1921ஆம் ஆண்டு. இந்தியாவை அடிமைத்தளையில் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கமும் கிலாபத் இயக்கமும் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். அரசுப் பணியில் உள்ளோர் தங்களது பணிகளிலிருந்து விலகி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென காந்திஜி விடுத்த அறைகூவல் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. அதை ஏற்று நாடெங்கிலும் பல அதிகாரிகளும் ஊழியர்களும் அரசுப் பணியிலிருந்து விலகி சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தபடி இருந்தனர். அச்சமயம் விழுப்புரத்தில் சப் மாஜிஸ்திரேட்டாக அரசாங்கப் பணியாற்றிவந்தார் பா. தாவூத்ஷா. நாட்டில் பரவியிருந்த அப்போராட்டங்களின் வீரியம் அவரையும் ஈர்த்தது. விளைவாக, தமது சப் மாஜிஸ்திரேட் பணியை உதறித் தள்ளி விட்டு வெளியேறினார் அவர்.
அவர் உதறியது அப்பதவியை மட்டுமன்று. அடுத்த பதவி உயர்வுக்கும் நிலையான வளமான மாதாந்திர ஊதியத்திற்கும் காத்திருந்த வாய்ப்புகளையும்தான். ‘அப்பொழுது என் பெயர் டெபுட்டி கலெக்டர் உத்தியோகத்துக்கு உயர்த்தப்பட வேண்டிய ஜாப்தாவில் பதிவு செய்யப்பட்டிருந்தது’ என்று பின்னர் அவரே தம் வாழ்க்கைச் சுருக்கத்தில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர்தாம் பா.தா. என அழைக்கப்படும் பா. தாவூத்ஷா. 1885ஆம் ஆண்டு தஞ்சை ஜில்லாவில் கீழ்மாந்தூர் என்னும் மண்ணியாற்றங்கரையிலுள்ள குக்கிராமம் ஒன்றிலே அவர் பிறந்தார். கல்வியும் பட்டப்படிப்பும் அரிதாக இருந்த காலம் அது. பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு என்பது தமிழ்நாட்டு முஸ்லிம்கள் நினைத்தும் பார்க்க முடியாத விஷயம். அவர்களுக்கு அச்சமயம் அது வெறுமே ஒரு கனவு. அத்தகு காலக்கட்டத்தில் 1908ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை வெஸ்லீ கல்லூரியில் தாவூத்ஷா எஃப்.ஏ. பயின்று தேறினார். 1909ஆம் ஆண்டு சென்னை ராஜதானிக் கலாசாலையில் (பிரஸிடென்ஸி காலேஜ்) இடம் பிடித்து பி.ஏ. பயின்று 1912ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் அரசாங்க அலுவலில் வீற்றிருந்து சப் மாஜிஸ்திரேட்டாகவும் உயர்ந்திருந்த நிலையில்தான் அதை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றார் அவர். வெளியேறியவர், ஒத்துழையாமை, கிலாபத் இயக்கங்களுக்கு ஆதரவாகப் பரப்புரையில் ஈடுபட்டதோடு மட்டுமின்றி கதர் துணிகளைக் கை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்னை நகரில் தெருத் தெருவாகச் சென்று அதனை விற்பனையும் செய்தார்.
1889ஆம் ஆண்டு கும்பகோணம் நேட்டிவ் ஹை ஸ்கூல் உயர்நிலைப் பள்ளியில் பா. தாவூத்ஷா படித்துக்கொண்டிருந்தபோது கணித மேதை ராமானுஜம் அவருக்கு உற்ற நண்பரானார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பின்போது அவருக்குத் தத்துவப் பாடம் கற்பித்தவர், முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். தமிழ்ப் பேராசிரியராக அமைந்தவரோ உ.வே. சாமிநாத ஐயர். பாலர்ப் பருவத்திலேயே கல்வியில் சிறந்து விளங்கிய பா. தா., கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வென்று பரிசுகளைக் குவித்தார். கல்லூரியின் சிறப்புமிக்க ‘பௌர்டில்லான் பரிசு’ அவருக்கு அளிக்கப்பட்டது. அதுவன்றி, இயல்பாக அவருக்கு ஏற்பட்டிருந்த தமிழ் மொழிப் பற்றால், மதுரைத் தமிழ்ச் சங்கப் பரிட்சையில் முதல் நிலையில் தேறி, பரிசாகத் தங்கப் பதக்கமும் பெற்றார். உ.வே.சா அவர்களின் அன்புச் சீடராக இருந்ததால் பா. தாவூத்ஷாவின் உரைநடையில் தமிழ் தாத்தாவின் சாயலைக் காணலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
பா. தாவூத்ஷாவின் எழுத்துவன்மையும் பேச்சாற்றலும் அவரது இள வயதிலேயே சிறப்பாக வெளிப்படத் தொடங்கின. 1919ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து நாச்சியார் கோவில் முஸ்லிம் சங்கம் மூலமாகத் துண்டுப் பிரசுரங்களை அவர் வெளியிட ஆரம்பித்தார். முஸ்லிம்களிடம் புரையோடியிருந்த மூடப்பழக்கங்களைச் சாடி, இஸ்லாமிய சீர்திருத்தம் நடைபெற வேண்டியதன் அவசியத்தைச் சுட்டி, காட்டமாக வெளியிடப்பட்ட பிரசுரங்கள் அவை. தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு அது முற்றிலும் புதிது. வியப்புடன் விழிவிரித்துப் பார்த்தார்கள் அம்மக்கள். அவரது அந்த முயற்சி பின்னர் ‘தத்துவ இஸ்லாம்’ இதழாகவும் அதன்பின் 1923ஆம் ஆண்டு சென்னையில் ‘தாருல் இஸ்லாம்’ பத்திரிகையாகவும் பரிணமித்தது. மாத இதழாகத் தொடங்கப்பெற்ற தாருல் இஸ்லாம் பின்னர் மாதமிருமுறை இதழாகி, வார இதழாகி, வாரமிருமுறை இதழாகி, நாளிதழாகி ஏறக்குறைய 40 வருடங்கள் இஸ்லாமிய இதழ்களுள் மிகச் சிறப்பான ஒன்றாகக் கொடிகட்டிப் பறந்ததெல்லாம் தமிழ் இஸ்லாமிய ஊடக வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயங்கள்.
தாருல் இஸ்லாம் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தமிழக முஸ்லிம்களிடையே மட்டுமின்றி, பிற மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்திய இதழ். கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி எழுதும்போதும் பேசும்போதும், முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றும்போதும் தவறாமல் நினைவு கூர்ந்து உச்சரிக்கக் கூடிய பெயர்கள் தாருல் இஸ்லாம், தாவூத்ஷா.
‘பள்ளிப்பருவத்தில் நான் ஒரு கையில் குடியரசு இதழையும் இன்னொரு கையில் தாருல் இஸ்லாம் இதழையும் வைத்துக்கொண்டு சுயமரியாதைப் பிரச்சாரம் செய்தேன்’ என்ற வாசகம் பிரசித்தி பெற்ற ஒன்று. அதை இன்றளவும் இன்றைய முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும் தமது உரையில் மறக்காமல் குறிப்பிட்டு வருகிறார்.
‘தாருல் இஸ்லாம் பத்திரிகையையும் அதன் ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்களையும் நினைக்குந்தோறும் நினைக்கும்தோறும் கழி பேருவகை அடைகிறோம். தாருல் இஸ்லாம் பத்திரிகை ஆசிரியர் நம் கூட்டத்தைச் சார்ந்தவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஈ.வே.ரா. பெரியார்.
பா. தாவூத்ஷா பத்திரிகை, பிரசுரத்துறையில் ஒரு பல்கலைக்கழகம். இதழாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், நாவலாசிரியர், அரசியல்வாதி, சமய அறிஞர் எனப் பன்முகத் தன்மைகளைக் கொண்டிருந்தவர் அவர். தமது பத்திரிகைகளின் மூலம் பெரும் இலக்கிய, எழுத்தாளர் அணியை உருவாக்கிய பெருமைக்குரியவர். கதை, புனை கதை வளர்ச்சியை ஆராய்பவர்கள், தாவூத்ஷாவை அணுகாமல் இருக்க முடியாது. ஆங்கில நூல்களை அணியணியாக அவர் மொழிபெயர்த்து வழங்கினார். ஆயிரத்தொரு இரவுகள் அரபுக் கதைகளை மொழி பெயர்த்து தமிழுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர். அந்த அல்பு லைலா வலைலா தொகுதியை அச்சமயம் படிக்காத வாசகர்கள் இல்லை. அதைப் போன்ற மறக்க முடியாத நூல்கள் பற்பல. அவற்றை வெளியிட்டு விற்பனை செய்து வந்தது, அவருடைய ஷாஜஹான் புக் டிப்போ.
முஸ்லிம்களைத் தாண்டியும் தாருல் இஸ்லாமின் வாசகர் வட்டம் விரிவடைந்திருந்தது சுயமரியாதை இயக்கத்தினரும் அந்த இதழை வாங்கிப் படித்து வந்தனர். பெரியார் ஈ.வே.ரா. மீலாது கூட்டங்களிலும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உரையாற்றும் போது, ‘தர்கா கொண்டாட்டங்கள் இறைதூதரின் போதனைகளுக்கு முரணானது’ என்பதை விளக்குவதற்கு தாருல் இஸ்லாமில் தாவூத்ஷா எழுதிய கட்டுரைகளையே மேற்கோள் காட்டுவார்.
குர்ஆனைத் தமிழ் மக்கள் தெள்ளு தமிழில் முறையாகப் பொருளுணர்ந்து கற்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ‘குர்ஆன் மஜீத்’ பொருளுரையும் விரிவுரையும் எழுதி வெளியிட்டார் பா. தாவூத்ஷா. அதேபோல் தூய தமிழில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதி வெளியிட்டார். முதல் நான்கு கலீபாக்களின் வரலாற்றை குலபாஎ ராஷீதீன் என நான்கு புத்தகத் தொகுப்பாக எழுதி வெளியிட்டார். சஹீஹ் புகாரி என்ற நபிமொழி தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட ஹதீஸ்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதினார். முதன் முதல் அழகிய தமிழில் ஹதீஸ்கள் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்தது அதுவாகத்தான் இருக்க வேண்டும். இப்படியாக பா. தாவூத்ஷா எழுதிக் குவித்த நூல்களின் எண்ணிக்கை நூறை எட்டும். அவை சமயம், சமுதாயம், வரலாறு, கதை, கட்டுரை எனப் பல்துறை சார்ந்தவை.
பெண்கள் விடுதலையை வலியுறுத்தி தாருல் இஸ்லாமில் ‘நம் சகோதரிகள்’ என்ற தலைப்பில் அவர் தொடர் கட்டுரை எழுதினார். முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர் என அறியப்படும் நாகூர் சித்தி ஜூனைதா எழுதிய முதல் சிறுகதை 1929ஆம் ஆண்டு தாருல் இஸ்லாமில் வெளிவந்தது. ‘இஸ்லாத்தில் பெண்களின் நிலைமை ஆண்களுக்கு நிகராகவே உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. அஞ்ஞான காலத்தில் ஆடுமாடுகளே போல் நடாத்தப்பட்டுவந்த பெண்ணினம் இப்பால் ஆண்களுக்குச் சமமென இஸ்லாம் ஆக்கிவைத்து விட்டது’ என்று மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா மலரில் இஸ்லாம் என்ற தலைப்பில் தாம் எழுதிய கட்டுரையில் பா. தாவூத்ஷா குறிப்பிட்டுள்ளார்.
இந்து மத பாணியில் கந்தூரி விழா நடத்துதல், காது குத்துதல், பெயர் வைத்தல் முதலான நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துதல், பெண்களின் காதுகளில் பெருந்துளைகள் இட்டு அல்லிகொத்து அணிவித்தல், பஞ்சா கொண்டாட்டம்… இவ்வாறான எல்லாவற்றையும் தாருல் இஸ்லாம் கண்டித்தது.
‘திரு. தாவூத்ஷா அவர்கள் மற்றப் பத்திரிராதிபர்களைப் போலக் கிளிப்பிள்ளையாக இருந்து மற்றவர்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிராமல் நாட்டினுடையவும், மக்களுடையவும் சீர்கேட்டிற்குக் காரணமாயுள்ள மதசம்பந்தமான குறைபாடுகளை உணர்ந்து, தைரியமாய் அவைகளில் இருக்கும் குற்றங்களையும் பிடிவாதங்களையும் மூட நம்பிக்கைகளையும் களைந்தெறிய முயற்சித்தார்’ என்று தாருல் இஸ்லாம் பத்திரிகையின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மலருக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில் ஈ.வெ.ரா. பெரியார் குறிப்பிட்டுள்ளார். ஈ.வெ.ரா.வும் ‘திராவிடன்’ ஆசிரியர் கண்ணப்பனும் கூட்டாக அந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தனர்.
இலக்கியப் புலமை மிக்க பா. தாவூத்ஷாவுக்கு கம்ப ராமாயண சாஹிபு என்று பட்டப் பெயரும் கிடைத்தது. அது சுவையான ஒரு நிகழ்வு. ஒரு கிராமத்தில் சீதா கல்யாண உபன்யாச நிகழ்ச்சியில் இரவு இரண்டு மணி வரை கம்ப ராமாயண விளக்கவுரை வழங்கும் வாய்ப்பு தற்செயலாக அவருக்குக் கிடைத்தது. கம்ப ராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களைப் படித்து பல பகுதிகளை இளமையிலேயே மனப்பாடம் செய்துகொண்டதால் அந்தச் சொற்பொழிவு அவருக்கு இலகுவாயிற்று. பிரமாதமாகப் பேசி முடித்தார் அவர். அவரது உரையைக் கேட்டு வியந்துபோன இந்து சமய அன்பர்கள் ‘கம்ப ராமாயண சாஹிபு வாழ்க’ என வாழ்த்தி மகிழ்ந்தனர்.
தமிழுக்கு இணையாக ஆங்கிலத்திலும் உரையாற்றும் அருந்திறனைப் பெற்றிருந்தார் பா.தா. அவரது சொற்பொழிவுகள் அனைத்துத் தரப்பினரும் வியந்து கேட்கக்கூடிய ஒன்றாக இருந்தது. ராஜாஜியின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நரசிம்மன், தமது இள வயதில் கம்ப ராமாயண சாஹிபின் பேச்சை மயிலாப்பூரில் பலமுறைக் கேட்டு மகிழ்ந்ததாக நினைவு கூர்ந்துள்ளார்.
1937ஆம் ஆண்டு சென்னை கார்ப்பொரேஷனில் (நகரசபையில்) பா. தாவூத்ஷா ஆல்டர்மேன் ஆக நியமிக்கப்பட்டார். 1948ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியை வகித்தார். பெரியார் ஈ.வே.ரா., சேலம் மருத்துவர் வரதராஜுலு, திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆகியோருடன் எல்லாம் அவருக்கு நெருங்கிய நட்புறவு இருந்தது. 1940ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் கட்சியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. 1941ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12, 13, 14, 15 தேதிகளில் சென்னையில் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாடு நடைபெற்றது. காயிதே ஆஜம் ஜின்னா அம்மாநாட்டில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அதைத் தமிழில் மொழி பெயர்த்துப் பேசினார் தாவூத்ஷா. நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் அவரது குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.
1963ஆம் ஆண்டு சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பா. தா.வின் தமிழ் சேவையைப் பாராட்டி அவருக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. கொழும்பிலுள்ள தன்ஸீம் என்ற இஸ்லாமிய அமைப்பு ‘இஸ்லாமிய மாவீரர்’ என்ற பட்டத்தை அவருக்கு வழங்கி கௌரவித்தது. அவையெல்லாம் அவரது சேவைக்குக் கிடைத்த சில அங்கீகாரங்களாகும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மு.மு. இஸ்மாயீல் அவர்கள் பா. தாவூத்ஷாவைப் பற்றி நூல் ஒன்றின் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். அது தாவூத்ஷா அவர்களின் வரலாற்றின் இரத்தினச் சுருக்கம் எனலாம். அது:
‘காலஞ்சென்ற தாவூத்ஷா சாஹிப் அவர்களுடைய இஸ்லாமியப் பணியையும் தமிழ்ப் பணியையும் தமிழுலகம் என்றும் மறக்க முடியாது! இன்றைய தமிழ் முஸ்லிம்களிடையே விஞ்ஞான அடிப்படையில் இஸ்லாமிய உணர்வு மேலோங்கி இருப்பதற்கு அவர்களுடைய எழுச்சிமிக்க எழுத்தும் பேச்சும் பெருத்த அளவுக்குக் காரணமென்று நிச்சயமாகச் சொல்லலாம். இஸ்லாத்தை அணுகிய அவர்களுடைய குறிப்பிட்ட போக்கு பல முஸ்லிம்களுக்கு அவர்களை எதிரிகளாக்கிற்று என்றாலும், தாம் நம்பியவற்றிலிருந்து கிஞ்சித்தும் வளைந்து கொடுக்காமல் உறுதியுடனும் வலுவுடனும் தம்முடைய கருத்துகளை அவர்கள் எழுத்திலும் பேச்சிலும் வலியுறுத்திக் கொண்டே வந்தார்கள். அவர்களுடைய தமிழறிவு பரந்தது. பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் அவர்களுக்குப் பயிற்சி உண்டு. அவர்களுடைய பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் இலக்கண விதி வரம்புக்குட்பட்ட தூய தமிழாகவே இருக்கும். பேச்சுநடை என்னும்போது மேடைப்பேச்சு நடை என்பது ஒன்று; வீட்டிலே பேசுகின்ற நடை என்பது ஒன்று. நம்மில் பெரும்பாலோருக்கு இவ்விரு நடைகளும் வெவ்வேறாகவே இருக்கும். ஆனால் காலஞ்சென்ற தாவூத்ஷா சாஹிப் அவர்களுக்கோ இவ்விரு நடையும் ஒன்றாகவே இருந்தன. அவர்கள் பேச்சைக் கேட்டவர்கள்தாம் இதன் லாவகத்தை அனுபவித்து மகிழ்ந்திருக்க முடியும்.’
1969ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் நாள், தமது 84ஆவது வயதில் பா. தாவூத்ஷா சென்னையில் மரணமடைந்தார். முதல் ஆல்டர்மேனாகப் பதவி வகித்த அவரது மரணத்திற்கு சென்னை கார்ப்பரேஷன் கவுன்சில் இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தியது.
-நூருத்தீன்
ஓவியம்: Sardhar