முந்தைய தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப் அதை ஏற்றுக்கொள்ளாமல் அடம் பிடித்த போது அவருடைய ஆதரவாளர்கள், 2021 ஜனவரி 6-ஆம் தேதியன்று, அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்து நிகழ்த்திய வன்முறை உலகப் பிரசித்தம். அச்சமயம் ட்ரம்ப்பை எதிர்த்து நின்ற பெருநிறுவனங்களுள் ஒன்று Facebook. அவரது ஃபேஸ்புக் கணக்கையும் அது முடக்கியது. பின்னர் 2023ஆம் ஆண்டுதான் அதை அவருக்குத் திறந்துவிட்டது.
புதிய அரசின் அழுத்தத்தால் தங்கள் கணக்குகளைச் சட்டவிரோதமாக முடக்கியதாக டொனால்ட் ட்ரம்ப்பும் அவருடன் சிலரும் சேர்ந்து அச்சமயம் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான Metaவின் மீது வழக்குத் தொடுத்தனர். முன்னாள் ஜனாதிபதி இப்பொழுது இந்நாள் ஜனாதிபதியானதும், மெட்டாவின் அதிபர் மார்க் சக்கர்பெர்க், ‘இந்த மேட்டரை பேசித் தீர்த்துக்கொள்வோமே. நான் முந்தைய ஆட்சியின் அழுத்தத்திற்கு அடிபணிந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள். எளியவன் என்னுடைய அபராதமாக வெறும் 25 மில்லியன் டாலர் இந்தாருங்கள். இனி நம் ஃப்ரெண்ட்ஷிப் மூழ்காத ஷிப்’ என்று கைகுலுக்கி விட்டார்.
‘மெட்டா CEO மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg), ட்ரம்ப் இருவரும் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஒப்பந்தம் எட்டப்பட்டது. நாங்களும் அந்த அறையில் இருந்தோம்’ என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ட்ரம்பின் வழக்கறிஞர் ஜான் கோலே (John Coale) தெரிவித்துள்ளார்.
இந்த சமரசத்தை இப்பொழுது எப்படி ஏற்படுத்த முடிந்தது என்ற கேள்விக்கு, “இரண்டு ஆண்டுகளாக இதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். தேர்தலும் இதற்கு உதவியது,” என்று பதிலளித்திருக்கிறார் ஜான் கோலே.
சமரச ஒப்பந்தத்தின் அடிப்படையில், மெட்டா 22 மில்லியன் டாலர்களை ட்ரம்பின் ஜனாதிபதி நூலக கட்டுமான நிதிக்கு வழங்கும். மீதம் 3 மில்லியன் டாலர் ட்ரம்புடன் சேர்ந்து வழக்குத் தொடுத்த நால்வருக்கு.
இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்த மெட்டா, ‘நோ கமெண்ட்ஸ்’ என்று கருத்தளிக்க மறுத்து விட்டது. மார்க் இத்தகவலை ஃபேஸ்புக்கில் பதிவாக இட்டால், கமெண்ட்ஸ் பகுதியை நீக்கிவிடுவார் என்பதைச் சந்தேகமின்றி நம்பலாம்.
இதற்கு முன், இம்மாதத்தின் தொடக்கத்திலேயே மூன்றாம் தரப்பு உண்மையைச் சரிபார்க்கும் சோதனையை (third-party fact-checking) மெட்டா நிறுத்திவிடுவதாக மார்க் அறிவித்துவிட்டார். இச்சோதனை தங்கள் மீது பாரபட்சம் பாராட்டுகிறது என்பது ட்ரம்ப் தரப்பின் நீண்ட காலக் குற்றச்சாட்டு. தாங்கள் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளையும் எல்ல fact-checking என்று சோதனையிட்டு அம்பலத்தில் ஏற்றினால் அது டரம்ப் தரப்புக்கு எப்படிச் சரிப்படும்? அதனால் அந்தச் சோதனையையும் தூக்கிக் கடாசிய மார்க், ட்ரம்ப்பின் பதவியேற்புக்கு 1 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தது தனிக்கதை.
தாம் ஃபேஸ்புக்கில் இலவசமாக அளித்த கணக்கை முடக்கியதற்கு, முடக்கப்பட்டவர் முஷ்டியை முறுக்கியதும், அதைத் திறந்து விட்டதோடன்றி 25 மில்லியன் டாலரும் ஒருவர் நஷ்டஈடு அளிக்கிறார் என்றால், பிரச்சினை வெறுமே அவரது முதுகெலும்பு அல்ல. நம் யூகங்களை விஞ்சும் பிரம்மாண்டத் தந்திரக் கணக்கு அது.
இதையெல்லாம் பார்த்துவிட்டு, ‘நமது ஃபேஸ்புக் கணக்கையும் மார்க் மூடினால் நல்லாருக்குமே’ என்று நம் சமூக ஊடகப் போராளிகள் யாரேனும் கோக்குமாக்காகச் சிந்ததால், சொல்லி வைக்கிறேன், ‘பழைய செல்லாத தம்படி பைசா கூடக் கிடைக்காது’!
-நூருத்தீன்