மவுலவீகளே! மவுலானாக்களே! இவர்களை யெல்லாம் சிருஷ்டித்தனுப்பும் மத்ரஸாக்களே! இதன் கீழ் வருவதை ஊன்றிப் படியுங்கள். உள்ளத்துள் கொள்ளுங்கள். உங்களுக்கு, இத்தகைய “இஸ்லாமிய” –இல்லை, இஸ்லாமல்லாத– நடக்கைகள் “ஐபை” உண்டாக்கவில்லையா? இத்தீய பழக்க வழக்கங்களை அழித்தொழிக்க முன் வராமல் மூலையிலே ஏன் பதுங்குகின்றீர்கள்? நீங்கள் ஓதியதால் இஸ்லாத்தின் மேன்மைக்கென்ன நன்மை விளைகின்றது? நாளைக் கியாமத்திலே நீங்கள் அல்லாஹ்வின் திரு முன்பினிலே என்ன சமாதானம் சொல்வீர்கள்? நெஞ்சிலே கை வைத்துச் சிந்தனை செய்யுங்கள்.
ஒழுக்கங் கெட்டவள் ஓர் அவ்லியா
தஞ்சை ஜில்லாவிலே, கும்பகோணம்–திருவாரூர் பஸ் ரஸ்தாவில் ஒரு தைக்கா இருக்கிறது. அவ்வூரில் ஒரு “துலுக்கப் பெண் பிள்ளை” பல ஆண்டுகட்கு முன்னே இறந்து விட்டாள். அவளது ஒழுக்கம் இழுக்குடையதென்று கூறி, அவ்வூர் முஸ்லிம்கள் அச்சடலத்தைத் தங்கள் சமாதிக் கொல்லையிலே அடக்க இடங் கொடுக்க மறுத்து விட்டனர். ஆதலால், அம்மையித் ரோட் ஓரத்தில், ஆற்றங்கரை மீது அடக்கப் பட்டது. அந்தச் சமாதி இப்பால் ஒரு சிறப்புற்ற தைக்காவாய்ப் பரிணமித்து விட்டது. பெரும் பெரும் நேர்ச்சைகளெல்லாம் அங்கு நடைபெறுகின்றன. பிள்ளைவரம் முதலியனவும் பெறப்படுகின்றன. நிற்க.
சின்ன தாராபுரம் என்னும் ஊருகில் ஒரு “தர்கா” திறக்கப் பட்டதாம். அவ் வூருக்கு மேற்கே 1-ஆவது மைலில் அமராவதியாற்றருகே ‘ஒத்தமான துறை’ என்றோர் ஊருண்டு. சுமார் 40 ஆண்டுகட்கு முன்னே அங்கு வந்து தங்கிய 2 பெண்கள் –மக்கத்து அம்மா, மலையாளத்து அம்மா– அவ் வூரிலே மரித்து விட்டார்கள். அவர்களது சரிதை இன்னதென எவரும் அறிய மாட்டார். அவர்கள் அடங்கியுள்ள சமாதிகளைப் பெரிய தர்காவாக உயர்த்த எடுக்கப்பட்ட முயற்சியைப் படித்துப் பாருங்கள்; அது வருமாறு:
மலையாளத்தம்மா தர்காவின் திறப்புவிழா விளம்பரம்
அன்புடையீர்! சின்ன தாராபுரத்தைச் சேர்ந்த ஒத்தமான் துறைக்குப் பக்கத்தில் அமராவதி ஆற்று ஓரத்தில் இருக்கும் மலையாளத்தம்மா தர்காவின் மராமத்து ரிப்பேர் வேலைகளும், மதில்சுவர் வேலைகளும், அனேகர்களின் பொருள் உதவியைக் கொண்டு செய்யப்பட்டு இருக்கிறது. தர்காவை சீர்திருத்தம் செய்ததை உத்தேசித்து ஒரு திறப்புவிழா வைபவம் செய்யவேண்டுமென்று பெரியோர்களால் தீர்மானிக்கப்பட்டு ௸ வைபவமும் நாளது 14-9-51 தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். அதுசமயம் எல்லா அபிமானிகளும், பக்தர்களும் வந்திருந்து வைபவத்தை சிறப்பாய் நடத்திக் கொடுக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்.
நிகழ்ச்சிக் குறிப்பு
14-9-1951௳ வெள்ளிக்கிழமை 6-மணிக்கு சின்ன தாராபுரம் K. முகம்மது ஹுசேன் சாயபு வீட்டிலிருந்து மேள வாத்தியம், பொய்க் குதிரை டான்ஸ், ஆடல் பாடல், வாண வேடிக்கையுடன், கொடி ஊர்வலம் புறப்பட்டு இரவு 7-மணிக்கு தர்கா வந்து சேரும். அப்போது, சின்ன தாராபுரம், முயீனுல் இஸ்லாம் ஸ்கூல் மானேஜர், ஜனாப் சே.சின்னப்பா ராவுத்தர் அவர்கள் தலைமையின் கீழ், தாராபுரம் சுல்தானியா தெரு பள்ளிவாசல் முத்தவல்லியும், கோவை ஜில்லா போர்டு மெம்பருமான, ஜனாப் D. K. யூசுப் மொய்தீன் அன்சாரி சாயபு பகதூர் அவர்களும், மேட்டுவலசு மிராசுதாரரும், தாராபுரம் தாலூக்கா, விவசாய சங்கத்தின் காரியதரிசியுமான, ஸ்ரீ M. C. சிதம்பர சாமிக் கவுண்டர் அவர்களும், தர்காவின் விசேஷத்தைப்பற்றி பேசுவார்கள். அப்போது, தலையூர் மிராசுதாரர், ஜனாப் U. K. C. முகம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்கள் பாதிஹா கொடுத்து தர்காவின் கொடி ஏற்றுவார். அன்று இரவு 8-மணிக்கு திருச்சி இனாம்தார், ஜனாப் காஜா சையத் அப்துல் ரஜாக் சாயபு அவர்கள் தலைமையின் கீழ் தர்காவில் அதி விமரிசையாய் மவுலூதஷரீப் நடைபெறும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தர்காவில் பாதிஹாதரூத் நடைபெறும். அனேகம் பேர்கள் வந்து ஜியாரத் செய்து போகிறார்கள். அதுசமயங்களில் தாராபுரம், ஜனாப் சையத் சுல்தான் மொய்தீன் சாயபு, பொகாரி அவர்கள், பேய், பிசாசு, வகையறா காத்து குணங்களுக்கும், விஷக் கடிகள் விஷ ஜூரங்கள், வகையராக்களுக்கும் மந்திரித்தும், துஆ செய்தும் ஆண்டவன் கிருபையால் சொஸ்தப்படுத்துவார் என்பதை தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன்.
ஒத்தமான் துறைக்குப் பக்கத்திலும், தர்காவின பக்கத்திலும், காபிக் கடைகளும், சில்லறைக் கடைகளும் உண்டு. எவ்வித முகாந் திரத்தைக் கொண்டும் பொய்க்குதிரை டான்ஸ் & ஆடல் பாடல்கள் நிற்காது. அவசியம் நடைபெறும்.
இப்படிக்கு,
K. முஹம்மத் உசேன்,
டிரைவர், T.P.C. Ltd, சின்னதாராபுரம்.
பார்த்தீர்களா, பாக்கவீகளே! ஜமாலீகளே! நூரிய்யீகளே! நீடூரீகளே! ஷாதிலீகளே! காதிரீகளே! மொஹிதீன் தம்பிகளே! மவுலவீகளே! மவுலானாக்களே! மத்ரஸா உஸ்தாத்களே! தீனுல் இஸ்லாம் தவ்ஹீதுக்குரிய—ஏக தெய்வ இணையற்ற சன்மார்க்க மென்பது உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும். இப் பரிசுத்த இஸ்லாத்துள்ளே இத்தகைய அனாசாாங்களும், ஐயாமுல் ஜாஹிலிய்யத்துக்குரிய அட்டூழியங்களும் வந்து புகுவதை நீங்களெல்லாம் அனுமதித்தே வருகிறீர்கள். இவையனைத்தும் “ஆகும்” என்று ‘பத்வா’வும் ஒரு சில “மவுலவீ”கள் விடுக்கிறார்கள். இவையெல்லாம் முஷ்ரிக்குகளின் செயலல்லவா? காங்கிரஸ் தலைவராய் நாட்டில் விளங்கிய தண்டன்கூட இந்த “பாரத்” நாட்டில் இருப்பது ஒரே கலாசாரந்தான்; அதுதான் ஹிந்து கலாசரம் என்று கூறுகிறாரே, அதற்குக்கானே நீங்களும் ஆமென்று தாஸ்து கூறுகின்றீர்கள்? ஹிந்து மகா சபாவும். ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கமும் இந் நாட்டு முஸ்லிம்களையும் இவர்களது கலாசாரத்தையும் மதத்தையும் ஒருசேர ஒழித்துக் கட்டவேண்டுமென்றே தீர்மானம் செய்துள்ளார்கள். இவர்களது ஆர்வத்துக்கும் நீங்கள் தாமே ஒத்துழைத்து உதவி புரிகின்றீர்கள்? நீங்கள் இஸ்லாத்தைக் காக்கவும் பெருக்கவுமே மதக் கல்வி கற்பதாய்க் கூறுகிறீர்கள். ஆனால், உங்கள் உபேக்ஷை இவ் விஸ்லாத்தை ஹிந்துமத மயமாக மாற்றியமைக்கிறதா? இல்லையா? என்று எண்ணிப் பாருங்களே. உங்கள் முன்னோர்கள் இந்நாட்டிலே இஸ்லாத்தை விதைத்து, 10 கோடி முஸ்லிம்களைப் பயிரேற்றினார்கள்; ஆயின், நீங்களோ, இப்பாரத நாட்டிலுள்ள 4½ கோடி முஸ்லிம்களையும் நாஸ்திகர்களாக, அல்லது ஹிந்து(முஷ்ரிக்கு)க்களாக மாற்றியமைத்து விட்ட பெருமைக்கே உரியவர்களா யிருப்பீர்கள். அப்பால் அல்லாஹுத் தஆலா முன்னே எந்த மூஞ்சியைக் கொண்டு நீங்கள் விழிக்கப் போகிறீர்கள்? சிந்தியுங்களே, நபி பிரான் (சல்) “வாரிஸ்கள்” என்று கூறிக் கொள்ளும் பேர்வழிகளே!
-பா. தாவூத்ஷா
(தாருல் இஸ்லாம், அக்டோபர் 1951, பக்கம் 29-30)
1 comment
ப்ப்பா…. என்னே வீரியம் !
எங்கள் பாக்கியம், வாசித்தது…