பைத் ஷேமெஷ் (Beit Shemesh) ஜெருசலேம் நகருக்கு மேற்கே அமைந்துள்ள ஒரு சிறு நகரம். 2010, பிப்ரவரி மாதத்தின் ஒருநாள். மெல்வின் ஆதம் மில்டினர் (Melvyn Adam Mildiner) என்பவரின் தொலைபேசி ஒலித்தது. அவர் அப்பொழுது தான் நிமோனியா காய்ச்சலில் இருந்து தேறி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்பட்டன.

“உன் பெயரை துபை போலீஸ் குறிப்பிட்டுள்ளதே தெரியுமா?”

“இது உன் பாஸ்போர்ட் நம்பர் தானா என்று கொஞ்சம் சொல்லு?”

“நீ துபை பார்த்திருக்கிறாயா?”

யாரோ கூப்பிட்டு போனில் விளையாடுகிறார்கள் என்று தான் முதலில் நினைத்தார் மெல்வின். அப்படியெல்லாம் இல்லை என்று உடனே புரிந்தது. தொடர்ந்து இடைவிடாத தொலைப்பேசி அழைப்புகள்.

“நான் எப்போ துபை போனேன்? வரைபடத்தில் பார்த்ததுடன் சரி! அங்கேயும் ஏதும் நிலம் ஆக்கிரமித்து நமக்குப் பட்டா போட்டுத் தருகிறார்களா என்ன? சொல்லவே இல்லையே!” என்ற வியப்பும், குழப்பமும் மெல்வினுக்கு.

மெல்வின் பிரிட்டனில் பிறந்து ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனுக்கு வந்து குடியேறியவர். இருநாட்டுக் குடிமகன். அந்தத் தகுதி அவரை துபை ஹோட்டல் அறையில் நடந்த ஒரு கொலையுடன் முடிச்சுப் போட்டிருந்தது.

கொலை செய்யப்பட்டது மஹ்மூத் அல் மப்ஹுஹ் (Mahmoud Al Mabhouh). ஃபலஸ்தீனி்ன் ஹமாஸ் போராளி.

* * *

மஹ்மூத் அல் மப்ஹுஹ் ஜனவரி மாதம் 19ஆம் தேதி டமாஸ்கஸ் நகரிலிருந்து பயணம் கிளம்பினார். துபைக்குப் பயணம். அங்கிருந்து சீனாவிற்கும் போவதாகத் திட்டம். அவருக்குக் கொஞ்சம் சரக்கு வாங்க வேண்டியிருந்தது. விவகாரமான சரக்கு. அவருக்கும் அவருடைய இயக்கத்திற்கும் அவசியமான சரக்கு. ஓர் அயோக்கிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இடைவிடாது தொடரும் போராட்டத்திற்கும், இழந்த நிலத்தை மீட்பதற்கும், புனிதத் தலத்தை திரும்பப் பெறுவதற்கும் அயராது நடைபெற்று வரும் போராட்டத்திற்குத் தேவையான சரக்கு.

துபையிலும் கடை வீதியில் போட்டு விற்பதில்லை. ஆனால் அதற்குண்டான பின்னனி வர்த்தகமும், பரிவர்த்தனையும் நடைபெறும் இடம் துபை. அதற்குத் தான் அவர் துபை கிளம்பிக் கொண்டிருந்தார்.

அவர் ஹமாஸில் முக்கியப் புள்ளி. மூத்த இராணுவத் தளபதி. 1980-களில் நடைபெற்ற பாலஸ்தீன் கிளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர். மற்றொரு முக்கிய வேலையும் செய்திருந்தார். 1989-ஆம் ஆண்டு இஸ்ரேலியப் படைவீரர்கள் இருவரைக் கடத்தியவர் மஹ்மூத். பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர். அதிலிருந்தே இஸ்ரேலின் கொலைப்பட்டியிலில் வந்து விட்டது இவர் பெயர்.

பாலஸ்தீனப் போராளித் தலைவர்களை இஸ்ரேல் குறிவைத்துப் போட்டுத் தள்ளுவதும், தன் பெயரும் பட்டியலில் உள்ளதும் மஹ்மூதிற்கு நன்றாகவே தெரியும். அதனால் அதற்குரிய பாதுகாவலோடு தான் அவர் பயணம் செல்வது வழக்கம். ஆனால் இந்த துபை பயணத்தின் போது ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டது. அவருடன் பயணிக்கும் அவரது பாதுகாலர்கள் இருவருக்கு அதே விமானத்தில் இடம் கிடைக்கவில்லை. ”ஐ ஆம் சாரி” என்று சொல்லிவிட்டது ஏர்லைன்ஸ். ”மறுநாள் கிளம்பும் விமானத்தில் உங்கள் இருவருக்கும் சீட் போட்டுத் தருகிறோம்” என்று சொல்லிவிட்டார்கள். இதுவரை ஓர் யதேச்சையான தடங்கலாகவே இது கருதப்படுகிறது.

மஹ்மூதும் இரண்டு சிறு தவறுகள் செய்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தப் பயணத்திற்கு அவர் தனது இயற்பெயரிலேயே, இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பயணச்சீட்டு வாங்கியுள்ளார். தொடர்ந்து கஸ்ஸாவில் இருக்கும் தன் குடும்பத்தினருக்குத் தனது பயணத்தையும், தங்கவுள்ள ஹோட்டலின் தொலைப்பேசி எண்ணையும் தெரிவித்துவிட்டு, ”போய் வருகிறேன், இன்ஷாஅல்லாஹ்” என்று விடைபெற்றுள்ளார். இந்த இரு தகவல்கள் எதிரிகளுக்குக் கிடைத்திருக்க அனைத்து சாத்தியங்களும் உள்ளன. அவை மட்டுமே சாதகங்களாய் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பயனுள்ள உபரி உபயோகத் தகவல்களாய் இருந்திருக்க வேண்டும்.

பாதுகாவலர்கள் விடை தர, எமிரேட்ஸ் விமானம் 912-இல் காலை 10:05 மணிக்கு சிரியாவின் டமாஸ்கஸ் நகரிலிருந்து துபைக்கு அவரது பயணம் தொடங்கியது. திரும்புவதற்கான பயணச்சீட்டு இருந்தாலும் அது ஒரு வழிப்பயணமாக அமையப் போவதை மஹ்மூத் அறியவில்லை. மதியம் 3:15-க்கு துபை வந்தடைந்த அவர் ஒரு டாக்ஸி பிடித்து அல்-புஸ்தான் ரோதனா (Al Bustan Rotana) எனும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்து, வாடகைக்கு அறை எடுத்தார். ”பால்கனி வேண்டாம். சீல் வைக்கப்பட்ட, திறக்க இயலாத ஜன்னல்கள் இருக்க வேண்டும்.” இப்படி சில முன்னெச்சரிக்கை கோரிக்கைகள். அறை எண் 230 அவருக்கு ஒதுக்கப்பட்டது.

அவர் அறைக்குள் சென்று குளித்து முடித்துத் தயாராவதற்குள் மற்ற சில சங்கதிகளைப் பார்த்து விடுவோம்.

மஹ்மூத் துபை வந்து சேருவதற்குள் உலகின் பல பகுதிகளிலிருந்து 24 பேர் வெவ்வேறு விமானங்களில் துபை வந்து சேர்ந்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து போகும் துபையில் இந்த 24 நபர்கள் மட்டும் அன்று சிறப்புப் பயணிகள். 10 பேர் பிரிட்டிஷார், 6 பேர் அயர்லாந்து நாட்டினர், 4 பேர் பிரெஞ்சு நாட்டினர், 3 ஆஸ்திரேலியர்கள், ஒரு ஜெர்மானியர். அந்த 24 மர்ம நபர்களின் குடியுரிமைக் குறித்து அவர்களது கடவுச் சீட்டுகள் (பாஸ்போர்ட்கள்) அப்படித்தான் தெரிவித்தன. இவர்களில் அனைவருமோ, சிலரோ அல்-புஸ்தான் ஹோட்டலில் வந்து கலந்தனர்.

மேற்குறிப்பிட்ட அந்த நாடுகளின் கடவுச் சீட்டுகளுக்கு ஒரு வசதி உண்டு. இந்தியா போன்ற ‘ஏழை’ நாடுகளிலிருந்து செல்பவர்களுக்கு விஸா கெடுபிடிகள் உள்ள துபையில் இந்த நாடுகளின் குடிமக்களுக்கு அப்படியெல்லாம் இல்லை. ”வாங்க ஸார் வாங்க” என்று ஆங்கிலத்தில் ஸலாம் சொல்லி ஊருக்கு உள்ளே அனுப்பி வைக்கும் துபை அரசாங்கம். ஏன் அப்படி என்று கேட்கக் கூடாது. ஆனால் அது அப்படித் தான்.

அது இருக்கட்டும். மர்ம மனிதர்களைப் பார்ப்போம். மறைமுகமாய்த் தொடர்பு கொள்ள ஏதுவான தகவல் தொடர்புக் கருவிகளை எடுத்து வந்திருந்த அவர்கள், அதைத் தகவல் தொடர்பிற்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். தேவையற்றக் கண்காணிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள அந்த உபாயம். ஆனால் எஸ்எம்எஸ் செய்திகள் மட்டும் ஆஸ்திரியாவிலுள்ள தொலைப்பேசி எண்ணுக்குப் பகிர்ந்து கொள்ளப்பட்டது பின்னர் தெரியவந்தது.

பல மாதங்களாய் வேவு பார்த்து, ஒத்திகைப் பார்த்து, மாய்ந்து மாய்ந்து திட்டம் போட்டதை நிறைவேற்றத் தயாரானது அந்தக் களவாணிக் கூட்டம். வந்திறங்கிய நிமிடத்திலிருந்து மஹ்மூதின் ஒவ்வொரு அசைவும் மிகத் துல்லியமாய்க் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஹோட்டலுக்கு மஹ்மூத் வந்து சேர்ந்தாரல்லவா? அறைக்குச் செல்ல லிஃப்டில் ஏறினார். அவரைத் தவிர அந்த ஹோட்டலின் பணிப்பெண் ஒருத்தி அந்த லிஃப்டில் இருக்க, கதவு மூடும் நேரத்தில் இருவர் வந்து புகுந்தனர். துபையின் குளிர்கால வெயிலை உல்லாசிக்கும் யதார்த்தமான சுற்றுலாப் பயணிகள் போலிருந்தார்கள் அவர்கள். “தொள தொளா“ அரை டவுசர், கைகளில் டென்னிஸ் மட்டைகள், ஸ்நீக்கர் ஷுக்கள், பேஸ்பால் தொப்பிகள். அப்பொழுதுதான் பயணித்திலிருந்து வந்திறங்கிய மஹ்மூத் இன்னம் குளிர் ஜாக்கெட்டுடனே இருந்தார். அந்த இருவரையும் அவர் பெரிதாய் கவனிக்கவுமில்லை, பொருட்படுத்தவுமில்லை. ஆனால் அந்த இருவரும் 24-ல் இருவர்.

மஹ்மூதுடன் சேர்ந்து லிஃப்டிலிருந்து வெளியேறிய இருவரும் அவர் கூடவே நடந்து, அவர் அறை எண்ணைப் பார்த்துக் கொண்டு கடந்து சென்று விட்டார்கள். கூடவே அவர் அறையின் எதிர் அறை எண்ணும் குறித்துக் கொள்ளப்பட்டது. மஹ்மூத் அறை 230. எதிர் அறை 237. அவ்வளவு தான், வேறொன்றுமில்லை. மஹ்மூதிற்கு எந்த சந்தேகமும் எழவில்லை.

அறைக்குள் சென்ற மஹ்மூத் குளித்து முடித்தார். கையுடன் எடுத்து வந்திருந்த ஆவணங்களை அறையிலுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளியேறினார். அதற்கு அடுத்த மூன்று மணி நேரம் கடைத் தெரு, சாப்பாடு, அப்படி இப்படி என்று சுற்றியிருப்பாரோ அல்லது வந்த வேலை தொடர்பாய் வேறு யாரையும் சென்று சந்தித்தாரோ சரியாகத் தெரியவில்லை. இரவு 8:24 மணிக்குத் தான் மீண்டும் தனது அறைக்குள் நுழைந்தார் மஹ்மூத்.

இதற்குள் ஹோட்டலில் பரபரப்பான இதர மர்ம காரியங்கள் அமைதியாய் நடந்து கொண்டிருந்தன. மஹ்மூதின் அறை எண்ணும் எதிர் அறை எண்ணும எங்கோ இருந்த மற்றொருவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவன் வெளியிலிருந்த ஒரு தொலைப்பேசியின் மூலம் அல்-புஸ்தான் ஹோட்டலுக்கு போன் செய்தான். அறை வேண்டும், 237-ஆம் எண் அறைதான் வேண்டும் என்று தெரிவித்தான். தரப்பட்டது. பிறகு அவன் ஹோட்டலுக்கு வந்து வரவேற்பில் அந்த அறை சாவி பெற்றுக்கொண்டு, அறைக்கு செல்லாமல் மற்றொரு கூட்டாளியிடம் சாவியை ஒப்படைத்து விட்டு, உடனே விமான நிலையம் சென்று விமானம் பிடித்து பறந்து விட்டான். அத்துடன் அவன் பணி முடிந்தது.

துபை ஹோட்டல் சாவி என்பது நம்மூர் லாட்ஜ் சாவி போல் ஆயுத சாவி கிடையாது. இது மின்னணு அட்டை. ஏடிஎம் கார்டு போல் இருக்கும். அறைக் கதவில் இருக்கும் சிறு கருவியில் செருகியதும் கதவின் பூட்டு திறக்கும். ஓர் அறைக்காக நிரல் (ப்ரோக்ராம்) செய்யப்பட்ட சாவியை மற்ற அறைக்குப் பயன்படுத்த முடியாது. அனைத்தும் ஹோட்டலின் கணினியின் மூலம் நிர்வகிக்கப்படுபவை.

இங்கு தான் அந்தக் கும்பல் பிரமாதமாய் செயல்பட்டது. ஐந்து பேர் கொண்ட குழு அந்த அறைகள் இருந்த இரண்டாம் மாடிக்கு வந்தது. ஒருவன் லிஃப்ட்டினருகே மற்றவர்கள் வருவதை நோட்டமிட நின்று கொண்டான். மற்ற நால்வரும் மஹ்மூதின் அறைக்குச் சென்றார்கள். தங்களிடமிருந்த சாவியை அந்த அறைக் கதவின் கருவிக்குப் பொருந்திப் போகும்படி மளமளவென்று மறநிரல் (ரீப்ரோகிராம்) செய்ய ஆரம்பித்தனர். அந்நேரத்தில் லிஃப்டிலிருந்து வெளியே வந்தார் ஒரு சுற்றுலாப் பிரயாணி. அங்கு தயாராய் நின்று கொண்டிருந்தவன் வெகு இயல்பாய் அவரிடம் பேச்சுக் கொடுத்து திசை திருப்ப, அது போதுமானதாய் இருந்தது மற்ற நால்வருக்கும்.

வெற்றிகரமாய் வேலையை முடித்தவர்கள், மஹ்மூதின் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தனர். உள்ளுக்குள் எப்படியோ வெளியே பெரிய பதற்றமோ, பரபரப்போ யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. அமைதியாய், நேர்த்தியாய் நடந்து கொண்டிருந்தது ஒவ்வொரு செயலும்.

இரவு 8:24 மணிக்குத் தன் அறைக்குள் நுழைந்தார் மஹ்மூத், அழையா விருந்தாளிகள் அவருக்காகத் தயாராய் காத்திருப்பது அறியாமலேயே. உள்ளே எவ்வளவு உக்கிரமாய், வேகமாய் சண்டை நடைபெற்றது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அந்த நால்வரும் வெகு எளிதாய் மஹ்மூதைக் கையாண்டிருக்கிறார்கள். முதலில் அவரின் கால்களில் வயர்களால் மின்சார ஷாக் அளித்து செயலிழக்க வைத்திருக்கறார்கள். அதன் பிறகு வேலை வெகு எளிதாகி விட்டது. மிகப் பழைய எளிய உத்தி. முகத்தில் தலையணையை அழுத்தி மூச்சுத் திணற வைத்து கொலை முடிந்தது. அவர்களது நோக்கம் அவரது மரணத்தை இயற்கையான ஒன்றாய் நிறுவுவது.

ஏதோ குழாய் பழுது பார்க்க வந்தவர்கள் போல் அயல் மண்ணில் கொலையொன்றைக் கச்சிதமாய் நிறைவேற்றிவிட்டு மாறு வேடத்திலிருந்த அந்த அனைவரும் ஒப்பனையைக் கலைத்தார்கள். தனித்தனியே பிரிந்து விமான நிலையம் வந்தார்கள். விமானம் ஏறி பறந்தேவிட்டார்கள்.

ஏறக்குறைய இரவு 9 மணிக்கு நிகழ்வுற்ற கொலை மறுநாள் ஜனவரி 20 ஆம் தேதி தான் தெரியவந்தது. முதலில் அவர்களும் அது ஓர் இயற்கையான மரணம் என்று தான் நினைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்தக் கொலை பற்றிய தகவல்கள் 9 நாட்கள் கழித்துத் தான் வெளிவந்தன.

கொல்லப்பட்டது யார், அவர் பின்னனி என்ன என்று தெரியவந்ததும்தான் துபை போலீஸ் மிக பரப்பாய் செயல்பட ஆரம்பித்தது. இந்தக் கொலையின் முடிச்சுகளை வெகு விரைவாய் அவிழ்த்து அசகாய சாதனை புரிந்துள்ளது. பாராட்டியே ஆக வேண்டிய விஷயம் அது.

ஹோட்டல் கணினி, மூலைக்கு மூலை அவர்கள் நிறுவியிருந்த பாதுகாப்பு கேமராக்கள், விமான நிலைய கணினிகளில் பதிவாகியிருந்த விவரங்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் தகவல் பரிமாற்றங்கள், வெகு சில இடங்களில் கொலைக் கும்பல் பயன்படுத்தியிருந்த கடன் அட்டைகள் ஆகிய தடயங்களைத் தோண்டித் துருவி எடுத்து, வெட்டி, ஒட்டி, தகவல் அறிக்கையை ஆவணமாக அல்ல, ஒரு 27 நிமிடப் படமாகவே வெளியிட்டு அசத்தியுள்ளது துபை காவலதுறை.

திட்டவட்டமாக விரல் நீட்டப்பட்டது. நிகழ்த்தியது மொஸாத்! இஸ்ரேலின் உளவுப் பிரிவு!

”இதற்கெல்லாம் ஆமாம்! இல்லை! என்று பதில் சொல்வதெல்லாம் எங்கள் பாணியல்ல” என்று சொல்லிவிட்டது இஸ்ரேல்.

ஐரோப்பிய நாடுகளே கூட சான்றுகளைப் பார்த்து அசந்து தான் போயின. ஆ! அதெல்லாம் போலிக் கடவுச் சீட்டுகள் என்று சொல்லிப் பார்த்தார்கள். ”நல்லா கேட்டுக்குங்க. உங்க நாட்டுக் கடவுச் சீட்டை போலி, அசல் என அடையாளம் கண்டுகொள்ள எங்களுக்குப் பயிற்சி அளித்ததே நீங்கள் தான்” என்று துபை திருப்பித் தாக்க, அப்பொழுது தான் பதைபதைத்தன அந்நந்த நாடுகள். ”எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் நம் நாட்டுக் கடவுச் சீட்டுகளையே திருட்டுத் தனமாய் தயாரித்திருப்பார்கள் இந்த யஹுதிகள்?” என்று இஸ்ரேலிய வெளியுறவுத் தூதரை அழைத்து கோபம் தெரிவித்துள்ளன அந்த நாடுகள்.

ஆனால் இஸ்ரேலுக்கு இந்தக் கண்டனமெல்லாம் ஒரு பொருட்டா என்ன? துடைத்து எறிந்து விட்டு வேடிக்கைப் பார்க்கிறது.

இவ்வளவு கூத்தும் நடந்துள்ள போதும், கயவர்கள் சிலர் பயன்படுத்திய கடன் அட்டைகள் அமெரிக்க வங்கிக்கு உரியவை என்று தெரிய வந்துள்ள நிலையில், ஒன்றுமே பேசாமல் அமைதியாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

இந்த அளவு திட்டமிட்டுச் செய்தவர்கள் சான்றுகள் இப்படி வெளிப்படும் என்பது தெரியாமல் இருந்தார்களா, அல்லது ஓவியம் வரைந்து கையெழுத்திடுவது போல், ”இதோ கொஞ்சம் துப்பு. முடிந்தால் கண்டுபிடி. அப்படிக் கண்டுபிடித்து உன்னால் என்ன பிடுங்கிவிட முடியும்?” என்ற ஆணவமா என்பது தனி விவாதத்திற்குரியது. ஆனால் அரபு நாட்டுக் காவல்துறையின் துப்புத் துலக்கும் திறனை சற்று அசட்டையாகத்தான் அவர்கள் நினைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இதெல்லாம் போக மேலும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹ்மூதின் உள் விவரங்கள், பயண விவரங்கள் ஆகியன அவர்கள் மூலம் தான் கசிந்திருக்கும் என்று பலமான சந்தேகம் நிலவுகிறது. அவர்கள் இருவரும் பாலஸ்தீனியர்கள். ஜோர்டான் கைது செய்து துபையிடம் ஒப்படைத்துள்ளது. அவர்கள் ஃபதாஹ் போராளி இயக்கத்தினர் என்று தகவல்கள் தெரிவிக்க ”அவர்கள் எங்கள் ஆட்களெல்லாம் இல்லை, ஹமாஸ் தான்” என்று சொல்லியிருக்கிறது ஃபதாஹ். என்னத்தைச் சொல்ல?

காலம் மேலும் உண்மைகள் உரைக்கலாம்.

-நூருத்தீன்

நன்றி: சமரசம் 15-31 மார்ச் 2010

Related Articles

Leave a Comment