மின் கார்

பெரியதொரு உலோகப் பலகையில் நாலாபுறமும் பெரும் டயர்கள் பொருத்தப்பட்ட ஒரு வஸ்துவைக் காட்டி மின்சாரக் கார் என்று சொன்னபோது, “என்னாது?” என்று சிரிப்பு வந்தது.

வீட்டில் பிள்ளைகள் மரப்பலகையில் வடிவமைக்கும் பொம்மை வாகனம் போன்றதுதான் அடிப்படை. ஆனால் பட்டம் படித்த சமத்துப் பிள்ளைகள் டயர்களுக்கு இடையே பேட்டரியைப் பொருத்தி, நடிகைக்கு ஒப்பனை செய்ததுபோல் கவர்ச்சியாய் காரின் உடலை உருவாக்கி, நவீன வசதிகள் நிரப்பி, மினுமினுப்பாய் இருந்தது மின்சாரக் கார்.

“மின்சாரமா? அப்படீன்னா?” என்ற தமிழக வாசகர்களின் நக்கலுக்கு இதில் ஆறுதல் ஒளிந்துள்ளது. அது பிறகு.

வாயுத் தொல்லை மனிதர்களுக்கு மட்டும் அசௌகரியம் அல்ல, பூமிக்கும். ஆனால் இந்த வாயு, வாகனங்கள் உமிழும் கரிமம். இட்டு நிரப்பும் பெட்ரோலோ, டீசலோ வெளியேற்றும் கரிமம், மாபெரும் கர்மம். சுற்றுப்புறச் சூழலுக்கு வில்லன் என்று நீண்ட காலமாகக் கவலைப்பட்டு வருகிறார்கள் சுற்றாடல் வல்லுநர்கள்.

வாகனங்களுக்கு லைசென்ஸ் புதுப்பிக்க emission testing கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, கடுமையாய்ப் பின்பற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இதைப் பற்றிய கவலை அதிகம் இருக்கும்போது, எந்தச் சட்டமாக இருந்தாலும் மேசைக்கு அடியில் கைகுலுக்கி விசாரித்துவிட்டு, காரியம் சாதிக்கும் இந்தியா போன்ற நாடுகளை யோசித்துப் பாருங்கள். சுத்தமான காற்றை சிலிண்டர்களில் நிரப்பி விற்பது எதிர்காலத்தில் இங்கு சிறந்த வணிகம்.

இப்பொழுது சந்தைக்கு வரும் மின்சார கார்கள் புதிதொன்றுமில்லை. 1996லேயே, அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனி, General Motors EV1 என்ற பெயரில் இத்தகைய வாகனங்களை உருவாக்கி குத்தகைக்கு விட ஆரம்பித்தது. அதற்கு மக்கள் மத்தியில் குறிப்பிடும்படியான நல்ல வரவேற்பும் கூட. ஆனால் அதை ஒரே அமுக்காக அமுக்கியது ஒரு சக்தி. அமுக்கு என்பது பெயரளவில் இல்லை. மின்சார கார் ஆதரவாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தையும் மீறி கார்களை கொத்துக் கொத்தாக க்ரேனில் அள்ளிச்சென்று அமுக்கி, நசுக்கி, தகர டப்பாக்களாக்கிவிட்டு பிறகுதான் சோம்பல் முறித்தார்கள்.

உதிரிபாக விற்பனை, கார் பராமரிப்புத் தொழில் பாதிப்பு ஆகியனவற்றை இதற்குப் பின்னணியாகச் சொன்னாலும் அழுத்தமான சந்தேகம் பதிந்தது ஆயில் மாஃபியாவின் அரசியல் மீதுதான். புறந்தள்ள இயலாத சந்தேகம் அது. ஒரு துளி ஆயிலுக்காக தம் அரசாங்கங்களைப் போர் தொடுக்க வைத்து பல மக்களின் ஆயுளைப் பறிக்கும் வல்லமையுள்ள தீவிரவாதிகள் நிரம்பியது ஆயில் மாஃபியா. அவர்கள் சாய்ந்து அமர்ந்து வேடிக்கை மட்டும் பார்த்திருப்பார்கள் என்று நம்புவது கடினம்.

குறுகிய ஆயுளுடன் மரித்துப்போன இந்த கார்களைப்பற்றி, Who Killed the Electric Car? என்ற பெயரில் க்ரிஸ் பைன் (Chris Paine) என்பவரின் இயக்கத்தில் டாக்குமென்ட்டரி படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளியானது. ”அப்படியா சேதி?” என்று பாப்கார்ன் கொறித்துக்கொண்டே பார்த்துவைத்தார்கள் அமெரிக்கர்கள்.

இப்படி அன்று வயர் பிடுங்கப்பட்ட ரோபோவாக செயலிழந்த இத்திட்டம் இப்பொழுது புத்துணர்ச்சியுடன் மீண்டு வர, நவீன வடிவமைப்புகளுடன் மிரட்டுகிறது Tesla Motors நிறுவனத்தின் புதிய மின்சார கார்.

காரில் பெட்ரோல் நிரப்ப மூடியைத் திறக்குமிடத்தில் வயரைச் செருகி, மறுமுனையிலிருந்து பாயும் மின்சாரம் பேட்டரியை சார்ஜ் செய்கிறது. லேப்டாப், கைப்பேசி போன்றவற்றை சார்ஜ் செய்து உபயோகிப்பதைப் போன்ற யுக்தி. இதனால் மின்சார ரயிலுக்குச் செலுத்துவதைப் போல் தெருவெங்கும் கம்பம் நட்டு கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சத் தேவையில்லை என்பது இதிலுள்ள ஆறுதல்.

எரிபொருள் பேட்டரியை ஒளித்து வைத்துவிட்டதால், காரின் முன் பேனட்டைத் திறந்தால் இஞ்ஜின், ரேடியேட்டர், கார்பரேட்டர் போன்ற எந்த சமாச்சாரமும் இன்றி கள்வன் துடைத்துவிட்டுப்போன லாக்கர் பெட்டியைப்போல் ‘ஜிலோ’வென்று இருக்கிறது. விளைவாக முன்புறமும் பின்புறமும் என்று கார் நிறைய சாமான்கள் வைத்துக் கொள்ள நிறைய இடம்.

மற்றபடி எல்லாமே விரல் நுனி பட்டன் வசதி. Science fiction படங்களில் வருவதைப்போல் எலக்ட்ரானிக் மேஜிக் பரவிக் கிடக்கிறது. ஸ்டியரிங் அருகே லேப்டாப் திரையை ஒருக்களித்தாற் போன்ற பெரிய திரை. பட்டனைத் தட்டினால் கூரை திறக்கிறது; என்னென்னவொ நிகழ்கிறது. ஏதாவது ஒரு பட்டனைத் தட்டினால், திரையில் பெண் தோன்றி, நம் கன்னத்தைச் செல்லமாகத் தட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Zero emission என்பதால் சுற்றுச்சூழலின் தோஸ்த் இந்த வாகனம் என்று அமெரிக்காவின் சில மாநிலங்களில் இதற்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு. ஷாப்பிங் மால்கள், நிறுவனங்களின் பார்க்கிங் என்று பல இடங்களில் காரை ரீசார்ஜ் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தத் துவங்கிவிட்டார்கள். பெட்ரோல் பங்க்குகளைப் போல் ரீசார்ஜ் நிலையங்களும் வந்துவிடும். எல்லாமிருக்க,

டேக்ஸ் ஃப்ரீ என்றாலும் ஷாக்கடிக்கிறது விலை. குறைந்த பட்சம் அறுபத்தைந்தாயிரம் அமெரிக்க டாலராம். சுமார் 35 இலட்ச ரூபாய் மட்டுமே.

இத்தகைய கார்களைத் தமிழகத்தில் தயாரிக்க வேண்டும்.

வீட்டிற்கு ஒரு மரம் இல்லாவிட்டால் போகட்டும். அனைவரும் தத்தம் நிலம், வீடு, சொத்து சுகம் என்று அனைத்தையும் விற்றாவது இந்தக் காரை வாங்கிவிட வேண்டும்.

எது எதற்கோ, என்னென்னவோ இலவசம் அளிக்கும் அரசாங்கம் அப்படியாவது இலவச மின்சாரம் வழங்கி விடாதா என்ன?

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 02 மே 2013 அன்று வெளியான கட்டுரை

அவ்வப்போது – தொடர் கட்டுரைகள்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

Related Articles

Leave a Comment