எனக்காக இறைஞ்சுங்கள்!

மன் நாட்டிலிருந்து பெருமளவிலான முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்திருந்தனர். அவர்களிடம், ‘உங்களுள் உவைஸ் இப்னு ஆமிர் என்பவர் இருக்கிறாரா?’

என்று விசாரித்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. யமனிலிருந்து முஸ்லிம்கள் வரும்போதெல்லாம் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்பது அவருக்கு வாடிக்கையாகி இருந்தது.

கலீஃபாவாக உமர் ஆட்சி செலுத்திய காலம் அது. அச்சமயம் ரோமர்களிடமும் பாரசீகர்களிடமும் ஏககாலத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் முஸ்லிம்களின் படைகளுக்கு நிறைய வீரர்கள் தேவைப்பட்டனர். அதற்காகப் போரில் கலந்து கொள்வதற்காகவே பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் ஆர்வத்துடன் மதீனாவிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களைத் தேர்ந்தெடுத்து அணி பிரித்து, போர் நடைபெறும் பகுதிகளுக்கு உமர் அனுப்பிவைப்பார். அதற்காகத்தான் யமன் நாட்டிலிருந்தும் அந்த முஸ்லிம்கள் வந்திருந்தனர்.

அவர்களிடம்தான் எப்பொழுதும்போல் உமர் விசாரிக்க, அந்தக் குழுவில் உவைஸ் இப்னு ஆமிர் என்றொருவர் இருந்தார். “இதோ இவரா பாருங்கள்” என்று யமனியர் அவரை அடையாளம் காட்டினார்கள். ஆதார் அட்டை போன்றவை இல்லாத காலமில்லையா? அதனால் தாம் தேடியவர் அவர்தாம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ஆதாரங்களை விசாரிக்க ஆரம்பித்தார் உமர்.

“நீர்தாம் உவைஸ் இப்னு ஆமிர் என்பவரோ?”

“ஆம்” என்றார் அவர்.

“முராத் கோத்திரம்தானே?”

“ஆம்”

“கரன் குலமா?”

“ஆம்”

“உமக்குத் தொழுநோய் ஏற்பட்டு, பின்னர் ஒரேயொரு திர்ஹம் அளவிலான தோல் பகுதியைத் தவிர, பிரார்த்தனையின் மூலம் அந்நோயிலிருந்து குணமடைந்தவரா?”

தயக்கம் இன்றி அதற்கும் “ஆம்” என்று பதில் அளித்தார் உவைஸ்.

“உம்முடைய தாய் உயிர் வாழ்கிறார்களா?”

“ஆம்”

தாம் தேடிக் காத்திருந்தவர் அந்த உவைஸ்தாம் என்று கலீஃபா உமருக்கு உறுதியானது. எதற்காக இத்தனை கேள்விகள், முகம் அறியாத யாரோ ஒருவருக்காக ஆவலுடன் காத்திருப்பு?

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்” என்று நபியவர்கள் அறிவித்ததை அவருக்குக் கூற ஆரம்பித்தார் உமர்:

“முஸ்லிம் படையினருடன் இணைந்துகொள்ள யமனிலிருந்து முஸ்லிம்கள் உங்களிடம் வருவார்கள். அவர்களுள் உவைஸ் இப்னு ஆமிர் என்பவர் இருப்பார். அவர் முராத் கோத்திரத்தின் கிளையான கரன் குலத்தைச் சார்ந்தவர். அவர் தொழுநோயால் கஷ்டப்பட்டு, பின்னர் ஒரேயொரு திர்ஹம் அளவிலான பகுதியைத் தவிர அது குணமாகியிருக்கும். இங்கு வரும்போது அவருடைய தாய் அவருடன் இருப்பார். அவர் தம் தாய்க்குப் புரிந்த சேவை வெகு சிறப்பானது. அவர் அல்லாஹ்வின்மீது ஆணையிட்டு ஒரு சபதம் செய்தால், அல்லாஹ் அதை நிறைவேற்றுவான். உங்களால் இயலுமேயானால், உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படி அவரிடம் வேண்டுங்கள்” (ஸஹீஹ் முஸ்லிம் 4685 – ரஹ்மத் பதிப்பு எண் 4971).

“எனது பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சுங்கள் உவைஸ்” என்றார் உமர்.

“இவர்கள் சொர்க்கம் புகுவார்கள்” என்று நபியவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பெற்றவர்களுள் ஒருவரான கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு, தாம் அதுவரை சந்தித்திராத உவைஸ் இப்னு ஆமிரிடம் தம்மை துஆவில் நினைவு கூரும்படி வேண்டி நின்றார். நபியவர்களைச் சந்திக்காதவரான உவைஸ் நபியவர்களின், வெகு முக்கியமான தோழர்களுள் ஒருவரான உமரின் பொருட்டு இறைவனிடம் இறைஞ்சினார்.

எப்படி உவைஸுக்கு இத்தகு சிறப்பு? அவர் தம் தாய்க்கு புரிந்த சேவையே அதற்கான காரணம் என்பது மார்க்க அறிஞர்களின் கருத்து.

“நீர் எங்குச் செல்ல விரும்புகிறீர்?” என்று கேட்டார் உமர்.

“கூஃபா” என்றார் உவைஸ்.

“உமக்காக கூஃபாவின் ஆளுநருக்கு நான் ஒரு கடிதம் எழுதித் தருகிறேனே” என்றார் உமர்.

அதற்கு உவைஸின் பதில் பெரும் ஆச்சரியம். “நான் ஏழை, எளிய மக்களுடன் அவர்களுள் ஒருவனாகவே வாழ விரும்புகிறேன்”

சமூகத்தில் நமக்கென்று ஓர் அந்தஸ்தும் வசதியும் அங்கீகாரமும் இருக்க வேண்டும் என்பதுதானே நம் ஒவ்வொருவரின் விருப்பம். அதுவும் அத்தகைய வாய்ப்பிற்கு ஆட்சியின் தலைவரே பரிந்துரைக்கிறேன் எனும்போது அது எத்தகு வாய்ப்பு? ஆனால் அதை அப்படியே கையால் தள்ளி நிராகரிக்க ஒருவரால் முடிகிறது என்றால் அது எத்தகு உயர்குணம்? உவைஸ் இப்னு ஆமிருக்கு அது வெகு எளிதாக அமைந்திருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டு கூஃபா நகரின் மேட்டுக்குடியைச் சேர்ந்த கரன் குலத்தவர் ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்ற வந்தார். வந்தவர் உமரைச் சந்திக்க, அவரிடம் உவைஸைப் பற்றித்தான் விசாரித்தார் உமர். வாழ்வாதாரத்திற்குத் தேவையான வசதிகள் இல்லாத வறிய நிலையில் அவர் உள்ளதைத் தெரிவித்தார் வந்தவர்.

நபியவர்கள் உவைஸ் இப்னு ஆமிர் குறித்து அறிவித்ததை அவரிடம் தெரிவித்த உமர், “உமக்காகப் பாவமன்னிப்பு கோரி இறைவனிடனம் இறைஞ்சும்படி உவைஸிடம் கோருங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

ஹஜ்ஜை முடித்து கூஃபா திரும்பிய அவர், உவைஸைச் சந்தித்து, “எனக்காக இறைவனிடம் பாவமன்னிப்பிற்கு இறைஞ்சுங்கள்” என்றார்.

“தாங்கள் இப்பொழுதுதான் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியுள்ளீர்கள். என்னைப் போய் தங்களுக்காக இறைஞ்ச வேண்டுகிறீர்களே?” என்று புரியாமல் அவரிடம் கேட்டார் உவைஸ்.

அந்தக் கேள்விக்கு விடையளிக்காமல், “எனக்காக இறைவனிடம் பாவமன்னிப்பிற்கு இறைஞ்சுங்கள்” என்றார் ஹாஜி.

“தாங்கள் இப்பொழுதுதான் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியுள்ளீர்கள். தங்களுக்காக இறைஞ்ச வேண்டுமென்று என்னிடம் வேண்டுகின்றீர்களே?” என்று மீண்டும் கூறிய உவைஸுக்குச் சட்டென்று பொறி தட்டியது. “நீங்கள் கலீஃபா உமரைச் சந்தித்தீர்களா?”

“ஆம்”

அந்த ஹாஜிக்காக இறைஞ்சினார் உவைஸ். இந்த விஷயம் மெதுவே மக்களிடம் பரவி, ‘அவர் வேண்டினால் பலிக்குமாம்’ என்பதுபோல் உவைஸ் இப்னு ஆமிரின் மீது அவர்களது கவனம் குவியத் துவங்கியது. எத்தகைய வெளிச்ச வட்டமும் விழாமல் எளியோருடன் எளியோனாய் வாழ விரும்பிய உவைஸ், “இதென்ன வம்பு” என்று கருதியவர், சொல்லாமல், கொள்ளாமல் அந்த ஊரைவிட்டு வெளியேறி போயே போய் விட்டார்.

வேறென்ன?

நபியவர்களால் சான்றளிக்கப்பட்ட மெய்யான தகுதியே அமைந்திருந்தாலும் தாயத்திலும் தகட்டிலும் மக்களை வழிகெடுக்காத மெய் பக்திமான் அவர்.

ஆயுள் மிச்சமுடன் பெற்றோர் அமையப் பெற்றிருப்பவர்களுக்கு உவைஸ் அல் கரனியிடம் பாடம் உள்ளது.

-நூருத்தீன்

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<சான்றோர் முகப்பு>>

Related Articles

Leave a Comment