ங்கிலத்தில் “Double Standard” என்றொரு பதம் உண்டு. தமிழில் இரு நிலைபாடு. Terrorism, terrorist, – தீவிரவாதம், தீவிரவாதி – எனும் சொற்களுக்கும் இந்த ”Double Standard” -க்கும் அதென்னவோ அப்படியொரு தோழமை – அம்மா, சின்னம்மா போல. இந்தத் ”தீ”ச்சொற்களுக்கான மொழியாக்கமே உலகம் முழுக்க தனியொரு விதிக்கு உட்பட்டு, அது தான் நியதி என்று நிலைத்தும் விட்டது.

Terrorism என்றால் ”the systematic use of terror especially as a means of coercion” என்கிறது வெப்ஸ்டர் அகராதி. அதாவது ”முறைப்படி திட்டமிட்டு பேரச்சம், பீதி போன்றவற்றை, குறிப்பாய் பலவந்தமாய் ஏற்படுத்துவது”.

சர்வதேச தீவிரவாதம் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய ‘மாயவலை’யின் முன்னுரையில், ”தீவிரவாதம் என்பது அதிருப்தியில் பிறக்கும் குழந்தை. போதாமைகளின் விளைவு. வெறுப்பு மற்றும் விரக்தியின் விபரீத விளைவு. இல்லாமை, ஏழைமை, கல்விக்குறைபாடு, வேலைவாய்ப்பின்மை போன்ற எளிய காரணங்களுக்குள் இதனை வரையறுத்துவிட முடியாது” என்கிறார்.

எனில், அது என்ன தீவிரவாதம் என்றாலே இஸ்லாம்? தீவிரவாதி என்றால் முஸ்லிம்?

குண்டும், துப்பாக்கியும் என்றாலே முஸ்லிமும் தீவிரவாதமும் என்றால், ரதமோட்டிக் குருதி பெருக்கெடுக்கத் தூண்டியதை என்னவென்பது? ரொட்டியும் பிஸ்கெட்டும் சுடும் பேக்கரியில் மனிதர்களைச் சுட்டெரித்ததை எதில் சேர்ப்பது? கர்ப்பிணியைக் கற்பழித்து, வயிறு பிளந்து குழந்தையைக் கொன்றதை எந்தக் கொடூரத்தில் சேர்ப்பது? அங்கு ஏன் மதம் மறக்கப்படுகிறது?

உலகிலுள்ள எந்த சூத்திரத்தையும் விட கடினமானது “தீவிரவாதம்” என்று சொல்லப்படும் இன்றைய நிலை. இதனை ஒரு குறிப்பிட்ட மதம், அதன் மக்கள் மட்டும் என்று பரப்பப்பட்டு வருவது யதார்த்தமான தவறல்ல, ஒரு தேர்ந்த சதித்திட்டம் – conspiracy.

உலகளாவிய வகையில் பல இடங்களில் உரிமைக்கு, சுதந்தரத்திற்கு, அத்துமீறலுக்கு, ஆக்கிரமிப்புக்கு இத்யாதி காரணங்களுக்காகத்தான் பல இயக்கங்கள், அமைப்புகள், போராடி வருகின்றன, ஆயுதமேந்தி. ஆயுதமேந்தி மட்டுமே! அதில் தான் ஆரம்பிக்கிறது எல்லாமே. சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கும் உள்ள வித்தியாசம் போல் தான் போராளிக்கும் தீவிரவாதிக்கும் உள்ள வித்தியாசம். அதைப் பிரித்தறிவதில் இருக்க வேண்டும் நேர்மையும் நியாயமும்.

தீவிரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள், இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கத்தவர்கள்தான் என்பதுதானே இங்கு நிலைத்திருக்கும் பெரும்பான்மையான கருத்து. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உள்ள அத்தனை நியாயங்களும், தர்மங்களும் ஹமாஸிற்கு இல்லையா என்ன?

பா.ரா. குறிப்பிடுகிறார், ”அடிப்படையில் சுதந்தர தாகமும் வேகமும், அதற்காக உயிரையும் கொடுக்கத் துணியும் மனோநிலையும் கைவரப் பெற்றவர்கள்தான் போராளிகளாகிறார்கள். போராளியாக மலரும் பொழுதில் அற்ப வெற்றிகளிலும் எளிய சுகங்களிலும் மனம் பறிகொடுத்து, இலக்கு மாறியவர்கள் தீவிரவாதிகளாகத் தேங்கிப் போகிறார்கள்.”

நக்ஸலைட்கள், உல்பா, லஷ்கர், தாலிபான் என அவரவர்க்கும் அவரவர் நியாயங்கள். உள்ளூர், உள்நாடு எனத் தொடங்கி சர்வதேச அளவில் உள்ள அத்தனைக்கும் ஒரே அளவுகோல் நிர்ணயித்து அதிலிருந்தல்லவா போராளியும் தீவிரவாதியும் இனங் காணப்பட வேண்டும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற தர்க்கத்தின் அடிப்படையில் போராளி இயக்கங்களை அணுகினால் அவர்கள் செய்வது எதிர்வினைதான் என்பதும், அதற்கு முந்தைய வினையில் இருக்கிறது இவர்களது நியாயத்தின் முன்னுரை என்பதும் எளிதில் புரியத் தக்கதே!

நிச்சயமாய் எத்தகைய அநியாயக் கொலைகளையும் நியாயப்படுத்துவதல்ல இக்கட்டுரை. மாறாய், கெட்ட வார்த்தையைப் போல் அனைத்தும் அனைவரும் ஜிஹாத், ஜிஹாதிகள் என்று முத்திரையிடாமல் அறப் போரையும் அக்கிரமச் செயல்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள நாம் முயற்சியாவது செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள். அதற்கு, திட்டமிட்டு மேலைநாடுகளும் இங்குள்ள ஹிந்துத்துவ சக்திகளும் பரப்பி வருகின்றனவே Islamophobia, அந்தத் திரையை நீக்கிப் பார்க்கும் ஆற்றல் வேண்டும்.

அனைத்து நாடுகளிடமும் உளவு அமைப்பொன்று உள்ளது. அப்படி அமெரிக்காவிலும் உள்ளது, சி.ஐ.ஏ. என்கிறார்கள். மற்ற நாடுகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரே வித்தியாசம், உலகம் முழுக்க அந்தந்த உளவு அமைப்புகள் தங்களது நாட்டுக்குள் ஊடுருவலையோ, அச்சுறுத்தலையோ மோப்பமிட்டுக் கொண்டிருந்தால், இந்த சி.ஐ.ஏ.க்கு ஆபீஸ் மட்டும்தான் அமெரிக்காவில். செயல்படும் தளங்கள் உலகம் முழுதும்.

இவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பணியும், இவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பணிகளும் அப்படியொன்றும் அஹிம்சைப் பணிகளல்ல. மாறாய் இன்று தீவிரவாதம் என்ற பெயரில் செய்திகள் வெளியாகின்றனவே அதற்கு எந்த விதத்திலும் குறைவானதில்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.

“உலகின் தீய சக்திகள் என்று வருணிக்கப்டும் எந்த ஓர் இயக்கத்தைக் காட்டிலும் அதிகமான தீவிரவாதச் செயல்களை இந்தத் தேசம் (அமெரிக்கா) செய்து வந்திருக்கிறது” என்கிறார் பா.ரா.

இன்று உலகம் முழுதும் வியாபித்திருக்கும் ஆயுதப் போராட்டத்தின் மிகப் பெரும்பாலான நதி மூலம் இங்கு ஆரம்பிக்கிறது. இதைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும்.

என்றால்,

  • காருக்கும், பைக்கிற்கும் ஊற்றிக் கொள்வதைத் தாண்டியும் எண்ணெய் பற்றித் தெரிய வேண்டும்;
  • அபகரிக்கப் பட்ட அந்த நிலங்களைப் பற்றித் தெரிய வேண்டும்;
  • அங்குள்ள நிலங்கள் பிடுங்கப்பட்டது பேரீச்சம் பழத்திற்கல்ல என்று தெரிய வேண்டும்;
  • அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களிலும் WMD பூச்சாண்டி காட்டி நிகழ்த்தப்பட்ட ஆக்கிரமிப்புகளும் அழித்தொழிப்புகளும் தெரிய வேண்டும்;
  • சொந்த நாட்டில் அகதியாய் ஆகும் அவலம் புரிய வேண்டும்;
  • இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அதிபரின் தேசத்தின் கரங்களிலுள்ள ரத்தம் தெரிய வேண்டும்;
  • அந்தத் தேசம் உருவான நாள் முதலாய் கொன்றொழித்த உயிர்களுடன் தீவிரவாதம் என்ற பெயரில் உலகில் கொல்லப்பட்டிருக்கும் உயிர்களை ஒப்பிட்டால் வரும் விடை புரிய வேண்டும்;

இப்படி நிலம், வழிப்பாட்டு ஸ்தலம், யார் பிறந்த இடம் என்ற பிரச்சனைகளைத் தாண்டியும் நிறையத் தெரிய வேண்டும். யாருக்கு இருக்கிறது அவகாசம்?

அதெல்லாம் வேண்டாம். நாம் பார்க்காததா, போடாத சண்டையா, இறுதியில் அஹிம்சையில் பெறவில்லையா விடுதலை? உட்கார்ந்துப் பேசி அஹிம்சையில் போராடினால் என்ன? என்று நாம் கேட்கலாம். அப்படி அஹிம்சையில் விடுதலைப் பெற்ற நாம் எல்லையோரத்திலுள்ள நம் ஜவான்களுக்கு ஆட்டுப்பாலும் வேர்க்கடலையும் கொடுத்தா நிற்க வைத்திருக்கிறோம்?

பொக்ரானில் சோதித்து, பத்திரமாக வைத்திருக்கிறோமே அணுகுண்டு! அதிலிருந்து வெளிவருவது என்னவாக இருக்கும்?

தயவு கூர்ந்து தலைப்பைப் படித்துக் கொள்ளுங்கள்.

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 16 அக்டோபர் 2009 அன்று வெளியான கட்டுரை

Related Articles

Leave a Comment