிடந்தார்கள் ஐ. நா. வின் போலீஸும் அதிகாரிகளும். அதைத் தணித்துக் கொள்ள என்ன நடக்கும்? நடந்தது. ஆனால் மிருகத்தனமாய்.

பணம் கொடுத்தார்கள்; வேசியுடன் பாவம் புரிந்தார்கள் என்று நிகழ்ந்திருந்தால் ‘ஊர் உலகத்தில் இல்லாததா?’ என்று சொல்லியிருந்திருப்பார்கள். ஆனால் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது – sex trafficking – விபச்சாரத்திற்காகப் பெண்களைக் கடத்தும் தொழில். அதில் ஈடுபட்டிருந்தவர்கள்?

கேத்ரீனுக்குத் துப்பு கிடைத்த ‘ஃப்ளோரிடா’ ஒரு நைட் கிளப். ஐ. நா. போலீஸின் வாகனங்கள் அங்கு நின்றிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். நைட் கிளப் என்பது மேற்கத்தியக் கலாச்சாரத்தின பாவப் பட்டியலில் இடம் பெறாததால் கேத்ரீன் அதை நினைத்து அலட்டிக் கொள்ளவில்லை. அவலச் சிறுமியிடம் கிடைத்த துப்பை, ப்ளோரிடா நைட் கிளப்பில் நுழைந்து துலக்க ஆரம்பித்ததும்தான் கசியத் துவங்கின கள்ளத் தொழிலின் இரகசியங்கள்.

கட்டுக் கட்டாய் அமெரிக்க டாலர்கள், பல பெண்களின் வெளிநாட்டு பாஸ்போர்ட் அங்கு இருந்தன. பூட்டிய அறையொன்றினுள் ஏழு சிறுமிகள். ஒருவரையொருவர் பயத்தில் பற்றிப் பிடித்துக்கொண்டு, கசங்கி அழுக்காய்க் கிடந்த மெத்தையில் அமர்ந்திருந்தார்கள். அவர்களது கண்களில் அப்பட்டமான பீதி. விசாரித்தால் யாருமே வாயைத் திறக்கவில்லை. இறுதியில் ஒருத்தி ஆற்றை நோக்கிக் கையைக் காட்டினாள்.

“எங்களது சடலம் அங்கே மிதப்பதை நாங்கள் விரும்பவில்லை!”

சேவையாற்ற வந்த ஐ. நா. வின் போலீஸுக்கும் அலுவலர்களுக்கும் காமச் சேவை புரிய அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து பதினெட்டு வயதிற்கும் குறைவான சிறுமிகளைக் கடத்தி வர ஆரம்பித்திருந்தார்கள் விபச்சார வியாபாரிகள். ஹோட்டல் பணிப்பெண், குழந்தையைக் கவனிக்கும் வேலை, வீட்டு வேலை, நிறைய பணம் என்று பொய் சொல்லிக் கடத்தி வந்திருந்தார்கள்.

அவர்கள் போஸ்னியாவிற்கு வந்ததும் இரவு விடுதிகளில் அடைத்து வைத்து, விபச்சாரம் என்பதோடல்லாமல், அந்தச் சிறுமிகளை காம அடிமைகளாக (sex slaves) விளையாடியிருக்கிறார்கள் ஐ. நா. வின் ஊழியர்கள். கொடுமை அதுமட்டுமன்று. இந்த sex trafficking-ற்கு அப்பட்டமான ஒத்துழைப்பும் அதன் பின்னணியில் மூளையாகவும் இருந்து செயல்பட்டதே ஐ. நா.வின் போலீஸ் அதிகாரிகள்தான்.

கிளப்பில் ரெய்டு நடக்கவிருந்தால் முற்கூட்டித் தகவல் அளிப்பது, தப்பிவிடும் சிறுமிகளைப் பத்திரமாகப் பிடித்து மீண்டும் விபச்சார வியாபாரிகளிடமே ஒப்படைப்பது, தப்பித்தவறி யாரேனும் அந்தச் சிறுமிகளைக் காப்பாற்றிவிட்டால் பத்திரமாய் வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் எல்லையோரம் அவர்களை இறக்கிவிட்டு, ‘இந்தா இங்கிருக்கிறாள்; வந்து அள்ளிச் செல்’ என்று பிராத்தல் நிலையங்களுக்குத் தகவல் அளித்துவிடுவது … தப்பியோடி பிடிபடும் பெண்களுக்கு மற்ற சிறுமிகளின் முன்னிலையில் அந்த விபச்சார வியாபாரிகள் அளிக்கும் சித்திரவதை, மற்றச் சிறுமிகளுக்கு அப்படியோர் எண்ணம் கனவிலும் வராதபடி தடுத்துவிடும்.

தோண்டத் தோண்ட அழுகல் நாற்றங்களுடன் உண்மைகள். விபச்சார வியாபாரிகளின் சம்பளப் பட்டுவாடா புத்தகத்தில் ஐ. நா. போலிஸாரின் பெயர் இல்லாததுதான் குறை. அதிர்ந்து விட்டார் கேத்ரின்.

‘இப்படியெல்லாம் கெட்டப் புள்ளைகள் நம்மிடம் இருக்கிறார்கள்’ என்று அவர் மேல்மட்டத்திற்கு விஷயத்தை எடுத்துச் செல்ல முனைந்தபோதுதான், இது தமக்குத்தான் புது ரகசியம் என்று அவருக்குப் புரிந்தது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு, உயரதிகாரிகளுக்கு, யார் யாருக்குத் தெரிய வேண்டுமோ அனைவருக்கும் விஷயம் தெரிந்திருந்தது. பாவம், அக்கிரமம், அதிர்ச்சி என்று எந்தச் சலனமும் அவர்களிடம் இல்லை. மாறாக கேத்ரினுக்குத்தான் பின் விளைவுகள் ஏற்பட்டன.

அவரது ஆவணங்கள் தொலைந்து போயின; மேலதிகாரிகளிடமிருந்து சம்பந்தமற்ற அனாவசியப் பிரச்சினை, குடைச்சல்; சிலரிடமிருந்து அவருக்கு எச்சரிக்கை. இறுதியில் வெறுத்துப்போய் இந்த போஸ்னியா பணித்திட்டத்தின் 50 மூத்த அதிகாரிகளுக்கு அனைத்தையும் விவரித்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார் கேத்ரின்.

அந்த மின்னஞ்சலின் பொருள் தலைப்பு – “வயிற்றைப் பிரட்டும் சுபாவமும் குற்ற உணர்வும் ஏற்படுபவராயின் இதைப் படிக்க வேண்டாம்”. அதுதான் கேத்ரின் ஊதிய விஸில்.

அதற்கடுத்து நான்கே நாள். அவருக்குப் பதவி குறைப்பு நிகழ்ந்தது. அதற்கடுத்து நாலு மாதங்களில் ஏதோ ‘சப்பை’ காரணம் சொல்லி அவரைப் பணியிலிருந்து தூக்கியது DynCorp.

ஒன்றல்ல, இரண்டல்ல, ஐ. நா.வின் 50 மூத்த அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்ட கொடூரக் குற்றச் செயல்கள், கேத்ரினின்மீதே பூமராங் போல் திரும்பியதென்றால் அவை எந்தளவு செல்வாக்கோடு புரையோடியிருந்திருக்கும்?

இவை எங்கே? உலகிற்கு பாதுகாப்பும் நற்சேவையும் எங்கள் பணி என்று கோட்டு, சூட்டுடன் அதிகாரிகள் செயல்படும் ஐ. நா. வில். விடவில்லை கேத்ரின். DynCorpமீது பிரிட்டன் நாட்டில் வழக்குத் தொடர்ந்தார். அந்த நாட்டுப் பிரிவுதானே அவரை வேலைக்கு அமர்த்தியது? அதனால்.

எனது whistleblowing செயலுக்காகவே டுபாக்கூர்த்தனமாய் பதவி நீக்கம் செய்யப்பட்டேன் என்று வாதாடி வெற்றியும் பெற்றார்.

பின்னர் அவரது அனுபவங்கள் The Whistleblower என்ற தலைப்பில் புத்தகமாகவும் த்ரில்லர் திரைப்படமாகவும் வெளியாகின. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் திரைக்கதை அமைத்து, படம் படு விறுவிறுப்பு. “இத்தனைக்கும் நாங்கள் இதில் காட்டியிருப்பது சொற்பம். கதையின் வீரியத்தைக் மட்டுப்படுத்தியே எடுக்க வேண்டியிருந்தது” என்று சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் லாரிஸா (Larysa Kondracki).

{youtube}al3anBiHwmI{/youtube}

விஷயங்கள் அம்பலமாயினவே தவிர, DynCorp சிறிதளவும் பாதிப்படையவில்லை. மாறாக ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அடுத்தடுத்து அதற்கு பெரிய அளவில் அமெரிக்காவின் பெருந்தொகை ஒப்பந்தங்கள். போஸ்னியாவில் அந்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர். அவ்வளவுதான்!

மேல் நடவடிக்கை? அதெல்லாம் மூச்! ஏனெனில்,

ஐ. நா. வின் பணிக்குச் செல்கிறார்களே அவர்களுக்கு Diplomatic Immunity எனப்படும் அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவிடுவதால், ஒருவருக்கும் சுண்டுவிரல் நகத்தில்கூட கீறல் இல்லை.

கேத்ரின் போல்கோவாக்?

அவர் மட்டும் உலகளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் என்று இத்தகைய கொடூரங்களுக்கு எதிராக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 04 ஜுலை 2013 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment